பதினைந்து மணி நேர உறக்கத்திற்கு பின்னர், இமைகளைப் பிரிக்க முடியாமல் பிரித்தாள் வெண் மொழி. அறையில் இருந்த மங்கிய ஒளியில் முதலில் அவளுக்கு எதுவும் புலப்படவில்லை. அவள் மூளையும் மனதும் சில நிமிடங்களுக்கு வெற்றிடமாய் இருந்தது. தலையைத் தனியாக கழற்றி வைக்கும் அளவுக்கு பாரமாய் இருக்க, உடலெல்லாம் அடித்துப் போட்டதை போல் அப்படி ஒரு சோர்வு. தன்னிலை உணரவே அவளுக்கு நிமிடங்கள் பிடித்தது. கை கால்களை அசைக்கவே முடியவில்லை.
யாருடைய பரந்த முதுகிலோ முகத்தை அழுத்தி இடையோடு அந்த ஜீவனை இறுக அணைத்தபடி தான் படுத்திருப்பது அப்போது தான் அவளுக்கு சற்று புரியத் தொடங்கியது. சட்டென்று அந்த ஜீவனிடமிருந்து விலகி, ஒரு பதட்டத்துடனும் பயத்துடனும் அவள் பார்த்திருக்க.. மறுபுறம் திரும்பி தூங்கிக் கொண்டிருந்தவன்,அவ்வளவு நேரம் அழுத்திய பாரம் சற்று நீங்கியதைப் போல் இப்போது தூக்கத்திலேயே சற்று மல்லாந்து படுத்தான் தீரன்.
தன்னருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தீரனைக் கண்டவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, தான் அவனை அணைத்துப் படுத்திருந்த விதம் அவளை மேலும் நிலைகுலைய செய்தது.
சூழ்நிலையின் தாக்கத்தை உணரமுடியாமல் இறுகக் கண்களை மூடிக் கொண்டவளுக்கு சட்டென்று எதுவும் நினைவிற்கு வரவில்லை. மீண்டும் மீண்டும் அவள் முயற்சி செய்ய, அவளுக்கு லிப்ட்டில் நடந்ததில் இருந்து அதற்கடுத்து நடந்த ஒவ்வொன்றும் நிழற்படங்கலாய் முதலில் வந்து போக, தலையை இறுகப் பிடித்துக் கொண்டாள். பதட்டத்தில் உணர்வுகளும் உதடுகளும் நடுங்க தன்னிலையை ஆராய்ந்தாள்.
தான் அணிந்திருந்த தீரனின் சட்டையையும் அவனையும் மாறி மாறி பார்த்தவளுக்கு, இப்போது நிழற்படங்கள் சற்று தெளிவாய் அவள் கண்ணில் வந்து போனது.
MDMA வகையான போதை மருந்துகளுடன் ஆல்கஹால் எடுத்திருந்தால் மட்டுமே அப்போது நடந்தது நினைவில் இருக்காது. இவளுக்கு செலுத்தப்பட்டது வெறும் போதை மருந்து மட்டும் தான் என்பதால் சற்று நேரமானாலும் நடந்தது நினைவிற்கு வந்து விடும். முற்றிலும் வராவிட்டாலும் மிக வேகமாக நடந்ததைப் போல் அனைத்து நினைவுகளும் சற்று மங்கலாய் வந்து போகும்.
தன்னை யாரோ முத்தமிட அருகில் வருவதும், தீரன் அவளிடமிருந்து அவனைப் பிரிப்பதும் அவளுக்கு நினைவில் மங்கலாய் வந்து போக, அதிர்ந்து போனவளின் உடல் இப்போது அப்பட்டமாய் நடுங்கிக் கொண்டிருந்தது.
ஏனோ இப்போது தான் அனைத்தும் நடப்பதைப் போல், தீரன் அவளைக் காக்க வந்தது போல் மாறி மாறி தோன்ற, விட்டால் தன்னை யாரேனும் மீண்டும் இழுத்துச் சென்று விடுவார்களோ என்ற மாய அச்சம் கொண்டவளாய் மீண்டும் அவன் நெஞ்சில் தலை வைத்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள். உடலோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.
மீண்டும் தன் மேல் பாரம் அழுத்த, அவளின் நடுங்கிய உடலை தீரனின் கரங்கள் கண்டு கொண்டதோ என்னவோ?
