Advertisement

“ம்ச்… என்ன காயத்ரி ? இதுதான் உனக்கு முதல்ல எடுத்தேன். அத்தைக்குப் பிடிக்கலை. இதென்ன கார்ட்டூன் படம் வரைஞ்ச மாதிரி இருக்கு. சரிகையே இல்லை. உனக்குப் பிடிக்காதுன்னு சொல்லிட்டாங்க. அப்பறம் அவங்களோட திரும்ப போய் எடுத்துட்டு வந்தேன். இந்த புடவை எங்க ஆஃபிஸ்ல விக்கறவங்ககிட்ட எடுத்தது. திரும்ப குடுக்க முடியாதுன்னு நான் எடுத்துக்கிட்டேன். எல்லாம் ஒரே விலைதான்.”, காயத்ரியின் மாமியாரும் கவனித்ததால், பொறுமையை இழுத்து வைத்து விளக்கமளித்தாள் மாலினி.
“இந்த அம்மாவுக்கு அறிவே கிடையாது. புடவை பத்தி அவங்களுக்கு என்ன தெரியும் ? நீங்கதான் புதுசா என்ன வருதுன்னு தெரிஞ்சுவெச்சிருப்பீங்க.”,  பர்வதம்மாவும் ரெடியாகி கதவைத் திறந்துகொண்டு வரவும், காயத்ரி பேசவும் சரியாக இருந்தது.
பர்வதம்மா அவஸ்தையாக தன் சம்மந்தியம்மாவைப் பார்க்க, ‘உங்க பொண்ணுகிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்’, என்ற பார்வையோடு, அந்தம்மா ஒரு உதட்டுச் சுழிப்புடன் உள்ளே சென்றார்.
“காயத்ரி, உங்க மாமியார் முன்னாடி இப்படித்தான் பேசுவியா உங்க அம்மாவை ?”, மாலினி கடியவும், “ அதா முக்கியம் ? இந்த புடவையும் எனக்கு எடுத்ததுதானே ? எனக்குத் தாங்க. இது ரொம்ப பிடிச்சிருக்கு.”, அவள் காரியத்தில் குறியாய் இருந்தாள்.
மாலினிக்கு எங்காவது முட்டிக் கொள்ளலாம்போல் இருந்தது. “சரி, நான் வேற இதே மாதிரி எடுத்து அனுப்பறேன். இதைத்தான் நான் ப்ளவுஸ் தைச்சி கட்டிட்டேனே. ”,
“மதுரைக்கு இன்னும் இந்த டிசைனெல்லாம் வரலை. அது வரதுக்குள்ள கட்டினாத்தான் அண்ணி. இன்னும் ஒரு மாசம் போனா இங்கயே எல்லாம் வந்துடும். பரவாயில்லை நீங்க தாங்க , நான் உங்க ப்ளவுஸ் ஆல்டர் செய்துக்குவேன்.”, தன் பிடியில் இருந்தாள் காயத்ரி.
“இப்ப ஃபன்ஷனுக்கு வேற என்ன கட்டுவா ? போயிட்டு வந்து மாலினி தருவா காயத்ரி.”, பர்வதம்மா மருமகளைத் தாங்கி பேசவும்,
“திரும்ப உனக்கு அறிவேயில்லைன்னு ப்ரூவ் பண்றம்மா.  எங்க ஜனம் எல்லாம் அண்ணி கட்டி பார்த்துடுச்சுன்னா, அப்பறம் அதை நான் கட்டினா, அண்ணியோட சேலையான்னுதான கேட்ப்பாங்க ?”, சீறினாள் காயத்ரி,
‘சீ…ஒரு புடவைக்கு இத்தனை அக்கப்போரா ?’, என்று வெதும்பிய மாலினி,
“சும்மா அத்தையை பேசாதே காயத்ரி. உன் வீட்டுக்கு வந்தவங்களை இப்படித்தான் பேசுவியா ? இரு, மாத்திட்டு வந்து தரேன்.”, சிடுசிடுத்துவிட்டு, விருட்டென்று அறைக்குத் திரும்பினாள்.  நல்ல வேளை எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு சில்க் காட்டன் சேலையும் எடுத்து வந்திருந்தாள்.
“என்னாடி நல்லாருக்கு அந்த புடவை ? கார்டூன் ஆளுங்க போட்டு. ஒரு இழை சரிகையில்லை.”, பர்வதம்மா கேட்டார்.
