Advertisement

அத்தியாயம் – 19
விடியற்காலை மதுரைக்கு வந்து இறங்கினார்கள் ராகவனும் பர்வதம்மாவும். அழைக்க வந்த ரகுவரனிடம் நன்றாக பேசிக்கொண்டு வந்தான் ராகவன். அப்போதுதான் ஒரு விஷயம் தெரிந்தது. ரகுவரன் என்னவோ எதார்த்தமாகத்தான்  சொன்னான்.
“சனிக்கிழமையே வெச்சிருக்கலாம். ஹால் காசு ஒரு மூவாயிரம் கூட கேட்டான். மத்தபடி விசேஷத்துக்கு வரவங்களுக்கு சௌகரியமா இருந்துருக்கும்.  மாலினியும் விக்ரமும் வந்திருப்பாங்க. உங்க தங்கை கேட்டாத்தானே ? உங்களைத் தவிர மத்தவங்க உள்ளூர்தான அதுனால பிறந்த நாள் அன்னிக்குத்தான் வெக்கணும்னு ஒரே பிடிவாதம்.”, என்று மாலினி, விக்ரம் வராததில் வருத்தமுற்று பேசினான். ராகவன் அவன் தாயை ஒரு பார்வை பார்த்தான். அவ்வளவே.
வீட்டிற்கு செல்லவும், தங்கையின் வரவேற்பிற்கு தலையசைத்ததுடன் சரி. ரகுவரனுடனும் அவன் தாய் தந்தையுடன் சற்று பேசிவிட்டு, படுக்கச் சென்றுவிட்டான். பர்வதம்மாவும் காய்த்ரியுடன் சற்று பேசிவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.
பொறுமையாய் பத்து மணிக்கு காலை சிற்றுண்டி முடித்து, அவர்கள் குடும்பம் மட்டும் இருக்கையில், அவள் கேட்ட வெள்ளித் தட்டு பார்சலை எடுத்து வந்த ராகவன்,
குழந்தை கணேஷிடம் கொடுத்து, “இது உன் தாய்மாமன் விக்ரம் அவனுக்கான காசுலர்ந்து வாங்கி அனுப்பியிருக்காண்டா குட்டி.”, என்று சொல்லியே கொடுத்தான். வழக்கமாக பர்வதம்மா கையில் கொடுத்துதான் தர வைப்பான். இன்று சில விஷயம் தெளிவுசெய்ய வேண்டும் என்றதாலேயே  தானே சென்று கொடுத்தான்.
“அவ்ளோ பெரிய மனுஷனாகிட்டானா விக்ரம்.”, என்று சிரித்தார் ரகுவரனின் தந்தை.
“என்ன மாமா செய்ய ? காதுகுத்து வைபவம் முடிஞ்ச மறுமாசம் பிறந்த நாள். காயத்ரியும் வெள்ளித் தட்டு வேணும்னு கேட்டுட்டா. வீட்டு நிலைமை தெரிஞ்சு விக்ரம்தான் அவன் டுடோரியல் கட்ட சேர்த்த காசை தந்தான்.”
“எதுக்கு ராகவா அப்படி நெருக்கி செய்யணும் ? உன் தங்கைதான் கேட்டா. அப்பறம் செய்யறன்னு சொல்ல வேண்டியதுதான ?”, மங்கை காயத்ரியை ஒரு பார்வை பார்த்தபடி கேட்டார். ஒர் சிரிப்பை மட்டுமே ராகவன் பதிலாய் உதிர்த்தான்.
“மாலினியும் அவனும் வந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்.”, மங்கை சொல்ல,
“அவளைத்தான் காயத்ரி கூப்பிடவேயில்லையே அத்தை. “, சபையில் போட்டுடைத்தான் ராகவன்.
“காயத்ரி…!!!”
“கூப்பிடலையா?!”
மங்கையும் ரகுவரனும் ஒரே நேரத்தில் கேட்கவும், முழித்த காயத்ரி, “பேசறதாத்தான் இருந்தேன். அத்தை பேசிட்டாங்க. அப்பறம் அண்ணிக்கு  லீவ் கிடைக்கலைன்னதும் எப்படியும் வர போறதில்லைன்னு…”, என்று இழுக்கவும் அவர்கள் இருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“விடுங்க. அத்தை, நீங்கதான் கூப்பிட்டீங்களே. நான் காயத்ரிக்கு புரியணும்னுதான் சொன்னேன்.
