Advertisement

அத்தியாயம் – 16
மதிய உணவு நேரத்தில் மாலினியின் அம்மா அழைத்தார்.
“ஹலோ… மா…?”
“மாலினி… எப்படி இருக்க ? காதுகுத்து எல்லாம் நல்லா முடிஞ்சுதா ?”
“ஹான்… நல்லா போச்சுமா.  நீ என் மாமியார் கிட்ட விசாரிச்சுடு. ஒரு ஃபார்மாலிட்டிக்கு.”
“ம்க்கும்… “,அந்த ஒற்றை சொல்லில் கூட, வழக்கமான இளக்காரம் வழிந்தது.
“மா…” , மாலினியின் குரல் எச்சரிக்கும் தொனியைக் கையில் எடுக்க,
“பண்றேண்டி…. எப்ப வந்து சேர்ந்தீங்க ? மறுனாளே விழுந்தடிச்சு ஆபிஸ் வரணுமா ?”, கதை கேட்கும் ஆர்வத்தில் பணிந்து வந்தார் சகுந்தலா.
“இல்லைமா, நானும் அவரும் பங்க்ஷன் முடிஞ்சு சாயந்திரமே  கிளம்பிட்டோம். நேத்தெல்லாம் படுத்து ரெஸ்ட் எடுத்திட்டுதான் வந்தேன். “
“ஓ… அப்ப உங்க மாமியாரு ?”
“அவங்களும் விக்ரமும்  நேத்து நைட் வந்தாங்க.”
“எல்லாரும் ஒண்ணா கிளம்பி வரதாதானே இருந்தீங்க ? ஏன் மாறிடுச்சு ? அங்க எதாச்சம் நடந்துச்சா ?”, சகுந்தலா கேள்விகளை அடுக்கவும்,
“மா.. CBI என்கொயரி மாதிரி வளைச்சு வளைச்சு கேள்வி கேக்கற ? போன வேலை முடிஞ்சுது. கிளம்பி வந்தா ரெஸ்ட் எடுக்கலாமேன்னு வந்துட்டோம். பொண்ணுகிட்ட பேச மாமியார் தங்கி வந்தாங்க. அவங்களை கூட்டிட்டு வர விக்ரம் இருக்கவும், நாங்க கிளம்பினோம். போறுமா விளக்கம் ?”, மாலினி கண்களை உருட்டி, உதட்டை சுழித்ததெல்லாம் சகுந்தலாவிற்கு நல்ல வேளையாகத் தெரியவில்லை.
 “ம்ம்… அப்ப மீனாட்சி அம்மன் கோவில் போகலையா ?”, ம்ம் அடுத்த ஆங்கிள்ல வரீங்களா என்று உள்ளுக்குள் பெருமூச்சு விட்டவள்,
“அழகர் கோவில் வெள்ளிக்கிழமை சாயந்திரம் போனோம். முடிச்சுட்டு அப்படியே வரிசை தட்டுக்கான பழம், பூ  எல்லாம் வாங்கிட்டு வந்தோம் மா. ஞாயிறு தங்கிருந்தா, காலையில மீனாட்சி கோவிலுக்கு போயிருப்போம். “
“ஏண்டி…வரிசை தட்டுக்கு பழம் , பூ கூட நீதான் போய் வாங்கணுமா ? ஏன் உன் நாத்தனா வாங்கி வெக்க வேண்டியதுதான ? இவ்ளோ ஆச்சுன்னா குடுத்துடப் போறீங்க ? அது கூட முடியாதாமா அவளால?”, அட ராமா…எதைச் சொன்னாலும் அதிலர்ந்து ஒரு கேள்வியைப் பிடிக்கறாங்களே, என்று பல்லைக் கடித்தவள்,
“நாங்க சொல்லலை, அவளும் வெக்கலை. அதுக்கு என்ன இப்ப ?”
“சரி சரி… நீ கோவப்படாத… இதெல்லாம் சொல்லுவாங்களா ? அவளுக்கே தெரியணும். போகுது, அவங்க என்ன பதில் மரியாதை செஞ்சாங்க ?”
“என்ன செய்வாங்க… ட்ரெஸ் வெச்சி குடுத்தாங்க.”, சுருக்கமாய் முடிக்கப் பார்த்தாள். விடுவாரா சகுந்தலா,
“அதான். என்ன விலையில குடுத்தாங்க புடவை ? என்ன மாதிரி புடவை ?”
