ராக்கி கன்னத்தில் கண்ணீர் தடம் இருந்தது. இனியவன் இந்துஜா நெற்றியில் கரம் பதித்தான். அமைதியாக அவனை பார்த்தாள்.
காய்ச்சல் குறைஞ்சிருக்கோ!
“ஆமா சார். ஐ அம் ஓ.கே” ராக்கியை பார்த்தாள்.
யாரோ ஒருவனிடம் எப்படி இவன் அமைதியாக உறங்குகிறான்? சிந்தனையுடன் ராக்கியை பார்க்க,
கண்ணிமைக்காமல் தன்னருகே அமர்ந்திருக்கும் இந்துஜாவின் பிறைநெற்றி, வளைந்த கவரும் புருவங்கள், அவ்வப்போது சிமிட்டும் இமைகள், அழகான நாசி, கொவ்வை பழம் போல சிவந்த இதழ்களில் வர சரியாக அவளும் அவனை பார்த்தாள்.
இப்பொழுது அவனிடம் எதுவும் கேட்காமல் ராக்கியை அவன் மீதிருந்து தூக்கினாள். ராக்கி விழித்து இருவரையும் பார்த்தான். அப்பொழுதும் இனியவனின் பார்வை மாறாமல் இருந்தது.
“சித்து…” ராக்கி அழைக்க, “என் செல்லத்துக்கு இன்னும் வலிக்குதா?” பூவை போல மிருதுவாக அணைத்தாள்.
“சித்து..” குழந்தை உதட்டை பிதுக்க இனியவனை பார்த்து விட்டு இந்துஜாவை அணைத்து வலியில் அழுதான். அவளுக்கும் புரிந்தது.
இனியவன் அலைபேசியை ஆன் செய்ய குறுஞ்செய்தி வரும் சத்தம் கேட்டது.
இந்துஜாவிடமிருந்து இனியவனிடம் சென்றான் ராக்கி..
“ராக்கி…” அவள் அழைக்க, ராக்கியை அணைத்தவாறு யாருக்கோ அழைத்தான்.
சார், நான் ராக்கியை கீழ அழைச்சிட்டு போறேன்.
ஷ்ஷ்…என்ற இனியவன் அலைபேசியை காட்டினான்.
“ஹே சார்ம், இன்று கல்லூரிக்கு விடுப்பு எடுத்துருக்கீங்களாம்” ஒருவர் கேட்க, ஆமா சார் கொஞ்சம் பர்சனல் என்றான் இந்துஜாவை பார்த்துக் கொண்டே.
யாரோ பொண்ணு கூட பைக்ல போனதா செய்தி…
குறும்புன்னகை இனியவன் இதழ்களில் தவழ்ந்தது. அதான் சார் பர்சனல்..
எப்போ சார்ம் திருமணம்?
என்ன சார் அம்மா மாதிரி ஆரம்பிக்கிறீங்க?
பெண்களிடம் இதுவரை அதிகம் பேசிக்க கூட மாட்டீங்க. ஒரு பொண்ணு அவங்க கையில் குழந்தை வேற இருந்ததாம். திருமணம் இனி தானா? இல்லை குழந்தையும் உங்களுடையதா? அந்த பக்கம் பேசுபவர் கேட்க, வாய் விட்டு சிரித்தான் இனியவன்.
இந்துஜா புரியாமல் விழிகள் அகல அவனை பார்த்தாள். அவன் சிரிப்பில் ராக்கி இனியவன் மீசையை பிடித்து இழுக்க, ஷ்ஷ்ஆ…சத்தமிட்டான்.
படவா…என்னை ஏமாத்திட்டு இருக்கியா? அந்த பொண்ணு உன்னோட பொண்டாட்டியா?அவர் கேட்க,
“இல்ல சார். நாளை கால் பண்றேன். யாரும் கேட்டால் சொந்தக்கார பொண்ணு. உதவினேன்னு சொல்லுங்க. நாளை பேசலாம்” வைத்து விட்டான்.
