Advertisement

அத்தியாயம் – 12
இரண்டு நாட்களாய் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து பரபரப்பாய் வேலை பார்க்கும் மருமகள் பொறுமையாக முகம் திருத்தி ஆறு மணிக்கு வாசல் தெளிக்க போவதைப் பார்த்தபடியே படுத்திருந்தார் பர்வதம்.
 ஒரு காபியைப் போட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்து சாவகாசமாய் குடித்துக்கொண்டிருந்தாள் மாலினி, பர்வதம் பல் தேய்த்து வரும் பொழுது.
“என்ன மாலினி ? சமையல், டிபன் எதுவும் செய்யலையா ? ஆபிஸ்  போகணும்தான ?”
“ஆமா அத்தை. ஆனா போயிட்டு ஒரு மணி நேரத்துல வந்துடுவேன்.”, என்றாள் சோம்பலாக.
“ஏன் ?”
“ராஜினாமா கடிதம் குடுத்துட்டு வர எவ்வளவு நேரம் ஆகப்போகுது ?”, ஒரு தோளைக் குலுக்கிக் கேட்டாள் மாலினி.
“என்ன…ராஜினாமாவா ? எதுக்கு ? “, பதறினார் பர்வதம்.
சோஃபாவில் இன்னும் வசதியாக சாய்ந்தவள், “ நீங்களும் உட்காருங்க அத்தை.”, என்று கூறினாள்.
“ம்ம்…  நீ சொல்லு. எதுக்கு வேலையை விடற ? ராகவனுக்கு தெரியுமா ?”, கேள்வியை அடுக்கினார் பர்வதம்.
“இனிமேதான் அத்தை சொல்லணும். காலையிலதான் தோணுச்சு.”, விட்டேத்தியாகக் கூறும் மருமகளை எதைக்கொண்டு அடிக்க என்று பார்த்திருந்தார் பர்வதம்.
சடக்கென்று எழுந்தவர், “ராகவா… டேய்… கொஞ்சம் எழுந்து வா இங்க.”, என்று குரல் குடுக்கவும், “என்ன…என்னாச்சுமா ?”, என்று ராகவனும் பதறி வந்தான்.
“என்னவா…. உன் பொண்டாட்டி வேலையை விடப்போறாளாம். “, புகார் வாசித்தார்.
“மாலினி ?”, ராகவன் அவள் புறம் திரும்பி சோஃபாவில் அமர்ந்தான்.
நேற்றிரவே தன் அன்னையிடம் மாலினியின் கஷ்டத்தைப் பார்த்து பேசுவதாய் சொன்னபோது தான் பார்த்துக்கொள்வதாய் தடுத்தவள், அதிகாலை அவனை எழுப்பி ,’இன்னிக்கு மதியம் வெளிய சாப்பிடுங்க. என்னால சுத்தமா எழுந்துக்கவே முடியலை. காலையில் நடக்கறதுக்கு கேள்வி கேட்காம என்னை சப்போர்ட் செய்ங்க.’, என்று கூறியிருந்தாள்.
“ம்ம்…. ஆமாங்க. என்னால ரெண்டு வேலை பார்க்க முடியலை. அத்தை மருமக வந்ததும் பொறுப்பை ஒப்படைச்சிட்டு  ஓய்வெடுக்கணும்னு நினைக்கறது கரெக்ட்தான்.  ஆனா இங்க எட்டு மணி நேரம், ஆஃபிஸ்ல எட்டு மணி நேரம்னு டபுள் ட்யூட்டி பார்க்க முடியாது. அதான் வேலையை விட்டுட்டு வீட்ல இருந்தா உங்களையும் அத்தையையும் பார்த்துக்குவேன்.”, மாலினி சொல்லவும்,
“ம்ம்… வாஸ்தவம்தான். சரி குடுத்துடு. எதுவும் பெனால்டி இருக்கா ?”, அவள் ஆட்டம் பிடிபட்டதும் இணைந்து ஆட,
“ஆமா. இந்த மாசம் சம்பளம் குடுக்க மாட்டான். இன்னும் அரை மாசம் சம்பளம் கேட்பான், அதைக் கட்டிட்டா போறும்.”, மாலினி சொல்ல,
“என்னடா.. அவதான் சொல்றான்னா நீயும் சரிங்கற ?”, பர்வதம் கலவரமாய் பார்த்தார்.
