அபிநயவோ தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி முடிக்கவே அரை மணி நேரம் எடுத்துக் கொண்டாள், அவள் வாங்கிய பொருளுக்கு விக்ராந்தே பணம் செலுத்தி பொருட்களை வண்டியில் ஏற்றிவிட்டு அபியை பார்க்க அவள் முதல் ஆளாக காருக்குள் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தாள் அவளின் ஆர்வத்தைக் கண்டு விக்ராந்திற்கு பரிதாபமே எழுந்தது.
”அய்யோ பாவம் நடக்கறது தெரியாம இவள் என்ன இவ்ளோ ஆர்வமா இருக்காளே, அதுசரி மாசத்துக்கு 50 ஆயிரம் சம்பளம்னா யாருக்குதான் ஆர்வம் இருக்காது, ஆனா அங்க பேய் குழந்தைகள் இருக்கே, அதுங்ககிட்ட எப்படி இவளால தனியா இருக்க முடியும், ஆம்பளைங்களாலேயே அங்க தங்க முடியலை இவள் சின்ன பொண்ணு வேற விடியறவரைக்கும் அவளால அங்க தாக்கு பிடிக்க முடியுமா ம்ம்ம் பார்க்கலாம்” என தனது மனதில் நினைத்துக் கொண்டு காருக்குள் ஏறி அமர்ந்தவன் காரை காட்டேஜ் நோக்கி விரட்டினான்.
முதலில் அமைதியாக இருந்த அபியோ வெளி உலகை ஆர்வமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் செயலை அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்தபடியே விக்ராந்தும் வண்டியை ஓட்டினான். ஊருக்கு வெளியே ஒதுக்குப்புற வழியில் வண்டி திரும்பி மண் பாதையில் ஓட ஆரம்பித்தது அதனால் கார் குலுங்க, காருக்குள் இருந்த இருவரும் குலுங்கினார்கள் அதை அவள் குதூகலமாக ரசித்தாள்.
”ஐஐ ஜாலி இது ரொம்ப நல்லாயிருக்கு” என சொல்லிவிட்டு உடனே அபி விக்ராந்தைப் பார்க்க அவனோ குறுநகை புரிந்தபடியே வண்டியை ஓட்டினான்
”இந்த ரோடு இப்படித்தான் இருக்குமா” என கேள்வி கேட்கத் தொடங்கினாள் அபி
“ஆமாம் கூடிய சீக்கிரம் இங்க ரோடு போடுவாங்க அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என பொய்யாக அளந்துவிட அவளும் அவன் சொன்னதை நம்பினாள்.
”இட்ஸ் ஓகே நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்றாள் அபி பெருந்தன்மையாக
”அப்புறம் எப்படி நீ தனியாளா இந்த ஊருக்கு வந்த“ என விக்ராந்த் கேட்க அதற்கு அவளோ அவனைப் பார்த்தபடி சட்டமாக இருக்கையில் அமர்ந்துக் கொண்டு தான் வந்த கதையை சொல்ல ஆரம்பித்தாள்.
”ஓ அதைக் கேட்கறீங்களா, கோயம்பேடு பஸ் ஸ்டான்ட்ல எங்கப்பா என்னை பஸ்ல ஏத்திவிட்டாரா” என சொல்லி உடனே பேச்சை நிப்பாட்ட விக்ராந்தோ என்னவென அவளைப் பார்த்தான் அவளோ சின்ன கோபத்துடன் உதட்டை பிதுக்கியபடி இருக்க அதைக்கண்டவனுக்கு வியப்பாக இருந்தது
”என்னாச்சி அபி ஏன் உன் முகத்தை இப்படி வைச்சிருக்க எனி ப்ராப்ளம்”
“நான் கதை சொல்றப்ப நீங்க அமைதியா இருந்தா எப்படி ம்ம் கொட்டிக்கிட்டே கேட்டாதானே எனக்கும் சுவாரஸ்யமா சொல்ல வரும்” என்றதும் கலகலவென சிரித்தே விட்டான் விக்ராந்த்
”என்ன சிரிப்பு”
”இல்லை ஒண்ணும் இல்லை இப்ப என்ன நான் ம் கொட்டனும் அதானே சரி கொட்டறேன் ம்” என்றான் அழுத்தமாக அதில் அவளுக்கு ஆர்வம் பொங்கி எழுந்து தொடர்ந்து பேச அவனும் ம் கொட்டிக்கொண்டே அவள் சொல்லும் கதையை கவனமாக கேட்டுக் கொண்டே வண்டியை செலுத்தினான்.
