Advertisement

அத்தியாயம் – 17
அடுத்த வார இறுதியில், வெள்ளி இரவு  எல்லோரும் உணவருந்தி முடித்து அமரவும், மெல்ல ஆரம்பித்தார் பரவதம்மா.
“ராகவா. குழந்தைக்கு அடுத்த மாசம் முதல் பிறந்தனாள் வருதில்ல ? காயத்ரி அங்கயே பார்ட்டி மாதிரி வெக்கப்போறாளாம். “
“ம்ம்…”
“நம்மளை வர சொல்றா. மாப்பிள்ளை நாளைக்கு உன்னை கூப்பிடுவாராம் அழைக்க.”
“ம்ம்… இப்பதானேமா போயிட்டு வந்தோம். திரும்பவுமா ? டிக்கெட் காசு எவ்வளவுன்னு தெரியும்தான உங்களுக்கு ?”, பொறுமையாகவே கூறினான் ராகவன்.
“ஆமாம்டா. ஆனா அவ விசேஷம்னு வெக்கும்போது அம்மா வீட்டு ஜனம்னு கூட இருந்தாதான மதிப்பு ?”
மறுபடியும் அவள் வீட்டிற்கு போகணுமா என்றிருந்தது ராகவனுக்கு.
“சரிதான்மா…  ஆனா நம்ம கஷட்டத்தையும் பார்க்கணும்தானே ? போக வர செலவு, குழந்தைக்கு ட்ரெஸ் , ஒரு ஆயிரம் ரூபாயாச்சம் வெச்சு குடுக்கணும்.”, ராகவன் அடுக்க,
“டேய்… முதல் பிறந்த நாள்டா. நாம ஒரு வெள்ளி தட்டு குழந்தை சாப்பிடற மாதிரி வெக்கணும்டா. அப்பத்தான் மரியாதை.”
‘ஆச்சு…அடுத்த மாசம் சம்பளம் காலி..’, என்றது மாலினியின் மைண்ட் வாய்ஸ். முகம் மாறாமல் அவள் சல்வாரை இஸ்திரி செய்துகொண்டிருந்தாள்.
“என்னமா… விளையாடுறீங்களா ? மாசாமாசாம் அவளுக்கே செஞ்சுகிட்டு இருந்தா, எப்பதான் கடனை நான் அடைக்க ?  இதெல்லாம் நீங்களா இழுத்து விடாதீங்கம்மா. “, என்றான் ராகவன்.
“எனக்கும் தெரியுதுப்பா…ஆனா அவ பெருசா ஹோட்டல்ல விசேஷம்னு வெக்கும்போது, நாம் வெறும் ஆயிரம் ரூபா வெக்க முடியாதில்ல ? அடுத்த பிறந்தனாளுக்கெல்லாம் செய்யவா போறோம். “, பர்வதம்மா தன்மையாக பேசினார், தன் காரியம் நடக்க.
“விக்ரமுக்கு நாலு ட்ரெஸ் எடுத்து கொடுத்ததுக்கு சொத்தே போன மாதிரி பேசினதுமில்லாம, பணத்தையும் வாங்கிக்கிட்டா. இப்ப ஹோட்டல பார்ட்டி வெக்கறாங்கன்னு நாம இன்னொரு பத்தாயிரம் பதினஞாயிரம் செலவு செய்ய முடியுமா அத்தை?”, மாலினி இதை வைத்து போர் தொடுப்பது என்று முடிவு செய்தாள்.
எதிர்பாராமல் வந்த தாக்குதலில் சற்று அசந்தாலும், “ இதெல்லாம் உனக்கு தெரியாது மாலினி.  நாம செய்யற முறைதான். உனக்கும் உங்க அம்மா செய்வாங்க பாரு.”, என்று அடக்கப் பார்த்தார்.
“கடனை அடச்சு முடிச்சாத்தான புள்ளைக்கே வழி ? அப்பறம்தான அதுக்கு நான் பிறந்த நாள் பத்தி யோசிக்க.”, வெற்றுப் புன்னகையுடன் உமைக்குத்து ஒன்று விட்டாள். பர்வதம்மாவிற்கு வலித்ததோ இல்லையோ ராகவனுக்கு வலித்தது.