அவனை முறைத்த இந்துஜா, “நாங்க உங்களுக்கு சொந்தமா?”
எழுந்து அவளருகே வந்து, “அப்புறம் எப்படி சொல்லி சமாளிப்பது? யாருன்னு தெரியாத பொண்ணு எங்க வீட்ல இருக்கான்னு சொல்லணுமா? மத்தவங்க எப்படி பேசுவாங்கன்னு உனக்கு தெரியாதா?” கேட்டான்.
“நாங்க கீழ போறோம்” அவனிடமிருந்து நகர்ந்து ராக்கியை தூக்கி நொடிக்குள் கீழே வந்து நெஞ்சில் கை வைத்தாள்.
“ஹப்பா இப்படி அடிக்குது?” ராக்கியை இறக்கி விட்டு அமர்ந்தாள். இருவரும் புன்னகையுடன் அவளை பார்க்க, சற்று நேரத்திலே இனியவனும் வந்து விட்டான்.
“சோர்வா இருந்தால் ஒய்வெடும்மா” குழலி புன்னகைத்தார்.
“இப்ப பரவாயில்லை ஆன்ட்டி” ராக்கிக்கு அருந்த பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்நேரம் தான் கீழே வந்தான் இனியவன்.
அண்ணா, சுவேதா உன்னிடம் கேட்க சொன்னா?
என்ன கேட்கணும்?
அவளுக்கு உன்னை பிடிச்சிருக்காம். நீ என்ன சொல்ற? சீரியசாகவே கேட்டான் விஷ்ணு.
வேகமாக அவனை பார்த்தாள் இந்துஜா.
“அந்த பொண்ணு போட்டா இருந்தா காட்டு விச்சு” இந்துஜாவை பார்த்துக் கொண்டே குழலி தன் மகனிடம் கேட்டார்.
அவன் காட்ட, “அம்சமா தான் இருக்கா” குழலி கூறி இனியவனை பார்க்க, அவனிடம் பதிலே இல்லை. ஆனால் விழிகள் அனைவரையும் பார்த்து இந்துஜாவிடம் நிலைத்தது.
“யவா, கேட்டால் பதில் சொல்லணும்? நானும் இரண்டு வருசமா பொண்ணு பார்த்துட்டு இருக்கேன். எல்லா பொண்ணையும் வேண்டாம்னு சொல்லீட்டு இருந்தால் என்ன அர்த்தம்?” சினமாக கேட்டார் குழலி.
“அம்மா…” விஷ்ணு அண்ணன் குணம் தெரிந்து தாயிடம் சத்தமிட்டான்.
இன்னும் ஒரு வருசம் ஆகட்டும்மா…
“ஒரு வருசமா? என்ன நினைச்சிட்டு இருக்க? எனக்கு கஷ்டமா இருக்கு. நீங்க இருவரும் கிளம்பிடுறீங்க. நான் மட்டும் தனியா இருக்கேன்” அழுதே விட்டார் நெடுங்குழலி.
எழுந்து அவர் அருகே அமர்ந்த இனியவன் நிதானமாக, மனசுக்கு நெருக்கமான பெண்ணை இன்னும் நான் பார்க்கலைமா. பார்த்தால் கண்டிப்பாக திருமணம் செஞ்சுக்கிறேன். வேணும்னா வேலைக்கு ஆள் எடுப்போம். அவங்களுடன் பேசிட்டு இருங்க என்றான்.
சுட்டெறிப்பது போல அவனை பார்த்த குழலி, “வீட்டு விசயத்தை அடுத்தவகிட்ட எப்படிடா பேசுறது?”
ஒரே ஒரு வருசம்…
“ஒரு வருசம்னு தெளிவா சொல்ற மாதிரி தெரியுதே அண்ணா! யாரையும் பார்த்துட்டீயோ?” விஷ்ணு கேட்க, இந்துஜாவின் அலைபேசி சிணுங்கியது.
