“என்னாச்சு விவேக்?” என்ற படி நினைவில் இருந்து மீண்டிருந்தான் அதிதீரன்.
“ஒண்ணுமில்லை அதி, ஒருத்தன் ராங் ரூட்ல ஏறிட்டான்” என்ற விவேக்,
“எதுக்கும் கொஞ்சம் மெதுவாவே போங்க” என்றான் டிரைவரிடம்.
அதி தனக்கு வலது புறத்தில் அமர்ந்திருந்தவளை திரும்பிப் பார்க்க, அவளோ நன்றாய் தலை சாய்த்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள். காரில் ஏறியதில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைதி என்றாலும் அப்படி ஒரு அமைதியை தீரன் எதிர்பார்க்கவில்லை. ராஜனே அனுப்பி விட்டதால் எந்த பயமுமின்றி இருந்தாள்.நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.
“நீங்க தூங்குறதுன்னா தூங்குங்க மிஸ். வெண்மொழி” என்றான் தீரன். திரும்பி அவனைப் பார்த்தவள், மீண்டும் தலையை திருப்பிக் கொள்ள, அவளின் செயலில் அவனுக்குத் தான் அய்யோ என்றிருந்தது.
சிறிது நேரத்திலேயே அவள் கைகால்கள் நடுக்கமுற, கைகளை இறுக்கமாக மூடிக் கொண்டாள். அவளை கவனத்தில் வைத்திருந்தவனுக்கு அனைத்தும் தெரிந்தது. தெரியாதவன் போல் காட்டிக் கொண்டான்.
சீட்டில் சம்மணம் இட்டு கையை இறுகக் கட்டிக் கொண்டு வந்தவளை வித்தியாசமாய் பார்த்திருந்தான்.
ஒரு கனமான துண்டை அவளிடம் நீட்டினான். மறுக்காமல் வாங்கிக் கொண்டவள், போர்த்திக் கொண்டு கண்களை மூடி உறங்க முற்பட்டாள். ஒரு மணி நேர அலைப்புறுதலுக்குப் பிறகு கண்ணயர்ந்து விட்டாள் மொழி.
“நாம பகல்லயே வந்திருக்கலாமே அதி” என்றான் விவேக்.
“எல்லாம் காரணமாத்தான் விவேக்” என்றவன் மேற்கொண்டு பேசவில்லை.
திரும்பி நண்பனைப் பார்த்த விவேக்,
“கஷ்ட்டமா இருக்கா அதி?” என்றான்.
“இல்லைன்னு சொல்ல மாட்டேன் விவேக்” என்றவன் திரும்பி அவளைத் தான் பார்த்திருந்தான். அவன் சரி என்று தலையை ஆட்டினால் போதும், ராஜனே மகளின் கையைக் காலைக் கட்டியாவது அவனுக்கு கட்டி வைத்து விடுவார். ஆனால் அதில் அவனுக்கு விருப்பமில்லை. இப்போதைக்கு இந்த பிரச்சனையில் இருந்து அவளை வெளிக் கொண்டு வந்துவிட்டால் போதுமென்று இருந்தது அவனுக்கு.
வெளியே எதுவுமில்லை என்பதைப் போல் காட்டிக் கொண்டாலும் காதல் கொண்ட மனம் அவளை ரசிக்கவும் தவறவில்லை.
உறக்கத்தில் தலை தொய்ந்து தோள் சாய்ந்தவளை விலக்கவும் மனமில்லை,அணைக்கவும் மனமில்லை. ஆனால் அவளுக்கு பிடிமானம் தேவைப்பட்டது போல. அவனின் கைகளை பிடித்தபடி அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவனுக்கோ உடல் இறுகி மீண்டது.
திரும்பிப் பார்த்த விவேக், நண்பனின் இறுகிய தோற்றம் கண்டு கவலையுற்றான்.
