Advertisement

அத்தியாயம் – 20
பொங்கல் அன்று காலை, பாலைக் காய்ச்சி, சீராக வந்த வெங்கலப் பானையில் வீட்டின் மருமகளாக ஆறு மணிக்கெல்லாம் பொங்கலைப் பொங்கி இறக்கினாள் மாலினி.  எளிமையாக கரும்பு, மஞ்சள், பச்சை காய்கறிகளுடன், பொங்கலை வைத்துப் படைத்துவிட்டு, தாய் வீட்டிற்கு ராகவனுடன் கிளம்பினாள்.
விக்ரமும் பர்வதமும், காயத்ரி வைத்துக்கொடுத்தது இன்னும் இருக்க அதை அணிந்திருந்தார்கள். மாலினி தனக்கு எளிமையாக ஒரு பருத்தி சேலை எடுக்க, அதே வெளிர் பச்சை கரையிட்ட வேட்டி, அதே நிற பருத்திச் சட்டையில் சுற்றிப்போடும்படி இருந்தது அவர்கள் ஜோடிப் பொருத்தம்.
இருவரும் சென்று இறங்கும் நேரம், வாசலருகில் பொங்கல் பானையுடன் போராடிக்கொண்டிருந்தார் சகுந்தலா. ஸ்டவ்வில் பொங்குவதை இளங்கோவன் விரும்புவதில்லை. இன்று மட்டுமாவது பாரம்பரியமாக செங்கல் அடுப்பு வைத்து செய்ய வேண்டும் என்பார்.
அவள் வரவும், கீழ் வீட்டில் இருந்த மாமி, “வாடியம்மா, வருஷா வருஷம் நீ இருந்து பொங்கிடுவ, இன்னிக்கு உங்கம்மாவால குனிஞ்சு, நிமிர்ந்து பார்க்க முடியலை. அஷ்வினும் கண்ணு எரியுதுன்னு ஓடிட்டான். “, என்று வரவேற்றார்.
வந்தவள், “தள்ளுமா, நீ பூஜை வேலையைப் பாரு. இறக்கி வெக்கிற நேரம் வந்தா போறும். நான் பார்த்துக்கறேன்.”, என்று ஏற்றுக்கொண்டாள்.
ராகவனை வரவேற்ற சகுந்தலாவும், நிம்மதியாக கரண்டியை மாலினியிடம் கொடுத்துவிட்டார். தான் வாங்கிக் கொடுத்த துணிகளை உடுத்தி வரவில்லை என்று சகுந்தலா யோசிக்க,
“ஒரே கலர்ல எடுத்திருக்கேள் பொங்கல் துணி, அழகா இருக்கு. அமோகமா இருங்க. அடுத்த வருஷம் மூணு பேரா பொங்கல் வைக்கணும். சுத்திப் போடுங்க சக்கு.”, என்று இருவரையும் வாழ்த்திவிட்டு சென்றார் கீழ் வீட்டு மாமி. எப்போதும் போல சுருக்கென்று தைத்தது ராகவனுக்கு.
அஸ்வின் எட்டிப்பார்த்தவன், இவர்களைக் கண்டதும் வரவேற்று, “வாங்க மாமா. நாம போலாம். அக்கா இங்க பார்த்துப்பா.”, என்று அழைத்துக்கொண்டு போனான். மேலே மாமனார் வரவேற்க, இரண்டொரு நிமிடம் பேசியவன்,
“வா அஸ்வின், உங்க அக்கா தனியா இருக்கா. அங்க போகலாம்.”, என்று எழுந்துவிட்டான்.
“காபி குடிச்சிட்டு போங்க ராகவன்.”, என்ற மாமனாரிடமும்,”இல்லை. இப்பதான் வீட்ல பூஜை முடிச்சு ப்ரசாதம் ஆச்சு. இப்ப எதுவும் வேண்டாம் சர்.”, என்றதோடு இறங்கிவிட்டான். உடன் அஷ்வினும்.
அவர்கள் திரும்பிப் போகும்போதே புகையில்லாமல் தீ எரிந்துகொண்டிருக்க, பொடித்த வெல்லமும் நெய்யும் சேர்த்து கிளறிக்கொண்டிருந்தாள் மாலினி. அவள் பொங்கல் வைக்கும் அழகையும்,இருவருமாக பொங்கல் பானை கிளறுவது போல, மாமனும் மச்சானுமாக கரும்புடன் என்று விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ, வீடியோ என்று எடுத்துத் தள்ளினார்கள் ராகவனும், அஸ்வினும். அன்று தலை தீபாவளியில் கிடைக்காத சந்தோஷம், இன்று பொங்கலில் கிடைத்தது.
