Advertisement

அத்தியாயம் – 21
ஏற்காட்டிலிருந்து திரும்பி ஒரு வாரம் போல் கடந்திருந்தது. மகனின் முகம் மகிழ்ச்சியாக இருக்க, பர்வதம் ‘பாவம். அவனும்தான் எவ்வளவு ஓடுவான். மாலினி சொன்ன மாதிரி கொஞ்சம் அவன் வயசொத்த பிள்ளைகளோட போக வர இருக்கணும்.’ என்று நினைத்துக்கொண்டார்.
அவர்கள் சென்றது தெரிந்து, “என்னவோ எனக்கு ஒரு வெள்ளி தட்டு வாங்க காசில்லைன்னு பஞ்ச பாட்டு பாடுனாங்கன்னு சொன்ன, இப்ப நாலு நாள் போயிட்டு வரமட்டும் காசு சுரக்குதா உன் பிள்ளைக்கு ?”, என்று ராகவன் இன்னும் அவளுடன் சரியாகப் பேசாததால் இருந்த எரிச்சலில்  காயத்ரி கேட்கவும், பர்வதம்மவிற்கு கோவம் வந்தது.
“ஏன்… அவனும் நாலு எடம் போயிட்டு வரட்டுமே? உனக்கு வேண்டியது முடியுதோ இல்லையோ, செஞ்சிட்டான் இல்ல?  அப்பறம் ஏன் வீங்கி வெடிக்கற? நீ உன் புருஷன் கூட போயிட்டு வரதில்லையா என்ன? “, என்று சீறினார்.
“ஏம்மா… ஏன் கத்தற?”
“பின்ன என்னடி? உங்க அண்ணனுக்கும் தலை தீபாவளி, தலை பொங்கல் வந்துச்சு. ஒரு வேட்டி சட்டை வெச்சி குடுத்தியா? இல்ல நீ குடுத்தா உன் புருஷன் வேண்டான்னுடுவாரா? உன் நாத்தனா உனக்கும் உன் புருஷனுக்கும் செஞ்சாளே? நீ ஏன் செய்யலை ?”, பர்வதம்மா கேட்கவும், ‘என்னாச்சு அம்மா இந்த போடு போடுது?’, என்று குழம்பினாள்.
“அது… நீ சொல்ல வேண்டியதுதான? எனக்கு தோணவேயில்லை….”, என்று காயத்ரி அதற்கும் அன்னயையே காரணமாக்கினாள்.
“அந்த அளவு எனக்கு யோசிக்கற பவுசு இருந்தா, நான் ஏன் இப்படி இருக்கப்போறேன் ? பேச்சு வாக்கில உங்க அண்ணன் சொல்லிக் காட்டும்போதுதான் எனக்கே தெரிஞ்சுது. நீ அவன் மேல பாசமா இல்லைன்னா நான் எதுவும் செய்ய முடியாது. இனி உன் கையிலதான் இருக்கு. கொஞ்ச நாள் இது வேணும் அது வேணும்னு கேக்காத. அவன் கோவம் கொஞ்சம் தணியட்டும்.”, என்று சொல்லவும் மீண்டும் அம்மா மகள் பேச்சு சற்று நாட்களாக குறைந்திருந்தது.
சனிக்கிழமை ராகவன் அரை நாள் அலுவலகம் சென்றிருக்க, மாலினிக்கு விடுமுறை. மதிய சமையலை பொறுமையாக செய்யலாம் என்று  அவள் அலுவலகம் அருகில் இருந்த நூலகத்தில் எடுத்த ஒரு ஆங்கில மாத இதழை படித்துக்கொண்டிருந்தாள். திடீரென்று சிரிக்கவும், கீரை ஆய்ந்து கொண்டிருந்த பர்வதம்,
“என்ன மாலினி படிச்சிட்டு சிரிக்கிற ?”, என்று கேட்டார்.
“எந்த ஊர்ல எவ்வளவு பெரிய வேலையில இருந்தாலும் மாமியார் மருமக பிரச்சனை மட்டும் மாறாது போல…”, என்றாள் புன்னகையுடன்.
“என்னவாம்? முழுசா சொல்லு?”, என்று கதை கேட்கும் ஆவலில் பர்வதம் கேட்டார்.
“இந்திரா நூயின்னு ஒருந்தங்க. தமிழ் பொண்ணு, சென்னைதான். அமெரிக்கால படிச்சி அங்கயே வேலைன்னு செடிலாகிட்டாங்க.வடக்கத்தவர கல்யாணம் செய்துகிட்டாங்க. இரண்டு பொண்ணுங்க. பெப்சி குளிர்பான கம்பனியிருக்கே அதுவும் கோக்கோலா விக்கற கோக் கம்பனியும் ஓண்ணா ஒரே கம்பனியா சேரப்போகுது. அதை முன்னாடி  நின்னு நடத்தறது பெப்சி கம்பனிக்கே சேர்மனா இருக்கற இந்தம்மாதான். அவங்க கிட்ட மகளிர் தினத்துக்கான ஒரு பேட்டி எடுத்தாங்க.”, புரியுதா என்ற பார்வையில் நிறுத்தினாள்.