விடியும் வேளையில் தீரனின் அலைபேசி ஒலிக்க, அந்த சத்தத்தில் கண் விழித்தவளுக்கு அவன் முகம் அருகில் தெரிய சட்டென்று பதறி விலகினாள்.
“சா..சாரி சார்” என்றவள் மீண்டும் மறு ஓரத்தில் முடங்கிக் கொண்டாள்.
“விவேக்! வண்டியை ஒரு காபி ஷாப் பார்த்து நிறுத்து” என்று சொல்ல, நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஒரு பேக்கரியில் காரை நிறுத்தியிருந்தான் விவேக்.
“டீயா காபியா?” என்றான் தீரன் அவளிடம்.
“காபி” என்றாள்.
“நீங்க கார்லயே இருங்க!” என்றபடி அவர்கள் இறங்கி செல்ல, இறங்கி சென்ற அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்மொழி.
அவன் நடையில் இயல்பாகவே ஒரு கம்பீரமும் மிடுக்கும் இருந்தது. அது அவன் பார்க்கும் வேலையின் பொருட்டும் வந்திருக்கலாம். நல்ல நிறம். காக்கி சட்டையை விட கலர் சட்டையில் கொஞ்சம் கூடுதல் பொலிவுடன் இருந்தான்.
“காபி” என்று அவள் முன் ஆவி பறக்கும் காபியை நீட்டியிருந்தான்.
“தேங்க்ஸ்” என்றவளுக்கு அந்த நேரத்தில் அந்த காபி தேவாமிர்தமாய் இருந்தது. ஒவ்வொரு மிடறும் ரசனையுடன் உள்ளே சென்றது. தீரனோ சற்று தள்ளி சென்று விவேக்குடன் பேசியபடி காபியை குடித்துக் கொண்டிருக்க, அவளுக்கும் இறங்கி அவர்கள் அருகில் செல்ல வேண்டும் போல் தோன்றியது.
கண்ணாடி டம்ளரை கொடுக்கும் சாக்கில் அவள் கீழே இறங்க, தீரனை பார்த்துக் கொண்டு சென்றவள் சுற்றம் கவனிக்கவில்லை. அவள் தன்னை நோக்கி வருவதை கவனித்தவன், வேகமாய் அவள் அருகில் செல்ல, அதற்குள் ஒரு பைக் அவளை மோதுவது போல் பக்கத்தில் சென்று பயம் காட்டி செல்ல, அவளை சட்டென்று தனக்கருகில் தன் கைவளைவில் இழுத்துக் கொண்டான் அதிதீரன்.
கண்மூடித் திறக்கும் முன் நடந்து விட்ட சம்பவத்தில் அவளுக்குத் தான் இதயம் வேகமாய் துடித்தது.
“நான் உங்களை இறங்க வேண்டாம்னு சொல்லிட்டு தான வந்தேன்” என்றான் சற்று கோபம் கலந்த குரலில்.
“சாரி..! அது நான் டம்ளரை குடுக்க” என்று நிறுத்தினாள்.
“யாரு அதி இது? ரோடு அங்க இருக்கு? இங்க வரைக்கும் ஏறி வரணும்னு என்ன அவசியம்?” என்ற விவேக், தீரனின் முகம் பார்த்து அமைதியானான்.
“பே பண்ணிட்டு வா விவேக்” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு காருக்கு செல்ல, அவளுக்கு பதட்டம் கொஞ்சமும் குறையவில்லை.
“பயப்பட வேண்டாம் மொழி. இப்போ பைக் ஓட்டுறவங்க எல்லாம் சாகசம்ன்ற பேர்ல இப்படித்தான் கண் மண் தெரியாம ஓட்டுறாங்க” என்றவன் அவள் கைகளை அழுத்தமாய் பிடித்துக் கொள்ள, அந்த அழுத்தத்தில் அவள் கொஞ்சம் ஆசுவாசமடைந்தாள்.
