Advertisement

அவர் செல்லவும்,  “ஊர்ல இருக்கற பெரிய மனுஷனுங்களுக்கெல்லாம் உங்க அருமை தெரியுது. வீட்டு ஆளுங்களுக்குத்தான் புரியமாட்டேங்குது. வாங்க, போய் சாப்பிடலாம்.”, என்று பெற்றோரை இடித்த மாலினி, ராகவனைக் கிளப்பினாள்.
கேட்டுக் கொண்டிருந்த இளங்னோவனிற்கும் அவர் மனைவிக்கும் முகத்தில் ஈயாடவில்லை.
“மாலினி… “, என்று அவளைக் கடிந்தவன், “சர் நீங்க ?”, என்று மரியாதைக்கு ஒரு வார்த்தை கேட்க, “ இல்லை. நீங்க ரெண்டு பேரும் முதல்ல சாப்பிடுங்க. நான் வேணுவோட அப்பறம் சாப்டுக்கறேன்.”, என்று சமாளித்தபடியே அனுப்பிவைத்தார் இளங்கோவன்.
மறு வாரம் வெள்ளிக்கிழமை உறவினர் கல்யாணம் என்று கணவன், குழந்தையோடு வந்து சேர்ந்தாள் காயத்ரி. இவள் வருவது தெரிந்து, சாம்பார், இரண்டு பொரியல், குழந்தைக்கு பருப்பு என்று முக்கால் வாசி சமையலை முடித்தவள், மாமியார் கேட்டதன் பேரில் மசால் வடைக்கும் மாவை ஆட்டி வைத்துவிட்டு கிளம்பினாள் அலுவலகத்திற்கு.
இவள் மெனக்கெடுவதைப் பார்த்து உள்ளம் குமைந்தாலும் ஒன்றும் சொல்ல முடியாமல் பொறுத்துக்கொண்டான் ராகவன். மதுரையிலிருந்து வந்ததும் அவள் சின்ன மாமியார் வீடு சென்று, மதியம் காயத்ரியையும் குழந்தையையும் ராகவன் வீட்டில் விட வந்த அவள் கணவனும் சாப்பிட்டுவிட்டு, வேறு வேலையாக செல்ல, அம்மா மகள் பேச்சு வார்த்தை ஆரம்பமாகியது.
மாலை மாலினி அலுவலகம் முடித்து திரும்பி வர,வாசலில் விக்ரம் குழந்தையைத் தூக்கி வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான். புருவம் சுருக்கியவள்,
“ விக்ரம், இன்னிக்கு டுடோரியல் இருக்குல்ல உனக்கு. இந்த நேரம் வீட்ல என்ன பண்ற ?”
தோளைக் குலுக்கி உதட்டை சுழித்தவன், “ அக்கா நான் ஸ்கூல் முடிச்சு வந்ததுலர்ந்து என்னை எங்க விட்டா? அவளுக்கு எடுபிடி வேலை பார்த்து, இப்ப அந்தம்மா ரிசப்ஷன் போயிட்டு வர வரை குழந்தையை பார்த்துக்கணுமாம். அதுனால டியூஷன் இன்னிக்கு போக வேண்டாம்னு ஆர்டர்.”, என்று முடித்தான் விக்ரம்.
கோபம் பொத்துக்கொண்டு வந்தது மாலினிக்கு. “நான் திட்டற மாதிரி திட்டுவேன். நீ கோவமா கிளம்பி கிளாசுக்கு போகற. புரியுதா?”, என்று காதைக் கடித்தவள், அவன் கையப் பிடித்து உள்ளே இழுத்து வந்தாள்.
“என்ன பேச்சு இது விக்ரம் ? இரண்டு நாள்ல மாடல் எக்சாம் வருது. கிளாஸ் கட் பண்ணிட்டு வீட்ல குழந்தையோட விளையாடறயா? ஆறிவு எங்க போச்சு உனக்கு? எவ்ளோ கஷ்டப்பட்டு காசை கட்டியிருக்கோம் டுடோரியலுக்கு? நீ போகாட்டா என்ன அர்த்தம்? நாளைக்கு  மார்க் கம்மியானா எல்லாரும் அதுக்கும் உன்னைத்தான் பழிப்பாங்க. சொல்றவங்க ஆயிரம் சொன்னாலும் உனக்குன்னு சுய புத்தி இல்லை ? உன் படிப்புதான் உனக்கு நாளைக்கு சோறு போடும்னு தெரியும்தான ? நாளைக்கு நீ நல்ல நிலைமையில் இல்லன்னா வேற யாரும் சீண்ட மாட்டாங்க. உங்க அப்பா போனதுக்கு அப்பறம் அவங்க தங்கைங்க கையை கழுவிட்டு போயிட்டாங்கன்னு தினமும் உங்க அம்மா புலம்புறங்களே. அதை கேட்டும் உனக்கு புத்தி வர வேணாம்? காயத்ரி போக வேண்டாம்னு சொன்னா, நீ கேட்டுக்குவியா ?”. பட பட பட்டாசாய் பொரியவும், சில நிமிடங்கள் பிடித்தது பர்வதம், காயத்ரிக்கு  மாலினி ஏன் எதற்கு சத்தம் போடுகிறாள் என்று புரிந்துகொள்ள.
