Advertisement

“மாமா. இங்க எதுக்கு வந்திருக்கோம் ?”
“ உங்க அக்கா உனக்கு எதுவுமே எடுக்கலையே. அவளை நம்பி புண்ணியமில்லை. நீ வா. நான் உனக்கு எடுத்து கொடுக்கறேன்.”, விக்ரமிடம் சொல்லிய படியே  அங்கிருந்த புகழ்மிக்க ஒரு கடையில் நுழையவும்,
“மாமா…. இல்லை… வேண்டாம் மாமா. அதான் அண்ணாக்கு அம்மாக்கெல்லாம் எடுத்தாச்சே. அதே போறும் .”, விக்ரம் தயங்கியபடியே சொல்ல,
“ஏன் விக்ரம் ? நான் எடுத்து குடுக்க கூடாதா ?  நீ காலேஜ் சேர்ந்தா தேவைப்படும்டா. காலேஜ் போகும்போது, கலர் கலரா ட்ரெஸ் போட்டு போனாதாண்டா பொண்ணுங்க திரும்பி பார்க்கும். அழகா வேற இருக்க.”, ரகுவரம் கலாய்க்க, முகம் சிவந்த விக்ரமோ, “மாமா… சும்மா கிண்டல் பண்ணாதீங்க. அப்படில்லாம் யாரும் பார்க்க வேண்டாம்.  காலேஜ் முடிச்சுட்டு நான் ஆடிட்டர் ஆபீஸ் ஓடணும்.  பார்ட்- டைம் அங்க தொடரப் போறேன். “
“டேய்… காலேஜ் லைப் இப்பதான் எஞ்சாய் பண்ணமுடியும். எதுக்கு பார்ட் டைம் போற ?”, ரகுவரம் கேட்க,
“இல்லை, மாசம் ஒரு ஆறாயிரம் வரும் மாமா. காலேஜ் செலவு, C.A. பிரீ எக்ஸாம்னு செலவுக்கு கொஞ்சம்  யூஸ் ஆகும். அண்ணா, அண்ணிக்கு கொஞ்சம் பாரம் குறையும். எனக்கும் இந்த எக்ஸ்பீரியன்ஸ் உபயோகமா இருக்கும்.”, கொஞ்சம் தயக்கமாகவே கூறினான்.
அவனை தோளணைத்து தட்டிக் கொடுத்த ரகுவரம், “ பெருமையா இருக்குடா. நீ சொல்றதை கேட்கும் போதே. சின்ன வயசிலயே நல்ல பக்குவம்டா உனக்கு.”, என்றவன் நாலைந்து செட் விக்ரம் தடுக்க தடுக்க வாங்கியபின்தான் விட்டான்.
மாமன் என்னவோ ஆசையாகத்தான் வாங்கிக்கொடுத்தான். ஆனால் அது அக்காவுக்குப் புரியுமா ? இதற்கு விக்ரம் பேச்சுக்கள் வாங்க வேண்டியிருக்கும்  என்பது தெரிந்திருந்தால், ரகுவரன் இதை செய்திருப்பானா ?
பேருந்தில் ஏறி அமர்ந்த பின்னரும், மாலினி அமைதியாகவே இருந்தாள். ராகவனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை.
பேருந்து வேகமெடுத்ததும், “மாலினி… சாரிமா. காயத்ரி செஞ்சதுக்கு நான் மன்னிப்பு  கேட்டுக்கறேன். என்னால முடிஞ்சது, அங்கிருந்து சீக்கிரம் உன்னை கூட்டிட்டு வரது மட்டும்தான். அதான் ….“, ராகவன் அவள் பக்கவாட்டில் சரிந்து மெதுவே பேசினான்.
“மன்னிப்பு கேட்க வேண்டியது காயத்ரியும், அவ செய்த அழிச்சாட்டியத்தைப் பார்த்தும் தட்டி கேட்க்காத உங்க அம்மாவும்தான். அவங்க கேட்க போறதில்லை. நீங்க ஏன் சங்கடப் படறீங்க ? இந்த மட்டுக்கும் இன்னும் ஒரு நாள் அங்க நான் வதைபடாமல் உடனே கிளம்பினதே சந்தோஷம்.”, வாடிய குரலில் மாலினி சொன்னது இன்னுமே அறுத்தது ராகவனை.
