அத்தியாயம் 26 :

“போதும் நிறுத்துறிங்களா? என்னை என்னதான் பண்ண சொல்றிங்க? புதுப்பொண்ணு பர்ஸ்ட் நைட் கொண்டாடு. காலையில உன் பர்ஸ்ட் நைட் வீடியோவை உனக்கு அனுப்பி வைக்கிறேன்னு சொல்றான். இவ்வளவு தைரியமா சொல்றான்னா அப்போ அவன் ரூம்ல ஏதோ பண்ணி வச்சிருக்கான்னு தான அர்த்தம்?” என்றாள் கலங்கிய விழிகளுடன்.

“அதுல என்ன சந்தேகம்? ரூம்ல கேமரா செட் பண்ணி தான் இருக்கு. எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? நான் தான் ஏற்கனவே சொன்னேனே, அவன் ஒரு அடி முன்னாடி போனா, நான் ரெண்டடி முன்னாடி போயிருப்பேன்னு. அப்போ நீ விஷயத்தை என்கிட்ட தான சொல்லணும். நீ பயந்து பயந்து சாகுற வரைக்கும் தான் மிரட்டிப் பார்ப்பானுங்க” என்றான் தீரன்.

“நீங்க ஆம்பளை..! சொல்லிட்டு போய்டுவிங்க? சொசைட்டியை பேஸ் பண்றது நாங்க தான?” என்று நிறுத்தியவள்,

“நம்ம ரூம்ல கேமரா செட் பண்ணியிருக்கிறது உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் சந்தேகமாய்.

“ம்ம் அவனுக்கு முன்னாடியே நான் செட் பண்ணி வச்சிருக்கேன்” என்றவனை வேகமாய் தள்ளியவள் தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்து விட்டாள்.

“மொழி”

“அய்யோ போதும்! இன்னும் எத்தனை பேர் என்னென்னத்தை செட் பண்ணி வச்சிருக்கிங்க? என்னால நார்மலா இருக்க முடியலை, எங்க திரும்பினாலும் கேமரா இருக்குற மாதிரியே இருக்கு. யாரோ என்னை பார்த்துட்டு இருக்குற மாதிரியே இருக்கு. யாரோ என்னை பாலோ பண்ற மாதிரியே இருக்கு. இப்போ நீங்களும் உங்க பங்குக்கு கேமரா வச்சிருக்கேன்னு சொல்றிங்க? அவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கத்தியவளுக்கு கண்ணீரும் சேர்ந்து வர,

“அடிச்சேனா பல்லெல்லாம் பேந்துடும். அவனும் நானும் ஒன்னாடி? உனக்கே தெரியாம நடக்குற விஷயத்தை கண்காணிக்கவும், உன்னை செக்யூர் பன்றதுக்காகவும் தான் கேமரா செட் பண்ணேன். இல்ல கேமரா செட் பண்ணி பொண்ணுங்களை பார்க்குறது தான் என் வேலையா? என்ன வித்தியாசம்னு கேட்குற? அவன் கிரிமினல் நான் போலீஸ். அதுதான்டி வித்தியாசம்” என்றான் கோபமாய்.

“அப்போ கேமரா வச்ச அந்த கல்ப்ரிட் யாருன்னு உங்களுக்குத் தெரியும் தானே?” என்றாள் வேகமாய்.

“கேமரா செட் பண்ணாததுக்கு முன்னாடியே அந்த நாய் யாருன்னு எனக்குத் தெரியும்” என்றான் வெளியே பார்த்தபடி.

“யா..யாரு?” என்றாள் உடல் நடுங்க.

“சொல்ல முடியாது. நீ மட்டும் என்ன என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா இருக்க? நான் சொல்றதுக்கு? என்மேல நம்பிக்கை இல்லாத ஒருத்திகிட்ட எதையும் சொல்லனும்னு எனக்கு அவசியமில்லை” என்றான்.

“தீரா பிளீஸ்” என்றாள்.

