Advertisement

அத்தியாயம் – 7
அருகிலிருந்த பார்க்கில்  ஒரு மர நிழலில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள் மாலினியும் ராகவனும். இடையில் அவர்களின் மதிய உணவு. பேசி வைத்தார்போல இரு அம்மாக்களும் அன்று எலுமிச்சை சாதம் கட்டி அனுப்பியிருந்தார்கள். இருவரின் இறுக்கத்தை குறைக்க அது உதவியது.
“இதுலயாவது சம்மந்தியம்மாக்கள் ஒத்துமையா இருக்காங்க.”, ராகவன் தன் சாதத்தில் ஒரு பங்கை அவளுக்கு கொடுக்க, வாங்கி சாப்பிட்டாள்.
“மாலினி… சாரிமா…  நேத்து இருந்த எரிச்சல்ல அதிகமாவே பேசிட்டேன். உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன்னு, பேசி வெச்சதும்தான் புரிஞ்சுது.”, அவஸ்தையாய் ராகவன் பார்க்க,
“சாப்பிடுங்க ரகு. நானுமே நிறைய யோசிச்சேன் நேத்து. உங்க பேச்சு நான் எதிர்பார்க்கலை.”,  என்றவள் மீண்டும் ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, தன் டப்பாவில் இருந்த உருளைப் பொரியலில் பாதியை அவனுக்கு வைத்தபடியே,
“உங்களை முதல் முதலா எப்ப கவனிச்சேன் தெரியுமா ரகு ?”, என்றாள் அவனை பார்த்தபடியே.
“ம்ம்… ரேவதி சீட்லர்ந்து ஒரு பொண்ணு பார்க்குதேன்னு  நான் பார்த்தபோதுதான் ரேவதி உன்னை இன்ட்ரோ குடுத்தாங்க. அப்பதான ?”
“இல்லை. அதுக்கு ரெண்டு நாள் முன்னாடி. லன்ச் டைம் கிட்ட நான் அவ சீட்டுக்கு வந்த போது, இருன்னு அவ ரெஸ்ட் ரூம் போனா. அப்ப பாதி ஆபிஸ் காலி. ஆனாலும் உங்க டேபிளுக்கு ஒரு பெரியவர் வந்தார். அவரை உட்கார வெச்சு பேசவும், என் காதுல விழுந்தது.”
நெற்றி சுருக்கி யாருடன் பேசினோம். எப்படி மாலினி வந்த போது கவனிக்காமல் போனோம் என்று யோசித்தான் சாப்பிட்டபடி.
“அவர்கிட்ட நீங்க பேசினது என்னை கவர்ந்துச்சு. ‘ உங்க பக்கத்து நியாயம் புரியுது சர். நான் எங்க ரிவ்யு பானல்க்குக் கூட எழுதியிருக்கேன் உங்க கேசை மேற்கோள் காட்டி. இது போல இன்னும் நிறையா நியாயமாங்கவங்க கிளைம் தேவையில்லாமல் பிடிச்சு வெச்சிருக்கோம். சிறு வியாபாரிங்களுக்கு இது கஷ்டம்னு. கண்டிப்பா நான் வாங்கித் தரேன்.’ அவருக்கு ஆறுதல் சொல்லிகிட்டு இருந்தீங்க. நிஜமா நான் அசந்துபோனேன். கவர்மெண்ட் ஸ்டாப் அதுவரைக்கும் நான் பார்த்தது, கொஞ்சம்  தெனாவட்டோடு, நிறைய சோகக் கதை கேட்டாச்சு, ரூல்ஸ்படிதான் கிளம்புன்னு சொல்றவங்கதான். தெரிஞ்சவங்க, மேல் அதிகாரிங்க இல்லை லஞ்சம்னு எதாவது ரூட்ல போனாத்தான் ஒழுங்கான பதில் கிடைக்கும், வேலை நடக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். அந்த நினைப்பை தகர்த்தீங்க அன்னிக்கு. யாருடா இது ம்யூசியம் பீஸ்னுதான் உங்களை அன்னிக்குப் பார்த்தேன்.”, பழைய ஞாபகத்தில் ஒரு சின்ன சிரிப்போடு நினைவுகளை அசைபோடுபவளைப் பார்த்தவன் மயங்கிப்போய் பார்த்துக்கொண்டேயிருந்தான்.
