Advertisement

“ஷ்… எல்லாரும் திரும்பி பார்க்கறாங்க விஜய். என்ன கேட்டேன்னு இப்படி ஒரு சிரிப்பு.”, ஷாலினி அதட்டினாள்.
“நீ… நீ இவன் ப்ரபோஸ் பண்ணான்னு எப்படி… எப்படி ஷாலு நினைக்கலாம் ? என் விஜய் சிரித்துக்கொண்டே கிண்டலடிக்க,
“டேய்… அதான் நம்பறா மாதிரியே இல்லைன்னு ஷாலு சொல்லுதில்ல, இன்னும் நீ ஏன் ஏத்திவிடற…”, ராகவன் புன்னகையோடே அடக்கினான்.
“அப்ப… மாலினி, நீ முதல்ல சொன்னியா ? வாவ். உங்க கதை எனக்கு கேட்டே ஆகணும். சொல்லுங்க….”, என்ற ஆர்வத்தை சர்வர் அவர்களது உணவுகளைக் கொண்டு வந்து வைத்து இடைமறிக்க, அவர் போனதும் உடனே ஆரம்பித்தாள்.
“சொல்லு மாலினி. ஏன் அண்ணா சொல்ற வரை வெயிட் பண்ணலை?”
“ம்க்கும்… அப்படின்னா …நான் இன்னமும் வெயிட் பண்ணிட்டேதான் இருக்கணும். நெஞ்சு நிறைய ஆசை இருந்தாலும் வாயை திறக்கவேயில்லை. கல்லுளி மங்கன்.”, கணவனை நொடித்தபடியே அவன் தட்டில் நானை வைத்து, மட்டர் பன்னீரை பரிமாறினாள்.
“எங்க கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை மாலினி. ஒரு வாட்டி எங்க வீட்ல ரமேஷும் இவனும் தங்கினாங்க. நைட் மூவி பார்க்கலாம்னு புது டிவிடிஅயர்ன் மேன் -2 எடுத்தா, கூட இருந்த கிங்க்ஸ் ஸ்பீச் பார்த்துட்டு,’டேய் இதை பார்க்கலாம்டா. நல்லாருக்குன்னு மாலினி சொன்னா.’,ங்கறான். ரமேஷ் யாருடா உங்க ரிலேஷனான்னு கேட்க, முகம் ஒரு மாதிரி  போக, ‘ம்ம்.. இல்லைடா ப்ரெண்டு’,ன்னான்.
அப்பவும்,  ‘ட்ரான்ஸ்பர்ல வந்த ஆன்ட்டிதான ? உன் ப்ரெண்டெல்லாம் வேற யாரு?’, னு ரமேஷ் கேட்க,
“டேய்… சின்னவங்கதான். எங்க ஆபிஸ் ரேவதியோட ப்ரெண்டு. இப்ப எனக்கும் ப்ரெண்டாகிட்டாங்கன்னு, திக்கி திணறி சொல்லும்போதே நாங்க அப்படியே நெஞ்சை பிடிச்சிகிட்டோம். பய நெளியறதுலயே தெரிஞ்சிடுச்சு. சிக்கிட்டான்னு.
அப்பறம் வளைச்சு வளைச்சுக் கேட்டாலும் நீ சொன்னியே அதே கல்லுளிமங்கனாட்டம்தான் இருந்தான். அப்பறம் கிட்டதட்ட ஒரு மாசம் அவனை கலாய்ச்சிகிட்டு இருந்தோம். ‘எப்படி மச்சி  இருக்காங்க உன் ஆளு ? என்ன சொன்னாங்க’,ன்னு கேட்டா ஒரு சிரிப்பு வரும். ‘என் ஆளு எல்லாம் இல்லைடா. அவங்க ரேஞ்சே வேற. நானா வீணா கற்பனை செய்யக்கூடாது.’,ன்னு மறுபடி சன்னியாசி மோடுக்கு போயிருவான்.
அப்பறம்தான் ஒரு நாள் திடீர்னு போன் செஞ்சு, ‘நான் ரமேஷோட வரேன்.நைட் அங்கதான் மச்சி’,ன்னு சொல்லிட்டு வந்தான். அப்பத்தான் தெரியும் நீ அவங்கிட்ட ப்ரபோஸ் பண்ணதே.”, மாலினிக்கே  இதெல்லாம் புதிய செய்தியாக இருக்க, அவளும் ஷாலினியோடே கதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
‘கதை கேட்க ஒருத்தருக்கு ரெண்டு பேர் சிக்கிருக்கீங்க. இனி இவனை நிறுத்த முடியாது’, என்று தெரிந்த ராகவன் மெதுவாக மாலினியைப் பார்த்தபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
“இருங்க. நீ சொல்லு மாலினி. ஏன் நீ முதல்ல சொன்ன? என்னன்னு சொன்ன ?”, ஷாலினி கதையை கோர்வையாக கேட்க ஆசைப்பட்டு  மாலினியைக் கேட்டாள்.
