Advertisement

போனவள் முதலில் தேர்ந்தெடுத்தது துணி துவைக்க வாஷிங் மெஷின். அடுத்து பாத்ரூம் ஹீட்டரைப் பார்க்க, “ஏன் மாலினி ?”, என்றான் ராகவன்.
“அந்த ஹீட்டருக்கு நீங்க எப்பவோ ரிடையர்மென்ட் குடுத்திருக்கணும். போட்டா கால் மணி நேரம் கழிச்சு சுமாரா தண்ணி வருது, அதுவும் பத்து நிமிஷம் ஆஃப் செய்யணுமாம்… காலைல கிளம்பற அவசரத்துல இதெல்லாம் ஆகாத காரியம் ரகு. “
“சரி , ஆனா அதை நான் வாங்கறேன். இல்லைன்னா உங்கம்மா அதுக்கும் கழுவி ஊத்துவாங்க என்னை.”, புன்னகையோடு சொன்னாலும் அது உண்மை என்று புரிந்தவள், அவனை மன்னிப்பாக ஒரு பார்வை பார்த்து,
“நான் பே பண்றேன், ஆனா இதை சீர் லிஸ்ட்ல போடலை. நாம அப்பறம் பார்த்துக்கலாம். அதுக்கு பதிலா நம்ம ரூமுக்கு ஒரு ஏசி வாங்கிடறேன். அம்மா கேட்பாங்க. நீங்க ஏற்கனவே டிரிப்புக்கு செலவு செஞ்சிட்டீங்க.”, என்றாள்.
ராகவன் யோசிக்கும்போதே, விற்பனையாள் தவணை முறையில் ஒரு வருடத்தில் செலுத்தலாம் என்றவுடன், மாலினி, ஏசியை தவிர்த்து மற்ற இரண்டையுமே அதில் போட்டாள்.
“வாஷிங் மெஷினையும்  சீர் லிஸ்ட்ல போடறேன், ஆனா காசு இருக்கட்டும் நமக்கு. இதுக்கு வட்டி இல்லைன்னா எதுக்கு உடனே குடுக்கணும்? மாசா மாசம் கட்டிக்கலாம்.”, என்றாள்.
மற்ற பொருள்களைப் பார்வையிட்டு , விலை பார்த்து, எது வேண்டுமென்ற லிஸ்ட் எடுத்து ஒரு வழியாய் வெளியில் வர மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது.
“மாலினி, வா, உனக்கு பிடிச்ச குல்ச்சா, பன்னீர் மசாலா சாப்பிடலாம்.”, என்று அருகேயிருந்த வடக்கத்திய உணவகத்திற்கு அழைத்துச் செல்ல,
“வேணாம் ரகு. அதுக்கும் அத்தை எதாவது சொல்லுவாங்க. வீட்ல சமைச்சியிருந்தா வேஸ்டாகிடும்.”, மாலினி தயங்கினாள்.
“நான் ஏற்கனவே கூப்பிட்டு சொல்லிட்டேன். நீ வா. அப்படியே கேட்டா என் மேல பழிய போடு.”, என்று கூட்டிச் சென்றான்.
ஒரு வழியாக இவர்கள் வீடு வந்து சேர மணி பத்தரையாகிற்று. முகத்தை தூக்கி வைத்தபடியேதான் வந்து கதவைத் திறந்தார் பர்வதம்.  எதோ எழுதிக்கொண்டிருந்த விக்ரமைப் பார்த்து, “படிச்சது போறும். மூடி வைடா. எனக்கு படுக்கணும். “, என்று வள்ளென்று அவன் மீது விழவும், மறு வார்த்தை பேசாமல் புத்தகங்களை மூடி வைத்து படுக்கையை போட்டான் விக்ரம்.
‘ப்ளஸ் டூ படிக்கற பிள்ளைன்னு கொஞ்சம் கூட அக்கறையேயில்லாம இருக்காங்களே.’, என்று நினைத்தபடியே சென்றாள் மாலினி. இரவு படுக்கையில் ராகவன் நெருங்க, சற்று நேரத்திலேயே முத்தச் சத்தம் கூடவே, மாலினியின் கொலுசும்  பின்னணி சேர, ராகவன் நிதானித்தான்.
 “மாலினி…. கொலுசு சத்தம் போடுது, வெளிய சோஃபால தூங்கறான் விக்ரம், அவனுக்கு கேட்கப்போகுது.”, காதோடு கிசுகிசுத்தான்.
“ம்ம்… “,
“கழட்டி வெச்சிடேன்.”