“ஒன்னும் இல்லம்மா! அமைதியா தூங்கு” என்று மீண்டும் அவளைத் தட்டிக் கொடுத்தபடி அவன் உறக்கத்தைத் தொடர்ந்தான். அவள் உறங்கிய அந்த பதினைந்து மணி நேரங்களில் இடையில் அவள் பிதற்றுவதும், அவ்வப்போது முனங்குவதும் அவன் அவளை இப்படி சொல்லி தட்டிக் கொடுத்தபடி உறங்குவதும் தான் நடந்து கொண்டிருந்தது.
அதே போல் அவன் இப்போதும் செய்திருக்க, முழுதாய் விழிப்பு வந்தவளுக்கோ மனதில் ஏதோ ஒன்று இடறியது. அவளை நினைத்து அவளுக்கே கழிவிரக்கம் தோன்ற, தான் செய்து கொண்டிருந்த செயலின் வீரியம் புரிந்தவள், சட்டென்று அவனிடமிருந்து விலகி அங்கிருந்த பாத்ரூமிற்குள் தட்டுத் தடுமாறி சென்று நுழைந்து கொண்டாள்.
நீரின் அடியில் நின்றவளுக்கு தண்ணீரோடு கண்ணீரும் சேர்ந்து செல்ல, ஏனோ அந்த நிமிடம் உயிருடன் இருப்பதையே வெறுத்தாள். மனத்திடம் கொண்ட ஒருத்தியின் மனதை நடந்த நிகழ்வுகள் முற்றிலும் கோழையாய் மாற்றியிருந்தது.நடந்தவைகள் அனைத்தும் மாறி மாறி நிழலாய் அவள் கண் முன் வந்து அவளை அச்சுறுத்தியது. இதற்கு மேல் எதையும் தாங்கும் சக்தி தனக்கு இல்லை என்பதைப் போல் ஒரு மாயத் தோற்றம் அவளுக்குள். அவளின் பார்வை தனக்கு எதுவும் கிடைக்குமா என்று அந்து பாத்ரூம் முழுவதும் தேடித் பார்க்க, எதுவும் அகப் படவில்லை.
முகம் பார்க்கும் கண்ணாடியின் அருகில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த அந்த செயற்கை, பூ ஜாடியை எடுத்து சுவற்றில் அடித்து உடைத்தவள், சிதறிய ஜாடியின் கூர்முனையைக் கொண்டு தன் கழுத்தை தனக்குத் தானே கிழிக்க முற்பட்ட தருணம், அவளின் கையை அசையவே விடாமல் பிடித்திருந்தது தீரனின் வலிய கரம்.
ஈரம் சொட்டச் சொட்ட அழுது சிவந்த விழிகள்கொண்டு இயலாமையுடன் அவனைப் பார்த்தவளுக்கு மேலும் பயம் கூடிப் போனது. இதற்கு முன் தீரனின் இப்படி ஒரு கோப முகத்தை அவள் கண்டதில்லை. பயத்தில் அவள் உடல் நடுங்கிக் கொண்டிப்பது தெரிந்தாலும், கோபத்தில் மனமின்றி அவளை ஓங்கி அறைந்திருந்தான் தீரன்.
அவன் அறைந்த அதிர்ச்சியில் தள்ளாடி நின்றவளை இழுத்து தனக்குள் புதைத்து இறுக அணைத்துக் கொண்டவனின் மனம் வேகமாய் துடிப்பதை அவள் உணர்ந்திருந்தாள்.
“ஏன்டி ஏன்? கொஞ்ச நேரத்துல என்ன காரியம் பண்ண இருந்த? முட்டாளா நீ” என்றவனின் அணைப்பு மேலும் இறுக, அழுது கொண்டிருந்தவளின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
சட்டென்று முழிப்பு வந்தவனுக்கு அருகில் மொழி இல்லாததைக் கண்டு பதட்டம் அதிகரித்தது. என்னவோ ஏதோ என்று எழுந்தவன், பாத்ரூமில் லைட் எறியவும் தான் ஆசுவாசமடைந்தான். அப்படியும் வெகு நேரமாகியும் அவளைக் காணாமல் தான் சந்தேகப்பட்டு அவள் அங்கு தான் இருக்கிறாளா? என்று பார்ப்பதற்காக வந்திருந்தான். சுயசிந்தனையின்றி வந்தவளும் வெறுமனே லாக் செய்திருந்தாள். அவள் மட்டும் கதவைப் பூட்டிவிட்டு இந்த வேலையை செய்திருந்தால் இந்நேரம் அவளை அவனால் காப்பாற்றியிருக்க முடியுமா என்பதே சந்தேகம் தான்.