காய்ச்சலா இருந்துச்சு. மருத்துவமனை போயிட்டு வந்தோம். அப்படியே ராக்கிக்கு தடுப்பூசியும் போட்டுட்டோம். அதான் அலைபேசியை அணைத்து வைத்திருந்தேன்.
எப்படி போன?
அ..அ..அது…ஹா…பிரியா வந்தா. போயிட்டு வந்து நானும் ராக்கியும் ஓய்வெடுக்க போயிட்டோம்.
அவன் அழுதுட்டு இருக்கானா?
ஆமா அண்ணா…
நல்லா பார்த்துக்கிறாங்களா இந்து?
அனைவரையும் பார்த்தவள், “நல்லா பார்த்துக்கிறாங்க அண்ணா” என்றாள்.
சரி, எம் மருமகன் கிட்ட கொடு…
ராக்கி மாமா பேசு
மா..மா…
ராக்கி என்ன பண்றீங்க?
“ஊசி…வலிக்குது..” சிணுங்கினான்.
“எம் மருமகனுக்கு வலிக்குதா? மருந்து சாப்பிட்டீங்களா?” அவன் கேட்க, “உவாக்” நாக்கை நீட்டி வாயை குவித்தான் ராக்கி. அழகான மழலையின் பாவனையில் அனைவரும் சிரித்தனர்.
சித்துட்ட குடுங்க..
அண்ணா…
உன்னோட வாய்ஸ் சரியில்லை. பிரச்சனை இல்லையே!
விழிகளை இறுக மூடி திறந்து, “நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். எத்தனை வருசம் கழித்து பிரியாவுடன் இருக்கிறேன்” நடித்தாள் சஞ்சயிடம்.
“புள்ளைய விட்டு போம்மா. நான் பார்த்துக்கிறேன்” குழலி கேட்க, அவர் இனியவனிடம் கூறிய தனிமையை கருத்திற்கொண்டு அறைக்கு சென்றாள்.
உள்ளேயும் வெகு நேரம் இருக்க முடியவில்லை. பிரியசகியின் வீட்டை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். வெளியே ராக்கி சிரிக்கும் சத்தம் பலமாக கேட்டது.
விஷ்ணு தன் தாயுடன் சேர்ந்து ராக்கியை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான். ராக்கி அப்பொழுதும் இனியவனுடன் தான் இருந்தான். அதெல்லாம் கவனிக்கும் எண்ணத்தில் இந்துஜா இல்லை.
“பிரசாத் ஐ லவ் யூ” பிரியசகி பிரசாத்திடம் காதலை கூறியது நினைவிற்கு வந்தது. இருவரும் பிரியாமல் இருந்திருந்தால் என் பிரியாவிற்கு இந்நிலை வந்திருக்காது கண்ணீருடன் படுத்து விட்டாள் இந்துஜா.
இரவு நேரத்தில் விஷ்ணுவுடன் இனியவனும் ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். ராக்கி அவன் வலியை மறந்து அவர்களுடன் இணைந்திருந்தான்.
விஷ்ணு எப்போதும் புன்னகை முகமாக இருப்பான். இனியவன் முகத்தில் நிறைந்த மலர்ச்சியை பார்த்திருக்க மாட்டார். இன்று அவனை இவ்வாறு பார்க்கவும் அவருக்குள் ஒரு நிம்மதி.
“ஒரு நாள் போகட்டும். நாமே இந்துவிடம் நேரடியாக கேட்டு விட வேண்டும்” என்று எண்ணியவாறு இரவு உணவை கவனித்தார்.
“யவா…உணவுண்ண இந்துவை அழைச்சிட்டு வா. விஷ்ணு நீ ராக்கி வெளிய ஓடிறாம பார்த்துக்கோ” ஆணையிட்டு தன் மகன்களின் முகம் பாராது சமைத்த உணவுகளை அடுக்கத் தொடங்கினார்.
