Advertisement

அத்தியாயம் – 23
அஸ்வினை மருத்துவமனையில் விட்டு, சகுந்தலா, மாலினியைக் அவர்களின் காரில் கொண்டு வந்து போரூர் சேர்த்தவன், வாசலில் இருந்தே அவன் பைக்கில் கிளம்பிவிட்டான்.
“ஏன் மாலினி, வாசலோடவே அனுப்பிட்ட? “,சகுந்தலா கேட்டபடியே படியேறினார்.
“பணத்துக்கு ஏற்பாடு செய்யணும்மா. அவங்க டெஸ்ட் எடுக்கறதுக்கு முன்னாடி பாதியாவது கட்டணும். அதான் அவசரமா கிளம்பிட்டார்.”, மாலினி வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே வந்தாள்.
“அப்பாகிட்ட சொல்லிகிட்டு இருந்தேன். அதுக்குள்ள நர்ஸ் துரத்திவிட்டுட்டா. எவ்ளோடி ஆகும்?”, சாவகாசமாய் கேட்க, மாலினி சொன்னதைக் கேட்டு,
“அம்மாடி, அவ்ளோவா. எப்படி புரட்டப்போறார் ? அப்பாகிட்டவே டெப்பாசிட்டாத்தான் இருக்கும்டி.”, ஆச்சரியப்பட்ட சகுந்தலா யோசனையாக கூறினார்.
“இப்ப எப்படிமா அப்பாகிட்ட கேட்கறது. நாம சமாளிச்சக்கலாம். அவர் ப்ரெண்டுங்ககிட்ட கேட்கறேன்னு சொன்னார், நாந்தான் காசு மாலையை அடகு வெக்க சொல்லிட்டேன்.”, மாலினி பேசியபடியே கைகழுவி, அடுப்பை பற்ற வைத்தாள் காபி போட.
“என்ன மாலினி சொல்ற?”
“ஏன்மா… நீதான் அடிக்கடி சொல்லுவ, அது அடமானத்துக்குப் போகப் போகுதுன்னு ? இப்ப உனக்காக நிஜமாவே போகப்போகுது. “, ப்ரிஜ்ஜிலிருந்து பாலை எடுத்தவள், திரும்ப, கண்ணீருடன் சகுந்தலா நிற்பதைப் பார்த்து,
“என்ன மா ? நீ போட்டதுதான மா? அவர் வேற எப்படி பணம் புரட்டினாலும் உங்களுக்கு கஷ்டமாயிருக்கும்னுதான் இதை செய்யச் சொன்னேன். “, மாலினி அவர் தோளணைத்து ஆறுதல் சொல்லியபடியே அடுப்பை நிறுத்தினாள்.
“அதுக்கு தம்பி ஒன்னும் சொல்லலியாடி ?”
“சொல்ல என்ன இருக்கு? நகையை எதுக்கு வெக்கற, நான் கடன் வாங்கிக்கறேன்னு சொன்னார். நான் வேண்டாம்னதும் சரின்னு ஒத்துகிட்டு போயிருக்கார். எதுக்குமா கேட்கற?”, மாலினிக்குப் புரியவில்லை.
“உன் மாமியார் ஒன்னும் சொல்லமாட்டாங்களா? அவங்க கிட்ட கேட்க வேணாமா ?”
“மாமியார்கிட்ட சொல்லிட்டு எடுத்துட்டு போவாரா, இல்லை அப்பறம் சொல்லிக்குவாரா தெரியாது. அவங்களும் சொல்ல என்ன இருக்கு? என்னம்மா எதுக்கு இப்படி வளைச்சு வளைச்சு கேட்கற?”, மாலினி புருவம் சுருக்கினாள்.
“உங்க அப்பாவைவிட உன் புருஷன் எவ்வளவோ மேல்டி மாலினி. இதை நான் சொல்லுவேன்னு நினைக்கலை. ஆனா, நிஜமாவே தம்பிக்கு நல்ல மனசுடி. நாங்க அவரைப் பேசினதுக்கு உன்னை கொண்டு வந்து விட்டுட்டு அவர் போயிருக்கலாம். காசில்லைன்னு நின்ன போது, பொறுப்பை எடுத்துகிட்டார். அப்பாவை ஸ்பெஷலா பார்த்துக்க ஏற்பாடும் செஞ்சு, இப்ப… இப்ப…நகை…”, சகுந்தலா குற்ற உணர்வில் பேச முடியாமல் தவிக்க, கொஞ்சம் தண்ணீரை குடுத்து ஆசுவாசப்படுத்திய மாலினி,
“சரி… என் புருஷன் நல்லவராவே இருக்கட்டும். அதுக்கு ஏன் அப்பாவை கம்பேர் செய்யற ?”, சகுந்தலாவை திசை திருப்ப மாலினி கேட்க,
கண்ணைத் துடைத்த சகுந்தலா, “இல்லை மாலினி. கல்யாணம் ஆன புதுசுல, என்ன ஒரு ஒன்னரை வருஷம் இருக்கும். நீ கைகுழந்தை. என் தங்கச்சிக்கு கல்யாணம். அப்ப காசு கொஞ்சம் முடையா இருக்கவும், என் நகை வெச்சி கொஞ்சம் பணம் தர முடியுமான்னு   தாத்தா, உங்கப்பாவைக் கேட்டார். ஒரு மூணு மாசத்துல திருப்பிடறேன்னு சொன்னார். இந்த மனுஷன் நிர்தாட்சண்யமா அதெல்லாம் சரி வராது. நீங்க வெளியில கடன் வாங்கிக்கோங்க. எங்கம்மாகிட்ட என்னால இதெல்லாம் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டார். இத்தனைக்கும் உங்கப்பாவுக்கு மாப்பிள்ளை, மாப்பிள்ளைன்னு அவ்வளவு மரியாதை எங்க வீட்டுக்குப் போகும்போதெல்லாம்.
