அத்தியாயம் 7 :

தீரனிடமிருந்து வந்த அழைப்பை யோசனையுடன் பார்த்திருந்தார் ராஜ ராஜன்.

“மாப்பிள்ளை” என்றார் எடுத்த எடுப்பில். மொழி விஷயம் தெரிந்த பிறகு அவனிடம் பேசவே அப்படி ஒரு தயக்கம் அவருக்கு.

“சாரி சார்..! நான் அபீஷியலா கால் பண்ணியிருக்கேன்” என்றான்.

“சொல்லுங்க தீரன்” என்றார் ராஜனும் உடனடியாக.

“உங்க பொண்ணு அவங்க காதலிக்கிற பையனோட இங்க கமிஷனர் ஆபீஸ் வந்திருக்காங்க. அந்த பையனை நீங்க ஆட்கள் அனுப்பி மிரட்டியதாகவும்,உங்க பொண்ணை கல்யாணத்துக்கு கட்டாயப் படுத்துறதாகவும், அதனால அவங்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னும் எங்க கிட்ட பாதுகாப்பு கேட்டு வந்திருக்காங்க. கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவுல இருக்காங்க. நீங்க கமிஷனர் ஆபீஸ் வரை வரணும்” என்றான்

“என்ன சொல்றிங்க தீரன்?” என்று பதட்டத்தில் எழுந்தே விட்டார் ராஜன்.

“உண்மை தான் சார். விஷயம் இன்னும் வெளிய தெரியாது. முடிஞ்ச அளவுக்கு பிரச்சனை இல்லாம முடிக்க பாருங்க. அவங்க ரெண்டு பேரும் இப்போ என்னோட பாதுகாப்புல இருக்காங்க” என்றான்.

“நான் அப்படி எந்த ஆட்களையும் அனுப்பலை தீரன்” என்றார் ராஜ ராஜன்.

“புரியுது சார், ஆனா அது புரிய வேண்டிய உங்க பொண்ணுக்கு புரியலையே?” என்றான்.

ராஜனுக்கு பேச்சே வரவில்லை. நேர்மையுடன் இருப்பதால் எப்போதும் அவர் பேச்சில் ஒரு திமிர் தெரியும். என்னை யார் கேள்வி கேட்பா? என்ற அதிகாரம் இருக்கும். இப்போது அதெல்லாம் சட்டென்று மறைந்து விட்டிருந்தது. ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனுக்கு உரிய அனைத்து பதட்டமும் அவருக்கு வந்து விட்டிருந்தது.

“என் பொண்ணு புத்திசாலி, சொன்னா புரிஞ்சுக்குவான்னு நினைச்சேன் தீரன். இப்படி கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் வந்து என் மானத்தை வாங்குவான்னு தெரியாது?” என்றார்.

“நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நான் ஒரு விஷயம் சொல்லலாமா சார்?” என்றான் தீரன் பீடிகையுடன்.

“சொல்லுங்க தீரன்”

“எனக்கென்னமோ நீங்க உங்க பொண்ணுக்கு கொஞ்சம் கூட டைம் குடுக்கலையோன்னு தோணுது. நீங்க ஆள் அனுப்பலைன்னு சொல்றிங்க. ஆனா அவன் அனுப்புனிங்கன்னு சொல்றான். இந்த பக்கம் நீங்க பிரஷர் குடுக்குறிங்க. அந்த பக்கம் அவன் தன்னை மேரேஜ் பண்ணியே ஆகணும்னு பிரஷர் குடுக்குறான். சோ, பிரச்சனை முடிஞ்சா போதும்ன்ற மனநிலைக்கு உங்க பொண்ணு வந்திருக்க வாய்ப்பிருக்கு. அதனால தான் இப்படி ஒரு தப்பான முடிவை எடுத்திருக்காங்க” என்றான் நிதானமாய்.

“இப்போ நான் என்ன செய்யணும் தீரன்?” என்றார் இறங்கிய குரலில்.

“வந்து பேசிப் பாருங்க சார். அவங்க சம்மதம் இல்லாம எதுவும் நடக்காதுன்னு சொல்லுங்க. மேரேஜ்க்கு கட்டாயப்படுத்த மாட்டிங்கன்னு சொல்லுங்க. உங்க பொண்ணு சுதந்திரமா முடிவு எடுக்கலாம்னு சொல்லுங்க. இப்படி நிறைய விஷயம் இருக்கு சார்.  இதுக்குமேல நான் என்ன சொல்ல சார். அந்த பையனைப் பத்தி விசாரிக்க சொல்லியிருக்கேன். நல்ல பையனா இருந்தா நீங்களே சேர்த்து வைச்சிடுங்க” என்றான். ஏனோ கடைசி வார்த்தையை சொல்லும் போது மனம் மீண்டும் வலிக்கத் தான் செய்தது.

