விக்ராந்த் அந்த காட்டேஜ் வாங்கியதில் அவனின் தந்தைக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை, அதிலும் அந்த பேய் சம்பந்தப்பட்ட வதந்திகள் உண்மை என விக்ராந்தே சொன்னதும் கடுமையாக கோபித்துக் கொண்டார்,
”விக்ராந்த் உன்னை நான் பொறுப்பானவன்னு நினைச்சேன் பிசினஸ் பார்த்துக்கற அளவுக்கு உனக்கு திறமையும் தகுதியும் வந்துடுச்சி இனி கண்ணை மூடிக்கிட்டு மொத்த பிசினைசும் உன்கிட்ட ஒப்படைக்கலாம்னு நினைச்சேன் ஆனா இப்ப அந்த எண்ணத்தில மண்ணை அள்ளி போட்டுட்ட”
”டாடி நீங்க என்ன சொல்ல வர்றீங்க”
”எல்லாம் அந்த ஏற்காடு காட்டேஜ் விசயத்தை பத்திதான் பேசறேன். அங்க என்ன பிரச்சனை”
”ஒரு பிரச்சனையும் இல்லையே”
”பொய் அந்த காட்டேஜ்ல பேய் இருக்குன்னு ஊருக்குள்ள வதந்தி இருக்கு அது தெரிஞ்சிருந்தும் நீ அந்த காட்டேஜை வாங்கியிருக்க”
”இல்லை டாடி எனக்கு அங்க பேய் இருக்கற விசயம் முதல்ல தெரியாது தெரியாம அதை வாங்கிட்டேன் அங்க ஒரு நாள் தங்கின பின்னாடிதான் ஊருக்குள்ள சொல்லப்பட்ட அந்த பேய் வதந்தி உண்மைன்னு கண்கூடாவே பார்த்துட்டேன் என்னை ஏமாத்திட்டாங்க டாடி”
”உனக்கு அந்த காட்டேஜை வித்தவனை பிடிச்சி பணத்தை வாங்கிடு”
”ஆளு எஸ்கேப் ஆயிட்டான் டாடி அவனுக்கும் அங்க பேய் இருக்கற விசயம் தெரிஞ்சிருக்கு போல அதான் என்னை ஏமாத்தி வித்துட்டு ஆள் தலைமறைவாயிட்டான் அவனை இனி தேடிப்பிடிக்கறது கஷ்டம்”
”போலீஸ் கம்ப்ளெயின்ட் தரவேண்டியதுதானே”
”அதனால நம்ம மானம் மரியாதைதானே போகும் அந்த இடம் நம்ம பூர்வீகம் இடமாச்சேன்னு விலை அதிகமானாலும் பரவாயில்லைன்னு வாங்கிட்டேன் டாடி”
”சே அந்த காட்டேஜ்க்காக எவ்வளவு பணம் தந்திருக்க தெரியுமா அதனால ஏதாவது லாபம் கிடைச்சதா சொல்லு” என கடுமையாகப் பேச அதில்
”சாரி டாடி” என வருத்தமாக சொன்னான் விக்ராந்த் அதில் அவனது தந்தைக்கும் கோபம் தணிந்தது.
ஒரு பக்கம் பணம் நஷ்டமாகிவிட்டது, இன்னொரு பக்கம் எப்படியாவது அந்த காட்டேஜை வேறு யாருக்காவது விற்க வேண்டும் என முடிவெடுத்தார்
அதற்கான வழியையும் தேடினார், அப்படி தேடுகையில் ஒருவன் சிக்கினான், அவனுக்கு காட்டேஜ் வாங்க விருப்பம் இருந்தது, ஆனால் அந்த காட்டேஜ் பற்றிய வதந்தியை தெரிந்துக் கொண்டு விலகப் பார்க்க அதற்காகவே விக்ராந்தின் தந்தை அவனுடன் ஒரு பேச்சு வார்த்தைக்கு இறங்கி வந்தார்.
