Advertisement

“நான் கேட்க வேண்டிய கேள்வியை நீங்க கேக்கறீங்க அத்தை. அப்ப அதுக்கு பதிலும் உங்களுக்குத்தான் தெரியணும். விரலக்குத் தக்க வீக்கம்னு எங்க பாட்டி சொல்லுவாங்க. அதுவும் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்னு அவசியமில்லை.  காய்த்ரி மட்டுமில்லை, இவரும் விக்ரமும் கூட உங்களுக்குப் பிள்ளைங்கதான் அத்தை. காய்த்ரியை அவ மாமியார் பேசுவாங்கன்னா, உங்க பிள்ளை நாலு எடத்துல கடனை வாங்கிட்டு திருப்பி கட்ட முடியலைன்னா வெளியாளுங்களே கேவலமா பேசுவாங்க. அதையும் ஞாபகத்துல வைங்க. ”,  ராகவனின் மனத்தாங்கலில் வருத்தமுற்றிருந்த மாலினி, பர்வதம்மாவை குதறிவிட்டு சென்றாள்.
அறையில், கண் மூடி தலை சாய்ந்து படுத்திருந்த ராகவனின் ஓய்ந்த தோற்றம் மாலினியை சுட்டது.
“மன்னிச்சுடுங்க ரகு. நான் அதிகப்படியா பேசிட்டேன்.”
“…”
அவன் பதில் பேசிவில்லை என்றதும், நெருங்கிச் சென்று, அவன் தோளில்  கை வைக்கவும்,
“விடு. எல்லாரும் பேசற நிலைமைலதான் இருக்கேன் நான்.”, என்றான் விட்டேத்தியாக.
“ரகு. ப்ளீஸ். நான் ஏன் இப்படி பேசினேன்னு….”
“நீ கேட்டதுல தப்பேயில்லை மாலினி.  அந்த மாதிரிதான் என் குடும்பம் நடந்துக்கறாங்க. நானும் எவ்வளவுதான் அவங்களைத் தாங்கிப் பேச முடியும். என்ன இப்ப கொஞ்சம் மரியாதையா கேள்வி கேட்கற. இன்னும் வருஷம் போனா, இன்னும் மரியாதை  தேயும். அதுக்கும் இப்பவே தயாராகிக்க வேண்டியதுதான். “, வறணட குரலில் ராகவன் பேசிக்கொண்டே போகவும்,
“ரகு… ஸ்டாப் இட். வார்த்தைகளைக் கொட்டாதீங்க.  எல்லத்துக்கும் இன்னொரு பக்கம் இருக்கு. நீங்க சொன்னதுதான்.  அதையும் யோசிச்சிட்டு பேசுங்க.”, மாலினி அவன் மேலும் பேசும் முன் அடக்கினாள்.
ராகவன் அவள் குரலில் நிமிர்ந்து பார்க்கவும், “ நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க ரகு.  பொண்ணு நல்லா இருக்கணும்னு அத்தை நினைக்கறதுல தப்பில்லை. ஆனா அந்த பாசத்தை காயத்ரி ரொம்ப மிஸ்யூஸ் செய்யறான்னு தோணுது எனக்கு.  அவ மாமியார் வீட்ல பந்தா பண்றதுக்கு இவங்களை ஏத்தி விடறா. அப்படித்தான் காதுகுத்துக்கும் ஆச்சு. இப்ப பர்த் டே.  இதுக்கு ஒரு எண்ட் கார்டே கிடையாது. அதெல்லாம் விட நாம் அங்க போன போது அவ நடந்துகிட்டது, முக்கியமா விக்ரம்கிட்ட, அத்தைகிட்ட. அவ்வளவு மட்டமா பேசினா. அதை தப்புன்னு சொல்ல வேண்டிய அத்தைக்கும் பாசம் கண்ணை மறைக்குது. இதை நீங்க தட்டி கேட்க முடியாது. அவங்க பழைய கதையை சொல்லி அழுதாலே நீங்க சரண்டராகிடுறீங்க. “
குடும்பத்தில அனைவரையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு அலசிக்கொண்டிருக்கும் மனைவியை  அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான் ராகவன். 
