அத்தியாயம் 17 :

“சொல்லுமா என்னையும் பிடிக்கலையா?” என்ற தீரன் அவளை அழுத்தமாய் பார்க்க..மொழி பதில் எதுவும் சொல்லாமல் அதே திகைத்த பார்வையுடன் இருந்தாள். அவளின் அமைதி கண்டு தாரிக்குக்கு தான் பதட்டம் அதிகரித்தது.

“மொழி ஏன் சைலண்ட்டா இருக்க? இந்த ஏசிபி சரியில்லை. இவரை நம்பாத. இவர் நம்மளைப் பிரிக்கப் பார்க்குறார்” என்ற தாரிக் வேகமாய் அவள் அருகில் சென்று அவள் கைகளைப் பற்ற முயற்சி செய்ய, தீரன் முறைத்த முறைப்பில் பின்னால் சென்றிருந்தான்.

அவர்களிடம் திரும்பிய தீரன் “நீங்க மூணு பேரும் இப்போ கிளம்பலாம். உங்களுக்கு மொழியை பார்க்கணும்னா இனி தாராளமா வந்து பார்க்கலாம். யாரும் எந்த தடையும் சொல்ல மாட்டாங்க” என்றவனின் பார்வையில், ’இப்போது நீங்கள் கிளம்பித்தான் ஆக வேண்டும்’ என்ற அழுத்தம் இருந்தது.

“எங்களை கிளம்ப சொல்ல நீங்க யாருங்க? மொழிகிட்ட புருஷன் அது இதுன்னு உளறிகிட்டு இருக்கீங்க? நாங்க லவ் பண்றோம்னு தெரியும் தான உங்களுக்கு? அப்படி தெரிஞ்சும் இப்படி பேச உங்களுக்கு வெட்கமா இல்ல?” என்றான் தாரிக்.

“தாரிக்! பிரச்சனை வேண்டாம் வா போகலாம்” என்றாள் டயானா.

“நோ! நான் வர மாட்டேன். மொழி இல்லாம நான் எப்படி?” என்ற தாரிக்,

“இப்பவே என் கூட வந்துடு பேபி. எனக்கு நடக்குறது எதுவும் சரியா படலை. நாம உடனே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்” என்றான் தாரிக் தீவிர முக பாவனையுடன்.

ராஜ ராஜன் ஏதோ கோபமாய் சொல்ல வர, தீரனின் பார்வையில் அமைதியானார்.

“உங்க தெய்வீகக் காதல் உண்மைன்னா எதுக்கு இவ்வளவு பதட்டம் தாரிக்?” என்ற தீரனின் கேள்வியில் தாரிக்கின் முகத்தில் சிறு அதிர்வலைகள் வந்து போக, அதை சரியாக பிடித்துக் கொண்டான் தீரன்.

“தாரிக் இப்போ சூழ்நிலை சரியில்லை. வொயிட்டி எப்படி இருக்கான்னு பார்த்த தான? இந்த நேரத்துல இந்த பேச்சு ரொம்ப முக்கியமா? இன்னொரு நாள் பேசிக்கலாம், வா” என்ற நந்திதா,

“இனி இப்படி முட்டாள் தனமா பண்ணாத மொழி. நாங்க இன்னொரு நாள் வரோம்” என்றபடி டயானாவையும் தாரிக்கையும் வலுக்கட்டாயமாய் அழைத்துச் சென்று விட்டாள். செல்லும் அவர்களின் மேல் தீரனின் பார்வை கூர்மையாய் படிந்து விலகியது.

“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்கிறதா உத்தேசம்?” என்றான் மொழியிடம். தலையை குனிந்து கொண்டவள் நிமிரவே இல்லை.

“இஞ்சுரி ஏதாவது ஆகியிருக்கா? டாக்டர்கிட்ட போகலாமா?” என்றான், அவள் தலையை நிமிர்த்தி கழுத்தை ஆராய்ந்தபடி.

