Advertisement

விடியற் காலை எழுந்தவள், வடை கேசரி செய்து, கூடவே பிரியாணியை செய்து, தன் வீட்டிற்கும் பாக் செய்து கொண்டாள். காலை எட்டு மணி போல கிளம்பி சென்றார்கள் இருவரும். வீடு வந்த போது, அஸ்விந்தான் கதவைத் திறந்தான்.
புன்னகை முகமாக அவன் வாழ்த்துகளைப்  பெற்றுக்கொண்டே வர, ஹாலில் அமர்ந்திருந்தார் இளங்கோவன்.
“வாம்மா மாலினி…வாங்க… உட்காருங்க ராகவன்.”, என்றவர் குரலில் ஒன்றும் சுரத்தில்லை.
கிச்சனில் யாரும் இல்லாதது கண்டு, “அம்மா எங்கப்பா ? இன்னேரம் கிச்சனை ஒரு வழி செய்திருப்பாங்கன்னு பார்த்தேன் ?”, என்றபடியே கணவனுக்கு தண்ணீரைக் கொண்டு வந்து தந்தாள் மாலினி.
“அது… அம்மா முடியலைன்னு படுத்திருக்கா. “, இளங்கோவன் சொல்லவும், “ஏன் என்னாச்சு ? ம்மா… “, என்று குரல் கொடுத்துக்கொண்டே பெற்றோரின் அறைக்கு விரைந்தாள் மாலினி.
“என்ன சர்,அத்தைக்கு ?”, ராகவன் கேட்கவும்,  “அது… ஒரு மாதிரி ஸ்ட்ரெஸா இருக்கா நேத்து சாயந்திரத்திலிருந்து. அதான் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கேன்.”, இளங்கோவன் இங்கே பேசிக்கொண்டிருக்க, உள்ளே சீரான தூக்கத்தில் இருந்தார் சகுந்தலா.
சரியென்று வெளியே வந்தவள், அவள் தந்தை சொன்னதைக் கேட்டு ஒருவேளை மெனோபாஸ் படுத்துகிறதுபோல என்று நினைத்து சமையலறைக்குச் சென்றாள். ஒரு இட்லி மாவு கூட இல்லை. ‘தீபாவளிக்கு  இரண்டு நாட்கள் முன் பேசும்போது கூட மெனு கேட்டவர், மாவு கூட அரைக்கவில்லையா?’, என்ற யோசனையில், அஸ்வினை அழைத்து ரெடிமேட் மாவை வாங்கி வரச் சொன்னாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், கேசரி, மைசூர் வெங்காயச் சட்னி தடவிய மசால் தோசை, இட்லி, சாம்பார், சட்னி, கூடவே அவள் எடுத்து வந்த பிரியாணி, தயிர் பச்சடியும் வைத்து தீபாவளி  விருந்தை ஒப்பேற்றினாள்.
மாலினி பின்பு சாப்பிடுவதாய் சொன்னபோதும், ராகவன் அவளையும் உடன் சாப்பிட வைத்தான். உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தது. நேற்று இரவு உடம்புக்கு முடியவில்லை என்றால் ஒரு போன் செய்து சொல்லியிருக்கலாம், அல்லது ஹோட்டலில் இருந்து தருவித்திருக்கலாம். வியர்க்க விறுவிறுக்க மாலினி அங்கேயும் செய்து இங்கேயும் சமையல் செய்ததில் வெகுவாக அயர்ந்திருந்தாள்.
இவர்கள் சாபிட்டு முடிக்கவும், தாயை எழுப்பி சாப்பிடக் கொடுக்கிறேன் என்று உள்ளே சென்றாள்.
“மா… ம்மா….”, மாலினி எழுப்பவும், கண்ணைத் திறந்த சகுந்தலா,மாலினியைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டார்.