அந்த படபடப்பு அவனுக்கு கொஞ்சமும் அடங்கவில்லை. விட்டால் மீண்டும் அதையே செய்வாளோ என்று எண்ணியவனாய் அவளை விடாமல் தனக்குள்ளேயே வைத்திருந்தான். ஒரு கட்டத்தில் அவன் இறுக்கத்தின் வலி பொறுக்க முடியாதவள் அவனிடமிருந்து விலக முற்பட, அப்போது தான் அவன் பதட்டத்தில் இருந்தே வெளி வந்தான். சட்டென்று அவளை விட்டவன்,
“சா..சாரி மொழி” என்று திரும்பி தலை கோதி தன்னை ஆசுவாசம் செய்ய முயன்றவனுக்கு எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அவளுக்காக துடித்த மனதை அடக்கி, முகத்தில் எதையும் காட்டாமல் வரவழைத்துக் கொண்ட கடினத் தன்மையுடன் திரும்பி அவளைப் பார்த்தான்.
“இப்போ இங்க சூசைட் பண்ணி, என்னோட மொத்த கெரியரையும் முடிச்சு விடணும். இது தான உன் பிளான். இன்னும் எவ்வளவு தான் என்னை டார்ச்சர் பண்ணுவ?” என்று கத்தியவனின் குரலில் மிரண்டவளைப் பார்த்து சற்று கோபத்தைக் குறைத்தவன், அவளை சட்டை செய்யாது, அங்கு உடைந்து கிடைந்த ஜாடியின் பாகங்களை உடனடியாக அப்புறப்படுத்தினான்.
அவளுக்காக வாங்கியிருந்த ஆடைகளை எடுத்து வந்து அவள் கையில் திணித்தவன்,
“உனக்கு பத்து நிமிஷம் டைம். அதுக்குள்ள குளிச்சுட்டு ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா. கதவை சும்மா மட்டும் சாத்திக்கோ. எக்காரணம் கொண்டும் உள்ள லாக் போடக் கூடாது” என்றான் கடினமான குரலில். அவள் பிரம்மை பிடித்தவள் போல் நிற்க, அடுத்த பத்தாவது நிமிடம் குளித்து முடித்து வெளியே வந்தவள் கண்டது, தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்த தீரனைத் தான்.
இறுகிப் போய் அவன் அமர்ந்திருப்பதைப் கண்டவளுக்கு அவன் அருகில் செல்லவே பயமாக இருந்தது. உடலின் சோர்வு ஒரு புறம் அவளை வாட்ட, அதற்குமேல் முடியுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. சோபாவில் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்தவளைப் பார்த்தவனின் விழிகளில் தெரிந்த உயிர்வலியை கண்டு கொள்ளும் அளவிற்கு அவள் அவளாக இல்லை.
தலையில் இருந்து நீர் வடிய அமர்ந்திருந்தாள். அந்த ஏசியின் குளிரில் அவளுக்கு உடல் நடுக்கம் கொடுக்க, அதைப் பார்த்தவன் வேகமாய் எழுந்து பாத்ரூமிற்குள் சென்றான். அங்கிருந்த ஹேர் ட்ரையரை எடுத்து வந்தவன், ஈர முடியை உலர்த்தத் தொடங்கினான்.
“நா..நானே பண்ணிக்கிறேன்” என்றவளின் குரல் சட்டென்று வெளியே வரவில்லை. காத்து தான் வந்தது முதலில். அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் உலர்த்தி முடித்திருந்தான். ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசினான் இல்லை.
குளிக்க சென்றவன் என்ன நினைத்தானோ, மறுபடியும் திரும்பி வந்து அறையின் கீயை கையேடு எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொள்ள, மொழியோ அவனின் செயல்களை பிரம்மை பிடித்தவள் போல் பார்த்திருந்தாள்.
பெட்சைட் டேபிள் மேல் இருந்த அவளின் போனைப் பார்த்தவள், நேரத்தைப் பார்ப்பதற்காக கையில் எடுத்திருந்தாள். அணைத்து வைக்கப்பட்டிருந்த மொபைலை அவள் ஆன் செய்த நேரம் துரித கதியில் வந்து வெடுக்கென்று அவள் கையிலிருந்த போனை பிடுங்கியிருந்தான் தீரன். பிடுங்கிய வேகத்திலேயே மீண்டும் அதை ஆப் செய்ய, புரியாமல் பார்த்திருந்தாள் மொழி.