Advertisement

“அது ராகவா… கிளம்பும்போது காயத்ரிக்கு வெச்சி குடுத்துட்டு வந்துட்டேண்டா.”, என்றார்.
“எதுக்கு ? ஒரு எமர்ஜென்சின்னுதான உங்ககிட்ட குடுத்தேன் ? அப்ப, காசே இல்லாமத்தான் வந்தீங்களா நேத்து?”,  சற்று அதிர்ந்து ராகவன் கேட்கவும்,
“என்னடா ஆகிடப்போது ? டிக்கெட் நீ எடுத்துட்ட ? விக்ரம் கிட்ட ஒரு இரு நூறு இருந்துச்சு. சரின்னு குடுத்துட்டேன். “, சாதாரணமாய்க் கூறினார் பர்வதம்மா.
ராகவன் விக்ரமைப் பார்க்கவும், “என்னை எதுவும் கேட்காதீங்கண்ணா. நான் சொன்னேன். நடு வழியில எதாச்சம் ப்ரேக் டவுன் ஆச்சுன்னா பிரச்சனை ஆகிடும்மான்னு. திருவாயை வெக்காதேடான்னு என்னைத்தான் திட்டினாங்க.”, என்று ஒதுங்கிக்கொண்டான்.
“ஆமாம். உன்னாலதானடா வந்தது ப்ரச்சனையே ?  மானாவாரியா உன் மாமங்கிட்ட ட்ரெஸ் வாங்கிட்டு வந்துட்ட ? காயத்ரி எங்கிட்ட புலம்பறா ? நீ காசை வெச்சி குடுக்கறா மாதிரி ட்ரெஸ் காசைக் குடுன்னு. ரெண்டாயிரமே கம்மி. அவ்வளவு செலவு நீ அவங்களுக்கு வெச்சிட்டு, எங்கிட்ட பேசற ?”, பர்வதம்மா பாயவும், முகம் சிவந்த விக்ரம்,
“ நான் கேட்டனா ? அத்தனை வாட்டி வேண்டாம் மாமான்னு தலைப்பாடா அடிச்சிகிட்டேன். அவர்தான் கேக்காம உனக்கு எதுவும் வெச்சி தரலைடா, காலேஜ் சேர்ந்தா யூஸ் ஆகும்னு வாங்கிக் தள்ளினார். அதுனால  நான் காயத்ரிகிட்ட அசிங்கப்பட்டதுதான் மிச்சம்.” , என்று பொரிந்தான்.
“என்ன நடந்துச்சு விக்ரம் ?”, ராகவன் கேட்க,
“அண்ணா, தயவு செஞ்சு இனிமே என்னை இப்படி காயத்ரி வீட்ல தனியா விடாதீங்க.  உங்களோட போனா, உங்களோடவே வரேன். எல்லார்கிட்டயும் என்னால அசிங்கப்படமுடியலை.”, சொல்லி முடிக்கையிலேயே குரல் தழுதழுக்க தலை குனிந்தவன் அவன் அறைக்கு விறு விறுவெனச் சென்றுவிட்டான்.
ஒரு நொடி அமைதியை குக்கர் விசில் குலைத்தது. அது அடங்கவும்,
“மாப்பிள்ளை அவனுக்கு ட்ரெஸ் எடுத்து குடுத்தார். எனக்கே பட்டுச்சு, எனக்கு மட்டும் குடுத்துட்டு அவனுக்கு குடுக்கலையேன்னு. இப்ப புரியுது காயத்ரி வேலைன்னு. அதை மாப்பிள்ளை சரி செய்திருக்கார். அதுக்கு  நீங்க ஏன் பணம் தரணும் ?”, ராகவன் தாயைப் பார்த்து கேட்டான்.
“ஏண்டா, ஒன்னு கொடுத்தா பரவாயில்லை. மாப்பிள்ளை நாலு எடுத்து கொடுத்திருக்கார்.  பதிலுக்கு நாம செய்யணும் இல்ல ? அப்பத்தான காயத்ரிக்கு மரியாதை ?”, பர்வதம்மா சப்பை கட்டு கட்டினார்.
“மா… நாம முக்கால் பவுன் வெச்சி, வரிசை தட்டு துணி மணின்னு குடுக்கவும் அவங்க செஞ்சதுதான் பதில் மரியாதை. அதுக்கும் நீங்க பணத்தை குடுத்தா ? இந்த விசேஷத்துக்கு மட்டுமே மொத்தம் எவ்வளவு செலவு தெரியுமா ? ஒன்னுக்கு ரெண்டா புடவை வேற உங்க பொண்ணுக்கு. அதெல்லாம் போறாதுன்னு, வீட்டு செலவுக்கு வெச்சிருந்ததையும் தூக்கி குடுத்துட்டு வந்திருக்கீங்க.” , எரிந்து விழுந்தான் ராகவன்.
 இவர்கள் பேசும்போதே, மாலினி விக்ரமின் பின் சென்றவள், அவனிடம் விஷயத்தைக் கேட்க, இருந்த ஆதங்கத்தில் எதையும் மறைக்காமல் கொட்டிவிட்டான். மாலினிக்கு தாளாத கோவம்.தான் அடுத்த வீட்டுப் பெண் என்பதால் இந்த பிடுங்கல் என்று நினைத்தால், தன் தம்பியிடம் கூடவா இந்தப் பெண் இப்படி நடப்பாள். இதற்கு இந்தம்மாவும் ஒத்து ஊதுகிறதே என்று.
