Advertisement

அத்தியாயம் – 15
நள்ளிரவுக்கு மேல் சென்னை வந்து சேர்ந்த ராகவனும் மாலினியும், உடல் சோர்வும், மனச் சோர்வும் சேர, வீட்டிற்கு சென்று படுத்தால்  போதும் என்ற மனநிலையில் இருந்தார்கள்.
காலை எட்டு மணிபோல் விழிப்பு தட்டி அருகே இருக்கும் மனைவியைப் பார்த்தால், அடித்துப் போட்டாற்போல ஒரு உறக்கத்தில் இருந்தாள்.  மெல்ல எழுந்து, தன்னை சுத்தப்படுத்தியவன், மனைவிக்கும் தனக்குமாக காப்பியைக் கலந்து தான் மட்டும் குடித்துவிட்டு, அவளுடையதை மூடி வைத்தான். எழுப்பிக் மனது வரவில்லை.
ப்ரிஜ்ஜில் மாவு இருக்கவும், இட்லியும் அவனுக்கு தெரிந்த தேங்காய் சட்னியும் அரைத்து வைத்தான். மணி ஒன்பதாகியும் மாலினி படுத்திருந்த பொசிஷன் கூட மாறாமல் இருந்தாள். மெல்ல அவளை எழுப்பினான்.
“மாலினி, எழுந்து சாப்பிட்டு படுத்துக்கோ. மணி ஒன்பதாகிடுச்சு பாரு.”
“ம்ம்ம்… ப்ளீஸ், இன்னிக்கு வெளிய வாங்கிடுங்களேன். எனக்கு முடியலை…”, மாலினி அரைத் தூக்கத்தில் முனகினாள்.
“நானே எல்லாம் ரெடி செய்துட்டேன் மா. நீ பல் தேச்சிட்டு வா, சாப்பிடலாம்.”, ராகவன் அவள் தலை வருடி சொல்லவும், பட்டென்று கண் விழித்தாள்.
“ஹ… நீங்களா? என்ன செஞ்சீங்க ?”, என்றாள் வியப்புடன்.
“வந்து பாரு.”, என்று நமட்டுச் சிரிப்புடன் சொல்ல, எழுந்து குளியலறை நோக்கிச் சென்றாள்.
வந்தவளுக்கு சூடாக இட்லியுடன் சட்னி, இட்லிப் பொடி வைத்து நீட்டவும், புன்னகை பொங்கியது மாலினிக்கு.
“தீயா வேலை பார்த்திருப்பீங்க போல ? ஹௌவ் ஸ்வீட் “. என்று கொஞ்சினாள் அவன் தாடை பிடித்து.
“எல்லா ஸ்வீட்டும் சேர்த்து வாங்கிக்கறேன். வா சாப்பிடலாம். “, என்று சோஃபாவிற்கு அழைத்துச் சென்றான். அவளோடு ஒட்டி அமர்ந்தவன் தன் தட்டிலிருந்து ஒரு துண்டு இட்லியை சட்னி தொட்டு அவளுக்கு ஊட்டவும், கண்கள் விரிய வாங்கியவள், “ என்னாச்சு உங்களுக்கு ?”, என்றாள் சிரிப்புடன்.
இந்த ராகவன் புதிதாக இருந்தான். வழக்கமாக அவர்கள் படுக்கையறை தவிர்த்து  பெரிதாக மாலினியுடன் நெருக்கம் காண்பிப்பதில்லை. சிறிய வீட்டில் மாமியார், கொழுந்தன் இருக்க அவளும் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. கல்யாணத்திற்கு முன்பும் அளவோடுதான் இருப்பான். கையை பிடித்தது கூட அரிதாகத்தான்.