“வேண்டாம்” என்பதைப் போல் அவள் தலை ஆட,

“ஏதாவது சாப்பிடுறியா மொழி?” என்றான் மீண்டும் பரிவுடன்.

அதற்கும் “வேண்டாம்” என்று அவள் தலையை ஆட்ட, அவளின் பெற்றோரை பார்வையால் அழைத்தபடி வெளியே சென்றான்.

“உங்களுக்கு வீணா சிரமத்தைக் குடுக்குறோம் தீரன்” என்றான் ராஜன்.

“ஆன்ட்டி சிலீப்பிங் பில்ஸ் இருந்தா எடுத்துட்டு ஒரு கிளாஸ் பால் எடுத்துட்டு வாங்க” என்று சங்கரியை அனுப்பியவன்,

“சிரமம் அது இதுன்னு பேசாதிங்க அங்கிள். இந்த கேஸ்ல நான் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு. இல்லைன்னா அவளை கூட இருந்தே பார்த்துப்பேன்” என்று சிகையை கோதியபடி யோசித்தவன்,

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைண்ணா மொழியை நான் ஏன் வீட்டுக்கு அழைச்சுட்டு போகட்டுமா?” என்றான் தயங்கியபடி.

“தாராளமா கூட்டிட்டு போங்க தீரன். ஆனா கல்யாணத்தை முடிச்சுட்டு கூட்டிட்டு போங்க. ஏற்கனவே உங்க ரெண்டு பேரையும் பேசித் தள்ளுறாங்க. இதுல என் பொண்ணை இப்படி உங்ககூட அனுப்பி வச்சா அதை மட்டும் சரியாவா பேசுவாங்க. அது முறையாவும் இருக்காது தீரன்” என்றார் ராஜன்.

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது அங்கிள். பட் இப்போ மொழியோட மனநிலை தான் நமக்கு முக்கியம். உடனே கல்யாணம்னா மொழி எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியலை” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே சங்கரி பாலுடன் வர,

“நான் பார்த்துக்கிறேன் ஆன்ட்டி” என்றபடி சென்றவனைத் தான் அனைவரும் ஆச்சர்யமாய் பார்த்திருந்தனர்.

“பரவாயில்ல டாடி..! நான் கூட ஆளைப் பார்த்த உடனே கொஞ்சம் ரப் அன்ட் டப்பா இருப்பாருன்னு நினைச்சேன். ஆனா மொழின்னா மட்டும் உடனே முகம் மாறிடுது ஏசிபிக்கு” என்றாள் பிரகதி.

தீரன் நீட்டிய மாத்திரையைப் பார்த்தவள் அவனை கேள்வியாய் பார்க்க,

“ஸ்லீப்பிங் டேப்லட். போட்டுட்டு இந்த பாலைக் குடி” என்றான்.

“இல்ல வேண்டாம்” என்றாள்.

“நான் வேணுமான்னு கேட்கலை. குடின்னு சொன்னேன்” என்றான் சற்று குரலை உயர்த்தி. அந்த குரலில் நடுக்கம் கொண்டவள் வேகமாய் மாத்திரையைப் போட்டு விட்டு பாலைக் குடித்து முடித்திருக்க,

“அப்படியே படுத்துக்கோ மொழி. நல்லா தூங்கி எழுந்தா சரியாகிடும்” என்றான்.

காரணமே இல்லாமால் சிலரின் அக்கறை மனதிற்கு ஒரு இதத்தை தருமே அப்படி இருந்தது தீரனின் அக்கறை அவளுக்கு.  அவனின் வார்த்தைகள் தந்த இதத்தில் அவளுக்கு மீண்டும் கண்கள் கலங்கி கண்ணீர் வர,

“என்னம்மா?” என்று முகம் பற்றியவனின் கைகளைப் பிடித்துக் கொண்டவள்,

“அந்த வீடியோ..நா..நான்  அந்த மாதிரி தப்பான பொண்ணெல்லாம் இல்ல. அன்னைக்கு..அன்னைக்கு” என்று சொல்ல வந்தவளை நிறுத்தியவன்,

“உன்னை தப்பான பொண்ணுன்னு யார் சொன்னது?” என்றான் அழுத்தமாய்.