“ரேவதி வந்ததும் நான் அவ கூட கிளம்பிட்டேன். அப்பவும் நீங்க அவர்கிட்ட எதோ பேசிகிட்டு இருந்தீங்க. அப்பதான் ரேவதி உங்களைப் பத்தி சொன்னா. லஞ்சம் வாங்க மாட்டீங்க, அதே கருத்து  இருக்கவங்களை ஒரு குழுவா அமைச்சு, பண பார்ட்டிங்க கேசை லஞ்சம் வாங்கற ஆட்களுக்கு தள்ளிவிட்டு, நியாயமான க்ளைம், வசதியில்லாத சின்ன வியாபாரிங்க க்ளைம்ஸ் நீங்க எந்த பர்சென்டேஜ்ஜும் எடுக்காம ஹாண்டில் செய்யறீங்கன்னு பெருமைபட்டா. அன்னிக்கு சாப்பிட்டு முடிக்கற வரை உங்க கதைதான் ஓடுச்சு.”
“ஓஹ்… உங்க ஆபிஸ் க்ளைம் பத்தி பேசத்தான் வந்ததா நினைச்சேன். அதுக்கு முன்னாடியே இவ்வளவு ஓடியிருக்கா ? இதுவரை சொல்லவேயில்லை.”, பெருமையாக உணர்ந்தவன் முகம் புன்னகை பூத்தது.
“ம்ம்… இதுல உங்க ஆபிஸ்லயே நீங்கதான் க்ளெய்ம்ஸ் எக்ஸ்பர்ட். அடுத்து கிரேட் போகறதுக்கான பரீட்சைக்கூட ஒரே அடெம்ட்ல பெரிய ஸ்கோரோட பாஸ் பண்ணீங்கன்னு உங்க திறமைக்கு அப்படி ஒரு விளம்பரம். உங்க தங்கை கல்யாணம் முடிச்சது பத்தி சொல்லி உங்க பொறுப்புபத்தி சிலாகித்து ஒரு பெரிய பில்டப்.”, உதட்டை சுழித்து மாலினி சொல்ல,
“அட இது தெரியாம, நம்மல்லாம் இந்த மாதிரி பெண்ணை எங்கிருந்து  இம்ப்ரெஸ் செய்ய முடியும் ? இதெல்லாம் உனக்குக் கிடைக்காதுடான்னு நான் தருமி ரேஞ்சுக்கு புலம்பியிருக்கேனே…. சரி, என்ன திடீர்னு இன்னிக்கு சொல்ற ?”,,ராகவன் தன்னையே கிண்டல் செய்துகொண்டு அவளைக் கேட்க,
“உங்களை முதல்ல திரும்பி பாக்க வெச்சதே, நீங்க அடுத்தவங்க பக்கத்து நியாமும் கன்சிடர் செஞ்சதுதான். எங்க அப்பா அம்மா பேசின போதும், அவங்க பக்கத்துலர்ந்து அது நியாயம்தான்னு சொன்னவர் எங்க போனார்? நேத்து ராத்திரி  பேசினது ‘யாருடா இது? ‘,ன்னு கேட்கிற மாதிரி இருந்துச்சு. யார் நிஜ முகம்னு யோசிக்கற அளவுக்கு போனேன்.”. அவள் வலியோடு பேசுவதைக் கேட்டவனின் முகமும் விழுந்துவிட்டது.
“இல்லை மாலினி, நேத்து பேசினது இல்லை என் குணம்.  அது அம்மா, காயத்ரி போட்டு தாளிச்ச எரிச்சல் என்னை வேற மாதிரி ஆக்கிடுச்சு. அவங்க கிட்ட சொன்னாலும் புரிஞ்சுக்கலை. என்னால ரொம்ப திரும்ப பேசவும் முடியாத மாதிரி உங்க அப்பா வராதது, நீ சேலை எடுத்ததுக்கு நான் சப்போர்ட் செஞ்சதெல்லாம் என்னை கட்டிப்போட்டுடுச்சு. எல்லாமா சேர்ந்து ரொம்ப எரிச்சலா, கோவமா ஒரு எமோஷன்ல இருந்தேன். ”, ஒரு பெருமூச்சுடன் அவனின் அப்போதைய மன நிலையை அவளுக்கு மெதுவாக விவரித்தான்.