“நோ” என்றவன் பேசாமல் படுத்துவிட்டான். அவளோ அவனையே பார்த்துக் கொண்டு நிற்க,

“இன்னைக்கு மட்டும் தான் எனக்கு ரெஸ்ட். நாளையில இருந்து தூங்க நேரம் கிடைக்குமான்னு தெரியலை. இந்த தூக்கத்துக்கே ஆயிரத்தெட்டு வேலை பார்த்துட்டு வந்திருக்கேன். தயவு செஞ்சு வந்து பேசாம படு” என்றான்.

“நீங்க தூங்குங்க. எனக்கு தூக்கம் வரும் போது தூங்கிக்கிறேன்” என்றாள் கோபமாய்.

“இங்க பார்! இந்த கோபத்தையெல்லாம் கொஞ்சமாவது யோசிக்கிறதுல காட்டனும்”

“எனக்கு அறிவில்லை தான். அப்பறம் ஏன் இந்த அறிவில்லாதவளை கட்டுனிங்க? எனக்குத் தான் உங்களுக்குப் பொண்டாட்டியா இருக்குறதுக்கே தகுதி இல்லையாச்சே” என்றவள் டிப்ரஷன் மோடுக்கு சென்று கொண்டிருந்தாள்.

“நான் எப்போடி அப்படி சொன்னேன்? தகுதி அது இதுன்னு பேசிட்டு இருக்க?” என்றவனுக்கு மண்டை காய்ந்தது.

“அன்பிட்டுன்னு நீங்க தான சொன்னிங்க?” என்றவளைப் பார்த்து பொறுமை இழந்தவன், இழுத்து தன்னருகில் கிடத்தி அவள் இதழ்களை சிறை செய்து கொண்டான். அவனின் அதிரடியில் அவள் பேச்சிழக்க, அந்த இடம் அப்படியே அமைதியாகிப் போனது.

தனக்குள் அடங்கியவளின் முகம் முழுவதும் முத்த ஊர்வலம் நடத்தியவன், மீண்டும் மீண்டும் இதழ்களில் இளைப்பாறி, மேற்கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தவனை அலைபேசி சத்தம்  நிகழ்விற்கு கொண்டு வந்தது.

“எஸ்? காரை செக் பண்ணிங்களா?” என்றான் எடுத்த எடுப்பில்.

“சார் போட்டோவை உங்களுக்கு அனுப்பியிருக்கோம் சார்” என்று தகவல் வர, வேகமாய் வாட்சப் சென்று பார்த்தவனின் இதழோரத்தில் ஒரு நக்கல் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

மீண்டும் அவர்களை அழைத்தவன்,

“அந்த கார் இன்னைக்கு நைட் எங்கெல்லாம் போகுதுன்னு எனக்கு அப்டேட் பண்ணிட்டே இருங்க. மப்டில பாலோ பண்ணுங்க. டவுட் வரக் கூடாது” என்றவனைக் கேள்வியாய் பார்த்திருந்தாள் மொழி.

திரும்பி அவளைப் பார்த்தவனுக்கு மனைவி இருந்த நிலையைக் கண்டதும் உணர்வுகள் பேயாட்டம் போடத் துவங்க,

“சாரி மொழி”  என்றவன் மறுபுறம் திரும்பி சிகை கோதி தன்னை கட்டுப் படுத்திக் கொள்ள, அப்போது தான் அவளுக்கும் தான் இருக்கும் நிலை உறைத்தது.

வேகமாய் தன் புடவையை சரி செய்தவள் அவனை முறைக்க,

“ஹேய் நிஜமா எனக்கு வேற எந்த இன்டென்ஷனும் இல்லை. ஜஸ்ட் உன் வாயை அடைக்கத்தான் அப்படி பண்ணேன்டி” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.