“அதான் எல்லாரும் சொல்றாங்களே?”

“எல்லாரும் சொல்றதால ஒருத்தவங்க தப்பானவங்க ஆகிட முடியாது. எல்லாரும் சொல்றதால ஒருத்தவங்கள சரியானவங்கன்னும் சொல்லிட முடியாது. தப்பு சரி எல்லாம் அவங்கவங்க பார்க்குற விதத்துல இருக்கு. நீ இப்படித்தான் இருக்கணும் இப்படி இருக்கக் கூடாதுன்னு இன்னொருத்தர் வந்து சொல்லக் கூடாது. நீ எப்படி இருக்கணும்னு நீ தான் டிசைட் பண்ணனும் மொழி. உன்னைச் சுத்தி உனக்கே தெரியாம நடக்குற நிறைய விஷயங்களை உரம் போட்டு வளர்க்குறதே நீ தான். அது என்னன்னு யோசி மொழி” என்றவன்,

“அதை அப்பறம் நிதானமா யோசிக்கலாம். ஆனா இப்போ தூங்கு” என்றான் தீரன்.

“எ..என்னால தூங்க முடியலை” என்றாள் பரிதாபமாய்.

“ஏன்?”

“தெரியலை, தூங்கவே பயமா இருக்கு” என்றவளை பாவமாய் பார்த்திருந்தான் தீரன்.

“இனி எந்த பயமும் வேண்டாம். நான் பார்த்துக்குறேன். எதைப் பத்தியும் யோசிக்காம தூங்குமா” என்றவன் அவள் தலையை வருடி விட, அவன் அருகாமை தந்த இதமோ, மாத்திரையின் வீரியமோ ஏதோ ஒன்றின் காரணமாக சற்று நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

ஏசியை மிதமான குளிரில் வைத்து அவளுக்கு போர்த்தி விட்டவன், தொங்கிக் கொண்டிருந்த துப்பாட்டவை கழற்ற எண்ணி அதை கழற்றிக் கொண்டிருக்க,  அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த போட்டோவில் ஏதோ ஒன்று வித்தியாசமாய் பட்டது அவனுக்கு. சட்டென்று அதிலிருந்து பார்வையை மாற்றிக் கொண்டவனுக்குள் யோசனை. திரைச்சீலைகளை இழுத்துவிட்டு அறையை இருட்டாக்கியவன், யோசனையுடன் நின்றான்.

வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவன் மீண்டும் அரைமணி நேரத்தில் திரும்பி வந்திருந்தான். ராஜன் அவனை யோசனையுடன் பார்க்க,

“வந்து சொல்றேன் அங்கிள்” என்றவன் மீண்டும் மொழியின் அறைக்குள் நுழைந்து கொண்டான்.அவன் வரும் வரை ராஜன் மொழியின் அறை வாயிலைத் தான் பார்த்திருந்தார்.

வெளியே வந்தவனிடம்,

“என்னாச்சு தீரன்? ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்றார் ராஜன் புரியாமல்.

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மேரேஜ்க்கு ஏற்பாடு பாண்ணுங்க அங்கிள். நான் அம்மா அப்பாவை உங்ககிட்ட பேச சொல்றேன்” என்றான்.

“தீரன் நிஜமாத்தான் சொல்றிங்களா?” என்றவர் அவனின் கையைப் பிடித்துக் கொண்டார்.

“நான் தான் மொழிகிட்டையே சொன்னேன் தான அங்கிள். அவளை யாருக்காகவும் விட்டுக் குடுக்க முடியும்னு தோணலை. அவளுக்காகவே கூட. நீங்க சொன்ன மாதிரியே முறைப்படியே அவளை என் வீட்டுக்கு அழைச்சுட்டு போறேன்.”  என்றான்.

“சரிங்க தீரன்” என்றார் ராஜன்.

