பேசியதை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த இந்துஜாவிற்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.
“எதுக்குமா அழுற? இவ இப்படி தான். எதுவும் நினைக்காதம்மா…” குழலி இந்துஜாவை சமாதானப்படுத்த,
“இல்ல ஆன்ட்டி…பிரியாவை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. அவ எங்க ஊரு தான். அவளோட திருமணத்தை எங்க பெரியம்மா பெரியப்பா, அவ பாட்டியும் தான் முன் நின்று நடத்தி வச்சாங்க.
மருத்துவம் படிக்க செலவாகும். திருமணத்திற்கும் பணமில்லைன்னு இவன் பிடிச்சிருக்குன்னு போட்ட நாடகத்தை பாட்டி நம்பியது போல நாங்களும் நம்பீட்டோம். நல்லா இருப்பான்னு கால் கூட பண்ணாம விட்டுட்டோம். இப்படி வாழ்வான்னு நான் நினைக்கவில்லை. அவளுக்கு பெற்றோர் இருந்தால் இப்படி நடந்திருக்குமா?” தேம்பி தேம்பி அழுதாள்.
“அம்மா நான் சீக்கிரம் கிளம்பணும். மருத்துவமனை போகணும்னா சீக்கிரம் தயாராக சொல்லுங்க” அவன் அம்மா கலந்து வைத்திருந்த தேனீரை எடுத்து அவனறைக்கு சென்றான். விஷ்ணுவும் கிளம்பினான்.
அழ முகத்தை தயாராக வைத்திருந்தான் ராக்கி. அவனை அணைத்து அழுகையை விழுங்கி, “பால் குடிச்சிட்டு குளிக்க போகலாம்” என பிள்ளையை தயாராக்கி அழைத்து வந்தாள் இந்துஜா.
ஒன்பது மணிக்கு கல்லூரி கிளம்பும் இனியவன் எட்டு மணிக்கே தயாராகி கீழே வந்தான். அதற்கு முன் ராக்கியும் இந்துஜாவும் தயாராக இருந்தனர்.
இந்துஜா உணவை முடிக்கும் நிலையில் இருந்தாள். ராக்கிக்கு ஊட்டிக் கொண்டிருந்தார் அவனது தாய்.
உணவு மேசையில் வந்து அமர்ந்தான் இனியவன்.
“யவா…இரு வாரேன்” குழலி எழ, “ஆன்ட்டி இருங்க. நான் உணவை முடித்து விட்டேன். நான் எடுத்து வைக்கிறேன். ராக்கி உணவுண்ணனும்” கையை கழுவி அவனருகே வந்து உணவை எடுத்து வைத்தாள்.
குழலி புன்னகைக்க, மாடியிலிருந்து அலைபேசியில் மூழ்கியவாறு வந்து கொண்டிருந்த விஷ்ணு ஆனந்தமாக அதிர்ந்து இனியவனுக்கு இந்துஜா பரிமாறுவதை புகைப்படம் எடுத்தான்.
“ராக்கி, பிக் பாய் ஊசிக்கு பயப்பட மாட்டாங்க. ஊசிக்கு பயந்தா சித்துவை எப்படி பார்த்துப்பீங்க?” புருவம் உயர்த்தி ராக்கியிடம் கொஞ்சலுடன் கேட்டாள் இந்துஜா.
ஆவென பார்த்தனர் குழலியின் தவபுதல்வர்கள்.
“வலிக்கும்…” கண்கலங்கியது ராக்கிக்கு.
“சித்து கூட தான் இருப்பேனே! எப்படி ராக்கிக்கு வலிக்கும்? வலிக்காம நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.
“சித்து உம்மா…” என்று அவளிடம் கையை நீட்டினான்.
ராக்கியின் கையில் முத்தமிட்டு, “சித்து பக்கம் தான் இருப்பேன். பயப்படக் கூடாது” அவனை பார்த்தாள்.
முகத்தை பாவமாக வைத்தாலும் “சித்து…” அவள் கழுத்தை கட்டிக் கொண்டான்.
தன் மூத்த மகனின் முகபாவனையை கண்ட குழலிக்கு சிரிப்பு வந்தது. அந்த அளவிற்கு இந்துஜாவை பார்த்திருந்தான் இனியவன்.
விஷ்ணு புன்னகையுடன், “அண்ணா நீ சாப்பிட்டு ஐந்து நிமிடமாகுதுன்னு நினைக்கிறேன்” நகைத்தான். எதையும் காட்டிக் கொள்ளாமல் கை கழுவ சென்றான் இனியவன்.