“தட்டு வேணுமுனு கேட்க மட்டும் தெரியும், இந்த முறை எல்லாம் தெரியாது. அதான மருமகளே ?”, அவள் மாமனாரும் ஒரு இடி இடித்தார். முகம் கன்றிப்போய்  நின்றாள் காயத்ரி.
“அத்தை, திரும்ப வருவமோ இல்லையோன்னு அம்மா பொங்கல் சீர்க்கு ரெண்டாயிரம் காதுகுத்து அப்பவே காயத்ரிக்கு வெச்சி குடுத்துட்டு வந்துட்டாங்க.  வேற எதுவும் முறை செய்யணுமா ?”
“காசை சொன்னா. பொங்கல் சீர்னு சொல்லலை. அதில என்னப்பா. புடவையும் ஒன்னுக்கு ரெண்டா அப்பவே வாங்கிக்கிட்டா. எல்லாம் போறும்.” , மங்கையே இப்படி சொன்னதும் பர்வதம்மாவோ காயத்ரியோ என்ன சொல்ல முடியும்.
அதன்பின் ரகுவரனுடனே சுற்றிக்கொண்டிருந்தான் ராகவன். விழாவில், பர்வதம்மா அவர்கள் எடுத்து வந்த உடையைக் கொடுக்கச் செய்தான். உண்டு முடித்து சொல்லிக்கொண்டு ஹோட்டலில் இருந்தே நேராகக் கிளம்பிவிட்டனர் இரவு ரயிலைப் பிடிக்க. காயத்ரிக்கு பேச வாய்ப்பே தரவில்லை.
“என்ன ராகவா? காயத்ரிகிட்ட நீ முகம் குடுத்தே பேசலையாம். அவ வந்தப்போவும், நீ நகர்ந்துட்டயாம்? எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டா.”, பர்வதம்மா ரயிலில் அமர்ந்த பின்னர் மெதுவாய் கேட்டார்.
“ஓ… அதுக்கு நீங்க என்ன சொன்னீங்கம்மா ?”
“உங்கிட்ட கேக்கறேன்னு சொன்னேன்.”
“ஓ… ஏன் மாலினியை அழைக்கலை? அவகிட்ட போனவாட்டி மோசமா நடந்துகிட்டதுக்கு ஏன் மன்னிப்பு கேக்கலை? வீட்டு கஷ்டம் புரிஞ்சு ஏன் நடக்கலை? விக்ரமை ஏன் அசிங்கப்படுத்தின, இப்ப அவன் வாங்கிக்குடுத்த வெள்ளிதட்டை வெக்கமேயில்லாம வாங்கி வெச்சிகிட்ட? குறைஞ்ச பட்சம் மூவாயிரம் கூட போனாலும் பரவாயில்லைனு நமக்காக ஏன் சனிக்கிழமை விசேஷம் வெக்கலை? இதெல்லாம் அவகிட்ட கேட்டீங்களாம்மா ?”, தாயைக் கூர்மையாகப் பார்த்து ராகவன்கேட்கவும், மெல்ல இல்லையென்று தலையாட்டினார்.
“நீங்க எங்கிட்ட கேட்ட கேள்வியையும் அந்த கேக்காத லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க.  பெர்த் ரெடி செய்யறேன். படுக்கலாம். போனதும் ஆபீஸ் போகணும் நான். கத்தரித்தார்போல பேசிவிட்டு படுத்துவிட்டான். இப்படியே தன் பெண்ணை விட்டுவிடுவாங்களோ என்று பர்வதம்மாவிற்குத்தான் கிலி தொற்றியது. இன்னொரு மனமோ, இந்தப் பொண்ணுக்கு இருக்கற திமிருக்கு கொஞ்சம் அடக்கினாத்தான் வழிக்கு வரும் என்றும் உரைத்தது. ராகவன் கேட்ட கேள்விகளிலிருந்த நியாயம் அவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் பெண் மீதான பாசம் அவரைக் கட்டிப்போட்டது.
 புது வருடம் பிறந்த சில நாட்களில், ஒரு நாள், ராகவனுக்கு அழைத்திருந்தான் விஜய்.
“ஹலோ, ராகவா, விஜய் பேசறேண்டா…நல்லாருக்கியா மச்சி?”
