Advertisement

அத்தியாயம் – 14
குழந்தையை வாழ்த்தியவர்கள் முடியவும், சம்மந்திகளுக்கு பதில் மரியாதை செய்ய வந்தனர் மங்கையும், வேணுகோபாலும்.
“பூரணி…”, என்று மங்கை குரல் கொடுக்க, சம்மந்திக்கும், மாப்பிள்ளை பெண்ணுக்குமாக மங்கை வாங்கியிருந்த அனைத்தும் அடுக்கப்பட்டிருந்த தாம்பாளத்தை கொண்டு வந்து தந்தாள் பூரணி. அதை வாங்கி மங்கை சம்மந்திக்கு நன்றி சொல்லி தந்தார்.
அடுத்து, “காயத்ரி…”, என்று குரல் கொடுக்கவும், உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தவள், “ஒஹ்… மறந்துட்டேனே”, என்று ஓடிப்போய் தன் அண்ணனுக்குக் கொடுக்க வேண்டிய துணிகள் இருந்த கட்டைப் பையை எடுத்து மாமியாரிடம் நீட்டினாள்.
ராகவன் மாலினி அருகே நிற்க, மங்கை வாங்காமல் காயத்ரியை முறைத்தார். “இப்படித்தான் பதில் மரியாதை செய்ய முறை சொல்லித்தந்தாங்களா உங்க வீட்ல ? நாம என்ன தானமா தரேமா ? போ…போய் பூரணி குடுத்த மாதிரி தாம்பாளத்துல வைச்சி கொண்டுவா.”, சீறினார். அவர் கூறியது அங்கிருந்த ராகவன் மாலினி, பர்வதம்மாவிற்கும் கேட்டது. சற்று தொலைவில் இருந்த மற்றவர்களுக்கு  மங்கை ஏதோ திட்டுவது மட்டும் புரியவும் ஆர்வமாய் பார்த்திருந்தார்கள்.
முகம் சுருங்க, பையை எடுத்துக்கொண்டு மறுபுறம் சென்றாள் காயத்ரி. “ சின்ன பொண்ணு சம்மந்திம்மா. ஒரு வாட்டி சொன்னா கத்துக்குவா.”, பர்வதம்மா சமாதானம் சொல்லவும்,
“அண்ணி இடுப்புல இருக்க புடவையை கழட்டி வாங்கத் தெரியுது. முறை எப்படி செய்யணும்னு தெரியாதா ? பூரணி கொண்டு வந்து தரதைப் பார்த்திருந்தாக்கூட தெரிஞ்சிருக்கும். அவ பாட்டு கதை பேசிகிட்டு இருந்தா எப்படி தெரியும் ?” மங்கை நக்கலாக சொல்ல, ஒன்றும் சொல்ல முடியவில்லை. ராகவனுக்கு ‘இதென்ன இடுப்புல கட்டின சேலையைக் கேட்டாளா ? அதான் புது புடவையைக் கட்டலையா ? மாலினிகிட்ட கேட்டதுக்கு, கோவில்ல அழுக்காகிடும்னாளே .”, என்று மாலினியைப் பார்க்க, அவள் பார்வையைத் தழைத்து, நெளிந்து கொண்டிருந்தாள். ரகுவரனுமே நெற்றியைச் சுருக்கி, அவன் அன்னையை பார்த்தான்.
அதற்குள் தாம்பாளத்துடன் காயத்ரி வந்து அவரிடம் நீட்ட, பார்த்தவர், “  வெத்தலை பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ எங்க ? உங்கிட்டு ஒண்ணொண்ணா சொல்லணுமா காயத்ரி.”,  மங்கை மீண்டும் பேசும் முன், “நான் எடுத்து வைக்கறதுக்குள்ள அண்ணி எடுத்துகிட்டு வந்துட்டாங்கம்மா.”, பூரணி அவர் கேட்டது அனைத்தையும் தட்டில் வைத்தாள்.
மெச்சுதலாய் பெண்ணை ஒரு பார்வை பார்த்தவர், “பூரணியையும், மாலினியையும் பார்த்தாவது கத்துக்கோ. தேவையில்லாததைத்தான் தெரிஞ்சு வெச்சிருக்க.”, என்று கடிந்து தட்டை வாங்க, வேட்டியின் பில் எண்ணூறு ருபாய் என்று பல்லிளித்தது.
“பில்லைக் கூட எடுக்கலையா ?”, பல்லைக் கடித்தவர், “மன்னிச்சுக்கம்மா, உன் அளவு என் மருமகளுக்கு துப்பில்லை.”, என்று சொல்லியபடியே,  “நீங்க வந்து சிறப்பாக்கிக் கொடுத்தீங்க விழாவை. நல்லா இருக்கணும். சீக்கிரமே நல்ல செய்தி சொல்லணும் மாலினி.”, என்று அவளைப் பார்த்து புன்னகைத்தார்.
