“அம்மாவை வரச் சொல்லியிருக்கேன்… அவங்க பசங்களை பார்த்துக்கட்டும்… நீ அப்போ அப்போ கோவில் கிட்டப் போய் எல்லாம் சரியா இருக்கா பார்த்துக்கோ” என்றான் அலரிடம்.

“ம்ம், சரி” என்றவள் “என்ன பண்ணனும்?” என

அவளிடம் செய்ய வேண்டியதை வரிசைப்படுத்த… “ஒரு நிமிஷம்” என்றவள் “மறந்துடுவேன்” என்று எழுதிக் கொண்டாள்.

“பணம் யாருக்கும் குடுக்காதே, திருவிழா முடிச்சு குடுத்துக்கலாம். யார் கேட்டாலும் நான் நாளைக்கு குடுப்பேன்னு சொல்லு. முன்னமே குடுத்தா பாதி பேர் தண்ணி அடிச்சு மட்டையாகிடுவானுங்க இல்லை கலாட்டா பண்ணுவானுங்க. எல்லாம் சரியா நடக்கணும் அலர்” என்றான்.

அவன் பேசுவதில் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்ற பதட்டம் தெரிய,

“நான் பார்த்துக்கறேன் நீங்க எதையும் யோசிக்காம ரெஸ்ட் எடுங்க. காலையில சாப்பிட என்ன வேணும்?”

“ஆதிக்கிட்ட கேட்டுக் குடு, எனக்கு நாளைக்குள்ள சரியாகனும்னு சொல்லு” என்றான்.

“உங்க பேச்சை அலர் மட்டும் தான் கேட்பா, காய்ச்சல் எல்லாம் கேட்காது. எல்லாம் சரியாகிடும். பண்டிகையை மனசுல மூளைல எதுலையும் ஏத்தாதீங்க நான் பொறுப்பு” என்றுவிட…

அதன் பிறகே உறங்க ஆரம்பித்தான்.

ஆம்! திருவிழா திருவிழா இது மட்டுமே அவனின் ஞாபகத்தில்…

ஜெகதாம்பிகை வருவார் என்று தாரகன் சொல்லியிருக்க, அவர் வரும் வழியாக காணோம். இவளே வேகமாய் சென்று குளித்து வர, ஆதிரையன் வந்திருந்தான்.

“அவருக்கு என்ன சாப்பிட கொடுக்கலாம் ஆதி”

“அரிசி கஞ்சி இல்லை பார்லி கஞ்சி குடு, நான் பிரட் வாங்கிட்டு வந்திருக்கேன். அவருக்கு எது வாய்க்கு பிடிக்குதோ சாப்பிடட்டும். மதியம் ரசம் சாதம் கொடுக்கலாம்” என்றான்.

“மாமா, என்னை அப்போ அப்போ கோவில் பக்கம் போகச் சொல்லியிருக்கார், நீதான் இங்க அவரைப் பார்த்துக்கணும்” என்றாள்.

“நீ மாமாவோட இருக்கியா அக்கா, நான் போய் பார்த்துக்கறேன்” என்றான் ஆதி.

“இல்லைடா, அவருக்கு நான் போனா சரியா பார்த்துக்குவேன்னு ஒரு நினைப்பு. நானும் பார்த்துக்கறேன்னு சொல்லியிருக்கேன். அதுக்கு அப்புறம் தான் தூங்கறார். நான் பார்த்துக்கறேன், நீ அவரை பார்த்துக்கோ” என்றாள்.

“காலையில அங்கே பெரிய வீட்ல என்னன்னு பாரு, சமைக்க ஆள் தான் வெச்சிருக்கோம் அங்கே. எல்லார் வீட்டையும் கூப்பிட்டு இருக்கோம். நான் இங்க பார்த்துக்குவேன், மாமா கோவில்ல இருப்பார்ன்னு பிளான்”

“இப்போ இவர் எங்கேயும் வர முடியாது. நான் அங்கே போறேன், நீ இங்க பாரு”

“நான் வரலன்னா என்ன பண்ணியிருப்பக்கா” என்று இடுப்பில் கை வைத்து அவளை முறைக்க…

“அப்போ ஏதாவது யோசிச்சிருப்பேன், இப்போ நீ பாரு” என்று விட்டு, குழந்தைகளை குளிக்க வைத்து, அவர்களுக்கு புது உடை அணிவித்து, அவள் ஒரு சுரிதாரில் தயாரானாள். கோவிலுக்கு போவதும் வருவதுமாக இருக்க, இந்த உடை லகு என்று நினைத்தாள்.

அதற்குள் பெரிய வீட்டில் இருந்து ஆதி உணவு எடுத்து வந்திருக்க, மக்களை உண்ண வைத்து, கணவனுக்கு… கஞ்சி வைத்து அவனை எழுப்பி குடிக்க வைக்க, அவனுக்கு காய்ச்சலோடு குளிரும் எடுக்க ஆரம்பித்திருந்தது.