“நீ சொல்றது எல்லாம் கரெக்ட்தான். ப்ரச்சனையை சொன்னவ அதுக்கு சொல்யூஷனும் சொல்லு. “
“ஆசைப்பட்டு கேக்கறதெல்லாம் கிடைச்சிடாதுன்னு அவங்களுக்கு புரியணும். அதுக்கு நான்தான் தடுக்கணும்.  நீங்க முடியாதுன்னு சொன்னா, அதுக்கும் நான் சொல்லிக்குடுத்துதான் பேசறேன்னு சொல்லுவாங்க. அதுக்கு நேரடியா நானே சொல்றேன்.  அவங்க எப்படி பழைய கதையை ஆயுதமா எடுக்கறாங்களோ, நானும் குழந்தை மேட்டரை எடுக்கறேன்.  இது எதுவும் உங்களைனு நினைச்சிடாதீங்க. ப்ளீஸ். வருத்தப்பட வேண்டியவங்க தட்டி விட்டுட்டு போறாங்க. நீங்கதான் உங்க மைண்ட்ல ஏத்திக்கறீங்க. “, மாலினியை தன் மீது சாய்த்துக்கொண்டவன்,
“மாலினி,  அம்மாவை ஒரு மாதிரி அடக்கியே வெச்சிருந்தார் அப்பா. அத்தைங்களும் ரொம்ப பேசுவாங்க அவங்களை.  அவங்க பிறந்த வீடும் ஒதுக்கிட்டாங்க. அது ரொம்ப பாதிச்சிடுச்சு அம்மாவை. அவங்க அண்ணன் எப்படி அவங்களை விட்டுட்டானோ, அது மாதிரி, அப்பா போனதும் நான் என் வழியை பார்த்துகிட்டு காயத்ரியை விட்டுடுவேனோன்னு பயம். அவ கல்யாணம் முடியற வரை என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்க. காலேஜ் முடிச்சு ஒரு வருஷம் வேலைக்கு அவ போகட்டும்மான்னு நானும் சொன்னேன்.  அதுக்கே  ரொம்ப பயந்து அழ ஆரம்பிச்சுட்டாங்க.  காயத்ரி கடைசி வருஷம்  படிக்க ஆரம்பிக்கும்போதே அனத்த ஆரம்பிச்சவங்க, அவ கல்யாணம் முடியற வரை நிறுத்தலை. அவ குழந்தை பேறு முடிச்சு தொட்டில் போட்டப்பறம்தான் நிம்மதியானாங்க. அதுக்குள்ள நம்ம கல்யாணம். லேசாய் அவளைப் பார்த்து புன்னகைக்கவும், மாலினியும் அந்த நினைவுகளில்  ஒரு பெருமூச்சை விட்டாள்.
“எனக்கு அத்தையை புரியுது ரகு. அவங்களை எப்பவும் மரியாதை குறைவா பேசமாட்டேன். நடக்கமாட்டேன். இட்ஸ் அ ப்ராமிஸ்.  ஆனா அவங்களை தடுத்து நிறுத்த வேண்டிய இடத்துல அதை நான் செய்யணும்.  நான் அதை செய்யும்போது நீங்க எனக்கு சப்போர்ட் செய்ய வேண்டாம், ஆனால் என்னை தடுக்காதீங்க. அன்லெஸ், நான் வரம்பு மீறர்தா உங்களுக்கு தோணினா. “
“என்னால அவங்களை சமாளிக்க முடியலை மாலினி. கல்யாணத்துலயும் சரி, தொட்டில் போடும்போதும் சரி, இப்படித்தான் இழுத்து விட்டாங்க, பல்லை கடிச்சிட்டு சமாளிச்சேன். இப்ப நீ இதை எப்படி ஹாண்டில் செய்யறன்னு பார்க்கறேன். அவங்களை ரொம்ப நோகடிக்காம பார்த்துக்கோ மாலினி. அவ்ளதான் நான் உன்னை கேட்கறது.”, ராகவன் சொல்லவும்,
“ஹ்ம்ம்… அவங்க என்னை நோகடிக்கலாம். அதெல்லாம் கணக்கில்லை. ஆனால் அம்மாக்காக எங்கிட்ட மட்டும் சொல்வீங்க,”, கொஞ்சம் ஆதங்கத்துடன் மாலினி அவன் நெஞ்சில் முட்டினாள்.