“என்னம்மா…உடம்புக்கு என்ன செய்யுது ?”, மாலினி அருகில் அமரவும்,
“அதுக்கென்ன ? மனசுதான் சரியில்லை. நேத்து அந்த துரைசாமி பையன் லோகேஷுக்கு கல்யாணம்னு போயிருந்தோம். என்னா விமரிசையா நடந்துச்சு. நம்ம விட வசதி கம்மி அவங்க எடுத்திருக்கற பொண்ணு. அதுக்கே அவ்வளவு செஞ்சாங்க. எனக்கு வயிறு பொசுங்கிருச்சுடி. எல்லாம் உனக்கு வந்திருக்க வேண்டிய வாழ்வு. உன் தலையில் நீயே மண்ணை அள்ளி போட்டுகிட்டியே ? தோ இந்த இத்துப் போன சுரிதாரை வாங்கியிருக்க தலை தீபாவளிக்கு. ஒரு பட்டுப் புடவை கூட இல்லை.  அந்த மாப்பிள்ளையும் என்னாமா இருக்கான். வெளினாட்டுல இருக்கவனுக்கே அந்த கலரும் ஸ்டைலும் வந்துடும் போல. “, சகுந்தலா புலமப,
“ம்மா… நிறுத்து. உன் மாப்பிள்ளை வெளியதான் இருக்கார். கல்யாணம் முடிஞ்சு இத்தனை மாசத்துக்கு அப்பறம் இப்படி பேசறதே அசிங்கம். போனியா வாழ்த்தினியான்னு இல்லாம, இப்படியா பேசுவ ? அவர் காதுல விழுந்தா எனக்குத்தான் அவமானம்.”, மாலினி கோபத்தில் முகம் சிவக்க அடக்கப்பட்ட குரலில் சீறினாள்.
“என் ஆத்தாமை உனக்கு எங்கடி தெரியப்போது ? எப்படி இருந்திருக்க வேண்டிய என் பொண்ணு இப்படி ஒண்டு குடித்தினத்துல சிங்கியடிக்குதேன்னு மனசெல்லாம் கொதிக்குதுடி. “, சகுந்தலாவும் அவர் பங்குக்கு காய்ந்தார்.
“இப்ப ஒன்னும் செய்யமுடியாது. தலை தீபாவளி விருந்துக்கு எங்களை வர சொல்லிட்டு நீ இப்படி இருந்தா எப்படி ? எழுந்து போய் குளி. டிபன் தரேன்.”, மாலினி அப்போதும் பொறுமையை இழுத்து வைத்துப் பேசினாள்.
“ஆமா… தலை தீபாவளி ஒன்னுதான் இங்க குறைச்சல். ஒரு குழந்தையை பெத்துக்க வக்கில்லை. பணத்தேவைக்குத்தான் நீ தள்ளி போட்டுகிட்டு இருக்கன்னுகூடவா தெரியாது எங்களுக்கு ? அதான் உன் பாஸ் புக்ல வெட்ட வெளிச்சமாக்கிருச்சே. இதுல வந்துட்ட உன் புருஷனுக்கு விருந்து போடுன்னு…”, கண்மண் தெரியாமல் சகுந்தலா கத்தவும், அதிர்ந்து எழுந்துவிட்டாள் மாலினி.
வெளியே வர, சகுந்தலாவின் பேச்சு மூவருக்கும் கேட்டதென்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. ராகவன் விரைந்து சென்று மாலினியின் கைப் பற்ற, அவனை நோக்கியவள், “அப்பா…?”, என்று இளங்கோவனைப் பார்த்தாள்.
“உனக்கு வர வேண்டிய வாழ்வு எவளுக்கோ போகுதேன்னு ரொம்ப கஷ்டப்படறா உங்கம்மா. இதுல நான் என்ன சொல்ல மாலினி ?”, இளங்கோவன் கேட்கவும்,
“போனை பண்ணி, அம்மாக்கு முடியலை, இன்னிக்கு வேண்டாம் வராதன்னு சொல்லியிருக்கலாமேப்பா ? இல்லை எப்பவும் போல கடையில நாலு ஐட்டம் வாங்கியிருக்கலாம் ? இப்படி எங்களை வரவெச்சு அவமானப் படுத்த என்ன ரீசன் ?”
“உங்கம்மா படற கஷ்டம் உனக்கும் தெரியணும்தானம்மா ?”, வறண்ட குரலில் இளங்கோவன் கேட்க, இறுகிப்போனது மாலினியின் முகம்.
அவள் வாங்கி வந்த புதுத் துணிகளை பூஜை அறையில் வைத்தாள், பர்சிலிருந்து ஒரு டிக்கெட்டை எடுத்து அஸ்வினிடம் கொடுத்தவள்,
“ஈவினிங் ஷோ. வந்துடுடா. நாங்களும் விக்ரமும் வர லேட்டானாலும் நீ உள்ள போயிடு. ”, என்றவள், “நாம கிளம்பலாங்க….”, என்றாள் ராகவனைப் பார்த்து.
