கோவை கோனியம்மன் கோவில். காலை பதினொரு மணிக்கு கதிரவன் மெல்ல உச்சத்துக்கு வந்து கொண்டிருந்தான். இதமான காற்றில் மிதந்து வந்த துர்கை அம்மனின் பாடல் இனிதாய் செவியை நிறைத்துக் கொண்டிருந்தது.
இந்த ஊருக்கு கோயம்புத்தூர் என்ற பெயர் வர இந்தக் கோவிலும் ஒரு காரணம். அதற்கு ஒரு கதை உண்டு. கோவை நகரின் மூன்று கண்களாக விளங்கும் கோவில்களில் ஒன்றாக விளங்கும் இங்கு பராசக்தியின் ஓர் உருவாக இருந்து கோனியம்மன் அருள் புரிகிறாள். கோன் என்றால் அரசன் அல்லது தலைவன் என்று பொருள். கோன் என்பதன் பெண்பால் கோனி ஆகும். அனைவர்க்கும் அரசி, தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம்… எவைக்கும், எவற்றுக்கும் தலைவி… என்னும் பொருளில் தங்கள் அன்னையை கோனி என்றே மக்கள் அழைத்தனர்.
இருளர் தலைவனான கோவன் என்பவர் கோவிலை சுற்றியுள்ள காட்டைத் திருத்தி ஊராக்கி புதிய ஊரை அமைத்தார். கோவன் அமைத்த ஊராதலால் கோவன் புத்தூர் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் அதுவே கோயம்புத்தூர் என்றாயிற்று.
ஆடி வெள்ளிக் கிழமை ஆதலால் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஊஞ்சலில் கோலாகலமாய் வீற்றிருந்த அன்னையை பக்திப் பரவசத்தோடு கும்பிட்டுக் கொண்டிருந்தனர் பக்த ஜனங்கள். அப்போது தான் கோவிலுக்குள் நுழைந்த ஹர்ஷா, அருள்வடிவான தேவியை கண்களில் நிறைத்துக் கொண்டு அழகிய உதடுகள் தேவியின் மந்திரம் சொல்ல, இரு கை கூப்பி வணங்கி, ஓரமாய் நின்று கொண்டாள்.
சின்னக் கரை வைத்த கேரளத்து சந்தனக் காட்டன் புடவை அவளது மெலிந்த பொன்னிற உடலில் பாந்தமாய் தழுவி இருந்தது. இடுப்பைத் தாண்டி நீண்டிருந்த கருங்கூந்தலை தளர்வாய் பின்னலிட்டு ஒதுக்கி இருந்தாள். அளவான உயரம், பெரிய கண்கள், சிறிய நாசி, சிவந்த சிறிய உதடுகள் என கதாநாயகிக்குரிய சர்வ லட்சணங்களுடனும் இருந்தாள். நெற்றியில் சின்ன ஸ்டிக்கர் பொட்டின் மேலே சந்தனம் இடம் பிடித்து, முக அழகைக் கூட்டியது.
கூட்டம் மெதுவாய் கலையத் தொடங்க மற்ற தெய்வங்களைப் பிரார்த்தித்து விட்டு அம்மனின் சன்னிதியை நோக்கி நடந்தாள். அங்கே ஒவ்வொருத்தரும் அர்ச்சனை சீட்டுகளை நீட்டிக் கொண்டிருக்க அர்ச்சகர் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். ஹர்ஷாவும் அங்கே சென்று நின்று கொண்டாள். அப்போது அங்கே புன்னகை முகத்துடன் பழைய கே ஆர் விஜயா சாயலில் ஒரு தடித்த பெண்மணி வந்து நிற்க, அவருக்கு அருகில் புன்னகைக்கத் தெரியாத முகத்துடன் ஒரு நெடியவன் நின்று கொண்டிருந்தான்.
அவர்களைக் கண்டதும் சிநேகமாய் புன்னகைத்த அர்ச்சகர், அவர்களிடம் வேகமாய் வந்தார். “வாங்கோம்மா, வாங்க தம்பி…” என்றவர் அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டார்.
