வளவன் இரண்டு மூன்று முறை சென்னைக்கு வேலை விசயமாக வந்திருக்க அப்போது இருவரும் சந்தித்து கொள்வது உண்டு…அப்போதெல்லாம் நிரஞ்சனாவை பற்றி பலமுறை கௌதம் சொல்லியிருந்தாலும் இப்படி ஒரு வாயாடியை அவன் எதிர்பார்க்கவில்லை..
…………………………………………….
அனைவரும் ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தனர் …கௌதம் தீபாவின் கேஸ்விசமாக ஹாஸ்பிட்டலில் இருந்தபடியே வெளியில் சென்றிருக்க இந்த கேஸ் பற்றி தீவிரமாக விசாரிக்க துவங்கியிருந்தான்.. சாரதா மகளின் துணையோடு சமைக்க துவங்கவும் இயல்பு போல பேச்சியும் அப்பத்தாவும் ஆளுக்கு ஒரு வேலையை கையில் எடுத்திருந்தார்கள்.. வளவனும் சேதுபதியும் முக்கிய வேலையாக வெளியில் கிளம்ப தர்மாவும் அவர்களோடு சென்றிருந்தான்..
கௌதமிற்கு மதியம் வரை மூச்சுவிடக்கூட நேரமில்லை.. மணி இரண்டை தொடவும் இப்போதுதான் வளவனின் நியாபகம் வந்தது.. விருந்தாளிகளை உபசரிக்கும் கடமை தனக்கிருப்பதை உணர்ந்தவன் வேகமாக வீட்டிற்கு கிளம்பியிருக்க பெண்கள் அனைவரின் குரலும் கிச்சனில் , நிரஞ்சனாவின் குரல் வரவில்லை.. பார்வையாலேயே நிரஞ்சனாவை தேட அவள் மட்டும் இல்லை…
ராஜியின் அறை சாற்றியிருக்கவும் மெதுவாக திறந்து உள்ளே பார்வையிட நிரஞ்சனா இன்னும் அழுகையில்தான்.. நிரஞ்சனாவால் தோழியின் இழப்பை தாங்க முடியவில்லை.. அவ்வளவு நேரம் தங்களோடு அரட்டை அடித்துவிட்டு இப்போது உயிரோடு இல்லையென்றால் அதுவும் அவ்வளவு கொடூரமாக அவள் செத்தது.. தன் விளையாட்டு தனத்தால்தானோ..!! வீட்ல அவ்வளவு படிச்சு படிச்சு சொல்லிவிட்டும் நான்தான் அதை பெரிசா எடுத்துக்கல..!!
கௌதம் கதவை லேசாக சாத்திவிட்டு உள்ளே வர நிரஞ்சனா அவனை கவனிக்கவில்லை… முழங்காலில் முகம் புதைத்திருக்க முதுகு அழுகையால் குலுங்கியது.. அவள் அருகில் சென்றவன் லேசாக தொண்டையை செரும அழுகையோடு நிமிர்ந்து பார்த்தவள் கௌதமை பார்க்கவும் கண்களை துடைத்துக் கொண்டாள்…
“இன்னும் எத்தனை நாளைக்கு அழுதுட்டே இருக்க போற..?? கஷ்டமாத்தான் இருக்கும் பட் மனச தேத்திக்கோ.. வேற வழியில்ல.. இந்த கேஸ்விசயமா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..”
அடே கிராதகா என்பது போல அவனை பார்த்தவள் கண்களை இன்னும் அழுத்தமாக துடைத்து “என் ப்ரண்ட் தீபா செத்ததுக்கு நீங்கதான் காரணம்.. நீங்க மட்டும்தான்…” நெற்றிக்கண்ணை திறந்திருந்தாள்..
