Advertisement

அத்தியாயம் – 6
மாலினி அவள் வீட்டில அவள் பெற்றோர்களிடம் வறுபட்டுக்கொண்டிருந்தாள். தனிச்சையாக விலை கம்மியாக புடவை எடுத்தது, தாலி செயினை முடிவு செய்தது என்று ஆரம்பித்து, ராகவன் எப்படி அந்த மாதிரி கூறலாம், அதற்கான எதிர்வினை மாலினிக்கு வரும் என்ற அளவில் கூடவா தெரியாது ? இப்படி இருந்தால்  அவள் மாமியார் நாத்தனாரிடம் விழி பிதுங்க வேண்டியிருக்கும், இதெல்லாம் தேவையா என்று வகைவகையாக வறுத்து, பொரித்து, தாளித்துக் கொட்டினார் சகுந்தலா.
“ஏன் மாலினி, கூட இருக்கவங்க கருத்தும் கேட்கணும்னு தெரியாதா உனக்கு. அம்மாக்கே இவ்வளவு கோவம்னா அவங்களுக்கு இன்னும்  இருக்கும். இதெல்லாம் யோசிக்காம நீயும், ராகவனுமே எல்லாத்தையும் டிசைட் செய்யறதானா நாங்க எதுக்கு? வெறும் செலவு செய்யறதுக்கு மட்டும்னு நினைக்கிறயா ? “, என்று இளங்கோவனும் கடிந்தார்.
கல்யாண மண்டபம், சாப்பாடு, மேடை அலங்காரம் என்று எல்லாவற்றிலும் ராகவனது ஒப்புதல் பெற்றுக் கொண்டிருந்த மாலினியின் மீது அவரும் ஏக கடுப்பில் இருந்ததும் ஒரு காரணம். எல்லாம் இவர் செலவு செய்ய, இதில் அவனுக்கு கருத்து சொல்லும் உரிமை எதற்கு ?, என்ற எண்ணம் வலுப்பெற்றுக்கொண்டிருந்தது.
இருவருமாகப் பேச, மாலினிக்கு டென்ஷன் ஏறியது. ‘இந்த மனுஷன் அவர் அக்கறையை இப்படித்தான் காட்டணுமா? என்னை வெச்சி செய்யறாங்களே? பொண்டாட்டியாகறத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளை பொண்ணைத் தாங்கறார்ன்னு சந்தோஷப்படறதுக்கு பதிலா எனக்குன்னு வாய்ச்சிருக்கே !’, என்று மனதுக்குள் புலம்பியபடியே சமயம் கிடைத்தவுடன் ராகவனுக்கு போன் செய்யவேண்டும் என்று நினைத்து, பதில் பேசாமல் மௌனமாக இருந்தாள்.
“அவருக்கான கல்யாண வேட்டி சட்டையும் அவரோட நீயே போய் எடுத்துடு. ரிசெப்ஷனுக்கு ? ”, இளங்கோவன் கேட்டு நிறுத்தவும்,
“அவருக்கு கோட் சூட் வேண்டாம்னு சொல்லிட்டார்ப்பா.  ஒரு ப்ளேசர் மட்டும்தான். ஃபார்மல் பாண்ட் சர்ட் அவரே எடுத்துக்குவார்.”, மாலினி சொல்ல,
“அதான, எல்லாத்தையும் பார்த்து வெச்சிருப்பாங்க. நீங்க எப்ப காசு குடுப்பீங்கன்னுதான் வெயிட்டிங். இல்ல மாலினி?”, என்று நக்கலடித்தபடி மாலினியை மேலும் கடுப்பேற்றிவிட்டு உள்ளே சென்றார் சகுந்தலா.
இப்படி இரு வேறு மன நிலையில் இருவரும்  இருக்கும்போது, போன் செய்ய முடிவெடுத்தது பெரும் தவறாகிப் போனது.
இரவு ஒன்பது மணியளவில் தெரு முனை மரத்தடியில் நின்று மாலினியை அழைத்தான் ராகவன்.
அவன் அழைப்பதாக முன்பே மெசேஜ் அனுப்பியிருந்ததால் மாலினியும் மொட்டைமாடியில் இருந்தாள்.
“மாலினி… சாப்டாச்சா….”
