Epi-9

“அப்பா!!” என்று விவான் ஓடிவந்து, சத்யமூர்த்தியின் கால்களைக் கட்டிக்கொள்ள, சட்டென விவானைத் தூக்கி, முகமெல்லாம் முத்தமிட்டு, கட்டியணைத்து, அவனை அப்படியே மார்பில் புதைத்துக் கொண்டான். விஷ்வாவை கண் முன்னால் பார்ப்பதைப்போல ஒரு உணர்வு தோன்றியது. அவனது குட்டி கைகளுக்கு முத்தமிட்டவன், “எப்படி அப்பா சொன்னீங்க? புதுசா கத்துக்கிட்டீங்களா?” எனக் கேட்டான்.

சிறுவனின் முகத்தில் வெட்கம் தோன்ற, “அப்பா…” என மீண்டும் அழைத்தான். விவானைத் தூக்கித் தன் இரும்புத் தோள்களில் அமர வைத்துக்கொண்டான். கலாவதி ஒரு பக்கம் இருவரையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சாவித்ரி பார்த்தாள். “சாவி… சாவி…” என விவான் இறங்கிக்கொண்டு, அவளிடம் ஓடிவிட்டான்.

இப்பொழுது சத்யமூர்த்தி தன் பார்வையை மீராவின் மீது திருப்பினான். அவனது நீல நிற சூட்டும், விறைப்பான உடல்மொழியும் அந்த அறையின் வெப்பநிலையைக் குறைப்பது போல ஒரு நடுக்கத்தை மீராவிற்குள் ஏற்படுத்தியது.

“அவனுக்கு என்னாச்சுன்னு கேட்டுட்டு இருந்தீல மீரா? இப்போதைக்கு அவனுக்குப் பேச்சுத்திறன் இல்லை… கொஞ்சம் கம்மி. சொல்லிக் கொடுக்கணும். இந்த குடும்பத்தோட சொத்துக்கு ஒரே வாரிசு இப்பவும் எப்பவும் அவன் தான். அவனைக் கவனிச்சுக்கிறது சாதாரண விஷயம் இல்லை,” என்றான்.

சாவித்ரி அவன் பேசுவதை இமை சாதாரணமாகப் பார்த்துக்கொண்டிருக்க, சத்யமூர்த்தி ஆரம்பித்துவிட்டான். “இந்த வீட்டுக்கு மருமகளா வர்றவங்களுக்கு என்ன தகுதி இருக்கணும்னு நான் ஒரு ‘புரோட்டோகால்’ (Protocol) வச்சிருக்கேன்,” என அவனது பார்வை மீராவின் மீது படிந்தது.

தன் ஐபோனைத் தள்ளி வைத்துவிட்டு, சத்யமூர்த்தியின் கம்பீரத்தில் மயங்கியபடி, “சொல்லுங்க சத்யா… நீங்க என்ன சொன்னாலும் நான் செய்ய ரெடி,” என்றாள் கர்வத்துடன்.

“ஓகே, நோட் பண்ணிக்கோ!” என்றான்.

“என்னடா வந்ததும் வராததுமாக தாம் தூம்னு ஸ்கூலில் நடந்துக்கிறது போல இங்கே நடந்துக்குற?” என கலாவதி பேச்சைத் திசை திருப்ப, தனது அன்னையை அவன் ஒரு பொருட்டாக எண்ணாமல்… “Look மீரா, நாளைல இருந்து உன்னோட நாள் விடியற்காலை நாலு மணிக்கு ஆரம்பமாகணும்.”