“உனக்கு தெரியாட்டா நான் என்ன செய்ய ? இனி அண்ணி எடுக்கற புடவையை நீ வேண்டாம்னு சொல்லாதே. புரியுதா ?”, காயத்ரி பேசவும்,
“புடவை பஞ்சாயத்து முடிஞ்சுதா ? உங்கம்மாக்கு ஒரு வாய் காபி குடுக்க வசதிபடுமா இப்ப ?” , சமையலறை வாசலில் இருந்து குரல் கொடுத்தார்.  அவர் கேட்ட விதமே, இங்கே நடந்த அனைத்தும் கேட்டுக்கொண்டிருந்தார் என்பதைச் சொல்லியது. பர்வதம்மாக்கு சங்கடம். ஆனால் அதைப் பற்றி  காயத்ரி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.  கலம்காரிப் புடவை கனவிலேயே, “ இதோ தரேன் அத்தை”, என்று சொல்லி மங்கை போட்டு வைத்திருந்த காபியை எடுத்து வந்து தந்தாள்.
மாலினி புடவை மாற்றி, கையோடே கலம்காரிப் புடவை, ரவிக்கையைக் கொண்டு வந்து தரவும், புன்னகையோடே வாங்கிக்கொண்டாள் காயத்ரி.
 “இந்த புடவை கூட நல்லாயிருக்கு அண்ணி. நீங்க கலரா இருக்கத்தொட்டு எந்த கலர் கட்டினாலும் அழகாயிருக்கு. ” கனகாம்பர கலரில் செல்ஃப் பார்டரில் சரிகையுடன் இருந்தது இந்தப் புடவை.
அம்மாடி, இந்த புடவையும் கேட்டா என்ன செய்ய என்று உதைத்தது மாலினிக்கு. “இது பழசு காயத்ரி.”, என்றாள் மையமாக.
பூஜை சாமான்களுடன் ஆண்கள் சென்றிருந்த கார், அதற்குள் பெண்களை அழைத்துச் செல்ல  விக்ரமுடன் வரவும், “அத்தை, வாங்க, சீர் வெக்கற பெட்டியெல்லாம் எடுக்கணும். விக்ரம் நீயும் வா.”, என்று அழைத்துக்கொண்டு போனாள்.
ஒரு வழியாக எல்லாவற்றையும் காரில் ஏற்றி,  கோவிலுக்குக் கிளம்பினார்கள்.
இவர்கள் சென்று இறங்கவும், காயத்ரியின் நாத்தனார், மங்கையின் பெண் பூர்ணிமா அவள் கணவன், மாமனார் மாமியாரோடு வந்திறங்கினாள். அனைவரும்  நலம் விசாரித்து கோவிலுக்குச் சென்றார்கள்.
ராகவன் மடியில் குழந்தை ஆதித்யாவை அமர்த்தி, மொட்டையடிக்கும் வைபவம் தொடங்கியது. குழந்தை திமிராமல், மாலினி ஒரு பக்கம் பிடித்துக்கொண்டே கொஞ்ச, உடன் பூர்ணிமாவும், அவள் பெண்ணும் மறுபுறம் விளையாட்டு காட்ட ஒரு வழியாய் மொட்டையடித்து காது குத்தியாகிற்று.
ராகவனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு ரகுவரன் செல்ல, ஆதிக்கு உடையை கேட்டு பூர்ணிமா காயத்ரியுடன் சென்றாள். விக்ரமிடம் ஏற்கனவே தந்திருந்த பையை வாங்கி ராகவனிடம் கொடுத்த மாலினி,
“எல்லாம் இதுல இருக்கு, நீங்க போட்டிருக்கறதை லேசா நினைச்சு, அதுலயே இருக்க கவர்ல போட்டுக் குடுங்க.”, என்று தந்தாள்.
“உன் திறமையை உன் நாத்தனாருக்கும் கொஞ்சம் சொல்லிக்குடு மாலினி. குழந்தைக்குப் போட வெச்சிருந்த துணியை எங்க வெச்சான்னு தெரியலை. எல்லாத்தையும் கடை பரப்பிக்கிட்டு இருக்கா மண்டபத்துல. எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கா.”, தலையில் அடித்துக் கொண்டே பேரனுக்கு டவலை எடுத்துச் சென்றார்.
உஷ்ணமாய் ஒரு பெருமூச்சை விட்டு, பையுடன் நகர்ந்தான் ராகவன். தங்கை செய்வதும் தவறுதான். ஆனாலும், இப்படி அவள் மாமியார் வசைபாடுவதைக் கேட்க கஷ்டமாயிருந்தது.  குளியலறைப் பக்கம் செல்ல, ரகுவரன் தாளித்துக்கொண்டிருந்தான் காயத்ரியை.
“எடுத்து வெச்சியான்னு அத்தனை வாட்டி கேட்டேன். மண்டைய மண்டைய ஆட்டின. இப்ப தெரியலைன்னு சொல்ற ?”
“அண்ணா, விடு, இந்தா நான் வாங்கிட்டு வந்த ட்ரெஸ் இருக்கு, போட்டுவிடு. குழந்தைக்கு தலையில் சீக்கிரம் சந்தனம் தடவணும். “, என்று பூர்ணிமா சொல்வதும் கேட்டது ராகவனுக்கு.
