Epi -5

சத்யமூர்த்தியின் காரின் சத்தம் கேட்ட அடுத்த நொடியே, கலாவதியின் முகத்தில் படர்ந்த பதட்டம், அந்த வீட்டின் அஸ்திவாரமே சத்யமூர்த்தியின் அதிகாரத்திற்கு அடிமைப்பட்டுக் கிடப்பதைக் காட்டிக் கொடுத்தது.

“நீங்க உங்க அறைக்குப் போங்கம்மா. நான் பார்த்துக்குறேன்,” என்று சாவித்ரி கலாவதியின் கைகளைப் பற்றிக் கனிவாகக் கூறினாள். அவளது குரலில் இருந்த நிதானம், கலாவதிக்குச் சற்றுத் தைரியத்தைக் கொடுத்தது. அவளின் கையைப் பற்றி, “எப்படியாவது என்னோட பேரனைச் சரி செஞ்சு கொடும்மா,” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அடுத்த சில நொடிகளில், வீட்டின் பிரதான தேக்குமரக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் சத்யமூர்த்தி. அவனது கையில் இருந்த ஐபேடை (iPad) ராஜேஷிடம் நீட்டியபடி, கோட்டைக் கழற்றினான். அவனது கண்கள் நேராக விவானின் அறையிருக்கும் திசையை நோக்கிச் சென்றன. அங்கே வாசலில் நின்றிருந்த சாவித்ரியைக் கண்டதும் அவனது நடை சற்றே நிதானித்தது. அவளைக் கடந்தபோது, சத்யமூர்த்தி சற்றே நின்று, தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான். இரவு மணி பத்து எனக் காட்டியது.

“முதல் நாளே உங்க டியூட்டி டைமை (Duty time) விட அதிக நேரம் இங்கேயே இருக்கீங்க போல, மிஸ் சாவித்ரி?” என்றான் அவளது கண்களை நேராகப் பார்த்து, தன் கம்பீரக் குரலில்.

“விவான் இன்னும் தூங்கலை, மிஸ்டர் சத்யமூர்த்தி. ஒரு தெரபிஸ்ட்டா அவனோட தூக்க முறையைக் கவனிக்க வேண்டியதும் என் பொறுப்பு தான். அதுமட்டும் இல்லாம, அவனுக்கு இப்படியொரு ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ இருக்கும் போது, ராத்திரி நேரத்துல அவனோட மூளை இன்னும் அதிகமா வேலை செய்யும். அதைத் திசைதிருப்ப வேண்டியது அவசியம்,” என்று சாவித்ரி சற்றும் தயங்காமல் பதிலளித்தாள்.

சத்யமூர்த்தி புருவம் சுருக்கியபடி, “அதெல்லாம் உங்க இஷ்டப்படி பண்ண முடியாது. அவனுக்குப் பசிச்சா சாப்பிடுவான், தூக்கம் வந்தா தூங்குவான். நீங்க ரொம்ப ஓவரா ரூல்ஸ் (Rules) பேச வேண்டாம்,” என்று அவளிடம் சொல்லிக்கொண்டு அறைக்குள் செல்ல முயல…

“இப்போ நீங்க உள்ளே போனா, அவன் இன்னும் பிடிவாதமாகுவான்,” என்று சாவித்ரி அவனது வழியை மறிப்பது போல நின்றாள்.

“வாட்?” சத்யமூர்த்தியின் புருவங்கள் சுருங்கின. அவனது சொந்த வீட்டில், அவனது சொந்த மகனைப் பார்க்கப் போவதைத் தடுத்து நிறுத்த இவள் யார் என்ற ஆத்திரம் அவனது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஆமாம். நீங்க உள்ளே போனா, உங்க சட்டைப் பாக்கெட்ல இருக்குற மொபைல் போனைத் தான் அவன் தேடுவான். நீங்க இல்லைன்னு சொன்னா கத்துவான், குதிப்பான். நீங்க வந்த அலைப்பறையில அவன் மனநிலை இன்னும் மோசமாகும். சோ, ப்ளீஸ்… இன்னிக்கு அவனுக்கு நீங்க ஸ்பேஸ் (Space) கொடுங்க,” என்று சாவித்ரி மிகத் தீர்க்கமாகக் கூறினாள்.

விவானைக் காரணம் காட்டி அவள் பேசிவிட, அதற்கு மேல் பேச முடியவில்லை. அவளது பேச்சில் இருந்த நியாயமும், அவளது கண்களில் தெரிந்த அசாத்திய துணிச்சலும் அவனுக்குள் ஒரு விசித்திரமான எரிச்சலையும், அதே சமயம் அவளறியாமல் ஒரு சிறு வியப்பையும் ஏற்படுத்தியது. சாவித்ரி அதே இடத்தில் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருக்க…

“ஓகே! லெட்ஸ் சீ… உங்களோட இந்தத் தில்லுமுல்லு எல்லாம் எத்தனை நாளைக்குத் தாங்குதுன்னு பார்க்குறேன்,” என்று சலிப்புடன் கூறிவிட்டு, தன் அறை நோக்கி நடந்தான் சத்யமூர்த்தி.