அவளை அப்படியே தொங்கலில்விட்டு, “ ராகவா… அவ மாமியார் எதிர்க்கதான் வாய்விட்டு கேட்டா காயத்ரி. ‘அம்மா , என் நாத்தனார் வெள்ளிக் கிண்ணியும் டம்ளரும் வெச்சி குடுத்துட்டாங்க. நீங்க குட்டிப்பா பர்த்டேக்கு வெள்ளித் தட்டு குடுங்க’ன்னு. நானும் சரின்னு சொல்லிட்டு வந்துட்டேன். இதோட சரி. இனி என்ன செலவு அவளுக்குன்னு சொல்லு ? “
“ இது முடிஞ்சா அடுத்து பொங்க சீர்னு ஆரம்பிப்பீங்க. தெரியாதா ? மனுஷனை எந்திரிக்க விடாமா அடிச்சா என்னமா பண்றது ? எல்லாரும் குழந்தை பத்தி கேக்கறாங்க, என்ன ப்ளானிங்ல இருக்கறீங்களா ? ரொம்ப தள்ளி போடக் கூடாதுன்னு அட்வைஸ் வேற. நீங்களே பார்த்தீங்கல்ல, காயத்ரி மாமியார் கூட, சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுன்னு சபையில சொல்றாங்க. அவ அம்மா வீட்டுலயும் உங்க எதிர்க்கவேதான சொன்னாங்க? நான் ஆயிரத்தெட்டு கணக்கு போட்டு வெக்கறேன். அம்மாவும் பொண்ணும் ஒரு நிமிஷத்துல தவிடுபொடியாக்கறீங்க.”, ராகவன் குமைந்தான்.
விஷயம் திசை மாறி செல்வதை உணர்ந்த பர்வதம்மா, “ டேய்… எனக்கு மட்டும் ஆசையில்லையா ? இவ வேலை முடிஞ்சுது, அடுத்து மாலினிதான.  குடும்பம்னா முன்ன பின்னதான் இருக்கும். சமாளிக்கணும்டா. பொங்கலுக்கு போனஸ் வருமில்ல ?”
“எங்களுக்கும் தலை பொங்கல் இல்ல ? காயத்ரி சொன்ன மாதிரி மாசத்துக்கு நான் நாலு புது புடவை எடுத்தா பரவாயில்லை. இத்தனை மாசத்துல தீபாவளிக்கு மட்டும்தான்  எடுத்தேன், அதுவும் சுரிதார்.  ஏன் தலை பொங்கலுக்கு  என் வீட்டுகாரர் பட்டுபுடவை எடுத்துக் கொடுத்தார்னு எங்கம்மாகிட்ட சொல்ல எனக்கும்தான் அத்தை ஆசை. “, பொங்கி வந்த எரிச்சலை அடக்கி ஒரு புன்னகையுடன் கேட்டாள்.
“காயத்ரி அபாண்டமா அப்படி சொன்னபோது, நீங்க ஒன்னுமே சொல்லலைமா அவளை. தப்புதான ? அப்பறமும் மாலினிகிட்ட ஒரு வார்த்தை  சாரி சொல்ல காயத்ரிகிட்ட நீங்க சொல்லலை. ஆனா, இப்ப வெள்ளிதட்டுக்கு அவ போனஸ் காசு வரைக்கும் கணக்கு போடறீங்க. “, ராகவன் கசப்பாய்க் கேட்டான்.
வண்டி மொத்தமாய் ட்ராக் மாறுகிறதே என்று உள்ளுக்குள் பதபதைத்தாலும்,
“டேய், அவ சின்னப் பொண்ணு, பேசத் தெரியாம பேசிட்டா.என்ன மாலினி ? உன்னாட்டம் வெளி உலகம் பார்த்திருந்தா அவளுக்கும் தெரிஞ்சிருக்கும். யார்கிட்ட எப்படி பேசணும். எப்படி நடந்தா நல்ல பேர் வாங்கலாம்னு. வெளிய விட்டா காதல் கத்தரிக்காய்னு வந்துடப்போதுன்னு, அவளை வீட்டுக்குள்ளயே பொத்தி வளர்த்துட்டேன். உலகம்  தெரியலை.”,  மாலினியின் மேல் உள்ள கடுப்பில் , ஊசி ஏற்றினார் பர்வதம்.
