போனை வைத்துவிட்டு அந்த அறையை தீரன் சுற்றிப் பார்க்க, ஏற்கனவே அகன் கூறியதைப் போல் தான் இருந்தது. அதிகப்படியாய் இருந்தது லைட் வெளிச்சம் மட்டுமே.
அப்போது தான் அவனுக்கு புத்தியில் உரைத்தது. அவன் அந்த அறைக்குள் வரும் போது அகன் சொன்ன மாதிரியே தான் அறை இருந்தது என்று. ஆக, இதை பயன்படுத்தினால் எந்த நிலையில் அமைதியாக இருப்பார்கள் என்பது வரை எதிராளிக்கு தெரிந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டான் தீரன்.
தனது மொபைலை எடுத்து அருகில் இருக்கும் கடையாக பார்த்து அவளுக்குத் தேவையான ஆடைகளை ஆர்டர் போட்டவன், அதை அன்றே கிடைக்கும் படி செய்திருந்தான்.
தன் கையில் இருந்த மொழியின் போனும் விடாமல் அடித்துக் கொண்டே இருந்தது. அவளுடைய நண்பர்கள் பட்டாளம் மாறி மாறி அழைத்துக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்தவன்,அலைபேசியை அணைத்து வைக்க முற்பட்டான். இப்போது தாரிக் விடாமல் அழைத்தான். ஒரு யோசனையுடன் அலைபேசி திரையை வெறித்திருந்தான். தீரனே மறந்தாலும் தன்னை சரியாக ஞாபகப் படுத்திக் கொள்கிறான் தாரிக்.
ஒரு முடிவுடன் அழைப்பை ஏற்று தீரன் பேச முற்பட, அதற்குள் தாரிக் பதறித் தள்ளியிருந்தான்.
“பேபி நீ எங்க இருக்க? என்ன நடக்குது? நீ எப்படி அந்த ஏசிபி கூட? இன்னும் இது மாதிரி எத்தனை வீடியோ வந்தாலும் இந்த தாரிக் உன்னை நம்புவான் பேபி. நான் இருக்கேன் உனக்காக” என்று பேசிக் கொண்டே செல்ல, அவனின் பேச்சில் தீரனின் எரிச்சல் மேலும் கூடியது.
“நீ பேசுறதுல நிஜமே இல்லை தாரிக். ஏதோ நாடக பாணியில இருக்கு” என்று வாய் வரை வந்த வார்த்தைகளை வெளிவிடாது கஷ்ட்டப்பட்டு அடக்கிக் கொண்டான் தீரன்.
“ஏற்கனவே இப்படி ஒரு சிச்சுவேஷன்ல உனக்கு நான் தான் மாரல் சப்போர்ட்டா இருந்திருக்கேன் பேபி. இப்பவும் இருப்பேன். எப்பவும் இருப்பேன்” என்று அவன் பேசிக் கொண்டே இருக்க அதற்கு மேல் தீரனால் அவன் உளறலை எல்லாம் காது கொடுத்து கேட்க முடியவில்லை. கடுப்புடன் போனை ஆப் செய்து விட்டான்.
“என்னால ரெண்டு நிமிஷம் அவன் பேசுறதை கேட்க முடியலை. எப்படித்தான் கேட்டுட்டு இருந்தாளோ?” என்று தலையில் அடித்துக் கொண்டவனுக்கு அப்போது தான் தாரிக் பேசியது உரைத்தது.
“ஏற்கனவே இப்படி ஒரு சிச்சுவேஷன்ல..” என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்க,
‘அப்போ ஏற்கனவே ஏதோ விஷயம் நடந்திருக்கு. என்னவா இருக்கும்?’ என்று யோசித்தவனுக்கு புரிந்தது ஒன்று தான். அவனின் பல கேள்விகளுக்கு விடை மொழியிடம் தான் இருக்கிறது என்று.
அவனோ யோசனையில் இருக்க, அவளோ அவன் அருகில் அமர்ந்து அவன் முகத்தை தன் விரல்களால் அளந்து கொண்டிருந்தாள். ஏதேதோ பிதற்றல்கள் வேறு. தனக்கு வெகு அருகாமையில் இருந்த அவளின் முகமும், அதில் தெரிந்த உணர்வுகளும் அவனைப் பித்துப் பிடிக்க வைக்க, சட்டென்று எழுந்திருந்தான் தீரன். அவனும் எவ்வளவு தான் தாங்குவான் பாவம்.
சட்டென்று அவன் அவளை விலக்கவும் கோபம் கொண்டவள் மூர்க்கத்தனமாய் அவனை பனியனோடு இழுக்க,
“மொழி” என்று கத்தப் போனவனுக்கு அகன் சொன்னது மீண்டும் நினைவில் வந்தது. தன் கோபத்தை குறைத்து அமைதியானவன், அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவளைக் கொஞ்சம் குடிக்க வைத்திருந்தான்.