காட்டேஜில் பேய் இல்லை என நிரூபித்த பின்பே விற்பதாக கூற அதற்கு அவனும் ஒப்புக் கொண்டான், அதற்காகவே ஆட்களை தேடினார். அதற்கு விக்ராந்த் ஒப்புக் கொள்ளவில்லை, ஆபத்து என்றான் ஆனால், அவனின் தந்தை இதை ஏற்கவில்லை, வேலைக்காக வந்தவர்களை காட்டேஜை பார்த்துக் கொள்ள அனுப்பி வைத்தார், சென்றவர்கள் ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் பயந்து வேலையே வேண்டாம் என ஓடிவிட்டார்கள், அதற்காகவே சம்பளத்தை அதிகப்படுத்தி இன்னொரு ஆளை அனுப்ப அவனும் பயத்தில் ஓடிவிட்டான்,
இப்படியே 3 மாதத்தில் 10 ஆட்களை அனுப்பி பார்த்தாயிற்று, அனைவரும் ஒரே நாளில் பயந்து ஓடிவிட இறுதியில் அபிநயா கிடைத்தாள்
இதற்கு முன் இருந்தவர்கள் ஆண்கள் அவர்களே பயந்து ஓடும் போது அபிநயா ஒரு பெண் எப்படி என விக்ராந்த் தன் தந்தையிடம் முறையிட அதைப்பற்றி அவர் கண்டுக்கொள்ளவில்லை, எப்படியாவது அந்த வதந்திகளை பொய்யாக்கி அந்த இடத்தை விற்றுவிட வேண்டும் என முடிவெடுத்தார்
பேய் இருந்தாலும் அந்த பூர்வீக இடத்தை இழக்க விக்ராந்திற்கு மனம் வரவில்லை, ஆனாலும் தந்தையின் கட்டளையை மீற அவனால் இயலாமல் போனது, அதனால் ஏற்காடு பஸ் ஸ்டான்டிற்கு வண்டியுடன் சென்றான், அபிநயாவை பிக்கப் செய்து அந்த காட்டேஜில் இறக்கிவிட எண்ணினான்,
இதற்கு முன் வந்தவர்களையும் அவன்தான் கொண்டு சென்று இறக்கி விட்டான் விடும் போதே பல பல எச்சரிக்கைகளை சொல்லியே விட்டான், அதற்காகவே மறுநாள் கேட் முன் வண்டியுடன் காத்திருந்தான், அப்படி சென்ற 10 பேரும் கேட்டிடம் வந்து பயத்துடன் நின்றார்கள், அவர்களை பத்திரமாக அவர்களின் வீட்டில் சேர்த்துவிட்டான், இப்போதும் அதையே செய்ய எண்ணினான்.
அதற்காக பஸ் ஸ்டான்டில் காத்திருக்க பஸ்ஸூம் சற்று நேரத்தில் வந்தது, அபிநயா யார் என்னவென தெரியாத விக்ராந்தோ அனைவரையும் பார்த்து வைக்க, அபிநயா மெதுவாக வண்டியை விட்டு இறங்கி தனது லக்கேஜை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கம் பார்த்தாள், தன்னை பிக்கப் செய்ய யாராவது வந்திருக்கிறார்களா என்று கண்களால் தேடினாள்
அங்கு விக்ராந்த் இருந்தான், அவன் அழகாக இருந்தான் அவனாவது தனக்காக வந்திருப்பதாவது என தனக்குள் நினைத்தவள் அங்கிருந்த ஆட்டோ ஸ்டேன்டுக்கு சென்று காட்டேஜ் முகவரியைப் பற்றி சொல்லி அங்கே தன்னை இறக்கிவிடுமாறு சொல்ல யாரும் பயத்தில் முன்வரவில்லை
அங்கு நடப்பதைக்கண்ட விக்ராந்தோ முதல் முறையாக அபிநயாவைப் பார்த்தான், அழகான பெண், துறுதுறுவென இருந்தாள், சின்ன வயது, அவனுக்கு பார்த்த உடன் அவளை மிகவும் பிடித்துவிட்டது, அதுவும் அவள்தான் காட்டேஜை பார்த்துக் கொள்ள வந்தவள் என தெரிந்துக் கொண்டதும் புன்னகையுடனே அவளிடம் சென்றான், அவளோ ஆட்டோ டிரைவர்களிடம் வாக்குவாதம் புரிய அந்நேரம் விக்ராந்த் அவளை அழைத்தான்
”மிஸ் அபிநயா” என கம்பீரமாக அழைக்க அவளும் சட்டென திரும்பி விக்ராந்தைப் பார்த்து வியந்தாள்.