“அவ சொல்றது சரிதானம்மா. என்னாட்டம்தான் எட்டு மணி நேரம் வேலை பார்த்துட்டு வரா. வந்ததும் எனக்கு டயர்டா இருக்கும்னு காபி உடனே வருது. அவ உட்கார கூட நேரமில்லாம பாத்திரம் தேய்ச்சு, நைட்டுக்கு சமைச்சுன்னு பம்பரமா சுத்தறா. நாளைக்கு முடியலைன்னு படுத்திட்டா அவ அப்பா அம்மாக்கு யார் பதில் சொல்றது ? ”,
“டேய் மாசம் பொறந்தா சுளையா இருபதாயிரம் யாருடா தருவா? நீ கவலையேயில்லாம சொல்ற?”
“என்னை என்னம்மா செய்ய சொல்றீங்க ? இவ பாட்டுக்கு டயர்ட்ல பத்தாயிரம் போட வேண்டிய செக், கூட ஒரு சைபர் சேர்த்து ஒரு லட்சம்னு குடுத்துட்டா, மிச்ச காசை நாமதான் கம்பனிக்கு நஷ்ட ஈடு குடுக்கணும். அப்பறம் அவன் வேலையைவிட்டு தூக்குவான். அதெல்லாம்விட அவ வீட்ல இருக்கறதே பெட்டர்.”, ராகவன் நீட்டி முழக்கி சொல்லிக்கொண்டிருந்தான்.
‘அடடா…கோடு போட்டா ஹைவேயே போடறீயேப்பா’, என்று கணவனை உள்ளுக்குள் மெச்சியபடியே பர்வதம்மாவின் பதற்றத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் மாலினி.
“அம்மாடி…. நான் வேலைக்கு தனத்தை திரும்ப வர சொல்றேன்.கூட மாட சமையலுக்கு நான் ஒத்தாசை செய்யறேன். வேலையை விடாதம்மா.”, பர்வதம் மகனை கேட்பதைவிட மாலினியிடம் சரண்டராவதே மேல் என்று  இறங்கி வந்தார்.
“எனக்கும் வேலையை விட இஷ்டமில்லை அத்தை. முடியலைன்னவும்தான் இந்த முடிவுக்கு வந்தேன். சரி இன்னிக்கு நானும் அவரும் லன்ச் வெளிய பார்த்துக்கறோம். நீங்க உங்க வரைக்கும் பாருங்க. இந்த வாரம் எப்படி போகுதுன்னு பார்க்கறேன்.”, முடிவை தள்ளித்தான் போட்டிருக்கிறேன் என்று அவருக்கு உணர்த்திவிட்டு எழுந்து சென்றாள்.
அன்று அலுவலகத்திலிருந்து வீடு வந்த பொழுது, பாத்திரங்கள் கழுவி, சமையலறை சுத்தமாக இருந்தது. பால் காய்ச்சியிருந்தது. சூடாக காபியைப் போட்டவள், குடித்தபடியே இரவு சமையலைப் பற்றி பேசினாள்.  விஷயத்தை வளர்க்காமல், குத்திக் காட்டாமல், வழிக்கு வந்தாயா என்று ஆடாமல், அமைதியாய் கடந்து செல்வதும் உட்பூசலை, புகைச்சலை அடக்கும் என்று தெரிந்து நடந்து கொண்டாள் மாலினி.
மாலினியின் இந்த செய்கையில் பர்வதம்மாவின் சஞ்சலம் சற்று மட்டுப்பட்டது.  அன்று மதியம் காயத்ரிக்கு பேசும் போது அவளை திட்டியிருந்தார் பர்வதம்.
“உன் பேச்சைக் கேட்டு அவளுக்கு வேலை வெச்சது எவ்வளவு மடத்தனம்னு புரிய வெச்சிட்டா. வேலையை விட்டுட்டு வீட்ல உட்கார்ந்துக்கறேன்னுட்டா. முதலுக்கே மோசமாகிரும் போல…. நீயும் உன் ஐடியாவும்.”, என்று காய்ச்சியிருந்தார்.
“உன்னை யார் உடனே பணிஞ்சு போக சொன்னது? பாரு, அவ திரும்பி வந்து ஆடப் போறா. உன்னையே சமையல்காரியாக்கப் போறா .”, என்று காயத்ரி அவள் பங்குக்கு ஏற்றி விட்டிருந்தாள்.
கோவத்தில் பேச்சு மேல் பேச்சு வளர்ந்து, அம்மாவிற்கும் பெண்ணிற்கும் சண்டையாகிப் போனது.
ராகவனிடம் அன்று பின் புற அறையினை பாதி தடுத்து விக்ரமிற்கு ஒரு தனியறை ஆக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தாள் மாலினி. அவனுக்கு படிக்க ஏதுவாக இருக்கும், இவர்கள் அறை வாசலில் படுத்திருக்கிறானே என்ற அச்சமும் நீங்கும். புது அறை அவர்களுக்கென்று எடுத்துக் கட்டுவதைவிட செலவும் கம்மியாகும், அதே நேரம் அவள் பெற்றோரிடம் சொன்னது போல இரு பெட் ரூம் இருக்கும்படி மாற்றியாகி விட்டது என்று சொல்லிக்கொள்ளலாம் என்று விவரித்துக்கொண்டிருந்தாள்.