இது என்ன புதுசா..?? அவளை முறைக்க..” நான் அந்த குழந்தைனு நினைச்சு உங்களுக்கு மாத்தி கொடுத்தப்போ என் முகத்தை பார்க்கவும் நான் யார்ன்னு தெரிஞ்சிருக்கும்தான.. ?? அட அப்பதான் தெரியல.. திரும்ப நான் வந்து கேட்டபோ என் முகத்தை பார்த்துட்டு நீங்க கொடுத்திருந்தா எல்லாரும் திரும்பி இருப்போம்.. நானும் தீபாவ அப்பவே தேடியிருப்பேன் அதவிட்டுட்டு போலிஸ்ல பிடிச்சு கொடுப்பேன்.. மன்னிப்பு கேளுன்னு என்னலாம் ஆட்டம் காட்டி இப்போ என ப்ரண்ட் செத்து போனதுதான் மிச்சம்.. உங்கள மாதிரி ஒரு ஆள போய் உங்க தங்கச்சி நல்லவரு… வல்லவருன்னு உங்க போட்டோவ காட்டி அவ்ளோ புகழ்ந்தாங்க.. ச்சே நானும் அத நம்பிட்டேன்…!!”
அவளே ஒரு கோணத்தில் முடிவெடுத்து அவனை திட்டிக்கொண்டே இருக்க.. நேற்றே அவனுக்கு தோன்றியதுதான்.. இந்த பொண்ணு நம்மகிட்ட தைரியமா அவ்ளோ வாய் பேசும்போதே கொஞ்சம் யோசிச்சு இருக்கனும்.. ஆனா ஏதோ சின்னப்பிள்ளதான் தங்கச்சியா இருக்கும்னு நினைச்சோமே தவிர இப்படி ஒரு பேட்டை ரௌடிய எதிர்பார்க்கல.. அவன் மனசாட்சியே ஒத்துக்கொள்ள அங்கு நிரஞ்சனா இன்னும் அவனை திட்டுவதை நிறுத்தியபாடில்லை..
“ப்பச் கொஞ்சம் நிறுத்துறியா..??.எப்ப பாரு எண்ணெயில போட்ட கடுகாட்டம்..??”
“நான் ஏன் நிறுத்தனும் …?? எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான்.. என் ப்ரண்ட் உங்களால மட்டும்தான் செத்தா..!!” இன்னும் இன்னும் வீம்பாய் அவனிடம் சண்டைக்கு நிற்க இரண்டு மூன்று முறை குறுக்கிட்டு பார்த்தவன் பிரயோஜனம் ஏதும் இல்லாமல் பளாரென அவள் கன்னத்தில் ஒன்று வைத்திருந்தான்..
அதிர்ச்சியில் தானாகவே அவள் வாய் மூடியிருக்க “மூச்..இனி வாயத்திறந்த..??”
கௌதம் விரலால் மிரட்ட நிரஞ்சனா வாழ்க்கையில் வாங்கும் முதல் அடி.. அப்பா அதட்டுவாறே தவிர கைதொட்டு அடித்தது இல்லை.. அண்ணன்.. சித்தப்பா இருவருக்கும் செல்லப்பெண் இவள்.. தலைகிறுகிறுவென சுற்ற மீண்டும் மயங்கியிருந்தாள்..
கீழே விழப்போனவளை தாங்கிப்பிடித்தவன் கட்டிலில் படுக்க வைத்து,“வாய் மட்டும்தான் போல..!! பொணத்த பார்த்தாலும் மயங்கி விழறா..?? அடிவாங்கினாலும் மயங்கி விழுறா..?? இவளலாம்..!!” அங்கிருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளிக்க… நிரஞ்சனா மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்தாலும் அவன் அடித்ததே கண்முன்னால்..!! அடுத்து என்ன நடந்திருக்குமோ.. கதவை திறந்து கொண்டு ராஜி வந்தாள்..
“ஒன்னுமில்லமா இவங்க ப்ரண்ட் டெத் விசயமா கொஞ்சம் விசாரிக்கலாம்னு வந்தேன்..”
நிரஞ்சனாவின் முகத்தை பார்த்தவளுக்கு அதில் இன்னும் அதிர்ச்சி இருப்பது போல தெரிய ,
“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் அப்புறம் மெதுவா விசாரிங்களேன்.. இன்னும் டயர்டா இருக்காங்க..”
நிரஞ்சனாவை பார்த்தவன் ஏதும் பேசாமல் வெளியில் வந்திருக்க அவள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.. தன்னை ஒருவன் அடிப்பதா…?? போலிஸ்னா எதுவேணா செய்யலாமா…!!
……………………
சாரதா போன் செய்யவும் ஆன் செய்தவன் “சொல்லுங்ம்மா…??”
