Advertisement

அத்தியாயம் – 4

திங்கள்கிழமை உணவு வேளையின்போது, சற்று தயக்கத்தோடேதான் ராகவனை அழைத்தாள். பார்த்துச் சென்ற பின் ஓரிரு நல விசாரிப்பைத் தவிர்த்து எந்த தகவல் பறிமாற்றமும்  இல்லை அவர்களிடம்.

“சொல்லுமா, சாப்பிட்டாச்சா?”, என்று ராகவன் வழமைபோலக் கேட்டான் அழைப்பை எடுத்ததுமே.

“ம்ம்… நீங்க”, என்றாள் சற்று தெம்புடன்.

“ஆச்சு…நீ கூப்பிடுவியேன்னுதான் கீழ இறங்கினேன். நாங்க கிளம்பினதும் எதுவும் உனக்கு ப்ரச்சனையில்லையே ? அன்று இரவும் இதையே கேட்டு மெசேஜ் அனுப்பியிருந்தான்.

“இல்லைங்க. எனக்கு அம்மா இவ்வளவு கம்மியா நகை போடுறதா சொன்னது கஷ்டமாகிடுச்சு. அம்மாட்ட கேட்டேன்….”, ஆரம்பித்தவள், என் தாய் உன் அம்மாவை, குடும்பத்தை தரக்குறைவாக பேசினாள் என்று எப்படி சொல்வது என்று முழித்தாள்.

அதைப் பற்றி யோசனையில்லாதவன், “அவங்க என்னவோ செய்யட்டும், செய்யாமப் போகட்டும். அதை எதிர்பார்த்து இல்லை நாம.  சம்மதிச்சு, கல்யாணத்தை முடிச்சாங்கன்னா போறும் மாலினி. நீ எதுவும் வேணும்னு கேக்காத.”, என்று தைரியம் கூறினான்.

“ம்ம்… இப்ப போடறது, என் அப்பா வழி பாட்டி எனக்காக குடுத்தது. அவங்களோடது எதுவும் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. உங்க வீட்ல எதுவும் சொன்னாங்களா ரகு?”

“யாரையும் எதுவும் கேக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன். எதுவானாலும் நம்ம ரெண்டு பேர் மட்டும் பேசி டிசைட் பண்ணுவோம். வேற யாரும் இருந்தா தேவையில்லாத மிஸ் கம்யூனிகேஷனாகும். “, அறிவுரைத்தான்.

மாலினிக்கு எதோ பெரிய டெண்டர் மீட்டிங்குக்கு ரெடியாவது போன்று தோன்றியது. அதற்குத்தான் அவளுக்குத் தெரிந்த வரை இவ்வளவு மெனக்கெடல்கள், யார் என்ன பேசலாம், யாருடன் பேசலாம் என்பதான முஸ்தீபுகள் இருக்கும்.

தாளமாட்டாமல் அதை அவள் ராகவனிடம் கூறவும், சற்று விரக்தியான சிரிப்பு வந்தது அவனிடமிருந்து.

“ம்ம்… கிட்டதட்ட அப்படித்தான். உன்னை நான் வின் பண்ண சில பல தடைகளை தாண்டி வரணும். பார்த்துக்கலாம் விடு. “, அவளுக்கு தைரியம் சொன்னவன், அடுத்த தடையை எப்படி தாண்டுவானோ?

மாலினியைத் தவிர அவள் குடும்பத்தார் மூவரும் சொன்னபடியே சனிக்கிழமை பதினொரு மணி போல ராகவனின் வீட்டிற்கு அவர்கள் காரில் வந்திறங்கினர், மாப்பிள்ளை வீடு பார்க்க. அங்கு நடப்பதை அறிய மாலினிதான் அஸ்வினை அனுப்பியிருந்தாள்.