ஏகே ஹாஸ்பிட்டல் வாசலிலேயே காத்துக் கொண்டு நின்றிருந்தான் உதய குமரன். தீரனின் கார் உள்ளே நுழைந்ததும், ஹாஸ்பிட்டலின் பார்க்கிங் ஏரியா சென்றவன்,
“குட்மார்னிங் சார்” என்றான்.
“ஹலோ குமரன்? எப்படி இருக்கீங்க?” என்ற தீரன் அவனை அணைத்துக் கொள்ள,
“பைன் சார்” என்றவனுக்கு தீரனின் மேல் எப்போதும் ஒரு நல்ல அபிப்ராயம் உண்டு. உயரதிகாரி என்பதையும் தாண்டி எப்போதும் அவனுடன் இருக்கும் ஒரு தோழமை உணர்வு தான் காரணம்.
“என்ன சீனியர்? இன்னும் அப்படியே விரைப்பாவே சுத்திட்டு இருக்கிங்களே? தாசில்தார் மேடம் எப்படி இருக்காங்க?” என்றான் விவேக்.
“நல்லா இருக்காங்க” என்று எப்போதும் போல் அளந்து பேசியவனைக் கண்டு சிரித்த விவேக்,
“அதி சீனியர் கொஞ்சம் கூட மாறலை. ரெண்டு குழந்தையாகிடுச்சு. ஆனா, சார் இன்னும் கல்யாணம் ஆகாத பையன் மாதிரியே எப்படி மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கார் பாரு” என்றான் விவேக்.
“அங்க மட்டும் என்ன வாழுது?” என்றான் குமரன்.
“அட நீங்க வேற சீனியர்! கழுதை வயசாகுது, இன்னும் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கலை. நீங்க வேற ஏன் வயித்தெரிச்சலைத் தூண்டுறிங்க?” என்ற விவேக்கின் தோளில் கை போட்ட அதி தீரன்,
“கைலாசாவுக்கு ஒரு டிக்கெட் போட்டுத் தர்றேன் மச்சான்” என்றான் சிரிக்காமல்.
“அதை செய்டா முதல்ல. உனக்கு ஒரு புண்ணியமா போகும்” என்ற விவேக்கை கண்டு குமரன் சிரிக்க, காரில் இருந்து இறங்காமல் இவர்கள் பேச்சைத் தான் கேட்டுக் கொண்டிருந்தாள் வெண்மொழி.
பார்த்ததில் இருந்து தேவைக்கு மட்டுமே பேசிக் கொண்டிருந்த தீரனின் இயல்பான பேச்சு அவனை கவனிக்கத் தூண்டியிருந்தது.
“சார் நாம மெயின் என்ட்ரன்ஸ் வழியா போக வேண்டாம். பார்க்கிங்ல இருந்தே லிப்ட்ல போய்டலாம்” என்றான் குமரன்.
“இது தான் குமரன் உங்ககிட்ட பிடிச்சதே. பேச்சு பேச்சா இருந்தாலும் கடமையை சரியா செய்றிங்க பாருங்க” என்ற தீரன் மொழியைப் பார்க்க, அவளோ இறங்கி வந்தாள்.
அப்போது தான் குமரன் மொழியைப் பார்த்திருந்தான். அவளை இதற்கு முன்பு எங்கோ பார்த்த மாதிரி தோன்றியது அவனுக்கு.
“இவங்களை எங்கையோ பார்த்திருக்கேன் சார் நான்” என்றான் குமரன்.
“அமைச்சர் பொண்ணை உங்களுக்குத் தெரியாம இருந்தாத்தான் ஆச்சர்யம். சமூகம் பெரிய இடம்” என்றான் தீரன் சிரிப்புடன்.
“இருக்கலாம் சார்” என்றபடி அவர்களை அழைத்து சென்றான் குமரன்.
“நான் இன்ஸ்பெக்டர் உதய குமரன். டாக்டர் அகனைப் பார்க்கணும். அப்பாயின்ட்மென்ட் இருக்கு” என்றான்.
