உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் – பாகம் -9

அவசரகதியில் அபிநயாவை இழுத்துக் கொண்டு ஹால் சோபாவில் சோர்ந்து போய் அமர்ந்தான் விக்ராந்த்

”என்னாச்சி ஏன் இப்படி என்னை இழுத்துக்கிட்டு வந்தீங்க” என பதட்டமாக கேட்ட அபியிடம்

”அது ஒண்ணுமில்லை அங்க ரொம்ப வேர்க்குது, புழுக்கமா இருந்ததா மூச்சு விடமுடியலை அதான்” என சமாளித்தான் விக்ராந்த். ஆனால் அபி விடவில்லை

”ஆமா லைப்ரரியில அந்த கயிறுங்க எதுக்காக தொங்குது” என கேட்டதும் சட்டென பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான் விக்ராந்த்

”அதுவா அது ம் வந்து அது ஆஆ”

”என்ன இழுக்கறீங்க பதில் சொல்லுங்க“ என அபி விடாமல் கேட்கவும் விக்ராந்த் ஒருவாறாக பதில் அளித்தான்.

”அதுவா அது ஒண்ணுமில்லை அபி புக்ஸ்லாம் அலமாரியில அடுக்கறப்ப பேலன்ஸ் தவறக்கூடாதுன்னு கயிறை பிடிச்சிக்கறதுக்காக இருக்கலாம்”

”ஓஹோ அப்படியா”

”ஆமாம் அதேதான்” என விக்ராந்த் சொல்ல நிம்மதி பெருமூச்சு விட்டான்

”சரி சரி அப்புறம் எனக்குப் பசிக்குது, இருக்கற ஸ்நாக்ஸ் சாப்பிட வேணாம், ஏதாவது சமைச்சி சாப்பிடலாம் நூடுல்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன், உங்களுக்கு நூடுல்ஸ் பிடிக்குமா”

”ம் எது வேணா கொடு ரொம்ப பசிக்குது, நீ எதை தந்தாலும் நான் சாப்பிடுவேன்” என சொல்ல அவளோ புன்னகை பூத்தாள்

அவளின் புன்னகையை ரசித்தவன்

”உனக்கு சமையல் நல்லா செய்ய வருமா அபி” என கேட்டதும் அவளின் ஆர்வம் அதிகமானது.

”என்ன கேள்வி கேட்டிட்டீங்க போங்க நான் சூப்பரா சமைப்பேன், என் சமையல் வீடியோ கூட யூ-ட்யூப்ல வந்திருக்கு நீங்க பார்த்ததில்லையா”

”இல்லையே” என விக்ராந்த் வியப்புடன் சொல்லவும் உடனே தனது செல்போனை எடுத்து அதில் அவள் யூ-ட்யூபில் அப்லோட் செய்திருந்த சமையல் வீடியோக்களை அவனிடம் காட்டினாள்

”பார்த்தீங்களா”

”ம் இது நீதான் ஓ நீ ஒரு யூ-ட்யூபரா” என ஆச்சர்யமாக கேட்டான் விக்ராந்த்

”ஆமாம் இதுதான் எனக்குப் பிடிக்கும், நான் நிறைய சமையல் வீடியோக்களை அப்லோட் செய்திருக்கேன், எனக்கு நிறைய வ்யூஸ் வந்தது, ஆனா இப்ப குறைஞ்சிடுச்சி சரியா யாரும் பார்க்கலை, அதனால அந்த வேலையை விட்டுட்டு இந்த வேலைக்கு வந்துட்டேன்”

”இங்க வர்றதுக்கு பேசாம நீ யூ-ட்யூபராவே இருந்திருக்கலாம்”

”எனக்கும் ஆசைதான், எங்க என் அப்பாதான் உருப்படியா ஒரு வேலையை பாருன்னு சொல்லி கட்டாயமா என்னை இங்க அனுப்பிவிட்டுட்டாரு, எனக்கு என் அப்பா மேல கோபம், என்னை அவர் புரிஞ்சிக்கலையேன்னு, ஒரு நாள் அவர் என்னைப் புரிஞ்சிக்குவாரு அந்த நாள் சீக்கிரமா வந்துடும்”