“கௌதம் மாப்பிள்ள ராஜிய வெளியில கூட்டிட்டு போக ஆசைப்படுறாரு.. நான் ஒன்னும் சொல்ல முடியல.. கல்யாணத்துக்கு இன்னும் நாளிருக்கு தனியா அனுப்பி யாராச்சும் பார்த்தா அதுவும் சங்கடமா இருக்கும்.. நீ கொஞ்சம் கூட போயிட்டு வாயேன்பா..??”
“ஏன்மா தர்மா எங்க..??”
“அவன் மாப்பிள்ளை பெரியப்பாவோட ஏதோ முக்கியமான வேலையா வெளியில இருக்கானாம் அவன்கிட்ட போன்ல கேட்டுட்டுதான் உன்கிட்ட கேட்கிறேன்..”
சற்று யோசித்தவன் “சரிமா நான் வர்றேன் எத்தனை மணிக்கு கிளம்புறாங்க..??”
“ஆறு மணிக்கு மேல ஆகும்பா…”
ஆறரை போல கௌதம் வீட்டிற்கு வர அனைவரும் தயாராய் இருந்தார்கள் பெரியவர்கள் வேறு அம்மன் கோவிலுக்கு போவதாக சொல்ல இவன் குளித்து உடைமாற்றி வந்தான்.. சாதாரணமாக ஜீன்ஸ் டீசர்ட்டில் வந்திருக்க பெண்கள் இருவரும் இன்னும் ரூமில்தான்..
“என்ன.. வளவன் இன்னும் ராஜி கிளம்பலையா…??”
“எங்க ரெண்டும் ரூம்குள்ள போய் 2 மணி நேரம் ஆச்சு என்ன பண்றாங்கன்னு தெரியல.. ??”
கௌதம் தங்கைக்கு போன் செய்ய “இதோ வர்றோம்ணா..??”
இருவரும் கிளம்பி வெளியில் வர தேவதைகள் போல இருந்தனர்… ராஜி வளவன் வாங்கி கொடுத்த டிசைனர் சேலையில் இருக்க நிரஞ்சனா வெள்ளைநிற சுடிதார் ஆங்காங்கே கல் பதித்து முகம் அழுகையாலும் அவன் அடித்த அதிர்ச்சியில் சோபையாக இருந்தாலும் கௌதமால் கண்ணை வேறுபக்கம் திருப்ப முடியவில்லை..
தங்கையும் அவளும் ஏதோ பேசியபடி வர இருவரையும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.. நிரஞ்சனா ராஜியிடம் வளவனை காட்டி ஏதோ சொல்ல வெட்கத்தில் முகம் சிவந்தவளை பார்த்து நிரஞ்சனாவுக்கும் சிரிப்பு..
மதியம் நிரஞ்சனாவை அடித்ததில் குற்றவுணர்வோடுதான் வந்திருந்தான்… உறவுகாரனாக நினைத்துதான் தன்னை பார்க்கவும் அப்படி பேசியிருப்பாளோ..?? சிரித்தபடி வந்தவள் கௌதமை பார்க்கவும் சட்டென்று சிரிப்பு நின்றிருக்க ஏதும் பேசாமல் அண்ணனின் மறுபக்கம் சென்று நின்று கொண்டாள்..
“போகலாம்ணே..??”
நால்வரும் கிளம்ப வளவனுக்கு ராஜியிடம் பேச ஆசையாக இருந்தாலும் கௌதம் இருப்பதால் அமைதியாக வர… “எங்க போகலாம் சொல்லுங்க..??”
அதற்குள் சாரதா குறுக்கிட்டு “பக்கத்தில ஒரு பிள்ளையார்கோவில் இருக்கு மாப்பிள்ள.. அங்க போய் சாமி கும்பிட்டுட்டு அப்புறம் எங்கவேணா போங்க.. ராஜியின் கையில் ஒரு பூஜை கூடையை திணித்தவர் விளக்கு வைச்சிருக்கேன் ரெண்டு பேரும் மறக்காம போட்டிருங்க.. நாங்க அம்மன் கோவிலுக்கு போறோம்..”