இம்முறை மாலினியின் மிரட்டல் நன்றாகவே வேலை செய்திருந்தது பெற்றோரிடம். ஒரு வார்த்தை மிகையில்லை அவர்கள் பேச்சில். பூஜை முடிந்ததும், மாலினியே ஒரு தட்டில் சிறிது பொங்கலையும் ஒரு வடையையும் வைத்துக் கொடுத்தாள் கணவனிடம். கூடவே அஷ்வினுக்கும், இளங்கோவனுக்கும்.
இதுதான் தீபாவளிக்குப் பிறகு இந்த வீட்டில் ராகவன் வருவதும், சாப்பிடுவதும். அவளை ஒரு பார்வை பார்த்த ராகவன், மெல்ல சாப்பிட, மாலினியும் தனக்கு ஒரு சிறிய தட்டில் வைத்து சாப்பிட்டாள்.
“இன்னும் கொஞ்சம் வை மாலினி.”, என்று சகுந்தலா வந்த போதும். அங்கையும் இதேதாம்மா. ஊருக்கு வேற கிளம்பணும். போறும். பிரசாதம்னு சாப்பிட்டாச்சு.”, புன்னகையோடே எழுந்துவிட்டாள். அடுத்த பத்தாவது நிமிடம் இருவரும் கிளம்பிவிட்டார்கள். இம்முறை அஸ்வினுக்கு மட்டும்  ராகவனைப் போலவே, ஆனால் வெளிர் ஊதாவில் வேட்டி சட்டையை கொடுத்துவிட்டு கிளம்பினாள்.
தெள்ளத் தெளிவாய்,’மகள் என்ற கடமை உண்டு. அதே நேரம் கொடுக்கும் மரியாதை மட்டுமே திரும்ப வரும்’, என்பதையும் சொல்லாமல் சொல்லிச் சென்ற மகளைப் பார்த்து நின்றார் இளங்கோவன்.
எல்லா குடும்பப் பிடுங்கல்களையும் சென்னையிலேயே விட்டுவிட்டு ஒரு வழியாக விஜய் ஷாலினியுடன் ஏற்காடு சென்று கொண்டிருந்தார்கள். ஷாலினி வீட்டில் அனைவருக்கும் சேர்த்து பொங்கல் விருந்து சாப்பாடு கட்டியனுப்பியிருந்தார்கள். அதையே போகும் வழியில் நிறுத்தி உண்டுவிட்டு வண்டி NH ரோட்டில் பறந்தது. புது பாட்டுகள் இசைக்க, ஒருவர் மாற்றி ஒருவர் கேலி கிண்டலுடன் இரவு ஏழு மணிபோல வந்தடைந்தார்கள். இரவு உணவையும் முடித்து கெஸ்ட் ஹவுஸ் வர எட்டாகியிருந்தது.
அழகானதொரு சிறிய வீடு போலிருந்தது அந்த தங்கும் விடுதி. ஒரு வீட்டிற்கான அனைத்து வசதிகளுடன் இருந்தது. வெளினாட்டில் இருக்கும் கிளையன்ட் வாங்கிப்போட்டிருக்கிறார். அதை சீசனில் வாடகைக்கு விட முடிவு செய்தவராக விஜயின் தந்தையிடம் சொல்ல, பார்த்துவிட்டு சொல்லுமாறு விஜய்யிடம் வந்தது இந்த வேலை. வீட்டை அவ்வப்போது வந்து பராமரிக்கும் மணி சுற்றிக் காண்பித்து, சாவியை ஒப்படைத்துச் சென்றார்.
பாத்ரூமுடன் மூன்று படுக்கையறைகள் மேல் மாடியில். பொதுவாக ஒரு கூடம்.கீழ் தளத்தில் விசாலமான வரவேற்பறை, பத்து பேர் அமரக்கூடிய உணவு மேசையுடன் ஒரு டைனிங் ஹால், அடுத்தாற் போல விசாலமான சமையலறை. பாத்திர பண்டங்கள், அத்தியாவசிய  தேனீர், காபிக்கான பொருள்கள் இருந்தது.
