அந்த அறை முழுவதும் சுற்றி சுற்றி வந்து அனைத்தையும் கிளீன் செய்தவன், அங்கிருந்து எடுத்த அனைத்தையும் விவேக்கிடம் நீட்டினான்.
“அதி”
“இதுல ஒன்னு மிஸ்சாகக் கூடாது விவேக்” என்று அவனிடம் நீட்ட, அதை கவனமாய் எடுத்துச் சென்றான். அனைத்தையும் துரிதமாய் செயல்படுத்தியிருந்தான்.
ஆசுவாசமாய் மூச்சு விட்டவனை,
“என்னாச்சு அதி?” என்றான் விவேக்.
“இதுக்கு பின்னாடி இருக்குறவனுக்கு ஹெல்ப் பண்ண இந்த ஹோட்டல்ல யாரோ ஒருத்தர் இருக்காங்க விவேக். இன்பேக்ட் நாம கொஞ்சம் லேட் பண்ணியிருந்தாலும் மொழியோட நிலைமை” என்றவனுக்கு கண்கள் கலங்க, அதற்குள் கீழே சத்தம் அதிகமாய் கேட்டது. விவேக் அங்கிருந்த நடைபாதையின் முடிவில் இருந்த கண்ணாடி வழியாக ஹோட்டலின் முன்புறத்தைப் பார்க்க, காவல் துறையும், மொத்த மீடியாவும் கூடியிருந்தது.
“மை காட்” என்று வேகமாய் வந்தவன்,
“அதி மொத்த மீடியாவும் இங்க தான் இருக்கு” என்றான்.
“என்ன சொல்ற விவேக்” என்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வீடியோவே வெளியாகியிருந்தாலும் இந்த நேரத்தில் இங்கு தான் இருக்கிறாள் என்று எப்படி மீடியாவுக்கு தெரியும்?” என்றவனுக்கு தலையே வெடித்தது.
சரியாக குமரன் அவனுக்கு அழைக்க,
“என்னதான் நடக்குது குமரன் இங்க? நம்ம டிப்பார்ட்மென்ட் ஆளுங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க? அதுவும் மீடியா கூட” என்றான் கோபமாய்.
“சார் அந்த ஹோட்டல்ல, ஸ்பான்ற பேர்ல ப்ராஸ்ட்டியூஷன் நடக்குறதாவும், டிரக்ஸ் புழங்குறதாகவும் கண்ட்ரோல் ரூம்க்கு கம்ளைன்ட் வந்திருக்கு. அதான் ரைட் வந்திருக்காங்க சார். விஷயம் இப்போ தான் என் காதுக்கு வந்தது. அதான் உடனே உங்களுக்கு கால் பண்ணேன்” என்றான் குமரன்.
“நம்ம டிப்பார்மென்ட் ரைட் தான் விவேக். ஆனா மீடியாவோட வர வேண்டிய அவசியம் என்ன?” என்று நிறுத்தியவன் “சோ நம்ம டிப்பார்ட்மென்ட்குள்ள இருந்து முகம் தெரியாத அந்த அயோக்கியனுக்கு ஹெல்ப் பண்ணவும் ஆள் இருக்கு” என்றான் தீரன் யோசனையுடன்.
“இப்போ என்ன பண்றது அதி? வெண்மொழி இருக்காங்க. இப்போ நாம அவங்களை அழைச்சுட்டு வெளிய போகவும் முடியாது. போகக் கூடிய நிலையிலும் அவங்க இல்லை” என்றான் விவேக்.
“இந்த ரூம் யார் பேர்ல புக்காகியிருக்குன்னு கேட்க சொன்னேனே?” என்றான் தீரன்.
“அமைச்சர் ராஜ ராஜன் பேர்ல தான் ரூம் புக் பண்ணியிருக்காங்க. அவர் கோயம்புத்தூர் வந்தா ரெகுலரா இந்த ஹோட்டல்ல தான் தங்குவாராம் அதி” என்றான் விவேக்.
“எதுக்காக அவர் பேர்ல புக் பண்ணி, அவர் பொண்ணையே இங்க வர வைக்கணும்?” என்று யோசித்தவன் ஒரு முடிவு எடுத்தவனாய்,
“விவேக் நீ போய் அந்த ரூம்ல இரு. கேட்டா ஐடி கார்ட் காட்டிடு. பிராப்ளம் சால்வ்ட்” என்றான் தீரன்.