“யார் பேருக்கு அர்ச்சனை பண்ணனும்…”
“ரெண்டு பையனுங்க பேர்லயும் பண்ணிடுங்க சாமி…” என்றார் ரேணுகா தேவி புன்னகையுடன்.
அவர்களது குடும்பத்தோடு நல்ல பழக்கம் இருந்ததால் அவர் தலையாட்டிவிட்டு, மந்திரத்தை சொல்லிக் கொண்டே அம்மனை நோக்கி நகர, அவர்களுக்கு எதிர்ப்புறம் கண் மூடி நின்றிருந்த ஹர்ஷாவையே ஒரு நிமிடம் அந்தப் பெண்மணி ஆவலுடன் பார்த்தார். அவருக்கு அழகான பெண்களைப் பார்த்தாலே தனக்கு இது போல் ஒரு பெண் மருமகளாய் வந்தால் நன்றாய் இருக்குமே என நினைப்பது வழக்கம்.
“ம்ம்… எவ்ளோ அழகா இருக்கா, என் மகனுக்கும் இந்த மாதிரி லட்சணமா, அடக்கமா ஒரு பொண்ணு அமைஞ்சா நல்லா தான் இருக்கும்… இவன் சரியான சாமியார் கேசால்ல இருக்கான்… கண்ணுக்கு முன்னாடி இவ்ளோ அழகா தேவதையாட்டம் ஒரு பொண்ணு நிக்குது… இவன் அதைப் பாக்கறானான்னு பாரு… தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கானே ஒழிய ஒரு ஆசையும் கிடையாது… அம்மா தாயே, நீதான் இவன் மனசை மாத்தி, கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்…” அவர் அம்மனைப் பிரார்த்தித்துக் கொண்டார்.
சஞ்சய் கிருஷ்ணா… மாநிறம், அடர்ந்த சிகை, அகன்ற நெற்றி, கூர்த்த நாசி… அழுத்தமான தடித்த உதடுகள், அலட்சியமும் ஆணவமும் நிறைந்திருந்த அதிகாரக் கண்கள்… உதட்டில் பேருக்குக் கூடப் புன்னகை இல்லை… வளவளத்த தாடை… தடித்த மீசை… என ஆறடியில் கம்பீரமாய் இருந்தான். அலட்சியமாய் திறந்து விடப்பட்ட மேல் பட்டனின் வழியாய் தெரிந்த கழுத்துப் பகுதியில் தங்க செயின் பளபளத்தது… இளநீல முழுக்கை சர்ட்டும் அடர் நீல ஜீன்சும் அவனது கம்பீரத்தை மேலும் கூட்டியது. ஆண்களையே பொறாமைப்பட வைக்கும் கம்பீரமான தோற்றம்.
அம்மனைக் கும்பிட்டவன் கண்ணைத் திறந்து மேலே உள்ள கோவில் மணியை அடிக்க முயல, அதே நேரத்தில் அவனுக்கு முன்னில் நின்று கொண்டிருந்த ஹர்ஷாவும் மணியின் மீது கையை வைத்தாள்.
இருவரின் கைகளும் உரசிக் கொள்ள ஹர்ஷாவின் முகம் சிறு கூச்சத்துடன் கையை மீட்டுக் கொண்டது. சஞ்சயின் முகமோ தீயைத் தீண்டியது போல மேலும் கடினமானது. அவளை முறைத்தவன் சற்றுத் தள்ளி நின்று கொண்டான்.
அவனது முறைப்பின் காரணம் புரியாமல் குழம்பத்தில் சுருங்கியது அவளது தாமரை முகம்.
“சாரி…” அவனிடம் கூறியவள் பிரசாதம் வாங்க சென்றாள். அவன் விறைப்புடனே அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
தீபாராதனை காட்டிவிட்டு அர்ச்சகர் அவசரமாய் நீட்டிய விபூதித் தட்டு தள்ளி நின்ற அவன் அருகில் வராமல் போக அன்னையிடம் நகர்ந்தான். அதற்குள் நெற்றியில் விபூதியைத் தொட்டுவிட்டு அங்கிருந்த கிண்ணத்தில் கையில் பாக்கியிருந்த விபூதியை அவர் போட்டு விட்டிருந்தார்.