 தன் வீட்டினர் தெரிந்து செய்யும் தவறையும் தட்டிக்கேட்க முடியாது, அவர்களை விட்டுக்கொடுக்கவும்  முடியாமல், வாடி நிற்கும் மனைவியிடம் வெட்டி சமாதானம் செய்யும் ஆயிரக் கணக்கான சராசரி ஆண்களின் கூட்டத்தில் அவனும் ஒருவனானான்.
நிறைய பைகளுடன் உள்ளே வந்த விக்ரமையும் தன் கணவனையும் பார்த்த காயத்ரி,
“என்னங்க, அண்ணனை வழியனுப்ப போனீங்க. இப்ப ஷாப்பிங் செய்துட்டு வர்ரீங்க ?” ஆர்வமாய் விக்ரமிடமிருந்து பையை வாங்கி பார்த்தாள்.
எல்லாமே விக்ரமிற்கு என்றதும், “என்ன இத்தனை வாங்கிருக்கீங்க அவனுக்கு ? ஏண்டா, ஒருத்தர் எடுத்து கொடுத்தா வேண்டாம் இல்லை, ஒன்னு போதும்னு சொல்ல மாட்டியா ? அடிச்சது லாட்டரின்னு அள்ளிக்குவியே ?”, என்னமோ அவள் அப்படி வாங்கிக் கொடுத்தது போல பேசவும், விக்ரம் முகம் கன்றிவிட்டது.
“நான் வேண்டாம்னுதான் சொன்னேன்…”, என்றவன் கண்கள் கண்ணீர் வர தயாராக,  நிமிர்ந்து பார்க்காமல் அவர்களுக்கு ஒதுக்கிய அறைக்கு சென்றுவிட்டான்.
“சீ…வாய மூடிட்டு போ காயத்ரி. எல்லாரும் இருக்காங்களேன்னு கம்முனு இருக்கேன். இல்லை ஒரு வழியாக்கிருப்பேன். உன் குணம் தெரிஞ்சுதான் அந்த பிள்ளை வேண்டாம் வேண்டாம்னு தவிச்சான் போல. நாந்தான் உன் தம்பிக்கு வாங்கிக்குடுத்தா ஒன்னும் சொல்ல மாட்டேன்னு தப்பா நெனச்சிட்டேன்.”, அவளிடம் இருந்த கவர்களைப் பறித்துக்கொண்டு விக்ரம் இருந்த அறை நோக்கி சென்றான். நல்ல வேளையாக எல்லாரும் இரவு சீரியலில் மூழ்கியிருக்க வாசலருகில் இவர்கள் பேசியது கவனத்தைக் கவரவில்லை.
“விக்ரம்…”
ரகுவரன் உள்ளே வரவும், கண்ணைத் துடைத்து வேகமாய் எழுந்தான் விக்ரம்.
“உங்க அக்காக்காக நான் சாரி கேட்டுக்றேண்டா. அவ பேசினதை மனசுல வெச்சிக்காத. இந்தா, இது என் கிஃப்ட். “, என்று பைகளை விக்ரம் கையில் திணித்தான்.
“ஒ..ஒன்னு போறும் மாமா. மிச்சத்தை நாளைக்கு மார்னிங் ரிடர்ன் செய்துட்டு உங்களுக்கு எதாச்சம் எடுத்துக்கலாம்.”, விக்ரம் சொல்லவும்,
“ஏன் விக்ரம். நான் கிஃப்ட் கொடுத்தா வாங்கமாட்டியா ? இதென்ன உங்க அக்கா சம்பாரிச்ச காசுலயா வாங்கினேன். நீ வேண்டாம்னு சொல்ல ? அப்ப நான் முக்கியமில்லையா ?”, ரகுவரன் வருத்தமாய் கேட்கவும், விக்ரமிற்கு தர்மசங்கடமாகிப்போனது.
“உங்க அக்காவை நான் அடக்கி வைக்கறேன். அவ இனி ஒன்னும் சொல்ல மாட்டா. நீ வாங்கிக்கோடா.”, என்று மேலும் பேசி சமாதானம் செய்துவிட்டு வந்தான்.