விஷ்ணுவும் இனியவனை கண்டு கொள்ளாமல் ராக்கியுடன் விளையாண்டு கொண்டிருக்க, இனியவன் அவளறைக்கு சென்றான்.
சன்னலருகே நின்று பிரியசகியின் வீட்டை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வேவு பாக்குறியா?” திடீர் பேச்சில் திடுக்கிட்டு அவனை முறைத்து, வேவு பார்த்து நான் என்ன செய்றதாம்? பிரியாவை பார்க்கணும் போல இருந்தது. வருவாளான்னு பார்த்துட்டு இருக்கிறேன்.
“அவ உன்னை பார்க்கும் வரை அவ புருசன் விட்டு வைப்பானா? அவள் சுயநினைவில் இருப்பாளோ என்னமோ?” அசால்ட்டாக இனியவன் சொல்ல,
“உங்களால உதவ முடியாதுன்னா போலீஸிடமாவது சொல்லலாம்ல? என்னால பிரியாவை இப்படி பார்க்க முடியல. உடலெங்கும் காயம். எவ்வளவு பெயினா இருக்கும். அதை கூட பொருட்படுத்தாமல் உங்க வீட்ல வந்து எங்களை பாதுகாப்பா விட்டு போயிட்டா. என்னால எதுவும் செய்ய முடியவில்லை” முகத்தை மூடி மடிந்து அழுதாள் இந்துஜா.
“நீ அழுதா பிரச்சனை சரியாகாது இந்து” மண்டியிட்டு அவள் முன் அமர்ந்த இனியவன் அவளது கரத்தை எடுத்து விட்டு, “சீக்கிரமே அந்த பொண்ணுக்கு நீதி கிடைக்கும்” இந்துஜாவின் கண்ணீரை துடைத்து விட்டான். உணர்ச்சிப்பெருக்கில் அவன் ஆறுதலாக பேசவும் அவனை அணைத்தாள்.
“இந்து…” அவளை நகர்த்திய இனியவன், “உன்னோட தோழி பிரச்சனை முடிந்தால் அவளை உன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போவீயா?” ஆராய்ச்சி பார்வையை செலுத்தினான்.
“இது என்ன கேள்வி? கண்டிப்பாக… பிரியா எனக்கு எவ்வளவு முக்கியமான நபர் தெரியுமா?”
முக்கியமான நபர்????… இத்தனை வருசமா அந்த பொண்ணு கஷ்டப்படுறது தெரியாம இருந்துருக்க?
எங்க வீட்டு பிரச்சனையில அவள கவனிக்க முடியல. என்னோட நிலையை எண்ணிய நான் அவளை பற்றி சிந்திக்க மறந்து விட்டேன்.
“அண்ணா…” விஷ்ணு அழைக்க, இருவரும் அவனை பார்த்தனர்.
எழுந்த இனியவன், சும்மா அழுதுட்டு இருக்காம சாப்பிட வா…..
முறைத்தாள் அவள்.
பிரியாவுக்கு எதுவும் ஆகாது. நான் பார்த்துக்கிறேன்.
நீங்க என்ன செய்யப் போறீங்க? உங்களால முடியும்னா ஏன் இத்தனை நாளாக எதுவும் செய்யவில்லை. உங்களுக்கு அவள் நிலை தெரிந்தும் உதவவில்லை…
“நாங்கள் இந்த வீட்டிற்கு வந்து ஒரு வருடம் தான் ஆகுது இந்து. அண்ணா அந்த பொண்ணு கஷ்டப்படுவதை கண்டுபிடித்ததே பெரிய விசயம். எனக்கெல்லாம் அப்படி ஒரு பொண்ணு இந்த வீட்ல இருப்பாங்கன்னே தெரியாது..” விஷ்ணு கூறினான்.
அமைதியாக எழுந்தாள்.
