விக்ராந்த் இருக்கும் நம்பிக்கையில் ராகுலும் தைரியமாக படுக்கையில் படுத்திருந்தான், ஆனால் அடுத்த நொடியே டைனிங் டேபிள் மீதிருந்த பாத்திரங்கள் அனைத்தும் உருண்டு விசிறியடிக்கபட்டு என பெரிதாக சத்தம் எழுப்ப ராகுல் அதைக்கேட்டு பதற விக்ராந்தோ ராகுலிடம்
”நீ சும்மாயிரு ராகுல், யாரோ நம்மகிட்ட விளையாடறாங்க, நம்மளை பயமுறுத்தப் பார்க்கறாங்க, அது ஒருக்காலும் நடக்காது, நீ பேசாம படு” என சமாதானம் சொல்ல ராகுலும் அமைதியாக படுத்துக் கொண்டான்.
சில நிமிடங்களில் இருவரும் ஒருவாறாக உறங்கிப் போனார்கள். இரண்டு மணி நேரம் கழித்து விக்ராந்தோ
”ராகுல் தள்ளி படுடா, எதுக்கு என் மேல படுத்திருக்க, ஆஆஆ என்னால மூச்சே விட முடியலை” என கண்கள் திறக்காமலே தூக்க கலக்கத்தில் சொல்ல அதற்கு ராகுலோ
”நான் எங்கடா உன் மேல படுத்தேன் நீதான் பயத்தில என் மேல படுத்திருக்க தள்ளி படு விக்ராந்த்” என தூக்க கலக்கத்தில் உளற அதைக்கேட்ட விக்ராந்த் அதிர்ந்தான் அவனது தூக்கம் உடனே விட்டுப்போனது சட்டென கண்கள் திறந்துப் பார்த்து விக்கித்துப் போனான்
விக்ராந்தின் மீதும் சரி ராகுலின் மீதும் சரி அந்த 9 பேய் குழந்தைகள் படுத்து உறங்கியபடி இருக்க அதிர்ச்சியில் கண்களை இறுக்க மூடி பின் சில நொடிகள் கழித்து திறந்துப் பார்த்தான் விக்ராந்த்,
இப்போதும் அதே காட்சிகள் தெரிந்தது. அனைத்து குழந்தைகளும் பார்க்க விகாரமாக இருந்தன, அயர்ந்து உறங்குவதுப் போல தெரிந்தது, அதைக்கண்ட விக்ராந்த் மெதுவாக ராகுலை எழுப்ப நினைத்து தனது கையை உயர்த்த அவனது கையை கோர்த்தப்படி ஒரு பேய் குழந்தையின் கரம் இருக்கவே அதிர்ந்தான்
பூஞ்சை பிடித்தது போல வெள்ளை நிற கை ஒன்று அவனின் கையை பிடித்திருக்கவும் அவனுக்கு பக்கென்றது, என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் தன்னால் அவனது கைகள் உதறியது
அதே நேரம் ராகுல் மூச்சுவிட சிரமப்பட்டு கண்கள் திறந்துப் பார்த்து பேய் குழந்தைகளைக் கண்டதும் ஆஆஆஆ வென அலறினான் .அந்த அலறல் சத்தம் கேட்டு அந்த பேய் குழந்தைகளும் அதிர்ந்து எழுந்து ஆஆஆ என அலறியபடியே அவ்விடத்தை விட்டு மறைந்துப் போயின.