எதுவுமே காதில் விழாத மாதிரி குளியலறைக்குள் புகுந்து கொண்டான். காயத்ரியின் மேல கடுப்பாய் வந்தது. நாளை மதியம் வரைக்கும் தள்ள வேண்டும். மாலை 3 மணிக்குதான் சென்னை திரும்ப பஸ் புக் செய்திருந்தான்.
கோவிலில் பூஜை முடித்து வர, மண்டபத்தில் மாலினி அதற்குள் வரிசை தட்டை அழகாக அடுக்கியிருந்தாள்.
மஞ்சள் குங்குமம் வைத்த தேங்காய் ஒன்றை செங்குத்தாக வைத்து, அதன் தலையில் தாமரை வைத்து, தாம்பாளத்தை நிறைத்தபடி, மல்லிப் பூச் சரத்தை சுற்றி வைத்திருக்க, மல்லிப்பூக் குளத்தில் அம்மன் எழுதிருந்தது போல இருந்தது. அங்கங்கே பட்ரோஜா வைத்திருக்க, அது குளத்தில் பூத்த தாமரைப் போன்ற பிம்பத்தைக் கொடுத்தது.
சாத்துகுடி, ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, வாழப்பழம்  நேர்த்தியாக கலந்து கலர் கலராக அடுக்கி வைத்திருந்தது அழகாக இருந்தது. அவர்கள் பக்கம் வழக்கமாக ஒரு பழவகைக்கு ஒரு தட்டு என்று வைப்பார்கள்.
குழந்தைக்கும் ரகுவரன், காயத்ரிக்கு எடுத்த துணிகளுடன், முக்கால் சவரன் பொன் காசு நடு நாயகமாய் ஒரு தட்டில் ,வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் குங்கும பாகெட்டுடன் இருந்தது.
குழந்தைக்கு விளையாட்டுப் பொருள்களுக்கு என்று  ஒரு தட்டும், வருபவர்களுக்கு தர சாக்லெட் ஒரு தட்டும் வைத்திருந்தாள். மாமியாரின் ஆர்டர் படி வாங்கிய முந்திரி, திராட்சை, பாதாம் ஒரு தட்டில் என்று ஒன்பது தட்டு இருந்தது.
பூஜையின் போது அணிவித்திருந்த மல்லி சர மாலைகளுடன், மனையில் தம்பதி சமேதராக அமர்ந்தார்கள் காய்த்ரியும் ரகுவரனும், குழந்தையுடன்.  வயதில் பெரிய தம்பதியாக பூர்ணிமாவின் மாமனார் மாமியார் வந்து மஞ்சள், அரிசி, பூ கலந்து ரெடியாக வைத்திருந்த கிண்ணத்திலிருந்து சிறிது எடுத்து, நிறைவாய் அவர்களை வாழ்த்தி தூவினார்கள். குழந்தைக்கு பரிசாய் ஒரு மோதிரம் போட்டனர். அடுத்து, மங்கையும் அவர் கணவர்  வேணுகோபாலனும் பேரனை வாழ்த்தி செயின் போட, ராகவனும், மாலினியும், குழந்தையை வாழ்த்தி, துணிகள் இருந்த தட்டைக் கொடுக்க, குழந்தை ரகுவரனிடம் இருந்ததால், காயத்ரி பெற்றுக்கொண்டாள் வாயெல்லாம் பல்லாக. அத்தை சீராக குழந்தைக்கு மேலும் சில துணிவகை, வெள்ளியில் உணவுக்கிண்ணம் என்று வைத்து பூர்ணிமா அவள் கணவனுடன் வந்து கொடுத்தாள். அடுத்து மங்கை, வேணுகோபால் பக்க உறவுகள் சிலர் வந்து வாழ்த்த,
“ அம்மன் முகம் மாதிரி அழகா அடுக்கியிருக்கே. யார் செஞ்சது ? பழத்தட்டெல்லாம் கூட  நேர்த்தியா இருக்கு ?”, பூர்ணிமாவின் மாமியார் சரோஜா கேட்டார்.
“மாலினி செஞ்சது அண்ணி, எந்த வேலைன்னாலும் நேர்த்தியா செய்வா.”, மங்கை மனதாரப் பாராட்ட, ஒரு சின்ன புன்னகையுடன் அமைதியாக இருந்தாள் மாலினி.  பர்வதம்மா பெருமையாய் மருமகளை பார்க்க, காயத்ரியின் காதில் புகை. பின்னே மாமியாரிடம் பாட்டு கேட்டுத்தான் பழக்கம் ஒரு பாராட்டையும் அவள் பெற்றதில்லையே. இதற்கான எதிர்வினையை அனுபவிக்கப்போவதென்னவோ பாவம் மாலினிதான்.

Advertisement