Advertisement

அத்தியாயம் – 22
காயத்ரியின் கணவன் ரகுவரன் அவளை அழைக்க வரவும், மாலினி வரவேற்று தண்ணீர் கொடுத்தாள். அவளின் நலனை விசாரித்தவன், தான் குளித்து தயாராகி வந்தான்.
சூடாக பக்கோடாவை கொண்டு வந்து வைத்தாள் மாலினி. “அட ஏம்மா ? நீயே ஆபிஸ் போயிட்டு வந்த அலுப்புல இருப்ப. கல்யாண ரிசப்ஷன்தான போறோம்.”, என்று ரகுவரன் சொல்லியபடியே எடுத்துக்கொள்ள,
“இருக்கட்டும்ண்ணா. ட்ராபிக்ல போகவே ஒரு மணி நேரம் ஆகிடும். நீங்களும் அலைஞ்சிட்டு வரீங்க. சாப்பிடுங்க.”, என்று  ரகுவரனை கவனித்தவள், உள்ளே சென்று காபியைத் கொண்டு வந்து தந்தாள்.
குழந்தைக்கு வென்னீர் காய்ச்ச என்ற சாக்கில், உள்ளே இருந்துகொண்டு , காயத்ரிக்கு பர்வதத்திடம் கொடுத்துவிட்டாள். அதற்குள் ராகவன் வந்துவிட, மாப்பிள்ளையை நலம் விசாரித்தான். காயத்ரியிடம் “வாம்மா.”, என்றவன், “மாலினி பூ வாங்கிட்டு வர சொன்னா. நீ கேட்டியாமே.”, என்று கொடுத்தான்.
பர்வதத்திற்கு மிகவும் சந்தோஷம். மாப்பிள்ளைக்கு சட்டென்று ஒரு பக்கோடா போட்டதிலிருந்து, இப்போது தன் மகளுக்காக பூ வேண்டுமென்று ஞாபகமாக கூறியது வரை .
“ஏன் மச்சான். போற வழியில வாங்கிட்டா போச்சு.”, என்று ரகுவரன் கூறும்போதே, காயத்ரி புன்னகையுடன் வாங்கியவள், இருந்த நாலு முழத்தையும் பிரித்து தலையில் சூடிக்கொள்ளப் போனாள்.
“காயத்ரி…”, அழுத்தமாக வந்தது ரகுவரனின் குரல்.
“மா.. நாலு ஹேர்பின் குடு.”, என்று ஆர்ட்ர் போட்டவள், “என்னங்க ?..”, என்றாள் கணவனைப் பார்த்து.
“ஊப்”, என்று பெருமூச்சு விட்டவன், “பாதியை உங்க அண்ணிகிட்ட குடு. மொத்தமும் வைக்கற அளவுக்கு உன் தலையில முடியில்லை.  உனக்கு மட்டுமா உங்க அண்ணன் வாங்கிட்டு வருவார் ? இது கூட உனக்கா தெரியாதா? வீட்ல இன்னொருத்தங்க இருக்கும்போது மொத்தமா நீயே வெச்சிக்குவியா?”, கணவன் கடியவும், முகம் கன்றினாள் காயத்ரி.
கத்திரி, ஹேர்பின்னுடன் வந்த மாலினி, “நான் வீட்லதான் இருக்கப் போறேன். இது போறும். “, என்று தனக்கு கொஞ்சமாக எடுத்துக்கொண்டு, மிச்சத்தை அவளிடம்  ஹேர்பின்னுடன் தந்துவிட்டு சென்றாள்.
கணவனிடம் திட்டு வாங்கியது ஒரு புறமென்றால், மாலினி அவள் எடுத்ததுபோக இந்தா என்று கொடுத்ததும் புகைந்தது.
தாயுடன் பின் கட்டுக்குச் சென்றாள் பூ வைக்கும் சாக்கில். “பாரு உன் மருமக அவ எடுத்தது போக மிச்சம் தரா. “, என்று புகைந்தாள்.
“போடி கிறுக்கச்சி. உனக்காக பூ வாங்கிட்டு வர சொல்றா. உன் புருஷனுக்கு பக்கோடா போட்டு குடுக்கறா. இன்னும் பாத்து பாத்து எவ்வளவுதான் செய்வா? குறை சொல்லணுமேன்னு சொல்லாத. உனக்கே புத்தியிருந்தா அவளுக்கு நீ முதல்லயே கொடுத்திருக்கணும். இதுக்கும் உங்கண்ணங்காரன் என்னைத்தான் பேசுவான். மூடிட்டு போ. ஞாயித்துகிழமை பார்க்கலாம்.”, என்று பர்வதமும் மாலினிக்கு வக்காலத்து வாங்க, ஒன்றும் செய்ய முடியாதவளாகக் கிளம்பினாள் காயத்ரி.