“நான் வர்றேன் தீரன். அதுவரைக்கும் விஷயம் வெளிய தெரியாம பார்த்துக்கோங்க” என்றார்.

“வெண்மொழியோட அம்மாவும் வரணும் சார்” என்றான்.

“சங்கரி எதுக்கு தீரன்? இந்த நேரத்துக்கு அமைச்சர் அவர் மனைவியோட எதுக்கு கமிஷனர் ஆபீஸ் வரணும்னு மீடியால போட்டு கிழிப்பாங்க” என்றார்.

ஒரு பெரு மூச்சு விட்டவன்,” பர்ஷனல் விஷயமா என்னைப் பார்க்க வந்ததா சொல்லிடுங்க சார். ” என்றவனின் குரலில், நிஜமாகவே ராஜனுக்கு ஏமாற்றம் ஆனது.

பேசி விட்டு போனை வைத்தவனுக்கு ஆயாசமாய் வந்தது.

‘வழக்கமா ரெண்டு பக்கமும் கூப்பிட்டு பேசி முடிச்சு, டக்குன்னு பிரச்சனையை முடிச்சு வைக்கிற இடத்துல இன்னைக்கு ஏன் நீ இவ்வளவு மெனக்கெடுற தீரன்?’ என்று நக்கலாய் கேட்ட மனதிற்கு பதில் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை.

அங்கே தனியறையில் அமர்ந்திருந்த தாரிக்கோ, வெண்மொழியின் கையைப் பிடிக்க, கோபத்தில் பட்டென்று தட்டி விட்டாள் மொழி.

“என் மேல கோபமா பேபி?” என்றவனை பார்க்கவே அவளுக்கு எரிச்சலாய் வந்தது.

“அதான் நீ நினைக்கிற மாதிரியே எல்லாம் நடக்குதே தாரிக். இப்போ என் டாடியை கமிஷனர் ஆபீஸ் வரை வர வச்சுட்டேன். போதுமா உனக்கு? இதுக்குத்தான ஆசைப்பட்ட?” என்றாள் கோபமாய்.

“அப்போ அவர் பண்ணது மட்டும் சரியா?” என்றான் அவனும்.

“என் டாடி அப்படி பண்ணியிருக்க வாய்ப்பில்லை. நீ தான் ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க” என்றவளை அதிர்ந்து பார்த்தான் தாரிக்.

“என்ன பேபி திடீர்ன்னு இப்படி பேசுற? நான் என்ன எனக்காகவா இவ்வளவு தூரம் போராடுறேன். நமக்காகத் தான?” என்றான்.

“பிளீஸ் தாரிக். இந்த கல்யாணம் உடனே நடக்கலைன்னா நீ சூசைட் பண்ணிப்பேன்னு சொன்ன. அதுக்காக மட்டும் தான் நான் வந்தேன். ஆனா அது இப்ப தப்போன்னு தோணுது” என்றவளின் பேச்சைக் கேட்டு கோபம் வந்து விட்டது தாரிக்கு.

“நான் உன்னை உண்மையா லவ் பன்றேன். அதான் நீ கிடைக்கலைன்னா செத்துடுவேன்னு சொன்னேன். ஆனா நீ என்னை டைம் பாஸ்க்கு லவ் பண்ணியிருக்க. அதான் இப்போ இப்படி பிகேவ் பண்ற? இதை நான் உன்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை மொழி” என்றான் கோபமாய்.

“அப்படியில்லை தாரிக்” என்று அவள் ஏதோ சொல்ல வர, அதற்குள் அதிதீரன் அங்கு வந்திருந்தான். அவனைக் கண்டதும் சட்டென்று அமைதியானாள் மொழி.

“உங்களைத் தேடி உங்க பிரண்ட்ஸ் வந்திருக்காங்க” என்றவன் திரும்பிப் பார்க்க, நந்திதாவும், டயானாவும் உடன் இரண்டு ஆண் நண்பர்களும் வந்திருந்தனர்.