“நீ போம்மா. ஒரு நிமிஷம் நான் கொஞ்சம் பேசிட்டு வரேன். “, என்று மாலினியை கீழே அஸ்வினுடம் அனுப்பிவிட்டு மாமனாரைப் பார்த்தவன்,
“மாலினி அம்மாவோட அங்கலாய்ப்பு புரிஞ்சிக்க முடியுது சர். ஆனா உங்களோட இந்த அமைதியான வன்மம்தான் மாலினியை ரொம்ப ஆழமா காயப்படுத்துது. பொண்ணைப் பெத்தவங்க, மாப்பிள்ளைக்கும் அவங்க வீட்டாளுக்கும் அத்தனை மரியாதை குடுக்கறது, நம்ம பொண்ணை அவங்க எதுவும் பேசிடக்கூடாது, அவளுக்கு அதனால ஒரு கஷ்டம் வந்துடக்கூடாதுன்னுதான். ஆனா அந்த நினைப்பே இல்லாம உங்களால எந்த தைரியத்துல இப்படி இருக்க முடியுதுன்னு கொஞ்சம் யோசிங்க சர். நாம எப்படி அசிரத்தையா நடந்துகிட்டாலும், அது பொண்ணை பாதிக்காதுன்னு அவ்வளவு நம்பிக்கை. அது எங்க, எப்படி உங்களுக்கு வந்துச்சுன்னு யோசிங்க.
நீங்களே சொல்லியிருக்கீங்க, பணமில்லைங்கற ஒரு குறையைத் தவிர என்னை மாலினி செலக்ட் செய்ததுல உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னு. நீங்களே ஒரு வரன் தேடினாலும், அவங்கிட்டயும் எதாவது ஒன்னு ரெண்டு குறை இருந்திருக்கும்தான ? பொறுத்து போக சொல்லியிருப்பீங்கதான மாலினியை? அப்பறம் ஏன் இவ்வளவு குரோதம் எங்கிட்ட? நாட்ல நாங்க மட்டும்தான் குழந்தையை தள்ளிப் போடறோமா? இல்லை வருஷக்கணக்கா தள்ளிப்போட்டிருக்கமா ? நல்லா ஞாபகம் வெச்சிக்கோங்க சர். எந்த ஒரு இடத்திலயும் நான் மாலினியை விட்டுக்கொடுக்கலை. என்னை அவமானப் படுத்தறதா நினைச்சு நீங்க செய்யறது எல்லாம் அவளைத்தான் காயப்படுத்துது. மாலினியைப்பத்தி நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. அவ உங்க உறவே வேண்டாம்னு வெறுத்து ஒதுக்கிடற மாதிரி செய்யாதீங்க. எனக்குத்தான் அப்பா இல்லை. அவளுக்கு இருந்தும் இல்லைங்கற நிலைமைக்கு வந்துட வேண்டாம். “, அழுத்தமாகக் அவர் கண் பார்த்துக் கூறியவன், மறுபேச்சின்றி கிளம்பிவிட்டான்.
கேட்டுக்கொண்டிருந்த இளங்கோவன் சற்று ஆடித்தான் போனார். “என்னங்க, இப்படி சொல்லிட்டு போறான் ராகவன்.”, அறை வாசலில் கேட்டுக்கொண்டிருந்த சகுந்தலா வரவும், மனைவியைப் பார்த்தவர், “ தப்பு பண்ணிட்டோம்னு நினைக்கறேன் சக்கு. கொஞ்சம் எல்லை தாண்டித்தான் போயிட்டோம்.”, என்றார் யோசனையாக.
“என் கஷ்டம் உங்களுக்குப் புரியலையா? என்ன எல்லை தாண்டிட்டேன் நான்? என் பொண்ணு நல்லா இருக்கணும்னு எனக்கு ஆசையிருக்காதா?”, சகுந்தலா மீண்டும் ஆவேசமாகக் கேட்டார்.