“எதுக்கு அந்த பொண்ணு என்னை பார்க்க வைக்கிறா? என்னால பார்க்காமல் இருக்க முடியவில்லை” மனதில் எண்ணியவாறு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.
இனியவன் பைக்கிலிருந்து இறங்கிய இந்துஜா, “சார் நான் எனக்கு காட்டிட்டு வந்துடுறேன். நீங்க ராக்கியை பார்த்துக்கோங்க” என்றாள்.
“டோக்கன் வாங்குறேன்” என்று இனியவன் வரவேற்பறையில் சென்று நின்றான். இவளும் அவன் பின்னாலே சென்றாள்.
இனியவனிடம் இந்துஜாவின் விவரத்தை கேட்க, அவனுக்கு என்ன தெரியும்? திரும்பி அவளை பார்த்தான்.
“இதுக்கு தான் சார் நான் பார்த்துட்டு வாரேன்னு சொல்றேன்” இந்துஜா முன் வந்து விவரம் கூற, டோக்கன் கொடுத்தனர். டோக்கன் எண்ணை பார்த்து அதிர்ந்து விழிவிரித்து அவனை பார்த்தாள்.
என்ன?
அவனருகே அருகே சென்று…சார் எனக்கே நேராகும். நீங்க கிளம்புங்க. நாங்க மருத்துவரை பார்த்துட்டு ஆட்டோ புக் செய்து போயிடுறோம்.
இவர்கள் சென்றது அரசு மருத்துவமனை.
தலையை அழுந்த கோதியவாறு, முதல்ல பையனுக்கு தடுப்பூசி போட்டு உனக்கு காட்டலாம்.
“ஊசி போட்டு வெகு நேரமானால் அந்த இடம் அவனுக்கு வீங்கிடும். ரொம்ப வலிக்குமே!” ராக்கியை பார்த்தாள்.
“இரு வாரேன்” என்று, “ரக்சன் சார் இருக்காரா?” வரவேற்பறையில் விசாரித்தான்.
சார் வர நேரமாகும். மேம் ஒருத்தவங்க இருக்காங்க..
“யாரு?” அவன் கேட்க, அவர் கூறி இனியவனை பற்றி கேட்டார்.
“சரிங்க சார் சொல்கிறேன்” மருத்துவமனையின் உயர்பதவியில் இருப்பவரிடம் விசயத்தை கூற, அந்த பெண்மருத்துவர் இவர்களை உள்ளே அழைத்தார்.
“ஹாய் இனியா” மருத்துவர் இனியவனிடம் கையை நீட்ட, இவனும் கை குலுக்கினான்.
யாரு சார் இந்த பொண்ணு?
தெரிஞ்ச பொண்ணு. எங்க வீட்ல தான் இப்பொழுதைக்கு இருக்காங்க.
“வாங்கம்மா, நானே பார்க்கிறேன்” அவரே இந்துஜாவை பரிசோதித்து சிகிச்சை அளித்தார்.
“மேம், இங்கே குழந்தைக்கு தடுப்பூசி போடுவாங்களா?”
என்ன வயசும்மா?
ரெண்டறை வயசு..
கீழ கடைசி அறை… என்று அவர்களை பார்த்தார்.
“தேங்க்யூ மேம்” இனியவன் அவர் கையை குலுக்கி விடை பெற்றான். ராக்கிக்கு உடனே தடுப்பூசி போடப்பட்டது. கண்ணிமைக்காமல் அவனையே பார்த்தாள் இந்துஜா.
“என்ன?” அவன் புருவம் உயர்த்தினான்.
“ஒன்றுமில்லை” அழுது கொண்டிருந்த ராக்கியை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தாள்.
சார், கல்லூரியில் வகுப்பு தொடங்கி இருக்குமே!
ம்ம்! மதியம் நான் செல்கிறேன். கால் பண்ணீட்டு வாரேன் என்று நகர்ந்து சென்றான்.
“வா கிளம்பலாம்” இனியவன் அழைக்க, மூடியிருந்த கண்ணை திறந்தவள் கண்ணீரை சுட்டி விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் ராக்கியை தோளில் போட்டு அவனுடன் ஜோடியாக கிளம்பினாள்.
வீட்டின் முன் வண்டியை நிறுத்தி, “கீழ இறங்கு” என்றான்.
