ராஜ ராஜன் வீட்டு கேட்டின் முன் நின்று தீரனும் விவேக்கும் தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜனுக்கு ஏதோ புரியாத மொழி படம் பார்ப்பதை போன்று இருந்தது.
“இப்படி எல்லாத்தையும் அவசரமா பண்ணதுல எனக்கு விருப்பமே இல்லை ராஜா. அதனால ரிஷப்ஷன் கிராண்டா பண்ணிடனும். பிரகதி கல்யாணத்தை எப்படி பண்ணமோ அப்படி எந்த குறையும் இல்லாம பண்ணிடனும்” என்றார் தியாகராஜன்.
“சரிங்கப்பா..! அப்படியே பண்ணிடலாம்” என்ற ராஜனுக்கும் மனதிற்குள் உறுத்தலாகவே இருந்தது. ராஜன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த தீரன்,
“ஒரு நிமிஷம் விவேக்” என்றபடி அவருக்கு அருகில் சென்றவன்,
“என்கிட்ட எதுவும் சொல்லனுமா அங்கிள்?” என்றான் கேள்வியாய்.
“நான் கேட்டா மட்டும் சொல்லிடப் போறிங்களா தீரன்? கண்ணை மூடிட்டு நீங்க சொல்றதை எல்லாம் செய்யுறேன். எல்லாம் சரியா நடந்தா சரித்தான்” என்றார் ராஜன்.
பதில் ஏதும் பேசாமல் சிறு புன்னகையை மட்டும் பதிலாய் தந்தவன் மீண்டும் விவேக்கின் அருகில் செல்ல, சரியாக அந்த நேரத்திற்கு அழைத்திருந்தான் குமரன்.
“சொல்லுங்க குமரன்? விமலுக்கு ஆப்ரேஷன் முடிஞ்சதா? இப்போ எப்படி இருக்கு அவனுக்கு?” என்றான்.
“அவன் கண் முழிச்சு, நினைவு வந்த உடனே வாக்குமூலம் வாங்கணும் குமரன், மறந்துடாதிங்க. தேவைப்பட்டா கோர்ட்ல ப்ரோடியூஸ் பண்ற மாதிரி இருக்கும். எல்லாத்துக்கும் தயாரா இருங்க”என்றான்.
“கண்டிப்பா சார்” என்றபடி குமரன் போனை வைக்க, அவனை முறைத்தான் விவேக்.
“என்ன மச்சான்? எதுக்கு முறைக்கிற?”
“டிஐஜி இன்னைக்கு உனக்கு லீவ் குடுத்திருக்கார். இப்பவும் நீ கேஸப் பத்தித்தான் பேசிட்டு இருக்க? எனக்கே கோபம் வருது அதி” என்றான் விவேக்.
“லீவு ரெஸ்ட்டு எல்லாத்தையும் இந்த கேஸ முடிச்சுட்டு பார்த்துக்கலாம் விவேக். அந்த ஜித்தேஷ் இருக்குற இடத்தை ட்ராக் பண்ண சொன்னேனே என்னாச்சு?”
“அதெல்லாம் அவன் இருக்குற இடத்தை கண்டு பிடிச்சாச்சு அதி. உன்னோட ஆர்டருக்காக தான் வெயிட்டிங். சொன்ன உடனே தூக்கிடலாம்” என்றான்.
“பொறுமையா தூக்குவோம்! என்ன அவசரம்?” என்றான் எதையோ எதிர்பார்த்தவனாய்.
“அவன்தான் டீலுக்கு சரின்னு சொல்லிட்டானே? பேசாம அவன்கிட்ட இருக்குற ஹார்ட் காப்பிஸ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டு அவனை உள்ள தள்ளிடலாம். அவன் தான இப்போதைக்கு நமக்குத் தெரிஞ்ச மெயின் விக்டிம்”என்றான் விவேக்.