மேலும் சத்யமூர்த்தி, “அஞ்சு மணிக்குள்ள குளிச்சு முடிச்சு, என் அம்மாவுக்குக் கொடுக்க வேண்டிய டேப்லெட்ஸ், டயட் உணவுகளை நீதான் நர்ஸ் கூட இருந்து நேர்ல நின்னு பார்த்துக்கணும். விவான் எழுந்ததும் சாவித்ரி கூட நீ அவனை எப்படி கவனிச்சுக்கணும்னு அவனோட டைம் ஸ்பெண்ட் பண்ணி அவன் கூடப் பழகணும். ஏழு மணிக்கு இந்த வீட்டோட சமையல் அறையில இருந்து தோட்டம் வரை இருக்கிற வீட்டு நிர்வாகத்தை நீதான் கவனிக்கணும். ராஜேஷ் தர்ற தினசரி கணக்கு வழக்குகளைப் பார்த்து எனக்கு ஆடிட்டிங் ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும். அதுமட்டுமில்ல… ஒன்பது மணிக்கு நீ பக்கா ஃபார்மல் சூட்ல என்னோட ஆபீஸ்க்கு வரணும். அங்கே என் பிசினஸ் மீட்டிங்ஸ், ஃபைல்ஸ் எல்லாத்தையும் நீதான் ஹேண்டில் பண்ணனும். சுருக்கமா சொன்னா, நீ ஒரு ‘ரோபோ’ மாதிரி 24/7 ஆக்டிவா இருக்கணும்!”.

இதைக் கேட்டுக்கொண்டே தூரத்திலே நின்றிருந்த சாவித்ரிக்குத் தன் உதடுகளைக் கடித்துக்கொண்டு சிரிப்பை அடக்க வேண்டியதாயிற்று.

‘ஆபீஸ்ல வேலை செய்யுற மேனேஜருக்கே இவன் கொடுக்குற பிரஷர்ல பிபி ஏறிடும். இதுல விடியற்காலை நாலு மணிக்கு எழுந்து, நர்ஸ் வேலை, வீட்டு வேலை, கணக்கு வழக்கு பார்த்துட்டு ஆபீஸ்க்கும் வரணுமாம்! இவன் பிசினஸ்மேன் இல்லை… பக்கா சைக்கோ! இவன் ஸ்கூலில் வேலை செய்யும் டீச்சரை நினைச்சா பாவமா இருக்கு. இதுல வாண்டடாக ஒருத்தி வந்து மாட்டிக்கொண்டாள்,’ என மீராவை நினைத்துச் சாவித்ரி தன் மனதுக்குள் கிண்டலுடன் சிரித்துக்கொண்டாள்.

ஆனால், மீராவின் முகத்தில் இருந்த அத்தனை பொலிவும் சத்யமூர்த்தியின் பேச்சில் அடுத்த நொடியே காணாமல் போனது. பகட்டாகவும், மகாராணி போலவும் வாழலாம் என்று கனவு கண்டு வந்தவளுக்கு, சத்யமூர்த்தி சொன்ன இந்த அசாத்தியமான வேலைப் பட்டியல் உள்ளுக்குள் ஒரு மாபெரும் நடுக்கத்தையும் பயத்தையும் வரவழைத்தது. அவளது நீண்ட நகங்கள் பதட்டத்தால் ஒன்றை ஒன்று கீறிக்கொண்டன.

சத்யமூர்த்தி அவளது பயத்தைப் பார்த்துவிட்டு, தன் கார் சாவியைச் சுழற்றியபடி உறுதியான குரலில்: “இந்த ஆறு மாசத்துல… நான் சொன்ன இந்த அத்தனை புரோட்டோகாலையும் நீ ஃபாலோ (Follow) பண்ணனும். இந்த வீட்டுச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு டெய்லி லைஃப்ல (Daily life) நீ டோட்டலாக (Total) இந்த வீட்டை ரூல் பண்ணுறவளா, என்னை விடத் திறமையான பொண்ணா எல்லாத்தையும் மேனேஜ் (Manage) பண்றவன்னு என்கிட்ட உன்னோட நடத்தையில ப்ரூஃப் (Proof) பண்ணனும். இதுல ஒரு சின்னத் தப்பு நடந்தாலும், இந்த விஷ்வ பவனத்தோட கதவுகள் உனக்கு நிரந்தரமா மூடப்படும். இதுல பாஸ் ஆனா மட்டும்தான் நமக்குக் கல்யாணம்!” என்றவன், தனது அன்னையைப் பார்த்து, “This is my final decision,” என்று ஒரு வெடிகுண்டை தூக்கிப் போட்டுவிட்டு, மீராவின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் தன் அசாத்திய ஆளுமையுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

கலாவதிக்கு உள்ளுக்குள் தூக்கிவாரிப் போட்டது. ‘தனது மகனுக்கு ஒரு கால்கட்டு போடலாம் எனப் பார்த்தால், அதை மிகுந்த சிக்கல்ல கொண்டு போய் விட்டானே,’ என நொந்தபடி நின்றார்.