”ம் வரும் வரும்” என இழுத்தான் ராகமாக

”சரி நான் போய் சமைச்சிட்டு வரேன், அதுவரைக்கும் நீங்க இந்த வீடியோக்களைப் பாருங்க” என சொல்லிவிட்டு அவள் சமையல் கட்டுக்குச் செல்ல விக்ராந்தோ அந்த செல்போனில் இருந்த வீடியோவைப் பார்த்தான்

கூடவே அந்த 9 பேய் குழந்தைகளும் பார்த்தன, விக்ராந்தின் தலையை சுற்றி பேய் குழந்தைகளின் முகங்கள்தான் தெரிந்தன, அதில் அவன் பயந்துவிட்டான், அப்படியே அந்த செல்போனை அங்கிருந்த டீபாயில் வைத்துவிட அந்த குழந்தைகளும் அவனை விட்டு டீபாயை சுற்றிக் கொண்டன, அவர்களுக்கு மத்தியில் வீடியோவை பார்த்தான் விக்ராந்த்.

அதில் அபியோ குதூகலமாக சமையல் செய்திருந்தாள், வளவளவென பேசிக் கொண்டும் டிப்ஸ் சொல்லிக் கொண்டும், சமையல் செய்து அசத்த விக்ராந்திற்கு அவளை மிகவும் பிடித்திருந்தது

”நைஸ் நல்லாயிருக்கு” என தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

அதோடு அந்த வீடியோ முடியவும் அந்த 9 பேய் குழந்தைகளும் விருட்டென விக்ராந்தை ஒரு பார்வை பார்க்க அதில் அரண்டவன் எச்சில் விழுங்கியபடியே அந்த செல்போனை எடுத்து அபியின் அடுத்த வீடியோவை ஓடவிட்டு மீண்டும் டீபாயில் வைத்துவிட அந்த பேய் குழந்தைகளும் அந்த வீடியோவைப் பார்க்கத் தொடங்கின, இப்போது அவனுக்குக் கஷ்டமாகிப் போனது

”இதுங்களோட வீடியோவை பார்க்கறதுக்கு பேசாம அபிகிட்ட இருக்கலாம்” என மனதில் நினைத்தபடியே அங்கிருந்து சத்தம் எழுப்பாமல் அபியை தேடிச் சென்றான் விக்ராந்த்.

அந்த 9 பெய் குழந்தைகளுக்கும் அந்த செல்போன் என்ற சாதனம் புதிதாக இருந்தது, 30 வருடத்திற்கு முன் செல்போன் ஏது, அதனால் அந்த பொருளை அதிசயமாகவும் அதில் அபியின் வீடியோக்களை ஆர்வமாகவும் பார்த்துக் கொண்டிருந்தன.

அபியோ சமையல்கட்டில் லலல என ஏதோ ஒரு பாடலுக்கு ஹம்மிங் செய்தபடியே நூடுல்ஸ் சமைத்து முடித்தாள், அந்நேரம் விக்ராந்த் வரவும் சிரித்தபடியே

”நானே வரலாம்னு இருந்தேன், நீங்களே வந்துட்டீங்க, நூடுல்ஸ் ரெடி சாப்பிடலாமா“ என உற்சாகமாகச் சொல்ல அவனும் சரியென்றான்.

”இந்தாங்க இதையெல்லாம் டைனிங் டேபிள்ல வைச்சிடுங்க” என சொல்லிவிட அவனும் உணவு பாத்திரங்களை கொண்டு சென்று டைனிங் டேபிளில் வைத்துவிட்டு திரும்பி அபியிடம்  வந்தான்

அதற்குள் 9 பேய் குழந்தைகளும் தங்களுக்கென ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு டைனிங் டேபிளில் வரிசையாக அமர்ந்துக் கொண்டன.

தண்ணீர் பாட்டிலுடன் வந்த விக்ராந்தோ டைனிங் டேபிளில் 9 பேய் குழந்தைகளும் அவனையே ஒரு சேர ஒரு பார்வை பார்க்க அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது.