“வெயிட் பண்ணுவோம் விவேக். அவனைத் தூக்குறதுன்னா எப்பவோ தூக்கியிருக்க மாட்டோம்? இப்போதைக்கு நாம வச்சிருக்க இரையே அவன் தான். இரையைத் தேடி வர வேண்டியவன் வெளிய வரட்டும். அப்பத் தூக்குவோம்” என்றான் தீரன்.
“ஏன் அதி? அவனைத் தூக்கி விசாரிக்கிற விதத்துல விசாரிச்சா உண்மையை சொல்லிடப் போறான்?” என்ற விவேக்கை நிதானமாய் பார்த்தவன்,
“வீடியோஸ் இருக்குற ஹார்ட் காப்பி அவன்கிட்ட மட்டும் தான் இருக்குன்னு என்ன நிச்சயம் விவேக்? அந்த இன்னொருத்தன்கிட்டயும் இருக்கலாம். அப்படி அவன்கிட்ட இல்லைன்னா, அவன் இவனைப் போட்டுத் தள்ள வரலாம். அதான் சொல்றேன், வெயிட் பண்ணுவோம். யார் யாரை போட்டுத் தள்ளுறாங்கன்னு பார்த்துட்டு அப்பறம் இருக்குறவனை அள்ளிப் போட்டு வருவோம்” என்றான் தீரன்.
அசால்ட்டாய் அவன் பேசிய தோரணையில் அவனைப் பார்த்து சிரித்த விவேக்,
“நம்ம நிலைமையைப் பார்த்தியா மச்சான்? எல்லாரும் கல்யாணம் பண்ணா பால் பழம் சாப்பிட்டு, பொண்டாட்டிகிட்ட ஜல்சா பண்ணிட்டு திரிவானுங்க. நம்ம நேரம் இவனுங்களோட ஜல்சா பண்ணிட்டு திரியறோம்” என்றான் கிண்டலாய்.
“விடு மச்சான், நாம பார்க்காத ஜல்சாவா?” என்ற தீரன் விவேக்கை ஒரு மாதிரி பார்த்து வைக்க, ஒரு கட்டத்தில் இருவரும் பக்கென்று சிரித்திருந்தனர்.
“அப்போ நான் கிளம்புறேன். எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். விடியறதுக்குள்ள நீ சொன்ன எல்லாத்தையும் பெர்பெக்ட்டா முடிச்சு வைக்கிறேன். சோ டீப் திங்கிங்குள்ள போகாம இந்த நாளை என்ஜாய் பண்ணு அதி” என்று கிளம்பிய நண்பனைப் பார்த்தவனின் மனம் கனத்துப் போனது.
“மச்சான் எந்த வீட்டுக்கு போற?” என்றான் தீரன்.
திரும்பி சிரித்த விவேக், “நம்ம வீட்டுக்குத் தான்டா. நீ வர்ற வரைக்கும் வானதிம்மாவுக்கு நான் மட்டும் தான்டா புள்ளை. தயவு செஞ்சு எங்களைத் தொந்தரவு பண்ணாத” என்ற படி கிளம்பியிருந்தான்.
“ஏன் வெளியவே நிக்கிறிங்க? விவேக் அண்ணா உள்ள கூட வராம கிளம்பிட்டாங்க?” என்றாள் மொழி.
“மாமனார் வீட்டை சுத்திப் பாக்க வேண்டாமா? அதான் எது எது எங்க இருக்குன்னு பார்த்துட்டு இருக்கேன் மொழி” என்றவன், அங்கு காவலுக்கு நின்றிருந்தவர்களிடம் தலையசைத்து ஜாடை காட்டிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
அவளைத் தோளோடு அணைத்தபடி சென்றவன், வீட்டிற்குள் நுழையும் போது கையை இடுப்பு பிரதேசத்திற்கு கொண்டு செல்ல,
“என்ன பண்றிங்க? எல்லாரும் டின்னர் சாப்பிட உட்கார்ந்திருக்காங்க. உங்களை அதுக்குத் தான் கூப்பிட வந்தேன். தாத்தாவுக்கு இப்படி எல்லாம் இருந்தா பிடிக்காது” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் படியாக.