மீரா கோபத்துடன் தனது போனில் அம்பிகாவுக்கு அழைத்தபடி நகர்ந்தாள்.

இங்கே சத்யமூர்த்தி தன் பெர்சனல் ஸ்டடி ரூமில் லேப்டாப்பில் ஏதோ ஃபைல்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, விவானை மாலையில் பார்க்கிற்கு அழைத்துச் செல்வது குறித்து அவனிடம் அனுமதி கேட்பதற்காக, சாவித்ரி அந்த அறையை நோக்கி நடந்து வந்தாள். அவளது கைகளில் விவானுக்கு இதுவரை அவள் என்னென்ன பிராக்டிஸ் (Practice) சொல்லிக் கொடுத்திருக்கிறாள் என்பதற்கான ஆதாரம் அடங்கிய டைரி இருந்தது.

பார்க் பற்றிய சிந்தனையில் வந்ததால், அங்கே அறையின் வாசலில் இருந்த கார்பெட்டின் (Carpet) ஓரம் லேசாக மடிந்திருப்பதை கவனிக்காதவள், அவளது வேக நடையில் கால் வைக்க, கார்பெட் வழுக்கியது.

“ஐயோ!” என்ற மெல்லிய அலறலுடன் முன்னோக்கிச் சரிந்தாள்.

அதே விநாடி… கப்போர்டில் இருந்து கோப்புகளை எடுக்க எழுந்த சத்யமூர்த்தியின் கண்களில் சாவித்ரி வழுக்குவது தெரிய, “No!” என்று கூறிக்கொண்டே, அவளது உடல் தரையில் மோதுவதற்குள், அவனது வலுவான இரும்பு போன்ற கரங்கள் அவளது மெல்லிய இடையைச் சுற்றி வளைத்துப் பிடித்துக்கொண்டன.

அந்த நொடி, மற்றவர்களின் உலகம் எப்பொழுதும் போல இயங்கிக்கொண்டிருக்க, சத்யமூர்த்தி, சாவித்ரி இருவரின் உலகமும் நின்று போனது; சொல்லப்போனால், உறைந்து போனது.

சாவித்ரியின் உடல், சத்யமூர்த்தியின் அகன்ற, பலமான மார்போடு பலமாக மோதி நின்றது. அவளது இரு கரங்களும் தற்காப்பிற்காக அவனது நீல நிற கோட்டின் காலரைப் பலமாகப் பற்றிக்கொண்டிருந்தன. சத்யமூர்த்தி அவளை அப்படியே தன் கைகளில் தாங்கியபடி குனிந்து பார்த்தான்.

அவளது சிவப்பு நிற காட்டன் புடவையின் முந்தானை சற்றே சரிந்து, அவளது கழுத்தின் நேர்த்தியையும், நெற்றியில் இருந்த அந்தச் சிறிய பொட்டின் அழகையும் அவனுக்கு மிக அருகில் பார்த்தான். அவளது காந்தம் போன்ற கண்கள் பயத்தில் விரிந்து, அவனது கண்களை நேருக்கு நேர் நோக்கின. அவளது தூய்மையான தமிழ் அழகும், அவளது வதனத்தில் வீசிய வியர்வை வாசனையும், எதற்கும் அசையாத சத்யமூர்த்தியின் நாசியைத் திக்குமுக்காட வைத்தது என்றால், அவனது ஆண்மை நிறைந்த இதயத்திற்குள் ஒரு விசித்திரமான ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது. அவளது மென்மையும், அவளது மூச்சுக்காற்று தன் மார்பில் படுவதையும் அவனது ஆண்மை முதன்முறையாக உணர்ந்தது.