அவள் கிளம்பும்போது மாலினி பார்த்த பார்வை, “உங்கம்மாவுக்கு உருவேத்த உனக்கு மட்டும்தான் தெரியுமா? இந்த ஆட்டம் எனக்கும் ஆடத் தெரியும் ? எப்படி ? நல்லாயிருந்துச்சா?”, என்று கேட்கும் விதமாக, நக்கலாக இருந்ததா, இல்லை அவளுக்குத்தான் அப்படி தோன்றியதா?  யோசித்தபடியேதான் கிளம்பிச் சென்றாள் காயத்ரி.
ஞாயிறு மதியம் காயத்ரி குடும்பம் கல்யாணம் முடித்து வந்து இறங்கினார்கள். குழந்தையை படுக்கையில் தூங்கப் போட்டு, உடை மாற்றி வரவும், சற்று நேரம் பேசிய ரகுவரன், “கொஞ்சம் தூங்கறேன்.”, என்று சொல்லி விக்ரம் அறைக்குச் சென்றான்.
“மாப்பிள்ளை, இங்க எங்க ரூம்லயே படுங்க. குழந்தையோட.”, என்று ராகவன் அனுப்பி வைத்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம், “அண்ணா. உங்ககிட்ட பேசணும். வாங்க.”, என்று பின் கட்டுக்கு ராகவனை அழைத்துச் சென்றாள் காயத்ரி.
வாசலருகே நின்றவன், “என்ன காயத்ரி ? “, என்று கேட்டான். ஏன் என்று தெரியுமென்றாலும் அவள் வாயிலிருந்தே வரட்டும் என்ற எண்ணம்.
“சாரிண்ணா. அண்ணியை கூப்பிடலை குட்டி பர்த்டேக்கு. அதனாலதான் நீங்க எங்கிட்ட பேச மாட்டேங்கறீங்களா ? சாரிண்ணா.”, என்றாள் மீண்டும்.
“என் கிட்ட எதுக்கு கேட்கற ? யாரைக் கூப்பிடலையோ அவங்ககிட்டதான கேட்கணும் ?”
“விக்ரமை குழந்தையை பார்த்துக்க ஒரு நாள் ட்யூஷன் போவேணாம்னு நான் சொன்னதுக்கே எப்படில்லாம் ஜாடையா திட்டினாங்க தெரியுமா? அதெல்லாம் நான் பெரிசு பண்ணா, உங்களுக்கு கஷ்டம்னு நான் சொல்லலை. உங்க ரூம்ல நான் சேலை கட்டப் போனா என்னை விரட்டி விட்டாங்க அவங்க தூங்கணும்னு. இதெல்லாம் நான் பொறுத்துக்கலை? உங்களுக்காகத்தான அண்ணா.”, கண்ணீர் முட்டியது காயத்ரியின் கண்களில்.
“ இதை நான் கேட்டா, நாங்க உன் வீட்டுக்கு வந்த போது நீ செஞ்ச அவமானத்தையெல்லாம் சொல்லிக்காட்டுவா. அப்ப நடந்ததுக்கு நான் உன்னை சாரி கேட்க சொல்லவேயில்லை. இப்ப அவளையும் நான் கேட்கமுடியாது காயத்ரி. “, ராகவன் முகத்திலிருந்து அவளால் ஒன்றும் படிக்கமுடியவில்லை.
“அப்ப நான் அழைக்காததுக்கு மட்டும் கேட்க சொல்றீங்க?”
“நானா கேட்க சொன்னேன்? நீயா வந்து எங்கிட்ட மன்னிப்பு கேட்ட. யார் கிட்ட கேட்கணும்னு உனக்கு  சொன்னேன். அவ்ளோதான்.”, தோளைக் குலுக்கினான்.
“அப்ப ஏன் அண்ணா எங்கிட்ட பேச மாட்டேங்கறீங்க? “
“என் தங்கை தப்பு பண்ணலைன்னு சொல்ல முடியாத இடத்துல என்னை நிக்க வெச்சிட்ட காயத்ரி. எனக்கும் இது தலை குனிவுதான்னு உனக்கு புரியலையா, இல்லை அது பத்தி அக்கறையில்லையான்னு தெரியாது. உனக்கு செய்ய வேண்டிய கடமையை செய்வேன். அதுக்கு மேல எதிர்பார்க்காதே காயத்ரி. “, ராகவன் முகம் திருப்ப, அதற்குள் அவர்களிடம் வந்த பர்வதம்,
“ராகவா. அவதான் மன்னிப்பு கேட்கறாளேடா. “, என்று பரிந்து பேசினார்.
“மா… ஏற்கனவே அதைப் பத்தி பேசியாச்சு. விடுங்க.”
“ டேய்… விட்டேத்தியா பேசாதேடா. அவளுக்கும் நம்மைவிட்டா யாரு இருக்கா?”
“சரிம்மா… அதுகென்ன இப்ப ?”