அழுது உறங்கி இருந்த ராக்கியை அணைத்தவாறு இந்துஜாவின் ஒரு கரம் பிடித்திருக்க, மறுகரம் இனியவனின் திண்ணிய பரந்த தோளில் அழுத்தமாக பதித்திருந்தாள்.
கரத்தை எடுத்து இறங்கிய இந்துஜா தடுமாற அவளது கரம் பற்றி, அவளை ஆழ்ந்து பார்த்தான்.
“சாரி சார், மயக்கமாகவும் மிகவும் சோர்வாகவும் இருக்கு” என்றாள் மங்கிய விழிகளுடன்.
மருந்தின் தாக்கம் என புரிந்த இனியவன் பைக்கை வெளியே நிறுத்தி, ராக்கி தூக்கம் கலையாதவாறு மெதுவாக அவளிடமிருந்து ராக்கியை பிரித்து அவன் தோளில் போட, லேசாக அசைந்த ராக்கி தூங்க ஏதுவாக இனியவன் மீது சாய்ந்து கொண்டான்.
“நடந்துருவேல?” அவளது தோளில் கை போட்டு அணைவாய் இந்துஜாவை இனியவன் பிடிக்க, ம்ம்! சத்தம் வந்ததே தவிர வேறு பேச்சில்லாமல் அவளும் அவன் தோளில் வாகாக சாய்ந்து அவனது கரத்தை இறுக பற்றியவாறு நடந்தாள்.
முதலில் அதிர்ந்த இனியவன் வாசலுக்கு வரவும் அவன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான்.
யாரோ என வந்த குழலி தன் மகன் குடும்பமாக வருவதை பார்த்து மெய் மறந்து நின்றார்.
“அம்மா…” அழுத்தி அவன் அழைக்க, “என்னாச்சுடா?” பதட்டமுடன் அவர்களிடம் வந்தார்.
“ஷ்ஷ்ஷ்…ராக்கிவிழித்து விட்டானோ?” என லேசாக முகத்தை திருப்ப, அவன் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
“பிடிம்மா” இந்துஜாவை அவரிடம் நகர்த்தினான்.
ஆட்டோவிலாவது வந்திருக்கலாமே!
“ஷ்ஷ்…அப்புறம் பேசலாம். பைக்ல கவர் இருக்கு. இவள படுக்க வச்சிட்டு பையனுக்கு மருந்து எடுத்துட்டு மேல வாங்க. என்னறைக்கு இவனை தூக்கிட்டு போறேன். இவள் காய்ச்சலில் அவனுக்கு மேலும் காய்ச்சலாகி விடும். இப்பொழுதே லேசாக பையனுக்கு உடம்பு சூடா இருக்கு” ராக்கியுடன் இனியவன் அவனறைக்கு சென்றான்.
யவா, கல்லூரி…
மதிய உணவை முடிச்சிட்டு கிளம்புறேன். இன்பார்ம் பண்ணீட்டேன் என்று அலட்டிக் கொள்ளாமல் அவன் செல்ல, நம்ப முடியாமல் தன் மகனை பார்த்தார்.
விழா என்று ஒரு மணிநேரம் விடுப்பு எடுக்க சொன்னால் கூட எடுக்க மாட்டான். அதிசயமாக உள்ளது என்று எண்ணினாலும் இந்துஜாவை அவளறையில் படுக்க வைத்து மருந்தை எடுக்க சென்றார்.
இனியவன் அறைக்கதவை திறந்து உள்ளே சென்றவர் புன்னகையுடன் பார்த்தது பார்த்தவாறே நின்று விட்டார்.
இனியவனின் படுக்கையில் ராக்கி இனியவனின் மார்பில் முகம் புதைத்து, அவனது தளிர் கரங்கள் இனியவனின் இடையில் பாந்தமாக ஒன்றி இருவரும் படுத்திருந்தனர். விழிகளை மூடி படுத்திருந்தான் இனியவன்.
இருவரையும் ரசித்தவாறு அவர்களிடம் வந்த குழலி தன் மகன் அருகே அமர்ந்து அவனது முடியை கோத, விழித்த இனியவன்….“அம்மா” ராக்கியை பார்த்தான்.
இருவரையும் அவர் பிரிக்க, அம்மா அப்படியே குடுங்க. படுக்கையில் அவனை கிடத்தவும் அழுதான்.
“படுத்தவாறு மருந்து கொடுக்கக் கூடாது யவா” ராக்கி அருகே அமர்ந்து, அவனை தன் மடியில் போட விழித்த ராக்கி, “அம்மா…” அழுதான்.