“சாப்பிட வா. அம்மா கூப்பிட்டாங்க” சொல்லி இனியவன் நகர அவளும் அவன் பின்னாலே சென்றாள்.
விஷ்ணு இருவரையும் பார்த்து, “தனியா இருந்தா ரொமான்ஸ் நடக்கும்ன்னு நினைச்சா சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனால் அண்ணா இவ்வளவு அமைதியாக அவளருகே இருந்து பேசிட்டு இருந்தானே!” சிந்தனையுடன் சென்றான்.
மறுநாள் விரைவிலே தயாராகி கீழே வந்தான் இனியவன்.
“யவா இவ்வளவு சீக்கிரம் எங்க போற?” குழலி கேட்டார்.
முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு நேராக கல்லூரி சென்று விடுவேன். உணவு தயாராக உள்ளதா?
“தயாரா இருக்கு. வா சாப்பிடு” உணவை அவர் எடுத்து வைக்க, இனியவன் விழிகளோ இந்துஜாவை தேடி அலைந்தது.
“அண்ணா…” விஷ்ணுவும் ராக்கியும் வந்தனர்.
இனியவன் விழிகள் இந்துஜாவின் அறையில் படிந்திருந்தது.
“யாரையோ தேடுற அண்ணா?” விஷ்ணு கிண்டலாக நாக்கை வாய்க்குள் சுழற்ற, இனியவன் அவனுக்கு பதில் கொடுக்காமல் “அம்மா…இந்து இன்னும் எழவில்லையா?”
எழுந்துட்டா யவா, தேனீர் குடித்து மீண்டும் உறங்க சென்று விட்டாள்.
இனியவன் தன் அன்னையை பார்க்க, “தூங்கணும்னா தூங்கட்டுமே! எதிர்வீட்டு பொண்ணு இந்துவை விட்டு செல்லும் போது என்ன சொன்னால் நினைவிருக்கா? செல்லமாக வளர்ந்த பொண்ணுன்னு சொன்னா…”
அவளுக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். புள்ளைக்காக புன்னகைத்தாலும் அவள் முகத்தில் ஏதோ பெரிய வலி தெரியுது. நான் கேட்டுப் பார்த்தேன். சொல்ல மாட்டேங்கிறா. அதான் தூங்கட்டும்னு விட்டுட்டேன்.
சிந்தனையுடன் உணவை முடித்து ராக்கியை தூக்கினான்.
ராக்கி இனியவன் கன்னத்தில் முத்தமிட, இந்துஜாவின் அறைக்கதவு திறக்கப்பட்டது. இவர்களை பார்த்துக் கொண்டே உணவுமேசையில் இருக்கும் நீரை அருந்தினாள்.
சினத்தில் உச்சியில் இருந்த பிரசாத் குளிர்ந்து, “எல்லாம் நலமே! நம்ம செல்லக்குட்டி என்ன செய்றான்?” ராக்கியை விசாரித்தான்.
இருவரும் சிலமணி நேரம் நலமாக பேசிக் கொண்டிருக்க, அதிர்ந்திருந்த மற்ற மூவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
பேசுவதை முடிக்கும் போது போட்டாளே இனியவனுக்கு தலைவலியை…
“லவ் யூ” கூறி அழைப்பை இந்துஜா அணைக்க, இனியவன் மட்டுமல்ல அவன் வீட்டினர் அதிர்ந்தே விட்டனர்.
சாதாரணமாக பிரசாத்திடம் பேசவில்லை என்றால் எல்லாவற்றையும் கண்டறிந்து விடுவான் என்று அழைப்பை வைத்தவளுக்கு, அவனிடம் அம்மா இறந்ததை மறைத்து விட்டோம். அவனும் நவீனும் தாங்குவார்களா? எண்ணம் வலுக்க, அழுது கொண்டே அறைக்குள் ஓடினாள்.