“ஆங்… சென்னை பொண்ணு அவ்ளோ பெரிய கம்பனிக்கு தலைமை தாங்குதா. மேல சொல்லு.”, என்றார் பர்வதம்.
“இந்த பேச்சு வார்த்தை போன வருஷமெல்லாம் நடந்துகிட்டு இருந்துச்சு. அப்ப ஒரு நாள் அந்தம்மா நைட் ஒன்பது மணிக்கா வீட்டுக்கு கார ஓட்டிகிட்டு வந்து சேர்ந்தா, அவங்க மாமியார் கதவு கிட்டயே நிக்கறாங்க. காலையில பிள்ளைங்களுக்கு குடுக்கறதுகு பால் இல்லை. நீ போய் வாங்கிட்டு வந்துடுன்னு.  உள்ள இந்திரா புருஷன் டீ.வில கால்பந்து விளையாட்டு பாக்கறது இவங்களுக்கு தெரியுது.சீக்கிரமே வந்திருப்பார். சாப்பிட்டு டீ.வி பார்த்துகிட்டு இருக்கார். அவர் கிட்ட சொல்லியிருந்தாலும் போயிருப்பார். மாமியாருக்கு பிள்ளை மேல பாசம், மருமக வரவும் சொல்லிக்கலாம்னு இருந்திருக்காங்க.
வேலை பளு நிறைய இருக்க இந்த நேரம், குடும்பம் அமைதியா போகணும். கோவமோ, சண்டையோ உதவாதுன்னு, இருந்த பசியையும், வந்த எரிச்சலையும் ஓரம் கட்டி வெச்சிட்டு திரும்ப காரை வெளிய எடுக்க போனேன்னு இந்திரா பேட்டில சொல்லிருக்காங்க.”
“எவ்ளோ பெரிய பதவியில இருந்தாலும், எத்தனை பேரை வெச்சு வேலை வாங்கினாலும், மாமியாரை அனுசரிச்சு போகணும்னு தெரிஞ்சிருக்கே. பரவாயில்லை .நல்ல பொண்ணுதான்.அதுக்கு நீ ஏன் சிரிச்ச?”, என்றார் பர்வதம்.
“அவங்க சொன்னதைவிட சொல்லாம விட்டதை யோசிங்க அத்தை. போய் பாலை வாங்கிட்டு வந்திருப்பாங்க. அவங்க மாமியாரும், மகனை தொந்தரவு செய்யலைன்னு சந்தோஷமா போய் படுத்திருப்பாங்க. இந்திரா சாப்பிட்டு தூங்க போகும்போது, அவங்க புருஷன் எதாவது கேட்டா என்னாகும் ? மாமியார் மேல இருந்த எரிச்சல் புருஷன் மேல வந்திருக்கும். கரெக்டா?”, ஆமென்று தலையாட்டினார் பர்வதம்.
“ அவங்க வள்ளுன்னு விழவும், ஆபிஸ் எரிச்சலை எதுக்கு வீட்ல காட்றன்னு புருஷன் கோவிப்பார். இல்லை இந்திராவே மாமியாரைப் பத்தி குறை சொல்லியிருக்கலாம். எப்படியும் சுமூகமா இருந்திருக்காது. இப்ப அவங்க புருஷன் ‘இந்த அம்மாக்கு விவஸ்தையேயில்லை. நான் சும்மாதான் இருந்தேன். எங்கிட்ட சொல்லித் தொலைச்சிருக்கலாம்’,னு அவர் அம்மாவை திட்டுவார். மொத்தத்தில் பிள்ளை மேல பாசத்தைக் காட்டறேன்னு இந்த அம்மாக்களே அவங்க பிள்ளைக்கு சங்கடத்தைத்தான் குடுக்கறாங்க. யாரும் அதுக்கு விதிவிலக்கில்லை போல.அதை நினைச்சுத்தான் சிரிச்சேன்.”, மாலினி சொல்லி முடித்தாள் ஒரு புன்னகையோடே.
“ம்ம்..அந்தம்மா என்னாட்டம் போல. ஒரு விஷயத்துக்கு ஒரு பக்கம்தான் யோசிக்கத் தெரியுது. உன்னாட்டம் படிச்சதோட இல்லாம அதும் பின்னாடி என்ன நடந்திருக்கும்னு யோசிக்கற அளவு எனக்கு தெரிஞ்சிருந்தா, எல்லாத்தையும் என் புருஷன் அவளுங்களுக்கு தூக்கி குடுக்கும்போதும் சும்மாயிருந்திருப்பனா?”, அவர் வட்டத்துக்குள்ளேயே சுற்றி வந்தார் பர்வதம்.
