Advertisement

இரவு கிளம்பும் வரையிலும், முகத்தை தூக்கி வைத்து சுற்றிக்கொண்டிருந்தாள் காயத்ரி. கண்டுகொள்பவர்தான் யாருமில்லை. விடை பெறும் நேரம் வர, பர்வதத்திடம் இரண்டாயிரம் கொடுத்த மாலினி, “அத்தை, கல்யாண நாளுக்குன்னு சொல்லி, அவளுக்கு வெச்சி குடுங்க. அம்மா வீட்லர்ந்து சந்தோஷமா போகணும், சங்கடப்பட்டு போகக் கூடாது.”, என்று சொல்லவும் மகிழ்ந்து போனார் பர்வதம்.
“ராகவன் குடுத்தானா மாலினி?”
“இல்லை. அவர்கிட்ட அப்பறம் சொல்லிக்கலாம். நீங்க வந்து வெச்சி குடுங்க.”
பர்வதம் காயத்ரியிடம் வாழ்த்தி கொடுக்கவும், சற்று முகம் மலர்ந்தாள்.
“மாலினிதாண்டி பணம் குடுத்தா. பொண்ணு அம்மா வீட்டை விட்டு சந்தோஷமா போகணும்னு. ராகவனுக்கு கூட தெரியாது. ஒழுங்கா அவ கிட்ட சொல்லிட்டு போ. என் அண்ணில்லாம் இப்படி பார்த்து பார்த்து எனக்கு செஞ்சிருந்தா, அவங்களை அப்படி கொண்டாடியிருப்பேன். நீ மாலினிகிட்ட ராவடி பண்றதை நிறுத்திட்டு ஒழுங்கா மரியாதையா நடந்துக்கோ.”, என்று அம்மாவாய் எச்சரிக்க, காயத்ரிக்கு இன்னும் நொந்துபோனது மனது.
இருவரும் ஆசி பெற்று கிளம்ப, புன்னகையை விடுத்தாலும், தோல்வியை ஒப்புக்கொண்டு,  “வரேன் அண்ணி.”, என்று சொல்ல, ஒரு தலையசைப்புடன் விடை கொடுத்தாள் மாலினி.’அப்பாடா, புயல் பெருசா சேதாரமில்லாம கரையை கடுந்துடுச்சுடா சாமி.’, என்று உள்ளுக்குள் ஒரு பெருமூச்சு விட்டாள் மாலினி.
வண்டி ஏற்றி விட்டு, ராகவன் வீடு வந்து சேர்ந்த போது, மாலினிக்கு போன் வந்தது.  “யாரு இந்த நேரத்துல ?”, என்று கேட்டுக்கொண்டே எடுத்தவள், “அஷ்வின்? என்னடா இந்த நேரத்துல ?”
….
“என்ன? என்னடா சொல்ற ? எங்க இருக்கீங்க?”, மாலினி கேட்கும்போதே போனைப் பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டான் ராகவன்.
“நான் அவரை ராமசந்திரா கூட்டிட்டு போறேன். நீயும் மாமாவும் வாங்கக்கா. “, பின்னால சகுந்தலாவின் அழு குரல் கேட்க, அஸ்வின் போன் வைத்துவிட்டான்.
“என்ன மாலினி…என்ன சொன்னான்?”, கழற்றிய உடையை மீண்டும் அணிந்தான் ராகவன்.
“அப்பாக்கு நெஞ்சு வலிக்குதாம்.”, கண்ணில் நீர் மல்கியது மாலினிக்கு.
“கிளம்பு சீக்கிரம்.  உன் கார்டு எடுத்துக்கோ.  ஒன்னும் ஆகாது.”, மாலினிக்கு ஆறுதல் சொல்லியவன், ஹாலுக்கு வந்து விஷயத்தை சொல்லி,
 “மா, அவசரத்துக்குன்னு வெச்சருக்கோமே, அந்த பணத்தை எடு.”, எனறான். பர்வதம் அவர் பீரோவிலிந்து பத்தாயிரத்தை எடுத்துத் தரவும், வாங்கிக்கொண்டு மாலினியுடன் பைக்கில் பறந்தான் போருர் நோக்கி.