“நெஞ்சு நிறைய சின்ன சின்ன  ஆசை இருக்கு மயிலு. நம்ம தனியா இருக்கற வாய்ப்பு, ஹனி மூனுக்கு அப்பறம் இப்பத்தான். அதான் கிடைச்ச வாய்ப்பை சிறப்பா யூஸ் செய்யணும். நீ கூட உன் ஆசையெல்லாம் நிறைவேத்திக்கலாம். “, கண்ணடித்தவன், அவள் கையில் இருந்த விள்ளலை தன் புறம் இழுத்து விரலோடு சேர்த்து உண்ணவும், மாலினிக்குத்தான் உடலில் லேசாய் மின்சாரம் தாக்கியது.
“ரகு…”, காற்றோடு திக்கி வந்தது மாலினியின் குரல்.
“ஹ்ம்ம்… நைட்டு பத்து மணி போலதான் வருவாங்க. அதுவரைக்கும் … திக்கி திக்கித்தான் பேசப் போற டார்லிங்.” , அடுத்த வாய் அவளுக்கு ஊட்டியபடி லேசாய் தலையில் முட்டினான். அப்போதுதான் ராகவன் வெறும் கைலியுடன், வெற்று மார்புடன் இருந்தது உறைத்தது.
“பனியன் போடலை ?”, கட் பனியனாவது போடாமல் வெளியில் வரமாட்டான்.
“ம்ம்… உனக்கு வசதியா இருக்குமேன்னுதான்.”, குறும்பாய் சிரிக்கவும், மாலினிக்கு மயக்கம் வராத குறைதான்.
அவள் மலங்க மலங்க முழிக்கவும், “ஊட்டி விடுடி, பசிக்குது. அப்பறமா முழிக்கலாம்.”
அவன் கேட்டதை செய்தவள், “கனவு காணறனோன்னு இருக்கு. என் ஸ்ரிக்ட் ஆபிசர்க்குள்ள இப்படி ஒரு லவர்பாய் இருப்பான்னு நினைக்கவேயில்லைபா. ஆடி மாசம் கூட இப்படியில்லையே…”, என்று புன்னகைத்தாள். அவளது மலர்ந்து விகசித்து இருந்த முகத்தைப் பார்க்கத் தெவிட்டவில்லை ராகவனுக்கு.
படுக்கையறையில் கூட அதிகம் கொஞ்சிப் பேச முடியாது, சத்தம் வெளியில் கேட்கும் என்பதால். அந்தக் குறையெல்லாம் போக்கும் வகையில் இன்று கொண்டாடிக் கொண்டிருந்தான் ராகவன். மாலினியின் ஆசையும், ஆச்சர்யமும் வெட்கமும் கலந்து வந்த  பதில் கொஞ்சல்கள் அவனை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றது. பாரதி சொன்ன ‘உன்மத்தம்’ என்பதன் பொருள் அன்று உணர்ந்தான்.
சாப்பிட்டு முடியும் வரை பொறுமை காத்தவன், “ இது போதும். தண்ணி குடி.”, என்று அவசரப் படுத்தி, தட்டைக் கூட அலம்ப எடுக்க விடாமல் கை கழுவ இழுத்துச் சென்றான்
“என்னாச்சு ? என்ன அவசரம் ?”, என்றவளை, “ம்ம்… அடுத்த ஆசைக்கு டைம் ஆகிடுச்சு.”, என்று கைகளில் அள்ளிக்கொண்டான்.
“அய்யோ… அம்மா…” தூக்கியதில் நிலை தடுமாற மாலினி கத்த, அடுத்த நொடி அவன் கைகளில் இருப்பது உணர்ந்து, “சொல்லிட்டு செய்ங்கப்பா…”, என்றவள் “இது என்னோட ஆசையும் கூட..”, என்று அவள் கன்னம் பிடித்துக் கொஞ்சினாள்.
“அதுக்கென்ன, இன்னிக்குப் பூரா உன் ஆசையை  நிறைவேத்திடுவோம்.”, என்று அவளை ஹாலில் ஒரு சுற்று சுற்றிவிட்டு கொண்டுபோய் படுக்கையில் இறக்கி விட்டான்..