இதையே சாக்காக எடுத்துக்கொண்டவன், குழந்தையை காயத்ரி கையில் திணித்துவிட்டு, “போனா இவங்க கத்துவாங்க, போகாட்டி அவங்க கத்துவாங்க. யாருக்குன்னு நான் பார்க்க. “, என்று  அவன் பங்குக்கு பர்வதத்திடம் பொங்கிவிட்டு, புத்தகங்களை அள்ளிக்கொண்டு கிளம்பினான்.
“என்ன அண்ணி , வந்தவளை வான்னு கூட கூப்பிடாம, நீங்க பாட்டு சாவகாசமாய் முகம் கழுவிட்டு வர்றீங்க?”, காயத்ரிக்கு மாலினி விக்ரமை திட்டுவதைப்போல தன்னைத் தான் திட்டியிருக்கிறாள் என்று கனன்று கொண்டிருந்தது.
“நீ வீட்ல இருக்க. நாந்தான் வெளிய இருந்து வரேன். வந்ததும் பஞ்சாயத்து. இரு காபியை போட்டு ஒரு வாய் குடிச்சாத்தான் அடுத்து எதுவும் முடியும்.”, சொல்லிக்கொண்டே சமையலறை நோக்கி சென்றாள்.
“பாரு…பாரு… என்ன திமிரு. நீ எதையாச்சம் கேட்கறியா?”, பர்வதத்தை கடிந்தாள்.
“அவன் டியூஷனுக்கு போகணும்னு சொன்னபோது நீ என் வாயை அடக்கி அவனை போகவிடாம செஞ்ச. இப்ப பாரு. அவ தான பீஸ் கட்றா. பின்ன திட்டதான் செய்வா. “, பர்வதம் மருமகளுக்கு ஆதரவாக பேசியது மேலும் கடுப்பாக்கியது காயத்ரியை.
காபியை சற்று அருந்திவிட்டு வந்தவள் சோபாவில் அமர்ந்து, “அத்தை, உங்க பொண்ணுக்கு விருந்து சாப்பாடு காத்திருக்கு. நமக்கு நாம எதையாவது ஆக்கினாத்தான் உண்டு.  நைட்டுக்கு என்ன செய்ய ?”, என்றாள் மாலினி.
அவள் ஒருத்தி இருப்பதை கண்டுகொள்ளாமல் பேசவும், குழந்தையை தாயிடம் கொடுத்தவள், “அம்மா இவனை பார்த்துக்கோ. நான் ரிசெப்ஷனுக்கு கிளம்பணும். “, திரும்பியவள், ஞாபகம் வந்தவளாக, “பூ வேணுமே. இதுக்குத்தான் விக்ரமை இருக்கச் சொன்னேன். ஒரு நாள் படிக்காட்டா அவன் பாசாக மாட்டானா? என்னவோ பெரிய பில்டப்.”, தோளைக் குலுக்கியவள், “இப்ப பூவுக்கு ஏற்பாடு செய்மா…”, என்றாள் மாலினியை ஒரு பார்வை பார்த்தபடி. அவளுக்குத் தெரியும், மாலினியை வாங்கி வரும்படி பர்வதம்மா சொல்லுவார் என்று.
“உன் வீட்டுக்காரர்தான வந்து கூட்டிட்டு போறார். வர வழியில வாங்கிட்டு வர சொல்லு. இல்லை நீ போற வழியில வாங்கி வைச்சிகிட்டு போ. இதெல்லாம் ஒரு மேட்டரா.”, பர்வதம் எதுவும் சொல்லும் முன் மாலினி பேச,
“ அதானடி. போற வழியில கோயில் கிட்ட இருக்கு கடை. மாப்பிள்ளை வரதுக்கு முன்னாடி நீ கிளம்பற வழியைப் பாரு.”, என்று பர்வதம் பேச, முகத்தை திருப்பிக்கொண்டு படுக்கையறைக்கு சென்று கதவை பட்டென்று சாத்திக்கொண்டாள்.
