Advertisement

ராகவன் வீட்டின் சார்பாக அவன் இரு அத்தைமார்களும் வந்திருந்தார்கள். தாய் மாமனாக பர்வதத்தின் அண்ணணும் அண்ணியையும் விக்ரமே சென்று அழைத்து வந்திருந்தான். சம்மந்தி முறையில் காயத்ரியின் சின்ன மாமியார் வந்தார்.
அனைவருமே வசதியாக இருப்பவர்கள் என்பது அவர்கள் தோற்றத்திலேயே தெரிய சகுந்தலாவும் தன் பக்கத்து சொந்தங்களிடம் அறிமுகம் செய்ய , அவர்கள் பெருமை பேச என்று நன்றாகவே நடந்துகொண்டார். எப்படியோ, எந்த குதர்க்கப் பேச்சும் இல்லையே என்பதில் நிம்மதியுற்று, அவன் மாமாக்களை இளங்கோவனிடம் அறிமுகப் படுத்தினான் ராகவன்.
வெந்தய கலரில் இலைப் பச்சை வண்ண பார்டரில், அழகான ஒரு சாஃப்ட் சில்க் பட்டுப்புடைவயில் எளிமையாக ஒரு காசு மாலை, அட்டிகை, அதற்குத் தோதாக தொங்கட்டான் கம்மல்கள், பச்சை கண்ணாடி வளையல்களுக்கு இரு புறமும் தங்க வளையல் ஒரு கையிலும், ரோஸ் கோல்ட் நிறத்தில் கடிகாரம் மற்றொரு கையில் என்று அணிந்திருந்தாள். மணப்பெண் என்பதற்கு அவள்  நெற்றிச் சுட்டியும், அவள் அத்தை போட்ட மல்லி மாலையும் மட்டுமே அடையாளம் காட்டியது.
எழிலோவியமாக  வந்த அமர்ந்த, இன்னும் ஐந்து நாட்களில் தன் மனையாளாகப் போகின்றவளைப் பார்த்தவன், பார்வையை மாற்றிக் கொள்ள சிரமப்பட்டான். மாலினியோ அவனைப் பார்க்கவேயில்லை. உடனிருந்த அவள் தோழி ஷீலா, இன்னும் சில கசின்ஸ் அவளை ஏகத்திற்கும் கிண்டலடித்திருக்க, ஏன் வம்பென்று திரும்பவேயில்லை.
விடியற் காலையில் பந்தக்காலை முடித்து காபி அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தவர்கள், இப்பொழுது பெண்ணை நலங்கிட்டு ஆசீர்வதிக்கத் தயாரானார்கள். அஸ்வின் கர்ம சிரத்தையாக எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான்.
ஒரு வகையாக நலங்கு முடிந்து டிபன் சாப்பிட பெரியவர்களையெல்லாம் மாடிக்கு அனுப்பியபின் இளையவர்களின் ரகளை ஆரம்பித்தது. மாலினி, ராகவனை ஒன்றாக நிற்க வைத்து வித விதமாக போட்டோ எடுத்தபடியே ஓட்டிக்கொண்டிருந்தது பெண்கள் குழு.
மாலினியை ஓரம் கட்டிவிட்டு, அவள் தங்கை முறையில் இருவர், “மாமா, மாமா , செல்ஃபி எடுக்கலாம் வாங்க”,  என்று மாலினியை மட்டும் கட் செய்து எடுக்க ஒரே ரகளை. மாலினி முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்க ராகவனால் கண்களால் மட்டுமே அவளின் மன்னிப்பை யாசிக்கமுடிந்தது. அதையும் பார்த்துவிட்டு ஷீலா போட்டுக்கொடுத்துவிட்டாள்.
அஸ்வின் ஒரு ஸ்வீட்டை கொண்டு வந்து கொடுத்து, “மாமா, மில்க் ஸ்வீட் மாலு அக்காக்கு ரொம்ப பிடிக்கும். குடுத்து சமாதானப் படுத்துங்க. இந்த பிசாசுகளை நான் டைவர்ட் செய்யறேன், என்று கடைசியில் ஆபத்பாந்தவனாக வந்தான்.
“நீதான்டா மச்சான்.”, என்று பாராட்டியவன், மெதுவாய் மாலினியின் அருகில் செல்ல, அஸ்வின் பெண்கள் பட்டாளத்தை பால்கனியில் வைத்து போட்டோ எடுப்பதாகக் கூறி, அழைத்துச் சென்றான்.
“ மாலினி …ஸ்வீட்… “, என்று அவளுக்குக் கொடுக்க, அவனைப் பார்த்து முறைத்தவள், “என்ன மச்சனிங்களைப் பார்த்ததும், நான் மறந்து போயாச்சா?”, என்றாள் முறைப்புடன்.