“மா… படுத்தற மா… பில் எல்லாம் கிழிச்சிருந்தாங்க.  ரெண்டு சேலையும் அவ அம்மாக்கே எடுத்துட சொல்லியிருந்தேன் காயத்ரிகிட்ட. அது மாதிரியே எடுத்திருந்தா.”, பூசி மெழுகினாள்.
“ஏன் மாலினி ?  நீ… “, எதோ சொல்ல வந்தவரை,
“மா… அவ எடுக்கறது எனக்கு புடிக்குதோ இல்லையோ கட்டிக்கணும். இதெல்லாம் தேவையா ? அதான் இப்படி சொல்லவும் மாமியாரும் ஹாப்பி. எனக்கும் ப்ரச்சனையில்லை.  விடுவியா ?”, சட்டென்று தோன்றிய பாயிண்ட்டைச் நினைத்து தன்னைத்தானே மெச்சிக்கொண்டாள் மாலினி.
“ம்ம்.. அதுவும் சரிதான். அவ கட்டியிருந்த புடவைங்க எல்லாம் அப்படி ஒன்னும் நல்லாயில்லதான்…”, சகுந்தலா இழுக்கவும், இதுதான் சரியான நேரம் என்று,
“மா…  டைம் ஆச்சு, வேலையைப் பார்க்கறேன். நீ மறக்காம மாமியார்கிட்ட பேசு. புதுசா எந்த தலைவலியும் கிளப்பாம பேசு. சரியா.”
“நான் ஒன்னும் சொல்லிட மாட்டேன் உன் மாமியாரை. அவங்களுக்கு தப்பா படலைன்னாலும் உனக்கு தோணும் எதாச்சம். “ என்று நொடித்தார்.
மேலும் இரண்டு நிமிடம் பேசித்தான் வைத்தார் அதுவும் அந்த வாரம் அவள் வருவதாய் ஒப்புக்கொண்டபின். ஒரு முதலைகள் நிறைந்த நதியைக் கடிபடாமல் நீந்தி வந்தது போல இருந்தது மாலினிக்கு.  ‘நமக்கும் சமாளிக்கற திறன் வருது போலவே. போன்லன்னவே பொழச்சோம். இன்னும் நேர்லையும் மாட்டிக்காம இப்படி சமாளிக்க பழகிக்கணும் மாலினி.’, என்று தனக்குத்தானே மெச்சிக்கொண்டாள்.
அந்த ஞாயிறு ராகவன் அவன் நண்பர்களுடன் வெளியே செல்லவிருந்ததால், மாலினி அவள் அம்மா வீட்டிற்கு கிளம்பினாள். மதியம் சிக்கன் ப்ரியாணி செய்து தம்பியுடன் கலாட்டாவாக பொழுது சென்றது.  அவள் அறையில்  ஒரு குட்டி தூக்கம் போட சென்றதுதான் தவறாகிப்போனது. அதுவும் தன் வீடுதானே என்று அவள் கைப்பையை ஹாலிலேயே எப்போதும் போல விட்டுப்போனது இன்னும் தவறு.
சகுந்தலாவும் வேண்டுமென்று பார்க்கவில்லை. அந்த நேரம் தண்ணீர் கேன் போடும் பையன் வரவும், அவசரத்திற்கு சில்லரை வேண்டி, அவள் காயின் பர்ஸை திறந்து எடுத்துக் கொடுத்தார். இதுவும் புதிதில்லை.
திரும்ப வைத்து ஜிப் போட போகும்போது, அவளது பாங்க் பாஸ் புக் கன்ணில் பட்டதுதான் மாலினியின் துரதிர்ஷ்டம். இந்தப் பெண் எதுவும் சொல்லுவதில்லையே என்று எடுத்துப் பார்த்தார்.
சம்பளம் வருவது, மாதம் முழுவதும் அதிலிருந்து எடுப்பதும், மாத முடிவில் ஆயிரம் ரூபாய் போலத்தான் மீதமிருப்பதும் தெரிய வந்தது. அதுவும் இந்த மாதம், அக்கவுண்டில் மாத மத்தியிலேயே முக்கால்வாசி சம்பளம் காலாவதியாகியிருந்தது. அவள் பர்ஸை எடுத்துப் பார்த்தார், நான்கு  நூறு ரூபாய் இருந்தது, கொஞ்சம் சில்லரை நோட்டுகள்.