”நானும் அப்பாவுக்கு டாட்டா சொல்லிட்டே ரொம்ப சோகமாக இருந்தேனா, தனியா அப்பாவை விட்டு பிரிஞ்சிருக்கனும்ல அதான் ஒரே கவலை எனக்கு, அப்ப பார்த்து பஸ் கிளம்பிடுச்சா, எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை, ஒரே போர், அந்த பஸ்ஸூம் நின்னு நின்னுதான் அவுட்டருக்கே போச்சி, அதுக்குப்புறம் வேகமா ஓடிச்சி, அக்கம் பக்கத்தில ஆளுங்க நிறைய பேர் இருந்தாங்களா, நான் அக்கம் பக்கம் ஆளுங்க கிட்ட கதை பேச ஆரம்பிச்சேன், அவங்களை பத்தி என்னைப் பத்தின்னு நிறைய கதை பேசினேன், அப்புறமாவும் போர் அடிச்சதா” என அவள் தான் வந்த பஸ் பயணத்தை பெரிய சாகசம் போல சொல்லிக் கொண்டிருக்க அதைக்கேட்டபடியே அந்த மண் பாதையை கடந்தான் விக்ராந்த்
”அப்படி இப்படின்னு ஒருவழியா ஏற்காடு வந்து சேர்ந்தேன், பஸ்ல பயணம் செய்றது ரொம்ப கொடுமையா இருந்தது, ஜாலியாவும் இருந்தது, கொடுமைன்னு ஏன் சொன்னேன்னா ஒரே இடத்தில உட்கார்ந்திருக்கனும்ல அதான், ஜாலியா இருக்குன்னு ஏன் சொன்னேன்னா புது புது ஊர்களை பார்க்க முடிஞ்சது, புது புது மக்களை பார்க்க முடிஞ்சது, ஏகப்பட்ட இயற்கை காட்சிகளை பார்த்தேன், சூப்பரா இருந்தது, ஏற்காடு கூட செமயா இருக்கு” என சொல்லி முடிக்க அவன் வண்டியை நிறுத்த சரியாக இருந்தது அதில் அபி அதிர்ந்துப் போனாள்.
”என்ன வண்டியை நிறுத்திட்டீங்க என்னாச்சி நான் சொன்னது உங்களுக்கு பிடிக்கலையா கோபம் வந்துடுச்சா”
”அதெல்லாம் இல்லை முன்னாடி கேட் இருக்குப் பாரு அதை திறக்கனும்” என சொல்ல அவளும் அப்போதுதான் கேட்டையே பார்த்தாள் பின் புன்சிரிப்பு சிரித்தபடியே
”ஓ கேட்டா எதுக்கு நான் இருக்கேன் நான் போய் திறக்கறேன்”
”இல்லை அந்த கேட் பழசாயிடுச்சி திறக்கறதுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும்”
”நோ ப்ராப்ளம் நான் தினமும் வுமன்ஸ் ஹார்லிக்ஸ் குடிக்கிறேன், என் உடம்பு இரும்பு போல என் வலிமையை நீங்க பார்க்கலையே, இப்ப பார்ப்பீங்க“ என சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கி கேட்டிடம் செல்ல விக்ராந்திற்கு சிரிப்பாக இருந்தது
”இவள் பார்க்க பெரிய பொண்ணா தெரிஞ்சாலும் குழந்தை மனசு எப்படி பேசிட்டுப் போறா பாரு பார்க்கலாம், இவளால எப்படி கேட் திறக்க முடியுதுன்னு” என அவன் நினைக்கும் போதே அபியோ அந்த கேட் முன் நின்று சுற்றி முற்றி பார்த்தாள் சில நொடிகளில் அங்கு பலத்த காற்று வீசியது அதில் அவள் நிலைதடுமாறி சில நொடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டவள் இயல்பாக அந்த கேட்டை திறந்துவிட விக்ராந்திற்கு ஆச்சர்யம்
”ம் காரை உள்ள விடுங்க” என அபி சொல்ல உடனே காரை ஓட்டிக் கொண்டு கேட் தாண்டி நிப்பாட்ட அபி அந்த கேட்டை எளிதாக மூடிவிட்டு காருக்குள் ஏறி அமர்ந்து விக்ராந்திடம்
”சொல்லுங்க சொல்லுங்க” என்றாள் ஆர்வமாக
”என்ன சொல்லனும்“ என்றான் அவனும் ஆர்வத்துடன் அவனின் மனதில் ஓராயிரம் சலனம் எட்டிப்பார்த்தது.