“அதி நீ” என்றான் விவேக்.
“மொழியை இந்த நிலமையில விட்டுட்டு எப்படி வர முடியும்? இன்பேக்ட் மொழியை இப்படி வெளிச்சம் போட்டு காட்டுறது கூட அவங்க நோக்கமா இருக்கலாம். அது உண்மையா இருக்குற பட்சத்துல ஒரு காலமும் நான் நடக்க விட மாட்டேன்” என்றான் தீரன்.
“அதி பி சீரியஸ்..! இதனால உன்னோட ரெப்புடேஷன் பாதிக்கப்படுறதை என்னால ஏத்துக்க முடியாது. அதுலயும் மொழி இப்போ போதையில இருக்காங்க. இதுல உன்னோட பேரும் சேர்ந்து கெட்டுப் போகும் அதி. இந்த ரைடுனால பிரச்சனை இல்லைன்னாலும், டிப்பார்ட்மென்ட் ரீதியா ஆக்சன் எடுக்க சான்ஸ் இருக்கு. இந்த கேஸோட சீரியஸ்னஸ் உனக்குத் தெரியும் தான அதி?” என்றான் விவேக்.
“விவேக் நிலைமை புரியாம பேசாத” என்று தயங்கியவன்,
“இங்க மூணாவதா ஒருத்தர் இருக்காங்க. மீடியா முன்னாடி இப்படி ஒரு நிலைமையில மொழியை நிறுத்தனும்னு நினைச்சிருக்காங்க அதுவும் அந்த பையனோட. நினைக்கவே கூசுது.சோ அந்த மூணாவது ஆள் யாருன்னு நாம கண்டு பிடிக்கணும்” என்ற தீரனின் பேச்சைக் கேட்ட விவேக் அதிர்ந்தான்.
“என்ன சொல்ற அதி?”
“ஆமா” என்றவன்,
“நீ அந்த ரூம்க்கு போ விவேக். போன உடனே இந்த புளோர் கேமாரவை ஆன் பண்ண சொல்லிடு” என்றான் வேகமாய்.
விவேக் துரிதமாய் செயல்பட, அறைக்குள் வந்தவன் மொழியைப் பார்த்தான். அவளோ எதையோ பிதற்றிக் கொண்டே படுத்திருந்தாள்.போதையின் உச்சகட்டத்தில் இருந்தாள். மீண்டும் ஒரு முறை அந்த அறை முழுவதும் சுற்றி வந்தான். சந்தேகப்படும் படியாக எதுவும் இருக்கிறதா என்று அவன் போலீஸ் மூளையுடன் பார்க்க, எதுவும் இல்லை. மொழியின் கிழிந்த ஆடைகளைப் பார்த்தவன்,வேதனையுடன் அவற்றை எடுத்து ஒரு ஓரம் போட்டான்.
‘எதுவுவோ மிஸ் ஆகுது தீரா..! மொழி இந்த ரூம்க்கு வந்த பிறகு யாரும் வந்த மாதிரி தெரியலை. மொழி இந்த ரூம்குள்ள வராததுக்கு முன்னமும் யாரும் உள்ள வரலை. சோ ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே அந்த பையன் இந்த ரூம்ல இருந்திருக்கணும். அப்போ அந்த வீடியோ எடுத்தது யாரு? அதை ரிலீஸ் பண்ணது யாரு?” என்று யோசித்தபடி அறை ஜன்னல்களை திறந்து பார்த்தான். எதுவும் புலப்படவில்லை.
“எல்லா கேமாராவையும் செக் பண்ணியே தீரா, ஹோட்டலோட பின்பக்க கேமரா, சைட் கேமரா இதை செக் பண்ணியா?” என்று மூளை அவனுக்கு ஞாபகப்படுத்த,
“ஷிட்” என்றவன் தரையை ஓங்கிக் காலால் உதைத்துக் கொண்டான்.
“எப்படி மிஸ் பண்ணேன்? நான் மிஸ் பண்ணேனா? இல்லை, கேமரால அது ரெக்கார்ட் ஆகலையா?” என்று யோசித்தவனால் சட்டென்று வெளியே செல்ல முடியாத நிலை.