ஒரு நொடி விக்ராந்திற்கு பேச்சே எழவில்லை, இதுவும் கனவு என நினைக்க இயலவில்லை காரணம் அவனது கையில் கைஅச்சு இருந்தது, ராகுலோ பயத்தில் பேச முடியாமல் பலமாக விக்கினான், அவனுக்கு தண்ணீர் தர நினைத்து அங்கும் இங்கும் பார்த்தான் விக்ராந்த், எங்கும் தண்ணீர் இல்லை, அதனால் அவசரமாக அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு வந்தான், யாருமில்லை, வீடே அமைதியாக இருந்தது
வாசல் கதவை திறந்துக்கொண்டு காரிடம் சென்றவன் அதில் இருந்து வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வேகமாக உள்ளே வந்தவன் மாடிப்படி ஏறும் போது ஏதோ மனதில் உறுத்த சட்டென நின்றான், மெதுவாக தலையை மட்டும் திருப்பி டைனிங் டேபிளைப் பார்க்க அங்கு 9 பேய் குழந்தைகளும் டேபிள் மீது தலையை சாய்த்துக் கொண்டு படுத்து உறங்குவது போல இருக்கவே ஒரு நொடி அவனுக்கு இதயமே நின்று மீண்டும் படபடவென துடித்தது
மெதுவாக தனது பதட்டத்தைக் குறைத்துக் கொண்டு பார்த்தான் விக்ராந்த் சத்தம் எழுப்பாமல் அடிமேல் அடி எடுத்து வைத்து படிக்கட்டில் ஏற அப்போது ஒரு பேய் குழந்தை சட்டென தலையை மட்டும் நன்றாக முதுகுபக்கம் திருப்பி விக்ராந்தைப் பார்த்து கோபமாக முறைத்தபடியே ஷ்ஷ்ஷ் என்றது அதைக்கண்டு பதறிய விக்ராந்தோ சரியென பயத்துடன் தலையாட்ட அந்த குழந்தையும் தலையை திருப்பி மீண்டும் படுத்து உறங்கியது.
விக்ராந்திற்கு இப்போது தொண்டையே வற்றிவிட்டது, அமானுஷ்யம் பேய் எல்லாம் உண்மைதானா அல்லது இதுவும் கனவுதானா என நினைத்து ஒரு நொடி கண்கள் மூடி கண்கள் திறக்க எதிர்க்கே ராகுல் நின்றான்
”தண்ணி கொடுடா ஏன்டா இப்படி நிக்கற” என விக்கிக் கொண்டே கேட்க அதற்கு விக்ராந்தோ
”ஷ்ஷ் பேசாத” என்றான் மெதுவாக அதற்கு ராகுலோ
”ஏன்” என்பது போல் பேசாமல் கையால் சைகை செய்ய ராகுலுக்கு தண்ணீர் பாட்டில் தந்தவன் மெதுவாக அவனின் வாயை தனது ஒரு கையால் பொத்திவிட்டு டைனிங் டேபிள் பக்கம் அவனை திருப்பிக்காட்ட ராகுல் அங்கு உறங்கிக் கொண்டிருந்த 9 பேய் குழந்தைகளையும் கண்டு திடுக்கிட்டு பயத்தில் அலற முடியாமல் தவித்துப் போக அவனை அப்படியே அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்று விட்டவன் அவசரமாக கதவை சாத்தினான், விக்ராந்த்.