அவள் அவனையே பார்த்திருக்க,

“அதான் உன்னை சில் பண்ணிட்டேனே? திரும்பவும் முறைக்க ஆரம்பிச்சா எப்படி? மறுபடியும் சில் பண்ணுவோமா?” என்று கண் அடித்தவனைக் கண்டு முறைக்க முற்பட்டு முடியாமல் முகம் சிவந்திருந்தாள்.

அவளின் அருகில் அமர்ந்து அவளை தன் தோளோடு அணைத்துக்  கொண்டவன்,

“சாரிமா! வேற டென்ஷன். நீயும் என்கிட்ட எதுவும் சொல்லாம இருக்கவும் கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியலை” என்றான்.

அவன் கைவளைவில் இருந்தபடி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன்,”என்னடி?” என்றான் அவள் முகத்தை வருடியபடி. ஒரு நிமிடம் அவன் கண்களில் தெரிந்த காதலில் திகைத்தவள் எதுவும் பேசாமல் மேலும் அவன் மேல் வாகாய் சாய்ந்து கொண்டாள்.

“ஒருத்தவங்களுக்கு நாம கொடுக்குற பெரிய கிப்ட் என்னன்னு தெரியுமா ஏசிபி?” என்றாள் கேள்வியாய்.

“என்ன?”

“அது நகையோ, பொருளோ, பணமோ இல்லை. அவங்ககிட்ட எதையுமே தைரியமா சொல்லலாம், எந்த பிரச்சனையா இருந்தாலும் மனசு விட்டு பேசலாம்கிற சப்போர்ட் சிஸ்ட்டம் தான். அந்த செக்யூர்ட் பீல் குடுக்குறதுதான் இருக்குறதுலேயே பெரிய கிப்ட். அது உங்ககிட்ட இருந்து எனக்கு கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

சிலருக்குத் தான் நம்ம கண்ணீரோட வலியும், மௌனத்தோட மொழியும் புரியும்னு சொல்லுவாங்க. அதுவும் உங்களுக்குத் தான் புரிஞ்சிருக்கு. அப்படி ஒரு நம்பிக்கையான ரிலேஷன்ஷிப்பால தான் ஒரு அழகான லைப்பை குடுக்க முடியும். இது எல்லாத்தையும் நீங்க குடுத்திருக்கிங்க. இது எனக்கு புரியாம இல்லை. ஆனா எங்களுக்குன்னு சில உணர்வுகள் இருக்கு. என்னதான் நம்பிக்கை இருந்தாலும் அதையும் மீறிய ஒரு பயம். அதுமட்டுமில்லாம எனக்குள்ளயே நான் இன்னும் தெளிவாகலை ஏசிபி. அது தான் நிஜம்” என்றவளை,

“எமோஷனல் ஆகாதடி” என்றான் பரிவுடன்.

“இல்ல எனக்கு பேசியே ஆகணும். பர்ஸ்ட் டைம் எனக்கு மிரட்டல் கால் வந்தப்போ நீங்க சொன்ன மாதிரி நானும் ரொம்ப துள்ளி, என் அப்பா யாருன்னு தெரியுமா? அப்படி இப்படின்னு வீர வசனம் பேசுன பொண்ணு தான். ஆனா அடுத்த நிமிஷமே அந்த வீடியோவை எனக்கு அனுப்பி விட்டான். அதைப் பார்த்த எனக்கு சத்தியமா என்ன பண்றதுன்னு தெரியலை. யார்கிட்ட சொன்னாலும் உடனே லீக் பண்ணுவேன்னு மிரட்டுனான். என்னோட தைரியமெல்லாம் அங்கேயே காணாமப் போய்டுச்சு ஏசிபி. அந்த ஒரு வீடியோ மட்டும் இல்லை தீரா. தினம் தினம் அனுப்பினான். என்னால சத்தியமா முடியலை.

திடீர்ன்னு ஒரு நாள் தாரிக் லவ்வுக்கு ஓகே சொல்ல சொன்னான். எனக்கு நிஜமாவே புரியலை. இதை அவன்கிட்டயே தைரியமா கேட்டேன். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?