“மா… கொஞ்சமாச்சம் புத்தியோடத்தான் பேசறீங்களா? அக்காக்கு கல்யாணமாகி ஆறு மாசமாச்சு. இன்னமும் அவளை வேற ஒருத்தர் கூட எப்படி பேசுவீங்க? இல்லை அப்படித்தான் இனி மாத்தமுடியுமா? இப்ப  நீங்க அடிச்ச கூத்துல என்ன நல்லத கண்டுகிட்டீங்க ? விசேஷ நாளும் அதுவுமா அக்காவை அழ வெச்சு, மாமா மனச நோகடிச்சதுல உங்களுக்கு சந்தோஷமா?  “, அஸ்வின் கத்த சகுந்தலா கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது.
“அஸ்வின், அம்மா மெனோபாஸ் ஸ்ட்ரெஸ்ல பேசறா. மாலினிக்கும் தெரியும். நீ விடு.”, மகனுக்கு சொல்வது போல இளங்கோவன் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டார்.
பெற்றோரை நக்கலாகப் பார்த்தவன், “நினைச்சிக்கோங்க. நான் ஃப்ரெண்டு வீட்டுக்குப் போயிட்டு அப்படியே அக்கா கூட சினிமா போயிட்டு லேட்டாத்தான் வருவேன். “, பூஜையறைக்குச் சென்று அக்கா வைத்த துணிகளில் அவனுக்கு இருந்த டீ-ஷ்ர்ட்டை எடுத்து மாற்றிக்கொண்டவன், “ஹ்ம்ம்… ஆசையா உங்களுக்கும் எடுத்துட்டு வந்திருக்கா.”, என்று கசப்பாய்க் கூறியவன், கிளம்பிவிட்டான்.
 மாமனார் வீட்டிலிருந்து கிளம்பியவன் சென்றது மாலினிக்கு பிடித்தமான அஷ்டலக்ஷ்மி கோவில் அருகில் இருக்கும் கடற்கரைக்கு.  வண்டியை நிறுத்தியவன்,
“மாலினி,  இறங்குமா…”, ராகவன் குரல் கேட்டு நினைவுக்கு வந்து இறங்கியவள், ஒரு நிமிடம் சுற்றுப் புறம் பார்த்து முழித்தாள்.
“இப்பவே எங்க நம்ம வீட்டுக்குப் போறது? வா பீச்ல கொஞ்சம் நேரம் இருப்போம், நல்ல வேளை வானம் மூடியிருக்கு.”, கண்ணீர் கோடுகள் இருந்த அவள் கன்னங்களை தன் கைக்குட்டையால் துடைக்க, மூக்கை உறிஞ்சியவள், அதை வாங்கிக்கொண்டாள்.
மெதுவாக நடந்து நிழலாய் ஒரு இடம் பார்த்து அமர, மாலினியைத் தன் தோள் மேல் சாய்த்துக்கொண்டான்.
“ஏன் ரகு… என்ன செய்தோம்னு இவ்ளோ கோவம் ? அப்படி என்ன காசுக்கு இல்லாம போயிட்டோமா ? இல்லை நம்மால உறவுகளுக்கு முன்னாடி இவங்களுக்கு தலை குனிவா? நான் சத்தியமா இதை எதிர்பார்க்கலை ரகு.”, மாலினி உடைந்து போன குரலில் கூறவும், என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் விகித்தான் ராகவன்.
“நேத்து கல்யாணம் பார்த்ததுல உங்க அம்மா அப்செட். அது கூட புரிஞ்சிக்கலாம் மயிலு. ஆனா உங்க அப்பா….”
“அதுதான் என்னால ஜீரணிக்க முடியலை ரகு. அத்தனை நல்ல புக்ஸ் படிப்பார். ஒழுக்கத்தை, நேர்மையை பத்தி அவ்வளவு பேசுவார். உங்களை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்னு நினைச்சேன் ரகு.”, குழந்தையாய் அவன் முகம் பார்த்து ஆறுதல் தேடுபவளை தோளணைத்து தாங்கிக்கொண்டான்.