“அம்மா உன்னை பேசினதும் தப்புதான். அதுக்காக காயத்ரி ஜமீன் மாப்பிள்ளையை கூட்டி வந்திருப்பான்னு நீ சொன்னதும் ஓவர்தான்.”, அவள் தலையில் செல்லமாய் ஒரு குட்டு வைத்தான். செல்லச் சண்டையுடன் உறங்கச் சென்றார்கள்.
தலை தீபாவளி சண்டை முடித்து ஒரு பத்து நாள் கழித்து மதிய இடைவேளையின்போது சகுந்தலா அழைத்தார் மகளை. மாலினி எடுக்கவில்லை. இரண்டு முறை அடித்தவர், மீண்டும் அலுவலகம் விடும் நேரம் அழைத்தார். அப்போது சீட்டில் இல்லாததால் போன் அடித்து  ஓய்ந்தது.
மாலினி அஸ்வினுக்கு அழைத்துப் பேசினாள். பெற்றோர் நலமாகத்தான் இருக்கின்றார்கள் என்று தெரிந்து கொண்டு விட்டுவிட்டாள். மறுனாள் மதியமும் இதே கதை தொடர்ந்தது. அன்றிரவு அவள் தந்தை அழைத்தார் அவளது கைபேசியில்.
“ஹலோ..சொல்லுங்கப்பா.”, என்றாள் மாலினி.
“என்னம்மா, அம்மா இரண்டு நாளா உன்னை கூப்பிடறா. நீ பேசவும் இல்லை, திரும்பவும் கூப்பிடலை. “, அதெப்படி ஒன்றுமே நடவாததுபோல பேசுகிறார் என்று அப்படி ஒரு ஆதங்கம் வந்தது மாலினிக்கு. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,
“ம்ம்… நான் பேசினா அவங்க ஸ்ட்ரெஸ் அதிகமாகிடப்போதுன்னுதான்ப்பா. பேசிக்கற அளவு ஒரு விஷயமும் இல்லை.”
“நல்லா இருக்கியான்னாவது சொல்லலாமில்லயா?”
“ம்ப்ச்… எதுவும் பேசணுமாப்பா? இல்லைன்னா எனக்கு வேலை இருக்கு. நாளைக்கு போட வேண்டியதை எடுத்து வைக்கணும். டைமாச்சு.”, வார்த்தை விளையாட்டுக்கு நான் வரவில்லை என்ற தொனியில் பேசினாள்.
“இரு உங்கம்மாகிட்ட ஒரு வார்த்தை பேசு.”, போன் கை மாறியது.
“மாலு? “
“ம்ம்…சொல்லும்மா. நல்லாருக்கியா?”, தன்னையும் மீறி வந்தது விசாரிப்பு.
“அதைக்கூட நாங்க போன் செஞ்சாதான் கேட்ப? அதுவும் அப்பா கூப்பிடணும். நான் கூப்பி…”, இடைமறித்தவள்,
“மா… நான் நல்லாருக்கேன். நீ உடம்பை பார்த்துக்கோ. அப்பறம் பேசறேன்.”, அழைப்பை துண்டித்தாள்.