“நீ ஒருத்தனை லவ் பண்ணி, அவன் கூட ஓடிப் போய் கல்யாணம் பண்ணனும். அதை நினைச்சே உங்கப்பன் உக்கி உருகி உயிரை விடணும்னு சொன்னான். என் அப்பாவோட எதிரிங்க தான் இப்படி பண்றாங்களான்னு கூட யோசிச்சேன். எனக்கு எதுவுமே பிடிபடலை” என்று நிறுத்தியவளை தீரன் கேள்வியாய் பார்க்க,

“இதையெல்லாம் சொல்லித்தான் நான் தாரிக்கிட்ட ஓகே சொன்னேன். என் பிரண்ட் எனக்கு ஹெல்ப் பண்ணுவான்னு நினைச்சேன். தாரிக்கைப் பத்தி இப்போ தெரிஞ்சாலும் அப்போ எனக்குத் தெரியாதே. அவன் என் பிரண்ட். என்னோட நிலைமையை புரிஞ்சுக்குவான்னு சொல்லி, நடந்ததை அவன்கிட்ட சொன்னது தப்பு.

ஒரு கட்டத்துல நானே அதை அக்சப்ட் பண்ண ஆரம்பிச்சுட்டேன்னு நினைக்கிறேன். சரி நம்ம பிரண்ட்..! நம்ம கெரியருக்கு சப்போர்ட்டா இருப்பான்னு டயானாவும் நந்தியும் சொன்னதை நம்பி, அப்படி இப்படின்னு ஏதேதோ யோசிச்சு கிறுக்குத் தனம் பண்ணது அடுத்த தப்பு. பிரண்டுன்ற பேர்ல இருந்தவனோட சுயரூபம் தெரியாம, அவன் சொன்னதை நம்பி அப்பாவை சந்தேகப்பட்டு, அவனுக்கு பாவம் பார்த்து கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் வந்தது அடுத்த தப்பு. இப்படி கடந்த ஆறுமாசமா என் வாழ்க்கையில தப்பும், குழப்பமும் தான் நடந்திட்டு இருக்கு.

இந்த குழப்பத்துக்கெல்லாம் தீர்வு குடுத்ததே நீங்க தான் ஏசிபி. ஆனா சம்பந்தப்பட்டவன் யாரு? அவன் ஏன் என்னை இப்படி பண்ணனும்? அதுல அவனுக்கு என்ன லாபம்?  இப்படி நிறைய கேள்விகளோட சேர்த்து என மனசுல இன்னமும் பயம் இருக்கத்தான் செய்தது” என்றவளை தனக்குள் இறுக்கிக் கொண்டவன்,

“இந்த குழப்பத்தையெல்லாம் தள்ளி வச்சுட்டு நிதானமா யோசிச்சிருந்தா உனக்கே சில விஷயங்கள் தெரிஞ்சிருக்கும். நீ அப்படி எதுவும் யோசிக்கக் கூடாதுன்னு தான் அவன் உன்னை பதட்டத்துலையும் பயத்துலையுமே வச்சிருந்திருக்கான்” என்றான் தீரன்.

“என்ன சொல்றிங்க?”

“இந்த மொபைலை நான் உன் கையில எப்போ கொடுத்தேன்?” என்றான்.

“நேத்து நைட் என்னை வீட்ல டிராப் பண்ணும் போது குடுத்திங்க” என்றாள்.

“அது நைட் கிடையாது நடு சாமம்” என்று திருத்தியவன்,

“இன்னும் அடுத்த நாள் அந்த டைம் கூட ஆகலை. இந்த மொபைல் வாங்கிக் கொடுத்தது நானு. புது சிம் வாங்கினது நானு. எனக்குத் தெரிஞ்சு நீ யாருக்கும் நம்பர் இன்னும் குடுக்கலை. இன்னைக்கு வெளிய எங்கேயும் போகலை. இன்பேக்ட் மார்னிங் இருந்து என்கூடத்தான் இருக்க. அப்படி இருக்கும் போது இந்த நம்பர் எப்படி அவனுக்குத் தெரியும்?” என்றான் புருவத்தை உயர்த்தி.

