Advertisement

“ஆஹா… அதுக்கென்ன போட்டுட்டா போச்சு. மாலினிக்கும் அதே செய்யறோம்.”, சகுந்தலா முடிந்தது பேச்சு என்ற பாவனையைக் கொடுக்க, மாலினிதான் அதிர்ந்து அவள் தந்தையைப் பார்த்தாள். அவளுக்காக கிட்டதட்ட  ஐம்பது அறுபது பவுன் இருக்க, அம்மா இப்படி குறைத்தது ஏன் என்று புரியாமல் பார்க்க, அவள் தந்தை அவள் புறம் திரும்பவேயில்லை.
பர்வதம்மா கடனை அடைக்க வரதட்சனை தருவதாக சொன்ன போது, எப்படியும் பெண்ணுக்கு நகை நிறைய செய்வார்கள் என்று கனவு கொண்டிருந்தார். அது தகர்ந்து போன வருத்தம் முகத்தில் தெரியாமல் இருக்க சிரமப்பட்டார்.
மாலினியின் முக அதிர்வும், சகுந்தலாவின் மறைமுக எள்ளலும், அதைப் பற்றிய அக்கறை இல்லாத இளங்கோவனின் பாவனையும் ராகவனின் தன்மானத்தை வெகுவாகவே சீண்டியது. மாலினிக்காக பொறுத்துக்கொண்டிருந்தான்.
“அப்பறம் ராகவன், நாங்க அடுத்த வாரத்துல ஒரு நாள்ல உங்க வீட்டுக்கு வரோம். பொண்ணு வாழப் போற இடம். நாங்களும் பார்க்கணுமில்லையா?”, என்றார்.
“அதுக்கென்ன, தாராளமா வாங்க. “, என்றவன் அவர்கள் அடுத்த சனிக்கிழமை என்று சொன்னதையும் ஏற்றுக்கொண்டான். இதெல்லாம் வழக்கம்தானே. காயத்ரியின் திருமணம் முடிக்கும் முன், அவன் கூட மதுரை சென்று வந்தான்தான்.
மாலினியும் அவள் அன்னையும் சிற்றுண்டி பறிமாற, எல்லாம் கடை சரக்கு. கிண்ணத்தில் இருந்த நெய் இட்லியைக் காட்டி, ‘இது மாலினி செஞ்சது.’ என்ற அடைமொழியுடன் கொடுத்தார்.
ராகவன், அதை மட்டும் எடுத்துக்கொண்டான். அவனைத் தொடர்ந்து ரகுவரனும் அதையே செய்தான். ஸ்வீட்டை எடுக்கப்போன மனைவியை தடுத்து, “காயத்ரி, குழந்தைக்கு பால் கொடுக்கற. கடை சரக்கெல்லாம் வேண்டாம். இட்லி எடுத்துக்கோ.”, என்றான்.
“பெரிய கடையிலதான் வாங்கினோங்க. பயப்படாம சாப்பிடலாம்.”, என்றார் சகுந்தலா.
“இருக்கட்டுங்க. குழந்தைக்கு ஒத்துக்காது. இது எங்க அம்மா வீட்லயே செய்வாங்க. எல்லாம் சாப்பிட்டதுதான. எங்க போயிடப் போது.”, என்றான் தோரணையாக.
“மருமக செஞ்சத சாப்பிட்டு பாருங்க அத்தை, என்று பர்வதம்மாவிற்கும் ரகுவரனே எடுத்துக் கொடுத்துவிட்டான்.
ஆக சகுந்தலா எடுத்து வந்த ஸ்வீட் காரத்தை ஒதுக்கி, மாலினி எடுத்து வந்த நெய் இட்லியை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். விக்ரம், அஷ்வின் மட்டுமே பேச்சு சுவாரஸ்யத்தில் இரண்டையும் எடுத்துக்கொண்டனர்.
“அற்புதமா இருக்கு மாலினி. “, பர்வதம்மா சுவைத்துவிட்டு மலர்ந்து சொல்ல மாலினியின் சந்தோஷம் முகத்தில் தெரிந்தது. அவருக்கு முன்னமே ராகவன் கண்களாலேயே கடத்தியிருந்தான் அந்த செய்தியை. இதைப் பார்த்தும் பார்க்காததுமாக இருந்த ரகுவரனோ, ‘பரவாயில்லையே, மச்சானுக்கும் ரொமான்ஸ் வருது. சாமியாரும் கவுந்துட்டாருடா.’ , என்று நினைத்தபடியே, நிஜமாகவே ருசியாய் இருந்த சாம்பார் இட்லியை ரசித்து சாப்பிட்டான்.