பார்த்தவருக்கு வயறு எரிந்தது. கல்யாணத்திற்கு முன் வரை எவ்வளவு புஷ்டியாய் இருக்கும் அவளது கையிருப்பும், பர்சும்.  அவர் எதிர்பார்த்ததுதான் நடக்கிறது. அவளது உழைப்பை உறிகிறார்கள் மாமியார் வீட்டில். படுபாவிகள். இவளே தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாளே. பலவாறாக அவர் சிந்தனை தறிகெட்டு ஓடியது. கணவனை எழுப்பிக் காண்பித்தார், கண்களில் நீருடன்.
“நீ ஏன் சகுந்தலா எடுத்துப் பார்த்த?  அவளுக்கு தெரிஞ்சா கோவப்படப்போறா. குடும்பம் பெரிசு. என்ன செய்ய? அவ தலையெழுத்து அப்படித்தான்னா என்ன பண்ணமுடியும்? கொண்டுபோய் வை.”, ஒரு பெருமூச்சுடன் திருப்பிக் கொடுத்தார்.
சகுந்தலாவிற்குத்தான் மனதே தாளவில்லை.  செழிப்பாய் வளர்ந்த மகள். மனம் கனன்று கொண்டே இருந்தது. தூங்கி எழுந்து மாலினி வந்ததும் காபியை போட ஆரம்பித்தவர், கூடவே அவளுக்குப் பிடிக்கும் என்று பஜ்ஜி போட ஆரம்பித்தார்.
மாலினி கூட வந்து உதவி செய்ய, சட்டென்று வேலை முடிந்து வந்து அமர்ந்தார்கள். அஸ்வின் வெளியே சென்றிருக்க  தாய் தந்தை மட்டுமே. மெதுவாய் பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கையிலேயே, சகுந்தலா,
“ஏன் மாலினி,  பார்லர் பொண்ணு தீபா நீ ஏன் வரதில்லைன்னு கேட்டா. நீ ஃபேஷியல் செய்துக்கலையா ?”
உதட்டை  சுழித்த மாலினி, “இல்லைமா, ரெண்டு மணி நேரம் ஆக்கிடுவா. டைம் இல்லை.”, என்றவள், அதுக்கு கொடுக்க இரண்டாயிரம் ரூபாயும் இல்லை என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
“இன்னிக்கு பூரா இருந்துதே ? டைம் இல்லையா இல்லை காசில்லையா?”, சகுந்தலாவின் கனன்று கொண்டிருந்த மனது சாட்டையை எடுத்தது.
“மா… நான் காசில்லைன்னு உங்ககிட்ட சொன்னேனா ?”, மாலினி வழக்கம்போல அம்மா போட்டு வாங்குவதாக நினைத்து சொல்ல,
“நீ எங்க சொல்ற? உங்க வீட்டைப்பத்தி எது கேட்டாலும் வாயை இறுக்க மூடிக்கிறியே?”
“ஒன்னு ரெண்டு வாட்டி உங்கிட்ட சொன்னதுக்கு நான் பட்டதே போறும். இப்ப எதுக்கு இதை ஆரம்பிக்கற நீ?”, கடிந்தாள்.
“சகுந்தலா… சும்மா இரு. “, இளங்கோவன் இடைமறித்தார்.
“என்னத்தை சும்மா இருக்கறது?  மாசமானா ஃபேஷியல் செய்யற பொண்ணு, இப்ப காசுக்கு கணக்கு பார்த்துகிட்டு, எனக்கு தெரிஞ்சு ஆறு மாசமா செய்யலை.”
“மா, இது ஒரு ப்ரச்சனையா உனக்கு. விடும்மா. “, சலித்தாள் மாலினி.
“எப்படி விட சொல்ற. உங்க மாமியார் வீட்ல அட்டைபூச்சி மாதிரி உன் சம்பளத்தைத்தான் உறியறாங்களே!”
“உஃப்… மறுபடி நீயா எதாவது கற்பனை செய்யாத…”, மாலினி இடை வெட்டப் பார்த்தாள்.
