Epi -8

அடுத்த நாள் வீடே பரபரப்பாக இருந்தது. ஏனென்றால், கலாவதியின் அண்ணன் செந்தில் முருகனின் மகள் மீரா, சத்யமூர்த்தியின் வீட்டுக்கு வந்துவிட்டாள்.

சத்யமூர்த்தி ராஜேஷிடம் பேசிக்கொண்டே காலை உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்க, கலாவதியின் உற்சாகக் குரல் கேட்டது. “அண்ணா வாங்க… மீரா!! என்னமா நெடுநெடுன்னு வளர்ந்துட்ட?” என்று அவளின் கையைப் பிடித்து வந்தார்.

சத்யமூர்த்தியின் தாடைகள் இறுகி, புருவம் சுருங்கியது. கொட்டும் மழையில் டீக்கடையில் வேலையை முடித்துவிட்டு, நிறைமாதக் கர்ப்பிணியான கலாவதி நடந்து வரும்போது கல்தடுக்கி விழுந்துவிட்டார். விஷ்வாவின் வயது அப்பொழுது ஐந்து. இப்பொழுது விவான் எப்படி இருக்கிறானோ, அப்படித்தான் சிறுவயதில் விஷ்வா இருந்தான். மின்னலும் இடியும் அதிகமாக இருக்க, மழையும் விடாமல் கொட்டிக்கொண்டிருந்தது. அரசு சுகாதார நிலையத்தில் இருந்து, “உங்க அம்மாவோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு தம்பி. வீட்ல இருந்து யாரையும் கூட்டிட்டு வா கண்ணு. ஈரோடு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தால் குழந்தையையும் காப்பாத்திடலாம். சீக்கிரமே பண்ணுப்பா,” என்று செவிலிப்பெண் கூறிவிட்டு நகர்ந்தார்.

சத்யமூர்த்திக்கு அந்த நேரத்தில் உதவிக்கு எங்கு செல்வது, யாரைப் பார்ப்பது எனத் தெரியவில்லை. பன்னிரண்டு வயதுச் சிறுவனுக்குக் கண்களில் தெரிந்த ஒரே ஒரு உதவி செய்யும் நபர், தனது மாமா செந்தில் தான் என நினைத்துக்கொண்டு, வேகமாக மாமாவின் வீட்டுக்கு விஷ்வாவைத் தூக்கிக்கொண்டு ஓடினான்.

மாலை நேரத்தில் கலாவதி விழுந்து இப்பொழுது இரவு நேரமாகிப் போனது. “மாமா, அம்மாவுக்கு முடியல வாங்க மாமா! பெரிய ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போகணும்னு சொல்லிட்டாங்க. என்ன பண்றதுன்னு தெரியல,” என அழுதான் சத்யமூர்த்தி.

“அப்படியா?” என செந்தில் பதட்டத்துடன், “அழாத சத்யா, நான் உடனே வரேன். நீ இங்கேயே விஷ்வாவை விடு. நான் உடனே கிளம்புறேன். ஒரு நிமிஷம் இரு, நான் சட்டையைப் போட்டுக்கிட்டு குடை எடுத்திட்டு வந்துடுறேன்,” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவர், திரும்ப வரவே இல்லை. செந்திலின் மனைவி அம்பிகா கதவை அடைப்பதற்கு முன், “சத்யமூர்த்தி, உன் மாமாவுக்கு ஜுரம் வந்திடுச்சு கண்ணு. அவர் குளிரில் நடுங்குறார், இந்த நேரத்தில் மழையில் வர முடியாது. நீ இந்தப் பணத்தை எடுத்துட்டுப் போ,” என்று கையில் நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினார்.

சத்யமூர்த்திக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் ஆட்டம் கண்டு இடிந்து போனது. ‘சரி, பண உதவியாவது செய்தார்களே, ஆட்டோ பிடித்துக்கொண்டு அம்மாவை பெரிய ஹாஸ்பிட்டல் அழைத்துச் செல்லலாம்,’ என மருகிக்கொண்டு விஷ்வாவைத் தூக்கிக்கொண்டு அரசு சுகாதார நிலையம் சென்றான். அப்பொழுது அவனுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. “கண்ணு, உங்க அம்மாவுக்குப் பிரசவம் ஆகிடுச்சு. ஆனால் குழந்தை இறந்துபோச்சு. அதுவும் பொண்ணு… உங்க அம்மாவைக் காப்பாத்திட்டோம், குழந்தையைக் காப்பாத்த முடியல…” என்றார்கள்.

அந்த ஒரு வாரம் கலாவதி வீட்டிலேயே இருந்தார்; அதுவும் வாடகை வீட்டில். சாப்பாட்டுக்குக் கஷ்டம். டீக்கடையில் வேலைக்குப்போகக் கூடத் தெம்பில்லை. கலாவதி என்ன செய்வதென்று தவித்து வரும் சூழ்நிலையில், செந்தில் வீட்டுக்கு வந்தார்.