“ஓரு மாசம் கிட்ட நான் அவரை பார்க்கத்தான் வரேன்னு தெரியும். அவர் மேல எனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்குன்னு புரியற மாதிரிதான் இருந்துச்சு. ஆனாலும், லன்ச்ல நான் வரேனான்னு வாசலை பார்த்துகிட்டு இருப்பார். வந்தா பளிச்சுன்னு ஒரு ஸ்மைல் வரும். பேசுவார். ஆனா அதை தாண்டி ஒரு பேச்சு, செயல்னு எதுவும் இருக்காது. ஆனாலும் நான் வராட்டி, ‘இன்னிக்கு ராகவன் முகமே சரியில்லைடின்னு’, ரேவதி போன் செய்து சொல்லுவா.”, மாலினி சொல்ல, அந்த திரிசங்கு சொர்க்க நாட்களின் நினைவில் ஒரு நெகிழ்ந்த பார்வையை மாலினியின் புறம் செலுத்தினான்.  அதைக் கண்டு அவன் புறம் ஒரு புன்னகையை சிந்தியவள்,
“இப்படியே இருந்தா சரி வராதுன்னு ஒரு நாள் சாயந்திரம் அவர் கிளம்பற நேரம் வந்து, காபி சாப்பிட வாங்கன்னு கூட்டிட்டு போனேன். அங்க வெச்சு, உங்களை பிடிச்சிருக்கு, கல்யாணம் செய்ய விரும்பறேன் சொன்னேன். “, மாலினி நிறுத்த, விஜய் இடைபுகுந்தான்.
“ஷாலு பேபி, இப்படி ஒரு விஷயம் அவன் ரொம்ப விரும்பற பொண்ணு வந்து சொன்னதும், ஐயா ஒகே சொல்லிட்டான்னு நீ தப்பா நினைக்கக்கூடாது. என் நண்பன் சாதாரண மனுஷனே இல்லை… அவர் ஒரு பெரிய….”, விஜய் நிறுத்த,
“சொல்லுடா.. பெரிய என்ன ?”, ராகவனே உந்த,
“ஆங்…. பெரிய மாங்காமடையன்.”, பழைய கடுப்பில் கடிந்தான் விஜய்.
“ஏன் மாலினி? என்ன சொன்னார் அண்ணா? பிடிக்கலைன்னு சொல்லிட்டாரா?”, திகைத்துப்போய் ஷாலினி கேட்க,
“ம்க்கும்… பாருங்க, எனக்கு இத்தனை பொறுப்பு இருக்கு, இவ்வளவு கடன் இருக்குன்னு பட்டியல் போட்டார். உங்க அளவுக்கு வசதியெல்லாம் இல்லை. இதுக்கப்பறமும் உங்களுக்கு என்னை கல்யாணம் செய்யணுமான்னு யோசிங்க. “ன்னு சொல்லிட்டு எழுந்து போயிட்டார். நான் தான் ‘இப்ப என்ன சொல்ல வராரு?’ன்னு  பேக்கு மாதிரி முழிச்சிகிட்டு இருந்தேன்.”, மாலினி அன்றைய நினைவில் ராகவனைப் பார்த்து உதட்டைச் சுழித்துவிட்டு சாப்பாட்டைத் தொடர்ந்தாள்.
“அங்க வீரா வேசமா பதிலை சொல்லிட்டு, எங்க கிட்ட வந்து சொன்னதும், ரமேஷ் போட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டான். நான் தான் விலக்கி விட்டேன்.”, விஜய் சொல்ல,  “டேய் நீயும்தான் சேர்ந்து கும்மின. உண்மையை சொல்லு.”, என்று திருத்தினான் ராகவன்.