“அப்பறம் அங்கிள் இன்னொரு விஷயம் அங்கிள். அவளோட பிரண்ட்ஸ் மறுபடியும் பார்க்க வந்தா வீட்ல யாரும் எதுவும் சொல்லாதிங்க. அலோவ் பண்ணுங்க. கேட்ல செக்யூரிட்டியை மட்டும் டைட் பண்ணி வைங்க” என்றான்.

“மறுபடியும் அவங்களை ஏன் விட சொல்றிங்க தீரன்? பட்டது போதாதா?” என்றார்.

“காரணமாத்தான் அங்கிள். கொஞ்சம் மொழியை நார்மலா இருக்க விடுங்க. எங்க மேரேஜ் வரைக்குமாவது அவளை அவளா இருக்க விடுங்க. ரப்பரை ரொம்ப இழுத்தா அது அறுந்து இழுத்தவங்க கையைத் தான் பதம் பார்க்கும் அங்கிள். உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை” என்றான்.

“சரிங்க தீரன்” என்றார் ராஜன்.

“வீட்டைச் சுத்தி கேமரா இருக்கு தான அங்கிள்”

“இருக்கு தீரன்”

“லாஸ்ட் ஒன் மந்த் புட்டேஜ் எனக்கு வேணும்” என்றான்.

“எடுத்துக் குடுக்க சொல்றேன் தீரன்” என்றார் ராஜன்.

“ஓகே அப்போ நான் கிளம்புறேன் அங்கிள்” என்றவனுக்கு ஏனோ அவளை  விட்டு கிளம்பவே மனமில்லை. ஆனால் செய்ய வேண்டிய வேலைகள் வரிசை கட்டிக் காத்துக் கொண்டிருக்க அதற்கு மேல் அங்கு இருக்கவும் முடியவில்லை.

தீரன் அப்படி சொல்லிவிட்டு சென்ற பிறகு உடனே நரேந்திரன்-வானதியிடம் கலந்து பேசியிருந்தார் ராஜ ராஜன். தீரனுக்கு வேலையே வைக்கவில்லை அவர்.

வானதிக்குத் தான் மனதிற்குள் சற்று நெருடலாய் இருந்தது. அதையும் நரேந்திரன் பேசியே சரிகட்டி விட்டார்.

தன் அறையில் அமர்ந்து ராஜ ராஜன் வீட்டு சிசிடிவி  பதிவுகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் தீரன் . சந்தேகப்படும் படியாக அவன் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. யோசனையுடன் தலையைப் பிடித்தவன், மீண்டும் ஒரு முறை அந்த பதிவுகளைப் பார்க்க, அவனுக்குத் தேவையான எதுவும் இல்லை.

“என்னாச்சு அதி?” என்றான் விவேக்.

“ராஜன் சார் வீட்டு புட்டேஜ்லயும் நமக்கு எதுவும் சிக்கலை விவேக்” என்றான் தீரன் ஒரு வித எரிச்சலுடன்.

“இப்படி எல்லாமே முட்டு சந்தா இருந்தா எப்படி? இப்போ நமக்கு இருக்குற ஒரே ஆப்ஷன் மொழி மட்டும் தான் அதி. அவங்களை விசாரிச்சு அவங்க வாயைத் திறந்தா நமக்கு ஏதாவது க்ளூ கிடைக்க வாய்ப்பிருக்கு” என்றான் விவேக்.

“அது எனக்கும் புரியுது விவேக். ஆனா நாம விசாரிக்கிற நிலமையில மொழி இல்லை. மொழியை விசாரிக்கிறதுக்கு முன்னாடி ஏதாவது க்ளூ கிடைச்சா கேஸ் ஈசியா முடிஞ்சிடும்” என்ற தீரன்,

“மொழி படிச்ச காலேஜ்ல விசாரிக்க சொன்னேனே என்னாச்சு? சிசிடிவி புட்டேஜ் எதுவும் கிடைச்சுதா?” என்றான் விவேக்கிடம்.