“போனதை யோசிச்சி என்ன பயன்? விடுங்க. மாமா புண்ணியத்தை சேர்த்து வெச்சாருன்னு நினைச்சிக்கோங்க.”, என்று ஆறுதல் சொல்லி சமையலை துவக்கினாள்.
இப்போதெல்லாம், பர்வதம் மருமகளின் அறிவு கூர்மையை உணர்ந்து அவளிடம் கருத்து கேட்க ஆரம்பித்திருந்தார். மகளிடம் பேச்சு குறைந்திருக்கவும், மாலினியைத்தான் எதுவொன்றுக்கும் நாடினார். காயத்ரியைப்போல சுருக்கென்று பேசாமல், மெதுவாக அவர் வேகத்துக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்தாள். அதுவே அவருக்கு அவளிடம் பேச எளிதாக இருந்தது. காயத்ரி பயமூட்டியது போல அதிகாரமெல்லாம் செய்யாமல், இத்தனை மாதத்தில் பெரும்பாலும் அனுசரித்துப்போவது மாலினி மீது ஒரு நம்பிக்கையை வளர்த்திருந்தது. ஆனால், இது எத்தனை நாள் தாங்குமோ. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அன்று மாலை, இளங்கோவனின் நெருங்கிய தோழர் வேணுகோபாலன் மகனிற்குத் திருமணம். வீட்டிற்கு வந்து பத்திரிக்கை வைக்கவும், மாலினியும், ராகவனும் ரிசெப்ஷனுக்குக் கிளம்பினார்கள்.
அங்கே மண்டபத்தில், இளங்கோவனை அவர் சம்மந்தியின் பால்ய சினேகிதர் என்று வேணுகோபாலன் ஒருவரை அறிமுகப்படுத்தினார்.
“இளா… நம்மாட்டமே, தேவராஜ் சாரும் என் சம்மந்தியும். இளா.. ரீஜனல் மானேஜர், என்று அவர் பணிபுரியும் வங்கியின் விவரம் கூறி அறிமுகப்படுத்தியவர், தேவராஜ் சார் TNK பஸ் செர்விசஸ் கேள்வி பட்டிருப்பியே, அதோட ஓனர். இருவது லைன்ல பஸ் ஓடுது இவருக்கு. “, என்று அறிமுகப்படுத்தவும் எதிரில் இருப்பவரின் உயரம் அறிந்து இளங்கோவன் பெரிய புன்னகையுடன் கை குலுக்கினார். 
“உங்க அறிமுகம் கிடை ச்சதுல ரொம்ப சந்தோஷம் சார்.”, என்று இளங்கோவன் சொல்ல, ஒரு அறிமுகப் புன்னகையுடன் நல விசாரிப்பை சில வார்த்தைகளில் நிறுத்திக்கொண்டார் தேவராஜ்.
அதற்கு மேல் பேச எதுவுமில்லாததால் தேவராஜ் விடை பெற எத்தனிக்க, அப்போழுதுதான் பத்தடி பின்னே ராகவன் வருவதைப் பார்த்தவர் , “அட ராகவன் சார். என்ன சர்ப்ரைஸ். இங்க உங்களை எதிர்பார்க்கவேயில்லை.”, என்று பெரிய புன்னகையுடன் அவனிடம் வந்தார்.
“ஓஹ்.. சர் நல்லாயிருக்கீங்களா ?”, என்று அடையாளம் கண்டுகொண்டவன், “என் மனைவி மாலினி.”, என்று அவளையும் அறிமுகப் படுத்தி தேவராஜையும் அவளுக்கு அறிமுகப் படுத்தினான். அதற்குள்ளாக இளங்கோவனும் வேணுகோபாலனும்  வர, “ராகவன் தம்பிதான் இளங்கோவனுடைய மாப்பிள்ளை தேவராஜ் சார்.”, என்று விளக்கினார் வேணுகோபாலன்.
“ஓ… ராகவன் சாரோட மாமனாரா? இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை அமைய குடுத்து வெச்சவர் சார் நீங்க. “, இப்போது இளங்கோவனுடன் தேவராஜ் நட்பாக பேசவும், இளங்கோவனுக்கு முகத்தை எங்கே கொண்டு வைக்க என்று தெரியாமல் முழித்தார்.
