Advertisement

அத்தியாயம் – 11
மூன்று இரவுகள், நான்கு நாட்கள் சென்றதே தெரியவில்லை காதல் தம்பதிகளுக்கு. ஒருவருள் ஒருவர் மூழ்கியிருந்தார்கள்.
பகலில் சில இடங்களை சென்று பார்த்து போட்டோ எடுத்துக்கொண்டபோதிலும், வெளியில் சுற்றிய சில இளம் ஜோடிகள் போல ஈஷிக்கொள்ளவில்லை ராகவன். மாலினிக்கும் அதுவே பிடித்திருந்தது.  நினைத்தபோது எழுந்து, தோன்றும்போது வெளியில் சுற்றி கடந்த சில மாதங்களாக இருந்த மன அழுத்தம் மொத்தமும் கரைந்தது இருவருக்கும்.  இரு வீட்டாரைப் பற்றியும் பேசுவதில்லை என்று எழுத்தப்படாத சட்டமாக வைத்துக்கொண்டார்கள். தினமும் மாலை ஓரிரு நிமிடம் தத்தம் வீட்டிற்கு அழைத்துப் பேசி நலம் விசாரித்ததோடு முடித்துக்கொண்டார்கள்.
தேனிலவு முடிந்து, ஒரு வழியாக கிளம்பி மதுரை வந்தனர். ரகுவரன் வந்து அழைத்துக்கொள்ள, காய்த்ரியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.  கொடைக்கானலில் வாங்கிய யூகலிப்டிஸ் எண்ணெய், ஏலக்காய் கிராம்பு வெள்ளை மிளகு என்று காயத்ரியின் மாமியாரிடம் கொடுத்தாள் மாலினி.  தேர்ந்தெடுத்து அவள் வாங்கி வந்தது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மதிய விருந்து மணமக்களுக்கு களைகட்டியது. முடித்து மீனாட்சியம்மனை இருவரும் சென்று தரிசித்து வந்தார்கள்.
இரவு சீக்கிரமே உணவருந்தி பேசி முடித்து அவர்களுக்கான அறைக்கு மாலினி வர, பின்னோடே காயத்ரி வந்தாள். “இந்தாங்க அண்ணி. இந்த பெட்ஷீட்டை எங்கிட்ட குடுத்துட்டாங்கன்னுதான அன்னிக்கு அத்தனை கோவம். பத்திரமா எடுத்துகிட்டு போங்க.”, என்று கொடுத்தாள்.
அதை வாங்கி பெட்டில் வைத்த மாலினி, “ கோவம் பெட்ஷீட்டுக்காக இல்லை.அத்தைக்கு வயசாகிடுச்சு சரி. உனக்கு போன வருஷம்தான கல்யாணமாச்சு. என்னடா, அண்ணன் கல்யாணம் முடிச்சு பொண்டாட்டியை கூட்டிகிட்டு  வருவாரேன்னு கொஞ்சமாச்சம் யோசிச்சியா ? நம்மக்கிருந்த ஆசை எதிர்பார்ப்புல அவங்களுக்கு பாதியாவது இருக்கும்தானன்னு எண்ணமிருந்திருந்தா, கட்டிலுக்கடியில குழந்தை ஈரம் பண்ண துணிய போட்டு வெச்சிட்டு போயிருப்பியா? இருக்கறது ஒரு பெட் ரூம். அப்ப இங்கதான் படுப்பாங்கன்னு சுத்தமாச்சம் செய்யணும் இல்லை ? அண்ணங்கிட்ட சட்டமா விளக்கு சுத்தும்போது வண்டி நகராதுன்னு பேசி காசு வாங்கத் தெரியுது. ஆனா நீ உங்க அண்ணனுக்கு செய்ய வேண்டிய விஷயத்தை கவனிக்கவேயில்லைங்கறப்போ அவருக்கு கோவம் வரத்தான செய்யும் காயத்ரி ? அதைவிட அவர் மேல அக்கறையில்லை உனக்குங்கறது இன்னுமே அவருக்கு வலிக்குது.”, கண்டிப்புடனே கூறியவள், “இங்கயே இருக்கட்டும் இது. நான் வேற வாங்கிட்டேன் எங்களுக்கு.”, என்று முடித்தாள்.
மாலினியிடம் எதிர்பார்க்காத இந்த கசையடியில் முகம் கன்றிப் போனவள், “அண்ணன் அப்படியெல்லாம் யோசிக்காது. நீங்களா எதுவும் ஏத்தி விடாதீங்க.”, என்று சீறிவிட்டு சென்றாள்.
இதன் எதிர்வினையை மாலினி கூடிய சீக்கிரமே சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் யோசிக்காது, படுக்கையை தயார் செய்தாள்; விடியலில் வண்டியைப் பிடிக்கவேண்டுமே என்று.