“அப்படியா?” என்று அவளை மார்க்கமாக பார்த்தவன்,
“இதென்னடி வம்பா இருக்கு? என் பொண்டாட்டி இடுப்பு நான் பிடிக்கிறேன். இதுல மத்தவங்களுக்கு என்ன கடுப்பு?” என்றவன் அவளை மேலும் இறுக்க,
பிரகதி நமட்டு சிரிப்பு சிரிக்க, சஞ்சய் ஒரு சிறு புன்னகையுடன் பார்த்திருந்தான்.
“தீரா ப்ளீஸ்” என்றவள் சங்கடத்தில் நெளிந்தாள். அவளின் முகத்தைக் கண்டவன் பட்டென்று அவளை விட்டு தள்ளியவனாய் வேறு எதுவும் பேசாமல் சென்று சாப்பிட அமர்ந்தான்.
அன்று மதியமே பெரிய விருந்தை ஏற்பாடு செய்திருந்தார் ராஜன். அதனால் இரவு உணவுக்கு சிம்பிளான டிபன் அயிட்டங்களை பார்த்து பார்த்து செய்திருந்தார் சங்கரி.
“எங்க வீட்ல எல்லாரும் டைம்க்கு சாப்பிடலைன்னா அப்பாவுக்கு கோபம் வந்திடும் மாப்பிள்ளை” என்றார் ஆனந்த ராஜன்.
“அது உங்க வீட்ல அங்கிள். எங்க வீட்ல அப்படி எந்த ரூலும் இல்லை. நான் பார்க்குற வேலையிலயும் டைம்க்கு சாப்பிடுறது எல்லாம் கனவுல கூட நினைச்சுப் பார்க்க முடியாது” என்றான் பட்டென்று.
“ஏங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” என்றார் வாசுகி.
“ஆமா ஆனந்து. அவர் நம்ம மாப்பிள்ளை. அவருக்கு எப்படி இஷ்ட்டமோ அப்படியே இருக்கட்டும்” என்றார் ராஜன்.
“நான் எதார்த்தமா தான் அண்ணா சொன்னேன். மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை” என்றார் ஆனந்த ராஜன்.
“இட்ஸ் ஓகே அங்கிள். நானும் ஜஸ்ட் பதில் தான் சொன்னேன்” என்றவன் அவனையே பார்த்துக் கொண்டிருந்த மொழியைப் பார்த்தவன்,
“சாப்பிடுமா” என்றான்.
“பசிக்கலை. மதியம் சாப்பிட்டதே ஒரு மாதிரி இருக்கு” என்றாள் முனுமுனுப்பாய்.
“மாமா! தட்டுல வச்சதை மிச்சம் வைக்காம சாப்பிட்டா மட்டும் தான் இந்த இடத்தை விட்டு போக முடியும். இவ இப்படி சாப்பிட முடியாம முழிக்கிறதும், தாத்தா முறைக்கிறதும் டெய்லி நடக்குறது தான்” என்றான் விஹான் மெதுவாக.
“ஹோ” என்றவன் அவள் தட்டில் இருந்ததையும் சேர்த்து சாப்பிட்டு முடித்திருக்க, மொழியும், விஹானும் ‘ஆ’வென்று பார்த்திருந்தனர்.
“என்ன? அதான் தட்டு காலி ஆகிடுச்சே? ஹேண்ட் வாஷ் பண்ற ஐடியா இல்லையா?” என்று அவளையும் இழுத்துக் கொண்டு செல்ல, பார்த்தும் பார்க்காததும் போல் இருந்த சங்கரிக்கு நிறைந்து போனது.