வந்தவர்களை வாசலுக்கே சென்று வரவேற்று அமர வைத்தான் ராகவன். அவர்கள் வாங்கி வந்திருந்த பழப் பையை அஸ்வின் பர்வதம்மாவிடம் தர, சற்று நெருடினாலும், ஒன்றும் சொல்லாமல் ஒரு சிரிப்பைத் சிந்தி வாங்கி மூலையில் இருந்த மேசைமேல் வைத்தார் பர்வதம்.

விக்ரம் தண்ணீர் எடுத்துத் தர, “இருக்கட்டும்பா, இப்பதான வீட்லர்ந்து வரோம், தாகமில்லை. “, என்று வைத்துவிட்டார்கள் சகுந்தலாவும் இளங்கோவனும்.

“நல்ல காய்ச்சி ஆரவெச்ச தண்ணிதாங்க. அதுவும் கார்பரேஷன் கலப்பட தண்ணியில்லை, எங்க கிணத்து தண்ணி. மாசக்கணக்கா ப்ளாஸ்டிக் கேன்ல இருக்கத் தண்ணியத்தான் பார்த்து பயப்படணும்.”, சிரித்துக்கொண்டே காயத்ரி சொன்னாள்.

இளங்கோவன் சங்கடப் புன்னகை ஒன்றை வீச, அஸ்வின் குடித்துவிட்டு, “நல்லாருக்குக்கா.”, என்றான் இலகுவாக.

“ம்ம்… கல்யாணத்துக்கு அப்பறம் உங்க அக்காவும் இதைத்தான குடிக்கணும்?”, காயத்ரியின் துடுக்கு நீளவும், ராகவன் அவளை முறைத்தான்.

படுக்கை அறையில் குழந்தை அழும் சத்தம் கேட்கவும், கதவைத் திறந்து உள்ளே சென்றாள் காயத்ரி. சோஃபாவில் அமர்ந்திருந்த மாலினியின் பெற்றோருக்கு நேர் எதிரே என்பதால், அறையின் முக்கால்வாசிப் பகுதி அவர்களுக்கு தெளிவாகவே தெரிந்தது.

“புடவையில் கட்டிய தூளி, அருகே இருந்த கட்டில், மூலையில் ஒரு பீரோ போக ஒரு ஆள் நிற்கக் கூடிய அளவில் இடம்.

ஹாலில் இவர்கள் இருந்ததே நிறைந்தது. அங்கிருந்தே பின் புற அறை தெரிந்தது.  சமையலறையின் வாயிலும் ஹாலில் அமர்ந்த படியே தெரிந்தது. பழைய காலத்து மொசைக் தரை, பழுப்பேறியிருந்தது. காயத்ரியின் கல்யாணத்திற்கு பெயிண்ட் அடித்ததில் சுவர்கள் சற்று பளிச்சென்று இருந்தது. தூசியில்லாமல் சுத்தமாக இருந்தது வீடு. அதுமட்டுமே ப்ளஸ்,

இதையெல்லாம் நோட்டமெடுத்த அடுத்த நிமிடம், சகுந்தலாவின் முகம் சுருங்கியது.

“ஒரு பெட் ரூம்தானுங்களா ? “, பர்வதம்மாவைப் பார்த்துக் கேட்டார் சகுந்தலா.

“ஆமாங்க. இப்ப காயத்ரி குழந்தை இருக்கதால, நாங்க அங்க இருக்கோம். பசங்க ஹால்ல படுத்துக்குவாங்க. காயத்ரி கிளம்பவும், ராகவனுக்கு ரூமைக் குடுத்துட்டு நானும் விக்ரமும் ஹாலில் படுப்போம். “, பர்வதம்மா விம் போட்டு விளக்க, அதிர்ச்சியாய் இளங்கோவனைப் பார்த்தார் சகுந்தலா.

‘குழந்தை மெல்லிய குரலில் அழுவதே ஹாலில் கேட்கிறது. இதில் இந்தம்மாவும், விக்ரமும் இங்கே படுத்தால்…’, வயசுப் பிள்ளைகள் கூட இருக்க அவரால் வெளிப்படையாகவும் பேச இயலவில்லை. கணவனிடம் முடியாது என்பதுபோல தலையசைத்தார்.