கன்னத்தில் கை வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தவன், “மயிலு… நானும்தான் இத்தனை வருஷம் இருந்தேன். எனக்கிந்த யோசனை வரவேயில்லை. நீ சொன்னப்பறம்தான் எனக்கும் தோணுது. விக்ரமை நான் கவனிக்கவேயில்லை. அம்மாக்கும் காயத்ரிக்கும் நடுவுல அல்லாடினதுல அவனை விட்டுட்டோம். தாங்க்ஸ் மா. “, அவளை கட்டிக்கொண்டு உச்சி முகர்ந்தான்.
“ஷ்…ஒரு தாங்க்ஸும் வேணாம். அஷ்வின் மாதிரிதான் விக்ரமும் எனக்கு. அவனோட அப்ப அப்ப பேசுங்க, என்ன படிக்கறான்னு கேளுங்க போறும். இப்ப அத்தைகிட்ட ரூம் தடுத்து கட்டறதை உங்க ஐடியாவா சொல்லுங்க.”, அவன் அணைப்பிலிருந்து சற்றே விலகி மாலினி சொல்லவும்,
“ஏன் ?”, என்று புருவம் உயர்த்தினான் ராகவன்.
“இல்லை, இது கண்டிப்பா காயத்ரிக்கு போகும். என்னவோ நான் வந்து வீட்டையே மாத்திட்டேன், கன்ட்ரோல் எடுத்துக்கறேன்னு அத்தையை பயப்படுத்துவா. அவங்க கிடந்து ஆடுவாங்க. உங்க ஐடியாவா சொல்லுங்க. “, மாலினி சொல்லவும்,  “ ம்ம்… அம்மாவையும் காயத்ரியையும் அதுக்குள்ள கணிச்சிட்டியா ?”, என்று கேட்டான் ஒரு சின்ன சிரிப்புடன்.
“கொஞ்சம். அன்னிக்கு கோவில்ல வெச்சு அத்தை பெட்ஷீட்டுக்கு வருத்தமா பேசினாங்க. அப்பறம் திரும்ப கெத்து காட்டினாங்க. இப்ப வேலைக்காரி விஷயம் எல்லாம் மதுரையிலருந்து வந்த மந்த்ராலோசனை.  அதை நான் காலைல முறிச்சு விட்டதும், எங்க ஓவரா ஆடுவனோன்னு இன்னிக்கு என் முகத்தை முகத்தைப் பார்த்தாங்க. நான் எப்பவும் போல இருக்கவும் அவங்க கொஞ்சம் ஹாப்பியா இருந்தாங்க. அதான் இப்ப அவங்க ரெண்டு பேரையும் யோசிச்சி ஹாண்டில் பண்ணனும் நான்.”
“என்னவோ லாஜிக் சொல்ற. எனக்கு தெரிஞ்சவரை இவங்க கிட்ட ஒரு லாஜிக்கும் கிடையாது. எப்ப எதுக்கு ஆடுவாங்கன்னே தெரியாது. பட் இதுல நீ சொல்றதும் கரெக்ட்டாதான் படுது. நானே பேசறேன். நாளைக்கு ஒரு மேஸ்திரியை வர சொல்றேன். இப்ப என்னை கொஞ்சம் கவனிக்கறது. வாங்கி வெச்ச டஸ்ட்பின் காத்து வாங்குது. இன்னிக்காச்சம் ….?”, ஆர்வமாய்க் கேட்க, மந்தகாசப் புன்னகையுடன், கொலுசில்லாத அவள் கால்களைத் தூக்கி அவன் மடியில் வைத்தாள் மனையாள்.
அடுத்த இரு வாரங்கள் களேபரமாக இருந்தது வீடு. ஆனாலும் நினைத்தபடியே விக்ரமிற்கு அறையைத் தடுத்து, அவன் புத்தகங்கள், புழங்கும் துணிகள் வைக்க ஷெல்ப்கள் அமைத்து, ஹாலில் இடத்தை அடைத்துக்கொண்டிருந்த மேசையை படிக்கும் மேசையாக மாற்றி, அவள் அலுவலக கோடவுனிலிருந்து வேண்டாம் என்று போட்டிருந்த ஒரு சுழல் நாற்காலியை சிறு தொகை கொடுத்து வாங்கிப் போட்டாள். ஒற்றை கட்டிலும், அதற்கு மெத்தையும் புதிதாக வாங்கினார்கள்.
