Advertisement

“அதுக்கென்ன, தாராளமா வாங்க.”, ராகவன் கூறவும், அதற்கு மேல் என்ன பேச என்று தெரியவில்லை அவருக்கு. ஒரு வார்த்தைக்காகக் கூட அதெல்லாம் எதுக்கு நாங்கள் வருகிறோம் என்று சொல்லவில்லை. அப்படி எதாவது சொல்லுவான் என்ற ஒரு எதிர்பார்ப்பில்தான் அவனுக்கு அழைத்திருந்தார். இவர்கள் போய் அழைத்தும் இன்னும் ராகவன் வரவில்லை. இதில் மறுபடியும் தானே போகவேண்டுமா என்று அவருக்கு ஒரு குமைச்சல்.
ஒரு சிறிய அமைதிக்குப்பின், “சரி. நீங்க பாருங்க. நான் வெச்சிடறேன்.”, என்று முடித்துக்கொண்டார்.
‘ஹ்ம்ம்… மாலினி சொன்ன மாதிரி, கெத்து காட்டணும் போல. நல்லதுக்கே காலமில்லைடா ராகவா.’, என்று நினைத்துக்கொண்டே வேலையைத் தொடர்ந்தான்.
அன்று இரவு, சம்மந்தி வருவதை பர்வதத்திடம் சொன்னவன், தாங்கள் பொங்கல் அன்று காலை விஜய், ஷாலினியுடன் ஏற்காடு கிளம்புவதாகவும் கூறினான்.
பர்வதம்மாவிற்கு தாளவில்லை. “ஏன் ராகவா ? போன மாசம்தான காயத்ரிக்கு ஒரு வெள்ளித் தட்டு வைக்கக்கூட காசில்லைன்னு அந்த கோவப்பட்ட? இப்ப மாலினிக்கு போனஸ் வந்துச்சுன்னா அதை இப்படி கரைக்கணுமா?”
அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், நிமிர்ந்து, “ஏன் அடுத்த மாசம் காயத்ரி கல்யாண நாளுக்கு பட்டுபுடவை வாங்கி அனுப்பணுமா? “, என்று நக்கல் அடித்தான்.
“இல்லைடா… அது ஏற்கனவே நிறைய செலவாயிட்டுதே, கொஞ்சம் இப்படி மிச்சம் பிடிச்சா கடனை….”, அவனது கனல் பார்வையிலேயே அவர் குரல் தேய்ந்து நின்றது.
“ஆமா, சம்பாதிக்கறதை எல்லாம் வழிச்சி வாரி உங்க பொண்ணுக்கே செலவு செய்யறோம். அதென்ன சொல்லுவீங்க, நம்ம ரசம் சாதம் கூட சாப்பிட்டுக்கலாம், அவளுக்கு செஞ்சிடணும்னு.  அதான், நாங்க போயிட்டு வர செலவை அடுத்த மாசம் ரசம் சாதம் வெச்சி சமாளிச்சிக்கலாம்.”
“மாலினி, நீயாவது எடுத்து சொல்லக்கூடாதாம்மா ?”
“என்னத்தை சொல்ல சொல்றீங்க ? அவருக்கு தெரியாதா?”
“ஆமா.. புருஷனுக்குத் தெரியாதான்னு நினைச்சுத்தான் அவர் தங்கைங்களுக்குத் தூக்கிக் குடுக்கும்போது சும்மாயிருந்தேன். கடைசீல …”, பர்வதம் பழைய பல்லவியை ஆரம்பிக்கவும்,
“அதேதான்மா சொல்றேன். என் தங்கச்சிக்கு செஞ்சி ஓய மாட்டேங்குது, அதான், கொஞ்சம் அதை நிறுத்திவெச்சிட்டு என் பொண்டாட்டியை பார்க்கறேன். அப்பா செஞ்ச தப்பை நானும் செய்ய மாட்டேன்.”,  சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு கை கழுவப் போனான் ராகவன்.