“ராகவன், அதான் கல்யாணத்துக்கு இன்னும் மூணு மாசம் இருக்கே. பின்னாடியோ இல்லை மாடியிலையோ ஒரு ரூம், பாத்ரூம் போடலாமே.”, என்றார் இளங்கோவன்.

பல்லைக் கடித்து எரிச்சலை அடக்கிய ராகவன், “இல்லை சர், இன்னும் ரெண்டு வருஷத்துல வீட்டை இடிச்சிட்டு புதுசாவே கட்டணும்.இதுல திரும்ப எதுக்கு செலவுன்னுதான் செய்யலை.”, என்றான்.

“பணம்தான் ப்ரச்சனைன்னா நானே அதை கட்டித் தரேன் ராகவன். என் பொண்ணு வசதிக்குத்தான செய்யறேன்.”, இளங்கோவன் சொல்லவும் பொறுமையை இழுத்துப் பிடிக்க மிகவும் சிரமப்பட்டான் ராகவன். அவர்கள் பெண்ணைப் பெற்றவர்கள். கவலைப்படுவதில்  நியாயம் இருக்குடா என்று மனதுக்குள் உச்சாடானம் செய்தவன்,

“நீங்க செய்யணும்னு எதிர்பார்க்கலை சர்.  அப்படி தனி ரூம் தேவைப்பட்டால் நானே கட்டுவேன். உடனே முடியாது. மாலினி வேணும்னு கேட்டால் சில மாசத்துல செய்யறேன்.”, என்று அப்போதும் பொறுமையாகக் கூறினான்.

“அப்ப அதுவரை நீங்களும் நம்ம வீட்லையே இருங்களேன். அவ சொல்லணும்னு அவசியமே இல்லைங்க. ஒரு ப்ரைவசியே இருக்காதே இங்க ?”, சகுந்தலா பட்டென்று கேட்டுவிட,

‘என்னது வீட்டோட மாப்பிள்ளையாவா?’, என்ற அதிர்வில் பர்வதம்மா ராகவனைப் பார்த்தார்.

“அது சரிப்படாதுங்க. தனி ரூம் புதுசா கட்டணும்னா, நான் எற்கனவே சொன்ன மாதிரி, ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் வெச்சுக்கலாம். அதுக்குள்ள நானும் ஸ்டெடியாகி, நீங்க கேட்ட வசதியும் செய்ய முடியும். “, ராகவன் இனியும் பொறுக்க முடியாதென்று கத்தரித்தார்போல ப் பேசினான்.

“அதுதான் வேணாம், நானே கட்டித் தரேன்னு சொல்றனேப்பா. கல்யாண சீரா நெனச்சிக்கோங்க. இதுல என்ன ஈகோ?”, என்றார் இளங்கோவன்.

“ஈகோன்னே இருக்கட்டும் சர். என் மனைவி, என் வீட்டில் என்னால குடுக்க முடிந்த வசதியோட இருக்கணும்னு எதிர்பார்க்கறேன். நீங்களும் உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது மூணு பெட்ரூம் வீட்ல ஆரம்பிக்கலை.  நானும் பெருசா வீடு கட்டுவேன். அதுவரை பொறுமை வேணும். முக்கியமா நம்பிக்கை வேணும்.”, நானும் உங்களைப் பற்றி விசாரித்துதான் வைத்திருக்கிறேன் என்றதையும் சூசகமாகச் சொல்லி தன் பிடியில் விடாமல் நின்றான் ராகவன்.

“இந்த வீடு வசதி படாதுங்க. நீங்களும் மாலினியும் பக்கத்துலையே ஒரு தனி வீடு பார்த்துக்கோங்க. நீங்க சொன்னபடி வீடு கட்டினதுக்கு அப்பறம் ஒன்னா இருந்துக்கலாம்.”, சகுந்தலா தனிக்குடித்தன ஐடியாவை இறக்கினார்.