“இல்லைடா… அவங்க உன் தங்கைங்கன்னுதான் பேசினேன். அதுக்கு முன்னாடி, உங்க மாமா போட்ட ப்ளேடையும், சித்தப்பாவோட வியாதி லிஸ்ட்டையும் எவ்வளவு பொறுமையா காதுல ரத்தம் கொட்டினாலும் காட்டிக்காம கேட்டேன் தெரியுமா? அதெல்லாம் உன் கண்ணுல படலையா ?”, என்று பாவம் போல விஷமமாக கேட்கவும்,
“வெடுக்கென்று அவன் கையிலிருந்த ஸ்வீட்டை லாவகமாக பறித்துக்கொண்டவள், “ஹ்ம்ம்… உங்க மாமி என்னை எத்தனை சவரன் போட்டுகிட்டு வரன்னு  நேரா கேட்க முடியாம எப்படியெல்லாம் வளைச்சு வளைச்சு கேட்டாங்க தெரியுமா? அதுக்கெல்லாம் நான் சமாளிக்கலை ? இப்படித்தான் என் மாமா பசங்களோட இழையறேனா? ஹூம் ? “, என்றவள் புசு புசுவென்று மூச்சு விட்ட படி, ஸ்வீட்டை ஸ்வாகா செய்தாள்.
“அச்சோ, கொஞ்சம் கடிச்சுட்டுக் குடுப்பேன்னு பார்த்தேன்.”, ராகவன் பாவமாக கேட்க,
“அய்ய…. கல்யாணமானா பால்ல வாழைப்பழத்தைப் போட்டு கட்டக் கண்றாவியா ஒன்னு குடுப்பாங்களே, அதை வேணா மொத்தமா எடுத்துக்கங்க. ஸ்வீட்டுக்கெல்லாம் பங்குக்கு வராதீங்க”, விரல் நீட்டி ரூல்ஸ் படிக்க விரிந்த சிரிப்புடன் தலையை இட வலமாக ஆட்டினான். “சரிங்க மேடம்… புரிஞ்சிடுச்சு. உனக்கு புடிக்காததை நான் மிச்சம் வெக்காம காலி செய்யணும். ஒளி மயமா தெரியுது எதிர்காலம்.”,
முறைத்த கண்கள் இப்போது காதலாக பார்த்தது. “சட்டுனு கான்செப்ட்  பிடிச்சிடறீங்க பாருங்க, இதுக்குத்தான் அறிவான புருஷன் வேணுங்கறது. “, என்று சிலாகித்தாள் மாலினி.
“ம்ம்..தனியா மொக்கிட்டு ஐஸ் வெக்கற? போகுது, மாமி என்ன ரொம்ப கேள்வி கேட்டாங்களா ? என்ன சொன்ன ?”, அவள் எதுவும் வருத்தப்பட்டாளோ என்று நினைத்துக் கேட்க,
“அத்தைக்கு திருப்தியா நகை போட்டு வரேன் சின்னம்மான்னு சொன்னேன். நான் எதிர்பார்த்தபடியே, அச்சோ நான் உங்க அம்மாவைவிட பெரியவ. பெரியம்மான்னு சொல்லுன்னு சொன்னாங்களா, அப்படியா, உங்களைப் பார்த்தா சின்ன வயசு மாதிரிதான் தெரியுதுன்னு ஒரு பிட்டைப் போட்டேன். கூடவே, எங்கம்மாகிட்ட சொல்லிடாதீங்க, அப்ப எனக்கு வயசான மாதிரியிருக்கான்னு சண்டைக்கு வருவாங்க பெரியம்மான்னு ஒரு கட்டி ஐசை தூக்கி வெக்கவும், இப்ப நான் அவங்க பெட்.”, கண்ணடித்தபடி புருவம் தூக்கி எப்படி? என்ற பார்வை பார்க்க?
“நீ நடத்துமா. எல்லாரையும் உன் பக்கம் வரவெக்கற வித்தை தெரிஞ்சவ நீ.”, என்றான் ராகவன்.
“ஹம்ம்.. எங்க அம்மாகிட்டத்தான் இந்த பருப்பெல்லாம் வேகாது. மத்தவங்கல்லாம் ஈசிதான்.”, என்றாள் ஒரு பெருமூச்சுடன்.
மாமியாரும், நாத்தனாரும் சகுந்தலாவிற்கு அடுத்த படியில் இருப்பவர்கள், இவள் பருப்பை வேகவிடாமல் தடுப்பதில் என்பதையும் கூடிய சீக்கிரமே புரிந்துகொள்ளுவாள் இந்தப் புது மருமகள்.
சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தவர்களை மறுபடியும் பெண்கள்  பட்டாளம் சூழ்ந்துகொண்டது. “ போறும் போறும்… இப்படி பேசி பேசித்தான் கல்யாணத்துல வந்து நிக்குது.  மிச்சம் அடுத்த வாரம் பேசலாம், வாங்க”, என்று கிண்டலும் கேலியுமாக சாப்பிட அழைத்துச் சென்றார்கள்.