அவளைப் படுக்க வைக்க அவன் எடுத்த எல்லா முயற்சியும் தோல்வியில் தான் முடிந்தது. அவன் உடலும் ஓய்விற்கு கெஞ்ச, விளக்குகளை அணைத்துவிட்டு மெல்லிய வெளிச்சத்தை மட்டும் அறையில் பரவ விட்டவன், பேசாமல் சென்று படுத்து விட்டான்.
அவளும் அவன் அருகிலேயே சென்று பொத்தென்று விழ,
“எனக்கு இன்னைக்கு இப்படி ஒரு சோதனை வந்திருக்கவே கூடாது” என்று எண்ணியவன்,
“மொழி” என்று அவளை விலக்குவதற்குள் இதழோடு இதழ் சேர்த்து அவனை முத்தமிட்டிருந்தாள் வெண்மொழி. அவளின் இந்த திடீர் பரிமாணத்தில் அதிர்ந்தவனுக்கு சில நிமிடங்கள் அவளை விலக்கவே தோன்றவில்லை.
“தீரா அவ சுய நினைவுலயே இல்ல” என்று புத்திக்கு உரைக்க, வேகமாய் அவளை விலக்கியவன், தன் கையணைப்பிலேயே வைத்து அவளின் தலையை பரிவுடன் கோத, அந்த அமைதியிலும், அந்த வருடலிலும், சில பல நிமிடங்களில் உறக்கத்திற்கு சென்றிருந்தாள் வெண்மொழி.
‘எந்த தைரியத்துல இவ கூட தனியா இருக்க தீரன்? நீ தான் கூட இருக்கணும்னு என்ன அவசியம்?’ என்றது ஒரு மனம்.
‘இந்த நிமையில இவளை எப்படி கூட்டிட்டு போறது? வேற யாரை நம்பி இவளை விடுறது?’ என்றான் மீண்டும் எதிர்கேள்வியாய்.
‘இப்படி சொல்லி உன்னை நீயே ஏமாத்திட்டு இருக்க தீரன். போதை தெளிஞ்சா உன்னை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டா?’ என்றது மனம் நக்கலாய்.
“அதைப் அப்போ பார்த்துக்கலாம்” என்றவனின் பார்வை முழுவதும் மொழி மீது தான்.
“என்னடி நடக்குது? உன்னைச் சுத்தி நடக்குறது உனக்குத் தெரியுதா இல்லையா? நான் பார்த்த சந்தர்ப்பத்துல எல்லாம் ஏஞ்சல் மாதிரி இருந்த பொண்ணாடி, இப்போ இப்படி படுத்திருக்க?இப்படி ஒரு இக்கட்டான நிலையில என்னைக் கொண்டு வந்து நிறுத்துவன்னு நான் நினைக்கலை மொழி. வலிக்காத மாதிரி காட்டிகிட்டாலும் எனக்கும் உள்ளுக்குள்ள வலிக்குது மொழி. முதன் முதல்ல மனசுக்குள்ள வந்த ஒருத்தியை இன்னொருத்தன் லவ்வரா பார்க்குற கொடுமை எல்லாம் வேற யாருக்கும் வந்துடவே கூடாது. உன் வாழ்க்கையில நான் இன்னும் கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கணும் போல. அப்படி வந்திருந்தா இப்படியெல்லாம் நடக்க விட்டிருக்க மாட்டேனோ என்னவோ?” என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்தவனின் விரல்கள் அவள் தலையை வருடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.
அவனின் கண்களும் உறக்கத்திற்கு இழுக்க, இதோ அவனின் வீட்டில் இருந்து அழைத்து விட்டனர்.
“இன்னைக்கு போன் பேசியே என் காது ஒரு வழியாகிடும் போல” என்று எண்ணியவன்,
“ம்மா” என்றான் எடுத்த எடுப்பில்.
“என்ன அதி இதெல்லாம்? கேஸ் விஷயமா போறேன்னு தான எங்ககிட்ட சொல்லிட்டு போன? இப்போ அந்த பொண்ணு எப்படி உன்கூட? நியூஸ்ல எல்லாம் வேற மாதிரி சொல்றாங்க?” என்றார் வானதி.
“நேர்ல வந்து சொல்றேன்மா” என்றான் பொறுமையாய்.
“எதை அதி நேர்ல வந்து சொல்லுவ? நீ என்னடான்னா அந்த பொண்ணு வேற யாரையோ விரும்புதுன்னு சொன்ன? அவங்க அப்பா பிரஸ் மீட்டிங்கல இப்படி சொல்லிட்டு இருக்கார். நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குற வீடியோஸ் எல்லாம் வருது.பெத்தவங்க எங்களுக்கு ஒரு விஷயமும் தெரியலை” என்றார் ஆதங்கத்துடன்.