மையல் கலைந்து சற்று நிதானத்திற்கு வந்த மாலினி, கொலுசைக் கழட்ட, ஏதோ யோசித்தவளாக, “ரகு, ஹோட்டல் மாதிரி, இங்க குப்பைதொட்டி இல்லை. ட்ஷ்யூ பேப்பர் எதுவும் இல்லை. எங்க தூக்கிப் போடுவீங்க ?”, என்றாள்.
“ஓஹ்… யோசிக்கவேயில்லை.”, கண்களை அழுத்தித் தேய்த்தவன், சரி நாளைக்கு முதல் வேலையா ஒரு டஸ்ட்பின் வாங்கிடலாம். கட்டில் கீழ கொஞ்சம் நியூஸ் பேப்பரை போட்டு வை.”
“ட்ஸ்ட் பின் எப்படி காலி பண்றதாம் ?”, மாலினி அடுத்த சந்தேகத்தை கிளப்ப, வாழ்க்கையின் நிதர்சனங்கள் முன் நிற்கும்போது, எங்கேயிருந்து கட்டிலில் டூயட் பாட ? என்ன செய்ய? யார் செய்ய? எப்போது செய்ய? என்ற முடிவுகளுடன், தூங்கிப்போனார்கள் பாவம்.
காலையில் ஏழு மணி போல எழுந்து வந்தவளை, “என்னமா, இப்பதான் வர?”, என்று வரவேற்றார் பர்வதம்.
“லீவுதான அத்தை ?”
“ஆபீஸ் லீவுதான், இன்னேரமா போய் வாசலுக்கு தண்ணி தெளிச்சு கோலம் போடுவ ? எல்லா கிழமையும் ஆறு மணிக்கு வாசல பெருக்கி தெளிச்சுடு மாலினி. இன்னிக்கு நான் செஞ்சிட்டேன்.”, என்ற உத்தரவுடன் கிச்சனுக்குள் புகுந்து கொண்டார்.
‘அடக் கொடுமையே…. நேத்து போட்டுக்கொடுத்ததுக்கு வெச்சி செய்யறாங்களோ ?’, என்று யோசித்தபடியே பாத்ரூமிற்கு சென்றாள்.
வந்தால் பால் காய்ச்சியிருக்க, விக்ரம் வரவும் அவனுக்கும் சேர்த்து காபி போட்டாள்.
“விக்ரம், இப்ப லீவ்லயே ட்வெல்த் போர்ஷன் முடிக்கறாங்களா உங்க ஸ்கூல்ல ?”
“ஆமா அண்ணி, தினமும் அரை நாள் கிளாஸ் இருக்கு அடுத்த வாரத்திலர்ந்து.”
“சரி, டிகிரி என்ன எடுக்கலாம்னு இருக்க ?”, காபியை ஆற்றியபடி மாலினி கேட்க,
“புதுசா என்ன அண்ணி, பி.காம் இல்லை பி.பி.ஏ தான். அப்பறம் எதாவது பாங்க் பரீட்சை எழுதி பெஞ்சை தேய்க்கவேண்டியதுதான்.”, விட்டேத்தியாக பதில் வந்ததில் துணுக்குற்றாள்.
“ஏன் விக்ரம் ? உனக்கு இதுல இன்ட்ரெஸ்ட் இல்லையா ? என்ன படிக்க விருப்பம் ?”
“அப்படியெல்லாம் இல்லை அண்ணி. என்ன படிச்சா என்ன?”, நழுவப் பார்த்தவனை விடாமல்,
“இரு. உனக்கு என்ன படிக்க விருப்பம். அதை சொல்லு. நம்மோட இருக்கும்.”, மாலினி உந்த,
வருத்தப் புன்னகையுடன், “அது… ப்ரொஃபெஷனல் கோர்ஸ் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா வீட்டு நிலைமை தெரியும், அதான் காமர்ஸ் க்ரூப்ல சேர்ந்துட்டேன். கேட்டிருந்தா அண்ணன் சேர்த்துவிட்டுருக்கும். ஆனாலும் கோச்சிங் எல்லாம் போக வேண்டியிருக்கும். JEE  எழுதணும். எல்லாத்துக்கும் காசு வேணும். பாவம் அவர் ஒருத்தர் சம்பாத்தியத்துல எவ்வளவுதான் சமாளிக்க ? ஒருவேளை மெரிட்ல சீட் கிடைக்கலைன்னா எல்லாம் வேஸ்டாகிரும். எதுக்கு தேவையில்லாம கஷ்டம் குடுக்கணும்.”, விக்ரம் சொல்லச் சொல்ல மாலினிக்கு நெகிழ்சியானது.