“ஹே… நல்லாருக்கேண்டா. எங்க கல்யாணமானதுலர்ந்து ஆள் லைனுக்கே வரதில்ல ?”, நவம்பர் மாதம் திருமணம் முடிந்திருந்தது விஜயிற்கு. தலை தீபாவளிப் பிரச்சனையை ஓரம்கட்டி விஜயின் கல்யாண நிகழ்வுகள்தான் ராகவன் – மாலினிக்கு ஆறுதலைத் தந்திருந்தது.
“அதான் மச்சி…  பொங்கல் லீவ்ல எல்லாருமா சேர்ந்து ஒரு சின்ன டூர் ப்ளான்டா.”, விஜய் உற்சாகமாகக் கூறினான்.
“டேய்… தலை பொங்கல், மாமியார் வீட்டுக்கு போகலையா?”, ராகவ கேட்க,
“ஆமாம், சிட்டில என்னடா பொங்கல்?எல்லாம் காலையில முடிச்சிட்டு கிளம்பிடலாம்.”,
மூன்று நாட்கள் ஏற்காடு, காரில் சென்று வருவது என்றும், அவன் தந்தையின் க்ளையண்ட் கெஸ்ட் ஹவுஸில் தங்குவதாகவும் விஜய் பயண விவரத்தை விவரித்தான்.
ராகவனுக்கும் ஆசைதான். மாமியார் வீட்டில் தீபாவளிக்கு பட்டதே போறும்.  பொங்கலை எப்படி நகர்த்துவது என்ற சிக்கல் தீரும். புது வருடப் பிறப்பிற்கு கூட மாலினியை கோவிலுக்கு மட்டும்தான் அழைத்துப்போனான். ஜனவரி இறுதியில் வரும் மாலினியின் பிறந்த நாளுக்கும் என்ன செய்ய என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
“என்ன ராகவா யோசனை? பணம் பத்தி யோசிக்காதடா. அப்பறம் பார்த்துக்கலாம்.”, விஜய் உந்தினான்.
“சே… அதுக்கில்லை.  மாலினிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேண்டா.  பொங்கலுக்கு அவ அம்மாகிட்ட எதாச்சம்   சொல்லி வெச்சிருக்கப்போறா.”
“சரி மச்சி.  நீ கேட்டுட்டு சீக்கிரம் சொல்லுடா.”, என்று வைத்துவிட்டான்.
அன்றிரவு மாலினியிடம் பேசும்போது, அவளுக்கும் ஆசை.
“விஜய் ஷாலினி ரெண்டு பேருமே ஜாலி டைப்தான். ஆனா நம்ம பட்ஜெட் இடம் கொடுக்குமா? “, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கேட்டாள்.
“என்ன, உனக்கு நீ ஆசைபட்ட பட்டு புடவை எடுத்து தரணும்னு நினைச்சேன்…”, ராகவன் இழுக்க,
“அட…அது சும்மா அத்தை வாயை அடைக்க நான் அப்ப சொன்னது. பட்டுப்புடவைக்கு பதிலா இந்த வெகேஷன் ஆப்ஷன் இன்னுமே சந்தோஷமா எடுத்துப்பேன்.”, புன்னகைத்தாள்.
“அம்மா எப்படியும் பொங்கல் பெருசா எதுவும் செய்யமாட்டாங்க.  காலையில போய் பூஜைக்கு தலைய காட்டிட்டு கிளம்பலாம். நாம எங்கையும் போகலைன்னாலும் இதுதான் மனசுல இருந்துச்சு. இப்ப காரணம் கிடைச்சிடுச்சு.”, மாலினி சொல்லவும், முகத்தில் ஒரு சிரிப்பு ராகவனுக்கு.
“உங்க அப்பா அம்மாகிட்டருந்து காப்பாத்தறயா என்னை? “
“ஹ்ம்ம்… உங்களை மட்டுமில்லை, என்னையும் சேர்த்து காப்பாத்திக்கறேன். “
மாலினி பெற்றோர் வந்து சென்றபின் இரு முறை சென்று வந்தாள் மாலினி. ராகவன் செல்லவில்லை. இளங்கோவன் கேட்ட போதும், ‘எதாவது விசேஷம்னா வரத்தான் போறார், சும்மா எதுக்கு ?’,என்றுவிட்டிருந்தாள். இப்போதெல்லாம், சகுந்தலாவும் வரம்பை மீறி ராகவனையோ அவன் குடும்பத்தையோ பேசுவதில்லை.