“தீரா??” என்றவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிய,

“சொல்லுமா எப்படி தெரியும்? இன்னைக்கு மேரேஜ்னு சம்பந்தப்பட்ட ரெண்டு வீட்டைத் தவிர்த்து வெளிய யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும் போது நேத்து எப்படி தாரிக்கு தெரிஞ்சது? அவன் எப்படி உன்னைத் தேடி வந்தான்?அவனோட அண்ணன் எப்படி அவனை சரியா உங்க வீட்டுக்கு அனுப்பி வச்சான்?” என்றான் கேள்வியாய்.

“அப்போ.. நீங்க என்ன சொல்ல வர்றீங்க தீரா, அந்த கல்பிரிட் நமக்குள்ள தான் இருக்கானா?” என்றாள் உடல் நடுங்க.

“நமக்குள்ள இல்ல.. உங்க வீட்டுக்குள்ள தான் இருக்கான்” என்றான் தீரன்.

அதிர்ந்து அமர்ந்து விட்டாள் வெண்மொழி.

“என்னால நம்ப முடியலை தீரா. எப்படி இங்க இருந்துட்டு என்னை எதுக்கு இப்படி சித்திரவதை பண்ணனும்? எத்தனை நாள்? எத்தனை மாசம்? என்னை மனரீதியா எவ்வளவு டார்ச்சர் பண்ணியிருக்கான் தெரியுமா?” என்று பதட்டத்தில் நடுங்கியவளை,

“மொழி காம் டவுன்!” என்று அவன் ஆறுதல் படுத்த முயல, அவளால் முடியவில்லை.

“எப்படி தீரா? இப்படி பண்ண முடியும்? தாரிக் விஷயத்தைக் கூட விடுங்க. ஆனா அந்த வீடியோ? ஐயோ!” என்று முகத்தை மூடிக் கொண்டாள்.

“எமோஷ்னல் ஆகாத மொழி” என்று அவன் அழுத்திக் கூறவும் இயலாமையுடன் அவனைப் பார்த்தவள், முடியாது போக ஒரு கட்டத்தில் பாய்ந்து அவனை அணைத்துக் கொண்டாள். உடலோ நடுங்கிக் கொண்டிருக்க,

“போதும் என்கிட்ட எதுவும் சொல்லாதிங்க தீரா. என்னால தாங்கவே முடியலை” என்று கதறியவள் அப்படியே மயங்கியிருந்தாள்.

“ஷிட்” என்று டென்ஷன் ஆனவன்,

“மொழி..மொழி” என்று தண்ணீரைத் தெளித்து மயக்கத்தைப் போக்க,

“தண்ணியைக் குடி பர்ஸ்ட்” என்று அதட்டினான். அவள் முகம் ஏகத்திற்கும் அதிர்ந்திருந்தது.

“இதுக்குத்தான் நான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன். நீதான் வம்படியா கேட்ட?” என்றான் குற்றம் சாட்டும் பார்வையில்.

‘இதுக்கே மயங்கி? இன்னும் இவ தெரிஞ்சுக்க வேண்டியது எவ்வளவு இருக்கு?’ என்று எண்ணிக் கொண்டவனுக்கு ஆயாசமாய் வந்தது.

“அப்போ அன்னைக்கு எனக்கு ட்ரக்ஸ் இன்ஜெக்ட் பண்ணது?” என்றாள் நடுங்கும் குரலில்.

“உனக்கு நடந்த, உன்னைச் சுத்தி நடந்த எல்லா கெட்டதுக்கும் அவன் தான் காரணம். எவிடன்சோட உன் வீட்ல இருந்து அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போவேன். அப்போ பார்த்து தெரிஞ்சுக்க மொழி” என்றவனுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.