அருகருகே அமர்ந்து உணவருந்த, “இப்பத்தான் எனக்கே நாந்தான் கல்யாணப் பொண்ணு, எனக்குத்தான் கல்யாணம்னு ஃபீல் வருது ரகு. “, என்றாள் மாலினி. கேட்டவன் முகத்தில் ஒரு வலி வந்து மறைந்தது.   ‘பாவம், எனக்காகவும் பார்த்து, அவள் பெற்றோரின் குத்தல் குடைச்சல்களையும் சமாளித்து, நிறைய டென்ஷனில் இருக்கிறாள் ‘, என்று புரிந்தது.
“ஹே…நீங்க எதுக்கு இப்ப சைலன்ட் ஆகிட்டீங்க ? அம்மா எதுவும் ஏடாகூடமா பேசிடுவாங்களோன்னுதான் டென்ஷன். அதெல்லாம் இல்லாம நல்லபடியா நடந்ததுல இப்ப ஹாப்பிதான். நீங்க வொர்ரி பண்ற அளவு எதுவும் இல்லை. இதோ நாளைக்கு நைட் ஷீலா வீட்ல எனக்கு  மெஹந்தி, சங்கீத் வெச்சிருக்கா, எங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் கூட. “
மாலினி சொல்லவும், “ஓ… என்ன செய்வீங்க ? “, ஆர்வத்தோடு ராகவன் கேட்கவும், அவள் சொல்லும் போதே அங்கே வந்த ஷீலா,
“கல்யாணப் பெண்ணுக்கு நாங்க டான்ஸ் ஆடி, பாட்டுப் பாடி ஜாலி செய்வோம் , விருந்து சாப்பிட்டு…அப்பறமா எங்க எல்லாருக்குமா மருதாணி போட்டு அஞ்சாறு மணி நேரம் செம்மையா இருக்கும். வரீங்களா ப்ரோ ?”, ஷீலா கேட்கவும், 
“இல்லை நீங்க எஞ்சாய் செய்ங்க.  நாளைக்கு நைட் என் ப்ரெண்ட்ஸ் கூட பாச்சிலர் பார்ட்டி இருக்கு.”, ராகவன் சொல்லவும், ஆச்சரியமாகப் பார்த்தாள் மாலினி. ஷீலா அவனுக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லி நகர,
“என்ன ? தண்ணி பார்ட்டியா ? நீங்க ட்ரிங்க்ஸ் எடுப்பீங்களா ?”, மாலினி திகைத்துக் கேட்க,
“ஷ்… பார்ட்டி தண்ணி பார்ட்டிதான்.  நான் தர மாட்டேன்னு தெரிஞ்சு விஜய் தரான். சாப்பாடு மட்டும் என் ட்ரீட். சும்மாவே எங்கம்மாவுக்கு கற்பனை ஓடும். இதில் நான் தண்ணி போட்டு வந்தா, அவ்வளவுதான். அதெல்லாம் பழக்கமேயில்லைமா.. பழக்கப்படுத்திக்கற எண்ணமும் இல்லை. ரிலாக்ஸ்.”
“அதான பார்த்தேன்.  பொறுப்பு புண்யகோடியாச்சே…. நீங்களா பாச்சிலர் பார்ட்டின்னு கலக்கறதுன்னு ? விஜய் வேலையா இது? பரவாயில்லை  நீங்களும் உங்க ப்ரெண்ட்ஸ் கூட எஞ்சாய் பண்ணுவீங்க.  எனக்கு கொஞ்சம் கில்டியா இருந்துச்சு. நாம மட்டும் ஜாலியா இருப்பமேன்னு. “, அவள் அளித்த பட்டப்பெயரில் முறைத்தவன்,இறுதியில் அவள் கூறியதைக் கேட்டு,
“ஹேய்… இத்தனை ப்ரஷர்ல இருக்க, நீ ஜாலியா இருந்தாலே எனக்கு சந்தோஷம்தான்மா.  “, ராகவன் பேசிக்கொண்டிருக்கையிலேயே,
“அடடா…. இவங்க பேச்சு எப்ப முடியும்னு தெரியலையே ? இந்த பக்கம் மாமாவை திரும்பவிடாம இந்த அக்காவோட அக்கப்போர் தாங்கலையே ?”, என்று அவள் சித்தி பெண் குரல் விட, கமெண்ட்டும் கேலியும் தெரிக்க, மாலினியின் முகம் லேசாய் சிவந்தது.
“மாலினி, இப்பத்தான் கல்யாணக் களை வருது முகத்தில.”, எதிரில் இருக்கும் அண்ணன் ஓட்ட,  மனதின் சந்தோஷம் மாலினியின் முகத்தில் ஓளிர்ந்ததை ஆசையாக பார்த்துக்கொண்டிருந்த ராகவனையும் சேர்த்து கான்டிட் போட்டோவாகக் கச்சிதமாக பிடித்தான் அஸ்வின்.

Advertisement