எதுவுமே குத்திக்காட்டாம இப்ப உன் புருஷன் செய்யறது பார்த்தா, நீ நல்லவரைத்தான் மாலு கல்யாணம் செஞ்சிருக்க. அவர் அருமை எங்களுக்குத்தான் தெரியலை. அதுவும் நான் …நான் ரொம்ப பேசிட்டேன்… ”,  அவமானத்தில் குன்றிப்போய் நின்றார் சகுந்தலா.
“மா… நீங்க பண்ணது தப்புதான். ஓரளவுக்கு அவரும் புரிஞ்சிகிட்டார்தான். இப்பவும், இத்தனையும் செய்யறது, எனக்காக. உங்களுக்காக இல்லை. எனக்கு நீங்க முக்கியம். அதுனால அவருக்கும் நீங்க முக்கியம். ஆனா அந்த குணம் உங்ககிட்ட இல்லை. ரகு எனக்கு முக்கியம் அதனாலயாவது நீங்க அவரை அனுசரிச்சுப் போயிருக்கணும். ஆனா அந்த அளவுக்கு நான் உங்களுக்கு முக்கியமில்லைன்னு எனக்கு நல்லா புரிய வெச்சிட்டீங்க.”, மாலினி பேசவும்,
“இல்லடி… அப்படியில்லை. நீ வசதியா சந்தோஷமா வாழணும்ங்கற ஆசையில்….”
“மா… இதைப் பத்தி பேசி பேசி அலுத்துப்போச்சு. அவரை அவமானப்படுத்தினா  நீ எதிர்ப்பார்க்கற வசதியும் சந்தோஷமும் எனக்கு வந்துடுமா? உங்க கர்வம் அடிபட்டதா உங்களுக்கு நினைப்பு. அதனால அவரை உதாசினப்படுத்தினீங்க. உண்மையை ஒத்துக்கோ.  போ ..போய் ஹீட்டரைப் போடு. அப்பாக்கு டெஸ்ட் எடுக்கறதுக்கு முன்ன போகணும்.” மாலினியின் பேச்சின் உண்மை சுட, வாடிப்போய் அங்கிருந்து நகர்ந்தார் சகுந்தலா.
ஒரு வழியாக மறுபடி இவர்கள் மருத்துவமனை செல்லவும், ராகவன் மாலினியை அழைத்து பணத்தை அவள் அக்கவுண்டில் போட்டுவிட்டதாகவும், சென்று முன்பணம் கட்டிவிடுமாறு கூறினான். அவள் நுழையும்போதே, அஸ்வின் பில்லுடன் வந்தான்.
“அக்கா, டெஸ்ட்டுக்கு இன்னிக்குள்ள கட்டணுமாம். அப்பா தூங்கிட்டு இருக்கார். அவர் கிட்ட ATM பின் எப்படி கேட்கன்னு வெயிட் செய்யறேன்.”
“அம்மா. நீ இங்க இரு. நாங்க போய் கட்டிட்டு, அஸ்வினை அனுப்பிட்டு வரேன். அவன் போய் தூங்கட்டும்.”, என்று சகுந்தலாவிடம் சொல்ல,
“அஸ்வின், சித்தப்பாக்கு போன் பண்ணி சொல்லிட்டியா? அவர் வரேன்னாரா?”, என்று கேட்டார் சகுந்தலா.
“பேசினேன். திருப்பதில இருக்காங்களாம்மா. இப்ப நல்லாத்தான இருக்கார். நீங்க பார்த்துக்கோங்கடா. நான் நாளைக்கு மதியம் சென்னை வந்துடுவேன்னார்.”