அவனை தோளணைத்து விட்டவள், “நிஜமா உங்க அண்ணனுக்காக இவ்வளவு யோசிச்சங்கறது ரொம்ப பெருமையா இருக்கு விக்ரம். உனக்கு எஞ்சினியரிங் படிக்க ஆசையா, இல்லை ப்ரொஃபெஷனல் கோர்ஸ் படிக்க ஆசையா?”
அவளின் அணைப்பில் நெளிந்தவன்,  “ அது…சாதா டிகிரின்னு இல்லாம ப்ரொஃபெஷனல் கோர்ஸ் படிக்கணும்னு நெனைச்சேன்.  போகுது அண்ணி விடுங்க.”, என்றான் சிங்க்கில் டம்பளரை கழுவிக்கொண்டே.
“இல்ல விக்ரம், இப்பவும் நீ சி.ஏ படிக்கலாம். அதுவும் ப்ரொஃபெஷனல் டிகிரி தான். எஞ்சினியரிங் டிகிரிக்கான மதிப்பை போலத்தான். “
“அப்ப அதுக்கும் காசாகும் இல்லையா அண்ணி. கூட டிகிரி முடிச்சதும் அம்மா  நான் வேலைக்கு போகணும்னு எதிர்பார்ப்பாங்க. அண்ணனுக்கு செலவு வைக்கக் கூடாது அண்ணி.”
“டேய்… இரு எங்க ஆபிஸ் ஆடிட்டரை எனக்கு நல்லா தெரியும். எங்க அப்பாக்கும் ஃப்ரெண்ட்தான். அவர்கிட்ட பேசிட்டு நான் சொல்றேன்.  நீ இப்ப ப்ளஸ் டூல நல்ல மார்க் எடுத்து, நல்ல காலேஜ்ல சீட்டு வாங்கு. அடுத்த ஸ்டெப் நாம் ப்ளான் பண்ணலாம். கோச்சிங் எதுவும் போகணுமா விக்ரம் ?”
“இல்ல அண்ணி பார்த்துக்கலாம்.”
“காசை பார்க்காதே. உன் தலையெழுத்தே இங்க இந்த மார்க் வெச்சிதான்.  விசாரிச்சு சொல்லு. தேவையான சப்ஜெக்ட் டுடோரியல் சேரணும்னா சேர்ந்துக்கோ.”, மாலினி சொல்ல விக்ரமிற்கு கண்ணை கரித்தது. இதுவரை வீட்டில் ஒருவர் அக்கறையாகக் கேட்கவில்லை, குறைந்த பட்சம் படிக்கிறாயா ?  நன்றாகப் படி என்று விசாரிப்பு கூட இருந்ததில்லை.
“இங்க என்ன பேசிகிட்டு இருக்க மாலினி, ராகவன் எழுந்து பல் தேய்ச்சிட்டு இருக்கான், காபி கொண்டுபோ.”, என்று பேச்சைக் கலைத்தார் பர்வதம்.
காலையில் இட்லிக்கு சட்னி செய்யப் பார்த்தால் தேங்காய் இல்லை. சரி வெங்காய சட்னி செய்யலாம் என்றால் ஓரே ஒரு வெங்காயம் தேமே என்று உருண்டு கொண்டிருந்தது. மாலினிக்கு கண்ணை கட்டியது.
பர்வதத்திடம் கேட்க, “விக்ரம் நாடார் கிட்ட ஒரு அரை முடி தேங்காய் வாங்கிட்டு வா.”, என்று விரட்டினார். அப்போதுதான் நேற்று நிறுத்தியதை எழுத உட்கார்ந்தான்.
“ஒரு நிமிஷம் விக்ரம்,”, என்று அவனை நிறுத்தியவள், “நீ படி. “, என்றுவிட்டு,  “காபியை குடிச்சிட்டீங்கன்னா, கொஞ்சம் கூட வந்து மார்க்கெட் காமிங்க. நான் அதுக்குள்ள சமையலுக்கு வேணுங்கறதையும் பார்த்து வைக்கறேன்.”, என்றாள் ராகவனை பார்த்து.
“இப்பதான் எழுந்திருச்சி வந்திருக்கான். அவனை ஏன் தொல்லை பண்ற மாலினி. விக்ரம் போயிட்டு வந்து படிக்கட்டுமே.”, அவர் ஆணையை மாற்றிய மாலினியைக் கண்டு புகைந்தார் பர்வதம்.