“பின்ன கொஞ்ச சொல்றியா? ஒரு மாசம் ஷாலினி, இவன் உருகிட்டு இருக்க, இப்ப மாலினியே ஒகே சொல்லும்போது இப்படியா சொதப்புவான்?  கண்ட மேனிக்கு திட்டினா, ‘இல்லைடா அவ இடத்துலர்ந்து யோசிங்க. என்னைவிட வசதியான இடத்துல மாப்பிள்ளை பார்ப்பாங்க அவ வீட்ல. என்னோட சேர்ந்து, இந்த புதைகுழியில அவளையும் இழுக்கணுமா? பட்டாம்பூச்சியா இருக்காடா. ‘ன்னு கவிதை பேசறான். அதை கேட்டு எங்களுக்கே பாவமா போச்சு.”
“அப்பறம்?”
“ஒரு வாரம் நாங்க போன் பண்ணாலும் சரியா பேசறதில்லை. ‘ஒன்னும் இல்லை மச்சான். அவளதான். அவ வரலை’,ன்னு ஒரே சோகம். அந்த சனிக்கிழமை போய் இவனை இழுத்திட்டு வந்தேன் நம்ம வீட்டுக்கு. அன்னிக்குத்தான் அவன் எவ்ளோ டீப்பா லவ் பண்றான் மாலினியைனு தெரிஞ்சுது. எத்தனையோ கஷ்டம் வந்தப்போவெல்லாம் அவன் கூட இருந்திருக்கோம். அப்பல்லாம் கூட வருத்தப்படுவானே தவிர புலம்பினதேயில்லை.
ஒரு நேரம், ‘என் சுயனலத்துக்காக அவளை கஷ்டப்படுத்தக்கூடாதுடா’,ன்னு சொல்லுவான். அடுத்த நிமிஷமே, ‘தப்பு செய்திட்டேனா? என்னை பத்தி சொன்னதோட, எனக்கு அவளை எவ்வளவு பிடிக்கும்னு சொல்லிருக்கணுமோ?’,ன்னுவான்.  நாங்க எதுவும் பதில் சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ள, “இல்லைடா அது எமோஷனல் பிளாக்மெயில் மாதிரி ஆகிடும். எனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னா, அப்ப அவ மத்த எதையும் யோசிக்க மாட்டா. நான் செஞ்சது சரிதான்’னு அவனே சொல்லிப்பான்.”, அன்றைய நினைவில் இன்றும் சிலிர்த்துக்கொண்டான் விஜய்.
“இவன் புலம்பல் தாங்காம  எங்களுக்கு ரெண்டு பீர் பாட்டிலை திறந்தான் ரமேஷ். அப்பதான் முதல் முறையா அந்த பாட்டிலையே குடிக்கவான்னு ஒரு யோசனையா பார்த்தான். அவங்க அப்பா இறந்த அப்பறம், இந்தாடா  பீர் குடி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்ன்னு நான் குடுத்தப்போ கூட அசராதவன், அன்னிக்கு பாட்டிலைப் பார்க்கவும் நானே மிரண்டுட்டேன். ‘ம்ச்சி இதுல இல்லை சொல்யூஷன். நீயே போய் பேசுடா மாலினிகிட்ட. அதுவரைக்கு அவங்க வர மாட்டாங்க.’,ன்னு கன்வின்ஸ் செஞ்சு பீரை ஒளிச்சு வெச்சோம். என்ன ப்ரச்சனை வந்தாலும் நிதானத்தை இழக்காதவன், அன்னிக்கு கலங்கிப்போய் நின்னது மறக்கவேமுடியாது.”
விஜய் சொல்லச் சொல்ல, மாலினி பக்கவாட்டிலிருந்த ராகவனின் கைகளை அழுந்தப் பற்றியிருந்தாள். இருவர் முகத்திலுமே அன்றைய வேதனையின் எச்சங்கள் இருந்தது. மாலினிக்கு இவ்வளவு நடந்ததெல்லாம் தெரியாது. வருத்தப்பட்டிருந்தான் என்பது மறுமுறை பார்க்கும்போதே தெரிய, அவனும் விரிவாக சொல்லவில்லை அப்போது.  
ஷாலினிதான் ஆவென்று விஜய்யைப் பார்த்திருந்தாள்.