“வாங்க சார்” என்ற அந்த பெண், அகன் அறைக்கு அழைத்து செல்ல,
“டாக்டர் இப்போ வந்திடுவார் சார். பிளீஸ் உட்காருங்க” என்றபடி வெளியேறினாள் அந்த பெண்.
“டாக்டர் ரூம் சுத்தமா இருக்கும் தான். அதுக்காக இப்படியா? எல்லாமே அடுக்கி வச்ச மாதிரி அப்படியே இருக்கே” என்றான் விவேக்.
“டாக்டர் ரூம் மட்டுமில்லை விவேக், அவரும் அப்படித்தான்” என்றான் குமரன் சிரிப்புடன்.
அதே நேரம் அகனைத் தேடிக் கொண்டு அவன் அறைக்கு வந்திருந்தாள் யுகந்தாரா. வயிற்றில் ஏழுமாத சிசுவுடன் முகத்தில் பொலிவுடன் வந்தவள், அங்கே இருந்தவர்களைக் கண்டு திகைத்தாள்.
‘என்ன எல்லாரும் ஹேண்ட்சமா இருக்காங்க’ என்று மனதிற்குள் நினைத்தவள்,
“சாரி..! நீங்க” என்றாள் புரியாமல்.
“நீங்க யாருன்னு சொல்லுங்க. நாங்க டாக்டர் அகனைப் பார்க்க வந்திருக்கோம்” என்றான் விவேக் முந்திக் கொண்டு.
“ஹோ..!” என்றவள் அகனின் சீட்டில் அமர்ந்து கொண்டு,
“சொல்லுங்க அவர் என்கிட்ட தான் வேலை செய்றார்” என்றாள்.
“ஹாஸ்பிட்டலுக்கு அவர் தாங்க சேர்மன். ஆனா அவருக்கு நான் தான் சேர்மன். இன்பேக்ட் அவர் என்கிட்ட தான் ஹஸ்பண்டா வொர்க் பண்ணிட்டு இருக்கார்” என்றாள் சிரிக்காமல். அவள் சொன்ன விதத்தில் பக்கென்று சிரித்திருந்தான் தீரன். குமரன் வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள, அவனுக்கோ நதியின் ஞாபகம் வந்து தொலைத்தது.மொழியின் முகத்தில் ஒரு அமைதியான சிரிப்பு மட்டுமே.
“யுகா” என்றவனின் குரலில் இவர்கள் திரும்ப, அகனோ கதவில் சாய்ந்தபடி அவளை முறைத்திருந்தான்.
“ஹேய் பார்த்து..! உன்னை இப்படி சடனா மூவ் பண்ணக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல” என்றவன், அவளை அப்படியே அமர வைத்தான்.
“என்னை எதுக்கு வர சொன்னிங்க?” என்றாள் மூக்கு விடைக்க.
“இதைக் குடிச்சுட்டு போ” என்று அவளிடம் வற்புறுத்தி ஒரு பழச்சாறை திணித்தவன்,
“சாரி சார்..! ஒரு ஆப்ரேஷன் முடிய டிலே ஆகிடுச்சு. இப்போதான் ரெப்ரஷ் பண்ணிட்டு வரேன். ஐ ஆம் டாக்டர் அகன் கார்த்திகேயன். அன்ட் ஷீ இஸ் மை வொயிப் டாக்டர் யுகந்தாரா” என்று அவளையும் அறிமுகப் படுத்தி வைத்தான்.
“ஹெலோ டாக்டர்..! நான் ஏசிபி அதிதீரன், இன்ஸ்பெக்டர் உதயகுமரன், இன்ஸ்பெக்டர் விவேக்” என்று அவர்கள் தாமாகவே அறிமுகமாகிக் கொள்ள, விவேக் அகனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஏசிபியா?” என்று அதிர்ந்த யுகா,
“சாரி சார்” என்றாள் சிரிப்புடன்.
“இதுல என்ன இருக்கு டாக்டர்?” என்றான் தீரன்.