அவர் கால் தொட்டு தட்டை வாங்கிக் கொண்டவள், “உங்க ஆசிம்மா.”, என்று ஒரு சிரிய புன்னகையுடன் திரும்பினாள். ராகவனுக்கு ஐயோவென்றிருந்தது. ‘இந்தம்மா இப்படித்தான் பொதுவுல வெச்சி கேட்கணுமா. அவ அம்மா பண்ற நச்சு பத்தாதுன்னு  இவங்களுமா.’
தட்டை இவனிடம் தந்தவள், முகத்தை சமன் செய்து, சாக்லெட் தட்டை எடுத்து அங்கிருந்தவர்களுக்கு கொடுத்தபடியே, ஒரு கைப்பிடி சாக்லெட்டை கவரில் போட்டு, “விக்ரம், கோவில்ல பாக்கற குழந்தைங்களுக்கு குடு.” என்றாள். அடுத்து ஒரு பையில், எல்லா பழ வகைகளிலும் ஒன்றிரண்டைப் போட்டு, சாக்லேட்டும் போட்டு, “காயத்ரி, போய் அய்யர்கிட்ட குடுத்துட்டு வா.”, என்று அனுப்பி வைத்தாள்.  மீண்டும் இரண்டு கவரில் சில சாக்லெட்டுடன், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி என்று போட்டவள், ராகவனைக் கூப்பிட்டு, “அந்த காது குத்தின ஆசாரி, மொட்டை போட்டவர்கிட்டயும் நன்றி சொல்லி குடுத்துடுங்க.”, என்று அனுப்பி வைத்தாள்.
“மங்கை பாராட்டுனதுல தப்பேயில்லை மாலினி. சமர்த்தா எல்லாத்தையும் கவனிக்கற. “, மங்கையின் உறவில் இன்னொரு பெண்மணி பாராட்ட, இவர் எங்கிருந்தார் என்று யோசித்து ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்தாள்.
“என் சம்மந்திக்கு இருக்கற குடுப்பினை எனக்கில்லை சவுந்து. என்ன செய்ய ?”, ஒரு பெருமூச்சுடன் மங்கை வர, மாலினி கழண்டு கொண்டாள்.
ஒரு வழியாய், அருகிலிருந்த ஹோட்டலில் மதிய சாப்பாட்டை முடித்து, வந்தவர்கள் கிளம்ப, பூர்ணிமா குடும்பத்துடன் வீடு வந்து சேர்ந்தார்கள்.  அனைவரும் ஹாலில் அமர்ந்து பேச, பூர்ணிமா, “ மாலினியக்கா, உங்களுக்கு குடுத்த பை எங்கிட்ட வந்துடுச்சு.இந்தாங்க.”, என்று தந்தவள்,” ஏம்மா,  மாலினியக்காக்கு வயசானவங்க கட்டற மாதிரி புடவை எடுத்த ?”, என்று கேட்டாள்.
“நானே பார்க்கலையே ? காயத்ரிதான் எடுத்தா.  எங்க காமி மாலினி.”, சபையில் கேட்கவும் ஒன்றும் சொல்ல முடியாமல் அவரிடம் பையைத் தந்தாள். மாலினி தாம்பாளத்திலிருந்து பையில் அடுக்கும்போதே பார்த்திருந்தாள், இரண்டு புடவைகளும் பர்வதம்மா கட்டுவது போல்தான் இருந்தது. ராகவனுக்கு வெள்ளை வேட்டி, சட்டை.
பிரித்துப் பார்த்த மங்கையின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “ ஒரு வேலை உன்னை நம்பி குடுக்க முடியலை காயத்ரி. இப்படியா புடவை எடுப்ப ?”, என்று அப்போதுதான் பிள்ளையை தூங்க வைத்துவிட்டு வந்த காயத்ரியை பார்த்து சிடுசிடுத்தார்.
“இல்லை அத்தை. வேலைக்கு போற சாக்குல அண்ணி எப்படியும் மாசதுக்கு நாலு புடவை எடுப்பாங்க. அதான் ரெண்டுமே அம்மாக்காக எடுத்தேன்.”, தன் அம்மாவைப் பெருமையாகப் பார்த்தபடியே கூறிய காயத்ரியின் விளக்கம் கேட்டு நெஞ்சு எரிந்தது மாலினிக்கு. முகம் மாறாமல் இருக்கவே சிரமப்பட்டாள். பர்வதம்மாவைத் தவிர இருந்தவர்கள் அத்தனை பேருக்கும் எரிச்சல்.  ராகவனுக்கு மாலினியின் முகம் பார்க்கவே அவமானமாக இருந்தது.  அவள் சம்பளத்தில்தான் இந்த வைபவமே. ஒரு புடவையும் இந்த ஏழெட்டு மாதத்தில் அவள் எடுக்கவில்லை. இந்த கலம்காரி புடவைகூட அவள் திருப்பிக் கொடுப்பதாய்த்தான் இருந்தாள். ராகவந்தான் தடுத்து அவளை எடுத்துக்கொள்ளச் சொல்லியிருந்தான். இனியும் முடியாது என்று நினைத்தவன், “ரகு ஒரு நிமிஷம்.”, என்று மாப்பிள்ளையை அழைத்து வெளியே சென்றான்.
