Advertisement

அன்று வீட்டு விலக்காகவும், பர்வதம் ,”ஒ… வந்துடுச்சா. நானே கேட்கணும்னு இருந்தேன் மாலினி. “, என்றார். ‘இதுக்கு மேல அவங்க கிட்ட எதிர்பார்க்காதே மாலினி. ‘, என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு சென்றாள் மாலினி. அதையே வேறு விதமாய் மறுனாள் சகுந்தலா கேட்டார்.
“மாலினி, இன்னேரம் உனக்கு நாளாச்சே. தள்ளிப் போயிருக்கா ?”
“மா… உடனேல்லாம் வேண்டாம்னு இருக்கேன்.”, இவருமா என்ற கடுப்பில் மாலினி வாயைவிட, பிடித்துக்கொண்டார் சகுந்தலா.
“ஏன்…ஏன்… எதாச்சம் தள்ளிப் போடறயா ? மாத்திரை எதுவும் எடுக்கறியா ? இதெல்லாம் வேண்டம் புரியுதா ? இல்லை உன் புருஷன் வீட்ல சொன்னாங்களா தள்ளிப் போட சொல்லி ?”, கேள்விகளை அடுக்கிவிட்டார்.
“அச்சோ… இருங்க … கொஞ்சம் மூச்சு விடுங்கமா….அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இப்பத்தான் கல்யாணம் ஆகிருக்கு. கொஞ்சம் இதை பழகிக்கறேன். ஒரு அஞ்சாறு மாசம் தள்ளி பார்த்துக்கலாம்னு இருக்கேன். மறு மாசமே உண்டாகணுமா ? எந்த மாத்திரையும் எடுக்கலை. எல்லாம் என் ஃப்ரென்ட் இருக்காளே கீதா, அவளும் கைனக் டாக்டர்தான ? அவகிட்ட கேட்டுட்டுதான்.” என்று விளக்கமளித்தாள் மாலினி.
“இங்க கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் ஆனாலே எல்லாரும் கேட்பாங்க. நீ ஆறு மாசமும் தள்ளிப் போடாதே. ஒரு மூணு மாசம் போறும். எல்லாம் பழகிக்கலாம். உன் நாத்தனா பழகிக்கலை ? உனக்கு மட்டும் ஏந்தான் இப்படியெல்லாம் தோணுதோ போ.”, என்று அங்கலாய்த்துவிட்டு வைத்தார் சகுந்தலா.
‘இந்த அம்மாவை ஒரு வருஷம் எப்படி சமாளிக்கறது ?’, என்று முழித்தபடியே அலுவலக லிப்டில் ஏறினாள் மாலினி.
அவளறியாத வேறொரு புகைச்சலும் நடந்துகொண்டிருந்தது. பர்வதம்மா அவரையும் அறியாமல் மகளிடம் மாலினியின் புகழ் படிக்கத் தொடங்கியிருந்தார்.
பேச்சு வாக்கில், “அந்த சேட்டு பொண்ணு ஷீலா வீட்ல கத்துகிட்டாளாம், நேரா அடுப்பு மேலயே போட்டு சுக்கா ரொட்டி மாதிரி சப்பாத்தி செஞ்சு, குருமா வெச்சா மாலினி. அருமையா இருந்துச்சு காயத்ரி.”, என்பார் ஒரு நாள்.
“பழைய பேப்பர் கடையில சொல்லி வெச்சிருந்தாளாம், ஒரு கிலோ அரை கிலோ ஹார்லிக்ஸ் பாட்டிலுங்க வாங்கிட்டு வந்து கழுவிட்டு அதுல கொட்டி வெச்சிருக்கா மளிகை சாமான. ஒரே சீரா அடுக்கி, பார்க்கவே அழகா இருக்குடி.”, என்றார் ஒரு நேரம்.
“காய் வெட்ட ஒரு மெஷின் வாங்கிட்டு வந்தாடி. அவ வீட்ல கூட இருக்காம். என்னா நைசா, நிமிஷமா வெட்டுது காரட் பீட்ரூட்டெல்லாம்.”, ஒரு நாள் சிலாகிக்க,
“அதெல்லாம் நேக்கா செய்யணும். உனக்கு வராது.”, காயத்ரி விட்டேத்தியாக சொன்னாள்.