வளவனின் காரில் ஆண்கள் இருவரும் முன்னால் அமர்ந்து கொள்ள பெண்கள் பின்னால்.. கண்ணாடியில் நிரஞ்சனாவை பார்க்க ஏனோ இதுவரை எந்த பெண்ணையும் இப்படி ரசிக்க தோன்றியதில்லை.. அவள் கூந்தல் முடியிலிருந்து மெல்ல மெல்ல பார்வை அவள் முகத்தை மொய்க்க.. எதார்த்தமாக நிமிர்ந்தவள் கண்ணாடியில் கௌதம் தன்னை பார்ப்பதை உணர்ந்து இன்னும் ஜன்னலோரம் நகர்ந்திருந்தாள்..
கௌதம் தன்னை அடித்ததிலேயே அவன் மேல் சொல்லொணா வெறுப்பு வந்திருக்க அவன் முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை.. தீபாவின் இறப்பிற்கு அவனையே முழுகுற்றவாளியாக அவள் மனம் எண்ணத் துவங்கியிருந்தது.. தன்னை வளவனின் தங்கை என்பதை அறிந்தே வேண்டுமென்றே அப்படி நடந்து கொண்டாற் போல நினைத்தாள் ..
அனைவரும் கோவிலில் விளக்கு போட்டு அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டிருக்க அடுத்து பக்கத்தில் இருந்த பார்க் போகலாம் முடிவெடுத்தார்கள்.. கௌதம் பார்வையாளராகவே இருந்தானே தவிர வாய்திறக்கவில்லை.. அடிக்கடி அவன் பார்வை நிரஞ்சனாவை வருடியிருந்தது..
நால்வரும் பார்க்கிற்குள் நுழைய வளவனின் இருபுறமும் நிரஞ்சனாவும், ராஜியும் சற்று நேரம் அமைதியாக வந்தவன் “வளவன் உங்க தங்கச்சிக்கிட்ட இந்த கேஸ் விசயமா கொஞ்சம் பேசனும்..?? நாங்க இங்கயே பேசிட்டு இருக்கோம்..?? நீங்க சுத்தி பார்த்துட்டு வாங்க..”
“இல்ல இல்ல அவ இன்னைகெல்லாம் ரொம்ப மூட் அவுட்ல இருக்கா..?? பயந்துட்டா போல..!! என் கூடவே இருக்கட்டும் நீங்க என்ன கேட்கிறதா இருந்தாலும் கேளுங்க..??” தங்கையை அணைவாய் அணைத்துக்கொள்ள,
“ஓஓஓஓ உங்க தங்கச்சி ரொம்ப பயந்த சுபாவமா..!! சரி நீங்களும் துணைக்கு இருங்க..??” பேச்சு நன்றாக இருந்தாலும் பார்வை நிரஞ்சனாவை நக்கலாக பார்த்தபடி நீ பயந்தவ…?? நான் நம்பிட்டேன்..!! என்பது போலிருக்க…
“ச்சு அண்ணே எனக்கு எதுக்கு துணை…?? நீ அண்ணி கூட பார்க் சுத்தி பார்க்க போக வேணாம்.. வெளியில எங்காச்சும் கூட்டி போயிட்டு வா.. நா இங்கயே இருக்கேன்.. இங்கதான் இருக்க போகுது இந்த பார்க் எப்ப வேணா பார்க்கலாம் போயிட்டு வாங்கண்ணே..” போகமாட்டேன் பிடிவாதமாய் மறுத்தவனை வம்பு செய்து ராஜியோடு அனுப்பியிருந்தாள்..
வளவனின் கார் வெளியில் கிளம்ப.. “இங்க வந்து உட்காரு..?? உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..??” பக்கத்தில் இருந்த சேரை கைகாட்ட,
எதுவும் சொல்லாமல் அவனை முறைத்தவள் பிள்ளைகள் கூட்டமாய் விளையாடி கொண்டிருந்த ஊஞ்சலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.. அதுவரை கௌதம் இருக்கவும் நிரஞ்சனாவை நெருங்க முடியாது யோசித்தபடி அங்கு மறைந்திருந்த மற்றொரு உருவம் அவள் தனியாக செல்லவும் சற்று இடைவெளி விட்டு தொடர ஆரம்பித்தது…!!!