”எத்தனையோ டின்னர் பார்த்திருக்கேன், பேய்ங்களோட டின்னரை இன்னிக்குதான் பார்க்கிறேன், இதுங்களோட எப்படி சாப்பிடறது கடவுளே” என நினைத்து அச்சத்தில் உறைந்திருக்க அபி வந்தாள்

”வாங்க சாப்பிடலாம்” என சொல்லியவள் அங்கு டேபிளில் இருந்த பாத்திரங்களைக்கண்டு

”எதுக்கு இத்தனை பாத்திரங்களை வைச்சிருக்கீங்க நாம ரெண்டு பேருதானே இருக்கோம்”

”ஆமாம் ஆனா வந்து என்னத்த சொல்றது, அது ஒண்ணுமில்லை, நான் இதுவரைக்கும் தனியா சாப்பிட்டதில்லை, அதான் இப்படி பாத்திரங்களை வைச்சேன், இப்படியிருந்தா நம்மகூட ஆளுங்க இருக்கற மாதிரி ஒரு ஃபீல் வரும்ல அதுக்குதான்” என சமாளித்தான் அதைக்கேட்ட அபியோ

”நீங்க ரொம்ப வித்தியாசமானவரா இருக்கீங்க, ஐ லைக் யுவர் தாட்ஸ்” என சொல்லிக் கொண்டே  அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர போக அங்கு ஏற்கனவே ஒரு பேய் குழந்தை இருக்கவும் விக்ராந்த் அவசரமாக அவளை தடுத்தான்

”அந்த இடத்தில வேணாம் சேர் சரியில்லை, நீ இங்க வந்து உட்காரு” என சொல்லி காலியான இருக்கையில் அவளை அமர வைத்துவிட்டு இன்னொரு காலியான இருக்கையில் அவன் அமர்ந்துக் கொண்டான்.

இடது பக்கம் ஒரு பேய் குழந்தை வலது பக்கம் ஒரு பேய் குழந்தை, எதிர்ப்பக்கம் வரிசையாக பேய் குழந்தைகள் இருக்க இதில் எப்படி சாப்பிடுவது என விக்கித்துப் போய் இருந்த விக்ராந்திற்கு நூடுல்ஸ் பரிமாறி தானும் பரிமாறிக் கொண்டு சாப்பிடலானாள் அபி

”வாவ் செம டேஸ்ட், அரக்க பரக்க செஞ்சாலும் நல்லா ருசியாதான் செய்திருக்கேன்” என சொல்லியவள் விக்ராந்தைப் பார்க்க அவனோ

அக்கம் பக்கம் இருந்த பேய்கள் அவனையே உற்றுப் பார்க்க அதில் அவனுக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை

”என்ன பார்க்கறீங்க நான் நல்லாதான் சமைச்சிருக்கேன், நம்பி சாப்பிடுங்க” என அபி சொல்ல அவனுக்கும் ஆசைதான், ஆனால் எப்படி என நினைத்து தலையை சரியென ஆட்டியவன் நூடுல்ஸ் சாப்பிட ஸ்பூன் எடுக்க அப்போது ஒரு குழந்தையின் கை அவனது நூடுல்ஸை தொட வர அவனோ கோபத்தில்

”தொடாத” என்றான்

அதில் அந்த கை சட்டென விலகியது, அவன் திரும்பி பார்த்தான், அவனையே ஒரு பேய் குழந்தை முறைக்க அபியோ

”என்னாச்சி எதை தொடாதன்னு சொல்றீங்க”

”ஒண்ணுமில்லை அபி நீ சாப்பிடு” என விக்ராந்த் சொல்லவும் அவளோ பெரிதாக நினையாமல் ஸ்பூனில் நூடுல்ஸை சுற்றி வளைத்து எடுத்து வாயில் திணித்து ராகமிட்டபடியே ரசித்து சாப்பிட விக்ராந்தோ தன் பக்கத்தில் இருந்த பேயிடம் மெதுவாகப் பேசினான்

”இதப்பாரு எனக்கு ரொம்ப பசிக்குது, உனக்கு எப்படியிருந்தாலும் பசிக்காது, நீ தொட்டு என் சாப்பாடு கெட்டுப் போகனுமா, ப்ளீஸ் புரிஞ்சிக்க ப்ளீஸ்” என அதனிடம் கெஞ்ச அந்த பேய் குழந்தையோ அமைதியாக தலையை திருப்பிக் கொண்டது. அதில் விக்ராந்தோ நிம்மதியாக நூடுல்ஸ் சாப்பிடலானான்.

”சாப்பிடறதுக்கு கூட பேய்கிட்ட அனுமதி வாங்க வேண்டியிருக்கு, எப்படியோ பசி நேரத்தில இந்த நூடுல்ஸ் கூட செம டேஸ்ட்டாதான் இருக்கு” என நினைத்தபடியே அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்தான்.