மகனை ஏறிட்டவர், “என்னப்பா பிரசாதம் வாங்கலையா… அடடா… நானும் கிண்ணத்தில் போட்டுட்டேனே…” என்று கூற அதைக் கவனித்து விட்ட ஹர்ஷா, “அம்மா… இந்தாங்க, பிரசாதம்…” என்று தன் கையை நீட்டினாள்.
அவளது நீண்ட வெண்ணிற விரல்களைத் தாண்டி ரோஜா நிற உள்ளங்கைக்கு நடுவில் இருந்த விபூதியும் குங்குமமும் அவனைப் பார்த்து சிரிக்க, “தேவையில்லை… நான் அர்ச்சகர் கிட்டயே வாங்கிக்கறேன்…” என்று மறுத்து விட்டான் அவன். அவனது கம்பீரமான குரலில் இருந்த கடினம் அவளுக்கு வியப்பாய் இருந்தது.
“ஒரு சின்ன விஷயம்… இதற்கு ஏன் இத்தனை யோசிக்கிறான்…” என அவள் நினைத்துக் கொள்ளும்போதே அவள் கையில் இருந்த விபூதியை எடுத்து மகனது நெற்றியில் வைத்து விட்டார் ரேணுகா.
“இனி எத்தனை பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டு வந்து தீபாராதனை காட்டி பிரசாதம் கொடுப்பாரோ… அப்புறம் நீ லேட் ஆயிருச்சுன்னு குதிப்ப… யார் கொடுத்தாலும் பிரசாதம் ஒண்ணுதானே, அதை மறுக்கக் கூடாது…” கூறிக் கொண்டே குங்குமத்தையும் எடுத்து அவன் நெற்றியில் வைத்து விட்டார்.
அவனது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தாலும் நிறைந்திருந்த கூட்டத்தின் நடுவே அன்னையை எதுவும் சொல்லாமல் அமைதி காத்தான். அவரது அர்ச்சனைத் தட்டில் இருந்த மல்லிகைப் பூவை எடுத்து அவளிடம் நீட்டி,
“இந்தாம்மா… இதைத் தலையில் வச்சுக்கோ…” என்று கொடுத்தார்.
“நன்றி மா…” என பிகு செய்யாமல் புன்னகையுடன் வாங்கிக் கொண்டவளின் எதார்த்தம் அவருக்குப் பிடித்திருந்தது. ஆனால் இது எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை என்பது போல் உர்ரென்று நின்று கொண்டிருந்தான் சஞ்சய்.
சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு அவள் அங்கிருந்து நகர அவளையே ஏக்கமாய் தொடர்ந்த அன்னையின் பார்வையை தடை செய்தது மகனின் குரல்.
“அம்மா… கோவிலுக்கு வரணும்னு சொன்னிங்க… வந்து சாமி கும்பிட்டாச்சு, கிளம்பலாம்…” அவனது குரலும் உருவத்தைப் போலவே கம்பீரமாய் இருந்தது.
“ம்ம்… பிரகாரத்தை சுத்திட்டுக் கிளம்பலாம் பா…”
“அம்மா, காலைல தானே உங்களுக்கு கால் வலின்னு சொன்னிங்க… இப்போ பிரகாரத்தை சுத்திட்டு இன்னும் வலியை அதிகமாக்கவா… அதெல்லாம் வேண்டாம், வாங்க வீட்டுக்குக் கிளம்பலாம்…”
“டேய் சஞ்சு… கோவிலுக்கு வந்துட்டு இப்படில்லாம் சொல்லக் கூடாதுப்பா… எல்லா வலியையும் வேதனையையும் அவ தீர்த்து வைப்பான்னு நம்பி தானே அவகிட்ட வரோம்… உனக்கு வரப் பிடிக்கலைனா நீ இங்கேயே இரு… நான் பிரகாரத்தை சுத்திட்டு வரேன்…” என்றார் அவர்.