இதைப் பற்றி எதுவுமே ராகவனிடம் கூறிக்கொள்ளவில்லை மாலினி. பாவம் இன்னும் சில மணி நேரமாவது நிம்மதியாக இருக்கட்டும். சென்னை சென்றால் ப்ரச்சனைகள் தாமாக வந்து மொய்க்கப்போகிறது என்று விட்டுவிட்டாள்.
சென்னை வந்து சேர்ந்து அசதி தீர ஒரு தூக்கம் போட்டு எழுந்து வந்தவளிடம், “கொஞ்சம் எல்லாருக்குமா டீ போடு மாலினி.”, என்றார் பர்வதம்.
நாலு பேருக்கான டீ போடும்போதே தெரிந்துவிட்டது, இந்த அரதப் பழசான அடுப்பை வைத்துக்கொண்டு அவசரமாக ஒன்றும் செய்யமுடியாது. ஒரு சுற்று பார்வையை ஓட்டியவள், ஒரு முடிவுக்கு வந்தாள்.
கொடைக்கானலில் வாங்கிய ஏலக்காய் மணமணக்க டீயைக் கொடுத்தவள், பர்வதத்திடம்,  “அத்தை, என் கல்யாண சீர் வாங்க வேண்டியதிருக்கு.  புதுசா ஸ்டவ், மிக்சி, க்ரைண்டர் எல்லாம் வாங்கணும். நானும் அவரும் இப்ப போய் பார்த்துட்டு வரோம். நாளைக்கு ஞாயிறு. இதெல்லாம் கொண்டு போய் போட்டுட்டு , தள்ளுபடி போக புதுசு வாங்கிட்டு வந்துடலாம்.”, என்றாள்.
“ம்ம்…நானே புதுசு வாங்கணும்னு ராகவன்கிட்ட சொல்லிகிட்டுதான் இருந்தேன் மாலினி. நீ வந்து வாங்கணும்னு இருக்கு. நல்லதா பார்த்து வாங்குவியா ?  விலையப் பார்த்து வாங்கணும் மாலினி. “, பர்வதம் அட்வைஸ் பொழிய,
தலையாட்டியவள், “அதுக்குதான் இன்னிக்கு போய் பார்த்துட்டு வரப் போறேன் அத்தை.”, என்றாள்.
“உன் தம்பி வந்து உன் பொருளெல்லாம் குடுத்துட்டு போனான்மா நேத்து. உள்ள வெச்சிட்டேன். பார்த்தியா ?”, என்றார் டீயைக் குடித்தபடி.
“பார்த்தேன் அத்தை. தாங்க்ஸ். அடுத்து எங்க அடுக்கறதுன்னு யோசிக்கணும்.”
“மா.. பீரோல ஒரு ஷெல்ஃப்ல காயத்ரி, அவ துணி வெச்சிருக்கா. அதை பெட்டில போட்டு வெச்சிடுங்க. இப்பத்திக்கு வேண்டியதை மாலினி அதுல அடுக்கட்டும்.”, ராகவன் சொல்ல,
“காயத்ரியை ஒரு வார்த்தை கேட்டுகலாம் ராகவா. “, என்றார் பர்வதம்.
“அவ வரும்போதுதானமா தேவை ? அதுவரைக்கும் பெட்டியில வைக்கப்போறோம். இதுக்கு எதுக்கு அவகிட்ட பெர்மிஷன் ?  நீ எடுத்து வெச்சிட்டு அங்க அடுக்கிக்கோ மாலினி.”, ராகவன் சொல்ல, பர்வதம்மா முகம் சுருங்கியது.
“ஏன் மாலினி, உன் சீர் காசுல ஒரு பீரோ வாங்கறதுதான?”, என்றார்.
“வாங்கலாம் அத்தை, எங்க வெக்கறது ?”, என்றதோடு எழுந்து சென்றாள். பதில் சொல்ல முடியாமல் வாயை மூடிக்கொண்டார் பர்வதம்.
கிளம்பி வெளியே வந்த மாலினி, கையில் ஒரு பெரிய பையுடன் வந்தாள். வாசலில் இருந்த செருப்பு ஸ்டாண்டில், இவள் செருப்புகளை அடுக்க, வந்து பார்த்த பர்வதம்,
“அம்மாடி, உன் ஒருத்திக்கா இத்தனை செருப்பு ? பத்து பன்னெண்டு  ஜோடி இருக்கும் போலவே.”, என்று அதிசயித்தார். ‘என் துட்டு, என் மணி, என் காசு, உங்களுக்கு எங்க நோகுது’, என்று மாலினி மண்டைக்குள் சீறினாலும் முகத்தில் ஒன்றும் காட்டவில்லை.