டயானாவுக்கும், நந்திதாவுக்கும் தீரனை யூனிபார்மில் பார்த்தவுடன் பேச்சே வரவில்லை. அது அவர்களின் அதிர்ந்த தோற்றத்திலேயே தெரிந்தது.

“ஏன் ஷாக் அடிச்ச மாதிரி நிக்கிறிங்க?” என்றான் தீரன்.

“ஹேண்ட்சம் நீங்க ஏசிபின்னு சொல்லவே இல்லை” என்றாள் தடுமாறிய குரலில்.

“சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பிங்க?” என்றான் கேள்வியாய்.

“ப்ரோ நிஜமாவே உங்களை இங்க பார்ப்போம்னு நாங்க எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை” என்றாள் டயானா.

“அப்போ நீங்கல்லாம் காதலர்களை சேர்த்து வைக்க வந்த உண்மையான நண்பர்கள் இல்லையா?” என்றான் தீரன்.

“ஆமா ப்ரோ” என்றாள் டயானா.

“நல்லது, இருந்து நல்ல விதமா சேர்த்து வச்சுட்டு போங்க. மிஸ். வெண்மொழியோட வீட்டுக்கு இன்பார்ம் பண்ணியாச்சு. அவங்க வந்துட்டு இருக்காங்க” என்று அவன் சொல்ல, நண்பர்கள் அனைவரும் பீதியுடன் பார்த்தனர்.

“அங்கிள் இங்க வர்றாரா?” என்ற நந்திதாவுக்கு மூச்சு தான் வந்தது.பேச்சு வரவில்லை.

அதற்குள் தீரனின் அலைபேசி ஒலிக்க, உதய குமரன் அழைப்பில் வந்தான்.

“சொல்லுங்க குமரன்” என்று பேச ஆரம்பித்தவன் சற்று தள்ளி சென்று பேசிக் கொண்டிருக்க, பார்வை என்னவோ தாரிக் மீது தான். பத்து நிமிடங்களுக்கு மேல் பேசி விட்டு வைத்தவன், அவர்கள் அருகில் வந்து அவர்களை ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.

இரண்டு கைகளையும் பேண்ட் பாக்கெட்டினுள் விட்டபடி நிமிர்ந்து நின்று தன்னை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து தன்னையறியாமல் எச்சில் விழுங்கிக் கொண்டான் தாரிக்.

அதற்குள் தாரிக்கின் பெற்றோரும், ராஜராஜனும் வந்து விட்டிருந்தனர்.

தந்தையை அங்கு கண்டவள் சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள். ராஜ ராஜன் அவளைப் பார்த்த பார்வையில் தன்னைத் தானே வெறுத்துப் போனது அவளுக்கு.

“தாரிக் என்னடா பண்ணி வச்சிருக்க?” என்று அவனை பெற்றவர்களும் அவனை அடிக்க வர,

“எனக்கு மொழி தான் வேணும். நாங்க மேஜர். எங்க வாழ்க்கையை தேர்ந்தெடுக்குற எல்லா உரிமையும் எங்களுக்கு இருக்கு” என்றான்.

சங்கரியோ எதுவும் பேசாமல் மகள் அருகில் சென்றவர் அவள் கண்ணங்களில் மாறி மாறி அறைய, கண்கள் கலங்கியபடி அப்படியே நின்றாள் மொழி.

“என்ன பண்றிங்க?” என்ற தீரன் சங்கரியைத் தடுத்து, மொழியை தன் அருகில் இழுத்துக் கொண்டான். அவன் செய்கையில் அனைவரும் வாயைப் பிளக்க,

“விடுங்க தம்பி! இவளை வெட்டிப் போட்டா கூட என் ஆத்திரம் அடங்காது. அமைதியான பொண்ணு தம்பி. என் பொண்ணைப் போல உண்டான்னு கர்வத்தோட இருந்தேன். எல்லாத்தையும் கெடுத்துட்டு எப்படி நிக்கிறா பாருங்க” என்றார் சங்கரி ஆத்திரம் தாங்க முடியாமல். அப்போதும் ராஜ ராஜன் எதுவும் பேசவில்லை.

தாரிக்கின் பெற்றோரை அழைத்தவன்,

“இந்த பொண்ணு உங்க பையனோட வந்தா, நாளைக்கு அந்த பொண்ணுக்கு எந்த அசம்பாவிதம் நடந்தாலும் அதுக்கு நீங்க தான் பொறுப்புன்னு ஒரு லெட்டர் எழுதிக் குடுத்துட்டு போங்க. அப்பறம் நீங்களும் எந்த வகையிலும் அவங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்னு லெட்டர் எழுதிக் குடுத்துட்டு போங்க” என்றான் ராஜனிடமும்.