தன்னிடம் தவழ்ந்த குழந்தையை கொஞ்சிய மாலினி, மெதுவாய் எழுந்து, படுக்கையறைக் கதவை தட்டினாள்.
“காயத்ரி, கொஞ்சம் கதவைத் திற.”
கதவைத் திறந்தவள், “என்ன அண்ணி? கிளம்ப விட மாட்டீங்களா?”, என்று வெறுப்பாய்க் கேட்டாள்.
“கிளம்பு, ஆனா விக்ரம் ரூம் யூஸ் பண்ணிக்கோ. நான் ட்ரெஸ் மாத்தணும். இடுப்பு வலிக்குது. கொஞ்சம் படுக்கணும்.”, அதற்குள் மெத்தையில் பரப்பியிருந்த அவள் துணிமணிகளை நோட்டம் விட்டவள், “இதெல்லாம் கொஞ்சம் எடுத்துகிட்டு அங்க போறியா?”, என்றாள் அதிகாரமாக.
“அது சின்னது. அங்க எப்படி புடவை கட்ட?”
“ம்ம்…கொஞ்சம் மொடக்கித்தான். இல்லை பின் கட்டு கதவை சாத்திட்டு அந்த ரூம்ல கட்டு. யாரும்தான் இல்லையே? “, அவளே பரப்பியிருந்ததை நகர்த்தவும்,
“இஸ்திரி போட்டதை கலைக்காதீங்க. ஹ்ம்ம்… என் வீடு எனக்கே இல்லாம போச்சு. இருக்கட்டும் பேசிக்கறேன்.”, முறைத்துக்கொண்டே கிளம்பினாள் காயத்ரி.
வெளியே வந்த காயத்ரி, “பாரு. உன் மருமக என்னை ரூமை விட்டு துரத்திட்டா. மகாராணிக்கு படுக்கணுமாம். விளக்கு வெக்கற நேரம் படுத்தா வீட்டுக்கு ஆகுமா? நீயும் மாமியாருன்னு எதுக்கு இருக்க?”, என்று பர்வதத்திடம்  பின் அறைக்குச் சென்று பொரிய,
“ஏன் காயத்ரி. அவ ரூம்லதான படுக்க முடியும்?  எப்பவாவது தூரம் வர சமையத்துல இப்படி படுப்பா. இல்லைன்னா பம்பரமா வேலை செய்யற பொண்ணு, இன்னிக்கு காலையில் உனக்குன்னுதான் அத்தனை வகை செஞ்சா. அதோட வேலைக்கும் ஓடினா. இடுப்பு நோக்காடெடுத்திருக்கும். மதியமெல்லாம் நீ அங்கதான படுத்திருந்த ?”, மீண்டும் மாலினி பக்கமே பேச, கண்ணில் நீர் முட்டியது காயத்ரிக்கு.
“நீ ரொம்ப மாறிட்ட. என் பக்கமே பேச மாட்டேங்கற. அவளும் என்னை மதிக்க மாட்டேங்கறா.”, என்று குறை பாடினாள்.
“சே..அப்படியில்லடி. ‘ நான் அவ வீட்டுக்கு போன போது சரியா கவனிக்கலைன்னாலும், குழந்தை பிறந்த நாளுக்கு கூப்பிடலைன்னாலும், காயத்ரியை உங்களுக்குக்காகவும், உங்க பிள்ளைக்காகவும் நான் அனுசரிச்சுத்தான் அத்தை போகணும். என்ன சமையல் செய்யட்டும்னு ‘, உனக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சதை கேட்டு செஞ்சாடி. எனக்குக் கூட அந்த வயசுல இந்த அளவு பக்குவம் இல்லை.  நீ உன் பக்கம் தப்பை வெச்சிகிட்டு அவளை சொல்லாத. இப்ப என்ன நீ கிளம்ப இந்த இடம் போறாதா? இல்லை, இதே பின் கட்டுல நீ முன்னாடி கிளம்பினது இல்லையா? “, மாலினி சாதுர்யமாகக் காய் நகர்த்தியதை லேட்டாய் உணர்ந்து கொண்டாள் காயத்ரி. இதை எப்படி முறியடிக்க என்று கிளம்பும் நேரம் முழுதும் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தாள்.

Advertisement