மீண்டும் வெளியே சென்ற தீரன் அரைமணி நேரம் கழித்து தான் வீட்டிற்குள் வந்தான். வந்தவனின் முகத்தில் அப்படி ஒரு கோபம். வெளியே சென்றவன் மொழி அறையில் இருந்த கேமராவைப் பார்க்க, கேமரா இருப்பது தெரியாமலேயே இன்னொரு கேமரா அறையில் பொருத்தப்படுவதை பார்த்தவனுக்குள் அப்படி ஒரு சீற்றம். பொறுமையுடன் அடக்கிக் கொண்டான்.
“தூங்கப் போகலாமா மொழி?” என்றவனைப் பார்த்து பிரகதி வந்த சிரிப்பை அடக்க,
“அதான் அடக்க முடியலையே ஏன் சிரமப் படுறிங்க? சிரிச்சிடுங்க” என்றான் தீரன்.
“அதெல்லாம் வேண்டாம்ங்க. வா மொழி” என்றவன் அவளையும் அழைத்துக் கொண்டே சென்று விட்டான்.
“ஏங்க? அம்மா சித்தி எல்லாம் இருக்காங்க. என்ன நினைக்க மாட்டாங்க?” என்றாள் மொழி வேகமாய்.
“எல்லாருக்கும் எல்லாம் தெரியும். இந்த நைன்டிஸ் சம்பிரதாயமெல்லாம் ஒரு மண்ணும் தேவையில்லை” என்றான்.
“என்னாச்சு ஏன் டென்ஷனா இருக்கீங்க?” என்றாள் மொழி புரியாமல்.
“அப்படியா இல்லையே?” என்று சட்டென்று டென்ஷனை மறைத்துக் கொண்டவன்,
“எனக்கென்னமோ உன்னைப் பார்த்தா தான் டென்ஷனா இருக்குற மாதிரி தெரியுது” என்றான் அவளின் கலைந்திருந்த முடியை சரி செய்தபடி.
“அதெல்லாம் ஒன்னுமில்லையே?” என்றாள் முகத்தை வேறு பக்கம் திருப்பியபடி.
“அப்போ உனக்கு டென்ஷன் இல்ல. சோ ஷெல் வி ஸ்டார்ட்” என்றான் அவள் கண் நோக்கி.
“அது மேரேஜ் டக்குன்னு முடிஞ்சிருச்சு. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நான் ரொம்ப கன்பியூஸ்டா இருக்கேன்” என்றாள் அவன் முகம் பார்க்காமல்.
“இது தான் காரணமா?” என்றான் மீண்டும் அவளையே பார்த்தபடி.
“ம்ம்”
“திரும்பவும் கேட்கிறேன் மொழி. இது தான் காரணமா? வீட்டுக்கு வந்ததுல இருந்து உன் முகமே சரியில்லை. நான் பக்கத்துல வந்தாலே பதறி விலகிப் போற? எல்லாத்துக்கும் அப்போ இது தான் காரணம் இல்லையா?” என்றவனிடத்தில் அதற்கு மேல் முடியாமல் அவன் நெஞ்சில் முகம் புதைத்தவள்,
“பிளீஸ் ஏசிபி. இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதிங்க. என்னால எதுவும் சொல்ல முடியாது” என்றவளை அறைவதற்காக கையை ஓங்கியவன் அவளின் மிரண்ட முகம் கண்டு பல்லைக் கடித்தபடி கையை இறக்கிக் கொண்டான்.
அவன் கோபத்தில் அவள் அதிர்ந்து நிற்க,
“யாரோ உன்னை முட்டாளாக்க ட்ரைப் பண்றாங்கன்னு நினைச்சேன். ஆனா உண்மை அது இல்லை, நீ நிஜமாவே முட்டாள் தான்” என்றவன் கோபமாய் அறையை விட்டு வெளியேறி விட்டான்.