ராஜ ராஜன் எதுவும் பேசாமல் நிற்க,

“சாரி சார், உங்க நிலைமை புரியுது. ஆனா நான் இங்க என் கடமையை செய்யணும்” என்றவனை ஆதுரமாய் பார்த்திருந்தார் ராஜன்.

“இத்தனை வருஷம் ராஜன் குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருந்தது தீரன். இனி அது இல்லைன்னு நினைச்சுக்கிறேன். இப்படி ஒரு பொண்ணை நாங்க பெக்கவே இல்லைன்னு நினைச்சுக்கிறேன். கண்டிப்பா அவங்களை நான் எதுவும் பண்ண மாட்டேன். எதையும் நேருக்கு நேர் செஞ்சு தான் எங்களுக்குப் பழக்கம். நாளைப் பின்ன எங்களுக்குப் பிரச்சனை வந்துடக் கூடாது பாருங்க. அதனால, இனி எதுக்காகவும் எங்க வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன்னும், சொத்துல எந்த உரிமையும் கோரி வர மாட்டேன்னும் மொழியை ஒரு விடுதலைப் பத்திரம் எழுதித் தர சொல்லுங்க” என்ற ராஜ ராஜனை அதிர்ந்து பார்த்தான் தாரிக்.

“அடிச்சாரு பாரு சிக்சரு” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் விவேக்.

“உங்க அப்பா சொல்றதுக்கு உங்களுக்கு சம்மதமா மொழி” என்றான் தீரன்.

“ஒரு நிமிஷம் தீரன், நான் இன்னும் சொல்லி முடிக்கலை. கடைசியா அவளுக்கு ஒரு வாய்ப்பு தர்றேன். நடந்த வரைக்கும் போகட்டும். என் மகளா என் வீட்டுக்கு வர்றதா இருந்தா வரலாம். அவளை இனி எதுக்காகவும் கட்டாயப்படுத்த மாட்டோம். இல்லைன்னா எங்க பொண்ணு செத்துட்டான்னு நினைச்சிக்கிறோம்” என்றார்.

அவளுக்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை போல. ஏற்கனவே எதிர்பார்த்திருந்தாள் போலும். இருந்தாலும் அதை தந்தை வாயால் கேட்கும் போது மனம் வலித்தது. தாரிக்கைப் பார்க்க அவனோ பேயறைந்தவன் போல் இருந்தான்.

“சார் இது பெரிய முடிவு” என்றான் தீரன்.

“இல்லை தீரன். முடிக்கணும்னு முடிவானப் பிறகு எல்லாத்தையும் சரியா முடிச்சிடனும்” என்றார்.

“நீங்க அவங்களுக்கு கொஞ்சம் டைம் குடுங்க சார்” என்ற தீரன்,

“பேச வேண்டிய நேரத்துல பேசணும் மிஸ். வெண் மொழி! சில நேரங்கள்ல நீங்க எடுக்குற தவறான முடிவுகள் கூட உங்களை சரியான பாதையில் போற மாதிரி வழிகாட்டும். அதுக்காக வருத்தப்படாதிங்க, வழி தவறி போற பறவைகள் தான் புதிய காடுகளை கண்டு பிடிக்கும்னு ஒரு வாசகம் இருக்கு. அது உங்களுக்கு சரியா இருக்கும்னு நினைக்கிறேன். நாம செய்யிற செயல் நம்மைச் சுத்தி இருக்குறவங்களை பாதிக்காம பார்த்துக்கணும்” என்ற தீரனை இமைக்காமல் பார்த்தாள் வெண்மொழி.

“நாங்க உங்ககிட்ட பாதுகாப்பு கேட்டு வந்தோம். ஆனா நீங்க ரெண்டு வீட்டு ஆட்களையும் கூட்டி பிரச்சனையை பெரிசு படுத்த பார்க்குறிங்க. இப்போ மொழி அப்பா வாயாலையே அவளை வேண்டாம்னு சொல்ல வச்சுட்டிங்க. நிஜமாவே நீங்க எங்களுக்கு சப்போர்ட் பண்ணலை..பண்ற மாதிரி நடிக்கிறிங்க” என்றான் தாரிக் கோபமாக.