மருத்துவமனை வந்து, இவர்கள் இருப்பிடம் வரவும், சகுந்தலாதான் முதலில் கண்ணில் பட்டார். அம்மா என்ற அழைப்புடன் மாலினி அவரிடம் செல்ல, ஓவென்று அவளைப் கட்டிப்பிடித்து ஒரே அழுகை.  இருவருமே பயந்துவிட்டார்கள்.
“மா… என்ன என்ன ஆச்சு. சொல்லுங்க. அஸ்வின் எங்க ?”, மாலினி அவரை உலுக்கவும்,
“உள்ள.. உள்ள அப்பா கூட இருக்கான். எதோ டெஸ்ட் எடுக்கறாங்க.”, என்று திக்கித் திணறி கூறினார்.
அதைக் கேட்டு சற்று ஆசுவாசம் அடைந்த ராகவன் ICMU என்ற  அந்த அறை வாசலில் இருந்த நர்சிடம் பேச, உள்ளே ECG எடுக்கப்படுவதாகக் கூறினாள்.
“அத்தை, பயப்படாதீங்க. இது எக்ஸ்-ரே, ஸ்கான் மாதிரிதான், என்ன ப்ரச்சனைன்னு பார்க்க எடுக்கறாங்க. இப்ப பத்து நிமிஷத்துல முடிஞ்சிரும். “,என்று தைரியம் சொல்லவும், மாலினி அவரை அமைதிப்படுத்தி உட்கார வைத்தாள்.
“இன்னிக்குன்னு கீழ் வீட்லயும் இல்லைடி, கல்யாணம்னு நேத்தே கிளம்பி ஊருக்குப் போயிட்டாங்க.  இவர் தீடீர்னு வலிக்குதுன்னு நெஞ்சைப் படிக்கவும் பயந்துட்டோம். அஸ்வின்தான்  கைத்தாங்கலா மாடியிலர்ந்து கீழ கூட்டிட்டு வந்து கார்ல ஏத்தினான். அவனே காரை எடுத்துகிட்டு வந்துட்டான்.”, சகுந்தலா கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், அஸ்வின் வெளியே வரவும் அவனிடம் சென்றனர்.
“அரை மயக்கத்துல வெச்சிருக்காங்க. ரெஸ்ட் எடுக்கணும்னு.  மருந்து டிரிப்ல போட்டிருக்காங்க. இப்ப பரவாயில்லைன்னாங்க. ECG  ரிசல்ட் பார்த்துட்டு சொல்லுவாங்களாம்.”, எனவும்
“இந்த மெடிசன் வாங்கி வந்துடுங்க.”, என்று ஒரு சீட்டை நர்ஸ் நீட்டவும் சரியாக இருந்தது. ராகவன் வாங்கிக் கொண்டான்.
“அக்கா, எங்கிட்ட காசில்லைக்கா. அப்பா பர்ஸ்ல இருந்தது, அம்மாகிட்ட, எங்கிட்ட எல்லாமா சேர்த்து ரெண்டாயிரம் கூட இல்லை. அட்மிஷன் போட்டது, ஒரு ரவுண்ட் மெடிசன்ல எல்லாம் காலி. “, அஸ்வின் கூறினான்.
“அப்பா கார்ட் இருக்குமேடா. ATM ல எடுக்க வேண்டியதுதான ?”
“பின் தெரியாதுக்கா. அம்மாக்கும் தெரியலை.”, அஸ்வின் சங்கடமாக சொல்லவும், அவன் எடுத்து வந்த பத்தாயிரத்தை அஸ்வினிடம் கொடுத்தான் ராகவன்.
“அதை அப்பறமா பார்த்துக்கலாம். அஸ்வின், இதை நீ வெச்சிக்கடா. நான் மருந்து வாங்கிட்டு, அப்படியே அட்வான்ஸ் அஞ்சாயிரம் கட்டிடறேன். அப்பாவோட பேஷன்ட் ஐடி சொல்லு,”, எனவும்,
“நானும் வரேன் மாமா.”, என்று கூற, இருவருமாக சென்றனர். பொறுப்பை அக்காவும், மாமாவும் ஏற்றுக் கொள்ளவும், அஸ்வினுக்குத் தெம்பு வந்தது.
