நள்ளிரவுக்கு மேல் மொழி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளின் உறக்கம் கலையாதவாறு எழுந்தவனின் கைகளை தூக்கத்திலும் விடாது பிடித்துக் கொண்டாள் வெண்மொழி. அவளின் கையை மெதுவாய் விலக்கி, கேர்டைன்ஸ் அனைத்தையும் முழுதாய் இழுத்து விட்டு கண்ணாடி அறையில் வெளிச்சம் புகாதவாறு செய்தவன், சத்தமின்றி வெளியே வந்தான். காரிருளில் மூழ்கியிருந்தது நகரம்.
“விவேக் வந்தாச்சா?” என்றான் மெதுவாய்.
“ஆல் செட் அதி. நீ சொன்ன ஸ்பாட்ல தான் இருக்கேன்” என்றான் விவேக். பின்பக்க சுவற்றின் வழியாக இறங்கி, பக்கத்து வீட்டில் எகிறிக் குதித்திருந்தான் தீரன்.
“காம்பவுண்ட் சுவர் கட்டச் சொன்னா கோட்டைச் சுவர் மாதிரி கட்டி வச்சிருக்கானுங்க. ஆத்திர அவசரத்துக்கு ஏறிக் குதிக்க முடியுதா?” என்று புலம்பியபடி குதித்த தீரனை முறைத்தான் விவேக்.
“நீ முறைக்கறன்னு தெரியுது மச்சான். ஆனா இருட்டுல முகம் சரியா தெரியலை” என்றான் தீரன்.என்ன சொன்னாலும் தீரன் கேட்க மாட்டான் என்று தெரிந்து போனது விவேக்கிற்கு.
“பாலோ பண்ணி அப்டேட் பண்ணிட்டே இருங்க” என்றவன் விவேக்கையும் அழைத்துக் கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்திருந்தான்.
மொழி சொன்னதைப் போல், வீட்டின் உள் அமைப்பு அத்தனை ரசனையுடன் கட்டப்பட்டிருந்தது. மங்கிய வெளிச்சத்தில் தீரனால் சரியாக எதையும் பார்க்க முடியவில்லை.
“உள்ள ஆள் இருக்குற மாதிரி தோணுது அதி” என்றான் விவேக்.
“இருக்குற மாதிரி என்ன? கண்டிப்பா இருக்காங்க?” என்றவன் யாருக்கும் சந்தேகம் வராதபடி, தனக்கு சந்தேகம் வந்த அறையை நோக்கி சென்றிருந்தான். அறைக்குள் யாருமில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு கதவை மெதுவாய் அடைத்தவன், திரைசீலைகளை இழுத்து விட்ட பிறகு அந்த அறையின் விளக்கை உயிர்பித்தான். தன் கையில் இருந்த ஜாமரை ஆன் செய்தவன், அறையை சுற்றி பார்வையிட, விவேக்கோ அதிர்ந்து போய் நின்றிருந்தான்.
“என்ன அதி இதெல்லாம்?” என்றான் விவேக்.
“அதைப்பத்தி பேச நேரமில்லை விவேக். இங்க இருக்க லேப்டாப், அன்ட் சிஸ்டமோட ஹார்ட் டிஸ்க் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணு” என்றவன் துரித கதியில் வேலையில் இறங்க, சற்று நேரத்தில் எந்த சத்தமுமின்றி வேலையை முடித்திருந்தனர்.
“இவ்வளவு பெரிய வீட்ல இந்த ரூம்ல தான் எல்லாம் இருக்கும்னு எப்படி கண்டு பிடிச்ச அதி? அதுவும் டோர் பாஸ்வேர்ட் முதற்கொண்டு” என்றான் விவேக் ஆச்சர்யமாய்.