மொட்டை மாடியின் காற்றில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவனுக்கு ஆத்திரமும் கோபமும் கட்டுக்கடங்காமல் வந்தது. சம்பந்தபட்ட ஆளை இப்போதே தூக்கிப் போட்டு சங்கோடு மிதிக்கும் வேகம் அவனுக்குள். இடமும் காலமும் கருதி தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தான்.
அவள் என்ன செய்கிறாள்? என்று மீண்டும் தன் அலைபேசி வழியாக பார்க்க, தீரன் நினைத்தது சரியே என்பதைப் போல், போன் பேசிக் கொண்டிருந்தவள், போனை மெத்தையில் தூக்கி எறிந்து விட்டு உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்.
கோபம் வந்தாலும் அவள் அழுவது கண்டு அவனுக்கு மனதிற்குள் பிசைந்தது.
“இவளை இப்படியே விட்டா விடிய விடிய அழுதுட்டு இருப்பா” என்று எண்ணியவன், வேகமாய் அறைக்கு செல்ல, அவன் வருவதைப் பார்த்தவள் கண்களை வேகமாய் துடைத்துக் கொண்டாள்.
அமைதியாய் சென்று ஒன்றிரண்டாய் துடைத்திருந்த கண்ணீரை நன்றாகத் துடைத்து விட்டவன்,
“வா வெளிய போயிட்டு வரலாம்” என்றான்.
“இல்ல நான் வரலை” என்றாள்.
“வான்னு சொன்னேன் மொழி” என்றான் அழுத்தமாக. வேறு வழியின்றி அவன் பின்னே செல்ல, சரியாக அந்த நேரத்திற்கு கரண்ட் கட்டானது. அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தவன் அணைத்த வாக்கிலேயே மொட்டை மாடிக்கு வேகமாய் அழைத்து சென்றிருந்தான். மேலே சென்றவுடன் அவன் போனிலிருந்து ஒரு ரிங் விட, வெளியே நின்றிருந்த அவனின் காரை எடுத்துக் கொண்டு அந்த காவலர் வெளியேறுவதற்கும் கரண்ட் வருவதற்கும் சரியாக இருந்தது. கரண்ட் வரும் போது கார் சரியாக கேட்டை விட்டு வெளியே சென்றிருந்தது. மொட்டை மாடியின் கண்ணாடி அறைக்குள் அவளை விட்டவன், வேகமாய் வந்து பக்கத்து வீட்டைப் பார்க்க, அவன் எண்ணியதைப் போல் அந்த கருப்பு நிற கார் வெளியேறி சென்றது.
தனக்குள் சிரித்துக் கொண்டவன், அந்த காவலருக்கு அழைப்பு விடுத்தான்.
“சார்”
“கார் இடையில எங்கயும் நிக்கக் கூடாது. நேரா கமிஷனர் ஆபீஸ்க்குள்ள நிறுத்திட்டு நீங்க உள்ள போய்டுங்க” என்றான் தீரன்.
“ஓகே சார்”.
டிராபிக் கண்ட்ரோல் ரூமிற்கு அழைத்தவன்,
“உங்களுக்கு ஒரு கார் நம்பரும் போட்டோவும் சென்ட் பண்ணியிருக்கேன். உள்ள இருக்குறது யாருன்னு எனக்குத் தெரியனும். நார்மலா வெஹிக்கிள் செக்கப் பண்ற மாதிரி பண்ணுங்க. நீங்க நோட் பண்ற விஷயம் எக்காரணம் கொண்டும் கார்ல இருக்குற பெர்சனுக்கு தெரியக் கூடாது” என்று உத்தரவு பிறப்பித்தவன்,பக்கத்து வீட்டைப் பார்க்க அவனுக்கு உள்ளே ஆட்கள் இருப்பதைப் போன்று உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டே இருந்தது.