“போடி, ஒரு ரெண்டு வாட்டி கத்துக் குடுத்தா தெரிஞ்சிக்கப் போறேன். மாலினி சொல்லிக்குடுக்கவும், இப்ப நானே செய்யறேன். அருவா மனையோட போராடணுமேன்னே காரட் பீட்ரூட் பொரியல் எப்பவாவதுதான் முன்னாடில்லாம் செய்வேன். இப்படியெல்லாம் மிஷின் இருக்கறது தெரியாமப்போச்சு.”, எனவும் காயத்ரிக்குத்தான் காண்டாகிப்போகும்.
“என்னமா ப்ளான் போட்டு சமைக்கறாடி. பார்க்கவே அழகாயிருக்கு. மூணு அடுப்புலயும் ஒரே நேரத்துல வேலை நடக்குது. அலட்டிக்காம சட்டு, சட்டுனு சமையலை முடிக்கறா.”, என்று சிலாகித்து காயத்ரிக்கு எரிச்சலை மூட்டுவார்.
இதெல்லாம் காயத்ரியிடம் சொல்லாமல் மாலினியிடம் சொல்லியிருந்தால் அவளாவது சந்தோஷமாகியிருப்பாள். நெஞ்சார நேரடியாக மருமகளை பாராட்டுவார்களா ? அப்படியாப்பட்ட அரிய வகை மாமியார்கள் எங்காவது இருப்பார்கள், அதில் பர்வதம் இல்லை என்பது திண்ணம்.
ஆனால் அவர் அறியாமலேயே பர்வதம் சில நேரம் சொல்வதையே  வைத்து அவருக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் மாலினி, நேரடி பாராட்டை எதிர்பார்ப்பதில்லை. அவள் நோக்கம், அவள் மீதான தேவையற்ற அவரது பயத்தைப் பர்வதத்திடம் போக்க வேண்டும். அவருக்கு சிக்கனமாக இருந்தால் போதும் என்ற அளவில், அதற்கேற்ப பார்த்துக்கொண்டாள்.
“காயத்ரி, நீ ஸ்கூல் முடிக்கும்போது உன் ப்ரெண்ட் குடுத்தான்னு ஒரு ப்ளாஸ்டிக் பூ சட்டி ஹால்ல வெச்சிருந்தியே. அது இன்னும் வேணுமாடி ?”, என்றார் பர்வதம் ஒரு நாள்.
“யாரு குடுத்தான்னே தெரியலை. வேண்டாம். எதுக்கு கேட்கறம்மா?”
“இல்லை, அதை எடுத்துட்டு, ஒரு அழகான கலர் பாட்டில்ல மணி ப்ளான்ட் வெச்சிருக்கா மாலினி. சாயம் போன அது ஹால்ல எதுக்குன்னுதான் மாத்திட்டா. உன்னை கேட்டுட்டு தூக்கிப் போட வெச்சிருக்கேன்.”
‘அடடா, தெரிஞ்சிருந்தா அங்கதான் இருக்கணும்னு சொல்லிருக்கலாமே.’, என்று லேட்டாய் நினைத்துக்கொண்டாள் காயத்ரி. இதற்கெல்லாம் சேர்த்து வைத்து வசூலிக்க சமயம் பார்த்திருந்தாள்.
அதுவும் வந்தது சில மாதங்களில். பர்வதம் ஒரு நாள் போன் செய்த போது, “மா… குட்டிக்கு காது குத்தி முடியிறக்கணும். மாமியார், தமிழ் மாசக் கணக்குபடி , பதினோராம் மாசம் செய்யலாம்னு இருக்காங்க, இங்க அவங்க குல தெய்வக் கோயில்ல.”
“ஆமாடி. அதான் வழக்கம், முதல் மொட்டை அவங்க கோவில்லதான்.”
“அது தெரியும். காது குத்த நீங்க என்ன செய்யப்போறீங்க ?”, விஷயத்திற்கு வந்தாள்.
“ஆம்பளை பிள்ளை. என்ன பெரிசா ? ஒரு இரண்டு கிராம்ல கடுக்கன். அதான?”, பர்வதம் கேட்கவும்,
“மா.. என் நாத்தனார் குழந்தைக்கு என் மாமியார் அரை பவுன் வெச்சாங்க. இப்ப மாலினி தாலி கோர்க்க வேற கால் பவுன் போட்டாங்க. அதனால அண்ணன் கிட்ட சொல்லி ஒரு முக்கால் பவுனாவது போட சொல்லுங்க.”