ரகு சென்ற சில நிமிடத்திற்கெல்லாம், உள்ளே வந்த பர்வதம்மா, “என்ன விக்ரம். மாமா துணி வாங்கினா, ஒன்னு போறும்னு சொல்ல மாட்டியா? உங்க அக்கா எங்கிட்ட கத்தறா. இவனுக்கு நாலு வாங்கிட்டு அவர் தங்கைக்கு இதே சாக்கு வெச்சி பத்து வாங்கித் தருவாருன்னு. “
பட்டென்று கைகளைச் சேர்த்து ஒரு கும்பிடு போட்டு, “ அவ ஏற்கனவே என்னை அவமானப்படுத்தினது போறும். நீங்களும் ஆரம்பிக்காதீங்க. நான் நாளைக்கு திருப்பி கடையில குடுத்துடறேன்னு சொன்னா, மாமா கோச்சிக்கறார். என்ன செய்ய சொல்றீங்க ? நான் எவ்வளவுதான் வேணாம்னு சொல்ல முடியும். இங்கயே வெச்சிட்டு போயிடறேன். அக்காவை கொண்டு போய் ரிடர்ன் செய்துட்டு புடவை வாங்கிக்க சொல்லுங்க. எனக்கு இந்த பாலிடிக்ஸே வேண்டாம்.”, என்று வெளியே சென்றான். விட்டால் சென்னைக்கே கிளம்பியிருப்பான்.
“விக்ரம், நைட் ஷோ டிக்கெட் புக் செய்யறோம். வா சீக்கிரம் சாப்பிடலாம்.”, என்று ரகுவரன் அழைக்கவும், ‘இதேதடா வம்பு. அப்பறம் அதுக்கும் அவமானப்படவா..’, என்று உள்ளூர நினைத்தவன்,
“இல்ல மாமா. எனக்கு தலை வலிக்குது. கண் எரிச்சலா இருக்கு. சீக்கிரம் தூங்கலாம்னு பார்க்கறேன். எனக்கு டிக்கெட் போடாதீங்க.”, என்றான் அவசரமாய்.
அவனின் தலை வலியும் கண் எரிச்சலும் எதனால் என்று புரிந்த ரகுவரனுக்கு வருத்தமாகியது. மனைவியின் மேல் கட்டுக்கடங்காத கோபம். தங்கையும்  அவள் கணவனும் இருப்பதால், அவனால் ப்ளானைக் கான்சல் செய்யவும் முடியாத சூழ்னிலை.
“சரி, காயத்ரி, நீ வீட்ல இரு அப்ப. நாங்க மூணு பேரும் போறோம்.”, என்றான் ரகுவரன்வேண்டுமென்றே.
“ஏன்…ஏன்…நான் வீட்ல இருக்கணும். விக்ரமுக்கு தூங்கணும்னா அவன் தூங்கட்டும்.”, என்றாள் காயத்ரி வேகமாக.
“பிள்ளையைப் பார். திடீர்னு எழுந்து அழுதா ? இன்னிக்கு அம்மாக்கும் டயர்ட். “
“அதான் எங்கம்மா இருக்காங்களே. அவங்க பார்த்துப்பாங்க. “, வேகமாய் வந்தது பதில்.
மனைவியின் அழிச்சாட்டியத்தில் கண்ணைக் கட்டியது ரகுவரனுக்கு. எல்லாரும் இருக்கற தைரியத்துல ஆடறா. கிளம்பட்டும், அப்பறம் இருக்குடி கச்சேரி என்று மனதிற்குள் சூளுரைத்தவன், இதற்கும் மேல் விவாதம் வேண்டாம் என்று, அவர்கள் நால்வரும் போவதாய் முடிவு செய்து டிக்கெட் போட்டான்.
கணவன் தன் மேல் செம்ம காண்டாகியிருப்பது தெரிந்தும், படம் பார்க்கும் வாய்ப்பை விடத் தயாரில்லை காயத்ரி. ‘இன்னிக்கு வேலை ஆனா போறும். நாளை கதை நாளைக்கு’, என்பதில் தெளிவாக இருந்தாள்.

Advertisement