“Still waters run deep, (அமைதியான நீர் நிலையின் ஆழம் அதிகம்) பழமொழி உங்களுக்கு ரொம்ப பொருத்தம் அண்ணா. அப்பறம் நீங்க போய் பேசினீங்களா மாலினிகிட்ட?”, கதையை அவன் வாயிலாக கேட்க ஆசைப்பட்டவளாக ஷாலினி ராகவனிடம் கேட்க,
“ம்ம்… உடனே இல்லை. அடுத்து ஒரு வாரமும் வெயிட் பண்ணேன். எனக்குள்ளயே நிறைய போராட்டம். ஆனா மாலினி இல்லாம கண்டிப்பா என்னால வேற ஒருத்தியை மனைவியா நினைக்க முடியலை. கூடவே, என் நிலைமை இப்படியேவா இருந்திரும்ன்னு நிறைய கணக்கு போட்டேன். ஆனாலும் அடுத்த வாரமும் மாலினி வரலைன்னதும் ரொம்ப தவிச்சேன். ரேவதிகிட்ட மாலினியை வர சொன்னா, கொஞ்சம் நேரத்துல, ‘அவ ஆஃபீஸ் கிட்ட இருக்க காபி ஷாப்புக்கு உங்களை வர சொல்றா.’,ன்னு ரேவதி சொல்றாங்க.”, ஒரு புன்னகையுடனே கூறினான்.
“கரெக்ட்தான? அவ உங்களைத் தேடி வந்து கேட்டால்ல? “, ஷாலினி சொல்லவும், ஆமோதித்தவன், “அதனாலதான் நானே போய் மன்னிச்சிடுமா, என்னை ஏத்துக்கோ, கைவிட்டுடாதேன்னு சரணாகதியாகிட்டேன்.”, என்று சிரித்துக்கொண்டே, பற்றியிருந்த மாலினியின் கைகளைத் தூக்கிக் காண்பித்தான்.
“அப்படியா மாலினி? “, ஷாலினி கேட்கவும், சிரித்துக்கொண்டே, “ம்ம்…கிட்டதட்ட் அப்படித்தான். நாந்தான் நிறைய பேசி சரி கட்டினேன் அதுக்கப்பறம்.”, கதையோடு சாப்பாடும் முடிந்திருக்க, பில்லைக் கட்டிவிட்டு விடுதிக்குத் திரும்பினார்கள்.
சற்று நேரம் தூங்கிவிட்டு மாலை வெளியில் செல்ல முடிவெடுத்து  அவர்கள் அறைக்கு வந்தார்கள். ராகவன், மாலினி இருவரும் அவர்கள் கதையை திரும்பிப் பார்த்தில் உணர்வுகளின் பிடியில் இருந்தார்கள்.
அறையிலிருந்த திண்டில் அமர்ந்து, மாலினியை அணைத்தபடி அவள் தலையில் தன் மோவாயைப் பதித்திருந்தவன், “மயிலு….  உனக்கு ஒரு சிறப்பான வாழ்க்கையைத் தரணும்னு நினைக்கறேன்….அது இன்னும் முடியலையேம்மா… “, என்று குரல் கம்ம வேதனையாக சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். இப்படி என் மேல பித்தா இருக்க ஒரு புருஷன் கிடைக்க நான் எவ்வளவு குடுத்து வெச்சிருக்கணும் ரகு. பெரிய வீடு, கார் எல்லாம் வாங்கலாம் . நீங்க நினைச்ச மாதிரி எனக்கு செய்யலாம். அதுவும் நடக்கும். நம்புங்க ரகு. அப்பவும் அதெல்லாம்விட உங்க அன்பும், காதலும்தான் எனக்கு பெருசா தெரியும். “, என்று அத்தனை நம்பிக்கையுடன் கூறும் அவளின் விழிகளில் விரும்பியே தொலைந்துபோனான்.
திண்டில் அமர்ந்தபடியே ஆரம்பித்த தேடல் கட்டிலுக்கு இடம் பெயர்ந்து தீவிரமாக, கடைசி நேரம் சுதாரித்து, “ரகு… ப்ரொடெக்ஷன்…அங்க ட்ராயர்ல.”,என்று திணற,  மறுத்துத் தலையசைத்தவன்,
“இல்லை. இனி எதுக்காகவும், யாருக்காவும் நம்ம குழந்தை காத்திருக்கப் போறதில்லை. இன்னிக்கு உதிச்சாலும் சந்தோஷம்தான் மயிலு. ஒரு குட்டி மயிலு வேணும் எனக்கு.”, என்று அவள் கைகள் பற்றித் தொடர மாலினியின் கண்களில் சந்தோஷப் பன்னீர். அதைக் கண்டவன் கண்களும் திரையிட்டது., நொடியும் அவள் முகம் மறைக்க விரும்பாதவனாக இமை சிமிட்டி,  அவள் விழிகளுடனும் சேர்ந்தே கலந்தான்.

Advertisement