அவளுக்கும் அவனை பிடித்திருந்தது, நல்ல நிறம், டீசன்ட் லுக், ஆணழகன் போல இருந்தான் யாருக்குதான் அவனை பிடிக்காது, அதனால் அவளும் அழகாக சிரித்தாள், அந்த சிரிப்பில் கரைந்துப் போனான் விக்ராந்த்.
”எஸ் எஸ் நான்தான் மிஸ் அபிநயா” என உற்சாகமாக அவனிடம் பேச அவனுக்கு குதூகலமாகிப் போனது
”உங்களுக்காகதான் நான் காத்திருந்தேன்” என்றான் மென்மையாக அதற்கே அபிநயா
”எனக்காகவா” என சொல்லி வெட்கம் கொண்டு சிரித்தாள் அவளின் வெட்கத்தில் உருகியவன் அவளின் சிரிப்பில் மெய் மறந்து
”கார் இருக்கு போலாமா”
”ஓ தாராளமா, நீங்க கூப்பிட்டா சொர்க்கத்துக்கு கூட நான் வருவேன்” என அபிநயா சொல்ல ஒரு நொடி அவனுக்கு காட்டேஜ் நினைப்பு வந்தது
”சீ பாவம் இவளை எப்படி அந்த நரகத்துல கொண்டு போய் விடறது பேசாம இவளை திருப்பி அனுப்பிடலாமா” என நினைக்க அவளோ
”என்ன யோசிக்கறீங்க என்னை கூட்டிட்டு போக மாட்டீங்களா” என ஏக்கமாக கேட்க அவனோ சில நொடிகள் யோசித்துவிட்டு பின்
”ம் தாராளமா வாங்க” என அழைக்க அவளோ
”என்னை அபின்னே கூப்பிடுங்க நான் உங்களை விட சின்ன பொண்ணுதான்”
”ம் பார்த்தாலே தெரியுது, அபி என்ன படிச்சிருக்க”
”இன்ஜினியரிங் ஆமா நீங்க” என இழுத்து அவனையே ஆர்வமாக பார்க்க அவன் ஒரு நொடி தொண்டையை கனைத்துவிட்டு அவள் முன் கையை நீட்டி
”ஐ அம் விக்ராந்த்“ என சொல்ல அவளோ
”நைஸ் நேம்” என சொல்லிவிட்டு அவனது கையை தனது கையால் பிடித்து குலுக்கினாள்.
அவனோ அவளின் ஸ்பரிசத்தில் உடல் குளிர்ந்தவன் மெல்ல அவளிடம் இருந்து கையை வாங்கிக் கொண்டு
”போலாமா அபி”
”ஆமா நீங்க எதுக்கு என்னை பிக்கப் பண்ணனும், உங்களுக்கும் காட்டேஜ்க்கும் என்ன சம்பந்தம், நீங்க கார் டிரைவரா” என கேட்டதும் விக்ராந்த் அவசர அவசரமாக பேசினான்.
”இல்லை இல்லை நான் ஒண்ணும் கார் டிரைவர் கிடையாது அந்த கார் என்னோடது, அந்த காட்டேஜ் கூட என்னோடதுதான்“
”ஓ நீங்கதான் ஹவுஸ்ஓனரா”
”ஆமாம் ஆமாம்”
”ஓகே அப்ப எனக்கு என்ன வேலை”
”அந்த காட்டேஜை பார்த்துக்கற மேனேஜர் வேலை”
”ம் அப்ப நீங்களும் அந்த காட்டேஜ்ல இருப்பீங்களா” என்றாள் ஆர்வமாக அவளின் ஆர்வத்தை வெகுவாக ரசித்தான் விக்ராந்த்
”இல்லை நான் அங்க இருக்க மாட்டேன், சேலத்தில என் வீடு இருக்கு அங்க இருப்பேன், எப்பவாவது காட்டேஜ்க்கு வருவேன்” என சொல்ல அவளுக்கு சப்பென்றானது, உஷ்ஷ் என அலுத்துக் கொண்டாள், அவளின் செயலை வெகுவாக ரசித்தவன்
”ஆமாம் போற வழி கொஞ்சம் மோசமா இருக்கும் வெளிச்சம் இருக்காது அதனாலதான்”
”ஓகே இதோ வரேன்” என சொல்லியவள் தனது லக்கேஜ் எடுத்துக் கொண்டு காரிடம் வர அவனும் அவளை பின்தொடர்ந்துச் சென்று காரின் டிக்கியில் அவளது லக்கேஜ் வைத்துவிட்டு அவளிடம் வந்தான்
”முன்னால ஏறிக்க”
”இருங்க ஸ்நாக்ஸ் வாங்கிக்கிறேன்”
”எதுக்கு?”