முகம் வாட கொல்லையில் இருந்து வந்தவளைப் பார்த்த ராகவன் என்ன வென்று விசாரிக்க, சுருக்கமாகக் கூறினாள். “ரொம்ப வதைக்காத மாலினி அவங்களை. அதுனால நீயும்தான் கஷ்டபடற.”, தேறுதல் கூறினான்.
மறுனாள் மதிய உணவு வேளை முடியும் தருவாயில் கணவனின் அழைப்பை ‘இந்த நேரத்துல கூப்பிடறாரே’, என்ற  யோசனையோடு எடுத்தாள் மாலினி.
“ஹலோ …என்னப்பா ? இந்த நேரத்துல கூப்பிடறீங்க ?”
 “ரகுவரன் மாப்பிள்ளை போன் செய்தார். கணேஷ்குட்டி பர்த்டேக்கு இன்வைட் செய்தார்.  புதங்கிழமை சாயங்காலம், பர்த் டே அன்னிக்கே செய்யறாங்க.”
“ஓ…எல்லாரும் போகணுமா ரகு ?”, ஸ்ருதி இறங்கியிருந்தது மாலினியின் குரலில்.
“ம்ம்.. எதிர்பாக்கறாங்க மயிலு.”
“ஆமாமாம். பொண்டாட்டிக மான ரோஷமெல்லாம் புருஷன் வீட்டு சொந்தத்துக்கிட்ட பார்க்க முடியாதில்ல ? எவ்வளவு கேவலப்பட்டாலும், முகத்தை துடைச்சிட்டு ஈன்னு பல்லை காட்டிட்டுதான் நிக்கணும். “
“மாலினி… “, ராகவனின் குரலில் ஒரு வார்னிங் இருந்தது.
“என்னெல்லாம் அவமானப்படுத்துவாளோன்னு இருக்கு ரகு. “
“எனக்குக் கூடத்தான் உங்க வீட்டுக்கு வரும் போதெல்லாம் உங்க அப்பா அம்மாகிட்ட என்ன பேச்சு வாங்கணுமோன்னு இருக்கும். தீபாவளிக்கு மொத்தமா வாங்கியாச்சு. என்ன செய்ய ? சொந்தம்னு ஆகிட்டப்பறம் தள்ளி வெக்க முடியாதில்லை. அப்படித்தான்.”, ராகவன் பதிலில் விகித்து நின்றாள் மாலினி.
“ரகு…”, குரல் அதிர்ந்து வரவும்,
“ம்ப்ச்… விடு…. நான் பேச வந்ததே வேற.  நான் அப்பறம் பேசறேன்.”, வைத்துவிட்டான்.
மாலினி தீவிரமாய் யோசித்தாள். பெற்றோரை அடக்கி வைக்க வேண்டும். அவர்களது பேச்சு, ஆதங்கத்தால் வரும் பேச்சு. அது இப்படித்தான் என்று ராகவன் அவளுக்கு  ஆயிரம் சமாதானம் சொன்னாலும், அவர்கள் நடத்தையால், அந்த பேச்சால் அவன் காயப்படாமல் இல்லை. தனக்காகவே பொறுத்துக்கொள்கிறான் என்று புரிந்தது. அதே புரிதலை அவளிடம் எதிர்பார்ப்பதில் தவறில்லைதான். ஆனால் இதற்கு ஒரு முடிவு வேண்டும். இல்லையென்றால், கணவன் மனைவிக்குள்தான் இது வெடிக்கும் என்று அறிவுக்கு தெரிந்தது. அதற்கு இப்போதிருக்கும் சண்டையை உபயோகித்தே தன் அன்னையின் ஃபுயூசை முதலில் பிடுங்க வேண்டும். அவர் அனத்தலை நிறுத்தினாலே அப்பா சற்று அடங்குவார் என்று தோன்றியது. அதற்கும் என்ன வழி என்று சிந்தித்தபடியே வேலையைப் பார்க்கத் துவங்கினாள்.

Advertisement