இவர்கள் வந்து சகுந்தலாவை வற்புறுத்தி ஒரு காபியைக் குடிக்க வைக்கவும், டுட்டி டாக்டர் இவர்களைத் தேடி வரவும் சரியாக இருந்தது. யார், என்ன உறவு என்று கேட்டுக்கொண்டு, இதயத்திற்கு இரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் சில அடைப்புகள் இருப்பதாக ரிப்போர்ட் சொல்கிறது, நாளை பெரிய டாக்டர் வந்ததும், அனேகமாக CT ஆஞ்சியோகிராம் செய்யச் சொல்வார்கள் அதன் மூலம் எங்கே எவ்வளவு அடைப்பு என்பதைத் தெரிந்துகொண்டபின், ஆஞ்சியோப்ளாஸ்டி மூலம் சரி செய்ய முயல்வார்கள். மிகவும் மோசமாக இருந்தால்தான் ஓபென் ஹார்ட் ஆபரேஷன் வரை செல்லும். இளங்கோவனுக்கு ஹார்ட் அட்டாக் எதுவும் வரும் முன்னரே தாமதிக்காமல் வந்துவிடவே, பயப்பட தேவையில்லை என்பதை முக்கால்வாசி ஆங்கிலத்தில் சொல்லிச் சென்றார்.
மாலினி, சகுந்தலாவிற்கு பொறுமையாக அவருக்கு புரியும் விதத்தில் எடுத்து சொல்லிக்கொண்டிருக்க, ராகவன், அஸ்வினுடன் இதற்கெல்லாம் தோராயமாக எவ்வளவு ஆகும் என்று விசாரிக்கச் சென்றான்.
நேரம் இரவு இரண்டைத் தொட, சகுந்தலா அசதியில் அங்கிருந்த நாற்காலியில் கண் அயர்ந்தார். அஸ்வின் ரெஸ்ட் ரூம் சென்றிருக்க, மாலினியைத் தனியே அழைத்தான் ராகவன்.
“மயிலு…. டாக்டர் சொன்ன CT ஆஞ்சியோகிராம் பதினஞ்சாயிரம் கிட்ட வருமாம். ஆஞ்சியோப்ளாஸ்டி செய்யறதானா முக்காலர்ந்து ஒரு லட்சம் கிட்ட ஆகும். அப்பறம் மேல் செலவுன்னு இருக்கு.  இரண்டு நாள்ல டிஸ்சார்ஜ் ஆகிடலாம். காலையில விஜய்கிட்டயும் ரமேஷ்கிட்டயும் கேட்கறேன். “, ராகவன் சொல்லவும்,
“இல்லைங்க. வேண்டாம். என் காசு மாலையை கொண்டுபோய் அடமானம் வெச்சிடுங்க. எட்டு சவரன், எப்படியும் இன்னிக்கு ரேட்டுக்கு ஒன்னரை லட்சம் தருவான்.  அதுக்கும் மேல ஆச்சுன்னா அப்ப கேட்டுகலாம் அவங்களை.”, மாலினி தீர்மானமாய்க் கூறினாள்.
“ஏம்மா…நகையை ஏன் வெக்கணும்.”, ராகவன் தயங்க,
“அவங்க போட்டதுதான ரகு. அவங்களுக்காகத்தான வெக்கறோம். பரவாயில்லை.  நம்மால புரட்ட முடியும்னும்போது எதுக்கு உங்க ப்ரெண்ட்சைக் கேட்கணும். அப்பா முழிச்சார்னா, பின் நம்பர் கேட்டுக்கலாம். நாளைக்கு டாக்டர் வந்து சொன்னதும்,  நீங்க போய் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க ரகு. ”, என்றாள்.
காலை எட்டு மணிபோல் சீஃப் டாக்டர் வெங்கடேஷ் அழைப்பதாக சொல்லவும், மூவருமே உள்ளே சென்றனர். தன் குழுவோடு இருந்தார் அம்பதுகளின் மத்தியில் இருந்த அந்த மருத்துவர்,
“மிஸ்டர் ராகவன் ?”