ஆதி பார்த்தவன் “மாமா, தண்ணி நிறைய குடிக்கறீங்களா இல்லையா? இது யூரினரி ட்ராக்ட் இன்பெக்ஷன் மாதிரி இருக்கு” என்று கடிந்தவன், மாணிக்கத்திற்கு அழைத்து, லேபில் இருந்து ஆள் அனுப்ப சொல்லி ப்ளட் டெஸ்ட் யூரின் டெஸ்ட் எல்லாம் கொடுக்க வைத்தான்.

பின் ஆதியும் அவளும் உண்டனர். கோவில் செல்லுவதால் ஒரு வேளை நேரமானால் என்ன செய்வது என்று உண்டு விட்டாள்.

தாரகனுக்கு காய்ச்சல் என்று சொல்லவில்லை. காய்ச்சல் என்று சொன்னால் ஆளாளுக்கு பார்க்கிறேன் என்று வந்து நிற்பர். அது வேண்டாம் என்று அவன் தெளிவாய் சொல்லியிருக்க, அதனால் இந்த விஷயம் தெரியவில்லை.

அதனால் ஜெகதா தாரகன் வரச் சொல்லியும் வரவில்லை. அவருக்கு அபயன் பின் சுற்ற சரியாய் போனது. அவர் குளித்து அவனை குளிக்க வைத்து உணவு ஊட்டி என்று நேரம் சென்றது.

விசாகன் காலையில் சேலம் சென்றிருந்தான், ஊரில் இருந்து வரும் அவனின் மனைவி சந்தியாவின் உறவுகளை அழைத்து வர கார் எடுத்து சென்றிருந்தான். அவன் அழைத்து வர, பின்னே அவனின் மனைவி அவனின் அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி என்று அவர்களை கவனித்து, அவர்கள் குளித்து தயாரானதும் பெரிய வீட்டிற்கு காலை உணவிற்காக அழைத்து சென்றாள். ஜெகதாம்பிகைக்கு விருந்தினர்களை உபசரிக்கவும் நேரம் போனது.

விசாகன் இந்த வேலைகளில் இருந்ததினால் தாரகனின் காய்ச்சல் தெரியவில்லை.

அங்கே அகிலனுக்கும் வேலை, அவனின் மனைவியின் உறவு, வேறு உறவுகள் என்று வந்து விட, அவர்களை உண்ண அழைத்துச் செல்வது என்ன அவர்களுக்கு தேவை என்று பார்ப்பது, அவர்களிடம் பேசி நிற்பது என்று வீட்டினனாய் அவனுக்கு வேலை சரியாய் இருந்தது.

ஆதி வந்து உணவு எடுத்துப் போக, “ஏன்டா இங்க சாப்பிட வர வேண்டியது தானே” என்றான்.

“இல்லை, அக்கா எடுத்துட்டு வரச் சொன்னா” என்று முடித்துவிட, அவனுக்கும் எதுவும் வித்தியாசமாய் தெரியவில்லை.

சேதுபதி, கருணாகரன், கபிலன் என்று யாரும் இல்லை. எல்லோரையும் கோவில் பக்கம் விரட்டி இருந்தானே தாரகன். அவர்களும் கிடைத்த சந்தரப்பத்தில் வந்து உண்டு சென்று விட்டனர்.

இவர்கள் இருவரும் வீட்டில் இருக்கும் விருந்தினரை பார்த்தனர்.

எல்லா வேலைகளையும் விரைந்து முடித்து, தாரகனிடம் சென்று “நான் கோவிலுக்கு கிளம்பறேன்” என்று சொல்ல,

கண் திறந்து பார்த்தவன் “இப்படியேவா?” என்றான் அவளின் உடையை பார்த்து.

“அங்கே வேலை இருக்கும் தானே” என்று அவள் சொல்ல…

“வேலை இருக்கும் நா கல்லையும் மண்ணையும் தூக்கப் போறியா” என்றான் கடுப்பாக.

அலர்மேல்விழி அவனின் கோபத்தில் “என்னடா இது?” என்று பார்த்து நின்றாள்.

“போடி, என்னை எம் எல் ஏ ஆக்கணும்னு ஆசைப்பட்டு, ஆக்கிட்டா மட்டும் பத்தாது, நீ எம் எல் ஏ பொண்டாட்டி மாதிரி இருக்கணும்”

அவனையே பார்த்து நின்றாள். ஆம்! அலர்மேல்விழி தாரகனுக்காக தேர்ந்தெடுத்த வேலை எம் எல் ஏ. தேர்தலில் நின்றவன் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருந்தான். இரண்டு வருடமாக அவன் பார்க்கும் வேலை இதுதான்.