“எவ்வளவு பெரிய விஷயமும் ஒரு சின்ன மைனர் விஷயத்தால மாட்டிக்கும்னு நமக்குத் தான் தெரியுமே விவேக். மொழி வீட்டு மொட்ட மாடியில இருந்து பார்த்தப்போ, எல்லா ரூமும் இருட்டா தான் இருந்தது. இதோ இந்த சின்ன லேசர் லைட் இந்த ரூம்ல மட்டும் விட்டு விட்டு எரிஞ்சது கண்ணாடி ஜன்னல்ல அழகா தெரிஞ்சது. சோ கண்டு பிடிக்கிறது ஒன்னும் அவ்வளவு கஷ்ட்டமில்லையே?” என்றவன்,
“பாஸ்வேர்ட்” என்று பெருமூச்சு விட்டவன், “ஒரு கெஸ் இருந்தது விவேக். சரியா கிளிக் ஆகிடுச்சு. புத்திசாலி எந்த நேரமும் புத்திசாலியாவேவா இருப்பான். அதையெல்லாம் அப்பறமா விளக்கி சொல்றேன்” என்றவன் விவேக்குடன் வெளியேற, ஏதோ ஒரு உந்துதலில் உள்ளே ஹால் போன்று நீண்டிருந்த அறையை எட்டிப் பார்த்தான் தீரன். பார்த்தவனின் கண்கள் விரிய, அதை மொபைலில் வீடியோவாக எடுத்துக் கொண்டவனுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது.
“கண்டிப்பா உள்ள சிசிடிவி வச்சிருப்பான் விவேக். இதை எப்படி மறந்தேன்” என்ற தீரன் தலையை தட்டிக் கொள்ள,
“நான் ஆல்ரெடி செக் பண்ணிட்டேன் அதி. இங்க கேபிள்ஸ் மூலமா டேரக்ட்டா ரெக்கார்டரோட இருக்குற சிசிடிவி இல்லை. சோ சிக்னல் ஜாமரை எடுத்துட்டு தான் வந்தேன்” என்றான் விவேக்.
“நல்ல வேலை பண்ண விவேக். இருந்தாலும் நாம இன்னும் கொஞ்சம் உஷாரா இருந்திருக்கணும்” என்றான் தீரன்.
“அப்படியே கேபிள்ஸ் மூலமா கனெக்ட் பண்ணியிருந்தாலும், நம்ம சிக்னல் ஜாமர் இருக்குறதால அவனால லைவ் பார்க்க முடியாது அதி. சோ நாளைக்கு அவன் ரெக்கார்டிங்க பார்த்தா என்ன? பார்க்கலைன்னா என்ன?” என்றான் விவேக்.
“அதுவும் கரெக்ட்டு தான்”
“நம்ம போர்ச வர சொல்லி இப்பவே இந்த இடத்தை பிளாக் பண்ணிடுவோம் அதி” என்றான் விவேக்.
“நோ விவேக்! அதுக்கு முன்ன நிறைய வேலை இருக்கு. முதல்ல இங்க இருந்து கிளம்பனும்” என்றவன் அந்த இடத்தை விட்டு காலி செய்திருந்தான்.
வெளியே சற்று தள்ளி நிறுத்தியிருந்த காருக்குள் அமர்ந்திருந்தனர் தீரனும் விவேக்கும்.
“நம்ம வேலை இவ்வளவு சுலபமா முடியும்னு நினைக்கலை அதி” என்றான் விவேக் யோசனையுடன்.
“ஏன் அப்படி சொல்ற விவேக்?”
“இல்லை, இவ்வளவு கிரிமினலா எல்லாத்தையும் பண்ணியிருக்கான். ஆனா நாம ஈசியா அவன் இடத்துக்கு போயிட்டு வந்த மாதிரி தோணுதே. எங்கயோ இடிக்குது அதி” என்றான் விவேக்.
“உனக்கு இப்படி தோணலைத் தான் ஆச்சர்யம்?” என்ற தீரன் சிரிக்க,
“ஏன் அப்படி சொல்ற அதி?”
“நாம எந்த இடத்துலையும் ஜித்தேஷை தாண்டி வேற யார் மேலயும் சந்தேகம் இருக்குற மாதிரி காட்டவே இல்லையே. ஜித்தேஷ்கிட்ட கூட நாம டீல் தான் பேசுனோம். அப்பறம், இதுக்குத்தான் நியூசை மீடியால கூட லீக் பண்ணாம சீக்ரெட்டா வச்சிருந்தோம். இருந்தாலும் அவன் அலெர்ட்டா தான் இருந்திருப்பான். பட் அப்படி இருக்க முடியாதபடி அவனை சுத்தல்ல விட்டிருக்கேன்” என்றான் தீரன்.