“ம்ம்… ஆச்சு.  ஒரு புடவை எடுக்க இவ்வளவு அக்கப்போரான்னு ஆகிடுச்சு ரகு. நீயே எல்லாம் முடிவு செய்யறதான்னு, நிறுத்தாமா பேசிகிட்டு இருக்காங்க அம்மா. இதுல நீங்க வேற என் இஷ்டம்னு சொன்னது ஏகத்துக்கும் அவங்களை கடுப்பாக்கிடுச்சு. உங்க அம்மா, தங்கை எதுவும் என்னை அப்பறமா சொல்லுவாங்களோன்னு ஒரே புலம்பல்.எதுவும் சொன்னாங்களா உங்க வீட்ல?”, மாலினி தன் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டு, அவனை கேட்க,
“கேட்காத… இரண்டு மணி நேரமா இங்கயுமே இதே கதைதான்.  நான் சாதாரணமா உன்னிஷ்ட்டம்னு சொன்னதுக்கு இவ்வளவு ரியாக்ஷனா ? அப்பறம் எதுக்கு எங்கிட்ட பஞ்சாயத்துக்கு வரணும் ? இனி எதுக்கும் வாய தொறக்கப் போறதில்லை. உங்க லேடீஸ் பாலிடிக்ஸ் தாங்கலைடா சாமி.”, தன்னை நொந்தபடியே கூறினான் ராகவன்.
“விடுங்க… கல்யாணம் முடியட்டும். நான் பார்த்துக்கறேன். ஆனா இது உங்களுக்கு ஒரு பாடம். எதுக்கும் என்னை நேரடியா சப்போர்ட் செய்யாதீங்க.”
“தெரியுது. சரி அதைவிடு. ஏன் மாலினி அஸ்வினுக்கு மோதிரம் போடணும்னா நீ எங்கிட்ட சொல்ல வேண்டியதுதான ? எதுக்கு உங்கம்மா வந்து ஆர்டர் போடறாங்க? இதான் சாக்குன்னு காயத்ரி வேற ஏத்தி விடறா? நாங்கதான் பொண்ணு வீடு மாதிரி பணிஞ்சு போறோம்னு. பத்தாததுக்கு உங்கப்பா லாஸ்ட் மினிட்ல வர முடியாதுங்கறார். நானும் வீட்ல எவ்வளவுதான் சமாளிக்க?”, கட கடவென்று பொரிந்தான்.
“இருங்க… எதுக்கு அஸ்வினுக்கு மோதிரம்? எப்ப சொன்னாங்க ? எனக்கே தெரியாதே?” திகைத்து வந்தது மாலினியின் குரல்.
“இங்க பார் மாலினி. நான் எங்க வீட்டு ஆளுங்களை கன்ட்ரோல்ல வெச்சிருக்க மாதிரி நீயும் செஞ்சாத்தான் கல்யாணம் நல்ல படியா முடியும். ஆளாளுக்கு உங்க அப்பாவும் அம்மாவும் இஷ்டத்துக்கு ஆடினா, என் பொறுமைக்கும் எல்லை இருக்கு.”, மாலினிக்கு விஷயமே தெரியாது என்றதும் ராகவனுக்கு இன்னுமே ஏறிக்கொண்டது அவள் பெற்றோர் மீது.
“வெய்ட்… முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க. உங்க அளவுக்கு என்னால எப்படிப்பா கன்ட்ரோல் செய்ய முடியும்? என்னால முடிஞ்ச அளவு  அப்பா செய்யற அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாத்துலையும் உங்களை கலக்காம நான் எதுவும் ஒத்துகறது இல்லை. என்னை அவாய்ட் செய்து ஒரு விஷயம் நடக்குதுன்னா,  எப்படி என்னை குத்தம் சொல்ல முடியும் ?”
“என்னத்தை சொல்ல ? “, என்றாலும் சகுந்தலா சொன்னதையும் அதற்கான எதிர்விளைவுகள் வீட்டில் நடந்தது பற்றியும் சுருக்கமாக சொன்னான்.
“நான் அம்மாகிட்ட பேசறேன் ரகு. இன்னிக்கு அப்பாக்கு நிஜமாவே மீட்டிங் இருந்துச்சு. அவர் சும்மா சொல்லலை. நேத்து வரைக்கும் மதியம் வீட்டுக்கு வரதாதான் சொன்னார்.”, என்னதான் பெற்றோர் தன்னை திட்டினாலும், ராகவன் அவள் அப்பாவைக் குறை சொன்னது மாலினியை வருத்தியது.