“ம்ம்… சொன்னாக் கேக்க மாட்டிங்களே… எல்லாத்துக்கும் பிடிவாதம்… சரி நான் முன்னாடி வெயிட் பண்ணறேன்… சீக்கிரம் சுத்திட்டு வாங்கம்மா…” என்றவன் நகர்ந்தான்.
அவரும் அம்மனை வேண்டிக் கொண்டே பிரகாரத்தை சுற்றத் தொடங்கினார். அலைபேசியை நோண்டிக் கொண்டு வெளியே காத்திருந்தவனின் ஜாதகத்தை அதற்குள் நாம் அலசி விட்டு வருவோம்.
ரேணுகா தேவி, கோபால கிருஷ்ணன் தம்பதிகளுக்கு சஞ்சய் கிருஷ்ணா, விக்ரம் கிருஷ்ணா என இரு மகன்கள். கோபால கிருஷ்ணனின் பிசினஸ் பார்ட்னர் ஒருவர் அவரை தொழிலில் ஏமாற்றிவிட, கடனில் மூழ்கிப் போனவரை, கரை சேர விடாமல் அவரது பலகீனமான இதயம் துடிப்பதை நிறுத்தி நின்று போனது.
தந்தை இறக்கும் போது எஞ்சினியரிங் இறுதி ஆண்டில் இருந்தான் சஞ்சய். தந்தை விட்டுச் சென்ற கடனையும், அந்த சின்ன ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் தன் தோளில் தாங்கிக் கொண்டவன், அதைப் பார்த்துக் கொண்டே படிப்பையும் முடித்தான். அவனது தந்தையின் நண்பர், ராம் குமார் ஒருவரை மட்டுமே நம்புவான். அவரது ஆலோசனைகளை தந்தையின் ஆலோசனையாய் ஏற்று காரியத்தில் இறங்கத் தொடங்கினான்.
தந்தை கொண்ட ஒரு நட்பின் நம்பிக்கை மீது விழுந்த அடி அவரது உயிரையே வாங்கிச் சென்றாலும், மற்றொரு நட்பு சிறந்த வழிகாட்டியாய் அவனை உயரங்களுக்கு அழைத்துச் சென்றது. எல்லாரையும் சந்தேகப் பார்வையோடு மட்டுமே பார்க்கத் தொடங்கியவன், அவனது நிழலைக் கூட நம்ப மறுத்தான். அந்தச் சின்ன வயதில் அவனுக்குக் கிடைத்த அனுபவம், பணம் மட்டுமே குறிக்கோளாய் மாற்றி விட்டது. ஊண், உறக்கம் மறந்து தொழில் மட்டுமே குறிக்கோளாய் இருந்து கஷ்டப்பட்டதற்கு நல்ல பலனும் கிடைத்தது. குறுகிய காலத்தில் அவனது வளர்ச்சியைக் கண்டு பிசினஸ் உலகமே வியந்தது.
ஒரு கம்பெனி பல கிளைகளாய் விரிவடைய, SV குரூப் ஆப் கம்பெனீஸ் பெரிய அளவில் விரிந்தது.
SV பில்டர்ஸ், SV கன்சல்டன்சி, SV ஹோம் டெகரேட்டர்ஸ், SV டெக்னாலஜிஸ் என அவனது கால் பதிந்த இடமெல்லாம் வெற்றியே கிடைத்தது. எட்டு வருட கடின உழைப்பில் அவனது நிலை இளம் தொழிலதிபர்கள் லிஸ்டில் முன்னணியில் கொண்டு நிறுத்தியது.
முப்பதை நெருங்கிக் கொண்டிருந்த அவனுக்கு கல்யாணத்தில் நாட்டம் இல்லாமல் இருக்கவே, அன்னை ரேணுகா தேவியின் மனதுக்குப் பெரும் கவலையாய் இருந்தது. இப்படியே விட்டால் மகன் ஒற்றை மரமாய் நின்று விடுவானோ என நினைத்து அவரும் பல விதத்தில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார். அவன்தான் அசைந்து கொடுக்கவில்லை.