“புரியலை அதி”
“அவன் கார் இப்போ யாரை பாலோ பண்ணி போச்சுன்னு நினைக்குற? நானும் மொழியும் கார்ல இருக்கோம்ன்னு நினைச்சு தான் பாலோ பண்ணிட்டு போனான். என் காரை கான்ஸ்டபில் கமிஷனர் ஆபீஸ்க்குள்ள விடவும், வேற வழியில்லாம கமிஷனர் ஆபிசையே சுத்திட்டு இருக்கான். இங்க பாரு” என்று லேப்டாப் திரையைக் காட்ட,
“அட ஆமா. ஆனா ஏன் அதி உங்களை பாலோ பண்ணனும்?” என்றான் விவேக்.
“அன்னைக்கு ஈசிஆர் போகும் போது என்னை எதுக்கு பாலோ பண்ணானோ அதுக்குத் தான். ஒரு வேளை அன்னைக்கு பாலோ பண்ணாம இருந்திருந்தான்னா இந்த கேஸ் இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிருக்காது விவேக்” என்றான்.
“இந்த நாய் இன்னைக்கு எங்க பர்ஸ்ட் நைட்டை வீடியோ எடுக்க கேமரா செட் பண்ணி வச்சிருந்தான். அதாவது செட் பண்ணிட்டு மொழியை போன்ல மிரட்டியிருக்கான். நாளைக்கு பர்ஸ்ட் நைட் வீடியோவை டெலி காஸ்ட் பண்ணுவேன்னு” என்றான் தீரன்.
“அவன் நோக்கம் வீடியோ எடுக்குறதா? இல்லை பர்ஸ்ட் நைட்டை நிறுத்துறதா?” என்றான் விவேக்.
“ரெண்டுமே தான். நடந்தா வீடியோ லாபம். அதை வச்சு இன்னும் மொழியோட சேர்த்து என்னையும் பிளாக் மெயில் பண்ண நினைச்சிருக்கலாம்” என்றான்.
“அப்படி நினைக்கிறவன் மொழிக்கு எதுக்கு போன் பண்ணி மிரட்டணும்? அப்போ முன் கூட்டியே மிரட்டி ஏன் தடுக்கணும்’ என்றான் விவேக்.
“சிம்பிள்..! மொழி அவனுக்கு பிரஷ்ஷா வேணும்னு நினைச்சிருக்கலாம்” என்றான் தீரன் தூரத்தை வெறித்தபடி.
“அதி!!!” என்று அதிர்ந்த விவேக், “அப்போ எந்த வீடியோவை வச்சு மொழியை இத்தனை நாள் மிரட்டிட்டு இருந்தான்?” என்றான்.
ஒரு பெருமூச்சை விட்டவன்,”மொழியை அவன் இத்தனை நாள் மிரட்டுனது மொழி சம்பந்தப்பட்ட வீடியோவை வச்சு இல்லை. அவ அக்கா பிரகதி வீடியோவை வச்சு” என்றான் தீரன். கேட்டிருந்த விவேக்கின் உடல் இறுகியது.
“உனக்கு எப்படி தெரியும் அதி?” என்றான் விவேக்.
“எல்லாம் மொழியோட மொபைல்ல இருந்து எடுத்தது தான்” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
“அதுக்குத் தான ஹேக்கர்ஸ் டீம் வச்சிருக்கோம். முடிஞ்ச அளவு பாசிட்டிவா யோசிப்போம் விவேக். இவ்வளவு தூரம் வந்துட்டோம். எல்லாம் சரியா முடியும்னு நம்புவோம். இந்த லேப்டாப்பை எல்லாம் ஒப்பன் பண்ண முடியுமான்னு பார்க்கணும். முடியலைன்னா, அப்படியே கொளுத்திடு விவேக். வேற எவிடன்ஸ் வச்சு ப்ரூவ் பண்ணிக்கலாம். பட் எக்காரணத்தைக் கொண்டும் இதை கையில வச்சுட்டே இருக்கக் கூடாது” என்றான் தீரன்.