அபியும் சாப்பிட்டு முடித்து எழ கூடவே விக்ராந்தும் எழுந்தான், எச்சில் பாத்திரங்களை அபி சுத்தம் செய்ய விக்ராந்தோ கை கழுவிவிட்டு அந்த பேய் குழந்தைகள் என்ன செய்கின்றன என பார்க்கலானான்.

அந்த குழந்தைகளோ இன்னும் டைனிங் டேபிளில்தான் இருந்தன, அவனுக்கே பாவமாக இருந்தது, என்னதான் அவைகள் பேய்களாகவே இருந்தாலும் குழந்தைகள்தானே அவைகள் செய்வதைக் கண்டால் ஏதோ அவர்கள் இறந்தது கூட தெரியாமல் இயல்பாக இருப்பது போன்ற எண்ணத்துடன் இருப்பதாக நினைத்தவன் இரக்கப்பட்டு கிச்சன் சென்று அபியிடம் ஒரு பாத்திரத்தில்

”இதுல தண்ணி பிடிச்சிக் கொடு அபி” என கேட்டான் விக்ராந்த் அவளோ வியப்புடன்

”எதுக்கு இதுல” என கேட்க

“அதுவா அது இங்க சின்ன சின்ன பே… ம்க்கும் க்கும் இல்லை இல்லை இங்க சின்ன சின்ன விலங்குகள் இருக்கும் அதோட தாகத்தை தணிக்க தண்ணீர் வைக்கலாம்னு கேட்டேன்” என விக்ராந்த் சமாளிக்க அதற்கு அபியோ

”எது விலங்குகளா” என பயந்தாள்

”சே சே பயப்படாத நீ நினைக்கற மாதிரியில்லை இந்த குயிலு அணிலு முயலு அது போல”

”ஓ அதுக்கா” என சொல்லியவள் அந்த பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து தர அதை எடுத்துக் கொண்டு டைனிங் டேபிள் சென்றவன் அங்கிருந்த பேய் குழந்தைகள் வைத்த பாத்திரங்களில் நீரை ஊற்றி நிறைத்துவிட்டு பார்த்தான்.

அந்த பேய் குழந்தைகளும் தண்ணீரில் முகத்தை அப்படியே உள்ளே விட்டு குடிப்பது போல செய்தது, அதில் சலசலவென தண்ணீரின் சத்தம் வேறு கேட்டது என்ன அபி பாத்திரம் கழுவுவதால் இந்த சத்தம் அவளுக்கு கேட்கவில்லை, சிறிது நேரத்தில் பேய் குழந்தைகள் டைனிங் டேபிள் விட்டு இறங்கி சென்றன, அவைகள் சென்றதும் விக்ராந்தோ குழப்பத்துடனே டைனிங் டேபிள் மீதிருந்த பாத்திரங்களைப் பார்த்தான், அவன் வைத்த தண்ணீர்தான் என்ன பேய்ங்கள் அந்த தண்ணீரை அருந்தியதும் அது கெட்டுபோய் பாசி பிடித்து துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்திருந்தது

”ஓ இப்பதான் எனக்குப் புரியுது இந்த வீட்ல இருக்கற பேய்ங்க தண்ணி குடிச்சாலும் சரி எதை சாப்பிட்டாலும் சரி இப்படிதான் கெட்டு அழுகும் போல, இதுங்களால எப்படி எல்லா பொருளையும் தொட முடியுது, சாப்பிட முடியுது பவர்புல் பேய்களோ” என நினைத்தவன் சட்டென அபியின் நினைவு வரவே அதிர்ந்தான்

”அபி இந்த பாத்திரங்களை பார்த்தா ஒண்ணு பயப்படுவா இல்லைன்னா தேவையில்லாத கேள்வி கேட்டு நம்மளை தொல்லை பண்ணுவா அவள் பார்க்கறதுக்குள்ள இதை அப்புறப்படுத்தனும்” என நினைத்த மறுநொடியே மடமடவென வேலையில் இறங்கினான்.

அந்த பாத்திரங்களில் உள்ள நீரை ஒன்றில் ஊற்றி அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே சென்று தூரமாக இருந்த இடத்தில் ஊற்றிவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டு திரும்பி வீட்டிற்குள் வந்தான் விக்ராந்த்.