“திருத்தவே முடியாது உன்னை.”, என்று மங்கை பேசுவது கேட்டது.
“என்ன மச்சான் ?”, என்று ரகு கேட்க, “ ம்ம்… நானும் மாலினியும் இன்னிக்கு சாயந்திரம் பஸ்ல சென்னை கிளம்பறோம் ரகு. அம்மாவும் விக்ரமும் நாளைக்கு வரட்டும். டிக்கெட் மாத்தணும்.”
“என்ன திடீர்னு ? காயத்ரினாலயா ?”, ரகுவரன் கேட்கவும், தங்கையை விட்டுக்கொடுக்க முடியாமல், “இல்லை ரகு. கொஞ்சம் ப்ரைவசி கிடைக்கும் எனக்கும் மாலினிக்கும். அதான்.”, என்று கொஞ்சம் வழிய, ராகவன் எதிர்பார்த்து போலவே, “ ஓ…. சரி சரி…அப்படினா சரி. “, என்று கண்ணடித்தவன், “சாயந்திரம் அஞ்சு மணி பஸ்லயே போட்டுட சொல்றேன். நீங்க போய் ரெடியாகுங்க. என்ன சொல்லி சமாளிக்கப் போறீங்க உங்க அம்மாவை ?”
“நான் சொல்லிக்கறேன். நீங்க உங்க அப்பா அம்மாகிட்ட நாங்க கிளம்பறோம்னு சொல்ற சாக்குக்கு ஒத்துக்க சொல்லுங்க.”, என்று சிரித்துவிட்டு உள்ளே வந்தான்.
மனைவியும் தாயும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்ததைப் பார்த்து அங்கே சென்றவன், “ மாலினி, சாயந்திரம் அஞ்சு மணி பஸ்ல கிளம்பறோம். பாக் செய்ய ஆரம்பி.”, என்றான்.
“டேய் சம்மந்தி தப்பா எடுத்துப்பாங்கடா ? நாளைக்குதான கிளம்பறோம் ?”, பர்வதம்மா பதற,
“மா… காயத்ரி செய்யறதும், அவ மாமியார் அவளை திட்றதையும், நாம வளர்த்த வளர்ப்பு சரியில்லைன்னு பேசறதெல்லாம் கேட்டுகிட்டு இருக்க என்னால முடியாது. எவ்ளோ ஒரு திமிர் இருந்தா மாசதுக்கு நாலு புடவை வேலைக்கு போற சாக்குல எடுக்கறான்னு சொல்லுவா, அதுவும் சபையில ? அப்படி எடுத்து எப்ப பார்த்தாளாம் இவ ? பூர்ணிமா மாமியார்தான் என்ன நினைப்பாங்க ? மாலினி வேலைக்குப்போய் வந்த சம்பளத்துலதான் காது குத்து சீர்ன்னு உன் பொண்ணுக்கு தெரியும்தான ?” ராகவன் சீறவும்,
“டேய்…அவதான் ஏதோ உளறுனா, அதுக்கு நீ ஏண்டா கோச்சிக்கற ? இப்ப கிளம்பினா சம்மந்தி தப்பா நினைப்பாங்கடா.”
“அதுகெல்லாம் ஏற்பாடு செய்துட்டேன். எனக்கு ஆபிஸ்லர்ந்து கால் வந்திருக்கு. போகணும்னு சொல்லிருக்கேன் மாப்பிள்ளை கிட்ட. அதே மெய்ன்டெய்ன் செய்ங்க.  இந்தாங்க. இதுல ரெண்டாயிரம் இருக்கு. திரும்ப தனியா வர்ரீங்க, திடீர்னு ஒரு அவசரம்னா கையில் இருக்கட்டும். நான் உங்களை நாளைக்கு நைட் பஸ் ஸ்டாண்டல வந்து கூப்பிட்டுக்கறேன்.”, பர்வதம்மாவை மேலே பேசவிடாமல் மட மட வென்று  முடித்தான்.
பர்வதம் மாலினியிடம் பேச முற்பட, அதற்கு இடம் கொடுக்காமல், மட மட வென்று பெட்டியில் அவள் துணிமணிகளை அடுக்க ஆரம்பிக்கவும், பர்வதம் வெளியே ஹாலுக்கு வந்தார்.
ஒரு காபியைக் குடித்துவிட்டு, எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு,  ரகுவரனுடன் கிளம்பினார்கள் ராகவனும் மாலினியும். ரகுவரன் விக்ரமையும்  “கூட வாடா.”,  என்றுஅழைத்துக்கொண்டான்.  காரைப் பார்க் செய்து, அவர்களை பஸ் ஏற்றி விட்டு, வீட்டிற்கு வராமல் விக்ரமுடன் மாலுக்குச் சென்றான்.

Advertisement