”ப்ச் நான் ரொம்ப ஸ்ட்ராங்க் கேர்ள்ன்னு சொல்லுங்க” என்றாள் அதைக்கேட்டு அவனும் புன்னகைத்தபடியே
”ஆமாம் நீ ரொம்ப ஸ்ட்ராங்க் கேர்ள்தான் போதுமா”
”தாங்ஸ் எனக்கும் இது தெரியும், ஆனாலும் நீங்க சொல்லி கேட்கறப்ப சந்தோஷமா இருக்கு” என சொல்லிவிட விக்ராந்திற்கு அவளின் பால் பாவமாக இருந்தது,
இவளை எப்படி அந்த காட்டேஜில் பேய்களிடம் தனியாக விட முடியும், மனதில்லாமலே அவளை அழைத்துக் கொண்டு சென்றான். செல்லும் வழியெங்கும் அவளும் வேடிக்கைப் பார்த்தபடியே சென்றாள்
”சரியான பராமரிப்பு இல்லாம இந்த இடம் எப்படியிருக்குன்னு பாருங்களேன்” என கவலைக்கொண்டாள் அபி
”ஆமாமாம்” என ராகம் இழுத்தான் விக்ராந்த்
”கவலையேப் படாதீங்க நான் வந்துட்டேன்ல, இனிமேல இந்த இடத்தை நான் நல்லபடியா பார்த்துக்கறேன்”
”முதல்ல உன்னை நீ நல்லபடியா பார்த்துக்க, அதான் முக்கியம்” என சொல்ல அதைக்கேட்டு மென்மையாக சிரித்தவள்
”உங்களுக்கு என் மேல அக்கறை அதிகமா இருக்கே ஏன் அப்படி” என அவனை குறுகுறுவென பார்த்துக் கேட்க அவனுக்கு கைகால் உதறியது
”ஒண்ணுமில்லை நீ சின்ன பொண்ணு, தனியா இருக்கல்ல அதான் ஏன் அக்கறையா பேச கூடாதா“
”தாராளமா பேசுங்க, எனக்கு இப்படி பேசறது பிடிச்சிருக்கு, என் அப்பாவுக்கு அடுத்து நீங்கதான் என் மேல இவ்ளோ அக்கறை எடுத்து பேசறீங்க, தாங்க்யூ ஸோ ஸோ ஸோ ஸோ மச்” என இழுத்து சொல்வதற்குள் காட்டேஜ் வர வண்டி நின்றது. வண்டி நிற்கவும் அபியும் காரை விட்டு இறங்கி காட்டேஜைப் பார்த்தாள்
”வாவ் ரொம்ப நல்லாயிருக்கு” என ஆர்வமாகச் சொல்ல விக்ராந்தோ பெருமூச்சு விட்டபடியே
”இப்ப எல்லாம் நல்லாதான் இருக்கும் உள்ள போனாதான் தெரியும் பாரு” என தனக்குதானே புலம்பிக் கொண்டு அவளது லக்கேஜ்களை எடுத்து வைக்க அபியும் தான் வாங்கிய ஸ்நாக்ஸ் பொருட்களை எடுக்கலானாள், அதைக்கண்டவன்
”அபி முதல்ல வீட்டைத்திற, இந்தா சாவி இந்த சாவியை பத்திரமா வைச்சிக்க, இந்த வீட்டுக்கு இதுதான் ஒரே சாவி, இதை தொலைச்சிட்டா வேற சாவியே கிடையாது, இதே போல சாவியை திரும்ப செய்றது கஷ்டம்” என சொல்லி சாவியை தர அதன் வித்தியாசமான அமைப்பை வெகுவாக ரசித்தவள்
”வாவ்வ்வ்” என ஆச்சர்யப்பட்டபடியே வாசல் கதவிடம் சென்று அந்த சாவியை பயன்படுத்தினாள், கதவின் தாள் திறக்கவும் கதவை நன்றாக விசாலமாக திறந்து உள்ளே எட்டி ஒரு முறை பார்த்துவிட்டு திரும்பி விக்ராந்திடம்
”காட்டேஜ் சூப்பரா இருக்கு” என்றாள்
அதைக்கேட்டபடியே விக்ராந்தும் அவளைப் பார்த்துவிட்டு அவளுக்கு பின்னால் பார்த்து அதிர்ந்தான், அவளுக்கு பின்னால் 9 பேய் குழந்தைகளும் கூட்டமாக நின்றபடி இருக்க விக்ராந்திற்கு அப்போதே பயத்தில் வேர்த்துக் கொட்டியது.