“சிக்ஸ் மந்த் ஆகிட்டதால புட்டேஜ் கிடைக்கலை அதி. ஆனா,விசாரிச்ச வரைக்கும் வெண்மொழியைப் பத்தி யாரும் தப்பா கூட ஒரு வார்த்தை சொல்லலை. இன்பேக்ட் அவங்க ரொம்ப அமைதி பிளஸ் போல்டான பொண்ணுன்னு சொல்றாங்க. ஆனா அதைத்தான் நம்ப முடியலை” என்றான் விவேக்.

“ஏன்?”

“ஒரு தைரியமான பொண்ணு எப்படி எதுக்கெடுத்தாலும் சூசைட் அட்டேர்ன் பண்ற பொண்ணா இருக்க முடியும் அதி? அவங்க போல்டா மூவ் பண்ணியிருந்தா இந்நேரம் இந்த கேஸ் இவ்வளவு தூரம் வந்திருக்காது” என்றான் விவேக்.

“போல்டான பொண்ணு ஏன் போல்டா எந்த ஸ்டெப்பும் எடுக்கலை?” என்றான் தீரன் தனக்குத் தானே கேட்டுக் கொள்பவனைப் போல்.

“பெருசா என்ன இருக்க போகுது அதி? ஒன்னு எந்த ஸ்டெப்பும் எடுக்க விடாம யாரோ பிளாக் பண்ணியிருக்கணும். இல்ல நிஜமாவே அவங்க பயப்படுற மாதிரி ஏதாவது நடந்திருக்கணும். அப்படியும் இல்லையா அவங்களுக்கு இந்த கேஸ்ல தொடர்பு இருக்கணும். எப்படி பார்த்தாலும் இந்த மூணு பாய்ண்ட்டுகுள்ள தான் ரீசன் இருக்கனும்” என்ற விவேக்கை சில நிமிடங்கள் பார்த்திருந்த தீரன்,

“எஸ்” என்று டேபிளைத் தட்டி எழுந்தான்.

“என்னாச்சு அதி?” என்று விவேக் புரியாமல் கேட்க,

“மூணு பாயிண்ட்டுகுள்ள இல்ல விவேக். இந்த மூணுமே இருக்கு. மொழி பயப்படுற ஒரு விஷயத்தை வச்சு அவளை எந்த ஸ்டெப்பும் எடுக்க விடாம பிளாக் பண்ணி இந்த கேஸ்ல அவளுக்கே தெரியாம ஏன் இன்வால்வ் பண்ணியிருக்க கூடாது?” என்றான் தீரன்.

“பாயிண்ட்டு தான் அதி. கண்டிப்பா அப்படி நடந்திருக்க சான்சஸ் இருக்கு” என்றான் விவேக்.

“அந்த ஷிப்ல கலெக்ட் பண்ண சிசிடிவி புட்டேஜை செக் பண்ணா நமக்கு மறுபடியும் ஏதாவது க்ளூ கிடைக்க சான்ஸ் இருக்கு. அந்த மேஜிக் ஷோ நடக்கும் போது அவகிட்ட மிஸ் பிகேவ் பண்ணதா மொழிக்கும் எனக்கும் வாக்குவாதம் ஆச்சு. நான் ஏதோ என் மேல இருக்குற கோபத்துல அப்படி பேசுறான்னு நினைச்சேன் விவேக். நான் எதுவும் பண்ணலை. ஆனா மொழி அந்த அளவுக்கு ஆத்திரப்பட்டு பேசுனா. அப்போ அங்க என்னமோ நடந்திருக்கு” என்றான் அதிரன்.

“பெர்பெக்ட் அதி” என்ற விவேக் வேகமாய் மற்றொரு பென்டிரைவை சொருகி, அதிலிருந்த வீடியோக்களை திரையிட, தீரன் கண்களில் ஒரு கூர்மையுடன் ஒவ்வொன்றாய் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

மேஜிக் ஷோ புட்டேஜில் சற்று மங்கிய வெளிச்சமாய் இருந்ததால் சட்டென்று எதுவும் புலப்படவில்லை அவனுக்கு. மொழியும் தாரிக்கும் வருவது தெரிந்தது. அவர்கள் அமர்வதும் தெரிந்தது. கூட்டமாக இருந்ததால் ஒரு தெளிவுடன் இல்லை.