“என்னடி ? இப்படி சொல்ற ? தொட்டில் போட்ட கடனே இன்னும் இருக்கு. “, பர்வதம் திகைத்துக் கேட்க,
“ஏன், அண்ணனுக்கு அவர் மச்சானுக்கு முக்கால் பவுனுக்கு மோதிரம் போட முடியும் , தாய் மாமனா அவர் மடியில உட்கார வெச்சி முடியிறக்கப் போறோம். மருமகனுக்கு அதே முக்கால் பவுன் செய்ய மாட்டாராமா ? அதெல்லாம் எனக்குத் தெரியாது. இது கூட செய்யலைன்னா என் மாமியார், நாத்தனார் முன்னாடி தலை குனிவா போயிரும். நீ எடுத்து சொல்லு. இப்பத்தான் ரெண்டு சம்பளம் வருதில்ல ? கடைசி நேரத்துல சொன்னா கஷ்டம்னுதான் இரண்டு மாசம் முன்னவே சொல்லிடறேன். ஏற்பாடு செய்யச் சொல்லுமா.”, பர்வதத்தை பேசவே விடாமல் பாயின்ட் பாயின்ட்டாக அடுக்கினாள்.
இந்த இரண்டு மாதமாகத்தான் கொஞ்சம் தெளிய ஆரம்பித்தார்கள், இப்போது எப்படி கேட்க என்று யோசித்தார். ஆனாலும் மகள் கேட்டுவிட்டாள். செய்துதான் ஆக வேண்டும் என்ற எண்ணமும் ஓங்கியது.
அன்றிரவே ஆரம்பித்தார்.விஷயத்தை சொன்னதும் சற்று ஆடித்தான் போனான் ராகவன்.
“ம்மா… எத்தனை செலவு ஆகுதுன்னு பார்த்துகிட்டுதான இருக்கீங்க. இப்பதான் விக்ரமுக்கு ரூம் போட்டோம். கொஞ்சமும் நிமிர விடாம கேட்டா எப்படிமா ? அவளுக்குத்தான் புரியலைன்னா நீங்களாவது எடுத்து சொல்லலாம்மில்ல ?”
“இப்ப எதுக்குடா வீணா ரூமை போட்டீங்க ? மாலினி வீட்டு திருப்திக்காக செய்துட்டு இப்ப இவகிட்ட முடியாதுன்னு சொன்னா ஒத்துக்குவாளா? ஏன் அண்ணன் தம்பிக்கு செய்யும், மச்சானுக்கு செய்யும் ஆனா என் பிள்ளைக்கு அது மருமகனுக்கு செய்யாதாங்கறா ?”
அதைக் கேட்டதும் எங்கிருந்து முக்கால் பவுன் என்று மாலினிக்குப் புரிந்தது. ஆனாலும், “அதென்ன அத்தை முக்கால் பவுன் கணக்கு ?”, என்று அவர் வாயைக் கிளறினாள்.
பர்வதம் காயத்ரி சொன்ன கணக்கைக் கூறியதும், “ஓ… அப்ப அவங்க மாமியார் போட்டதை இப்பவே கழட்டித் தரேன். திருப்பிடுவோம். “, என்று சொல்லவும், “இன்னும் அரை சவரன் வேணுமே.”, என்றார் பர்வதம் கணக்கில் புலியாக!
“அதோட முடியுமா? தட்டு வெக்கணும், புடவை வெக்கணும்னு  லிஸ்ட் எடுப்பீங்க. அப்பறம் போகவர செலவு. “, ராகவன் தலையை தேய்க்க, “ சரிடா, இத்தோட முடிஞ்சிது. “, என்று சமாதானம் கூறினார்.
“தொட்டிலப்பவும் இதைத்தான் சொன்னீங்க. இதான் பெரிய செலவுன்னு. தோ அடுத்தது ரெடி.”, சுள்ளென்று இடைமறித்தான். பேச்சு அத்துடன் நின்றாலும் இறுக்கமாகவே இருந்தது அன்றைய இரவு.
மறு நாள் மாலை லேட்டாகும் என்று சொன்ன மனைவி சீக்கிரம் வந்துவிட , “என்ன மாலினி ? சனிக்கிழமை உன் ப்ரெண்ட் கல்யாணம், ஃபேஷியல் செய்யப்போறேன்னு சொல்லிகிட்டு இருந்த, இப்ப சீக்கிரம் வந்துட்ட?”, என்று விசாரித்தான்.
“இல்ல ரகு , வெறும் புருவம் மட்டும் திருத்தினேன். ஃபேஷியல் போனா எப்படியும் ஆயிரத்து ஐனூறு, இரண்டாயிரம் ஆகும்.  அந்த காசு இப்ப வந்திருக்க புது செலவுக்காகும்னு தோணவும் வந்துட்டேன்.”, மாலினி சொல்லிக்கொண்டே காபியைப் பருக, இதைக் கேட்ட ராகவனின் மனம், தன்மானம் இரண்டும் அடி வாங்கியது.