“என்னிக்காச்சம் இப்படி சமைக்க கத்துக்குவியாடி ?”, என்று மனைவியின் காதைக் கடித்து, காயத்ரியின் காதில் புகையை வரவழைத்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் கிளம்பிவிட்டார்கள். மொத்தத்தில் பேச வேண்டியது பேசியாகிற்று. ஆனால் கல்யாணம் முடிவானதற்கான ஒரு திருப்தியோ, பூரிப்போ இல்லை எவரிடமும்.  இறுதி வரை இளங்கோவனும் ராகவனை மாப்பிள்ளை என்று அழைக்கவில்லை. அவனும் சர் என்றே கூப்பிட்டான்.
காரில் சென்று கொண்டிருக்கையிலேயே, மனம் தாளாது ரகுவரன் மாமியாரையும் மனைவியையும் ஒரு பிடி பிடித்துவிட்டான்.
“ஏன் அத்தை… அவங்க கிட்ட இப்ப ரொம்ப அவசியமா சொல்லணுமா? ராகவனை நம்பித்தான் இருக்கு குடும்பம், கடன் இருக்கு அடைக்கன்னு ? என்ன நினைப்பாங்க நம்மளப் பத்தி?”
மகளை ஒரு பார்வை பார்த்தவர், “இல்ல தம்பி,  நாள பின்ன இதெல்லாம் நீங்க சொல்லவே இல்லை, எங்களை ஏமாத்திட்டீங்கன்னு பேச்சு வரக்கூடாதுன்னு….”, என்று இழுத்தார் பர்வதம்.
“நாந்தான் மாலினிக்கு எல்லாம் தெரியும்னு சொன்னேனேமா? அங்க வெச்சு என்னை அசிங்கப்படுத்தணுமா?  இங்க எதையும் மூடி மறைச்சு நான் செய்யலை. அவர்கிட்ட நானே சொன்னேன். அதுக்கு முன்னாடியே அவருக்கு பைசா சுத்தமா நம்ம வரவு செலவு எல்லாம் தெரிஞ்சிருக்கும். நல்லா விசாரிச்சிட்டுத்தான் என்னை பார்க்கவே செஞ்சார்.”, ராகவன் அமைதியாகக் கூறினான்.
“சரி, அதுதான் போகுது. அந்தம்மாவே அவ்வளவு அலட்டலா, என்ன ஒரு இருபது சவரன் போட்டாங்களா கல்யாணத்துக்குன்னு கேட்குது. நீ, எனக்கு போட்ட இரண்டு சவரன சொல்ற ? அல்பம். அண்ணன் முடிஞ்ச அளவுக்கு எனக்கு செஞ்சாங்க, உங்க பொண்ணுக்கு உங்க இஷ்டப்படி செய்யுங்க. இதுல என்ன போட்டின்னு பந்தாவா சொல்ல வாணாம்? இதுக்கெல்லாம் அறிவு இருக்காது. அவங்க கொண்டு வர கடை ஸ்வீட்டை சாப்பிட பரக்காவெட்டியாட்டம் பறக்கற? முன்ன பின்ன பால்கோவா சாப்பிட்டதில்ல நீ?”, மனைவியைப் பார்த்துக் கடிந்தான்.
முகம் கன்றிப் போய் அமர்ந்திருந்தாள் காயத்ரி. மருமகன் மகளைத் திட்டவும், அது தனக்கும் சேர்த்துத்தான் என்று புரிந்து முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு வந்தார் பர்வதம்.
“அவங்க செஞ்ச அலப்பறைக்கு மச்சான், எப்பவோ நான் எழுந்துட்டு இருப்பேன். தங்கச்சி முகத்துக்கும் உங்க முகத்துக்கும்தான் அமைதியா இருந்தேன். நான் பெருசா படிக்கலை. வியாபாரம் செய்யறேன். நல்லபடியா தொழில் போகுதுதான்.  ஆனா இவ்வளவு பெரிய ஆபிஸ்ல வேலை பார்க்கறீங்க. இன்னும் பெரிய போஸ்ட்டெல்லாம் வரத்தான் போகுது. உங்களுக்கு இருவது பவுன் போட்டு கட்டி தருவாங்கன்னா என்ன ஒரு இளப்பம் ? கடைசி வரை அந்த மனுஷன் உங்களை மாப்பிள்ளைன்னு ஒரு வார்த்தை வாயாரக் கூப்பிடலை. அப்படி என்ன ஏத்தம் அவருக்கு? பவர், பணம் அவர் பதவி இருக்க வரைக்கும்தான். இன்னும் மூணு நாலு வருஷம் இருக்குமா ரிடையராக ? அவராவது போகுது. ஒண்ணுமே இல்லாம என்ன லந்து விடுது அந்தம்மா? என்னமோ நமக்கு வயத்துக்கு இல்லாம அவங்ககிட்ட வந்து நிக்கற மாதிரி?”, வழியெல்லாம் பொருமிக்கொண்டிருந்தான் ரகுவரன்.
