Advertisement

அத்தியாயம் – 13
இரவு பத்து மணி போல வந்தவன் பார்த்தது, இன்னும் சீரியலில் முழுகியிருந்த அவன் அன்னையைத்தான்.
கதவைத் திறந்தவர், “இட்லியும் வெங்காயச் சட்னியும் இருக்கு ராகவா. நீங்க சாப்பிட்டு எடுத்து வைங்க. “,என்று தொலைக்காட்சியின் முன் ஐக்கியமாகிவிட, படுக்கையறைக்குச் சென்று விளக்கைப் போட்டான் ராகவன். சுருண்டது சுருண்டபடியே தூங்கிப் போயிருந்தாள் மாலினி.முகத்தில் கண்ணீர் கோடுகள் காய்ந்திருந்தது.
“மாலினி… எழுந்து கொஞ்சம் சாப்பிட்டு படுத்துக்கோமா….”, மெல்ல கூறியபடி அவள் தலையை தடவினான்.கண்ணீர் கோடுகளைத் துடைக்க, கண் விழித்தாள். பார்வையின் சீற்றம் சற்றும் குறையவில்லை. அவன் கையைத் தள்ளிவிட்டாள்.
“மயிலு… நான்… சாரிமா…சொன்னது தப்புதான்….எதுவோ நினைக்கப் போய் எதையோ சொல்லிட்டேன்…. எழுந்து வந்து கொஞ்சம் சாப்பிடு.  ப்ளீஸ்…”, ராகவன் கெஞ்ச, அதைக் கேட்கப் பிடிக்காதவள், “நீங்க சாப்டீங்களா ?”, இல்லை என்று அவன் தலையசைக்கவும், “போய் சாப்பிடுங்க. நான் ஃப்ரெஷ்ஷாகிட்டு வரேன்.”
சொன்னது போல வந்தவள், இரண்டு இட்லி பேருக்கு சாப்பிட்டு, அவனுக்குப் போக மிச்சத்தை ஃப்ரிஜ்ஜில் வைத்து மூடிவிட்டு திரும்ப படுக்கச் சென்றாள். ஒரு வார்த்தை ராகவனிடம் பேசவில்லை.
தண்ணீர் பாட்டிலோடு உள்ளே வந்தவன், “மயிலு…. நான் சொல்றதைக் கேளுமா.”, கட்டிலில் அவளருகே அமந்தவன்,  “என்னை கட்டிகிட்டு இப்படிஉன் செலவுக்குக் கூட கணக்கு பார்க்கற நிலையில வந்து நிக்கறயேன்னு ரொம்ப குற்ற உணர்ச்சியா போச்சுடா… அதனால வந்த வார்த்தை. தப்புதான்… நீ சொன்ன அப்பறம் யோசிக்கும்போது புரிஞ்சுது.  ஆனா …என் உணர்ச்சியும் உனக்கு புரியுதுதான ?”, அவன் கேட்கவும், “ம்ம்… உங்க நிலைமை புரியுது. ஆனா நீங்களும் இப்படி சொல்லாதீங்க ரகு. எங்க அப்பா அம்மாகிட்ட இதையே கேட்டு கேட்டு ரொம்ப காயப்பட்டிருக்கேன். அப்படி கை நிறைய காசும் காரும் இருந்தா மட்டும் சந்தோஷம் வந்துடுமா? புருஷன் சரியில்லைன்னாலும் ஃபேஷியல் செய்துகிட்டா சந்தோஷம் வந்துடுமா ? என் மனசுக்கு பிடிச்ச ஒருத்தரா இருந்தாத்தான் என்னால சந்தோஷமா இருக்க முடியும். எனக்கு எது சந்தோஷம் தரும்னு எனக்குத்தான் தெரியும். வெறும் வசதி வாய்ப்பை மட்டும்தான் வெளிய இருக்கவங்க பார்க்கறாங்க. நீங்களுமா அதையே சொல்லுவீங்க?  என்னோட வாழ்க்கை துணையா நான் செலக்ட் பண்ணவரை குத்தம்  குறை சொல்ல யாருக்குமே ரைட்ஸ் கிடையாது, அவர் உட்பட. இதுதான் லாஸ்ட். இனியொரு முறை இப்படி ஒரு பேச்சு உங்க கிட்டருந்து வரக்கூடாது.”, விரல் நீட்டி எச்சரித்தவளை அள்ளிக்கொள்ள மனம் துடித்தாலும், அதற்கும் திட்டுவாளோ என்ற பயத்தில், சரி என்பதாக வேகமாகத் தலையாட்டினான்.