“என் இடுப்புல இருக்க சேலையை கழட்டி வாங்கற அளவுக்கு திறமை இருக்கு காயத்ரிக்கு. நீங்க வெளிய விட்டிருந்தீங்கன்னா ஜமீன் மாப்பிள்ளையை கூட்டிட்டு வந்திருப்பா அத்தை. “, திருப்பி அடித்தாள் மாலினி. இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற கடுப்பில் இருந்தாள் அவளும்.
ராகவனுக்குப் புரியவில்லை. மாலினி இப்படி பேசுவது வழக்கமில்லை. பர்வதம்மா எதாவது சொன்னாலும் முகக் கடுப்போடு அங்கிருந்து நகர்ந்துவிடுவாள். திருப்பி பேசமாட்டாள். ‘இன்று என்ன ஆனது ?’, என்று யோசித்தான்.
“எதுக்கு மாலினி இப்ப வேண்டாத பேச்சு?  ராகவா. அவ மாமியார் எதிர்க்க பேசியாச்சுடா. கொஞ்சம் மெறிச்சு செஞ்சிடுவோம்டா. நான் சொல்லிடறேன் அவகிட்ட, இதுக்கு மேல ஒன்னும் இப்பதிக்கு முடியாதுன்னு.”, என்று முடிக்கப் பார்த்தார்.
“என் மென்னியத்தான்மா மெறிக்கணும். அடுத்த மாசமும் இழுபறியா இருக்கப்போகுது. எங்கயாச்சம் திரும்பவும் கைமாத்து வாங்கணும். இதெல்லாம் அவசியமா ? இப்ப சொன்னா இப்பவே செய்யணுமா ? அப்பறமா செய்யறோம்னு சொல்லுங்கமா ? ஓடியா போயிடப் போறேன்.”, ராகவன் இன்னும் இழுக்கவும்,
“டேய் ராகவா…  தள்ளிப்போட்டா போயிட்டே இருக்கும்டா. அந்த அந்த நேரத்துக்கு செய்தாதான் எதுவும் மரியாதை.  நாம ரசம் சாதம் கூட சாப்பிட்டுக்கலாம்.  பொண்ணை கட்டி குடுத்த எடத்துல அப்பறம் செய்யறோம்னு சொன்னா காயத்ரியைத்தான் பேசுவாங்கடா. நான் கேட்ட பேச்செல்லாம் என் பொண்ணுக்கு வரக்கூடாதுடா…”, நா தழுதழுக்க பர்வதம் அவர் ஆயுதத்தை ப்ரயோகிக்க ஆரம்பிக்கவும் மாலினி உஷாரானாள்.
“அதெப்படி அத்தை. இருக்கறதை காயத்ரிக்கு செய்துட்டு இங்க நம்ம நாலு பேரும் ரசம் சாதம் சாப்பிடணுமா ?அந்த அளவுக்கு அவ என்ன பாசம் காட்டறா நம்ம கிட்ட ? மாப்பிள்ளை வந்து விக்ரம் கிட்ட சாரி சொல்லி, இது என் காசுல எடுத்து குடுத்திருக்கேண்டான்னு சொல்ற அளவுக்கு , நாலு சட்ட பாண்ட் அவ புருஷன் விக்ரமுக்கு செஞ்சதுக்கு அத்தனை பேச்சு பேசினா. 
அவளுக்குன்னு ஒரு புடவை வெச்சி குடுத்தாலும், வெக்கமே இல்லாம கட்டியிருக்க என் புடவையும் சேர்த்து கேக்கறா.  பதிலுக்கு எனக்கு புடவை எடுக்கலை. சரி ஓழியுது. உங்களுக்கு எடுத்தாளே ? அதாச்சம் நல்லதா எடுத்தாளா ? சாதாரண புடவை. ஒன்னு வாங்கினா ஒன்னு ஃபரீ போல. ஒரு தோயலுக்கே பல்ல காட்டுது. அவ புருஷன் காசை அவ்ளோ பத்திரமா பாத்துக்கறா.
இப்படி இருக்கவளுக்காக எதுக்கு குடும்பமே வயத்தை வாயை கட்டணும் ? “, இத்தனையும் மாலினி கோபமாகவே கேட்கவில்லை. சாதாரணமாக , இது எனக்கு புரியவில்லை என்ற மாதிரியே கேட்டாள்.
‘என்னாச்சு இவளுக்கு ? இப்படி போட்டு உடைக்கறாளே ‘, என்று பர்வதம்மாவிற்கு தலை சுற்றியது.