“ம்க்கும்… இதே உங்கப்பாவா இருந்தா என் தம்பி …என் தம்பின்னு உடனே எல்லாரையும் கிளப்பிகிட்டு ஓடி வந்திருப்பார். இருக்கட்டும் அப்பத்தான் இந்த மனுஷனுக்கும் புத்தி வரும்.”, சகுந்தலா நொடித்தார்.
ஒரு வழியாய் டெஸ்ட் முடித்து அன்று மாலை சீஃப் டாக்டர் வரச் சொல்லவும், மாலினியும் ராகவனும் சென்றனர். நீட்டி முழக்கி அவர் சொன்னதன் சாராம்சம், ஆஞ்சியோ செய்து மூன்று இடங்களில் அடைப்பை நீக்க வேண்டும். ஒரு இடம் மிகவும் குறுகலாக இருப்பதால் விரித்து இருக்க ஸ்ட்ன்ட் என்னும் சிறு உபகரணத்தை வைக்கவேண்டும் என்பது.
“ஒன்னும் பயப்பட வேண்டாம். நானே செய்யறேன். நாளை காலையில் எட்டு மணிக்கு ப்ரொசீஜர் வெச்சிக்கலாம். இன்னும் இரண்டு பேருக்கும் செய்யறேன். ரொடீன்தான். நீங்க கன்ஃபர்ம் பண்ணிடுங்க. வேற ஒபினியன் போறதானாலும் சரி. டவுட் எதுனாலும் டாக்டர் பிரசாத்கிட்ட கிளியர் பண்ணிக்கோங்க. “, என்று முடித்து ரிப்போர்டை தந்தார்.
மாலையே, தனி ரூமிற்கு மாற்றிவிட்டார்கள் இளங்கோவனை. மாலை அவர் நண்பர் வேணுகோபால் வந்திருக்க சற்று தெம்பாகியிருந்தார் இளங்கோவன்.
மாலினி மெதுவாக மருத்துவர் சொன்னதை விவரிக்கவும், மறுபடி கவலையானார் இளங்கோவன். “என்னத்தை கொண்டு வெக்கப்போறாங்களாம்மா? இது பத்தி அப்ப சொல்லலையே?”.
அதற்குள்ளாகவே சகுந்தலாவின் கண்கள் குளமாகிவிட்டது.
“அப்பா ரகு அந்த டியூட்டி டாக்டர்கிட்ட இந்த சர்ஜரி பத்தி அத்தனை கேள்வி வளைச்சு வளைச்சு கேட்டுகிட்டு இருக்கார். அந்த மனுஷன் பரிட்சைக்குக் கூட இவ்வளவு எழுதியிருக்க மாட்டான். இது இப்ப ரொடீன்னா பண்றதுதானாம். இது கத்தியே இல்லாம செய்யறது. ஒரு மணி நேரத்துல முடிஞ்சிரும். ஒரு நாள் பார்த்திட்டு வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. “, மாலினி பொறுமையாக விளக்கிக்கொண்டிருந்தாள்.
ராகவன் வரவும், உடன் இருந்த வேணுகோபாலனை நலம் விசாரித்தான். இளங்கோவன் முகம் இன்னமும் இருண்டிருப்பதைப் பார்த்து, “பயப்படற மாதிரி ஒன்னும் இல்லை சர். ரிப்போர்ட் எனக்குத் தெரிஞ்ச இன்னொரு ஃப்ரெண்ட்கிட்ட அனுப்பியிருக்கேன். அவன் அப்பாவும் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்தான். செகன்ட் ஒபீனியனும் வாங்கிக்கலாம்.  சீப் டாக்டர் அவரே செய்யறதா சொல்லிருக்கார். “
அவனின் முயற்சிகளைக் கேட்டவருக்கு இன்னுமே குற்ற உணர்வாகியது. “ சரிப்பா. “, என்றவர், “எவ்வளவு கட்டணும் ராகவன் ? அஸ்வின்கிட்ட பின் நம்பரும் கார்டும் இருக்கு.”
“அது நான் பார்த்துக்கறேன் சர். இப்ப இதெல்லாம் யோசிக்காதீங்க.”, என்றான்.
“நேத்து அந்த டாக்டர் சொன்னாரே. ஒரு லட்சம் பக்கம் ஆகும்னு.”, என்றார் சகுந்தலா.
“ஓ… அக்கவுண்ட்ல அம்பதாயிரத்துக்குள்ளதான் இருக்கும். FD உடைக்கணும். ஆனா அந்த செர்டிவிகேட் எல்லாம் என் ஆபிஸ் ட்ராவுல இருக்கு….”, இளங்கோவன் இழுக்க,
“அப்பா… அதான் நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லியாச்சில்ல? தேவையில்லாம எதுக்கு இப்ப இதை யோசிக்கறீங்க. எல்லாம் நீங்க வீடு வந்த அப்பறம் விலாவாரியா கணக்கு குடுக்கறேன். இப்ப விடுங்க.”, என்று இடை மறித்து கடிந்தாள் மாலினி.