இப்பொழுது எதற்கு இத்தனை செலவு விக்ரமிற்கு என்று மதுரையிலுருந்து முடுக்கி விட்டாலும், பர்வதம் இங்கே அவ்வளவாக ஆடவில்லை. “மாலினியின் பெற்றோர் சொன்னது போல புது அறை எடுக்கவா?”, என்று ராகவன் கிடுக்கிப்பிடி போட்டதும் ஒரு காரணம்.  இதில் மாலினி காட்டிய அக்கறையில் விக்ரம் அவளுக்கு விசிறியாகிவிட்டான்.
சொன்னது போலவே ஆட்டர் குருமூர்த்தியிடம் பேசி, காலேஜ் சேர்ந்ததும் சி.ஏ ஃபௌண்டேஷன் கோர்ஸ் படிக்க என்ன செய்ய வேண்டும் என்றதோடு மட்டுமல்லாமல், விக்ரம் பள்ளித் தேர்வு முடிந்ததுமே அவர் அலுவலகத்தில் பார்ட்-டைம் வேலைக்கும் ஏற்பாடு செய்தாள்.
“காலேஜ் சேர வெயிட் பண்ற மூணு மாசமும் உன் டைம் வேஸ்ட் ஆகாது. சி.ஏ இன்டர் முடிச்சு, நிறைய பசங்க ஆர்டிகல்ஷிப் செய்ய வருவாங்க அங்க. பரீட்சைக்கான நோட்ஸ், சந்தேகம் கேட்கன்னு அங்க கத்துக்கவும் முடியும் விக்ரம். காலேஜ் சேர்ந்த அப்பறமும் பார்ட்-டைம் தொடர்ந்து செய்யலாம். எல்லாத்தையும் விட முக்கியமா, நீ படிச்சு வேலைக்கு போனாலும் யாரும் இது உங்க அண்ணன் காசுல வந்துச்சுன்னு சொல்லிக்காட்ட முடியாது.  நாம அண்ணனை தொந்தரவு செய்யறோம்னு நீ ஃபீல் பண்ணவும் வேண்டாம். “, மாலினி சொல்லச் சொல்ல விக்ரமிற்கு தெளிவும், நம்பிக்கையும் வந்தது.  அதிலிருந்து அண்ணி ஆதர்ச குருவாகிப்போனாள் அவனுக்கு.
ராகவன், ஹாலில் இருந்த மர பீரோவை போட்டுவிட்டு புதுசு வாங்கிக்கொள்ளலாம் என்ற போதும், மேஸ்திரி அது தேக்கு மரம், இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. செப்பனிட்டால் போதும் என்றார். அதையே செய்யலாம் என்றாள் மாலினி. பர்வதம்மாவின் கல்யாணத்துக்கு அவர் தந்தையளித்த சீதனம் இந்த பீரோவும் , அறையில் இருந்த கட்டிலும். கொஞ்சம் செலவு செய்து புது கண்ணாடி போட்டு, வார்னிஷ் அடித்து, சிறிய மராமத்து வேலைகள் செய்யவும் ஜொலித்தது. பர்வதம்மா மிகவும் மகிழ்ந்துபோனார். காயத்ரியிடமும் சொல்லி மகிழ்ந்தார், அந்தத் தரப்பிலிருந்து வரவேற்பு இல்லை என்றாலும் பொருட்படுத்தவில்லை அவர்.
“பரவாயில்லை. சிக்கனமா முடிச்சுட்ட மாலினி. இந்த அலமாரிக்கு இத்தனை காலத்துக்கு அப்பறம் இப்படி ஒரு வாழ்வு.”, என்று பட்டும் படாமல் கூறியதே மாலினிக்கு பாராட்டாக பட்டது.  விக்ரம், பர்வதம்மாவின் உடைகள் இங்கே இடம் பெயர, படுக்கையறை ஒரு வழியாக முழுதும் மாலினி ராகவனின் அறையானது. இதுவரை அனைவருமே துணிமணி எடுக்க, வைக்க என்று வந்து போக இருந்தார்கள்.
இதையெல்லாம் ஒரு புறம் சமாளித்தாலும், தினமும் மதியம் அழைத்து அன்றைய நடப்பை அவளிடம் வாங்குவதில் சகுந்தலா சளைக்கவில்லை. விக்ரமிற்கு தனியறை என்பதில் பெரிதாக மகிழ்ச்சியில்லை என்றாலும், இப்போதைக்கு ஏதோ செய்கிறார்களே என்று சமாதானமாகிக்கொண்டார். மறுவீடு வந்தபின் இன்னும் வரவில்லை என்று அனத்திக்கொண்டிருந்தார். அந்த வாரம் வருவதாகச் சொல்லியிருந்தாள் மாலினி.

Advertisement