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. வீட்டில் இருக்கும் அனைவரும் பரபரப்பாக அவர்களது வேலையில் பிசியாக இருக்க, சாவித்ரி தன் கையில் ஒரு சிறிய மரத்தாலான தட்டையும், சில வண்ணமயமான மணல் தட்டுகளையும் எடுத்துக் கொண்டு விவானின் அருகில் சென்றாள். விவான் எப்போதும் போலத் தன் கையில் இருந்த ஐபேடில் கார்ட்டூன் பார்க்க முயன்றான். ஆனால், சாவித்ரி மிகச் சாமர்த்தியமாக அவனது கவனத்தைத் திருப்ப, அந்தத் தட்டுகளை அவன் முன்னால் வைத்தாள்.

“கலா மேடம்! இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் பீச் போகப் போறேன். Baby shark-ல வர்ற மீனை நேரடியாகப் பார்க்கப் போறேன். நீங்களும் வர்றீங்களா?” எனக் கேட்டபடி நிறைய பேசினாள். அவ்விடத்துக்கு கலாவதியும் வந்துவிட, உங்களுக்குத் தமிழ் பாட்டு தெரியுமா எனக் கேட்டபடி, “கைவீசம்மா கைவீசு, பள்ளிக்குப் போகலாம் கைவீசு…” எனப் பாடினாள்.

விவான் அவளை ஒரு மிரண்ட பார்வையோடு பார்த்தான். அவனுக்கு இந்த ஒலிகள் புதிதாக இருந்தன. கார்ட்டூன்களின் ஆங்கில இரைச்சலைக் கேட்டுப் பழகிய அவனது காதுகளுக்கு, சாவித்ரியின் கனிவான தமிழ் உச்சரிப்பு ஒரு புதிய அதிர்வை ஏற்படுத்தியது. அவளையே முறைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் விவான்.

சாவித்ரி மணல் தட்டில் தன் விரலால் **’அ’** என்று எழுதினாள். “விவான், இது ‘அ’… அம்மா…” என்று அவனது பிஞ்சு விரலைப் பற்றி அந்த மணலின் மேல் தடவச் செய்தாள். விவான் முதலில் தன் கையை உதறினான். பின், அந்த மணலின் தொடுதல் அவனுக்கு ஏதோ ஒரு புதிய உணர்வைக் கொடுக்க, மெல்லத் தன் விரலால் அந்த மணலைக் கிளறத் தொடங்கினான். அவனது முகத்தில் இருந்த அந்த மூர்க்கத்தனம் குறைந்து, ஒரு சிறு ஆர்வம் தலைகாட்டியது.

அதே நேரம், மாடியில் இருந்து இறங்கி வந்த சத்யமூர்த்தி, தோட்டத்தில் நடக்கும் இந்த விசித்திரமான பயிற்சியைக் கவனித்தான்.

“ஹலோ மிஸ் சாவித்ரி! என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று சத்தமாகக் கேட்டுக்கொண்டே அருகில் வந்தான்.

சாவித்ரி எழுந்து நின்று, தன் புடவையைச் சரிசெய்து கொண்டு, “மிஸ்டர் சத்யமூர்த்தி, உங்க இன்டர்நேஷனல் ஸ்கூல் பெருமையை கொஞ்சம் தள்ளி வைங்க. இங்கிலீஷ்ல இருக்குற அக்ஷரங்களை விட, தமிழ்ல இருக்குற ‘அ’, ‘ஆ’, ‘இ’, ‘ஈ’ போன்ற உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் தான் நாக்கு மற்றும் தொண்டையின் நரம்புகளுக்குச் சரியான பயிற்சி கொடுக்கும். முக்கியமா, தமிழில் இருக்குற ‘ழ’கரம், ‘ள’கரம் உச்சரிக்கும் போதுதான் அவனோட பேச்சுத் திறன் தூண்டப்படும். அவனுக்குத் தேவை இப்போ மொழியின் ஆழம், உங்களோட பிசினஸ் பிராண்டிங் (Business branding) இல்லை!” என்றாள்.

சத்யமூர்த்தியின் முகம் சட்டெனச் சுருங்கிப் போனது. “நீங்க என்ன எனக்குப் பாடம் நடத்துறீங்களா?” என்று எகிறினான்.

“நான் உங்களுக்குப் பாடம் நடத்தலை, உங்க மகனோட நிலைமையை எடுத்துச் சொல்றேன். உங்களுக்குப் பணத்தை வச்சுப் பள்ளிக்கூடம் கட்டத் தான் தெரியும், ஆனா ஒரு குழந்தையை எப்படி வளர்க்கணும்னு தெரியாது,” என்று சாவித்ரி நெற்றியில் அடித்தார் போலக் கூறினாள்.

“ஸ்டாப் இட்!” என்று சத்யமூர்த்தி கத்தினான். அவனது கைகள் கோபத்தால் நடுங்கின. ஆனால், அவனால் அதற்கு மேல் அவளை எதிர்க்க முடியவில்லை. அவளது ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாக வந்து அவனது ஈகோவைத் தாக்கியது.