சுற்றிப் பார்த்து, வீட்டின் அலங்காரத்தையும் அமைப்பையும் பற்றி சிலாகித்தபடியே இரு ஜோடிகளும் ஆளுக்கு ஒரு அறையை தேர்வு செய்தார்கள்.
“காலைல பார்க்கலாம்டா மச்சான். “, என்று விஜய் விடைபெற உள்ளே வந்த ராகவன்,  “மயிலு….”. என்று கட்டிக்கொண்டான்.
“அம்பி ரெமொவாகறாரோ ?”, மாலினி கிண்டலடிக்க,
“ம்ம்.. ரெமோவுக்கே அப்பனாகிறேன்.”, சபதத்தோடே அவளைத் தூக்க,
கலகலத்துச் சிரித்தவள், அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “ ம்ம்…அப்படியா ? “,என்று ஒற்றைப் புருவம் தூக்கியவள், “பாத்ரூமல இறக்கிவிடுங்க. குளிச்சிட்டு  வந்து அதையும் பாக்கறேன்.“, என்றாள்.
“மயிலு… குளிச்சிகிட்டே கூட பார்க்கலாம்டி. ”, என்று சொன்னபடியே குளியலறையை நோக்கி நடக்க, முகம் சிவக்க, கண்கள் விரிய அவனைப் பார்த்தவள் பதில் பேசும் முன் சிறையிட்டிருந்தான் அவள் இதழ்களை.
காலையில் ஐந்தரை மணிக்கு அவள் போன் அலாரம் அடிக்க,  “அலாரத்தை இன்னும் நாலு நாளைக்கு ஆஃப் பண்ணுமா.”, என்றபடியே அவன் புறமிருந்த மேசையில் இருந்த போனை அணைத்தான்.
“நாலு நாள் ஆறு மணிக்கு வாசல் தெளிச்சு அடெண்டென்ஸ் போட வேணாம்..ஜாலி.”, என்று ரஜாய்க்குள்ளிருந்த படியே அவனை கட்டிக்கொண்டு குதுகலமாகச் சொன்னாள் மாலினி.
“ஹ ஹா… காலை அடெண்டென்ஸ் உண்டு மேடம், வாசலுக்கு இல்லை. எனக்கு!”, அதே குதூகுலத்துடன் ராகவன் சொல்ல, “அடப்பாவி…”, என்ற வார்த்தைக்கு மேல அங்கே பேச்சுக்கள் இல்லை.
காலையில் ஒரு வழியாகக் கிளம்பி வந்து மாலினி காபி போட்டுக்கொண்டிருக்க, சாப்பாட்டு மேஜையில் அவள் புறம் பார்த்து நின்றபடி போனைப் பார்த்துக்கொண்டிருந்தான் ராகவன்.
“மார்னிங்டா… மார்னிங் மாலினி.”,  விஜய் காலை வாழ்த்துடன் வர, இருவரும் முகமன் கூறினார்கள்.
“என்ன அப்படி போன்ல? சிஸ்டரோட சில்மிஷம் பண்ணிட்டு இருப்பியோன்னு நான் அங்கிருந்து குரல் குடுத்துகிட்டு வந்தா, இங்க பத்தடி தூரத்துல இருக்க? சாம்பாரு…சாம்பாரு.”, விஜய் ராகவனை மென் குரலில் கண்டித்தான்.
“டேய்…அதுக்குன்னு தொத்திக்கிட்டேவாடா இருக்க முடியும்? காபி போடற பத்து நிமிஷம் அவ ஃப்ரீயா இருக்கட்டுமே.”, ராகவன் சிரிக்க,
“ஆமாம், இல்லைன்னா நீ உரசிகிட்டேதான் இருப்ப. தெரியாதா எனக்கு. மாலினியை இன்ட்ரோ குடுக்க அழைச்சிகிட்டு வந்தப்போகூட நாலடி தள்ளித்தான் இருந்த.”
“டேய் அப்போ வீட்டுக்கே விஷயம் தெரியாதுடா… “, ராகவன் இன்னும் விரிய புன்னகைக்க, இவர்கள் சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டே வந்த ஷாலினி, “ ஆமா உங்களை மாதிரியா எல்லாரும் இருப்பாங்க. நேத்து அம்மா முன்னாடியே இடுப்புல கைபோட்டு கிட்ட இழுக்கறார் அண்ணா.  வேகமா கிச்சனுக்குள்ள போனவங்கதான். நான் உள்ள போற வரை வெளிய வரலை.”, கணவனை முறைத்தாள் ஷாலினி.