மச்சானின் ஆதரவு மனசுக்கு ஆறுதலாய் இருந்தது ராகவனுக்கு. “இல்ல மாப்பிள்ள, அவங்க இஷ்டமேயில்லாமத்தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்காங்க. அப்படிங்கும்போது இதெல்லாம்  நான் கடந்துதான் போகணும். ஆனா எனக்காக நீங்க அவமானப் பட வேண்டாம். முறைக்கு எல்லாருமா ஒரு தரம் போயிட்டு வந்துட்டோம். போறும் இனி கல்யாணத்துல பார்த்துக்கலாம்.”, என்று சமாதானம் செய்தான்.
“அங்கதான மச்சான் நேக்கா நடந்துகிறாங்க? ஒரு இடம் நீ என்ன அவமானப் படுத்தறன்னு கை நீட்டி சொல்லாத படிக்கு இல்ல நடந்துகிட்டாங்க? சிரிச்சிகிட்டே ஊசி ஏத்தறவங்களாட்டம் இருக்கு. நீங்க சூதானமா இருக்கணும். என்ன பேச்சுன்னாலும் அவங்ககிட்ட நீங்களே பேசுங்க. இவங்களையெல்லாம் விடத் தேவையில்லை.  யாரையுமே விட வேண்டாம். அவங்களை வெச்சு எதுவும் குழப்பம் வரலாம்.”, வியாபாரத்தில் பல பேரைப் பார்த்த ரகுவரன் நொடியில் எடை போட்டுவிட்டான் மாலினியின் பெற்றோரை.
ராகவன் குடும்பத்தார் கிளம்பியதும், ஸ்வீட் காரத்தையெல்லாம் எடுத்து வைத்த சகுந்தலாவிடம், “மா… ஏன் இருவது சவரந்தான் எனக்கு நகை போடுவீங்கன்னு சொன்னீங்க ?”, என்று தன் ஆதங்கத்தைக் கேட்டாள் மாலினி.
“ம்ம்… எப்படியும் எல்லாத்தை அடமானம்தான் வெக்கப்போறாங்க. அதுக்கு எதுக்கு போடணும்? உன் பாட்டி உனக்கு குடுத்துட்டு போனது இருபது சவரன். அதைத்தான் சொன்னேன். எனக்கு பிடிச்ச சம்மந்தம்னா நான் உனக்கு சேர்த்து வெச்சதை தருவேன்.  எல்லாத்தையும் எப்படியும் ஒன்னு ரெண்டு வருஷத்துல வித்து தீர்த்துடுவாங்க. நான் சேர்த்தது எதுக்கு அப்படி அம்போன்னு போகணும்?”, இளக்காரமாய் பதில் அளிக்க, காயம் பட்டது மாலினியின் மனது.
“ப்பா…?”, அவருக்குமா இதில் சம்மதம் என்று கேட்க, “ உங்கம்மா நகை அவ இஷ்டப்பட்டாதான்மா தருவா. இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? நம்ம கௌரவத்துக்கு தக்கபடி சிறப்பா கல்யாணம் செய்யறேன். அதுக்கான காஷ் எப்பவோ எடுத்து வெச்சாச்சு. அது மட்டும்தான் நான் செய்ய முடியும்.”, மனைவியின் செயலில் தனக்கும் உடன்பாடுதான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் இளங்கோவன்.
“அவரோட பொசிஷனுக்கும் தகுதிக்கும் இது ரொம்ப கம்மிப்பா.”, குரல் கமற மாலினி முறையிட
“அதுக்கு தக்கன வசதியிருந்தா பரவாயில்லை. அந்தம்மா வெக்கமேயில்லாம அவன நம்பித்தான் குடும்பம் இருக்கு, கடன் இருக்குன்னு சொல்லி நம்மகிட்ட எவ்வளவு தேத்த முடியும்னு பஞ்சபாட்டு பாடுது.  காசில்லாதவன் கூட சம்பந்தம் செய்யற வீட்ல பகுமானமா இருப்பான். இதுங்க …”, இன்னும் என்ன பேசியிருப்பாரோ சகுந்தலா.
“போறும். நீங்க போடற நகை பணத்துக்காக என்னை கல்யாணம் செய்யலை ராகவன்.  உங்க இஷ்டம். இனி நான் எதுவும் கேக்கமாட்டேன்.”,   நுனி முக்கு சிவந்து விடைக்க, கண்ணில் பொங்கிய நீரை அடக்கியவள் அறைக்குச் சென்றுவிட்டாள்.
கல்யாணம் கூடி வரும் சந்தோஷம் சற்றும் இல்லாது ராகவன், மாலினி இருவர் மனமும் பாரமாகக் கிடந்தது. முதல் சுற்று பேச்சு வார்த்தைக்கே இப்படி. இன்னும் கடக்கவேண்டியது நிறைய இருக்க, இவர்கள் கல்யாண மேடை வரை செல்வார்களா?  செல்ல விடுமா இவர்களது சுற்றம்?

Advertisement