”சாப்பிடறதுக்கு காட்டேஜ்ல எப்படியும் எதுவும் இருக்காதுல்ல”
”ஏன் ஏன் ஏன் அப்படி சொல்றீங்க” என சொல்லிக் கொண்டு அவனிடம் நெருங்கியே விட்டாள் அபி, அவனுக்கு மூச்சு விட இயலாமல் திணறி இரண்டடி பின் சென்றவன்
”அப்படியில்லை காட்டேஜ்ல தனியா இருக்கனும்ல நீ பயந்துடுவல்ல அதுக்குத்தான்”
”பயமா எனக்கா சே சே நான் பயத்துக்கே தண்ணி காட்டறவ” என கெத்தாக சொல்லியவள் அக்கம் பக்கம் கடைகள் இருக்கிறதா என பார்க்க விக்ராந்தோ நொந்துப் போனான்
”இவளை விட தைரியசாலியா நான் அந்த காட்டேஜ்க்குள்ள போய் நொந்துப் போய் திரும்பி வந்தேன், இவள் என்னடான்னா சினிமா வசனமா பேசறாளே, பார்க்கலாம் நாளைக்கு விடிஞ்சா தெரிஞ்சிடும்” என மனதுக்குள் நினைக்க அதற்குள் அபி அங்கிருந்த கடைக்குச் செல்ல பின்னாலேயே சென்றான் விக்ராந்த்.
அபியோ ஸ்நாக்ஸ் பிஸ்கெட் ஐஸ்க்ரீம் என ஏகப்பட்ட ஐட்டங்களை வாங்கி குவிக்க அதைக்கண்டு அதிர்ந்தான் விக்ராந்த்
”அபி என்ன செய்ற போதும் இதுவே அதிகம்” என விக்ராந்த் அலற அதற்கு அபியோ வெகுஇயல்பாக பேசினாள்
”எப்படி போதும், காட்டேஜ்லதான் எதுவும் இல்லையே சமைச்சி சாப்பிடறதுக்காகவாவது அங்க வசதியிருக்கா”
”இருக்கு ஆனா மளிகை சாமான்கள் எதுவும் இல்லை”
”அப்ப அதையும் சேர்த்து வாங்கிடனும்”
“மளிகை சாமான்களா எதுக்கு“ என அதற்கும் அலறினான் விக்ராந்த் அவனின் அலறலைக்கண்டு அபிக்கு வியப்பே ஏற்பட்டது.
”என்ன நீங்க எல்லாத்துக்கும் இப்படி அலறிக்கிட்டே இருக்கீங்க நான் சாப்பிடறதுக்கு என்ன செய்றதாம், அங்கதானே எனக்கு வேலை, நான் எப்படி பட்டினியாவே இருக்க முடியுமா என்ன நானே நல்லா சமைப்பேன் அதனால சமையலுக்கு தேவையானதை வாங்கிக்கிறேன்” என சொல்லியவள் மளிகை கடைக்குள் சென்று மளிகை பொருட்களை எடுக்க அவனோ நொந்துக் கொண்டான்
”எப்படியிருந்தாலும் எல்லா பொருளும் பூஞ்சை பிடிச்சி கெட்டுப் போகப் போகுது, அது தெரியாம இவள் பாட்டுக்கு இவ்ளோ பொருளை வாங்கறாளே, என்ன செய்றது, இருக்கற உண்மையை சொன்னாலும் இவள் நம்புவாளா ம்ஹீம் இவளுக்கு இருக்கற ஆர்வத்தைப் பார்த்தா நாம எதை சொன்னாலும் நம்ப மாட்டாளே அவளே பார்த்து தெரிஞ்சிக்கட்டும்” என மனதில் நினைத்தபடியே அபிநயா செய்வதை செய்ய விட்டு வேடிக்கைப் பார்த்தான் விக்ராந்த்.