“கண்ணா, மருந்து குடிச்சிட்டு தூங்கலாம். வலிக்குதா?” அவர் கையை பற்ற போக, மேலும் ராக்கியிடம் அழுகை வந்தது.
யவா, இதுல ஐஸ் இருக்கு. ஊசி போட்ட இடத்துல்ல ஒத்தடம் வை என்று கவரில் போட்டிருந்து ஐஸ்ஸை இனியவனிடம் கொடுத்தார்.
நான் எப்படிம்மா? அழுவானே!
“இரு மருந்து கொடுத்துக்கிறேன்” மருந்தை ராக்கி வாயில் ஊற்ற, அவனுக்கு பிடிக்கவில்லை போலும். துப்பினான். குழலி எப்படியோ அவனை விழுங்க வைத்து ஒத்தடம் அவரே கொடுத்தார். கத்தி அழுது விட்டான் ராக்கி.
அம்மா…நீங்க போங்க. கொஞ்ச நேரம் நான் பார்த்துக்கிறேன் என்று இனியவன் ராக்கி அருகே படுக்க, முன் போல ராக்கி அவனை ஒட்டிக் கொண்டான்.
குழலி ராக்கி உறங்க தட்டிக் கொடுத்தார்.
“சித்து…” அவனது ஏக்கமான குரல் இனியவனுக்கு ஏதோ போல ஆனது.
இந்து தூங்குறாளா?
ம்ம்! பீவர் அதிகம்ல. ஹெவி டோஸ் போட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன். கண் விழிக்கவில்லை. பார்த்துட்டு தான் வந்தேன் என்றார்.
சரிம்மா, நீங்க வேலைய பாருங்க..
உனக்கு ஒன்றுமில்லையே!
என்ன?
விடுப்பு எடுத்திருக்க? குட்டிப்பையனோட படுத்திருக்க. அவன் அழுதான்னா? அவர் கேட்க, பார்த்துக்கிறேன்மா. மதியமும் நான் போகலைம்மா. மதியம் எனக்கு ஒரு கிளாஸ் தான். ஒரு நாள் தானே!
“நான் போன வாரம் ஒரு மணி நேரம் தான் கேட்டேன்” தன் மகனை ஆழ்ந்து பார்த்தார்.
நீங்கள் இருவரையும் பார்க்க வேண்டியதாக இருக்கும்னு தான் இருக்கேன். நீங்கள் இருவரையும் பார்த்துக்கிறதா இருந்தா நான் போறேன்.
“உங்களை வளர்த்து படிக்க வச்சிருக்கேன். இவங்கள பார்த்துக்க முடியாதா? பார்த்துப்பேன். ஆனால் இப்படி புள்ள அருகிலேயே இருக்க முடியாது. இரு…தெரியாமல் சொல்லீட்டேன்” நொடித்து சென்றார்.
கீழே சென்ற தாய் உவகையுடன் தன் சின்ன மகனை அழைத்து விசயத்தை சொல்ல அவனும் மகிழ்ந்தான்.
“அம்மா, இனியாவது குச்சி எடுத்துட்டு விரட்டாம உம் மகனை இருக்க சொல்லுமா?” கேலியுடன் கூற, “ஆமா அதுக்கெல்லாம் அவனுக்கு நேரமிருக்காது” சொல்லி அவரும் சிரித்தார்.
இந்துஜாவுடன் இனியவனை எப்படியாவது சேர்த்து விடும் எண்ணத்தில் இருக்கும் நெடுங்குழலியே அவளை மறுக்கப் போகிறார்..
மதியமும் காலை போல நேரம் சென்றது வீட்டில் இருந்தவர்களுக்கு…
மாலை விஷ்ணு தேனீரை பருகிக் கொண்டிருந்த போது மெதுவாக இந்துஜா வெளியே வந்தாள். இனியவனும் ராக்கியும் மதியம் உண்டு மறுபடியும் நித்திரைக்கு சென்றிருந்தனர்.
“ஏம்மா, அண்ணாவுக்கு வேற கல்லூரியா இல்லை. நான் படிக்கும் கல்லூரியிலா வேலை பார்க்கணும். இதுல அதிசயபிறவி போல விடுப்பே எடுக்க மாட்டான். இன்று ஏன்மா எடுத்தான்? நிம்மதியா சாப்பிட விடுறானுக. எல்லாரும் அவனை பற்றி தான் கேக்குறானுக. கடுப்பாகிடுச்சு” விஷ்ணு தேனீரை பருகியவாறே பேசிக் கொண்டிருந்தான்.