“என்னவோ போ. இரண்டு பக்கமும் இப்படியே செய்தாங்கன்னா, கல்யாணம் முடிஞ்ச கையோட நம்மளை கோர்ட் வாசலுக்கு இழுத்துகிட்டு போயிருவாங்க போல. “
“என்ன ரகு இது அபசகுனமா பேசிகிட்டு. நான்தான் அம்மாகிட்ட பேசறேன்னு சொல்றேனில்ல ?”, கடிந்தாள் மாலினி.
“எதுக்கு ? ஒரு முக்கால் பவுன் போட அவங்களுக்கு வக்கில்லையான்னு என்னை கழுவி ஊத்தவா ? ஒண்ணும் வேண்டாம். கடன் மேல கடன் வாங்கியாச்சு. இதுக்கும் சேர்த்து வாங்கறேன்.  தலையைக் குடுத்ததுக்கு அப்பறம் என்ன செய்ய முடியும் ?”, ராகவன் இன்னும் காந்திக்கொண்டிருக்க என்ன வார்த்தை சொன்னான் என்று உணரும் முன் சொல்லிவிட்டிருந்தான்.
“ரகு…”, அதிர்ந்து வந்தது மாலினியின் குரல். “என்ன சொன்னீங்க ? தலையைக் குடுத்தாச்சா ? அப்ப இஷ்டமில்லாமத்தான் இந்த கல்யாணமா ? “
“ஹே… உளறாதே …”, ராகவன் புரிந்து இடைமறிக்க, அதை உதறியவள்,
“நான் இல்லை. நீங்கதான் உளறிகிட்டு இருக்கீங்க. முதல்ல என்னவோ கோர்ட்டுக்கு இழுத்துகிட்டு போவாங்கன்னு சொன்னீங்க. அடுத்து என்னவோ தலையை குடுத்தாச்சுன்னு சொல்றீங்க. அஸ்வினுக்கு மோதிரம் போடணும்னா, அதை நானே வாங்கறேன். நீங்க செய்ய வேண்டாம். எனக்காக கடனும் வாங்க வேண்டாம்.”, ரோஷமாக சொல்ல,
“மாலினி…  உன் கிட்ட காசு இருக்குன்னு தெரியும். அது உன்னோட. நான் செய்ய வேண்டியது நான் தான் செய்யணும்.  “, ராகவன் குரலிலும் கனல் தெரிந்தது.
“இப்படி கஷ்ட்டப்பட்டு செய்ய வேண்டிய அவசியமில்லை ரகு. “, மாலினியும் சூடாக,
“எங்க பக்கத்துலர்ந்து ஒரு டிமாண்ட் வெக்கலை. உங்கம்மா இப்படி ஆர்டர் போடறதுதான் நல்லாயில்லை. அதுதான் ப்ரச்சனை. அதை சரி செய்யப் பாரு. அதைவிட்டு எங்கிட்ட காசிருக்குன்னு ஆரம்பிக்காத. உங்கப்பாகிட்ட இந்த டயலாக்கைக் கேட்டு ஏற்கனவே என் காது புளிச்சுபோச்சு.”, தன்மானம் சீண்டப்பட்ட சிங்கமாக உருமினான் ரகு.
“இதுக்கு மேல போன்ல பேச வேண்டாம் ரகு. வார்த்தை தடிக்குது. நாளைக்குப் பார்த்துக்கலாம்.”, போனை வைத்துவிட்டு ஆழ்ந்து மூச்செடுத்துக்கொண்டிருந்தாள் மாலினி.
ரகுவின் இந்த கோபம் புதிது. ஏன் இப்படி தடித்த வார்த்தைகள் ? அம்மா செய்தது தப்புதான். அதைத்தான் கேட்கிறேன் என்று சொல்லிவிட்டாளே? எதிராளி பக்கமிருந்தும் யோசிக்கும் ராகவனிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை மாலினி.
கண்ணீர் திரையிட்டாலும், மீண்டும் ஒரு முறை அவர்கள் பேசியதை ஓட்டிப் பார்த்தாள். ராகவனை வீட்டில் நிறைய பேசியிருக்க வேண்டும். அதோடு அப்பா வராததையும் அவர்கள் வைத்துப் பேசியிருக்க வேண்டும். அந்த கையறு நிலைதான் தன்னிடம் வெடித்திருக்கிறது என்பது போல் தோன்றியது.