“ரகு…. உங்க எரிச்சல, கோவம் எதுவானாலும் எங்கிட்ட கொட்டுங்க, காட்டாதீங்க. “, அவன் கண் நோக்கி மாலினி அழுத்தமாய் சொல்ல, ஒரு நொடி அதிர்ந்தவன், கண் மூடித் திறந்து , “ஐ ப்ராமிஸ்”, என்றான்.
சட்டென்று இப்படிச் சொல்லுவான் என்று நினைகாதவள், “ஹ… நான் சொன்னதுக்கான வித்தியாசம் புரிஞ்சுதான் சொல்றீங்களா ?”, சந்தேகமாய்க் கேட்டாள் மாலினி.
“ம்ம்… உன் எரிச்சல், கோவத்தையெல்லாம் எங்கிட்ட சொல்லி புலம்பு அது ப்ரச்சனையில்லை, ஆனா வேற எடத்துல காட்ட முடியலைன்னு எங்கிட்ட அதை காட்டாதடான்னு சொல்ற. அதுதான ?  நீ கேட்டது நியாயம்தானே. அதுதான் உடனே வாக்கு குடுத்தேன். கண்டிப்பா காப்பாத்துவேன். தடுமாறினா, தடுத்து நிறுத்துமா, தள்ளிப் போகாதே.”, அவளுக்கு சற்றும் சளைத்தவன் தான் இல்லையென்று ராகவன் காட்டவும்,
“ஐ ப்ராமிஸ்.”, என்று அவனைப் போலவே ஒரு மெச்சுதலான புன்னைகையுடன் மாலினியும் வாக்கு கொடுத்தாள்.
முதல் சண்டையும் அதற்கான தீர்வும் சுபமாய் முடிய, இப்போதுதான் ருசியறிந்து சாப்பிட்டாள்.
“எங்க அம்மாவிட அத்தை செஞ்சது நல்லா இருக்கு.”, சில நிமிடங்களில் மாலினி சொல்லவும்,
“தெரியுது. உங்க அம்மாவோடதை எங்கிட்ட தள்ளிட்டு என் லன்ச் மொத்தமா மொக்கும்போதே தெரிஞ்சுது.”, ராகவன் கிண்டல் செய்ய,
“விடுங்க, கல்யாணம் முடிஞ்சதும் எனக்கும் தனியா கட்டித் தருவாங்க. அப்ப பங்குக்கு வரமாட்டேன்.”, மாலினி சொன்னாள்.
பாவம், அதெல்லாம் மகனுக்கு மட்டும்தான் பர்வதம் கட்டுவார், மருமகளுக்கு இல்லை என்பது தெரிய வரும்போது வருத்தப் படப்போவது தெரியாமல் ராகவனுடன் வம்பு வளர்த்துக்கொண்டிருந்தாள்.
 “சரி…என்னைப் பார்த்து பிடிச்சுத்தான் அன்னிக்கு முதல் தடவை பேசினியா? எதுவுமே தெரியாம, ஆஃபிசுக்கு காசை திரும்ப வாங்கறதல மட்டுத்தான் கவனம்ங்கற மாதிரிதான் பேசின ?”
“பின்ன, உங்ககிட்ட கடலையா போட முடியும் ? நீங்களும்தான் கல்லையும் மண்ணையும் பார்க்கற மாதிரி, இந்த டீடேய்ல் வேணும், அந்த பார்ம் வேணும்னு அடுக்கிட்டு இருந்தீங்க ?”