“ராஜன் அங்கிள் என்ன சொன்னார்?” என்றவனுக்கு நிஜமாவே அங்கு நடந்தது தெரிந்திருக்கவில்லை.
“அதை நீயே பார்த்து தெரிஞ்சுக்க” என்றவர் கோபமாய் போனை வைத்துவிட்டார்.
‘இப்போ இவர் என்ன பிரச்சனையை இழுத்து விட்டார்னு தெரியலையே?’ என்று நியூஸ் சேனலை ஆராய, பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முதன் முறையாக திணறிக் கொண்டிருந்த ராஜனைப் பார்த்து அவனுக்கே பாவமாய் போனது. தியாகராஜன் தான் பொறுமை இழந்து பேசியிருந்தார்.
“இப்போ என்ன? என் பேத்தி யார் கூடவோ போகலையே? அவ வருங்கால புருஷன் கூடத்தான் போயிருக்கா. இதெல்லாம் ஒரு கேள்வின்னு உடனே வந்துட வேண்டியது. அவங்களுக்கு வீட்டளவுக்கு நிச்சயம் முடிஞ்சிடுச்சு. கூடிய சீக்கிரம் மேரேஜ் இன்விடேஷன் வைக்கிறோம். வந்து சிறப்பிச்சுக் குடுத்துட்டு போங்க” என்றவர் மேற்கொண்டு கேள்வி கேட்க இடம் கொடுக்காமல் ராஜனை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
‘என்ன? தாத்தா இந்த போடு போட்டுருக்கார்? போற போக்குல அவர் பேத்திகிட்ட எனக்கு அடிவாங்கிக் குடுக்காம ஓய மாட்டார் போல’ என்று எண்ணியவன் சற்றும் யோசிக்காமல் ராஜனை அழைத்தான்.
“என்ன அங்கிள் இப்படி சொல்லி வச்சிருக்கிங்க?” என்றான் எடுத்த எடுப்பில்.
“என்னால இங்க சமாளிக்க முடியலை தீரன். ஒரு பக்கம் அந்த வீடியோல இருந்தது நீங்கதான்னு சொல்லி பழியை உங்க மேல போட்டு என் பொண்ணு மானத்தை காப்பாத்தியிருக்கிங்கன்னு நினைச்சு சந்தோஷப் படுறதா? இல்லை வீடியோ, போட்டோஸ் வெளியானதை நினைச்சு கவலைப் படுறதா?” என்றார் விரக்தியுடன்.
“மொழியை இந்த இக்கட்டுல இருந்து வெளிய கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு. அதுக்காக அவங்களை மேரேஜ் பண்ணித்தான் ஆகணும்னு இல்லையே” என்றான் தீரன்.
“இங்க பாருங்க தீரன்! உங்களுக்கு விருப்பம்னா சரின்னு சொல்லுங்க. இல்லையா வேற மாப்பிள்ளையை பார்க்குறேன். கண்டிப்பா அந்த தாரிக் பையலுக்கு என் பொண்ணை குடுக்க மாட்டேன். இனி இந்த விஷயத்துல இதுக்கு மேல பேச ஒண்ணுமில்லை” என்றார்.
“மண்ணாங்கட்டி விருப்பம். பெத்தவங்களுக்குத் தெரியாதா தீரன் பொண்ணுக்கு என்ன செய்யணும்னு? எல்லாத்தையும் பெஸ்ட்டா குடுக்க தெரிஞ்ச எங்களுக்கு இதையும் குடுக்கத் தெரியாதா? யாரு அவன்? ஆள் பார்க்க நல்லா இருந்தா போதுமா? அவனும் அவன் பேச்சும்” என்ற ராஜனின் கோபம் தீரனுக்கும் புரிந்தது.
மேற்கொண்டு மகளின் நிலை பற்றி விசாரித்தவருக்கு மீண்டும் மனதில் பாரம் ஏறிக் கொண்டது. அவளுக்கு தீரன் தான் சரியாக இருப்பான் என்று அவர் உறுதியாக நம்பினார்.
“நீங்க யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க தீரன்” என்றபடி அவர் அழைப்பை துண்டிக்க, வந்த தூக்கமும் போனது அவனுக்கு.
தன் நெஞ்சில் ஒய்யாரமாய் தலை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு ஏறிய டென்ஷன் எல்லாம் சட்டென்று வடிந்திருந்தது.
‘அங்க இருந்து உங்கப்பா டார்ச்சர் பண்றார். இங்க நீ டார்ச்சர் பண்ற? வெளிய போனா இந்த கேஸ் என்னை டார்ச்சர் பண்ணுது? நல்லா பண்றிங்கம்மா டார்ச்சர்’ என்று அவளின் மதி முகத்தைப் பார்த்தவனுக்கு, வாழ்வில் இரண்டாவது முறையாக அவளை விட்டு விடவே கூடாது என்ற எண்ணம் தோன்றியிருந்தது.