“அந்த வீட்டுக்கு தனியா வாடகை குடுத்து, எல்லாம் இரண்டு செலவாகும். தேவையில்லாதது. என் கடனை அடைச்சாத்தான் நான் வீடு கட்றதைப் பத்தியே யோசிக்க முடியும்.”, ராகவன் அவர் கூறியதை உடனே நிராகரிக்க,

“நீங்களும் செய்ய மாட்டீங்க, எங்களையும் செய்ய விடமாட்டீங்கன்னா என்னதான் ராகவன் அர்த்தம்?”, சற்று கோவமாகக் கேட்டார் இளங்கோவன்.

அதற்குள் பொறுக்க மாட்டாமல் சகுந்தலா எழுந்து சென்று ஒரு சுற்று கொல்லைப் புறம் வரை எட்டிப் பார்த்துவிட்டு வந்தார்.

“நாந்தான் தீர்வு சொன்னேனே சர்.ஒரு வருஷம் கல்யாணம் தள்ளிப்போட்டால், பின்னாடி ஒரு ரூம் போட்டுக்கலாம். வீண் செலவுதான் ஆனாலும் இன்னும் இரண்டு மூணு வருஷம் ஆகும் வீடு கட்ட, அதனால செய்யறேன். அவ்வளவுதான் என்னால முடியும்.”, ராகவன் தீர்மானமாக சொல்ல,

“விக்ரமை வேணா ஹாஸ்டல்ல சேர்த்துடுங்க ஒரு வருஷத்துக்கு.”, என்று சகுந்தலா கூறவும் சுத்தமாக பொறுமை பறந்தது ராகவனுக்கு.

“என் குடும்பம் என்னோடதான் இருக்கும். மாலினியும் என் மனைவியா என் குடும்பத்தோடத்தான் இருப்பா. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.இதுக்கு மேல நீங்கதான் முடிவெடுக்கணும். நான் வேற எந்த ஆப்ஷனும் யோசிக்கறதாயில்லை.”, என்று ராகவன் மீண்டும் வலியுறுத்த, எழுந்துவிட்டார் இளங்கோவன்.

“சரி. நீங்க கொஞ்சம் கூட கன்சிடர் பண்ணலைன்னா நான் பேசறதுல அர்த்தமில்லை. நாங்க கிளம்பறோம்.”, எனவும், சகுந்தலாவும் கூடவே எழுந்தார்.

“இருங்க ஜூஸ் குடிச்சிட்டு போகலாம்.”, என்று அவசரமாய் பர்வதம்மா சமையலறையில் இருந்த ஃப்ரிட்ஜை நோக்கி செல்ல,

“இருக்கட்டும்மா… இப்ப வேண்டாம்.”, என்று சொல்லிய இளங்கோவன் வாசலுக்கு சென்றுவிட்டார்.மனைவியும் மகனும் தொடர்ந்தனர். அஸ்வின் திரும்பி வாசலில் நின்றிருந்த ராகவனைப் பார்த்து வருத்தமாய் தலையசைத்து விடை பெற, கார் கிளம்பியது.

“அம்மாடியோவ்…என்னா திமிரு அந்தம்மாவுக்கு ? இங்க இருக்கவங்க எல்லாம் மனுஷனாவே தெரியலை போல?  நடு வீட்ல உட்கார்ந்துகிட்டு வீட்டோட மாப்பிள்ளையா வாங்க, இல்லை தனி குடித்தனம் போங்கன்னு நாட்டாமை செய்யுது? நான் நல்லா நாக்க புடுங்கறா மாதிரி கேட்டிருப்பேன் அண்ணா. நீதான் நாங்க யாரும் பேசக்கூடாதுன்னு சொல்லிட்ட.”, அங்கலாய்த்தாள் காயத்ரி.

விண்ணென்று தெரித்த தலையை அழுத்தி நீவிவிட்ட ராகவன் பதிலே பேசாமல் வெளியே கிளம்பிவிட்டான்.

Advertisement