அவர் பேசியதைக் கேட்டு சங்கடமான ராகவன், “நாங்க பொண்ணு மாப்பிள்ளையை பார்த்துட்டு வரோம்.”, என்று மேடையை நோக்கி மாலினியை அழைத்துச் சென்றான். சகுந்தலா மகளைப்பார்த்துவிட்டு அருகே வருவதற்குள், இவர்கள் மேடையை நோக்கி சென்றுவிட்டார்கள்.
“ராகவன் தம்பியை உங்களுக்கு எப்படி சார் தெரியும் ?”, என்று வேணுகோபாலன் கேட்கவும்,
“போன வருஷம் டாக்ஸ்க்கு ஆபிஸ்ல வரசொல்லியிருக்காங்கன்னு சொல்லவும், பெர்சென்டேஜ் பேசன்னு நினைச்சு போனேன். அப்ப ராகவன் சார்தான், இதுக்கு முந்தின வருஷத்துல உங்களுக்கு நிறைய அச்செஸ் பண்ணிருக்காங்களே சார். ஏன் க்ளெம் பண்ணலைன்னு கேட்டார். பேரம் படியாததால போட்டு தாளிச்சாங்க சார்னு நானும் விட்டேத்தியாதான் சொன்னேன். இல்லை இது நீங்க திரும்ப வாங்கலாம். நான் சொல்ற பாயின்ட்ஸ் வெச்சி அப்பீல் போடலாம் சார். திரும்ப வரும்னார். அப்பவும் நம்பிக்கையில்லை எனக்கு. திரும்ப வரதுல எவ்வளவு உங்களுக்குன்னு கேட்டேன். அப்பதான் அவருக்கு கோவம் வந்திச்சு. எங்க ஆளுங்க தப்பு செய்யவும்தான் உங்களை கூப்பிட்டு பேசி நிவர்த்தி செய்ய ட்ரை பண்றேன். உங்க காசு எதுவும் எனக்குத் தேவையில்லைன்னார். “
“என்னதான் நடக்குதுன்னு நானும் என் ஸ்டாஃப் வெச்சி அவர் சொன்னபடி க்ளைம் செய்யவும் ஆறு மாசத்துல பணம் வந்துடுச்சு. திரும்ப நானே போனேன். உங்களுக்கு என்ன வேணும் சார்ன்னு. கிட்ட தட்ட இருவது லட்சம் திரும்ப வாங்கிகுடுத்துட்டு, மனுஷன் எதுவுமே வாங்கிக்கலை சர். நான் இரண்டு லட்சம் மனசார குடுத்திருப்பேன். அப்பவும், எதுவும் உதவின்னா எப்ப வேணாலும் கேளுங்கன்னு சொன்னேன். இன்னிக்கு வரை கேட்கலை சர். இவரை பத்தி அப்பறம் விசாரிச்சதுலதான் தெரிஞ்சுது எவ்வளவு சின்சியர்னு. இந்த காலத்துல இப்படி ஒருத்தர் பார்க்க முடியாது சர். பெரிய பதவிக்கு கண்டிப்பா போவார் பாருங்க. இவர் சீனியருங்க பல பேர்கிட்ட அப்பறம் பேசும்போது தெரிஞ்சுது.”, என்று ராகவன் புகழ் பாடிக்கொண்டிருக்க, வேணுகோபாலன் மட்டுமன்றி மாலினியின் பெற்றோரும் ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தனர்.
கிளம்ப வேண்டும் என்ற மனிதர், இப்போது நிஜமான ஆர்வத்துடன் இளங்கோவனைப் பற்றி கேட்டுக்கொண்டிருந்தார். ராகவனும் மாலினியும் திரும்பி வரவும், “உங்களுக்கு இந்த வருஷம்தான் கல்யாணமாச்சாமே ராகவன் சார். வாழ்த்துக்கள். மனைவியோட வீட்டுக்கு வரணும்.”,என்று அழைத்தார்.
“சர்… அது சரி வராது. தப்பா நினைக்காதீங்க. திரும்ப இந்த வருஷம் அசெஸ்மென்ட் நாங்க செய்யறோம். வெளியாளுங்களுக்கு அது வேற மாதிரி தெரியும். உங்க அன்பும் ஆசீர்வாதமும் போறும் சர். “, என்று கை கூப்பினான்.
“உங்க வேலைல நீங்க கரெக்ட் சார்.  எனக்கு புரியுது.  இரண்டு பேரும் சந்தோஷமா இருங்க. “, என்று வாயார வாழ்த்திச் சென்றார்.
“உங்களை பாக்கற வரை விரைப்பா இருந்தவர், நீங்கதான் இளா மாப்பிள்ளைனு தெரிஞ்சதும் அவ்ளோ தன்மையா பேசினார். பெரிய இடத்துல உங்களுக்கு ஒரு விசிறி தம்பி.”, என்று சிரித்த வேணு கோபாலன், யாரோ அழைக்க விலகிச் சென்றார்.

Advertisement