“உங்க முதுகு என்னத்துக்கு ஆகறது ? விடுங்க, தட்டையெல்லாம் கழுவணும், சட்னி உள்ள வைக்கணும்.”, என்று எழவும்,
அவளைத் தள்ளியவன், “நோ பேபி, அடுத்த முக்கியமான ஆசை ஸ்ட்டார்ட்ஸ் நெவ்..”, என்று அவள் உதட்டை இழுத்துச் சுண்டியவன், அருகில் மேசையின் மேல் இருந்த  அவன் மொபைலை எடுத்து சில நொடிகள் ஏதோ செய்யவும், இளையராஜாவின் இசையில் கசிந்தது … “மனசு மயங்கும்… மௌன கீதம்…. மனசு மயங்கும் மௌன கீதம் பாடு…”
“ர…ரகு… இப்பவா….”, கண்கள் விரிய கேட்ட மனைவியிடம் பார்வையாலேயே பதில் உணர்த்த ராஜாவின் இன்னிசையில் ராகவனின் ராஜாங்கமாகிப் போனது பின் காலைப் பொழுது.
மதியம் இரண்டு மணிபோல் ராகவனின் அழும்புகள் குறும்புகள் எல்லாவற்றையும் சமாளித்து குளித்து முட்டை பிரியாணி அவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க செய்து கொண்டிருந்தாள் மாலினி.
அவளை சேலை கட்டச் செய்திருந்தவன் பின்னிருந்து அவள் இடை அணைத்து லேசாய் பாட்டிற்கு ஏற்ற இசைக்கு ஹம் செய்தவாறே ஆட, அவன் வாசம் பிடித்துக்கொண்டிருக்கும்  குறு குறுப்பு தாங்காமல்,  “இப்படி செய்தா நான் எப்படிப்பா சமைக்க ?”, என்று சிணுங்கினாள்.
“எத்தனை நாள் நீ சமைக்கும் போது ஹால்ல உட்கார்ந்து பார்த்து கனவு கண்டிருப்பேன். இன்னைக்காச்சம் நிறைவேத்திக்கறேன் மயிலு.”
அவன் சொல்லவும், லேசாய் அவன் மேலே சாய்ந்தவள், “நிஜமாவா ? பேப்பர்தானே படிச்சிகிட்டு இருப்பீங்க ?”, என்றாள் அவனைப் பக்க வாட்டில் பார்த்தபடி,
“அம்மாதான் கிச்சன் வாசல்ல உட்கார்ந்து காய் நறுகிட்டு இல்லை எதாச்சம் வேலை பார்த்துகிட்டு  இருப்பாங்க.  நான் எங்க உன் பக்கம் வர ? இல்லை நேரடியாத்தான் உன்னை சைட் அடிக்க முடியுமா ? அதான் பேப்பர் பின்னாடி ஒளிஞ்சிக்கறது.”, என்று உதட்டோரம் ஒரு முத்தமிட்டான்.
கேட்டவளுக்கு மனம் குளிர்ந்தது. இப்படியெல்லாம் சின்ன சின்ன ஆசைகள் அவனுக்கு இருக்கும் என்று நினைக்கவில்லை, குடும்ப பாரம் அதையெல்லாம் மழுங்கடித்துவிட்டது போல என்றுதான் நினைத்திருந்தாள்.  காலையிலிருந்து ஒரு புது ராகவனைத்தான் பார்த்திருந்தாள். முடிந்தவரை இந்த ராகவனை அவ்வப்போது வெளிக்கொணர வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் மாலினி.
இவள் யோசனையில் இருக்க அவன் கைகள் அத்து மீறி அலையவும் பட்டென்று அடித்து, அவன் புறம் திரும்பினாள், “ஹேய்…. சூ… “, என்று அதட்ட ஆரம்பித்தவளை அடக்கினான் ராகவன்.