அவள் கலங்கியபடி அமர்ந்திருக்க, அவளை சகஜ நிலைக்கு கொண்டு வருவது தான் அவனுக்கு பிரதான வேலையாக இருந்தது.

“இப்ப இருந்து நான் சொல்ற மாதிரி தான் நீ இருக்கணும். சும்மா எப்பப் பார்த்தாலும் அழுது வடிஞ்சுட்டு இருந்தா மனுஷனுக்கு ஒரு நெகட்டிவ் பீல் வராதா? காலையில தான் மேரேஜ் முடிஞ்சிருக்கு ஒரு ரொமாண்டிக் பீலே இல்லை. நான் குடுத்து வச்சது அவ்வளவு தான்” என்று புலம்பினான்.

“இந்த விஷயம் நம்ம மேரேஜை பாதிக்கும்னு நினைச்சு தான் இன்னைக்கு அவசர அவசரமா பண்ணனும்னு சொன்னிங்களா ஏசிபி” என்றாள் சரியாக பாயிண்ட்டை பிடித்து.

“அதெப்படி மத்த விஷயத்துல மக்கா இருந்தாலும் புருஷன்னு வரும் போது இந்த பொண்ணுங்க எல்லாம் புத்திசாலியா மாறி ஜேம்ஸ்பாண்ட் மாதிரி கேள்வி கேட்குறிங்க?” என்றவனிடம் அவள் மீண்டும் அதையே கேட்டாள்.

“உண்மை தான் மொழிமா. நிலைமை எப்படி வேணும்னாலும் மாறலாம். சொல்ல முடியாது எங்க வீட்லயே கூட யோசிக்கலாம். இன்னும் நிறைய இஷ்யூஸ் இருக்கு. எதுக்காவும் உன்னை விடக் கூடாதுன்னு ஸ்ட்ராங்கா இருந்தேன். அதான் உடனே மேரேஜ். இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. எனக்கு அக்யூஸ்ட் பக்கத்துல இருக்கணும். அவன் என் கண் பார்வையில இருக்கணும். எல்லாத்தையும் யோசிச்சு தான் இப்படி பண்ணேன்” என்றான்.

“பொய் சொல்லாதிங்க? அக்யூஸ்ட் பக்கத்துல இருக்க, மேரேஜ் தான் பண்ணனும்னு அவசியம் இல்லையே. நீங்க நினைச்சா எதுவும் பண்ண முடியுமே? சோ பர்ஸ்ட் சொன்ன காரணம் தான் இல்லையா? விட்டுடவே கூடாதுன்ற அளவுக்கு அப்படி என்ன என்மேல அப்படி ஒரு அக்கறை?” என்றாள் அவன் கண் பார்த்து.

“நீ ரொம்ப இமேஜின் பண்ற மொழி” என்றவன் சமாளித்தான்.

“இது இமேஜின் இல்லை தீரா. ஷிப்ல பர்ஸ்ட் உங்க மேல பேட் இம்ப்ரசன் வந்தாலும், நீங்க என்னைக் காப்பாத்தினப்போ உங்க கண்ல ஒரு பரிதவிப்பு தெரிஞ்சது. வீட்ல பார்த்த பொண்ணுக்காக அந்த அளவுக்கு பரிதவிக்க முடியுமான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவேன். அப்பறம் தாரிக்கோடா உங்க ஆபீசிஸ்க்கு வந்து மேரேஜ் பண்ணி வைக்க சொன்னப்போ பார்த்திங்களே ஒரு பார்வை அதை ஜென்மத்துக்கும் மறக்க முடியாது. கோயம்புத்தூர் போகும் போது ஒரு பைக் என்னை இடிக்க வந்ததே, என்னை இழுத்து காப்பாத்தின உங்க உடம்பும் சேர்ந்து தான் நடுங்குச்சு. அப்பறம் ஹாஸ்பிட்டல்ல டாக்டர் தாரா கூட சொன்னாங்க. அப்போ இருந்த மனநிலையில எனக்குப் புரியலை. ஹோட்டல் விஷயம், அந்த இடத்துல வேற யார் இருந்திருந்தாலும் அன்னைக்கு என்ன நடந்திருக்கும்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை உங்களுக்கு.