”ஏன்டா கத்தற, தூங்கற குழந்தைகளை எழுப்பாதடா, வந்து தொலைக்கப் போகுதுங்க” என சொல்ல அந்நேரம் ஷ்ஷ்ஷ் என்ற சத்தம் அதிகமாகவே கேட்டது அந்த அறைக்குள்
அதைப் புரிந்துக் கொண்ட விக்ராந்தோ தலையை மட்டும் மென்மையாக சரியென்பதுப் போல் ஆட்டிவிட்டு ராகுலின் தலையையும் மென்மையாக ஆட்டி விட்டான், பின் மயான அமைதி நிலவியது, விக்ராந்தோ ஓய்ந்துப் போய் கட்டிலில் அமர்ந்துக் கொள்ள ராகுலோ விக்ராந்தின் காதோரம் சென்று பேசினான்
”என்னடா நடக்குது இங்க குழந்தைகளாடா அது பேய்ங்கடா” என அச்சத்துடன் சொல்ல விக்ராந்தோ
”ஆமாம் ஆனா இது உண்மையா பொய்யான்னு தெரியலை, ஏதோ கனவுல இருக்கற மாதிரியிருக்கு“
”என்னது கனவா நீ ஒண்ணு நடக்கறதை எல்லாம் பார்த்தா எனக்கு உயிர் போய் உயிர் வருதுடா” என பயத்துடன் சொல்லிக் கொண்டே பாட்டிலில் இருந்த தண்ணீரை ஒரு மடக்கு பருகினான் அடுத்த நொடியே வாந்தி எடுத்தான்
”என்னடா ஆச்சி” என விக்ராந்த் கேட்க ராகுல் அந்த தண்ணீர் பாட்டிலைப் பார்த்தான், கெட்டுப் போன தண்ணீர் போல பாசி நிறைந்து புழுக்கள் நெளிந்தபடி இருக்க அதிர்ந்து அந்த பாட்டிலை தூர எறிந்தான்
”விக்ராந்த் என்னால முடியலைடா பயமாயிருக்கு” என ராகுல் பதட்டமாகச் சொல்ல விக்ராந்தோ கடிகாரத்தில் மணியைப் பார்த்தான்
”இன்னும் 2 மணி நேரத்தில பொழுது விடுஞ்சிடும் ஒண்ணும் பிரச்சனையில்லை அந்த குழந்தைங்க எல்லாம் தூங்கறாங்க, நாமளும் பேசாம தூங்கலாம் வா” என சொல்ல அவனோ
”தூக்கம் வரலைடா”
”பரவாயில்லை வாடா” என சொல்லிய விக்ராந்த் ராகுலை பிடித்து தன்னுடன் படுக்க வைத்துக் கொண்டான்
ஒரு 10 நிமிடம் யாரும் யாரிடமும் பேசவில்லை ஆனால் தூங்கும் போது வரும் குறட்டை சத்தம் மட்டும் மெலிதாக கேட்க விக்ராந்த் ராகுல் உறங்கிவிட்டான் என நினைத்து திரும்பி ராகுலைப் பார்க்க ராகுலோ சத்தம் எழுப்பக்கூடாதென தன் வாயை தன் கையால் பொத்திக் கொண்டு பயத்துடன் விக்ராந்தைப் பார்த்தான்
”நீ இன்னும் தூங்கலையா” என மெதுவாக கேட்டான் விக்ராந்த்
”தூக்கம் வரலைடா” என மெதுவாக சொன்னான் ராகுல்
”அப்ப இந்த குறட்டை சத்தம்” என சந்தேகமாக கேட்டான் விக்ராந்த் அதற்கு ராகுலோ
”பேய்ங்க தூங்கறதையே நான் இன்னிக்குதான்டா பார்க்கறேன் இதுல குறட்டை என்ன எல்லாமே வரும்” என நடுங்கும் குரலில் ராகுல் பேச விக்ராந்திற்கு என்ன சொல்வது என்ன செய்வதென தெரியாமல் திணறினான்.
ராகுலும் விக்ராந்தின் முகத்தையே பாவமாக பார்க்க அதைக்கண்டு இரக்கப்பட்ட விக்ராந்த் அவனிடம்
”சரி சரி பயப்படாத நான் இருக்கேன்ல உன்னை அந்த பேய்ங்ககிட்ட விட்டுட மாட்டேன் என்னை நம்பி நீ கண்ணை மூடி தூங்கு” என ஆதரவாக சொல்லிவிட்டு விக்ராந்தும் கண்கள் மூடி உறங்கினான். ராகுலும் அவனது பேச்சில் நம்பிக்கை வந்து தனது பயத்தை குறைத்துக் கொள்ள சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டான் பின் தானாக உறக்கம் வர அயர்ந்து உறங்கினான் ராகுல்.