“ஒரு நாள் ஒரே நாள்” என்று தனக்குத் தானே கூறி ஆசுவாசப் படுத்திக் கொண்டவன் மொட்டை மாடிக் கதவை வெளிப்பக்கமாய் பூட்டிவிட்டு , இப்போது மொழியிடம் சென்றான்.
அவனைப் பார்த்தவள் “இங்க எப்படி கட்டில் எல்லாம்?” என்றாள் புரியாமல்.
“இதென்ன ஆரிய வித்தையா? காலைல எல்லாரும் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல இருந்தப்போ நான் தான் போட சொன்னேன். உன்னோட ரூம்ல இருக்க முடியும்னு தோணலை. எனக்கு இங்க தான் சரியா இருக்கும்” என்று ஒட்டாமல் பேசியவனைக் கண்டு அவளுக்கு என்னவோ போல் ஆனது.
“கோபமா இருக்கிங்களா?” என்றாள் அமைதியான குரலில்.
“எனக்கென்ன கோபம்? நீ யார் முதல்ல எனக்கு? உன் மேல கோபப்பட எனக்கென்ன உரிமை இருக்கு?” என்றவன் தன் அலைபேசியில் எதையோ தீவிரமாய் பார்த்துக் கொண்டிருக்க,
“என்ன பார்க்குறிங்க?” என்றாள்.
“படம் பார்க்குறேன், நீயும் பார்க்குறியா? செம்ம வீடியோ, பிக்சர் குவாலிட்டி எல்லாம் பக்கா. ஆனா இதை எனக்கு ஏன் அனுப்பியிருக்காங்கன்னு தான் தெரியலை” என்றான்.
“என்ன வீடியோ?” என்று பதட்டத்துடன் எழுந்தவளைக் கண்டு பல்லைக் கடித்தவன் அதை அவளிடம் காட்ட, அது ஒரு அனிமேஷன் வீடியோ. அதைப் பார்த்தவள் நிம்மதி மூச்சு விட, சிரித்துக் கொண்டான் தீரன்.
“நேத்து அவ்வளவு தூரம் பேசுனேனே மொழி, நிஜமா உனக்கு என் மேல நம்பிக்கை வரலையா? இல்லை, இவன்னால என்ன செஞ்சுட முடியும்னு நினைக்கிறியா?” என்றவனை எச்சில் விழுங்க பார்த்தவள்,
“தீரா” என்றாள் கலங்கிய கண்களுடன்.
“நேத்து என்ன சொன்னேன்? யார் உன்னை மிரட்டுனாலும் என்ன பதில் சொல்ல சொன்னேன்?” என்றான் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு.
“நா..நான் யார்கிட்ட?” என்று முடிக்கும் முன் அவளின் முகத்தை அழுந்த பற்றியிருந்தான்.
“ஸ்ஸ்..வலிக்குது” என்று அவள் வலியில் முகத்தை சுளிக்கவும் விட்டவன், வேறு புறம் திரும்பிக் கொண்டான்.
“ஒருவேளை நிஜமாவே உனக்கு அந்த தாரிக்கை பிடிச்சிருந்ததோ? நான் தான் கம்பல் பண்ணி மேரேஜ் பண்ணிட்டேனோ?” என்றவனைப் பார்த்து அதிர்ந்தவள்,
“இப்படி பேசாதிங்க பிளீஸ்” என்றாள்.
“இல்ல உனக்குத்தான் சுயமாவும் யோசிக்கத் தெரியாது. நல்லது சொன்னா எடுத்துக்கவும் தெரியாது. நான் இருக்கேன்னு சொன்னாலும் நம்பிக்கையும் வராது. மொத்தத்துல போலீஸ்காரனுக்கு பொண்டாட்டியா இருக்குறதுக்கு நீ சரியான ஆள் இல்லை. நீ டோட்டல் அன்பிட்” என்றான் வார்த்தைகளை கடித்துத் துப்பியபடி.