தீரன் டென்ஷன் ஆக,

“எப்படியும் கேமரா புட்டேஜ் தெளிவா இருக்காதுன்னு தெரியும் அதி. சோ அந்த ஷோவோட வீடியோ ரெக்கார்டிங்கயும் சேர்த்து வாங்கிட்டேன்” என்ற விவேக்கை மெச்சுதலாய் பார்த்துக் கொண்டான் தீரன்.

இப்போது விவேக் ஓட விட்ட வீடியோவில் வெளிச்சம் குறைவாக இருந்தாலும் அனைத்தும் தெளிவாக தெரிந்தது.

“என்ன அதி? இதுலயும் பெருசா ஒன்னும் சிக்கலையே? வெண்மொழி கோபமா எழுந்து உன்னை சத்தம் போடுறதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு தெளிவா இல்லையே?” என்றான் விவேக்.

“இதென்ன மொழியை போக்கஸ் பண்ண வீடியோவா விவேக்? மொழி சம்மந்தப்பட்டது மட்டும் இருக்க. இது ஷோ வீடியோ. ஷோவோட கேமரா போக்கஸ் எல்லா இடத்துக்கும் மாறி மாறி தான் வரும். அதெல்லாம் தெளிவா தெரிஞ்ச ஒருத்தன் தான் அப்படி பண்ணியிருக்கணும்” என்றான் தீரன்.

“கரெக்ட் அதி. ஆனா ஏன் அந்த தாரிக் பண்ணியிருக்கக் கூடாது?” என்றான் விவேக் கேட்க,

“அவன் அந்த அளவுக்கு வொர்த் இல்லை விவேக். பட் அவன் மேலயும் ஒரு கண்ணு இருக்கணும் நமக்கு. இந்த வீடியோல பார், லவ் பண்ற பொண்ணு பக்கத்துல உட்கார்ந்து எப்படி தூங்குறான்னு?” என்று வீடியோவை பாஸ் செய்து ஜூம் செய்து காட்டிக் கொண்டிருந்த தீரனின் கண்கள் எதேச்சையாய் பின்னால் பார்க்க, பார்த்தவனின் கண்கள் விரிந்தது. அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை.

“என்னாச்சு அதி?” என்றான் விவேக் புரியாமல். தீரன் தான் கண்டதை பார்வையால் அவனுக்கு சுட்டிக் காட்ட, இப்போது அதிர்வது விவேக்கின் முறையாகிப் போனது.

“ஆனா அதி? நாம இந்த கோணத்துல ஏன் யோசிக்கவே இல்லை?” என்றான் விவேக்.

“சிலர் கேஸோட பிரேம்குள்ளையே வரலைன்னு அர்த்தம் விவேக்” என்றான் தீரன்.

“ஆனா இந்த ஒரு விஷயத்தை வச்சு மட்டும் நாம டிசைட் பண்ண முடியாதுல்ல அதி?” என்றான் விவேக்.

கைகளை பின்னால் கட்டிக் கொண்டு சேரில் சாய்ந்தவன்,

“துடுப்பே இல்லாம தத்தளிச்சுகிட்டு இருந்த நமக்கு  கப்பலே வந்து சிக்கியிருக்கு விவேக். ஆடு புலி ஆட்டமே இப்ப தான் ஸ்டார்ட் ஆகுது மச்சான். இது மட்டும் உண்மையா இருந்தா அவன் வாழ்க்கையில தீரனை மாதிரி ஒரு மோசமானவனைப் பார்த்திருக்கவே மாட்டான்” என்ற தீரனின் கண்களில் அப்படி ஒரு ஆத்திரம்.