“உயிரோடு இருக்கேனா, செத்துட்டேனான்னு பார்க்க வந்திருக்கியா அண்ணா?” என கலாவதி கேட்டுவிட, செந்தில் தனது தங்கையைச் சமாதானம் செய்யும் நோக்கில் பேசியவர், நேராக விஷயத்துக்கு வந்தார். அந்த நேரம் நெல் அறுப்புக்குச் சென்ற சத்யமூர்த்தி இருநூறு ரூபாய் கூலிப் பணத்துடன் வீட்டுக்குள் நுழையும் நேரம், காதில் கேட்ட செய்தி: “கலா, சொல்றதைக் கேளு. இப்பவும் எதுவும் கெட்டுப் போகல. உனக்குச் சின்ன வயசுதான். விஷ்வா, சத்யா ரெண்டு பேரையும் அனாதை ஆசிரமத்தில் சேர்த்திட நான் ஏற்பாடு பண்றேன். நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ. உன் புருஷன் சங்கரமூர்த்தி ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கும்போது, நீ பண்ணிக்கக் கூடாதா?” எனச் கேட்டார்.

கலாவதி ஆத்திரத்துடன், “நீ என் கூடப் பிறக்கலன்னு நான் நினைச்சுக்கிறேன். நீ ரோட்டில் போற எவனோ ஒருத்தன், தயவுசெஞ்சு வெளியே போயிடு. நான் விஷம் குடிச்சுச் செத்தாலும் சாவேனே தவிர, உன்கிட்ட உதவி அப்படின்னு வந்து நிக்க மாட்டேன். நான் ஒன்னும் அலைஞ்சிட்டுத் திரியல… கால் வயிறு கஞ்சி கூட உழைச்சுத்தான் குடிப்பேன். உன் பொண்டாட்டிதான் இதைச் சொல்லிக் கொடுத்தான்னு எனக்குத் தெரியும், வெளியே போடா!” என்று கத்தியிருந்தாள்.

“சத்யா, சத்யா!!” என நிகழ்காலத்தில் கலாவதி அவனை அழைக்க, “மாப்ளை சத்யா!!” எனப் புன்னகையுடன் செந்தில் முருகன் பேசினார்.

சத்யமூர்த்தி எதையும் கண்டுகொள்ளாமல் தட்டில் கையைக் கழுவிவிட்டு எழுந்தவன், “கையைக் கழுவிட்டேன்மா!! உனக்காகத்தான் பார்க்கிறேன்,” எனச் சொல்லிவிட்டு நகர்ந்திருந்தான்.

செந்தில் முருகனுக்குச் சம்மட்டியில் அடித்தாற்போல இருந்தது. ஆனால், பின்னால் வந்த அம்பிகாவுக்கு அப்படித் தோன்றவில்லை. அவருக்குத் தேவை பணம், பகட்டு… இவை மட்டுமே. பகட்டாகத் தனது மகள் மீரா, இந்த மொத்தச் சாம்ராஜ்யத்தின் மகாராணியாக வேண்டும் என்னும் ஒரே குறிக்கோள் மட்டுமே. அம்பிகா கனவில் கூட எதிர்பார்க்கவில்லை, சத்யமூர்த்தி இந்த அளவுக்கு உயரத்துக்கு வருவான் என்று. மீராவுக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது; அதை அளவிட முடியாத நிலையில் இருந்தாள்.

இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, சாவித்திரியின் முழு கவனமும் விவான் மேலே மட்டுமே இருந்தது. பிரம்மாண்டமான நீச்சல் குளத்தின் அருகே விவானை அழைத்து வந்திருந்தாள் சாவித்ரி. காலைச் சூரியனின் கதிர்கள், நீல நிறத் தண்ணீரின் மேல் பட்டுப் பளபளத்துக் கொண்டிருந்தன.

விவான் தண்ணீரைப் பார்த்ததும் எப்போதும் போலப் பயந்து பின்வாங்கினான். சாவித்திரியின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, “நோ… நோ…” என்று தன் வழக்கமான மறுப்புக் குரல் எழுப்பினான்.

சாவித்ரி அவனது உயரத்திற்கு முழங்காலிட்டு அமர்ந்தவள், “விவான் குட்டி, இங்கே பாரு… தண்ணீர் எவ்வளவு அழகா இருக்குல்ல? குட்டி மீன் எல்லாம் எப்படி நீந்தும் தெரியுமா?” என்று தன் கைகளை மீன் போல அசைத்துக் காட்டினாள்.

“No, no,” என்று மீண்டும் விவான் கூறிவிட, சாவித்ரி அவனது மனதை மாற்றும் பொருட்டு, “நீ மட்டும் சமத்துப் பையனாக ஸ்விம் (Swim) செய்யக் கத்துகிட்டா… நம்ம மீன் பார்க்க அக்வேரியம் (Aquarium) கூட்டிட்டுப் போவேன், உங்க டாடிகிட்ட சொல்லி,” என்று புருவம் தூக்கினாள்; தயாரா என்பதைப் போல.