சாவித்திரியும் சத்யமூர்த்தியின் அந்த அசாத்தியமான நெருக்கத்தைக் கண்டு திகைத்துப் போனாள். அவனது கூர்மையான நாசி, இறுக்கப்பட்ட தாடை, எல்லாவற்றையும் ஆளுமை செய்யும் அந்தத் தீர்க்கமான கண்கள் அவளை அப்படியே கட்டிப்போட்டன. அவனது இரும்பு போன்ற கைகளின் பிடி, அவளுக்குள் ஒரு புதிய சிலிர்ப்பையும், அதே சமயம் ஒரு விசித்திரமான தவிப்பையும் தந்தது. முப்பத்தி எட்டு வயதான அந்த ஆணின் முதிர்ச்சியான அழகும், அவனிடமிருந்த அந்த காந்த ஈர்ப்பும் (Attraction) அவளது தன்மானக் கோட்டையைச் சற்றே உலுக்கியது.

இருவரும் ஒருவரை ஒருவர் அப்படியே பார்த்தபடி நின்றார்கள். நாற்பது வயது ஆடவனுக்குப் பெண் தேகம் பூக்குவியலைப் போலக் கையில் சேர்வது இதுவே முதன்முறை… பெண்ணவளுக்குக் கூடத் கிட்டத்தட்ட அதே போலத்தான்; இதுவரை எந்த ஒரு ஆடவனையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை. அவள் இத்தனை நாள் தவம் கிடந்தது அவளைத் தாங்கி நிற்கும் ஆண்மகன்… அவளுக்கு எதிரில் இருப்பவனைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான். ஆனால் இப்பொழுது? இப்பொழுது யாரைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாளோ, அவன் மேல் தடுமாற்றம்! ‘ச்ச, என்ன இதெல்லாம்?’ என மூளை அபாயச் சங்கை ஊதியது.

சில நொடிகள் நீடித்த அந்த மௌனப் போராட்டத்திற்குப் பின், சாவித்ரி சட்டென்று தன்னைச் சமப்படுத்திக்கொண்டு அவனது பிடியில் இருந்து விலகி நின்றாள். அவளது முகம் லேசாகச் சிவந்திருந்தது.

“ச… சாரி சார். கார்பெட் மடிந்திருந்ததை நான் கவனிக்கலை,” என்றாள் தன் குரலில் இருந்த நடுக்கத்தை மறைக்கப் பாடுபட்டபடி, அப்படியே தன் புடவையைச் சரிசெய்துகொண்டாள்.

சத்யமூர்த்தியும் தன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, தன் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டபடி, எப்போதும் போலத் தன் விறைப்பான முகமூடியை மாட்டிக்கொண்டவன், “இட்ஸ் ஓகே, மிஸ் சாவித்ரி. என் வீட்ல எல்லாமே பர்பெக்ட்டா (Perfect) இருக்கணும்னு நினைப்பேன். ஆனா, நீங்க வந்த இடத்துல தடுமாறி விழுகுறீங்க,” என்றான் அவளது தகுதியைக் கிண்டல் செய்யும் விதமாக.

சாவித்ரி உடனே தன் தொழில்முறை நேர்மைக்குத் திரும்பினாள். “நான் விழுந்ததைக் கூட அப்புறம் பார்த்துக்கலாம் சார். இப்போ நான் வந்தது ஒரு முக்கியமான விஷயத்தைப் பேச,” என்றாள் தீர்க்கமாக.

“என்ன விஷயம்?” சத்யமூர்த்தி தன் நாற்காலியில் அமர்ந்தபடி கேட்டான்.

“இப்போ விவான் ‘ஆத்தா’, ‘தண்ணீர்’, ‘அப்பா’ன்னு கொஞ்சம் கொஞ்சமாகப் பேசக் கத்துக்கிட்டான். அவனுக்கு ஒரு வாக்கியத்தைக் கோர்த்துப் பேசத் தெரியலை. அதேபோல, அவன் நாலு பேர்கூடப் பேசினாலும் பழகினாலும் தான் அவன் இன்னும் பேசக் கத்துக்க முடியும்.”