“ஒரு வாரம்!! இந்த ஒரு வாரத்தில் நீங்க என்ன பண்றீங்கன்னு பார்க்குறேன்,” எனச் சத்தமாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தான்.

“சத்யா! சாப்பிட்டுப் போடா,” என்று கலாவதி அழைக்க, அவரது பேச்சைக் கூடக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வேகமாகச் சென்றிருந்தான்.

விவான் போனின் பக்கம் செல்லப் போக, நோட்டுப் புத்தகங்களை எடுத்து வந்த சாவித்ரி, அவனுக்குக் காகிதத்தாலான கப்பலைச் செய்து கொடுத்து, அதை அழகுக்காக வைத்திருந்த அட்சய பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் விட்டுக் காட்டினாள். விவான் காகிதத்தை மடித்துக் கப்பல் செய்ய முயன்றான்; ஆனால் தெரியவில்லை.

“விவான், வாங்க நான் சொல்லித்தரேன்,” என அருகில் அமர வைத்து, காகிதத்தை மடித்துக் கப்பல் எவ்வாறு செய்வது எனச் சொல்லிக் கொடுத்தாள். விவான் தீவிரமாக அவளுடன் அமர்ந்து, ஒரு கப்பலைக் கஷ்டப்பட்டு ஒருவழியாகச் செய்து கற்றுக் கொண்டவன், இறுதியில் ஒன்றைச் செய்து அவளிடம் காட்டினான்.

“ஹே! ஹை! சூப்பர் விவான் குட்டி! வெரி குட் கண்ணா!! ஓடுங்க… உங்க ஆத்தாகிட்ட காட்டுங்க. கலா ஆத்தா உங்களுக்குச் சாக்லேட் தருவாங்க,” என உற்சாகப்படுத்தினாள்.

அதே சமயம் அங்கு வந்துகொண்டிருக்கும் கலாவதியைக் கண்டதும், வேகமாக அவரின் பக்கம் ஓடியவன் கையில் இருக்கும் கப்பலைக் காட்டினான். கலாவதிக்கு உற்சாகம் தாங்கவில்லை. கண்களில் இருந்து நீர் கொட்டத் தனது பேரனை அணைத்துக் கொண்டார்.

அதற்குள் அடுத்த விளையாட்டுக்குச் சாவித்ரி தயாராக இருந்தாள். வீட்டின் வெளியே தோட்டத்துப் பக்கம் மணல் குவியல் கொட்ட ஏற்பாடு செய்தவள், அங்கே விவானை அழைத்துச் சென்று வீடு கட்டி விளையாட வைத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக விவானை வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்தாள். அதேபோல, அவளே அவனை டிவி பார்க்க அனுமதித்தாள்; குழந்தைக்கு ஒரே நாளில் அனைத்தையும் நிறுத்துவது என்பது மிகுந்த ஆபத்தைக் கொடுக்கும், வேறு விதமான பாதிப்புகளையும் தோற்றுவிக்கும்.

சாவித்ரி காலை முதல் மாலை வரை விவானுடன் அருகிலேயே இருந்தாள். இப்பொழுது விவான் பார்த்துக் கொண்டிருக்கும் பொம்மலாட்டத்தில் விலங்குகள் வருகின்றன; திட்டமிட்டுத் தான் போட்டுக்காட்டினாள். நாளை அதற்கான விடியலை நோக்கித் தான் மூவர் பயணம் செய்யப் போகிறார்கள்.

சத்யமூர்த்தி வருவதற்கு முன்னால் விவான் தூங்கியிருந்தான்; அதேபோலச் சாவித்ரியும் அவளது அறையில் இருந்தாள். இன்று என்னவெல்லாம் நடந்தது என்பதை ராஜேஷ் சொல்லக் கேட்டவன், மீதி விஷயங்களை சிசிடிவி ஃபுட்டேஜ் (CCTV footage) ரெக்கார்டிங் கொண்டு பார்த்துத் தெரிந்து கொண்டான்.

ஒரே நாளில் விவான் கொஞ்சம் மாறியிருப்பது மனதுக்கு ஒரு சிறு நிம்மதியைக் கொடுத்தது. சாவித்ரியின் மீது கோபம் இருந்தாலும், அவளது செயல் சிறு நம்பிக்கையைக் கொடுத்தது. அதனால் அவன் எதையும் கண்டுகொள்ளாமல் இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றான்.

அடுத்த நாள் சாவித்ரி சில நிபந்தனைகளுடன் வந்து நின்றாள்.

“என்ன டீச்சர்? என்ன விஷயம்? எதுவும் வேணுமா?” எனச் சத்யமூர்த்தி கேட்க…

“ஆமா, நானும் விவானும் சாங்சுவரி (Sanctuary) போலாம்னு இருக்கோம். பொள்ளாச்சி போக ஏற்பாடு பண்ணுங்க,” என்றாள்.

“வாட்?” என அதிர்ந்தபடி சத்யமூர்த்தி நின்றான்.

 * தொடரும்.