“அவர் எதிர்பார்த்தபடி, அவர்கிட்ட காசு வாங்கி, பவ்யமா நான் நடந்திருந்தா மே பீ, என்னை உதாசீனமா நடத்தினதோட விட்டிருப்பாராக்கும். நான் வேற ரூம் எடுத்துக் கட்டலை. குழந்தையை தள்ளிப்போட்டிருக்கோம்.  உனக்கும் அதில் ஆட்சேபனை இல்லைன்னவும், எதோ அவர் தன்மானத்தை ரொம்ப தாக்கியிருக்கு போல. நீ புகுந்த வீட்ல சமாளிக்க முடியாம திரும்ப வந்துடுவன்னு நினைச்சிருக்கலாம். அப்படியில்லாம நாம நல்லா இருக்கவும் அதுவும் இப்படி ஒரு வன்மத்தைக் கிளப்பிவிட்டிருக்கலாம். உன் மேல ரொம்ப ரொம்ப பாசமும் எதிர்பார்ப்பும் இருந்திருக்கு மாலினி அவருக்கு.  நீ தனிச்சையா என்னை செலக்ட் செய்தது, அவருக்குள் ஒரு ஏமாற்றம் இருந்திருக்கணும். அவரையும் மீறி அது வெளிய வருதுன்னு நினைக்கறேன்.”, ராகவன் பொறுமையாக அவளுக்கு விளக்கினான்.
“அவர் உனக்கு ஒரு பிம்பம்னு தெரியும் மாலினி,  பொண்ணுங்களுக்கு அப்பாக்கள் எப்பவும் அப்படித்தான்.ஆனா அவரும் மனுஷந்தான? “, அப்போதும் தெளிவில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“மாலினி, நீ ஷாக்ல இருக்க. இப்ப எதுவும் யோசிக்காத. அவங்களை வெறுக்காத. விட்டுப் பிடிக்கறதைத் தவிர இப்ப நாம ஒன்னும் செய்ய முடியாது. நீ வருத்தப்படாதம்மா. ப்ளீஸ்.”, ராகவன் கெஞ்சலாக முடிக்க, தன்னைத் தேற்றிக்கொண்டவள்,
“ அவங்க செஞ்ச இந்த வேலைக்கு, நீங்க அவங்க முன்னாடி என்னை ஒரு அறை குடுத்து அங்கயே விட்டுட்டு வந்திருக்கணும். அப்ப தெரிஞ்சிருக்கும் அவங்களுக்கு, வீட்டு மாப்பிள்ளையை இப்படி நடத்தினா என்னாகும்னு.”, அவனை கோவித்தாள்.
“அதையே சாக்கா வெச்சி இன்னும் உன்னைத்தான் வதைப்பாங்க. நான் சொல்லிட்டு வந்திருக்கேன் மாலினி.உங்க அம்மாக்கு புரியலைன்னாலும், உங்க அப்பாக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும். “
“இனி அவங்க கிட்ட பேசினாத்தான ? என் பாணில நான் விட்டுபிடிக்கறேன். நானும்  சரி சரின்னு போனா ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துகிட்டாங்க.”, மாலினி மூக்கு விடைக்க,
“ கூல் மயிலு. நம்ம உறவுகள் நம்ம தலை தீபாவளியையும் கொளுத்திட்டாங்க. இனி சாய்ஸ் நமக்குத்தான். இதையே நினைச்சு, பேசி இருக்கற மிச்ச நாளையும் விடப்போறோமா, இல்லை எல்லாத்தையும் தூக்கி தூர போட்டுட்டு இருக்கற நேரத்தை சந்தோஷமா வெச்சிக்கப்போறோமா ?”, அவள் நாடி பிடித்து கேட்க,
“ஹ்ம்ம்…. நாமளா நம்ம சந்தோஷத்தை அமைச்சிக்கலைன்னா, யாரும் நமக்காக செய்யப்போறதில்லை. வாங்க, கொஞ்ச நேரம் தண்ணில காலை நினைச்சிட்டு போய் ஃபலூடா சாப்பிடலாம். ஒன் பய் டூ.”, முயன்று மனதை மாற்றி அவனைப் பார்த்துக் கண்ணடித்தாள்.
தனக்காகவே மீண்டு வருபவளைக் கண்டு பெருமை கொண்டான் ராகவன். இப்படி ஒரு பொக்கிஷமானவளை அருமை தெரியாமல் போட்டு நெருக்குகிறார்களே இரு பக்க உறவுகளும் என்று உள்ளுக்குள் வருந்தினாலும், அதை மறைத்து அவள் விளையாட்டுக்கு ஈடுகொடுத்தான்.

Advertisement