“நாந்தான் டாக்டர்.”, ராகவன் வரவும், ஒரு பெரிய புன்னகையுடன்,
“ஹா… நீங்கதானா? கிளாட் டு மீட் யூ யங் மேன்.”, என்று கைகொடுத்து, தோளைத் தட்டினார்.
“என்ன மிஸ்டர். இளங்கோவன், இப்படி பெரிய இடத்துல கனெக்ஷன் இருக்க மாப்பிள்ளை இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை?  எங்க டீன் காலையில கூப்பிட்டு உங்களை கவனமா பார்த்துக்க சொல்லியிருக்கார். அப்படியெல்லாம் லேசுல சொல்லிட மாட்டாரே, என்ன ? யாருன்னு கேட்டதுக்கு, அவர் சம்மந்தி மிஸ்டர். வேதாசலத்துக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்னும், ,சிஷ்யப் பிள்ளை, உதவின்னு கேட்காதவன் முதல் முறையா கேட்டிருக்கான்னு சொன்னராம். என்ன ராகவன், அப்படியா ?”, சிரிப்புடன் கேட்டார் டாக்டர். பரிதி.
மற்றவர்கள் ஆச்சரியமாகப் பார்க்க, ராகவன் ஒரு சிறிய புன்னகையுடன்,
“வேதாச்சலம் சார் என் மென்டர் சர்.”, சுருக்கமாக முடித்துக்கொண்டான்.
 “ஹ ஹா… சுருக்கமா முடிச்சிட்டீங்க. வெல், ரிபோர்ட் பார்த்துட்டேன். CT ஆஞ்சியொ எடுத்து எங்க அடைப்புன்னு கரெக்டா பார்த்துட்டா, அடுத்தது சரி பண்ணிடலாம். இன்னிக்கு காலையில எடுக்க சொல்லிட்டேன். மதியம் போல ரிபோர்ட் பார்த்துட்டு சொல்றேன்.”, என்றவர், இளங்கோவனிடம்,
“கவலையே படாதீங்க இளங்கோவன். ஒரு CT ஸ்கான் எடுத்துட்டு , சரி பண்ணிடலாம். அடுத்த வாரம் ஆபிஸ் போகலாம்.”, என்று மேலும் நம்பிக்கை தரும் வார்த்தைகள் சில சொல்லிவிட்டு கிளம்பினார்.
“யாரு மாமா வேதாச்சலம்?’, எல்லார் மனதிலும் இருந்த கேள்வியை அஸ்வின் கேட்கவும்,
“ஜாயின்ட் கமிஷ்னர்,எங்க கமர்ஷியல் டாக்ஸ் டிபார்ட்மெண்ட்ல. காலையில அவர்கிட்ட பேசினேன். அவர் பெண்ணெடுத்த சம்மந்தி இந்த ஹாஸ்பிடல்ல ரிசர்ச் டீன். நான் ஸ்பெஷலா கவனிக்க சொல்றேன்னு சொன்னார். இவ்வளவு தூரம் இருக்கும்னு நானும் எதிர்பார்க்கலை.”
இளங்கோவன் இப்போது தெளிந்திருக்கவும், அனைத்தும் கேட்டுக்கொண்டிருந்தார். மருமகனின் செல்வாக்கு புரிந்தது. அதுவும், தனக்காகத்தான் முதன் முறையாகக் கேட்டிருக்கிறான் என்பது தெரியவும், ராகவனை ஏறெடுத்தும் பார்க்க முடியவில்லை அவரால்.
சீஃப் வந்து கவனித்து செல்லவும், நர்ஸ் மிகவும் மரியாதையாக, “சார் எல்லாரும் இங்க இருக்கக்கூடாது. “, எனவும் வெளியே வந்தார்கள். சகுந்தலா மட்டும் உடன் இருந்தார்.
“என்ன ஆச்சு நேத்து?”, என்று மெதுவாக இளங்கோவன் கேட்கவும், ராகவன் வந்து பணம் தந்தது முதல் சகுந்தலா சொல்லி முடிக்க, மேலும் எதுவும் பேசுவதற்குள், நர்ஸ் அனுப்பிவிட்டார்.

Advertisement