”அபி இங்க வா வா” என அவசரமாக அழைக்க அவளும் அவனிடம் வந்தாள்
”என்ன என்ன என்னாச்சி”
”வா கிளம்பலாம் வா”
”எங்க”
”இன்னிக்கு வேணாம் நாளைக்கு வரலாம் நீ வா”
”ப்ச் அட என்னாச்சி இப்ப”
”இல்லை அங்க வாசல்ல”
”என்ன வாசல்ல” என அவளும் பார்த்துவிட்டு
”என்ன இருக்கு அங்க ஒண்ணுமில்லையே” என சொல்ல அவனோ பார்த்தான், அவன் கண்களுக்கு 9 பேய் குழந்தைகள் இருந்தது தெரிய குழம்பினான்
”உனக்கு அங்க எதுவும் தெரியலையா” என்றான் குழப்பத்துடன்
”இல்லையே” என்றவள் இயல்பாக தனது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல அந்த பேய் குழந்தைகள் அவளுக்கு வழிவிட்டு நின்றது.
அடுத்து விக்ராந்த் பயந்தபடியே சமையலுக்கென வாங்கிய மளிகைப் பொருட்களை எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்தான், குறுக்கே அந்த பேய் குழந்தைகள் நின்றது, அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை
”இதென்னடா வம்பா போச்சி, எப்படி உள்ள போறது, இதுங்க வேற இருக்கே, பேசாம வெளிய போயிடலாமா” என நினைக்க அதற்குள் அபியோ
”உள்ள வாங்க” என அழைக்க அந்த குழந்தைகள் மெல்ல வழிவிட்டு நிற்கவும் விக்ராந்த் அவசரமாக வீட்டிற்குள் சென்று அங்கிருந்த டேபிள் மீது பொருட்களை வைத்துவிட்டு ஹாலில் இருந்த சோபாவில் பயந்தபடி அமர்ந்துக் கொண்டான். அதைக்கண்ட அபியோ
”ஓ டயர்டா இருக்கீங்களா, நோ ப்ராப்ளம் நானே எல்லா பொருளையும் கொண்டு வரேன், நீங்க ரெஸ்ட் எடுங்க பசிச்சா ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க” என சொல்லிவிட்டு அவனிடம் ஸ்நாக்ஸ் பாக்கெட்டை தந்துவிட்டு வெளியே செல்ல அவனோ இருந்த பயத்தில் மெதுவாக ஸ்நாக்ஸ் பாக்கெட்டை பிரித்தான்
அதில் இருந்த ஒரு சிப்ஸை எடுத்து வாயில் கொண்டு சென்ற நேரம் விக்ராந்துக்கு எதிரே ஒரு சின்ன பேய் குழந்தை வந்து நின்று அவனையே முறைத்து முறைத்துப் பார்க்க அவனுக்கு சிப்ஸ் சாப்பிடும் ஆசையே ஓடிப் போனது