“ அத்தை. நீங்க எவ்வளவு செஞ்சாலும், காயத்ரியை அந்தம்மா பாராட்டாது.  இருந்த ஒரு நாள்லதான் பார்த்தோமே. இவ கொஞ்சமாச்சம் பொறுப்பா இருந்தா அவங்க ஏன் திட்ட போறாங்க. “, என்றாள் மாலினி.
“திட்டினாங்களா ? நம்ம வளர்த்த வளர்ப்பை கழுவி கழுவி ஊத்தினாங்க. நல்லதா நாலு புத்தி மதி சொல்லிட்டு வராம, அவ கேட்டான்னு இருந்த காசையும் குடுத்துட்டு வந்து நிக்கறீங்க.”, ராகவன் மீண்டும் பாய்ந்தான்.
“டேய், விக்ரமுக்கு நாலு துணி எடுத்தா , அவ நாத்தனாருக்கு பத்து எடுத்து குடுக்கறாங்கன்னு  அழறாடா காயத்ரி. எனக்கு தெரியும்டா அந்த கஷடம் என்னன்னு.  தீபாவளி போனஸ்ல டி.நகர் கூட்டிட்டு போய் நல்லதா துணி எடுக்கறதா உங்கப்பா சொல்லிருப்பார். கரெக்டா ஒரு வாரம் முன்ன வந்துடுவாளுங்க உங்க அத்தைங்க ரெண்டு பேரும். அவரோட கடைக்குப் போய் எல்லா பணத்தையும் கரைச்சிட்டு அங்கிருந்தே கிளம்பிடுவாங்க,  என் கண்ல காமிச்சா நான் பொறாமை பட்டுடுவேன்னு நினைப்பு. கடைசீல, சீப்பா ஒரு வாயில் சேலையும், உங்களுக்கு சாதா சட்டை , நிஜாரு, கவுனுன்னு முன்னாள் வாங்கிட்டு வருவார்.  மீறி கேட்டா ? உங்க அம்மா வீட்டுல தீபாவளிக்கு சீர்னு பட்டு புடவை வெச்சிகுடுக்க சொல்லுன்னு பேசுவார்.  எப்படியிருக்கும் எனக்கு நீயே சொல்லு மாலினி ? எங்கம்மாவே என் அண்ணன் கிட்ட ஒண்டியிருக்கு. என் அண்ணி பிடாரிகிட்ட நான் என்னத்தை கேக்க முடியும் ? அப்படியெல்லாம் என் பொண்ணு பேச்சு வாங்கிடக் கூடாதுன்னுதான் முடிஞ்சதுக்கு மேலயே செய்யறோம்.”, என்று கண்ணீரைத் துடைக்க, காலையில் அழும் அம்மாவிடம் என்ன சொல்ல என்று சங்கடப்பட்டு,
“சரி சரி, அதெல்லாம் இப்ப நினைச்சு ஏன் சங்கடப் படறீங்க ?  நான் பணத்துக்கு வேற ஏற்பாடு செய்துக்கறேன்.”, என்று ராகவன் நகர, ஒரு பெருமூச்சுடன் சமையலைத் தொடர மாலினியும் சென்றாள்.
 அரை மணியில் ரெடியாகி வந்த விக்ரம், மாலினியிடம் தோசையை வாங்கிக் கொண்டே, “ என்ன அண்ணி நீங்க ? இன்னும் வளரணும் போலவே ?”, என்றான் சிரித்துக்கொண்டே.
“என்னடா ?”
“என்ன அழகா எங்கம்மா பஞ்சாயத்தை கலைச்சாங்க பார்த்தீங்களா ? உஷாரா தடுத்து  நிறுத்துவீங்கன்னு பார்த்தா, அவங்க சொல்ற கதையை கேட்டுகிட்டு இருக்கீங்க ?”, என்றான் அடுத்த தோசைக்கு தட்டை நீட்டியபடி.
“அப்ப வேணும்னேதான் சீன் போட்டாங்களா ?”, ஆச்சரியமாய் மாலினி விக்ரமைப் பார்த்தாள் அவனுக்கு தோசையை போட்டபடி,
“அம்மாக்கும் பொண்ணுக்கும் இது கை வந்த கலை அண்ணி. எப்ப அவங்க பக்கம் டாமேஜாகற மாதிரி இருக்கோ, அப்ப விஷயத்தை திசை திருப்புவாங்க. இல்ல அடுத்த ஆளை கோர்த்து விடுவாங்க. அந்த சூனா பானாக்கே பாடமெடுக்கற அளவுக்கு டாக்டரேட் ஆக்கும்.”, நமுட்டுச் சிரிப்புடன் தட்டை கழுவச் சென்றான் விக்ரம்.
மாலினிதான் முழித்துக்கொண்டிருந்தாள். ‘சே… இவ்வளவு லேசுல ஏமாந்துட்டமே. யோசிக்கணும். இவங்க எதிர்பார்க்காத போதுதான் அதிரடியா கோர்க்கணும். கடவுளே, இவங்களுக்கு அந்த ஆபிஸ் முதலைங்களே தேவலாம் போலருக்கே. வீட்லையும் உஷாரா இருக்கணும்டி மாலினி.’, என்று சுட்டுக் கொண்டிருந்த தோசையின் மேல் சபதமெடுத்தாள்.

Advertisement