“இல்ல அதி. இதுல இருந்து நமக்கு ஏதாவது சிக்கலாம். சோ நான் இதை வீட்டுக்கு எடுத்துட்டு போறேன். காலையில நம்ம வீட்டுக்கு வந்து சேரு. என்ன பண்றதுன்னு அப்பறம் முடிவு பண்ணுவோம்” என்று விவேக் பேசிக் கொண்டிருக்கும் போதே தீரனின் அலைபேசி ஒலித்தது.
“எஸ்”
“சார்..! அந்த ஜித்தேஷ் இருக்குற லோக்கேஷன்ல அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சுட்டுகிட்டதா நியூஸ் வந்திருக்கு சார். நாங்க ஸ்பாட்டுகிட்ட போயிட்டு இருக்கோம் சார்” என்றார் அந்த இன்ஸ்பெக்டர்.
‘எஸ்பெக்ட்டேட்’ என்று மனதிற்குள் நினைத்தவன்,
“அந்த ரெண்டு பேரோட டெட்பாடியை எனக்கு போட்டோ எடுத்து அனுப்புங்க” என்று போனை வைத்தவன், அடுத்த சில நிமிடங்களில் வந்திருந்த போட்டோவைப் பார்க்க, விவேக் கண்களை விரித்தான்.
“எப்படி மச்சான்? நீ சொன்ன மாதிரியே இவனுக செத்திருக்கானுக?” என்றான்.
“கண்டிப்பா அவனுங்க சுட்டுகிட்டு செத்திருக்க வாய்ப்பில்லை விவேக். இது அவனோட வேலையா தான் இருக்கணும். ஆனா அவன் தான் கார்ல இருக்கானே?” என்று யோசித்தவன் அந்த காவலருக்கு போன் செய்ய,
“சார் அந்த கார் எங்கயும் நிற்கவே இல்ல சார். சுத்திட்டே தான் இருக்குது. நாங்க பாலோ பண்ணிட்டே தான் சார் இருக்கோம்” என்றார்.
“ஸ்மார்ட்” என்றான் தீரன்.
“என்னாச்சு அதி?”
“நீ சொன்ன மாதிரி அவனும் லேசுப்பட்டவன் இல்லை தான் விவேக். இப்போ நம்மளை அவன் செக் பண்றான். அதாவது நமக்கு டவுட் வந்திருக்கா இல்லையான்னு பார்க்குறான்” என்று சிரித்தவன், அந்த இன்ஸ்பெக்டருக்கு அழைக்க,
“சார்”
“நீங்க என்ன பண்றிங்க? அண்ணன் தம்பி தகராறு. தகராறு முத்தி ஒருத்தருக்கு ஒருத்தர் சுட்டுகிட்டாங்க அப்படின்னு மீடியாவுக்கு பேட்டி குடுத்துடுங்க. பாடியை மார்ச்சுவரி அனுப்பிடுங்க. அன்ட் அந்த கிரைம் ஸ்பாட் போட்டோஸ் ஒன்னு கூட மிஸ் ஆகக் கூடாது. எனக்கு அனுப்பி விடுங்க” என்றவன் போனை வைத்து விட்டு யோசனையுடன் இருக்க,
“நாம ஸ்பாட்டுக்கு போக வேண்டாமா அதி?” என்றான் விவேக்.
“நோ விவேக்! இது அவன் நமக்கு போட்ட டிராப். கொஞ்சம் பிசகுனாலும் டோட்டலா ஸ்பாயில்ட் ஆகிடும். சோ நாம ஸ்பாட்டுக்கு போகப் போறது இல்லை. வீட்டுக்குத் தான் போகப் போறோம்” என்று யோசனையுடன் தலையைப் பிடித்தவன், தன் காரை எடுத்துச் சென்ற காவலருக்கு போன் செய்து தன் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வர சொன்னான்.