“என்னாச்சு? போன முறை மாதிரி ட்ரெஸ் எடுக்க அவங்களோட போகலியா?”, ராகவன் கேட்க,
“ம்ப்ச்… அவங்களுக்கு வேணும்னா பொங்கலுக்கு இங்க வந்து சீர் செய்யட்டும்.”, உதட்டை சுழித்தாள். அவள் தந்தை கூட பேசிவிட்டார். வரேன்பா என்றவள் செல்லவில்லை.
“என்னடி, அவங்களோட சண்டைபோட்டுகிட்டு…. உன் மேல இருக்க அக்கறை, அது கோவமா வெளிப்படுது.  நீ கஷ்டப்பறது அவங்களால ஏத்துக்க முடியலை.”
“இது நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை. நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். ஒரு அளவே இல்லாம இன்டெர்ஃபியர் செய்யறாங்க.”
“என்ன? என்னாச்சு, சொல்லு. அடுத்த வாட்டி ஏதாவது ஜாடையா பேசினாங்கன்னா எதுக்குன்னாவது தெரியும்.”, சிரித்தபடிதான் கேட்டான்.
 “இது என்னப்பா அநியாயம்? எல்லா வீட்லையும் ரெண்டு பேரோட சம்பாத்யமும் சேர்ந்துதான செலவு செய்யறாங்க ? ஏன் அம்மா என்னை மட்டும் காச்சறாங்க?”
“நம்ம தனிக் குடித்தனம் செய்யும் போது, செலவு , சேமிப்பு எல்லாம் நமக்காகன்னா எதுவும் சொல்ல மாட்டாங்க. இங்க உன் சம்பளத்தை எடுத்து நாத்தனார் குழந்தைக்கு காது குத்து, பர்த் டேன்னு விளையாடறோம். அதனால வந்த புகைச்சல். உங்கப்பா நீயெல்லாம் ஒரு ஆளான்னு என்னைப் பார்க்கறார். ஒன்னும் செய்யமுடியாது. ”, பெருமூச்செறிந்தான் ராகவன்.
“பொங்கல் காலையிலேயே கிளம்பலாம். நாம எங்க வீட்டுக்குப் போக வேண்டாம்.”, மாலினி கூறவும்,
“ அவங்க முதல்ல கூப்பிட்றாங்களா பாரு. “
“கூப்பிடாம போயிருவாங்களா. நீங்க அவங்ககிட்ட பணிஞ்சு எதுக்கு போறீங்க? மாப்பிள்ளைனு கெத்து காட்டுங்க. எனக்காக பார்க்காதீங்க. நான் சொன்னா எங்க கேக்கறீங்க நீங்க.”, மாலினி முறுக்கினாள்.
“எல்லாம் தலை கீழ நடக்குது. எங்கப்பாகிட்ட நல்லா பேசுங்கன்னுதான் பொண்டாட்டிங்க சண்டை போடுவாங்க. எல்லாத்துலயும் நீ வித்தியாசம்தான். சிரித்துக்கொண்டே  லைட்டை எழுந்து சென்று அணைத்து வந்தவன், அவளை அணைத்துக்கொண்டு உறங்கச் சென்றான்.
பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னர், மாமனாரின் போன் வரவும், ராகவன் எடுத்தான்.
“ராகவன், வணக்கம்.”
“வணக்கம் சர். எப்படி இருக்கீங்க ?”
“நல்லாருக்கோம். நீங்கதான் போன் செய்யறதில்லை. அதான் நானே செய்து கேட்டுக்கிறேன். ஹ ஹ…” , என்று சிரித்தார் இளங்கோவன்.
“அதான் சர். இந்த ஊசி வெடியெல்லாம் நாமளா போன் செய்து எதுக்கு வாங்கிக்கணும்னுதான் செய்யறதில்லை. ஹ ஹ…”, என்று பதிலுக்கு குத்தவும், ஒர் நொடி அமைதி. இப்படி ஒரு பதில் வருமென்று அவர் எதிர்பார்க்கவில்லை.
“ம்ம்… சொல்லுங்க சர். என்ன விசேஷம்?”, ராகவனே தொடர்ந்தான்.
“பொங்கலுக்கு அழைக்க வரணும் உங்க வீட்டுக்குன்னு மாலினி சொன்னா. அதான் இந்த ஞாயிறு சாயந்திரம் உங்களுக்கு வசதிபடுமான்னு கேக்க கூப்பிட்டேன்.”, விஷயத்திற்கு வந்தார்.

Advertisement