Advertisement

அத்தியாயம் – 10
அன்று மாலை ஒரு வழியாக மாலினி வீட்டிற்கு மறுவீடு வந்தனர் புதுமணத் தம்பதியர். அக்கம் பக்கத்திலிருந்து இரண்டொருவர் வந்து பார்த்துவிட்டு போக, பேச்சுகள் சற்று இயல்பாக இருந்தது.
இரவு விருந்து ஆள் வைத்து சமைக்கவும், தடல்புடலாக இருந்தது. சகுந்தலாவின் தங்கை குடும்பமும் வந்திருக்க, எந்த குத்தல் குடைச்சலுமின்றி முடிந்தது.
இரவு மாலினியின் அறை மிதமான ஏசியின் குளிரில் இருக்க, குளித்து வந்தவன் பார்த்தது, மாலை உடுத்தியிருந்த அதே ரோஸ் நிற வழ வழ புடவையில் இருந்த மனையாளை. கைபேசிகளை சார்ஜில் போட்டுக்கொண்டிருந்தாள்.
“மயிலு….”, ராகவன் அழைப்பில் திரும்பியவள், கண்ணில் பட்டது, குளித்து, இடுப்பில் கட்டிய துண்டோடு நிற்பவனைத்தான். இதுதான் முதல் முறை இப்படி பார்ப்பது. அவர்கள் வீட்டில் பொதுவான குளியலறை என்பதால், பனியன் லுங்கி அணிந்தே வெளியே வந்தான்.
அவன் பார்வையைப் பார்த்தவள் இதயம் தடதடக்க, மாலினியின் மருண்ட பார்வையைப் பார்த்த ராகவன், “ என்ன… ஏன் பயம்? “
“இல்ல …பயமெல்லாம் இல்..லை.” , மாலினி பார்வையை தழைத்து சொல்ல,  “அப்படியா ? “, அருகே வந்தவன், “உன் கண்ணு வேற சொல்லுதே ?”, என்று அவள் முகத்தை நிமிர்த்த, “என் தைரியமான மாலினிக்கு கூட அச்சம் வருமா ? அதுவும் என்னைப் பார்த்து ?”
“ம்ம்….அச்சம் இல்லை கூச்சம்…”, வாயாடினாலும், அவன் பார்வையை சந்திக்க மறுத்து விழிகள் நாலாபுறமும் நர்த்தனமாட…” ஷ்… மயிலு… ரிலாக்ஸ். ட்ரஸ்ட் மீ…உனக்கு இஷ்டமில்லாம எதுவும் நடக்காதுன்னு தெரியும்தானே ?”
“ம்ம்… துண்டு கட்டிட்டு ‘ட்ரஸ்ட் மீ’. ன்னு  சொல்றவரை நம்பணுமா? அவளோ தத்தியா உங்க மயிலு ?”, அவன் வார்த்தைகள் அவளையும் நிதானப்படுத்த, குறும்பு தலை தூக்கியது.
“யார் சொன்னா தத்தின்னு ? இதோ நிமிஷமா உஷாராகிட்டதான ? சரி நான் எதுவும் செய்யலை. நீயே எதாச்சம் செய்யேன். நான் பயப்படாம் இருக்கேன்.”, ராகவன் அவளை உந்த,
அவனைப் பார்த்து விழிகளை உருட்டி, “நம்பிட்டேன். “, என்றவள் அப்போதுதான் உணர்ந்தாள், அவனின் தோளைப் பிடித்திருந்ததை. ஈரமாக இருந்தது. “அச்சோ..சரியா துடைக்கலையா ? இருங்க.”, என்று விலகியவள் வேறு டவலை எடுத்து வர, “  முதுகு எட்டலை. நீதான் துடைச்சிவிடேன் ?”, என்றான் குறும்புப் புன்னகையோடு.
“இது எங்க போய் முடியப்போகுதுன்னு தெரியுங்க சாரே….”, என்று கிண்டலடித்தாலும், அவன் பரந்த முதுகை துடைத்தவள், அவளையும் மீறி அதில் இதழ் பதிக்க, “ இங்க முன்னாடியும்  ஈரம் இருக்கு மயிலு.”, என்றான் ராகவன் கள்ளச் சிரிப்புடன்.
சின்ன புன்னகையோடும், சிவந்த கன்னங்களோடும் அவனின் முன்னே வந்தவள், மார்பை துடைக்க, அங்கிருந்த ரோமங்களில் கைகள் சற்று நடுங்கினாலும் அளைந்தது. ‘என்ன செய்யற மாலு.’ என்று யோசித்து நிறுத்தும் முன்னர், “எதுவும் யோசிக்காத மயிலு. நாந்தான், நாம மட்டும்தான்.”, என்று அவள் இடை பற்றி, சற்று கரகரத்த குரலில் சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்தவள், சற்றே எட்டி ஒரு சிறு முத்தம் வைத்தாள் இதழில்.  இடையின் அணப்பை இறுக்கி செயலை தனதாக்கியவன், மாலினியை இரண்டெட்டு பின்னே நகர்த்தி படுக்கையில் விட்டு அவனும் விழ,
“க்றீக்”, என்று படுக்கை அலறியது. அப்படியே உறைந்தார்கள்.