 மாலினி எடுத்து வந்த காபியை நன்றியுடன் வாங்கி கணவனிடம் கொடுத்துவிட்டு, “நீ இரு மாலினி, நமக்கு நான் எடுத்திட்டு வரேன்.”, என்று சென்றாள்.
“நான் வரவாமா ஹெல்புக்கு?”, என்று எழுந்த விஜய்யை முறைத்து, “அண்ணா, இவருக்கு கொஞ்சம் க்ளாஸ் எடுங்க. ப்ளீஸ். இவர் பாட்டு வெக்கமேயில்லாம கொஞ்சறார், எனக்குத்தான் சங்கடமாகிடுது. எங்க வீட்லன்னுல்லை, அத்தை மாமா இருக்கும்போதும் இப்படித்தான் செய்யறார்.”, புகார் வாசிக்கும் ஷாலினியைப் பார்த்து ராகவனும் மாலினியும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
“ஒரு வாட்டி, உங்க அத்தை முன்னாடி, நீ இப்படி எதாவது அவரை செய் ஷாலு. அத்தோட நிறுத்திருவார். என்ன அண்ணா? சரிதான?”, மாலினி ஐடியா தரவும்.
“நீ வேற, சும்மாயிருக்கவனுக்கு சலங்கை கட்டினாப்பல ஆகிடும்.”, ராகவன் தடுத்தான்.
காபியுடன் ஷாலினி வந்தவள், “ பாருங்க, அவருக்கும் இதுக்கும் சம்மந்தமேயில்லாத மாதிரி சிரிச்சிகிட்டு இருக்கறத…”, என்று புகைந்தாள்.
“அவனை அடக்கணும்னா, இது உன்னை பாதிக்காத மாதிரி இரு. நீ இப்படி பொரியறதனாலதான் மேல மேல செய்யறான்.கொஞ்சலை ஓரம் தள்ளிட்டு நீ பாட்டு செய்யற வேலையை செய்.”, ராகவன் நண்பனின் குணாதசியத்தை விளக்கவும், “டேய்… டேய்…ஏன் மச்சான்… என் சந்தோஷத்த கெடுக்கற…”, விஜய் இடைபுகுந்தான்.
“அதுக்கு ஷாலினியை வெறுப்பேத்துவியா ?”
“அய்ய… அப்படியெல்லாம் இல்லை. மேடம் வெளியில முறைச்சாலும் உள்ளுக்குள்ள பிடிக்கும்தான். இல்லைன்னு சொல்லச் சொல்லு பார்க்கலாம்? அவங்க அப்பாவே அத்தையை டார்லிங்ன்னு என் முன்னாடியே கூப்பிடுவார். அப்ப நான் இன்னும் ரெண்டடி எக்ஸ்ராவா பாயணும் இல்ல ?”, விஜய் பஞ்சாயத்தைக் கூட்ட ஷாலினிக்குத்தான் வெட்கத்தில் முகம் சிவந்தது.
இப்போது ராகவன் முழிக்க, “இதுக்குத்தான் புருஷன் பொண்டாட்டி சச்சரவுக்குள்ள, வெளியாள் சமரசம் செய்யப் போகக் கூடாதுங்கறது.”, மாலினி ராகவனை கலாய்த்தாள்.
ஒரு வழியாகக் கிளம்பி சேர்வராயன் மலைத் தொடரில் இருந்த புகழ் பெற்ற கிளியூர் அருவிக்குச் சென்றார்கள். மலைகளில் சற்று உள்ளே நடக்கவேண்டுமாதலால் , உடன் மணி ஏற்பாடு செய்தவர் வழிகாட்டியாக வந்தார். அனைவருமே ஷூக்கள் அணிந்து மலையேற்றத்திற்கு ஏதுவாக உடையணிந்திருந்தனர்.
ஒரு வழியாக சுற்றிப் பார்த்து மதியம் ஒரு உணவகத்தில் வந்து இளைபாற, ஏதோ பேச்சு வாக்கில் ஷாலினிதான், “அண்ணா…உங்களைப் பார்த்தா லவ் பண்ணி கல்யாணம் செய்யற மாதிரியே இல்லை. எப்படி மாலினியைப் பார்த்து ப்ரபோஸ் செஞ்சீங்க ?”, என்று ராகவனிடம் கேட்க, விஜய் சத்தமாக சிரித்துவிட்டான்.

Advertisement