“மாலினி, உங்க அம்மா வீட்ல இருந்தப்போ இப்படி வாங்கற சம்பளத்தை செருப்பு, கவரிங் தோடு, வளையல், துணின்னு கரைச்சது சரி. இனி இப்படியெல்லாம் அனாவசியமா செலவு பண்ணாதே. உன்னைவிட  நிறைய சம்பளம் வாங்கற என் பிள்ளையே ரெண்டு ஷூ ஒரு செருப்புன்னு சிக்கனமா இருக்கான். வீட்டு நிலைமை புரிஞ்சு நடக்கணும் தெரியுதா.”, பர்வதம் பாடம் எடுக்க,
‘உங்கிட்டருந்து மாசா மாசாம் பிச்சி புடுங்கப்போறாங்க சம்பளத்தை. உனக்கு லேட்டாத்தான் புரியப்போகுதுடி.”, மாலினியே முயன்றாலும் அவள் அன்னையின் பேச்சு காதோரம் ஒலித்தது. முகம் சுருங்க தன் அன்னையின் முன் நின்றவளைத்தான் பார்த்தான் ராகவன். அன்னையின் சிக்கனப் பேச்சின்  பின் பாதியை கேட்டுக்கொண்டே வந்தவன் எரிச்சலுற்றான்.
“மா… போறும் ஆரம்பிக்காதீங்க. மாலினிக்குத் தெரியும்.”,என்று சொன்னதுதான் தாமதம்,
“உன் பொண்டாட்டியை ஒன்னும் சொல்லலைப்பா. நீ பரிஞ்சிகிட்டு வராத. வீட்டுக்கு பெரியவளா சொல்ல வேண்டியது என் கடமை. புருஷன் சுமையை குறைக்கத்தான் பெண்டாட்டி. இவ இப்படி காசை செலவு செஞ்சா கடனை எப்ப அடைக்கறது ?”, என்று அவனை ஒரு பிடி பிடிக்கவும், மாலினிக்கு கோவம் தலைகேற,
“அதான் கடன் முடியற வரை குழந்தையை தள்ளிப் போடுன்னு சொல்லிட்டீங்களே அத்தை. நான் சிக்கனமா இருந்தாத்தானே நடக்கும். நீங்க கவலைப்படாதீங்க.”” என்று ஊசி ஏற்றிவிட்டு கிடைத்த செருப்பை மாட்டிக்கொண்டு வெளியில் சென்றாள்.
இப்போதுதான் இந்த செய்தியை கேட்ட ராகவன் தான் அதிர்ந்து நின்றான். “மா… இது எப்ப சொன்னீங்க மாலினிகிட்ட ?”
‘பாவி மக போட்டுக்கொடுத்துட்டாளே ! அப்ப அவங்கிட்ட சொல்லவேயில்லையா ?’ என்று உள்ளூர உதைத்தாலும், “அது நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னாடி சொன்னேன் ராகவா. உடனே குழந்தைன்னா உனக்கும் கஷ்டம்தான ? இப்பத்தான் தள்ளிப்போட நிறைய வழி இருக்குதாமே.”, என்று அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தார்.
“இதை நீங்க காயத்ரிகிட்டவும் சொல்லியிருக்கலாம்மா. கடன் இவ்வளவு ஏறியிருக்காது. ஆனா பொண்ணுன்னு வந்தா வேறதான் இல்லை ?”, வெறுப்பாகக் கேட்டுவிட்டு கிளம்பினான்.
மாலினியை வறுத்தெடுத்துக்கொண்டே உள்ளே சென்றார் பர்வதம். ராகவன் மாலினியுடன் பைக்கில் கடையை நோக்கி செல்லும் வழியில், “ஏன் மயிலு எங்கிட்ட சொல்லவேயில்லை ?”, என்று கேட்டான் கசங்கிய குரலில்.
“எதுக்கு ? இப்ப மாதிரி நீங்க வருத்தப்படவா? அவங்க எதுவும் சொல்லிக்கட்டும்னு, இப்பவும் நான் பேசியிருக்கக்கூடாது. என்னையும் மீறி வந்துடுச்சு. நாம ஏற்கனவே அந்த முடிவுல இருக்கோம்னு நான் சொல்லை ரகு. இது அவங்களுக்காகன்னே இருக்கட்டும். “
“ம்ம்… உன் எதிர்ல என்னை எவ்வளவு தலை குனிய வைக்க முடியுமோ அவ்வளவு செய்யறாங்க. நான் என்ன சொல்ல ?”, சிக்னலில் நிறுத்தியவன் விரக்தியாக , பேசவும், அவன் தோளை அழுத்தியவள், “ நமக்குள்ள என்ன ரகு இதெல்லாம் பார்த்துகிட்டு.  சொல்றது தப்புன்னு தெரிஞ்சும் சொல்றாங்க. என்ன செய்ய முடியும் ? விடுங்க, நாம நம்ம வேலையை பார்க்கலாம்.”, என்று தேற்றினாள்.

Advertisement