“நான் என்ன சொல்ல வந்தா, இவன் என்ன சொல்றான் பாரு மாலினி.”, என்று அவளிடமே குறைபட, ‘ எப்ப உங்க புராணத்தை இழுக்கணும்னு விவஸ்தை வேணும்.’, என்று உள்ளுக்குள் கவுண்டர் குடுத்தாலும்,
“அத்தை, கொஞ்சம் அவரை ரிலாக்ஸ் ஆக விடுங்க. இந்த இரண்டு மாசமா எவ்வளவு சமாளிச்சார்னு உங்களுக்குத் தெரியாது. மெஷினா இருந்தாக்கூட அப்பப்ப நிறுத்தி வெச்சி ரெஸ்ட் குடுத்தாத்தான் ஓடும். அவர் வயசுக்கு தக்கபடி ஜாலியா இருந்திருக்காரா? அம்பது வயசுக்காரன் மாதிரி என்னேரமும் குடும்பம், கணக்கு, காசு, வட்டினு யோசிச்சிகிட்டு இருக்கார். ஒரு ப்ரேக் எடுத்தாத்தான கொஞ்சம் தெம்பா ஓடமுடியும் ?”, மாலினி கேட்கவும், மளுக்கென்று கண்ணில் நீர் கோர்த்தது பர்வதம்மாவிற்கு.
“ஆமா மாலினி, சின்ன வயசிலயே பொறுப்புதான் ஆனாலும் நிறைய லூட்டி அடிப்பான். அவங்க அப்பான்னா அவ்வளவு இஷ்டம், அவரும் அவன் கூடத்தான் நிறைய நேரம் இருப்பார். அவர் போனது, குடும்பமே இவனை நம்பி நின்னது எல்லாம் சேர்த்து அவனை ரொம்பத்தான் மாத்திடுச்சு. அதுக்கப்பறம் அவனுக்குன்னு கேட்டது உன்னைத்தான்.”, பர்வதம் மலரும் நினைவுகளை ஓட்ட,
‘கேட்டதும் சந்தோஷமா என்னை கல்யாணம் கட்டி கூட்டிட்டு வந்தீங்க’, என்று எப்போதும்போல உள்ளுக்குள் நக்கலடித்தாலும், “அதனாலத்தான் சொல்றேன் அத்தை. விஜய் அவரை சிரிக்க வெச்சி கலாட்டா செய்வார். கொஞ்சம் எல்லா கவலையும் ஒதுக்கி வெச்சிட்டு சந்தோஷமா இருப்பார். விஜய் கார்லதான் போறோம். அவங்களுக்கு தெரிஞ்சவங்க கெஸ்ட் ஹவுஸ்லதான் தங்கறோம். பெருசா ஒரு செலவும் இல்லை. அதனால அவரை எதுவும் கேட்காதீங்க.”, என்று ஒரு வழியாக அவருக்கு புரியும்படி ஓதிவிட்டு, சாப்பிட அமர்ந்தாள்.
ஞாயிற்றுக் கிழமை நாங்கு மணி போல மாலினியின் பெற்றோர் வந்தார்கள். ராகு காலத்திற்கு முன் தர வேண்டும் என்று உடனேயே எடுத்து வந்த புது வெண்கலப் பானை, அரிசி, வெல்லம் என்று இதர பொங்கல் சாமான் எல்லாம் வைத்து, புடவை, பாண்ட் சர்ட், பூ பழம் என்று  கடை பரப்பினார் சகுந்தலா.
“பொங்கலுக்கு இரண்டு பேரும் அவசியம் வரணும் ராகவன்.”, என்று இளங்கோவன் தன் கெத்து குறையாமல் அழைத்தார். புன்னகையோடே, “வரோம் சர்.”, என்று முடித்துவிட்டான் ராகவன்.
கூடவே இன்னொரு பையில் இருந்த துணியையும், “இந்தா தீபாவளிக்கு எடுத்தது, நீ அங்கையே வெச்சிட்ட, அதான் நாங்களே கொண்டுவந்துட்டோம்.”, என்று கொடுத்தார். இரு முறை சென்ற போதும், தனியாக தூக்கிக் கொண்டு போகமுடியாது என்று சாக்கு சொல்லியிருந்தாள்.
பர்வதம் மாலினியை கடை பரப்பியதெல்லாம் எடுத்து வைக்க சொல்லிவிட்டு, அவர்களுக்கு செய்து வைத்திருந்த காரட் அல்வா, வாழைக்காய் பஜ்ஜியையும் கொண்டு வந்து கொடுத்தார். திரும்ப காபி போட அவர் உள்ளே செல்ல,
“ம்மா, காலையில நாங்க வந்துட்டு சீக்கிரமே கிளம்பிடுவோம். பூஜை நீ ஒன்பதுக்குள்ள முடிச்சிடு. நாங்க திரும்பி வந்துட்டு ஏற்காடு போறோம்.”, மாலினி அறிவித்தாள்.