“எனக்கு கடை வீதி தெரிஞ்சா, நானே பார்த்துக்குவேன் அத்தை. ரெண்டு பேரையும் தொல்லை செய்ய வேண்டாம் பாருங்க ? அதுக்குத்தான். இன்னைக்கு விட்டா அப்பறம் பிசியாகிருவோம்.”, பர்வதம் பதில் பேச முடியாதவாறு கூறிவிட்டு மாலினி சமையலறைக்குள் புகுந்து என்ன இருக்கு இல்லை என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
எல்லா டப்பாவிலும் கொஞ்சம் பொருள்தான் இருந்தது. மிஞ்சிப்போனால் இரண்டு நாள் சமையலுக்கு வரும். இதை பார்ப்பதற்கு பதில் மொத்தமாக ஒரு மாதத்திற்கு ஆகும் பொருளை ஆர்டர் செய்துவிடலாம் என்று முடிவு செய்தவள், லிஸ்ட்டை எழுதினாள். இங்கேயும் நாலு பேர்தானே என்று அவள் வீட்டுக்கு ஆகும் அளவுகளே எழுதிக்கொண்டாள்.
ராகவன் கிளம்பி வரவும் பைக்கில் சென்று வழி பார்த்தபடியே காய்கறி கொஞ்சம் வாங்கிக்கொண்டு, சூப்பர் மார்க்கெட் சென்று லிஸ்ட்டைக் கொடுத்தாள்.
“ஒரு மாசத்துக்கு வர மாதிரி எழுதியிருக்கேன் ரகு. இது அம்மா காசுலர்ந்து நான் குடுக்கறேன். சீர் வரிசையில் ஒரு மாசம் ப்ரொவிஷன் வாங்க சொல்லியிருந்தாங்க அம்மா. அடுத்த மாசம் நாம பே பண்ணிக்கலாம்.”, என்றுவிட்டாள்.  காயத்ரிக்கு அவன் அம்மா வாங்கச் சொன்னது ஞாபகம் வர ராகவன் ஒன்றும் சொல்லவில்லை.
அப்போதைய தேவைக்கு பொருளை எடுத்துக்கொண்டு, டெலிவரி செய்ய முகவரி கொடுத்துவிட்டு வந்தார்கள்.
வீட்டிற்கு வந்தவள், சட்னியை அரைத்து டிபன் கடையை பரப்ப, அதற்குள் காய்கறிக் கூடையைப் பார்த்த பர்வதம், “எதுக்கு இவ்வளவு வெங்காயம் மாலினி? வேணுங்கறப்போ வாங்கிக்குவோம்.”, என்றார்.
“அடுத்த ரெண்டு நாளைக்கு ஆகும் அத்தை, கெட்டுப் போகாது. இப்ப முட்டை போட்டு ஒரு ஃப்ரைட் ரைஸ் செஞ்சிடறேன். கூட சாதம், ரசம் போறுமா ? அடுப்பை எடுத்துகிட்டு போகணும், புதுசு மாத்த.”, என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
“ஓ… சரி போறும்.”, என்று பர்வதம் சொல்லும் போதே,
“என்னங்க, ப்ளம்பரைக் கூப்பிட்டு செட் செய்யணும்னு சொன்னீங்களே ? வாஷிங் மெஷின், ஹீட்டர் நாளைக்கு வந்துடும்.  ஏசி பாயிண்ட்டுக்கு எலக்ட்ரீஷன் வர சொல்லணுன்மீங்களே?”, என்று அடுத்த விஷயத்திற்கு தாவினாள்.
“என்னது… வாஷிங் மெஷின்,ஹீட்டர், ஏசி ?”, என்றார் பர்வதம்.
“மாலினி சீர் காசுல வாங்கறாமா. ”, ராகவன் சொல்லவும்,
“என்கிட்ட சொல்லவேயில்லை ?” , என்று மாலினியைப் பார்த்தார்.
“அங்க போய்தான் தோணுச்சு அத்தை. நாலு நாள் நாங்க போயிட்டு வந்த துணியை கையால தோய்க்கணும்னா கண்ணைக் கட்டுச்சு. கூடவே இந்த ஹீட்டரோட நேத்தே அவ்வளவு தகராறு, அதான் அதையும் வாங்கிட்டேன். கூட ஒரு ஏசி.“
“இந்த மாதிரி பெருசா பொருள் வாங்கனா பெரியவங்களை ஒரு வார்த்தை கேட்க வேணாமா மாலினி. இப்படித்தான் நீயே செய்வியா? என்னதான் உங்க அம்மா வீட்டு காசுன்னாலும், மொத்தமா கரைக்கணுமா? “, தன்னிடம் கேட்கவில்லை, காயத்ரி சொன்னதுபோல மாலினி அவள் இஷட்த்திற்கு ஆடுகிறாள் என்பது போல பட்டது பர்வதம்மாவிற்கு. ராகவனும் அதற்கு தாளம் போடுகிறான் என்று நினைத்து குமைந்தார்.

Advertisement