மறுநாள் பொழுது விடிந்தது
காலை சூரியனின் வெளிச்சம் இருவரையும் எழுப்பியது, அதில் கண்கள் கசக்கியபடியே எழுந்துப் பார்த்தார்கள் இருவரும், அருமையான காலை பொழுது, ராகுலுக்கு அதுவும் பயமாகவே இருந்தது
”டேய் விக்ராந்த் பொழுது விடிஞ்சிடுச்சின்னு நினைக்கிறேன், பேய் குழந்தைகள் எழறதுக்கு முன்னாடி நாம இங்கிருந்து கிளம்பலாம்டா” என சொல்ல அதற்கு விக்ராந்தும் சரியென தலையாட்டி மெதுவாக படுக்கையை விட்டு எழுந்தான்
கூடவே ராகுலும் எழுந்தான் இருவரும் பூனை போல மெதுவாக நடந்தபடியே அறையை விட்டு வெளியேறி படிக்கட்டில் நின்றுப் பார்த்தார்கள், கீழே அமைதி வெளிச்சம் வந்து வீடே அழகாக தெரிந்தது, இருவரும் எட்டிப் பார்த்தார்கள், டைனிங் டேபிள் காலியாக இருந்தது, பாத்திரங்களும் இல்லை, பேய் குழந்தைகளும் இல்லை, அதனால் தைரியம் கொண்டு இருவரும் படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வாசல் கதவிற்கு வந்து கதவை திறந்தார்கள், வெளிக்காற்று இதமாக வீச அதைகூட ரசிக்கப் பிடிக்காமல் வெளியேறி கதவை சாத்தினார்கள் விக்ராந்தும் உடனே சாவி கொண்டு அந்த கதவை பூட்டிவிட்டு நிம்மதியானான்.
இப்போது இருவரும் நிம்மதியாக பெருமூச்சுவிட்டபடியே காரிடம் வந்தார்கள், சுற்றிலும் இருந்த அழகு கண்டு ஒரு நொடி அவர்களின் பயம் விலகிவிட்டது
”என்ன ஒரு ரம்மியமான காலை பொழுது” என ராகுலே வியந்து பேச அதற்கு விக்ராந்தோ ஒரு முறை அந்த காட்டேஜைப் பார்த்தான் அமைதியாக இருந்தது, அதனால் காருக்குள் ஏறி ராகுலை அழைத்தான்
”ராகுல் உள்ள வா” என அழைக்க ராகுலோ மறுத்தான்
”பகல்ல பேய் இருக்காதாடா”
”ரொம்ப முக்கியம் வாடா” என அழைக்க ராகுலும் அமைதியாக வண்டிக்குள் ஏறினான்
”ரொம்ப பசிக்குதுடா ஏதாவது சாப்பிடனும் நேரா ஓட்டலுக்குப் போ” என ராகுல் சொல்ல விக்ராந்திற்கும் பசி வாட்ட வண்டியை செலுத்தினான்
அந்த காட்டேஜ் விட்டு வண்டி தூரமாக சென்றது, கேட் வரை வந்தபின் ராகுல் வண்டியை விட்டு இறங்கி கேட்டை திறந்துவிட வண்டியும் வெளியேறியது, மீண்டும் ராகுல் கேட்டை மூடிவிட்டு வண்டியில் ஏறும் சமயம் ஒரு முறை அந்த காட்டேஜைப் பார்த்தான், அந்த காலை பொழுதில் உண்மையாகவே அழகாக இருந்தது, அதை ரசித்தபடியே காருக்குள் ஏறினான்
”ஒண்ணும் வேணாம் நாம ஊர் போய் சேரலாம்” என பயத்துடன் சொல்லிவிட்டு வேகமாக வண்டியை ஓட்டினான் விக்ராந்த், பாதை சரியில்லை, அதனால் வண்டிக்கு சேதம் வரும் என தெரிந்தும் விக்ராந்த் வண்டியை வேகமாக ஓட்டினான்.
ராகுலுக்கு விக்ராந்தின் பயம் நன்றாகவே புரிந்தது, அதனால் அவனும் அமைதியாக இருந்தான். ஒருவழியாக அந்த ஏற்காட்டை விட்டு இருவரும் தங்கள் ஊரான சேலத்திற்குத் திரும்பினார்கள்.