மற்றொரு மனமோ, ‘அவன் கோவத்திற்கு நீயாக காரணம் கண்டுபிடித்து சப்பைகட்டு கட்டுகிறாயா? எப்படி இந்த மாதிரி அவன் பேச முடியும் ? இதை இப்படியே விட்டால் இன்னும் இன்னும் பேச்சுகள் வர வாய்ப்பிருக்கிறது. அதென்ன யோசிக்காமல் பேசுவது? ஆபிசில் அப்படி பேசிவிட முடியுமா? மானேஜர் திட்டினார் என்று நான் என் கோவத்தை இவர் மேலோ இவர் அம்மா மீதோ காட்டினால் சும்மாவா இருப்பார்?’, என்று எதிர் மறை எண்ணங்கள் தோன்றியது.
எண்ணம் போகும் பாதை புரிந்ததும், நிறுத்தி, அவள் அறைக்கு வந்தவள், மெலடி பாடல்களை ஒலிக்க விட்டு அமைதியாக படுத்துக்கொண்டாள். இந்த நேரத்தில் அம்மாவிடம் பேசுவது உசிதமில்லை என்று புரிந்து ஒதுக்கி வைத்தாள்.
மறு நாள் காலை அலுவலகம் கிளம்பி காலை உணவிற்கு வந்து அமர்ந்தவள்,
“அம்மா, அஸ்வினுக்கு மோதிரம் போடணும்னா, எங்கிட்ட சொல்ல வேண்டியதுதான ? எதுக்கு அவர் அம்மாகிட்ட சொன்ன ?”, என்று சாதாரணமாக கேட்பதுபோல கேட்டாள் மாலினி.
“ஏன்… எல்லாம் உங்கிட்டதான் சொல்லி பெர்மிஷன் வாங்கணுமா? நியாயமா பார்த்தா நாங்கதான் முறை செய்யறதைப் பத்தி பேசிக்கணும். இங்கதான் பொண்ணும் மாப்பிள்ளையும் நாட்டாமை செய்யறீங்க. “, தன் அங்கலாய்ப்பும் சேர்த்து குத்தினார் சகுந்தலா.
“அவர் கேட்டபோது எனக்கு அப்படி ஒரு விஷயம் நடந்ததே தெரியலை. அட் லீஸ்ட் நாம வீட்டுக்கு வந்தப்பறமாவது சொல்லியிருக்கலாமில்லை ?”, கொஞ்சம் கடுப்பாய்க் கேட்டாள் மாலினி.
“நீ புடவை, நகை வாங்க போட்ட ஆட்டத்துல இதெல்லாம் மறந்துடுச்சு. என்ன இப்ப ? முக்கால் பவுன் செய்ய முடியாதுங்கறாங்களா ? அந்தம்மா முழிக்கும்போதே நினைச்சேன். இத்தனைக்கும் பொண்ணை கல்யாணம் செஞ்சு குடுத்திருக்காங்க. என்னத்தை செஞ்சாங்களோ, பாவம் பொண்ணெடுத்த சம்மந்தி.”, சகுந்தலா பாட்டு பேசிக்கொண்டே போக,
“நீயே ஏன் கதை வசனம் எழுதற ? அப்படியெல்லாம் ஒன்னும் சொல்லலை. எனக்குத்தான் டிமாண்ட் மாதிரி வெச்சது பிடிக்கலை. இதை செய்னு அவங்க இதுவரைக்கும் எதுவுமே சொல்லலை. நாம மட்டும் இஷ்டத்துக்கு ஆர்டர் போடறோம்.”, மாலினி நியாயமாக எடுத்துக்கூற,
“என்ன அப்படி அநியாயமா கேட்டுட்டோம் நாம ? உன் வசதிக்குத்தான் ரூம் கேட்டோம், அதுவும் நாமளே கட்டித்தரோம்னு. இப்பவும் அவங்க மோதிரம் போடலைன்னா நாமளே போட்டுக்கப்போறோம். எந்த பொண்ணு வீட்ல இதுக்கு மேல இறங்கி வருவாங்க ?  அவங்கதான் இஷடத்துக்கு மாப்பிள்ளை கெத்தை காட்டறாங்க. இந்த வசதியிலதான் உங்க பொண்ணு வாழணும்னு சொல்றாங்க. இதுவே நாங்க பார்த்த சம்மந்தமா இருந்தா அத்தோட பேச்சு நின்னிருக்கும். நீ இவர்தான்னு நிக்கவும், நாமதான் வளைஞ்சு போறோம்.”, இளங்கோவன் கண்டிப்பான குரலில், அவர் கோணத்தில் சரி என்பது போல பேசினார்.