“படுங்க. “, என்று சொல்லிவிட்டு திரும்பிக்கொள்ள, லைட்டை அணைத்தவன், மெதுவாக அவளை அணைத்து தாஜா செய்யத் துவங்கினான்.
அந்த வார இறுதியில் மீண்டும் பர்வதம் பேச்சை துவக்கினார். மாலினிதான், “விடுங்க ரகு. செய்துடலாம். நான் வந்து நடக்கற முதல் விசேஷம். அதுக்காகவே கூட, இரண்டு பேரும் இப்படி கேட்டிருக்கலாம். நான் எதாவது சொல்றேனா, இல்லை குறைக்கறேனான்னு செக் செய்ய. இது முடியட்டும். அப்பறம் பார்க்கலாம்.”, என்றுவிட்டாள்.
இடையில் ஆடி மாதம் வர, சகுந்தலா மாலினியை வரச் சொன்னார்.  அவளுக்கு பிடித்தமில்லாத போதும்,  “இல்லை மாலினி. நீ போ. அங்க போனா உனக்கும் ரெஸ்ட் கிடைக்கும். “
“அப்ப… நான் கூட இல்லாட்டா உங்களுக்கு கஷ்டமில்லை ?”,  முறைத்தாள்.
“இல்ல மயிலு. எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா அதை விட உனக்கு ஒரு ரெஸ்ட் இருக்கும்ங்கற எண்ணம்தான். கல்யாணம் முடிஞ்சு நீயும் ரெண்டு தரம்தான் போயிருக்க அம்மா வீட்டுக்கு. இது ஒரு சான்ஸ். எதுக்கு விடற?”, அவளைப் பேசி பேசி கரைக்க, “அப்ப இந்த ஒரு மாசமும் என்னை லவ் பண்ணனும்.”
“ஹ…. ஏன் …எப்ப உன்னை நான் காதலிக்கலை ?”, ராகவன் விழிக்க, “அதில்லை.. கல்யாணத்துக்கு முன்னாடிதான் போன்ல பேசக் கூட சங்கடம். எங்கையும் போக வர பயம்னு இருந்தீங்க. இந்த ஒரு மாசமும் தினமும் ராத்திரி கொஞ்சணும். வெளிய கூட்டிட்டு போகணும், முக்கியமா பீச்சுக்கு, அப்பறம் மால்ல ஒரு காபியை வெச்சிகிட்டு ரெண்டு மணி நேரம் பேசிகிட்டு இருக்கணும்.”, மாலினி அடுக்க, ஆவென்று‘பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன ? ஆன்னு பாக்கறீங்க ?”
“இப்படியெல்லாம் ஆசைப் பட்டன்னே எனக்கு இப்பத்தான் தெரியுது. ரைட். உன் ஆசையெல்லாம் இந்த மாசம் நிறைவேத்திடலாம்.” வாக்குறுதி கொடுத்தான்.
மூன்று தட்டுகள் இனிப்பு, பழம், புடவை என்று சீர் வைத்து, மாலினியைக் கூட்டிச் சென்றார் சகுந்தலா. அன்றிரவே அவளை அழைத்தான். “மயிலு…. தூக்கம் வரலை.”