டிப்பார்ட்மென்ட் ஆட்களும், மீடியாவும் முதல் இரண்டு புளோர்களை முடித்து தேர்ட் புளோர் வருவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவன் மனம் உந்தித் தள்ள, கேஷுவலாய் இருப்பதைப் போன்று நடிப்பதைப் தவிர அந்த நேரத்திற்கு அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை.
‘நீ இருப்ப தீரன். ஆனா மொழியை யோசிச்சு பார்த்தியா?’ என்று மனம் அறிவுறுத்த, அவளின் அருகில் அமர்ந்து அவளைப் பார்த்திருந்தவனுக்கு, மனம் முழுவதும் கனம் கூடிப் போனது.
“மொழி” என்று ஆதூரமாய் அவள் தலை கோதியவனைப் பார்த்து கிளுக்கி சிரித்திருத்தாள் மொழி. அவளின் சிரிப்பில் ஒருவர் மயங்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.
அவளுக்கு செலுத்தப்பட்டிருப்பது சாதாரண போதை மருந்து இல்லை என்பதை அவன் ஏற்கனவே அங்கிருந்த பொருட்களை வைத்து அறிந்திருந்தான்.
MDMA நரம்பு மண்டலத்தை தூண்டி, உணர்ச்சிகளை தீவிரப்படுத்தும் ஒரு ஆபத்தான செயற்கை போதைப் பொருள். மூளையில் செரோடோனின், டோபமைன்களைத் தூண்டி, அதிக ஆற்றலையும், நெருக்கமான உணர்வுகளையும் தூண்டி விடக் கூடிய பொருள். இது முழுமையாக தடை செய்யப்பட்ட ஒரு போதை மருந்து. இதை வைத்திருப்பவர்கள், எடுத்துக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் இருபது ஆண்டுகள் வரை கடுமையான சிறை தண்டனை உண்டு.
அவனுக்கு உடனடியான விவேக்குடன் பேசியே ஆக வேண்டும் என்று நினைக்க,
மீண்டும் அந்த அறையில் கேமரா எதுவும் இருக்கிறதா என்று சோதித்தவன் எதுவும் இல்லை என்று உறுதியாக தெரிந்த பின்னரே, அந்த ஜாமரை எடுத்து ஆப் செய்திருந்தான்.
அந்த போர்ட்டபிள் ஜாமரை தன் பேண்ட் பாக்கெட்டினுள் வைத்துக் கொண்டவன், இப்போது விவேக்கிற்கு அழைத்தான்.
“அதி”
“விவேக்! இந்த ஹோட்டலோட பேக் சைட் அண்ட் ரைட் சைட் கேமரா இதோட புட்டேஜ் உடனே வேணும்” என்றான்.
“உடனே வாங்கி அனுப்புறேன் அதி”
“விஷயம் எக்காரணம் கொண்டும் வெளிய போகக் கூடாது” என்ற தீரன், ஒரு பெருமூச்சுடன் மொழியைப் பார்க்க, அவளோ அமர்ந்திருந்த அவனை பின்னோடு போர்வையுடன் அணைத்துக் கொள்ள, தீரனின் உடலோ இறுகி மீண்டது. உணர்ச்சிகளின் பிடியில் இருந்தவளை கட்டுப் படுத்தும் வழி தெரியாமல் அவன் திகைத்திருக்க, அவளோ மேலும் முன்னேறி அவன் மேல் பசை போல் ஒட்டிக் கொண்டான்.
“மொழி நோ..!” என்று அவளை விலக்கியவனுக்கு அப்போது தான் அவள் இருந்த நிலையும் புத்தியில் உரைத்தது. தன் சட்டையை கழற்றி வேகமாய் அவளுக்கு மாட்டி விட்ட பிறகு தான் அவன் ஆசுவாசமடைந்தான்.
குமரனுக்கு அழைத்தவன்,
“குமரன் எக்காரணம் கொண்டும் ரூம் நம்பர் டூ பிப்டிக்கு டிப்பார்ட்மென்ட் ஆட்களோ மீடியாவோ வரக் கூடாது” என்றான் தீரன்.
“சார் மீடியா வரும் போது ஒரு ரூமை மட்டும் செக் பண்ணாம விட்டா, அது தானாவே சந்தேகத்துக்கு வழி வகுக்கும் சார்” என்றான் குமரன்.
குமரனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே, கதவு தட்டப்படும் சத்தம் கேட்க,
“நான் பார்த்துக்கிறேன் குமரன்” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு, வேகமாய் மொழியை இழுத்து சென்று பாத்ரூமில் விட்டு கதவை அடைத்தவன், முகத்தை சாதரணமாய் வைத்தபடி அறையின் கதவைத் திறந்தான்.
“எஸ்”
அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்களின் முகத்தை வைத்தே தெரிந்து கொண்டான்.
“சார் நீங்களா?” என்று அவர்கள் சல்யூட் அடிக்க,
“எனி ப்ராப்ளம்?” என்றான்.
“இங்க எல்லா ரூமையும் சோதனை செய்ய சொல்லி ஆர்டர் சார்” என்றார் அந்த இன்ஸ்பெக்டர்.
“சோதனை போடணும்னு வெளியவே நின்னா எப்படி சார். உள்ள போனா தான தெரியும்?” என்று மீடியாவைச் சேர்ந்த ஒருவன் சொல்ல,
“போலீஸ் ரைட் நடக்கும் போது மீடியா கூடவே வரணும்னு எந்த அவசியமும் இல்லையே? யார் இவங்களை அலோவ் பண்ணது?” என்றான் கடுமையான குரலில்.
“சார் இங்க ஸ்பான்ற பேர்ல பலான விஷயமெல்லாம் நடக்குதுன்னு போலீஸ்க்கு தகவல் சொன்னதே நாங்க தான் சார். அதுமட்டுமில்லாம பெரிய இடத்துப் பசங்க இங்க போதை மருந்து சப்ளை பண்றதா எங்களுக்குத் தகவல். அதனால தான் வந்திருக்கோம். எங்களை வரக் கூடாதுன்னு நீங்க சொல்ல முடியாது. இது பத்திரிக்கை சுதந்திரம்” என்றான் அவன்.
அவனைத் தீர்க்கமாய் பார்த்த அதி தீரன், அவன் பேரையும் அவன் வேலை செய்யும் மீடியாவையும் அவன் முகத்தையும் தனக்குள் பதிய வைத்துக் கொண்டான்.
“தம்பி சார் யாருன்னு நினைச்சு பேசிட்டு இருக்கீங்க? இவர் தான் போதைத் தடுப்பு பிரிவு ஸ்பெஷல் ஆபீசர் ஏசிபி அதி தீரன்” என்ற அந்த இன்ஸ்பெக்டர்,
“சார் நீங்க இங்க?” என்றார் தயக்கத்துடன்.
“ஏன் நானெல்லாம் கோயம்புத்தூர் வரக் கூடாதா? இது நல்ல ஹோட்டல்னு தான கூகுள் ரிவியூஸ்ல இருந்தது. என்னோட பர்சனல் வேலையா இங்க வந்திருக்கேன். செக் பண்ணனும்னா உள்ள வந்து செக் பண்ணுங்க” என்றான் வேண்டுமென்றே. ஆனால் அவன் பார்வை அங்கிருந்த ஒவ்வொருவரையும் எடை போட்டுக் கொண்டிருந்தது. அதில் ஒருவன் முகத்தில் மட்டும் சற்று பதட்டம் இருந்ததைப் போல் இருந்தது. தன் போனில் அவர்களை தீரன் படம் பிடிக்க,
“அது.. டிப்பார்ட்மென்ட் ரைட் வரும் போது யாரெல்லாம் இருந்திங்கன்னு தெரிய வேண்டாமா? அதுக்குத் தான்” என்றான்.
“நீங்க வந்து செக் பண்ணுங்க இன்ஸ்பெக்டர்” என்று அவன் வழி விட, அதில் ஆர்வமாய் உள்ளே நுழைபவர்கள் யார் என்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் அந்த அறையை பேருக்கு சோதனை செய்து விட்டு “சாரி சார், நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது” என்றபடி வெளியே செல்ல எத்தனிக்க,
“நல்லா பாருங்க சார்” என்றான் ஒருவன் மீண்டும். தீரனின் சந்தேகம் இப்போது உறுதியாகியிருந்தது. இந்த அறையை சோதனை செய்வதற்குத் தான் இந்த பொய்யான மொத்த சோதனை நடவடிக்கை என்று. அதிலும் தீரனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்று சிலரின் பேயறைந்த முகமே காட்டிக் கொடுத்திருந்தது.