மெதுவாக ஊன்றி ராகவன் எழுந்து அமர, கட்டில் முனகியது. எழுந்தேவிட்டான் ராகவன்.  மாலினி புரண்டு எழுந்துகொள்ளும் போது பெரிதாக சத்தமில்லை. அவளை சந்தேகமாக பார்த்தான்.
“அதென்ன நான் புரண்டப்போ அப்படி ஒரு சத்தம் மாலினி ?”
மோன நிலை முற்றும் கலைந்து, மெத்தையை தூக்கிப் பார்க்க, அதிலிருந்த விரிசல் அவர்களைப் பார்த்து இளித்தது.
“பெயிண்ட் செய்ய வந்தப்போ கட்டிலை கழட்டி மாட்டினாங்க. எதுவோ சரி செய்யணும்னு அம்மாகிட்ட சொல்லிகிட்டு இருந்தாங்க. நம்ம ரெண்டு பேர் வெயிட்டும் சேர்ந்து விழவும்….”, ராகவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் மாலினி.
கண் மூடி தன்னை நிதானத்துக்குக் கொண்டு வந்தவன், “இன்னும் நேரம் வரலை போல நமக்கு. ஆடாம அசையாம உள் பக்கம் நீ படு. கட்டிலை உடச்சிட்டோம்னு நாளைக்கு உங்க அப்பா முன்னாடி நிக்க முடியாது.”, பையிலிருந்து தன் லுங்கியை எடுத்து அணிய, மாலினி பாத்ரூமில் நைட்டிக்கு மாறி வந்தாள். மிட்டாயைக் ஒரு வாய் சாப்பிட்டு தவிறி கீழே போட்டுவிட்ட குழந்தைபோல இருவருக்குள்ளும் ஏமாற்றம். வெளிக்காட்டி அடுத்தவரை இன்னும் காயப்படுத்தாமல் இருக்க மறைத்தார்கள்.
 “என் வெயிட் தாங்குமா, இல்லை ஹால்ல படுத்துக்கவா ?”, என்றான் ராகவன் கட்டிலை சந்தேகமாக பார்த்துக்கொண்டே.
“படுத்து பாருங்க முதல்ல. கீழ பெட் போட முடியாது. கதவு, பீரோன்னு இடிக்கும்,”, மாலினி சொல்லி உட் புறம் படுக்க, விடி விளக்கைப் போட்டுவிட்டு, மெதுவாய் படுத்தான். சற்று கம்மியாக முனகியது படுக்கை.
“ம்ம்… நம்ம முனகறதுக்கு பதிலா உன் பெட் செய்யுது. ஒன்னும் சொல்றதுக்கில்லை.”, ராகவன் புலம்பல் கேட்டு மாலினி குலுங்கிச் சிரிக்க, அவளுடன் இணைந்தவன்,  அவளை அணைத்து உச்சியில் ஒரு  முத்தம் வைத்து, “குலுங்காத மயிலு. உடைஞ்சு வெக்கப்போகுது.”, என்றான்.
“சாரிங்க. இப்படியாகும்னு நினைக்கலை.”, மாலினி வருந்த, “சே… இதெல்லாம் எப்படி தெரியும். விடு. நேத்திவிட இன்னிக்கு பரவாயில்லை, கட்டிபிடிச்சிருக்கோம், முத்தம் வேற குடுத்த, மெதுவா போவோம்.”, இதமான மன நிலையுடன், பயணக் களைப்பும் சேர இருவரையும் நித்திரை தழுவியது.
காலையில் எழுந்த மாலினி பல் துலக்கி காபிக்கு அம்மாவிடம் சென்றாள். “ஏய், குளிச்சிட்டு உள்ள வா மாலினி. தலைக்கு ஊத்து.”, என்றார் சகுந்தலா அவசரமாக.
சாவதானமாக உள்ளே வந்தவள், “ உடனே குளிக்கணும்னு அவசியமில்லை. காபியை போடுமா.”,என்றாள் தாயைப் பார்த்து.
“ஏசிய போட்டு நிம்மதியா தூங்கினியாடி ? அங்கையும் உன் சீர் காசுல ஒரு ஏசியை வாங்கிடு முதல்ல. கத்தரி வந்தா தாங்கமாட்ட.”, சகுந்தலா பேசிக்கொண்டே போட, இடைமறித்து,
“பெயிண்ட் அடிக்கும்போது கட்டில்ல ஏதோ சரியா மாட்ட முடியலைன்னு சொன்னாங்களே, அது அப்பறம் சரி செய்யவேயில்லையா ?”, என்றாள் உள்ளிருந்த எரிச்சலை அடக்கியபடி.