மற்றவர்கள் புரியாமல் குழப்பமுடன் அவளை பார்த்தனர். குழம்பிய மனதுடன் இனியவனும் கல்லூரிக்கு கிளம்பினான்.
“என்னடா, இந்து யாரையோ காதலிக்கிறா?” குழலி விஷ்ணுவிடம் புலம்ப, “உம் புள்ளைக்கு திருமணம் ஆனது போல தான்” விஷ்ணு நொடித்து அவன் வேலையை கவனிக்க கிளம்பினான்.
காலை முழுவதும் வெளியே வராத இந்துஜா மதியத்தின் பின் தான் வந்தாள். குழலியிடம் நன்றாக பேசினாள். குழலி தான் எப்படி கேட்பது? கேட்கலாமா? வேண்டாமா? சிந்தனையில் இருந்தார்.
“விச்சு யவாவை உணவுண்ண அழைத்து வா…” குழலி கூற, “அம்மா நான் அசெயின்மென்ட் தயார் செய்துட்டு இருக்கேன்” திறந்திருந்த அவனறையிலிருந்து சத்தமிட்டான் விஷ்ணு.
எப்படியும் உணவுக்கு கீழ தானடா வருவ..
நான் முடிச்சிடு வந்து தான் சாப்பிடுவேன்.
யவா…யவா…அவர் அழைக்க, இனியவன் அறை சாற்றியிருக்க அவர் பாவமாக இந்துஜாவை பார்த்தார்.
“நான் அழைச்சிட்டு வாரேன் ஆன்ட்டி” அவள் இனியவன் அறைக்கு சென்றாள்.
அறைக்கதவை தட்டினாள் இந்துஜா.
மடிக்கணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தவன் அவசரமாக அணைத்து கதவை திறந்தான்.
இன்பமாய் அதிர்ந்த இனியவன் இந்துஜா சுதாரிப்பதற்குள் அவளை அறைக்குள் இழுத்து கதவை தாழிட்டான்.
சார், கதவை எதற்கு தாழிட்டீங்க?
இந்துஜாவை நெருங்கி உடலை உரசியவாறு நின்ற இனியவன், “நீ யாரையும் காதலிக்கிறாயா?” கேட்டான்.
காதலா?
ஆமா சொல்லு..
“எதுக்கு? முதல்ல நகருங்க” அவனை தள்ள,
“சொல்லு?” அதட்டினான்.
இந்துஜாவா பயப்படுவாள்?
இல்லையே! நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் காதலித்தால் உங்களுக்கு என்ன சார் பிராபிளம்? அவள் கேட்டதன் விளைவாக அவள் இதழ்களை சிறை எடுத்திருந்தான்.
முட்டகண்கள் விரிய திகைத்து இனியவனை பார்த்தாள்.
விலகிய அவன், இதுவரை யாரும் என்னை இவ்வளவு கவர்ந்ததில்லை. உன் சிறுசிறு அசைவுகள் கூட என் மனதில் பதிந்து விடுகிறது..
விழித்து அவனை பார்த்தாள்.
“உனக்கு என்னை பிடிக்குமா?” அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.
அவளை கதவில் சாய்த்தவன், “உனக்கு என்னை பிடிக்குமா?” கேள்வி அழுத்தமாக வந்தது. அவனது நெருக்கத்தில் அவளது இதயத்துடிப்பு ஏகத்திற்கும் அதிகமானது.
நான் டைம் எடுத்து சொல்லவா?
சிறுபுன்னகையுடன் “சரி” கதவை திறந்தான்.
கீழே இறங்கிய இந்துஜா மனம் துடிக்க ஓரப்புன்னகையுடன் வந்தாள். அவள் பின்னாலே வந்த இனியவனும் உணவுண்ண அமர்ந்தான். அன்றைய இரவு இருவரும் ஒருவரை ஒருவர் எண்ணி மகிழ்வுடன் துயிலானார்கள்.