‘அதுக்கு என்ன பண்ணனும்?’ எனக் கேள்வியாகப் பார்த்தான்.

சாவித்ரி கைகளைப் பிசைந்துகொண்டு, “இங்கேயே வீட்ல இருந்தா அவனுக்குச் சோசியல் இன்டராக்ஷன் (Social interaction) எப்படி டெவலப் (Develop) ஆகும்? அதனால அவன் நார்மலைஸ் (Normalize) ஆக பார்க் கூட்டிட்டுப் போறதாக இருக்கேன். அங்கே அவனுக்குச் சோசியல் இன்டராக்ஷன் நடக்கும். அவனுக்கு நிறைய மனிதர்களோட முகங்களும், குழந்தைகளோட சத்தமும் கேட்கணும். அப்போதான் மத்தவங்க பேசுறதைப் பார்த்து உள்வாங்கி, சீக்கிரமா பேசக் கத்துக்குவான். இப்படி வீட்லயே இருந்தா மறுபடியும் அவனோட கவனம் போனுக்குத் தான் போகும். அதனால, இன்னிக்கு சாயங்காலம் நான் விவானை வெளிய ஒரு பப்ளிக் பார்க்கிற்கு (Public Park) கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன்,” என்றாள் சாவித்ரி தன் திட்டத்தை விவரித்து.

சத்யமூர்த்தி சற்றே யோசித்தான். “பார்க்கா? அங்கே நிறையக் கூட்டம் இருக்கும். விவான் ஏதாவது அடம் பிடிச்சா என்ன பண்ணுவீங்க? எங்கயாவது அவன் மிஸ் ஆகிட்டா என்ன பண்றது? என் பையனைக் கடத்திப் பணம் பறிக்க முயற்சி செஞ்சா? அதுவும் பார்க் எல்லாம் நிறைய பப்ளிக் பீப்பிள்ஸ் (Public peoples) வருவாங்க. அங்கே ஹைஜீன் (Hygiene) இருக்குமோ என்னமோ? பார்க் போறது டேஞ்சர்-ன்னு (Danger) தோணுது,” என்றான்.

“மிஸ்டர் சத்யமூர்த்தி! உங்க பாதுகாப்பு வளையத்துக்குள்ளேயே அவனை வச்சிருந்ததுனால தான் அவன் இப்போ இப்படி இருக்கான். கூட்டத்தைப் பார்த்து அவன் பழகணும். அங்கே வர்ற மத்த குழந்தைகள் விளையாடுறதைப் பார்த்தா, அவனுக்கும் பேசணும்ங்கிற ஆசை வரும். ஒரு கேர் டேக்கரா விவானோட பாதுகாப்புக்கு நான் கேரண்டி (Guarantee). நீங்க கார் மட்டும் அரேஞ்ச் (Arrange) பண்ணிக் கொடுங்க, போதும்,” என்றாள் சாவித்ரி அசைக்க முடியாத நம்பிக்கையுடன்.

அவளது தொழில் நேர்மையும், விவானின் மீதான அக்கறையும் சத்யமூர்த்தியை மறுக்க விடவில்லை.

“ஓகே… ராஜேஷ்கிட்ட சொல்லி கார் ரெடி பண்ணச் சொல்றேன். ஆனா, செக்யூரிட்டி கூட வருவாங்க,” என்றான் சத்யமூர்த்தி தன் அதிகாரத் தொனியில்.

“தேங்க்ஸ் சார்,” என்றுவிட்டு சாவித்ரி அங்கிருந்து விறுவிறுப்புடன் வெளியேறினாள்.

அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த சத்யமூர்த்தியின் மனதில்… சிறிது நேரத்திற்கு முன் இருவரும் இருந்த நிலையை நினைத்து, உள்ளுக்குள் ஒரு பரவசம் உடலெங்கும் பரவியது.

 * தொடரும்.