அவனருகே வந்து அமர்ந்தாள் இந்துஜா. அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.
பால் சாப்பிடுறியாம்மா?
“ஆன்ட்டி, இப்ப பீவர் பரவாயில்லை” அவள் விழிகள் அலைபாய்ந்தது.
அதனால என்னம்மா? சாப்பிட மருந்து கொடுத்துட்டேன். ஹாஸ்பிட்டல் சென்று வந்ததிலிருந்து யவனோட தான் இருக்கான். ஆனால் புள்ள அவ அம்மாவை தேடினான்மா. இந்துஜா முகம் மாறியது.
அம்மா, அப்பாவும் புள்ளைக்கு இல்லையாம்மா?
அக்கா ராக்கி பிறந்த பின் வியாதியில் போயிட்டா. மாமா ஹாஸ்பிட்டல்ல உடல் நலமில்லாமல் இருக்காங்க. நாங்க விழுப்புரத்தில் தான் இருந்தோம். அண்ணா தான் மாமாவை ஆள் வச்சு பார்த்துகிட்டு இருக்கான்.
விஷ்ணு இந்துஜாவின் கழுத்து, நெற்றியை தொட்டு பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“இவன் என்ன செய்றான்?” குழலி தன் மகனை முறைக்க, ஓரப்புன்னகையை காட்டினான் அவன்.
என்னடா? புருவம் உயர்த்தினார்.
கண்களை மூடித் திறந்த விஷ்ணு, அம்மா அண்ணாவை பசங்கள விட பொண்ணுங்க தான் அதிகம் தேடுனாங்க தெரியுமா? நீ கூட பொண்ணு தேடிட்டு இருக்கேல? என்னோட பிரபசர் மேம்மை அண்ணாவுக்கு கட்டி வச்சு அண்ணீயாக்கிட்ட…சூப்பரா வகுப்பில் சமாளிப்பேன் என்றான்.
விழிகள் விரிய அவனை பார்த்தாள் இந்துஜா.
என்னடா சொன்ன?
“அம்மா..” அழுத்தி அழைத்து கண்ணாலே சைகையில் இந்துஜாவை கவனிக்க சொன்னான்.
மருத்துவமனையில் இனியவன் பேசிய தோரணையும் அவன் மீது லேசான ஈர்ப்பு கூட இருந்தது இந்துஜாவிற்கு.
அம்மா கஷ்டப்பட்டு பொண்ணு தேடுறேல்ல. மாதவின்னு ஒரு மேம் இருக்காங்க. அவ்ளோ அழகாக இருப்பாங்க. அண்ணாவை அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஓரக்கண்ணால் இந்துஜாவை பார்த்தான் விஷ்ணு.
முகத்தில் லேசான சுருக்கம் விழுந்தாலும் அவள் பாட்டுக்கு பாலை பருகிக் கொண்டிருந்தாள்.
மாதவியா? இந்த மாதிரி பெயருள்ள பொண்ணுங்கல்லாம் வேண்டாம்..
அப்ப அண்ணா வகுப்பில் படிக்கும் பொண்ணுன்னா உனக்கு ஓ.கே வா?
ம்ம்! சொல்லு…யவாவை பிடிச்ச பொண்ணா இருக்கணும்.
அண்ணாவை பிடிக்காத பொண்ணிருக்குமா? இவன் தான் சிடுமூஞ்சி…
எம் புள்ளைய ஏன்டா சிடுமூஞ்சின்னு சொல்ற? அழகா தானடா இருக்கான்..
அழகா இருந்தா போதுமா? உம் புள்ளைக்கு சிரிக்க சொல்லி கொடுத்தாயா? கேட்க, இந்துஜாவிற்கு சிரிப்பு வந்தது.
நீ சொல்லு இந்து? என்னோட அண்ணா பார்க்க அழகா தான இருக்கான்.
ம்ம்! அழகா தான் இருக்கார்.
எல்லா பொண்ணுங்களுக்கும் அவரை பிடிக்கும் தான?
பிடிக்கும்.
“இவர் மூஞ்சிய பார்த்தால் காதலிக்க தோணுமா?” ஆழ்ந்து அவள் முகத்தை இருவரும் பார்த்தனர்.
காதலா? அவர் யாரையும் காதலிக்கிறாரா? மனதினுள் சிந்தித்தாள்.
இந்து நான் கேட்டேன்..
ஹம்..காதலிக்கலாம்…
அழகா இருந்தா காதல் வருமா இந்து?