போனைப் பார்த்துக்கொண்டிருந்த ராகவன், “மாலினி, அப்பாயிண்ட்மென்ட் கிடைச்சிடுச்சு. ரிபோர்ட்ஸ் ஒரிஜனல் எடுத்துக்கோ. ஒரு எட்டு போய் ராஜீவ் அப்பாவைப் பார்த்து செகென்ட் ஒப்பீனியன் கேட்டுட்டு வந்து அப்பறம் இங்க பே பண்ணிக்கலாம். இங்க சர்ஜரி கன்பர்ம் பண்ண இரண்டு மணி நேரம் டைம் கேட்டிருக்கேன்.”
இருவருமாய்க் கிளம்ப, வேணுகோபாலன், “குடுத்து வெச்ச மனுஷன்யா நீ.  இந்த அளவுக்கு அக்கறையா எந்த மாப்பிள்ளை செய்யறான் இந்த காலத்துல ? பெத்த பிள்ளையே செய்யறதில்லை. அவருக்கு அவசியமேயில்லை, இப்படி செகண்ட் ஒப்பீனியன் வாங்க ஓடறதுக்கு. எத்தனை கொட்டிக் குடுத்து பொண்ணை கல்யாணம் செய்து குடுத்தேன்? என் மாப்பிள்ளை எல்லாம் நின்னு நாலு வார்த்தை பேச மாட்டார்.  நீ என்னடான்னா ஒரு வார்த்தை அவரை மாப்பிள்ளைனு வாயார கூப்பிடறதில்லை.  “, என்று ராகவனுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்து, நண்பனுக்கும் ஒரு கொட்டு வைத்தார்.
“ஆபீஸ் கூட லீவ் போட்டுட்டு இங்கனவேதான் இருக்கார்.”, சகுந்தலா கூறினார்.
“இளா, மனுஷாளுக்கு ஒரு கஷ்டம்னு வரும்போதுதான் வாழ்க்கை புரியும். எது முக்கியம்னு தெரியவரும். உனக்கு ஒன்னுன்னா ஓடி வரப்போறது உன் பொண்ணும் மாப்பிள்ளையும்தான். அஸ்வின் படிச்சிட்டு எந்த நாட்டுக்கு வேலைக்குப்போவானோ தெரியாது.  ஞாபகத்துல வெச்சிக்கோ. அதிகாரமும், பதவியும் ரிடையர் ஆகற வரைதான். “, அவரால் ஆன அறிவுரையை கூறிவிட்டு, மறுனாள் வருவதாகக் கூறிச் சென்றார்.
“சக்கு, காசுக்கு என்னடி செய்யறாங்க?”, கவலையாய்க் கேட்டார்.
“தம்பி ஃப்ரெண்டுகிட்ட கடன் வாங்கறதா சொன்னாராம். மாலினி வேண்டாம்னு சொல்லி காசு மாலையை அடகு வெச்சிருக்காங்க. என்னைவிட என் பொண்ணு குடுத்துவெச்சிருக்கா. அவளுக்காக செய்யற புருஷன் இருக்கான். அம்மா திட்டுவா, ஆட்டுகுட்டி திட்டுவான்னு ஒளிஞ்சிக்கலை.”, பழைய விஷயம் ஞாபகம் வரவும் கணவரை திட்டினார் சகுந்தலா.
“ம்ம்… வள்ளுவர் சொன்ன மாதிரி, ‘அவர் நாண நன்னயம் செய்துவிடல்’னு ராகவன் நடந்துக்கறார். அவரையோ, மாலினியையோ என்னால கண் கொண்டு பார்க்க முடியலைடி.”, வருத்தமாய்க் கூறினார் இளங்கோவன்.
“எனக்கும்தான். வீட்ல மாலினி சொன்னப்போ எனக்கு கலங்கிடுச்சு. அதுக்கு ‘அவர் உங்களுக்காக செய்யலை, எனக்காக செய்யறார். நீங்க எனக்கு முக்கியம்,அதனால் செய்யறார்.’னு கர்வமா சொல்றா.”, சகுந்தலா காலையில் பேசியதை சொல்லவும்,
“ம்ம்… நாமளும் அவளை முக்கியமா நினைச்சிருந்தா, அவரையும் நல்லபடியா நடத்திருப்போம். என் பொண்ணு பார்வையில நான் ரொம்ப கீழ போயிட்டேன்.”, இளங்கோவன் வருத்தப்படவும்,
“விடுங்க. மாலினிக்கும் புரியுது. நாம சொல்லிக்கலாம். இப்ப மனசை போட்டு உழப்பிக்காதீங்க.”, சகுந்தலா சமாதானம் செய்தார்.

Advertisement