“முதல்ல அப்படிப்பட்ட எடத்துல நாம் ஏன் சமந்தம் பேசியிருக்கப்போறோம். கடல் மாதிரி வீடு இருக்க சம்மந்தம் வந்ததை இவ பிடிவாதத்துல வேண்டாம்னு சொல்லிட்டோம். ஹ்ம்ம்ம்… யாருக்கு குடுத்து வெச்சிருக்கோ. அந்த வீட்ல வந்து நாட்டாமை செய்ய…”, கைவிட்டுப் போன அமெரிக்க வரன் பற்றிய வருத்தம் இன்னும் இருந்தது சகுந்தலாவிற்கு.
பெற்றோர் மீது பொங்கி வந்த ஆதங்கத்தை இட்லியோடு சேர்த்து விழுங்கியவள், ஒன்றும் சொல்லாமல் கிளம்பினாள். ராகவன் பேசியது ஒரு வகையில் பாதித்தால், பெற்றோர் பேசுவது மற்றொரு வகையில் தாக்கியது.
ஒரு மாதத்தில் கல்யாணம். எவ்வளவு சந்தோஷமாக இருக்க வேண்டிய தருணம் ? ஏன் …ஏன் இப்படியாகியது? யோசித்துக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவள், ஒரு சந்திலிருந்து மெயின் ரோட்டிற்கு வரும் காரை கவனிக்காமல்  ஒட்டி வர, நல்ல வேளையாக கார் பிரேக் போட்டு நின்றது.
அவளை தட்டியிருந்து வண்டியோடு கீழே விழுந்தால் அந்த பீக் ட்ராஃபிக்கில் பின்னாடி வரும் வண்டி அவள் மேல் மோதியிருக்கலாம், அல்லது இடித்த வேகத்தில் அவள் பறந்து சென்று மீடியனில் மோதியிருக்கலாம். கார் ஓட்டி வந்த ட்ரைவர் ஏக வசனத்தில் கத்த ஆரம்பிக்க, சுதாரித்தவள், அவனை நோக்கி, ‘சாரி’ என்று வாயசைத்துவிட்டு, அந்த இடத்தைவிட்டு வேகமாய் கிளம்பிவிட்டாள். அதன் பின் அவள் இருக்கைக்கு வரும் வரை கவனம் சுற்றுப் புறத்தில் மட்டுமே. பின்புதான் படபடப்பு சற்றே குறைந்தது.
‘ஹ்ம்ம்… இப்படியே போச்சுன்னா, கல்யாணம் முடிஞ்சு கோர்ட் வாசலுக்கு போறதுக்கு பதிலா, கல்யாணத்துக்கு முன்னாடியே பரலோகம் போயிடுவேன் போல. ‘, எதாவது ஒரு வகையில் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, ஒரு பெருமூச்சுடன் வேலையை தொடங்கினாள்.
இடையில் ரெஸ்ட் ரூம் எழுந்து செல்ல யத்தனிக்க, அனிச்சையாக போனைப் பார்க்கவும், ராகவனிடமிருந்து மெசேஜ். மதியம் அவள் அலுவலகம் முன்பு காத்திருப்பதாக இருந்தது செய்தி.  சரி என்று ஒரு எமோஜியை மட்டும் தட்டியவள், அவனிடம் என்ன பேசுவது என்று யோசித்தாள். கண்டிப்பாக அவனும் பேசியதைப் பற்றி யோசித்திருப்பான். பார்க்கலாம், தன் தவறை உணர்ந்து பேசுகிறானா, இல்லை இன்னமும் அவன் சொன்னது சரி என்பது போல பேசுகிறானா என்று நினைத்தாள்.
அவளது கலக்கம் எல்லாம், ‘அப்படி உணராது பேசினால், இவள் என்ன செய்ய வேண்டும்? தானே விளக்க வேண்டுமா ? இல்லை, அவன் அவளைத் தேடி வந்ததே போதும் என்று இறங்கிப்போய் மன்னிப்பு கேட்க வேண்டுமா?  ‘, இப்போது அவள் இதை கையாளும் விதமே இனி வரும் காலத்திற்கும் முன் உதாரணமாக இருக்கும். மிகுந்த கவனம் வேண்டும் என்று மட்டும் புரிந்தது.
இவளிடம் இருக்கும் பக்குவம் ராகவனுக்கு இருக்குமா? அவன் செயலின் வீரியத்தை உணர்ந்து வருகிறானா, அல்லது, அவளிடம் கோபமாக பேசிவிட்டோமே அதனால் போய் சமாதானப் படுத்துவோம் என்ற அளவிலேயே வந்திருப்பானா ?

Advertisement