“ஒரு விஷயம் மறந்துடாதிங்க. அவன் ரொம்ப பக்கத்துல பாலோ பண்ணக் கூடாது உங்களை” என்றான் மீண்டும் அறிவுறுத்தி.
“அதி”
“நீ வீட்டுக்கு கிளம்பு விவேக். நான் சொல்ற வரைக்கும் வீட்ல இருந்து நீ கிளம்ப வேண்டாம். நாளைக்கு வரைக்கும் அவனுக்கு நம்ம மேல துளி சந்தேகம் வரக் கூடாது. ஆள் எஸ்கேப் ஆக சான்ஸ் இருக்கு” என்றவன், விவேக்கை அனுப்பி விட்டு, மீண்டும் பின் பக்கம் வழியாக ஏறி மொட்டை மாடிக்கு சென்றிருந்தான். மாடியின் மறைவில் இருந்து அவன் கண்காணித்துக் கொண்டிருக்க, தீரனின் கார் மொழி வீட்டினுள் நுழைவதைப் பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தது அந்த கருப்பு நிற கார்.
‘கார்ல இருந்து வீட்டுக்குள்ள வர்றது நம்மதானான்னு செக் பண்ணுவானே?’ என்று எண்ணியவன் மொழியிடம் செல்ல அவளோ நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
அவளை ஒரு நிமிடம் நின்று ரசித்தவன், ‘பொண்டாட்டியை நிம்மதியா ரசிக்க விடுறானுங்களா?’ என்று பெருமூச்சு விட்டபடி, அவளை கைகளில் அள்ளிக் கொண்டான். மொழியோ தூக்கத்தில் அவனை கழுத்தோடு கட்டிக் கொள்ள,
‘இவ ஒருத்தி? மனுஷன் நிலைமை தெரியாம உசுப்பேத்தி விட்டுட்டு இருக்கா’ என்று புலம்பியபடி, அவளைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றிருந்தான். எப்படியும் அவன் கேமரா வழியாக தங்களை நோட்டம் விடுவான் என்று தெரியும். கார் நின்ற ஐந்தாவது நிமிடத்தில் தீரனும் மொழியுடன் அறைக்குள் சென்றிருந்தான்.
அவளை படுக்கையில் கிடத்தியவன், அசதியுடன் தானும் படுப்பதைப் போல் காட்டிவிட்டு மனைவியை கட்டிக் கொண்டு படுத்து விட்டான். அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து குப்புற படுத்திருந்தவனின் கண்கள் கொஞ்சமும் மூடவில்லை. அவனுக்கு ஒரு விஷயத்தில் மட்டும் நெருடல் இருந்தது. அதை தெளிவு படுத்திக் கொள்ளத்தான் முழித்துக் கொண்டிருந்தான். அதாவது எந்த கோணத்தில் பார்த்தாலும் அவன் முழித்திருப்பது தெரியாத படி.
அவள் கழுத்தில் முத்தமிட்டவன், “மொழிமா” என்று என்றான் வெளியே கேட்காத குரலில். அவளோ நல்ல உறக்கத்தில் இருக்க, மீண்டும் மீண்டும் கழுத்தில் முத்தமிட்டவனின் உணர்வில் கூசி சிலிர்த்தவள்,
“ம்ம்” என்றாள்.
“கண்ணைத் திறக்காத. நான் சொல்றதை மட்டும் கேளு” என்றான். அவனின் அந்த வார்த்தைகளில் உறக்கத்தில் இருந்தவளின் விழிகள் திறக்காமலே முழித்துக் கொண்டது.
“ம்ம்”
“இப்போ உனக்கு போன் வரும். எப்பவும் போல பயப்படுற மாதிரியே பேசிட்டு வைக்கணும். தூக்கத்துல எதையும் உளறி வைக்கக் கூடாது” என்றான். அவள் உடல் சட்டென்று நடுங்க ஆரம்பிக்க, எந்த அளவிற்கு பயந்திருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது.
“நான் பக்கத்துல தான்டி இருக்கேன்” என்றவன் அவள் கழுத்து வளைவில் ஆழப் புதைந்து கொண்டான்.