“இல்லை இந்த மாசம் அவ கல்யாண நாள் வருதேடா. அவங்களே இங்க வரவும்… “, பர்வதம் இழுக்கவும், அவரை முறைத்தான் ராகவன்.
“இப்பதான் எல்லாம் செஞ்சு முடிச்சோம்.  இனியும் நான் குழந்தையை தள்ளிப் போடறதா இல்லை. மாலினி மாசமானா, அவ சீமந்தம் , தொட்டிலுக்கு நகைன்னு நான் சேர்க்கணும். கடனையும் அடைக்கணும்.  இதுக்கு மேல எங்கிட்ட இல்லை. முதல் வருஷம் எல்லாம் சிறப்பா செஞ்சாச்சு. அவ்ளதான் முடியும் என்னால. “, ராகவன் சொல்லவும் பர்வதம்மாவினால் வாயை திறக்க முடியவில்லை. ராகவன் கிளம்பி ஹாலுக்கு செல்லவும், காயத்ரி பிலுபிலுவென பிடித்துக்கொண்டாள்.
“பார்த்தியா பார்த்தியா… பொண்டாட்டிதான் முக்கியம்னு சொல்லிடுச்சு அண்ணன். உன் குடுமி இப்ப அவ கையிலதான் இருக்கப்போகுது. உன்னை நட்டாத்துல விட்டுட்டு அவ அண்ணனை தனிக்குடித்தனம்தான் கூட்டிட்டு போகப்போறா.”, வழக்கமான பல்லவியைக் கையில் எடுக்கவும், பர்வதம்மாவிற்கே தாங்கவில்லை.
“ஏண்டி, கல்யாணமாகி ஒரு வருஷம் கிட்ட உங்க அண்ணன் அவன் குழந்தையை தள்ளிப் போட்டு உன் செலவை சமாளிச்சிருக்கான்.  நான் கேட்டுகிட்டேன்ன்னு மாலினியும் அதுக்கு சரின்னு ஒத்துகிட்டு இத்தனை மாசம் அவ அம்மாகிட்ட பேச்சு வாங்கிட்டு இருக்கா. அதெல்லாம் உனக்கு தெரியலை. மாலினி மேல பாசமில்லைன்னாலும் உங்க அண்ணன் மேல கூடவா உனக்கு பாசமில்லாம போயிரும்? ஏன் இப்படி மாறிட்ட காயத்ரி? “, பர்வதம்மாவின் பேச்சைக் கேட்டு கலங்கிவிட்டாள். அவள் ஆணி வேரே ஆட்டம் காணுகிறதே !
“மா.. நானும் வந்ததுலர்ந்து பார்க்கறேன்.நீயும் அவ பக்கம்தான் பேசற?”, கண்ணீர் பொங்கியது  காயத்ரியிடம்.
“அனுசரிச்சு போகணும் காயத்ரி. உனக்கு வேண்டியதை செஞ்சிட்டான். அடுத்து அவன் வேலையை பார்க்கட்டும். என் புள்ளை உங்க அப்பா போன நாளா சந்தோஷமா இல்லை. மாலினி சொல்லித்தான் எனக்கே புரிஞ்சுது. உன்னை கரையேத்தணுமேன்னு பயத்துல இருந்தவ மத்த எதையும் பார்க்கலை.  இவ்வளவு செஞ்சவன், எங்கையும் ஓடிட மாட்டான். கொஞ்சம் விடு அவனை. இன்னும் விக்ரமுக்கு காலேஜ் அது இதுன்னு இருக்குது.”, மாலினி அங்கொன்றும் இங்கொன்றுமாய் இதையெல்லாம் பர்வதத்திடம்  மீண்டும் மீண்டும் உருவேற்றியிருந்தாள்.  அதெல்லாம் இப்போது அவர் வாயிலாக வரவும், காயத்ரி ஒன்றும் சொல்ல முடியாது வாயடைத்துப்போனாள்.
கொல்லைப் புறத்தில் சற்று நேரம் முன் நடந்தவற்றை உள் வாங்க முயன்று கொண்டிருந்தவளின் பின்னே வந்த மாலினி, “காயத்ரி…”, என்று அழைக்க, திரும்பினாள்.
“உன்னால அத்தையை ஏத்தி விடமுடியும்னா என்னால இறக்கியும் விட முடியும். இது சும்மா உனக்கு ஒரு சாம்பிள்தான். உன் எல்லை தெரிஞ்சு நீ நின்னா, என்னிக்கும் அம்மா வீட்டு உறவு இருக்கும். அதை விட்டு, என்னையும் விக்ரம், அத்தை மாதிரி ஆட்டிப் படைக்கலாம்னு நினைச்சா…”, வார்த்தையை முடிக்கவில்லை மாலினி. முகத்தின் கடுமையே காயத்ரிக்கு வாக்கியத்தை முடித்துக்கொடுத்தது. முகம் வெளுத்து நின்றாள் காயத்ரி.

Advertisement