“அப்பறம் நீ ஒண்ணும் சொல்லலை. கல்யாண கலாட்டால நானும் விட்டுட்டேன். என்னாச்சு ?”, சகுந்தலா காபியை கலக்கியபடியே கேட்டார்.
“ஏசி மட்டும் போறுமா ? ஏற்கனவே ரெண்டு பேர் படுக்க என் கட்டில் சின்னது. இதுல அவர் படுத்ததும் வெயிட் தாங்காம ஆடுது, பார்த்தா விரிசல் வேற விட்டிருக்கு. எங்க நடு ராத்திரியில உடஞ்சு விழப்போகுதோன்னு அசையாம படுத்து, தூக்கமே போச்சு. அங்க பழைய கட்டில்னாலும், தேக்கு மரம் ஸ்ட்ராங்கா இருந்துச்சு, படுக்க தாராளமா இருந்துச்சு.  இது சரியாக்காம எங்களை வந்து தங்க சொல்லாத.”,  சிடுசிடுத்தவள், வெடுக்கென்று காபியை வாங்கிக்கொண்டு சென்றாள். சகுந்தலா முகத்தில் ஈயாடவில்லை!
ஒரு வழியாக காலை உணவு முடித்து, கிளம்பும் நேரம், “ ஏன் மாலினி, அந்த ஸ்வீட் காரமெல்லாம் எடுத்து, தெரிஞ்சவங்க சொந்தக்காரங்களுக்கு குடுக்கணும். உங்க மாமியார் குடுத்தாங்களா தெரியுமா ?” என்றார் சகுந்தலா.
“தெரியாதுமா. பாதிய தூக்கி காயத்ரி கிட்ட குடுத்தனுப்பிச்சாங்க. அவ மாமியாரை மதுரையில குடுக்க சொல்லி.”, என்ற படியே, கொடைக்கானலில் போட தன் ஸ்வெட்டர் ஷாலைத் தேடிக் கொண்டிருந்தாள்.
“அதான பார்த்தேன். நம்மத தூக்கி பொண்ணை சீர் கூட்டி அனுப்பிட்டாளா. நினைச்சேன். இந்த ஈத்தரை வேலைதான் நடக்கும்னு. நான் சொன்னா கேட்டியா.”, என்று சகுந்தலா கச்சேரி ஆரம்பிக்கவும் ‘அய்யோ, யோசிக்காம வாய விட்டேனே’, திக்கென்று ஆனது மாலினிக்கு. அவசரமாய் கதவைப் பார்க்க, மூடியிருந்தது.
“மா… கத்தாத. இப்ப என்ன? அவங்க மதுரையில் குடுத்தாலும் என் கல்யாண சீர்னுதான் சொல்லுவாங்க.  உன் பேரு அங்கயும் ஃபேமஸ் ஆகும் விடு.”
“பொண்ணை புள்ள பெத்து சீர் கூட்டி அனுப்பினாலும் ஸ்வீட் போடுவாங்க. அதை உங்க மாமியா அவ காசுல செஞ்சிருக்கணும்.  அவங்க குடுத்தா நீ வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தியா ? “
கண்களை உருட்டியவள், “ ஏன் அங்க ஒரு சண்டையை போட்டிருக்கணுமா?  ஊர் மெச்ச எல்லாருக்கும் குடுக்கணும்னுதான சீர் வெச்சீங்க. இப்ப போனதும் இருக்கறதை தெருவுல அவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு நானே போட்டு அனுப்பிடறேன். போறுமா ? ஒரு மைசூர் பாகு, பாதுஷாக்கு இவ்வளவு பேச்சா ? அவர் காதுல விழுந்தா வருத்தப்படுவாரு.  நீ கிளம்பு ரூமை விட்டு.”, என்று கத்தரித்து அனுப்பினாள்.
அவர் சென்ற சில நிமிடங்களில் “கிளம்பலாமா மாலினி ? உங்கப்பா என்னவோ உன்னை கொடைக்கானலுக்கு நடத்தி கூட்டிட்டு போய் குடிசைல தங்க வெக்கப்போறா மாதிரி அத்தனை கேள்வி. அந்த இடம் பாரு இங்க போங்கன்னு அத்தனை அட்வைஸ்.  முடியலைமா.”, என்று வந்து நின்றான் பாவமாக.
“சரி வாங்க கிளம்பலாம். போகும்போதே பெட்ஷீட்டும் வாங்கிட்டு போகலாம்.இன்னும் தாம்பரம் பக்கம் கடையெல்லாம் தெரியாது எனக்கு.”, என்றவள், அவனை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
“எது, உங்கப்பா டார்ச்சரை சமாளிச்சதுக்கான ஆறுதல் பரிசா ?”, விலகச் சென்றவளை தடுத்து கைவளைவில் நிற்க வைத்துப் பேச, “ம்ம்… கொடைக்கானல் போயிட்டு ஃபர்ஸ்ட் ப்ரைசே தரேன். இப்ப ஆறுதல் பரிசுதான்.”, கண்ணடித்து அவன் கைகளிலிருந்து விலகிச் சென்றாள்.

Advertisement