“ஏய்!!” என்று அவனை விரல் நீட்டி எச்சரித்தவன்,” இங்க ரூல்ஸ் என்னவோ அதைத் தான் நான் செய்ய முடியும். மினிஸ்டர் வீட்டுப் பொண்ணோ? யார் வீட்டுப் பொண்ணோ? யாரா இருந்தாலும் எனக்கு ஒன்னு தான். தேவையில்லாம பேசுனா பேச வாய் இருக்காது” என்றவனின் குரலில் அதிர்ந்து பின் வாங்கினான் தாரிக்.

“நீங்க எல்லாரும் கிளம்பலாம்” என்றான் அவன் நண்பர்களைப் பார்த்து.

“சார் அவங்க ரெண்டு பேரும்” என்று நந்திதா இழுக்க, தீரன் முறைத்த முறைப்பில் அப்படியே அடங்கினாள்.

“சம்பந்தப்பட்டவங்களைத் தவிர இங்க யாரும் இருக்கக் கூடாது. கான்ஸ்டபில் எல்லாரையும் கிளம்ப சொல்லுங்க” என்றான்.

“நாங்க எங்க பையன்கிட்ட தனியா பேசணும்” என்று தாரிக்கின் பெற்றோர் சொல்ல,

“தாராளமா பேசுங்க. பேசி சட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க. எங்களுக்கும் நிறைய வேலை இருக்கு” என்றான் தீரன் எரிச்சலுடன்.

மொழி பரிதவிப்புடன் சென்று ராஜனின் அருகில் நிற்க, அவரோ அவளை சட்டை செய்யவே இல்லை. சங்கரியோ அவள் முகத்தை பார்ப்பதே பாவம் என்பதைப் போல் இறுகிப் போய் நின்றார்.

“ம்மா” என்றாள் அவரின் கையைப் பிடித்து. சட்டென்று அவளை உதறியவர்,

“நாம கிளம்பலாங்க” என்றார் கணவரிடம்.

“அம்மா பிளீஸ்!” என்றவள் மன்றாட,

“உங்கப்பா உன்கிட்ட கண்டிப்பா நடந்துக்கும் போது நாமளும் அப்படி நடந்துக்கக் கூடாதுன்னு தான் உனக்கு ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து பண்ணேன் மொழி.. அது எங்களை எங்க வந்து நிறுத்தியிருக்கு பார்த்தியா? இதோ இவரைத் தான் உனக்கு பேசி முடிச்சிருந்தோம். இன்னைக்கு அவர் முன்னாடியே எங்களை இப்படி தலைகுனிய  வைப்பன்னு தெரியாம போய்டுச்சு. இதுக்கு மேல உன் தலையில நீயே மண்ணை அள்ளிப் போட்டுக்கிறதை யார் தடுக்க முடியும்?” என்றார் சங்கரி.

மொழி அதிர்ந்து தீரனைப் பார்க்க, அவனோ எதுவும் காதில் விழாதவன் போல் நின்றான்.

“நாங்க கிளம்புறோம் தீரன்” என்றார் ராஜன்.

“சார் அவசரப்படாதிங்க! எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவாங்க” என்றான்.

“ஒரு வார்த்தை போதும்கிற இடத்துல இன்னொரு வார்த்தையை வேஸ்ட் பண்ணக் கூடாது தீரன். எவ்வளவு பேசியும் பயனில்லைன்னு தெரியும் போது, வார்த்தைகளையாவது வேஸ்ட் பண்ணாம இருக்கலாமே” என்றவர் மொழியிடம் திரும்பி,

“நான் கேட்ட விடுதலைப் பத்திரத்தை எழுதிக் குடுத்தா, தீரன் கேட்ட மாதிரி நானும் எழுதித் தருவேன்” என்றவர் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

ஒரு நிமிடம் நின்றவர்,

“தீரன் இந்த விஷயம்” என்று இழுத்தார்.

“இப்போ வரைக்கும் கான்பிடன்ஷயல் தான் சார். ஆனா, இவங்க மூலமா விஷயம் தெரிய வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை” என்றான்.

“முழுசா நனைஞ்சதுக்கு அப்பறம் முக்காடு எதுக்கு தீரன். நாளைக்கு என்ன நடக்கனும்னு இருக்கோ நடக்கட்டும்” என்றபடி கிளம்பிவிட்டார்.