“புடவை இல்லையா? இல்லை நகை இல்லையா? எதுக்கு இப்படி போற, நான் தான் அரசியல்ல இருக்கேன் எளிமையா இருக்கணும், நீ இல்லை, எளிமையா இருக்கறதுக்கு. நம்ம பண்டிகை நம்ம எடுத்து செய்யறது. நான் தான் கோவில் தர்மகர்த்தா, சாமிக்கு அதுக்குரிய மரியாதை வேண்டாமா? புது பட்டு புடவைல போ, ஜோரா பளபளன்னு அம்சமா இருக்கணும்”

காய்ச்சலில் முடியாத போதும் கத்திக் கொண்டிருந்தான்.

“நாம முன்ன நின்னு செய்யும் போது அதுக்குரிய மரியாதை இருக்கணும். நான் இல்லைன்றது அங்க தெரியாம நீ பார்த்துக்கணும்” என்றான்.

அலர் தலையை உருட்டினாள்.

எல்லாம் பார்த்து இருந்த ஆதி, “நான் பார்த்துக்கறேன் மாமாவை, நீ மாமா சொல்றபடி செய்க்கா” என்றான்.

“பிள்ளைங்க”

“அம்மா வரலையா?” என்று தாரகன் அதற்கும் கத்தினான்.

“மாமா நான் இருக்கேன், நான் பார்த்துக்குவேன், நீங்க முதல்ல அமைதியா தூங்குங்க, அப்போ தான் காய்ச்சல் குறையும்” என்று ஆதிரையன் பெரிய அதட்டலிட…

“நாளைக்கு நான் கோவிலுக்கு போகலாம் தானே”

“அது நாளைக்கு தான் தெரியும், டெஸ்ட் ரிப்போர்ட் வரட்டும் சொல்றேன் தூங்குங்க” என்று இன்னும் அதட்டினான். அது சற்று வேலை செய்ய கண்கள் மூடினான்.

அலர்மேல்விழியும் புது பட்டுப் புடவை, ஜரிகை இல்லாத சாப்ட் சில்க் கட்டி, வைரமும் மரகதமும் கலந்த நகை, காதணி, கழுத்தாரம், வளையல் என்று தாரகன் சொன்னது போல அம்சமாய் நின்றாள். பார்ப்பதற்கு எளிமையாக தோன்றினாலும், அந்த பொருட்களை உபயோகிப்பவர்களுக்கு அதன் மதிப்பு தெரியும்.

பின்பு தாரகனிடம் வந்தவள் அவனின் காய்ச்சல் எப்படி என்று பார்க்க நெற்றியை தொட, கண்விழித்தவன், அலரை பார்த்ததும் இப்போது சற்று திருப்தியானவன், கிளம்பு என்று கண்களை மூடிக்கொள்ள…

வெளியே வந்தவள் பிள்ளைகளிடம் சமர்த்தாய் இருக்கச் சொல்லி, வீட்டை விட்டு வெளியே வர… அவள் படியிறங்கும் தோரணையே ஒரு ராணியின் தோரணை தான். ஆளுமை எப்போதும் அவளின் செயல்களில் இருக்கும், இன்று தோற்றத்திலும் தெரிந்தது.

பார்த்த நாளாய் தாரகனுக்கு தெரிந்தது அவளின் ஆளுமை, இந்த ஆளுமை தானே திருமணத்திற்கு முன் அலரிடம் தாரகனை ஒதுக்கமும், கோபமும், அலட்சியமும் காண்பிக்க வைத்தது. திருமணத்திற்கு பின் அவளின் அருகில் செல்ல தயக்கம் கொள்ள வைத்தது. அலர் தன்னிடம் முழு சரணாகதி என்று தெரிந்த பின்னே தானே நெருங்கினான்.

இன்று அவளின் ஆளுமை மேல் இருந்த நம்பிக்கை தான், தான் இல்லையென்றால் அவளால் மட்டுமே நிர்வகிக்க முடியும் என்று வேறு யாரையும் தேடாது, அவளை போகச் சொல்வது. அவனின் கட்சி ஆட்களும் சரி, ஊர்காரர்களும் சரி அவனுக்கு என்ன மரியாதை கொடுப்பார்களோ சற்றும் குறையாமல் அவளுக்கும் கொடுப்பர் என்று தெரியும்.

அவள் கோவிலுக்கு சென்று விட்டால் என்று தெரிந்த பிறகே உறங்க ஆரம்பித்தான்.

அலர் வெளியே வர, செக்யுரிட்டி வேகமாய் கேட்டை பெரிதாய் திறக்க, தாரகனின் கார் டிரைவருடன் தயாராக நிற்க… கிளம்பினாள்.