“டாக்டர்..! நீங்க அழகா இருக்குறதால டாக்டர் ஆகுறிங்களா? இல்ல டாக்டர் ஆகிட்டாலே அழகாய்டுவிங்களா? எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு” என்றான் விவேக்.
‘என்னைய மாதிரியே ஒரு ஜீவன், இவனை சைட் அடிக்குது’ என்று வாயை மூடி யுகா சிரிப்பை அடக்க,
“சரிங்க அகன்” என்று பல்லைக் கடித்தபடி சிரித்துக் கொண்டே சென்றாள்.
“டாக்டர், இப் யு டோன்ட் மைன்ட்.. நீங்க இவங்களை கொஞ்ச நேரம் உங்க ரூம்ல இருக்க அலோ பண்ணனும்” என்றான் தீரன் யுகாவிடம்.
“ஷ்யர் சார்” என்றவள்,
“வாங்க பியூட்டி” என்றவள் மொழியை அழைத்துக் கொண்டு சென்றாள்.
“அவ எப்பவும் அப்படித்தான். நீங்க எதுவும் நினைச்சுக்காதிங்க” என்றான் அகன்.
“நோ..! நோ! அப்படியெல்லாம் இல்லை டாக்டர். உங்க வொயிப் ஹியூமரஸ் பெர்சன். உங்களுக்கு லைப் போரடிக்கவே அடிக்காது” என்றான் தீரன்.
“அது உண்மை தான். என்ன அவளுக்கு போரடிக்கும் போதெல்லாம் என்னையப் போட்டு அடிப்பா. வேற எதுவும் இல்லை” என்றவனின் இதழ்கள் இயல்பாய் புன்னகைத்திருக்க, குமரனுக்கும் சிரிப்பு வந்தது.
“என்ன குமரன்? அனுபவம் பேசுதா? நீங்களும் சிரிக்கிறிங்க?” என்றான் தீரன்.
“மேரேஜ் பண்ணி பாருங்க சார். நீங்களும் ஆட்டோமேட்டிக்கா சிரிப்பிங்க” என்ற குமரன்,
‘நம்ம பொழப்பும் சிரிப்பா சிரிக்கும்’ என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
“என்ன விஷயமா என்னை பார்க்கணும்னு சொன்னிங்க சார்?” என்றான் அகன். அதுவரை இயல்பாய் பேசிக் கொண்டிருந்த தீரனின் முகம் சட்டென்று சீரியஸ் மோடுக்கு மாற, குமரனும் விவேக்கும் அதே பாவனையை முகத்தில் காட்டியிருந்தனர்.
‘இது தான் போலீசோ? சட்டுன்னு சீரியஸ் மோடுக்கு போய்ட்டாங்களே’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அகன்.
“நீங்க ரொம்ப லக்கி டாக்டர். உங்க ஹஸ்பண்ட் கண்ல அவ்ளோ லவ் தெரியுது” என்றாள் மொழி.
‘அட நீ வேறம்மா..! அவனை கரெக்ட் பண்ண பட்ட பாடு எனக்குத் தானே தெரியும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்,
“ஏசிபி உங்க ஆளு போல?” என்றாள் சிரிப்புடன்.
“அச்சோ டாக்டர் அப்படியெல்லாம் இல்லை” என்று மொழி பதற,
“பேச்சு பேச்சா இருந்தாலும், அவர் பார்வை நிமிஷத்துக்கு ஒரு தரம் உங்ககிட்ட வருது. அவர் கண்ணுலையும் லவ் பீலிங்ஸ் தெரியுதே? நீங்க என்னடான்னா இல்லைன்னு சொல்றிங்க?” என்ற யுகாவை புரியாமல் பார்த்திருந்தாள்.
“நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க டாக்டர்” என்றாள் மொழி.
“நீங்க சரியா புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறேன். இட்ஸ் ஓகே.. நீங்க இங்க வெயிட் பண்ணுங்க. நான் இதோ வந்திடுறேன்” என்றபடி சென்று விட்டாள் யுகா.