“மாலினி, நீர் அடிச்சு நீர் விலகாது. நான் ராகவன்கிட்டதான் பேசறேன்.  அவன் பொறுப்பெல்லாம் தெரிஞ்சுதான கட்டிகிட்ட? இப்ப என்ன பேச்சு? நீ சும்மாயிரு.”, மாமியாராய் அடக்கினார்.
“பார்த்ததைத்தான் அத்தை கேட்கறேன். காயத்ரி அவ புருஷன் காசை இறுக்கி பிடிக்கறதையும் பார்க்கறேன். நீங்க மாமாவை இறுக்கிப் பிடிக்காம இருக்கறதையெல்லாம் அவர் தங்கைங்களுக்கு செய்துட்டு, இப்ப பிள்ளைங்க படற அவஸ்தையையும் பார்க்கறேன். இதுலேர்ந்து நானும் பாடம் படிக்கணும் இல்லையா ? அவசியத்துக்கு செய்யறதைப்பத்தி ப்ரச்சனையில்லை. நம்ம தகுதிக்கு மீறி செய்யறது ஏன்னு கேட்க எனக்கும் உரிமை இருக்குதான ? அதுவும் இந்த வீட்டுக்கு வரவேண்டிய வாரிசைக் கூட தள்ளி வெச்சு வாழற சூழ்னிலையில?”
ஒரு நிமிடம் மௌனம் மட்டுமே நிலவியது. அவன் அறை வாசலில் நின்று கேட்டுக்கொண்டிருந்த விக்ரமிற்கு விசிலடிக்கத் தோன்றியது.
பர்வதம்மாவின் கன்றிய முகம் சொல்லியது, மாலினி கேட்ட கேள்விக்கு பதிலே கிடையாதென்று. ‘திருமணம் முடிந்து ஒன்பது மாதம் முடியப்போகிறது. மருமகளுக்கு ஏதும் விசேஷமில்லையா ? நீ தெம்பா இருக்கும்போதே வளர்த்து குடுத்துடலாமில்லை ? தள்ளிப்போட வேண்டாம்னு சொல்லு’, என்று பர்வதம்மாவையும்தான் கேட்கிறார்கள்’. காயத்ரியின் மீது கடுப்பாகியது. வீட்டுக்கு வந்தவங்களை நல்லபடியா கவனிச்சு அனுப்ப துப்பில்லாம இந்த பொண்ணு ஆடுனதுல, இப்ப அவளுக்கு பரிஞ்சு கூட பேச முடியலை.
ராகவனுக்கு வலித்தது. மாலினியின் கேள்வியிலும் தப்பில்லை. இப்படி அவன் தாய் பேச்சற்று நிற்பதைப்பார்க்கவும் சகிக்கவில்லை.  எதுவும் செய்ய முடியாத இக்கட்டான அவன் சூழ்னிலையை வெறுத்தான்.  வீட்டு கஷ்டத்தைப்பற்றி கவலைப்படாத தங்கையும், தெரிந்தும் அவளுக்குத் தாளம் போடும் அன்னையையும் நினைத்துக் கடுப்பாகியது.மாலினி இப்படி தோலுரிப்பது அவனையும் சேர்த்தே என்பதுபோல்தான் பட்டது. இதற்காகத்தான் கல்யாணத்தை தள்ளிப் போட நினைத்தான்.  அதுவும்  அவனை மீறி உடனே நடக்க எல்லா பக்கமும் அவனை நெருக்கியது வாழ்க்கை.
அமைதியாய் ராகவன் உள்ளே எழுந்து செல்லவும், அவன் முகத்தில் வந்து போன மாற்றங்களையெல்லாம் பார்த்திருந்த மாலினிக்கு, ‘ஏந்தான் இப்படியெல்லாம் பேசினோமோ ? ஒழியுது என்று இதையும் செய்துத் தொலைத்திருக்கலாம்.’, என்று தோன்றியது. வருத்தம் மேலிட இஸ்திரி பெட்டியை அதனிடத்தில் வைக்கப்போக, பர்வதம்மா,
“இப்ப திருப்தியாமா ? என் பிள்ளையை வருத்தப்பட வெச்சதுல என்னத்தை கண்டுகிட்ட ?”, என்று தன் காரியம் நடக்காமல் போனதில், மருமகளிடம் காய்ந்தார்.

Advertisement