விவான் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டு தனது எதிர்ப்பைக் காட்டிட, சாவித்ரி மெதுவாகத் தன் கால்களைத் தண்ணீரில் நனைத்து, “ஹப்பா… எவ்வளவு ஜாலியா இருக்கு தெரியுமா? விவானும் காலை மட்டும் நனைக்கலாமா?” என்றாள் கனிவோடு.

விவான் தயங்கித் தயங்கித் தன் குட்டிப் பாதத்தை நீட்டித் தண்ணீரைத் தொட்டான். நீரின் குளிர்ச்சி அவனது உடம்பிற்குள் ஒரு புதிய சுறுசுறுப்பை ஏற்படுத்தியது. அவன் முகத்தில் பயம் மறைந்து ஒரு சிறு புன்னகை அரும்பியது.

“வெரி குட் கண்ணா! இப்போ ‘தண்ணீர்’னு சொல்லுங்க பார்ப்போம்… த… ண்… ணீ… ர்…” என்று சாவித்ரி தன் உதடுகளை மெதுவாக அசைத்து, அவனுக்கு உச்சரிப்பைக் கற்றுக் கொடுத்தாள்.

விவான் அவளது உதடுகளையே உற்றுப் பார்த்தான். அவளது தொழில்முறைப் பயிற்சி இங்கே வேலை செய்தது. குழந்தையை வற்புறுத்தாமல், விளையாட்டின் மூலமாகவே அவனது நரம்புகளைத் தூண்டினாள். விவான் தன் பிஞ்சு உதடுகளைக் குவித்து, “த… த…” என்று கூற முயன்றான்.

“வாவ்! சூப்பர் விவான்! இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க… த… ண்… ணு…” என்று சாவித்ரி உற்சாகப்படுத்தினாள்.

“த… ண்ணு…” – விவானின் வாயிலிருந்து முதன்முறையாக ஒரு தெளிவான தமிழ் ஒலியின் வடிவம் வெளிவந்தது. ஆனால், இந்தப்பயிற்சிகள் எல்லாம் பத்தாது; அவனுக்கு நிறைய மனிதர்களுடன் பேச வேண்டும். ‘அதற்கு என்ன செய்ய? என்ன செய்ய?’ என யோசித்தவள், பார்க் அழைத்துச் செல்ல திட்டமிட்டாள்.

இங்கே பள்ளியில், காலை நடந்த விஷயத்தை யோசித்துக்கொண்டிருந்தான் சத்யமூர்த்தி. அவனுக்கு மீரா வீட்டுக்கு வந்ததில் சுத்தமாக விருப்பமே இல்லை. அவளை வீட்டை விட்டுத் துரத்த வேண்டும்; இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். ‘எனக்குக் கல்யாணமும் வேண்டாம், ஒரு கண்றாவி இழவும் தேவையில்லை… என் வீட்டுக்குள் உறவு, சொந்தம்னு சொல்லிக்கிட்டு யாரும் வரவும் கூடாது. என்ன பண்ணலாம்? என்ன பண்ணலாம்?’ எனத் தீவிரமாக யோசித்தவன், உற்சாகமாக மேஜையைத் தட்டிக்கொண்டு எழுந்தான். யோசனை கிடைத்துவிட்டது!

கலாவதி ஹாலில் அமர்ந்திருக்க, போனை நோண்டிக்கொண்டு அருகில் இருந்த மீராவின் கண்களில் சாவித்ரி பட்டாள்.

“எதுவும் சாப்பிடுறியா மீரா?” என கலாவதி கேட்க…

“அது… அதெல்லாம் வேண்டாம் அத்தை,” என்றவள், சாவித்திரியைச் சுட்டிக்காட்டி, “அந்தப் பொண்ணு யாரு? இங்கேயேதான் இருக்கா போல… பார்த்தால் வேலைக்காரி மாதிரி கூடத் தெரியல. என்ன பண்றா இங்கே?” என வினவினாள்.

“யாரைக் கேட்கிற?” என கலாவதி சாவித்திரியைப் பார்த்துவிட்டு, “அந்தப் பொண்ணா?” எனப் புன்னகையுடன் நோக்கியவர், “அவ விவானுக்குப் பேசச் சொல்லிக்கொடுக்க வந்திருக்கா. ரொம்ப நல்ல பொண்ணு,” என்றார்.

“அவனுக்கு என்னாச்சு?” என மீரா கேட்டுக்கொண்டிருக்க, “அதை நான் சொல்றேன்,” என வந்து சேர்ந்தான் சத்யமூர்த்தி.

“டாடி!!” என விவான் ஓடிச் சென்றான்.

சத்யமூர்த்தி…?

மீரா…?

 * தொடரும்.