“ஹ்ம்ம்… நீ எல்லாம் எட்டாக்கனின்னுதான் நினைச்சேன்.அப்பறம் என்னை சைட் அடிக்கிறியோன்னு ஒரு மாசம் கழிச்சுத்தான் டவுட்டே வந்துச்சு…”, பழைய நினைவுகளில் ராகவனும் மலர்ந்து சிரிக்க,
“ரேவதி கூட கேட்டா, அடி இந்த பெட்ரொமாக்ஸ் லைட்டே வேணுமா ? வேற இந்த   டார்ச் லைட்டு LED எல்லாம் வேண்டாமான்னு…”, உதடு சுழித்து குறும்பு கொப்பளிக்க மாலினி கேட்க,
“எந்த பிறவியில நான் செய்த என்ன புண்ணியமோ… நல்ல வேளை உனக்கு பழைய மாடல் லைட்  அதுவும் பட்டி டிங்கரிங்கோட இருந்தாலும் பிடிச்சுது.”, ராகவன் ஒப்புக்கொடுத்தான்.
 வாய் விட்டு சிரித்தவள், “ஆமாம், ‘ உங்க அளவுக்கு நான் இல்லை மாலினி. நீங்க நல்லா யோசிங்கன்னு ‘, அப்பவும், வர அதிர்ஷடத்தை வாங்கிப் போடாம என் ப்ரபோசலை ஒத்துக்காம திருப்பி அனுப்பினவர்தான ?”, நக்கலடித்தாள் மாலினி.
என்னவும் சொல்லிக்கொள் என்று புன்னகையோடே பார்த்தவன், “உன்னை ரொம்ப பிடிச்சாலும் , அவசரமா முடிவெடுத்துட்டோமோன்னு  நாளைக்கு நீ வருத்தப் பட கூடாதுன்னுதான் சொன்னேன். உன் பக்கத்துலர்ந்தும் நான் யோசிக்கணும். இல்லாட்டி உன் மேல  நான் வெச்ச காதலுக்கு அர்த்தமேயில்லை மாலினி. அதுக்காக நீ என்னை எவ்வளவு ஓட்டினாலும் சரி.”, என்று திரும்பவும் அவளுக்கு விளக்கினான். ஏற்கனவே சொன்னதுதான், ஆனாலும் இதைப் பற்றி அவனை ஓட்டுவதில் மாலினிக்கு அலாதி இன்பம். அவளுக்காகப் பார்த்தான் என்பதில் அவளுக்குமே ஒரு கர்வம்.
அடுத்து பேச்சு அவனுக்கான கல்யாண உடை எடுப்பது பற்றி பேசியபடி, மெதுவாக அவள் அலுவலகம் நோக்கி நடந்தார்கள்.
“ரகு…நமக்குள்ள எந்த ஈகோவும் வேண்டாம். அஸ்வின் மோதிரம் உங்களுக்கு ட்ரெஸ் எடுக்கற அன்னிக்கே வாங்கலாம். நான் அதுக்கு பே பண்றேன். என் தம்பிக்குத்தான, நீங்க அதை அப்பறம் கூட எனக்கு குடுங்க. நான் வாங்கிக்கறேன். இது நம்மோட போகட்டும் ப்ளீஸ். நீங்க திரும்ப கடன் வாங்க வேண்டாம்.”, என்றாள் பொறுமையாக.
“மாலினி…இது நிஜமா எனக்கு கஷ்டமா இருக்கு. பின்னாடி எப்பவாச்சம் தெரிய வந்தா உங்க வீட்லையும் இது ப்ரச்சனையாகும். “, ராகவன் தயக்கமாகவே யோசிக்க
“என் பாங்க் அக்கவுண்ட் அப்பா பாங்கல இல்லை. அவர் ஒன்னும் ட்ரேஸ் செய்ய மாட்டார். இது நம்மோட போகும். விடுங்க.”. வாக்குக் கொடுத்தவளுக்கு அது ராகவன் வீட்டிலேயே எப்படித் திரும்பும் என்று கணிக்கத் தெரியவில்லை. இன்னும் பர்வதம் காயத்ரியைப் பற்றி முழுதாக அறியவில்லை பாவம்.
சில பல உட்பூசல்களைத் தாண்டி பெரிதாக எதுவும் வெடிக்காமல் திருமண பந்தக்கால் நடவு விழா வரையில் வந்தது.

Advertisement