“கற்பனையில்லைடி… பஞ்சத்துல அடிபட்டிருக்கற உன் பாஸ்புக்கை பார்த்துட்டுத்தான் சொல்றேன். அம்பதாயிரத்துக்கு குறைஞ்சு எப்பவும் இருந்ததில்லை அதுல. இப்ப மாசக் கடைசில ஆயிரம் ரூபாய் கூட இருக்கறதில்லை. இப்படித்தான் இருக்கும்னு நான் தலைப்பாடா அடிசிக்கிட்டேன், கேட்டியா? “
திக்கென்றானது மாலினிக்கு. நீ ஏன் என் ஹாண்ட்பாகைப் பாத்த? நம்ம வீடுன்னு நான் போட்டுட்டு போனா, நீ அதை பிரிச்சி பார்ப்பியா?  அப்பா…”, தந்தையிடம் முறையிட,
“ஏன்? இதுக்கு முன்ன நான் உன் பையை பார்த்ததில்லையா? சில்லரை வேணும்னு திறந்தேன். திரும்ப மூடவும், கண்ணில் பட்டுது.  நீ பேச்சை மாத்தாத.”, சகுந்தலா பாய்ந்தார் மகள் மேல்.
எழுந்து கை கழுவியவள்,  பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
“என்னடி, நான் கேட்டுகிட்டு இருக்கேன். நீ பாட்டு கிளம்பற ?”, சகுந்தலாவின் குரல் ஏறவும்,
“எதுக்கு கத்தற? என் உழைப்பு, என் சம்பளம், என் வீட்டுகாரர்க்கு குடுக்கறேன். அதுக்கு நான் உனக்கு எந்த விவரமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கிட்ட காசு வேணும்னு நான் வந்து நின்னா, அப்ப கேளு, பதில் சொல்றேன். ஆனா, அப்படி ஒரு நிலைமை வராது. வர ரகு விடமாட்டார்.”, கண்ணில் நீர் கோர்த்தாலும், குரலின் தீர்க்கம் மாறாது கூறிவிட்டு, அவள் அம்மா கூப்பிட கூப்பிட வேகமாய் படிகளில் இறங்கிவிட்டாள்.
மனம் வெகுவாக வலித்தது.அம்மாவை வேப்பிலை அடிக்க வேண்டும் என்று வந்ததென்ன, இப்படி ஓடி வருவதென்ன. தன் நிலை குறித்து வெகுவாய் குன்றிப்போனாள். அவள் எப்போதும் செல்லும் துர்கை கோவிலுக்குச் சென்றாள். ராகு கால பூஜை ஆரம்பித்திருந்தது.
மனக்குமுறலை துர்கையிடம் கொட்டினாள். ‘நாங்களும் தலை நிமிர்ந்து வாழவேண்டும். அதை நடத்திக்காட்ட தைரியத்தைக்க்கொடும்மா.  என் ரகுவின் அருமையை எங்க அம்மாக்கு புரியவை தாயே. இப்படி என்னை அல்லாடவிடாதே.’, என்று மனதாற வேண்டினாள். துர்க்கை செவி சாய்ப்பாளா?
அதன்பின்னும் வழக்கம் போல மதியம் அவள் அன்னை பேசவும், ஒட்டும் ஒட்டாமலும் பேசி வைத்தாள்.
அடுத்த விசேஷமாக  தலை தீபாவளி வந்தது. முறையாக வீட்டிற்கு வந்து அழைக்காவிட்டால் வரமாட்டோம் என்று மாலினி அவள் அன்னையிடம் கறாராகச் சொல்லியிருந்தாள். எதற்காகவும் ராகவனுக்கு அளிக்கப்படும் மரியாதை குறையக் கூடாது என்று நினைத்திருந்தாள்.
அதனால் ஒரு ஞாயிறு மாலை, இனிப்பு காரத்துடன் வீட்டிற்கு வந்து அழைத்துவிட்டுப்  போனார்கள். விக்ரமும் பர்வதம்மாவும் தங்களுக்கு காயத்ரி வாங்கியதே போறும் புதுத் துணி வேண்டாம் என்றுவிட்டார்கள். மாலினி சுரிதார் மட்டும் எடுத்துக்கொண்டாள்.  சகுந்தலா அவளுக்கு புடவையும் ராகவனுக்கு பேண்ட் சட்டையும் எடுக்கச் சொல்லி பணத்தைக் கொடுத்துவிட அதையும் மாலினியே எடுத்தாள். அப்போதே, அவள் பெற்றோருக்கும், அஷ்வின், விக்ரமிற்கும் எடுத்தாள். உன் பெற்றோருக்கு திரும்ப வைத்துக்கொடுக்க எடுத்துவிடு என்று ராகவனுமே சொல்லியிருந்தான். தலை தீபாவளியை கொண்டாடும் பொருட்டு தனுஷின் புதிய படத்திற்கும் நாலு டிக்கெட் விக்ரம், அஷ்வினிற்கும் சேர்த்து மாலைக் காட்சி புக் செய்திருந்தார்கள்.

Advertisement