உடனே இளங்கோவன் எப்படி போகிறீர்கள், எங்கே தங்கப்போகிறீர்கள் என்று கேள்விகளாகத் தொடுக்க, இம்முறை ராகவன் பதில் அளிக்கவில்லை. மாலினியை பார்க்க,
 “அப்பா, நாங்க காலேஜ் டூர் போக உங்ககிட்ட பெர்மிஷன் கேட்டு நிக்கலை. கேள்விங்களை நிறுத்துங்க.”, என்றாள் புன்னகை முகம் மாறாமல்.
“ஏன் மாலு. தெரிஞ்சிக்கத்தானே கேட்கறார் அப்பா? அது கூட கேட்கக் கூடாதா?”, சகுந்தலா இடைபுகுந்தார்.
“தெரிஞ்சிக்க கேட்கறதுக்கும், என்குயரி பண்றதுக்கும் அப்பாக்கு வித்தியாசம் தெரியும்மா. அவர் என்ன செய்தார்னு அவருக்கும் தெரியும். “, அமைதியாக சொல்லிவிட்டு. “காபி எடுத்துட்டு வரேன்”, என்று உள்ளே சென்றாள்.
ஒரு சிறிய அமைதிக்குப்பின், “ம்ம்…நீங்க தப்பா நினைக்கவேண்டாம் ராகவன். அங்க என் ஜூனியர்தான் பாங்க் மானேஜரா இருக்கான். எதுவும் தங்க நல்ல ஹோட்டல் வேணும்னா அவன் நல்ல ரேட்ல ஏற்பாடு செய்வான். அதான்.”, என்றார் இளங்கோவன்.
‘பவர் காட்டறீங்களா மாமா’, என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாலும், எதுவும் சொல்லாமல், “எல்லாம் ஏற்பாடு செஞ்சிட்டோம் சர். மாலினியை டீடெய்ல் அனுப்பச் சொல்றேன்.”, என்று முடித்துக்கொண்டான்.
அவர்கள் கிளம்பும்போது, “அப்பறம் சர். இந்த பொங்கல், தீபாவளி சீர் வெக்கறதெல்லாம் இந்த முதல் வருஷத்தோட போறும். பண்டிகை விசேஷம்னா வீட்டுக்கு வந்துட்டு போறோம். வேற ஃபார்மாலிட்டி எல்லாம் வேண்டாம்.”, என்றான் ராகவன்.
“என்னம்மா மாலினி…?”, என்று இளங்கோவன் பெண்ணைப் பார்க்க, “ஆமாம்பா, இதெல்லாம் தேவையில்லாத டென்ஷன். ஃப்ரீயா விடுங்க.”, என்றாள்.
பர்வதம்தான் வாய்பிளந்து நின்றார். ‘அவங்க செய்யறதையும் வேண்டான்னுதுங்களே இந்த பிழைக்கத் தெரியாத புள்ளங்க’, என்று மனதுக்குள் வைதபடி.
அவர் அஸ்வினுக்குப் போட்ட மோதிரம் திரும்ப வரும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் பொங்கலுக்கும் வராததில் வருத்தமே.  அவர்களை வழியனுப்பிவிட்டு வந்தபின், “என்ன மாலினி, தீபாவளிக்கு, இல்லாட்டி பொங்கலுக்கு மோதிரம் போடுவாங்களே மாப்பிள்ளைக்கு. உங்க வீட்ல செய்ய மாட்டாங்களா?”, என்று மருமகளைக் கேட்டார்.
“மா… இங்க அஸ்வினுக்கு மோதிரம் வாங்கினது மாலினி சம்பாத்தியத்துலதான். நாம போட்டா கேட்கலாம். போடலைன்னும்போது அடக்கி வாசிக்கணும். நீ வேணா உன் பொண்ணைக் கேளேன்? அண்ணன் அவ்வளவு செஞ்சிருக்கானே உனக்கு, அவன் தலை பொங்கலுக்கு மோதிரம் வேணாம், ஒரு புதுத் துணியாவது வெச்சிக்குடுன்னு?  அதுக்கெல்லாம் உனக்கு வாயும் வராது, அவளுக்கு கையும் வராது. ”, கடித்து துப்பிவிட்டு அவன் கிளம்ப, மலைத்து  நின்றார் பர்வதம்.

Advertisement