நான் கழுத்தை அறுக்க ட்ரை பண்ணும் போது என்னைத் தடுத்து இறுக்கி கட்டிப் புடிச்சிங்களே, அன்னைக்குத் தான் உங்க அன்பையும் பதட்டத்தையும் முழுமையா உணர்ந்தேன். அப்பறம் இங்க, வீட்ல வச்சு உங்களையும் பிடிக்கலையான்னு கேட்டிங்களே அப்போ இன்னும் ஆழமா உணர்ந்தேன். அதுக்கு அப்பறம் நடந்த எல்லா விஷயத்துலையும் இந்த கேஸ் விஷயம்கிறதையும் தாண்டி ஒரு அக்கறை உங்களுக்கு என்மேல. இதெல்லாம் ஜஸ்ட் வீட்ல பார்த்த பொண்ணுன்றதால வந்துடுமா?” என்றாள் தெளிவான குரலில்.

“இப்போ எதுக்கு இதெல்லாம்? நான் எதைப் பத்தி பேசிட்டு இருக்கேன்? நீ எதைப் பத்தி பேசிட்டு இருக்க மொழி?” என்றான்.

“உங்களுக்கு ஏன் என் மேல இவ்வளவு அக்கறை?” என்றாள் மீண்டும் விடாமல்.

“பிகாஸ் ஐ லவ் யு டி, போதுமா?” என்றான் ஒரு வேகத்தில்.

“பத்தாது” என்றாள்.

“மொழி” என்றான் அதிர்ந்து.

“நிஜமா பத்தலை. இன்னொரு தடவை சொல்லுங்க ஏசிபி” என்றாள் அவன் முகம் நோக்கி.

“பிகாஸ் ஐ லவ் யு டி மக்கு” என்றனின் நெஞ்சில் தஞ்சம் அடைந்தவள்,

“தேங்க்ஸ்” என்றாள்.

“மேடம் எப்படி பீல் பண்றிங்க?” என்றான் சிரிப்புடன்.

“சொல்லத் தெரியலை. ஆனா மைண்டும் மனசும் கொஞ்சம் லேசா இருக்கு. இத்தனை நாள் அழுத்திட்டு இருந்த ஏதோ ஒன்னு என்னை விட்டுட்டு போன பீல்” என்றாள்.

“அப்போ தூங்கலாமா? தூக்கம் வருது மொழி” என்றான் பாவமாய்.

“உங்களுக்கு நடிக்க வரலை ஏசிபி. இப்போ என்னை தூங்க வச்சுட்டு நீங்க எங்கயோ எஸ்கேப் ஆகப் போறீங்க. அதுக்குத்தான் அப்ப இருந்து பாட்டுப் படிக்கிறிங்க. என்ன கரெக்ட்டா?” என்றாள்.

“உண்மை தான். வேலை இருக்குமா” என்றான்.

“அதை நாளைக்கு பார்த்துக்கோங்க ஏசிபி. இன்னைக்கு ஒரு நாள் இங்கயே இருங்களேன் பிளீஸ். ஏதோ நான் மட்டும் தனியா இருக்குற மாதிரி பீல் ஆகுது” என்றாள்.

“பொண்டாட்டி கேட்டு மாட்டேன்னு சொல்ல முடியுமா? எங்கயும் போகலை. பட் எனக்கு சில போன் கால் பேச வேண்டியிருக்கு. நான் பேசிட்டு வரேன்” என்றபடி அவள் கன்னத்தில் ஒரு அவசர முத்தத்தை வைத்து விட்டு  சென்றவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்மொழி.