முதலில் பிகு செய்தாலும், அவள் ஆசைப்பட்ட செல்லக் கொஞ்சல்கள் அவனிடமிருந்து வர, தனிமையும் ,இரவும் வெட்கிச் சிவக்கும் முகத்தை மறைக்க அவள் புறம் வரும் சிணுங்கல்கள் தேனாய் இனித்தது ராகவனுக்கு.
முன்பு போல வாரம் இரு முறையாவது, மதிய வேளையில் அவன் ஆபிஸ் வருவாள், அவனை வம்பிழுத்துச் செல்வாள். அவ்வப்போது மாமியாரிடமும், விக்ரமிடமும் பேசிவிடுவாள். காது குத்து விசேஷம் பற்றிய பேச்சுக்கள் இடையிடையே எழுந்தாலும் அதை இடையூறாக்க விடவில்லை இருவரும். வார இறுதியில்,  அவள் வீட்டிற்கு வருவான். அதிக நேரம் இருப்பதில்லை. ஒரு காபி , பலகாரத்துடன் ,மரியாதை நிமித்தம் சில பேச்சுகள். அதோடு மாலினியை அழைத்துக்கொண்டு சென்றுவிடுவான். அஷ்டலக்ஷ்மி கோவில், பீச் என்று அவள் ஆசைப்படி சுற்றிவிட்டு வருவார்கள். மாலினியை வீட்டில் மறுபடி விட்டதும் கிளம்பிவிடுவான்.
 இளங்கோவன் இன்னும் மாப்பிள்ளை என்று அழைக்கவில்லை. அவனும் சர் என்ற அளவிலேயே இருந்துகொண்டான்.  வேறு புது ரூம் எடுத்துக் கட்டாதது இளங்கோவனுக்கு ராகவனின் ஆணவமாகவே பட்டது.  இப்படி இவர்கள் இருவரும் ஒட்டாமல் இருப்பது மாலினிக்கு வருத்தம்தான். ஆனால் ராகவன் அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. எத்தனையோ வீடுகளில் மாமனாரும் மருமகனும் பட்டும்படாத ஒரு உறவில் தான் இருக்கிறார்கள். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், கேட்க வேண்டாம் என்று மாலினிக்கு சமாதானம் சொல்லிவிட்டான்.  இந்த சில வாரங்களில் அவர்களுக்கான இனிமையான பொழுதுகளுள் யாரையும் உள்ளே விடவில்லை.
ஆடிப் பெருக்கு முடிந்ததும், தாயுடன் சென்று மாலினியை அழைத்து வந்தான். மாசம் முடியட்டுமே என்று சகுந்தலா கூறினாலும் இருவருக்கும் இனியும் தனிமை வேண்டாம் என்று தோன்றிவிட்டது. காது ஜவ்வு கிழிய சகுந்தலா ஓதியிருந்தார் மாலினியிடம், இனியும் குழந்தையை தள்ளிப் போடக்கூடாது என்று.
பர்வதம்மாவிடமும், “எல்லாரும் எதுவும் விசேஷமான்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. இவ என்னடான்னா கொஞ்சம் பழகிகறேன்னு சொல்றா. நீங்க எப்படி ஒத்துக்கறீங்க ?நானும் எடுத்து சொல்லியிருக்கேன். நீங்களும் சொல்லுங்க. “, எனவும் பர்வதம் நாலாபுறமும் தலையை ஆட்டி வைத்தார். அம்மாவிடம் சொல்வது தனக்கும் சேர்த்து என்று புரிந்தாலும் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை ராகவன். மாலினிக்குத்தான் தர்ம சங்கடமாகிற்று. ஆனாலும் ஒன்றும் சொல்ல முடியாத நிலை. “சரிமா.. நான் பார்த்துக்கறேன். கிளம்பறேன்.”, என்று தாயை மேற்கொண்டு பேசாதபடி பேச்சை திசை திருப்பினாள்.