குக்கர் விசிலடித்து நினைவுக்கு வர வைத்தது இருவரையும்.  “அச்சோ… கிச்சன்ல என்ன வேலை பண்றீங்க… போங்க. நான் சீக்கிரம் சமையலை முடிக்கறேன்.”, என்று அவனைத் தள்ளவும், வாகாய் சோஃபாவில் அமர்ந்து அவளை நோட்டமிட்டு வர்ணிக்க, கேட்டவளுக்குத்தான் முகம் சிவந்தது.
“ப்ளீஸ்…அங்கிருந்து இப்படி பேசாதீங்க. யாராச்சம் வந்தா வாசல்ல கேட்கும்.”, என்று மாலினி கெஞ்ச,
“உங்கிட்ட வந்து காதுல சொல்ல ட்ரை பண்ணா, நீதான் விரட்டி விட்ட.. அதான்…”, என்று  ஒரு கையால அணைத்தபடி ரகசியம்  சொல்ல, மாலினி செல்லமாய் முறைத்தாள். “ நீங்க டெமோ காமிச்சிகிட்டு இருந்தீங்க.  சரியா சொல்லுங்க.”
 அடுத்த சில மணி நேரம் சொர்க்கமாய் சென்றது.  பஸ் ஏறிவிட்டோம் என்று விக்ரம் பேசியது தவிர இருவரும் அவர்கள் உலகத்தில்  மட்டுமே இருந்தார்கள். நேரம் அவர்களுக்காக உறையவில்லை. தனிமைச் சொர்க்கம் முடிவுக்கு வந்தது.
இரவு ஒன்பதரைப் போல தாயையும் விக்ரமையும் அழைக்கச் சென்றான். பயணக் களைப்பில் வந்தவர்களுக்கு சூடாய் பாலைக் கொடுத்தாள் மாலினி.  ராகவன் பயணம் பற்றி கேட்கவும், ஓரிரு வார்த்தைகளில் பதில் அளித்தான் விக்ரம். முகமே வாடியிருந்தது. பிரயாணக் களைப்போ என்று மாலினியும் அவன் குளிக்கச் செல்லவும் ஒன்றும் சொல்லவில்லை.
“என்ன சத்தம் இந்த நேரம்…”, என்று விடியற்காலை மொபைல் பாடவும், முழிப்பு தட்டியது மாலினிக்கு. 
“இதை எப்ப மாத்தினீங்க ?”, என்றபடி ராகவனின் கையை எடுக்க, அவனோ இறுக்கியபடியே… “ அது நேத்து ஸ்வீட் மெமரீஸ் லிஸ்ட்ல சேர்ந்த பாட்டாச்சே. அதான் காலையில நல்ல மூட் செட்டாக இந்த பாட்டு செட் செஞ்சேன் மயிலு என்று சில்மிஷம் செய்ய,
“உஷ்… எல்லாரும் வந்தாச்சு. ரியல் வொர்ல்ட்க்கு வாங்க ஆபீஸர். லேட் ஆச்சுன்னா கிச்சன்ல எனக்கு டென்ஷனாகிடும். விடுங்க.”, என்று ஒரு அவசர முத்தத்தை ஆறுதல் பரிசாக கணவனுக்கு அளித்துவிட்டு அன்றாட ஓட்டத்தை துவக்கினாள்.
ஏழு மணி போல் வந்த விக்ரமிற்கு மாலினி காபியை தரும்போது, ராகவன் குளித்து, சாமி கும்பிட்டு,  வந்தான். பர்வதம்மாவிடம், “ அம்மா, உங்ககிட்ட குடுத்த ரெண்டாயிரத்தை தாங்க.  வீட்டு வரி கட்டணும். சீக்கிரம் கிளம்பினா, கட்டிட்டு ஆபிஸ் போவேன்.”, என்றான்.

Advertisement