குணமிருந்தால் காதல் வரும் தான்.
என்ன குணம்? பேச கூட மாட்டான்..
பேசலைன்னா என்ன? அவர் பார்வையில் கொஞ்சமும் தடுமாற்றம் இல்லை. அதிகம் பேசவில்லை என்றாலும் அக்கறையுடன் நடந்து கொள்கிறார். உதவும் குணம் இருக்கு. அவருடன் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று இனியவன் இன்று அவர்களுடன் நடந்து கொண்டதை வைத்து கூறி விஷ்ணுவை பார்த்து, “இது போதுமே காதலிக்க?”
இருவர் முகத்திலும் மலர்ச்சி.
அப்படின்னா சுவேதா சரியா வருவா? விஷ்ணு மறுபடியும் ஓரக்கண்ணால் அவளை பார்த்தான்.
அவசரமாக மறுத்தாள் இந்துஜா.
“இல்ல, அவருக்கு பிடிக்கணும்ல? நிறைய பொண்ணை வேண்டாம்னு அவர் சொன்னார்னா அவருக்கு பிடிக்கவில்லை தான? அவருக்கு புடிச்ச பொண்ண அவர் தான் தேர்ந்தெடுக்கணும்” என்றாள் முகம் வாட்டமுடன். இருவரும் மேலும் மலர்ந்தனர்.
அதனால என்னம்மா? நீ ராக்கியை தான பார்க்க போற? பார்த்து தூக்கிட்டு வா. பிள்ளைக்கு பால் தயார் செய்கிறேன் என்று சொல்ல அவள் தயக்கமுடன் படியேறி இனியவன் அறைக்கதவின் முன் நின்றாள்.
“தட்ட வேண்டாம். கதவு திறந்து தான் இருக்கு” விஷ்ணு கூற, அறைக்கதவை திறந்து உள்ளே சென்றாள்.
“ஹய்யா…அம்மா, இந்துவிடம் நல்ல வினை வந்தது. விட்டால் நேராகவே கேட்டிருப்பாள்” விஷ்ணு குதிக்க, அம்மாவும் மகனும் “ஹை பை” போட்டுக் கொண்டனர்.
இனியவன் அறைக்குள் வந்த இந்துஜா முகம் ரசாயனக்கலவை பூசி இருந்தது.
இனியவன் மீது உறங்கிக் கொண்டிருந்தான் ராக்கி. இனியவனும் அவனை கீழே விழுந்து விடாமல் இருக்க பிடித்தவாறு நித்திரையில் இருந்தான்.
ராக்கியை எவ்வாறு தூக்குவது? இருவர் அருகேயும் வந்தாள். இனியவன் பனியனும் ட்ராக் பேண்டும் அணிந்திருந்தான்.
இருவரையும் நெருங்கிய இந்துஜா தலை சரித்து ராக்கியை பார்க்க, அவளது கார்க்கூந்தல் அவன் மீது படரவும் விழித்தான் இனியவன்.
ராக்கியின் ஆழ்ந்த நித்திரையை கண்டு அழகாக புன்னகைத்தாள் இந்துஜா.
“இங்க என்ன பண்ற?” அவன் குரலில் பதறி நகர்ந்தாள்.
“ராக்கியை பார்க்க வந்தேன்” விழிகள் அவனிடமிருந்து ராக்கியிடம் சென்றது. அவளின் விழியசைவில் அவளது இமைக்கும் விழிகளை ரசனையுடன் பார்த்தான்.
“ராக்கியை தூக்கிக்கவா? அவனுக்கு பசிக்கும்….” விழிகளை நகர்த்தி இனியவனை பார்த்தாள்.
ராக்கியை மெதுவாக நகர்த்தி படுக்கையில் சாய்ந்து மேலும் அவன் மேலேயே போட்டுக் கொண்டான்.
சார்…
விரலை நீட்டி அவளை அழைத்தான் இனியவன்.
“என்னது சார்?” படபடக்கும் அவளது விழிகளை கண்டு மனதில் புன்னகைத்தான்.
படுக்கையின் அருகே அமர சொல்லி விரலை படுக்கையில் காட்டினார்.
“ராக்கியை குடுங்க. நான் கிளம்பணும். ஆன்ட்டி ராக்கிக்கு பால் அடுப்புல வச்சிருக்காங்க” அவனை நெருங்கினாள்.
அவளது கரத்தை பற்றி, “அமரு” என்றான். தயக்கமுடன் ராக்கியை பார்த்தவாறே அமர்ந்தாள்.