கல்யாணம் முடித்து வந்த நாளாக அவளுக்கென்று எதுவும் செலவு செய்யவில்லை. முந்தாநாள் அவளாக சொல்லவும் சந்தோஷப்பட்டிருந்தான். இப்போது தன் குடும்பத்துக்காக தன்னைப்போல அவளும் அவள் தேவைகளை சுருக்க ஆரம்பிக்கவும்,’ கவலையில்லாமல் வளர்ந்த பெண். ஒரு ஃபேஷியல் செய்யும் காசைக் கூட கணக்கு பார்க்கும் அளவுக்கு என் மனைவி என்ற பதவி அவளை சுருக்குகிறது. இப்படி ஒரு வாழ்க்கையைத்தான் அவளுக்கு நான் குடுத்திருக்கிறேன்.’, என்று தோன்ற  ராகவனுக்கு குற்ற உணர்ச்சியும் இயலாமையும் ஓங்கியது.
“ஹ்ம்ம்… நீ அவசரப்பட்டுட்ட மாலினி. உங்க அம்மா சொன்ன மாப்பிள்ளையை கட்டியிருந்தா இப்படி காசுக்கு கணக்கு பார்த்திருக்க வேண்டியிருக்காது.”, என்று வருத்தமாகக் கூறவும், மாலினிக்கு காபி புரை ஏறியது.
“என்ன …என்ன சொன்னீங்க ?”, மாலினி கேட்க, மீண்டும் , “இப்படி காசுக்கு அல்லாடிகிட்டு இருக்க என்னை விட பெட்டரா உங்க வீட்ல மாப்பிள்ளை பார்த்திருப்பாங்கன்னு…”, அவனை இடைமறித்து,
“ஷட் அப்”, சீறினாள்.
“ரகு…என்னை மாதிரி வீட்ல அடம் பிடிச்சி காதலிச்சவனை கல்யாணம் செய்துகிட்டு வர பொண்ணுங்களுக்கு ஒரு ப்ரச்சனைன்னா அம்மா வீட்ல சொல்ல முடியாது. நீயா தானே பார்த்துக்கிட்டன்னு குத்தி காட்டுவாங்க. புகுந்த வீட்லயும் சொல்ல முடியாது, என் புள்ளைய மயக்கித்தானே கல்யாணம் செய்துகிட்டன்னு அவங்க பங்குக்கு குத்திக் காட்டுவாங்க. எங்க காதலையும், கட்டிகிட்ட புருஷனையும் நம்பித்தான் வரோம். இதுல புருஷனே, நீ என்னைவிட வசதியானவனா கல்யாணம் செய்திருக்கலாம்னு பேசினா, அடித்தளமே ஆட்டம் கண்டிரும் ரகு… “, அடிக்குரலில் கர்ஜித்தாள்.
“இப்ப என்ன, நீங்களே பெரிய பணக்காரனா பார்த்து கட்டி வைங்க ரெண்டாம் தாரமா…. என் பொணத்த….”, கசந்த குரலில் சொல்லி முகம் திருப்பவும்,
“மாலினி….”, இரைந்தான் ராகவன். உடனே சுதாரித்து, “ என்ன பேச்சு இது? அபசகுனமா….”, என்று அடக்கப்பட்ட குரலில் கூறியவன், அவள் முகத்தை தன் புறம் திருப்ப, தாரை தாரையாக கண்ணீர் வடிக்கும் அவளைப் பார்த்து விகித்து நின்றான்.
திமிறி அவன் பிடியிலிருந்து விலகி எழுந்தவள், “நான் இல்லை… நீங்க… நீங்க பேசினதுதான் நாராசமா இருந்துச்சு. பேச்சு இன்னும் வளரும் முன்ன கிளம்புங்க. எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்.”, ஒரு கேவலுடன் சொன்னவள், கட்டிலில் மறு முனையில் சுருண்டு கொள்ள, தன் பேச்சின் வீரியத்தை அப்போதுதான் உணர ஆரம்பித்தான் ராகவன்.
எழுந்து சட்டையை மாட்டியவன், வெளியே வந்து டீ.வி பார்த்துக்கொண்டிருந்த பர்வதத்திடம், “ அம்மா. அவளுக்கு முடியலை. தூங்கட்டும், எழுப்பாதீங்க. நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன். எங்களுக்கு எடுத்து வெச்சிருங்க. நான் வந்து பார்த்துக்கறேன்.”, என்று சொல்லிச் சென்றுவிட்டான்.

Advertisement