காது குத்து வைபவத்துக்கான அழைப்பு காயத்ரி மாமியார் மாமனாரிடமிருந்து முறையாக வந்தது. எல்லா ஏற்பாட்டையும் முன் நின்று கவனித்தாள் மாலினி. அலுவலகத்திற்கு விடுமுறை கேட்டு, முன்னாளே அனைவரும் மதுரை சென்று இறங்கினர்.
விசேஷத்தன்று விடியற் காலையிலேயே எழுந்த மாலினி, குளித்து முடித்து தலையை காயவைத்தபடியே, நேற்று வாங்கி வந்த பழங்களை ஒரு முறை சரிபார்த்து, ஊரிலிருந்து எடுத்து வந்த மற்ற வரிசைத் தட்டு சாமாங்களோடான பெட்டியுடன் வைத்தாள்.  பூக்களை நேற்று குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்ததை எடுக்க வெளியே வரவும், காயத்ரியின் மாமியார் வாசலில் நீர் தெளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தாள்.
“என்ன சின்னம்மா, நீங்க செய்யறீங்க ? ஆள் வருமில்ல ?”
“இன்னிக்குன்னு வரலை மாலினி. நமக்கு ஒரு விசேஷம்னாதான் கழுத்தறுப்பாங்க. “
“போகுது விடுங்க. நான் கோலம் போடுறேன். நீங்க குடுங்க.”, என்று அவரிடம் வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டு அவரை உள்ளே அனுப்பினாள்.
கால் மணி நேரத்தில் ஓரளவுக்கு பெரிய கோலமாகப் போட்டுவிட்டு வரவும், குழந்தையோடு வந்தாள் காயத்ரி.
“அண்ணி, இவனைக் கொஞ்சம் பாருங்க. நான் போய் கிளம்பறேன். மாமியார் வந்து இப்பத்தான் இன்னுமா எழுந்துக்கலைன்னு புடுங்கிட்டுப் போனாங்க.”, முனகியபடி குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.
குழந்தையோடு சமையலறைக்குப் போகவும், “குழந்தைக்கு பாலைக்கூட குடுக்காம மகாராணி குளிக்கப்போயிட்டாளா ?”, என்றபடி பாலை ஆற்றினார் மங்கை.
“இதுல என்ன சின்னம்மா இருக்கு. செல்லத்துக்கு நாந்தான் இன்னிக்கு குடுக்கறேனே ?”, என்று சப்பைகட்டு கட்டி, பாலை வாங்கி குழந்தைக்கு புகட்டியபடியே சோஃபாவில் அமர்ந்தாள்.
வாசலை எட்டிப் பார்த்தவர், “இழை கோலம் அருமையா இருக்கு மாலினி.”, என்று பாராட்டிவிட்டு காபி போட ஆரம்பித்தார்.
ஒருவாறாக ஒவ்வொருத்தராய்க் கிளம்ப, காயத்ரி பட்டு சேலை சரசரக்க வந்தாள். அப்போதுதான் மாலினியைப் பார்த்தவள்,
“அண்ணி, நீங்க கட்டியிருக்கிறதுக்கு பேரு கலம்காரி புடவைதானே ?”, சுற்றி வந்து முந்தானையை விரித்துப் பார்த்தாள்.
“ஆமாம் காயத்ரி. இப்ப திரும்ப ஃபாஷனாகியிருக்கு.”
“அப்ப எனக்கு ஏன் அண்ணி எடுக்கலை ? வழக்கமான சில்க் காட்டன் புடவையைத்தான் அம்மா காட்டினாங்க ?”,  காயத்ரியின் குரலில் பொறாமை தெரிந்தது.
“ஒரு வேளை இது விலை ஜாஸ்தியோ ? அதான் எனக்கு எடுக்கலையா ?”, கொஞ்சம் குதர்க்கம் சேர்ந்தது இப்போது.

Advertisement